Friday, October 22, 2010

கம்பரும் மல்டி டாஸ்கிங்கும்

தலையில் கை வைத்து உக்கார்ந்திருந்தேன். முன்னால் இருந்த கம்ப்யூட்டரில் நான் திறந்து வைத்திருந்த காலண்டரின் 27 ஆம் தேதி என்னைப் பார்த்துப் பரிகசித்தது. தலை முடியைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.

முகத்தில் கையை வைத்து அழுத்திக் கொண்டு கண்களை மறைத்துக் கொண்டிருந்த விரல்களிடையே ஸ்க்ரீனைப் பார்த்தேன். அப்படியாவது போய் விடாதா என்று. என் இம்சையைப் புரிந்திருப்பார் போல. தங்கமணி என் அருகே வந்தார்.

"ஹேய் என்னப்பா ஆச்சு. பேயறஞ்ச மாதிரி உக்காந்துருக்க?"

"அதை ஏன் கேக்கற. 27 ந்தேதி டெட்லைன். இன்னும் இவனுங்க கோடிங் முடிக்கலை. எல்லாம் என் தலைல வந்து விடிஞ்சிடும் போல"

"விடிஞ்சா என்ன நீயே கோடிங் எழுதிட வேண்டியதுதான. டெவெலப்பரா இருந்து தான ப்ராஜக்ட் மானேஜர் ஆன?"

நான் மானிட்டரிலிருந்து கண்ணை எடுத்து தங்கமணியை முறைத்தேன். "ஏன் சொல்ல மாட்ட? இந்த ப்ராஜக்ட்ல ஒரு மாட்யூல் வெப் டெக்னாலஜி, இன்னொரு மாட்யூல் மெயின்பிரேம். இன்னொரு மாட்யூல் டேட்டா வேர்ஹவுசிங்"

"அதுனால என்ன. கம்பர் ஒரே ராத்திரியில கம்ப ராமாயணத்தை எழுதின மாதிரி நீயும் கோட் பண்ணிட வேண்டியதுதான?"

"என்னது கம்பர் ஒரே ராத்திரியில ராமாயணம் எழுதுனாரா? இன்ரஸ்டிங்கா இருக்கே” லேப்டாப்பை மூடினேன்.

"அதான. கதைன்னா கேக்க வந்துடுவியே. உனக்கு ஓட்டக் கூத்தர் தெரியுமா?"

"ஓ தெரியுமே. அம்பிகாபதி படத்துல நம்பியார் நடிச்சிருப்பாரே. அந்த காரக்டர் தான?" முகிலன் என் ஷார்ட்சைப் பிடித்து இழுத்து 'அப்பா ஃபோனி எந்திமா' என்று சொல்ல ஐ-ஃபோனை அவனிடம் கொடுத்து விட்டு தங்கமணியின் முகத்தையே பார்த்தேன்.

சோபாவில் நன்றாக சாய்ந்து கொண்ட தங்கமணி, போர்வையால் நன்றாக சுற்றிக் கொண்டு, "அவருக்கு ஏன் ஓட்டக் கூத்தன்னு பேர் வந்துச்சு தெரியுமா?"

"தெரியாதே?"

"ஒட்டம்னா பெட். அவரு எதுக்கெடுத்தாலும் பெட் கட்டிட்டே இருப்பாராம். அதான் அவருக்கு அந்தப் பேர்"

"அப்பா அவரு சீக்கிரமாவே 'ஓட்ட'க்கூத்தர் ஆயிருப்பாருன்னு சொல்லு"

என்னை முறைத்த தங்கமணி "அவருக்கும் கம்பருக்கும் ஒரு பெட். யாரு முதல்ல ராமாயணத்தைத் தமிழ்ல எழுதுறதுன்னு”

“ஓக்கே. என்ன பெட்?”

“அதெல்லாம் ராஜா முடிவு பண்ணுவாருன்னு விட்டுட்டாங்க. ஒட்டக்கூத்தர் சின்சியரா எழுதிட்டு இருந்தாரு. கம்பரோ ஓ.பி அடிச்சிட்டு இருந்தாரு”

“ப்ளாக் எழுதாத சாஃப்ட்வேர் எஞ்சினியரும் ப்ளாக்கரான சாஃப்ட்வேர் எஞ்சினியரும் மாதிரின்னு சொல்லு”

மீண்டும் முறைத்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அரிமா அரிமா பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்த முகிலனைப் பார்த்தேன்.

தங்கமணி தொடர்ந்தார். “அப்ப ஒரு நாள் ஒட்டக்கூத்தர் கம்பர்கிட்ட என்னப்பா ராமாயணம் எவ்வளவு தூரத்துல இருக்குனு கேக்க, கம்பர் நான் இன்னும் எழுதவே ஆரம்பிக்கலைன்னு உண்மையச் சொல்லிட்டார்”

“அடப் பாவமே? ஒட்டக் கூத்தர் ராஜாக்கிட்ட பத்த வச்சிருப்பாரே?”

“ஒட்டக்கூத்தர் மாதிரியே யோசிக்கிறியே?? ஆமா. அவர் ராஜாகிட்ட போய், ராஜா ராஜா ராமாயணத்தை உங்க முன்னாடி படைக்கிறது இருக்கட்டும். எதுவரைக்கும் எழுதியிருக்கோம்னு பாக்கலாம்னு சொன்னார். ராஜாவும் ரெண்டு பேர்கிட்ட கேக்கவும், ஒட்டக்கூத்தர் நான் கடல்ல அணை கட்டுற வரைக்கு வந்துட்டேன்னு சொன்னார். உடனே கம்பரும் நான் அதையும் தாண்டி போர்க்காட்சிகள் வரைக்கும் வந்துட்டேன்னு சொன்னார்”

“அய்யய்ய பொய்யா சொல்லிட்டார்? எனக்கு இந்த பொய் சொல்றவங்களைக் கண்டாலே பிடிக்காது”, மறுபடியும் தங்கமணி முறைக்க. “சரி சரி மேல சொல்லு”

“உடனே ஒட்டக்கூத்தர் வேகமா. ‘அப்பிடின்னா அதுல ஒரு பாட்டை சொல்லு’ன்னு கேக்க, கம்பரும் இந்தப் பாட்டை எடுத்து விடுறாரு”

“செம் புனல் சோரிச் செக்கர் திசை உறச் செறிகையாலும்
அம்பு என உற்ற கொற்றத்து ஆயிரம் கதிர்களாலும்
வெம்பு பொன் தேரில் தோன்றும் சிறப்பினும், அரக்கன் மெய்யோடு
உம்பரில் செல்கிறான் ஒத்து உதித்தனன் அருக்கன் உப்பால். ”

“அப்பிடின்னா என்னான்னு தமிழ்ல கொஞ்சம் சொல்லேன்” கெஞ்சலாக தங்கமணியைப் பார்த்தேன்.

பட் பட் என்று தலையில் அடித்துக் கொண்டு “இந்திரஜித்தையும் சூரியனையும் ஒண்ணாப் பாக்குறார் கம்பர் இதுல. அதாவது போரால இந்திரஜித் உடம்பெல்லாம் ரத்தம் சொரிந்து சிவப்பா இருக்கிறது மாதிரி கீழ் வானம் சிவந்து இருக்கறதாலயும், இந்திரஜித் உடம்பெல்லாம் லட்சுமணன் விட்ட அம்பு குத்தியிருக்கிறது மாதிரி சூரியனோட ஆயிரம் கதிர்கள் இருக்கறதாலயும், ரெண்டு பேரும் வெம்புகின்ற தங்கத் தேரில வர்றதாலயும், இந்திரஜித் உடம்போட மேலோகம் போற மாதிரி சூரியன் கிழக்கில இருந்து உதிக்கிறானாம்.”

“ஓ, இதுக்கு இப்பிடி அர்த்தமா?”

‘ரோபோ’ என்று சொன்ன ரஜினியைப் போல வாயைச் சுழித்து “ஆமா” என்றார் தங்கமணி.

“சரி மேல சொல்லு”

“இதைக் கேட்டதும் ஒட்டக்கூத்தர் வாயடைச்சுப் போயிட்டாரு. என்னடா வில்லனொட மகனையே சூரியனோட கம்பேர் பண்ணி வர்ணிக்கிறாரே? அப்பிடின்னா ராமனை எப்பிடியெல்லாம் வர்ணிச்சிருப்பாரு? இது கூட சேத்து வச்சிப் பாக்கும்போது நாம எழுதுறதெல்லாம் பாட்டே இல்லையேன்னு நொந்து போய் வீட்டுல தான் எழுதி வச்சிருந்த ஓலைச் சுவடிய எல்லாம் நெருப்புல போட்டுட்டார்”

“அய்யய்யோ அப்புறம்?”

“அந்த வழியா வந்த கம்பர் அதைப் பாத்துட்டு ஓடி வந்து அவரைத் தடுத்து தான் ஒன்னும் எழுதலை சும்மா கதையடிச்சேன்னு சொன்னார். மறுபடியும் முருங்கை மரத்துல ஏறிட்டாரு ஒட்டக் கூத்தர்”

“அவரு எதுக்கு முருங்கை மரத்துல எல்லாம் ஏறுனாரு?”

“டேய்ய்ய்ய்ய்.. வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சின்னா என்னான்னு தெரியுமா?”

“தெரியுமே. ராத்திரியெல்லாம் இனிமே புளிக் குழம்பு வைக்க மாட்டேன்னு சொல்லிட்டு காலைல எழுந்ததும் புளியை ஊறப்போடுவியே அதுதான?”

‘நங்’

தலையைத் தடவிக்கொண்டே கேட்டேன், “சரி மேல சொல்லு”

“ராஜா ராஜா, கம்பர் தான் யுத்த காண்டம் வந்துட்டாரே. பேசாம அவரை நாளைக்கே சபையில ராமாயணத்தை அரங்கேற்றச் சொல்லுங்கன்னு சொல்லிட்டார். ராஜாவும் ஆமா கம்பரே உங்க தமிழை கேட்க நானும் காத்திருக்க முடியாது, நாளைக்கே செய்யுங்கன்னு சொல்லிட்டார்”

“ஆஹா டெட்லைனை ப்ரிப்போன் செஞ்சிட்டாய்ங்களா? என்ன செஞ்சாரு கம்பர்”

“கம்பர் என்ன பண்ணாருன்னா, தன்னோட சிஷ்யப் புள்ளைங்க ஆறு பேரை உட்கார வச்சி அவங்க கையில சுவடியையும் எழுதாணியையும் குடுத்துட்டு ஆளுக்கொரு காண்டத்தில இருந்து ஒவ்வொரு பாட்டா parallel ஆ சொல்லிட்டே வர விடியிறதுக்குள்ள கம்பராமாயணம் ரெடி”

“அடேங்கப்பா. கம்பர் பெரியாளா இருந்திருப்பார் போல. ஆறு பேருக்கும் ஆளுக்கொரு பாட்டு சொல்லிட்டே முழுக் கதையையும் முடிக்கணும்னா சான்ஸே இல்லை”

“பாத்தியா அந்தக் காலத்துலயே எப்பிடி மல்டி ப்ராசஸிங் செஞ்சிருக்காருன்னு?”

“ஆமா”

“நீ ஏன் அது மாதிரி மூணு லேப்டாப் வச்சிக்கிட்டு ஒண்ணுல மெயின்ஃப்ரேம் கோடிங், ஒண்ணுல ஜாவா இன்னொண்ணுல டேட்டா வேர்ஹவுசிங்க்னு செய்யக் கூடாது?”

“ம்ஹ்ம். கம்பருக்கு ஆறு சிஷ்யப்புள்ளைங்க இருந்தாங்க. நானே எல்லாத்தையும் செய்ய முடியுமா? அதோட அவருக்கு பாட்டு எழுதத் தெரியும் செஞ்சிட்டாரு. எனக்கு கோடிங் செய்யத் தெரியாதே?”

“அது சரி. சட்டியில இருக்கிறது தான அகப்பையில வரும்” என்று சொல்லிவிட்டு ஆடிக் கொண்டிருந்த முகிலனைத் தூக்கிக் கொண்டு மாடி ஏற படியை நோக்கிப் போனார்.

என் கண்களில் ஒளி மின்ன நான் லேப்டாப்பைத் திறந்தேன்.

“என்ன கண்ணு பளிச்னு எரியுது? கோடிங் செய்யப் போறியா?”

“ம்ஹூம். நீ சொன்னதை ப்ளாக்ல ஏத்தப் போறேன்”

தங்கமணி தலையில் அடிக்கும் சத்தம் மட்டும் கேட்க, www.blogger.com என்று டைப்ப ஆரம்பித்தேன்.

Tuesday, October 19, 2010

பிதற்றல்கள் - 10/19/2010

ஒரு எதிர்வினை

எந்திரன் பற்றி வருகிற எதிர்மறையான விமர்சனங்கள் முன் வைக்கும் குறைகளும், அவற்றின் மீதான என் பார்வையும்

1. லாஜிக் இல்லாத அபத்தமான கதை - ஷங்கர் + ரஜினி படங்களில் உலகத்தரமான கதை + லாஜிக் எதிர்பார்த்து போகும் இவர்களை என்னவென்று சொல்வது. 10 வருடம் அல்ல 100 வருடக் கனவு படம் என்றாலும் ஷங்கரால் இதைத் தாண்டி கதை சொல்ல முடியாது. ஷங்கர் படத்துக்குப் போய் ஷங்கரைத் தேடுங்கள் கிம்கிடுக்கை அல்ல.

2. கொசு பிடிக்கும் காட்சி - பலரால் இதை ஜீரணிக்க முடியவில்லை. டாக்டர் புருனோ நர்சிம் இடுகையின் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது போல இது குழந்தைகளுக்காக. ஆங்கிலப் படம் போல குழந்தைகளுக்காக, பெரியவர்களுக்காக, ஆக்‌ஷன் விரும்பிகளுக்காக, ரொமான்ஸ் விரும்பிகளுக்காக என்று தனித்தனியே எதிர்பார்ப்பவனல்ல தமிழ் ரசிகன். அவனுக்கு இலை போட்டு 4 வகைக் கூட்டு, சாம்பார், ரசம், வத்தக் குழம்பு, மோர் கடைசியாக ஒரு கரண்டி பாயாசம் என்று அத்தனையையும் சேர்த்துப் படைக்க வேண்டும். அதில் உங்களுக்கு காய் பிடிக்கவில்லை என்றால் ஒதுக்கிவிட்டு சாப்பிட்டுக் கொள்ளுங்கள். அதை விடுத்து அந்தக் காயினால் சாப்பாடே கெட்டுப் போய்விட்டது என்று கூப்பாடு போடாதீர்கள். “பசங்க” படத்திலும் காதல் எதிர்பார்ப்போம், “காதல்” படத்திலும் காமெடி எதிர்பார்ப்போம்.

3. விளம்பரங்களில் இது இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல், இதுவரை வெளிவராத புது முயற்சி என்றெல்லாம் சீன் போடும் அளவுக்கு படத்தில் ஒன்றுமே இல்லை.  - இதெல்லாம் விளம்பரம் பாஸ். புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் சூர்யா வந்து SUPERல் S for Service என்று சொல்கிறார். அதை நாம் ஒரு புன்னகையுடன் கடந்து போவதில்லை?

4. சன் டிவியில் அரைமணிக்கொரு முறை விளம்பரம் போட்டு கொல்கிறார்கள் - அவர்கள் இதை எந்திரனுக்கு மட்டுமா செய்கிறார்கள்? அவர்களின் முதல் மொக்கைப் படமான காதலில் விழுந்தேனிலிருந்தே இதைச் செய்து வருகிறார்கள். திடீரென பலருக்கு இப்போதுதான் சன் டிவி என்ற சேனல் இருப்பதும் அதில் எந்திரன் விளம்பரம் போடுவதும் தெரிகிறது.

எந்திரன் பற்றி ரஜினி ரசிகர்கள் எழுதியதை விட ரஜினியை வெறுப்பவர்கள் தான் அதிக இடுகைகளைப் போட்டார்கள். அது கூட ஒரு மாதிரி விளம்பரப் பிரியம் தான்.

ஒரு நன்றி:

நர்சிம் அவர்களிடம் பல நாட்களாகக் கேட்டுக் கேட்டு அவர் செய்யாததால் வெறுத்துப் போய் பின்னூட்டப் போராட்டம் நடத்திய பின்னர் அவர் சச்சின் பற்றி எழுதிவிட்டார். சச்சின் பற்றி யார் எழுதினாலும் படிக்கலாம். ஆனாலும் நர்சிம்மின் டச்சோடு படிக்கலாமே என்று நினைத்துத்தான் அந்தப் போராட்டம்.எதிர்ப்பார்ப்பை 100% பூர்த்தி செய்யவில்லை என்றாலும் எழுதிய வரை ஓக்கே. பரிசல் அண்ணா தானும் ஒரு பாதி எழுதி வைத்திருப்பதாகச் சொன்னார். அவரையும் எழுதச் சொல்லி போராடிவிட வேண்டியதுதான்.

ஒரு விளம்பரம்

நண்பர் பலா பட்டறை ஷங்கர் - இருங்க இருங்க, அவசரப்படாதீங்க, விவகாரமில்லை.. விஷயம் - ஒரு தளத்தைப் பற்றிய செய்தியைப் பகிர்ந்துகிட்டார். உண்மையிலேயே ஒரு களஞ்சியம் அந்தத் தளம் - http://www.chennailibrary.com/ பழந்தமிழ் இலக்கியங்களும், சம கால நாட்டுடமையாக்கப்பட்ட இலக்கியங்களும் மின்னூலாக வைத்திருக்கிறார்கள். சென்று படித்து பயன் பெறுங்கள். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

ஒரு கொலு

நான் இதுவரை கொலு என்பதை சினிமாவில் மட்டுமே பார்த்து வந்திருக்கிறேன். அங்கே என்ன செய்வார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது. எங்களை இந்த முறை ஒரு வீட்டில் கொலுவுக்கு அழைத்திருந்தார்கள். (சுண்டல் தருவார்கள் என்று சொல்லியிருந்ததால்) தங்கமணி, முகிலனோடு ஆஜர் ஆகிவிட்டோம். வந்தவர்கள் எல்லாரும் ஆளுக்கொரு பாட்டு பாடிவிட்டு சென்றார்கள். என்னையோ தங்கமணியையோ பாடச் சொன்னார்கள். கொலுவிலிருக்கும் விக்ரகங்கள் & பொம்மைகள் எல்லாம் எழுந்து ஓடிவிடும் அபாயம் இருந்ததால புன்னகையோடு மறுத்துவிட்டு சுண்டலையும் டீயையும் குடித்துவிட்டு வீடு திரும்பினோம். தங்கமணிக்கும் கொலு வைக்கும் ஆசை வந்துவிட்டது.. :(((

முகிலன் அப்டேட்ஸ்

முகிலன் இப்போது ஆங்கில எழுத்துக்கள் 26ஐயும் (கேப்பிடல் மற்றும் ஸ்மால்) அடையாளம் கண்டுகொள்கிறார். "L" எழுதினால் நேராகப் பார்த்து எல் எனவும் தலைகீழாகத் திருப்பி செவன் எனவும் சொல்கிறார் (M & Wவுக்கும் இப்படியே). ஒரே ஒரு நாள் ஒன்றிலிருந்து ஆரம்பித்து டென் வரைக்கும் அவராகவே எண்ணினார். அதன் பிறகு பலமுறை முயன்றும் டூவிலிருந்து ஆரம்பிக்கிறாரே ஒழிய ஒன் சொல்வதே இல்லை.

அடுத்த கட்டமாக தமிழ் எழுத்துகள் அறிமுகம் துவங்கியிருக்கிறது. அ, ஆ, இ, ஈ சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அனாவுக்கு அடுத்து இனாவுக்குப் போய்விடுகிறார். கூடிய விரைவில் கற்றுக் கொள்வார்.

இந்த விஜயதசமிக்கு வித்யாரம்பம் செய்தாகிவிட்டது. தமிழகத்தில் இருந்த வரை அப்படியென்றால் என்னவென்றே தெரியாமலிருந்தேன். இங்கே உள்ள கோவிலில் வருடா வருடம் விஜயதசமியன்று குழந்தையை மடியில் வைத்து அரிசியில் அ அல்லது ஓம் எழுதி நாவில் தேன் தடவி நடனம் பயில ஆசைப் படுவோருக்கு சலங்கையும், பாட்டு படிக்க ஆசைப்படுவோருக்கு தாளமும் தருவார்கள். இந்த முறை தமிழ்நாட்டிலிருந்து மதியொளி சரஸ்வதி என்பவர் வருகை புரிந்திருந்ததால் அவர் கையால் (மூன்று வயதிலிருந்து 21 வயதுடைவர்களுக்கு) வித்யாரம்பம் செய்து வைத்தார். (பள்ளிக்குப் போக ஆரம்பித்து விட்டவர்களுக்கு வித்யாரம்பம் ஏன் என்று புரியவில்லை).

அண்ணா, அக்கா, மாமா, அத்தை, தாத்தா, பாட்டி என்று மற்றவர்களை அழைக்க முகிலனுக்குச் சொல்லிக் கொடுத்தது அவனுக்கு பயங்கரமாக ரெஜிஸ்டராகிவிட்டது. சிறுவயதினரை அக்கா, அண்ணா, இளைய மற்றும் நடுத்தர வயதினரை அத்தை, மாமா, வயதானவர்களைத் தாத்தா பாட்டி என்று அவனாகவே அழைக்கத் தொடங்கிவிட்டான். நல்ல ஃபிகர்களை சித்தி என்றழைக்க எப்படிக் கற்றுக் கொடுப்பது என்று விழித்துக் கொண்டிருக்கிறேன்.

Monday, October 11, 2010

ஆயுதம் செய்வோம்

இன்று சன் டிவியில் குஷ்புவின் கணவர் சுந்தர்.சி நடித்த ஆயுதம் செய்வோம் என்றவொரு மொக்கைப் படத்தைக் காணும் சந்தர்ப்பம் வாய்த்தது. ஆரம்பம் முதல் விவேக்கும் சுந்தர்.சியும் காமெடி என்ற பெயரில் அடித்த கூத்துகளைப் பார்த்து ரத்தக் கண்ணீர் வடித்து வந்த நானும் தங்கமணியும் படத்தின் கடைசி அரை மணி நேரத்தில் அடக்கமாட்டாமல் வயிறு வலிக்க சிரித்தோம்.

படத்தின் கதை இதுதான். எதைப் பற்றியும் கவலைப் படாமல் ரவுடித்தனம் செய்து திரியும் சுந்தர்.சியும், போக்குவரத்துக் காவலராக வரும் விவேக்கும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததற்காக ஒரு வழக்கில் மதுரையில் இருக்கும் காந்தி மியூசியத்தில் 15 நாள் தங்கி காந்தியம் கற்று வர வேண்டும் என்ற வினோத தண்டனை பெறுகின்றனர். இவர்களுக்குத் தண்டனை வாங்கித் தந்த வக்கீல் விஜயகுமார் - பொதுநல வழக்குகள் ஸ்பெசலிஸ்ட், ட்ராஃபிக் ராமசாமியின் திரைப்படைப்பு என்றும் சொல்லலாம் - ஒரு முன்னாள் அமைச்சர் சம்மந்தப்பட்ட வழக்கின் ஆதாரங்களை வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டு அந்த முன்னாள் அமைச்சருக்காக அவரை மிரட்டப் போகிறார் சுந்தர்.சி. அப்போது தெரியாத்தனமாக விஜயகுமார் உயிரை விட்டு விட, சாகும் தருவாயில் அவர் சொல்லிப்போன “வாழ்க வளமுடன்” என்ற வார்த்தைகள் சுந்தர்.சியை நிம்மதி இழக்கச் செய்கிறது. அவர் விட்டுப் போன அந்த முன்னாள் அமைச்சரின் குற்றத்தை வெளிக்கொண்டு வர சுந்தர்.சி அந்த ஆதாரங்களைத் தேடி எடுக்கிறார். அதை போலிஸில் கொண்டு சேர்க்க நீதிமன்றத்தின் முன் அவற்றைச் சமர்ப்பிக்குமுன் அமைச்சரின் ஆட்களால் ஆதாரம் அழிக்கப் படுகிறது.

இதற்குப் பிறகு ஆரம்பிக்கிறது காமெடிக் காட்சிகள். ஆதாரம் போனால் என்ன, குற்றவாளி அந்த முன்னாள் அமைச்சர்தான் என்ற சத்தியம் இருக்கிறதே என்று , வடபழனி காந்தி பஜாரில் இருக்கும் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருக்கிறார் முன்னாள் ரவுடியான ஹீரோ. கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு ஆதரவு திரண்டு தமிழகம் முழுக்க உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவரை யாரோ சுட்டு விட, இளைஞர்கள் வெகுண்டெழுந்து வன்முறையில் இறங்க, உடனே காந்தி, ச்சே, ஹீரோ அவர்களை வன்முறைப் பாதையில் இறங்க வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறார். உடனே மக்களும் வன்முறையை கைவிட்டு விடுகின்றனர். இதைப் பார்த்ததும் மனம் மாறிய முன்னாள் அமைச்சர், தன் குற்றங்களை ஒப்புக் கொண்டு போலிஸில் சரணடைகிறார். எல்லாம் முடிய சுபம்.

இதில் என்ன காமெடி என்கிறீர்களா? அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து இந்த நாட்டில் நியாயம் அடைய முடியுமா? அதுவும் ஒரு அரசியல்வியாதி சம்மந்தப்பட்ட வழக்கில்?

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் சுதந்திரத்துக்குப் பிறகு உண்ணாவிரதம் மூலம் இரண்டே இரண்டு விடயங்கள் தான் நடந்துள்ளன. காவிரித்தாய் சென்னை மெரினாவில் இருந்த உண்ணாவிரதத்தினால் தங்கு தடையின்றி காவிரி தமிழகத்துக்குள் பாய்கிறது. தமிழினத் தலைவர் நான்கு மணி நேரம் பீச் ரோட்டில் இருந்த உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர் நின்று பிரபாகரனும் ராஜபக்‌ஷேவும் கை குலுக்கினர். வேறு எதுவும் நிகழ்ந்ததாக சரித்திரம் சொல்லவில்லை.

ஆனால் உண்ணாவிரதம் இருந்து மண்ணாகிப்போனவர்கள், போகப்போகிறவர்கள் இருக்கிறார்கள். அதைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் இந்தத் திரைப்படத்தில் மக்கள் ஹீரோவுக்கு ஆதரவாகத் திரளும்போது காந்தியவாதி நாசர் சொல்வதாக வரும் இந்த வசனத்தை ஹீரோ நினைத்துப் பார்ப்பார் - “நீ ஆயுதம் ஏந்திப் போராடுனா நீ தனியாத்தான் போராடனும். அதுவே அஹிம்சை வழியிலப் போராடுனா உலகமே உன் பின்னாடி நிக்கும்” சத்தியமாக வடிவேலு, விவேக் காமெடிக்குக் கூட இந்தளவுக்கு நான் சிரித்திருக்க மாட்டேன்.

அஹிம்சை வழியில் போராடினான், சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆயுதமாக ஏந்தினான். ஐயா, உலகம் பின்னால் திரள வேண்டாம். அவனை சாகவிட்டு வேடிக்கை பார்க்காமலாவது இருக்க வேண்டுமே? 26 வயது சாகக் கூடிய வயதா?

சாக விட்டது நமது ராணுவமாய் இருந்தாலும், அது பக்கத்து நாட்டு சமாச்சாரம் என்று சொல்வீர்கள். சரி, பக்கத்து நாடு வேண்டாம். நம் நாட்டிலேயே பார்ப்போம்.

ஐரோம் சர்மிளா. நவம்பர் நான்காம் தேதி வந்தால் அவர் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து 10 வருடம் நிறைவடையும். எதற்காக உண்ணாவிரதம் இருக்கிறார்? 1958ஆம் வருடம் மணிப்பூர் உட்பட கிழக்கு மாகாணங்களின் மீது இந்திய அரசு நிறைவேற்றிய AFSPA - Armed Forces Special Powers Act - என்ற அடக்குமுறைச் சட்டத்தை இந்திய அரசு வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து. ஆனால் அரசாங்கம் என்ன செய்கிறது? அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் தங்க வைத்து உணவை ட்யூப் மூலம் ஏற்றி வருகிறது. அவர் வாய் வழியாக தண்ணீர் கூட உண்பதில்லை. எத்தனை வருடங்களுக்கு இது தொடரப்போகிறது? அவர் மரணிக்கும் வரையிலா?

இந்த இரு நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது காந்தி சொல்லிக் கொடுத்த அகிம்சையும் காந்தியமும் எந்த வகையில் நமக்கு உதவும்? முன்னா பாய், ஆயுதம் செய்வோம் போன்ற திரைப்படங்களை எடுப்பதைத் தவிர?

ஒரு படத்தில் சத்யராஜ் சொன்ன வசனம் நினைவுக்கு வருகிறது - “டேய் பேசிக்கலி வெள்ளக்காரன் நல்லவன்டா”

Saturday, October 2, 2010

எந்திராஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

முன் குறிப்பு: இது சினிமா விமர்சனமல்ல. சினிமா பார்த்த அனுபவம். சினிமா விமர்சனத்தை எதிர்பார்த்து வந்தவர்கள், வேறு பல நல்ல விமர்சகர்களின் தளங்களை நாடவும்.. :))

ஏற்கனவே சொல்லியிருந்த மாதிரி டிக்கெட் புக்கியிருந்தேன். அக்டோபர் ஒன்னாம் தேதி மூணு ஷோ. மதியம் 1:00 மணி, மாலை 4:30, இரவு 8:10. மதியமும் மாலையும் ஆணு புடுங்குற, ஆணி புடுங்கி முடிஞ்சி வீட்டுக்கு வர வேலையிருக்கும்ங்கிறதால இரவு 8:10 ஷோவுக்கு தான் புக் செஞ்சிருந்தேன்.

ஆஃபீஸ்ல இருந்து 4:15 மணிக்குக் கிளம்பி வீட்டுக்கு வந்துடனும். வந்துட்டு சினிமா பாக்கும்போடு கொறிக்க ஹெல்தியா எதாவது - சுண்டல்கடலை பெஸ்ட் சாய்ஸ் - செஞ்சி எடுத்து வச்சிக்கணும். முகிலனுக்கு சாப்பாடு - பேபி ஃபுட் -, குடிக்க தண்ணி இதெல்லாம் ரெடி செஞ்சிரனும். இதையெல்லாம் நீயா செஞ்சாத்தான் நான் சினிமாவுக்கு வருவேன் - இது தங்கமணி மிரட்டல். நம்ம பங்குக்கு 6:30க்கெல்லாம் சாப்டுட்டு 7:30 மணிக்குள்ள தியேட்டர்ல இருக்கணும் இப்பிடியெல்லாம் திட்டம் போட்டுட்டு ஆஃபீஸுக்குக் கிளம்பி போயாச்சி.

கை பொட்டியத் தட்டிக்கிட்டு இருந்தாலும் மனசெல்லாம் எந்திரன் ஓடிக்கிட்டே இருந்தது. எந்த விமர்சனத்தையும் - தல கிரியோடது தவிர - படிக்கலை. எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்தது மதியம் மூணு மணி வரைக்கும்.

சரியா மூணு மணிக்கு ஒரு ஃபோன் கால். Userகிட்ட இருந்து. ஒரு அப்ளிக்கேஷன் புட்டுக்குச்சி. என்னான்னு பாருன்னு. நானும் அதை வழக்கம்போல நம்ம டீம்ல இருக்கிற ஒருத்தருக்கு அசைன் பண்ணிட்டு என்ன நடக்குதுங்கிறதை நகத்தைக் கடிச்சிட்டுப் பாக்க ஆரம்பிச்சேன். பிரச்சனை என்னான்னு கண்டுபிடிச்சாச்சி, ஆனா அதை சால்வ் செய்யறது எங்க கைல இல்லை. மேனேஜ்மெண்ட்தான் செய்யணும். ஆனா டைரக்டரும், சி.ஐ.ஓவும் அன்னைக்கிப் பாத்தா லீவ் போடணும்? இதுக்கு நடுவுல பிரச்சனை என்னான்னு கண்டுபிடிச்ச சாஃப்ட்வேர் எஞ்சினியர் 4:00 மணியானதும் வீட்டுக்குக் கிளம்பிட்டாங்க. கடைசியில லீவ்ல போன டைரக்டரை செல்ஃபோன்ல பிடிச்சி, பிரச்சனைய விளக்கி இப்பிடித்தான்யா தீக்கணும்னு சொல்லி.. எல்லாம் முடிஞ்சிரும்ங்கிற நிலைமை வரும்போது மணி பாத்தா 4:45. சரி இன்னும் ஒரு கால் மணி நேரத்துல அப்ளிகேஷனை ரீ-ஸ்டார்ட் பண்ணிரலாம்னு நினைச்சா, கடைசியில ஒரு முட்டுக்கட்டை விழுந்திருச்சி. டைரக்டர், இதை இப்போ ரிசால்வ் செய்ய முடியாது. திங்கட்கிழமை பாத்துக்கலாம்னு சொல்லிட்டாரு. ஆனா பிசினஸ் விட மாட்டேங்கிறாங்க. இன்னைக்கே தீர்க்கணும்னு என்னை மிரட்டறாங்க. எனக்குன்னா மணி 5:00 ஆயிடுச்சேன்னு ஒரே கவலை. அப்புறம் பிசினஸையும் டைரக்டரையும் கோத்து விட்டு அவனுங்களுக்குள்ள அடிச்சிக்கிட்டு ஒரு வழியா நீ இன்னைக்கி ஆணியே புடுங்க வேணாம்னு என் கிட்ட சொல்லும்போது மணி 5:45.

அவசரம் அவசரமா வீட்டுக்கு வந்தா, நம்ம தங்கமணி நிலைமையப் புரிஞ்சிக்கிட்டு அவங்களே சுண்டல் கடலையை வேக வச்சிருந்தாங்க. முகிலனுக்கும் ஷார்ட் டிஃபன் குடுத்துக்கிட்டு இருந்தாங்க. நம்ம சைட்ல அந்த சுண்டலுக்கு தாளிச்சிக் கொட்டி கலந்துட்டு, நைட் டின்னருக்கு நூடுல்ஸ் செஞ்சி எல்லாரும் சாப்டுட்டு , பேசின மாதிரியே 7:00 மணிக்கு கிளம்பியாச்சி. போற வழில ஃப்ரண்டையும் அவர் மனைவியையும் பிக்-அப் செஞ்சி தியேட்டருக்குப் போய் ரீச் ஆவும்போது மணி 7:25.

தியேட்டர்ல மேல என்ன என்ன படம் ஓடுதுன்னு எழுதி லைட் போட்டு வச்சிருப்பாங்க. அதுல எந்திரன் பாத்ததுமே மனசுல ஒரு பெருமிதம். தமிழ்ப்படத்தையும் ஒரு ஆங்கிலப்படம் போடுற தியேட்டர்ல போட்டு மேலயே எழுதியும் வச்சிருக்காங்கன்னு. நான் பெற்ற பெருமிதம் பெருக இவ்வையகம்.



தியேட்டருக்கு வெளிய இருந்து நம்மாளுங்க நிக்கிறதைப் பாத்ததும் பக்னு ஆயிருச்சி.(அந்த ஃபோட்டோல பாருங்க. ஒரு வரிசை தெரியுதா?) நல்ல சீட் கிடைக்காதா? முன்னாடி உக்காந்துதான் பாக்கணுமோன்னு. எதுக்கும் இருக்கட்டும்னு தங்கமணிக்கிட்ட ஒரு அப்ளிகேஷன் - அப்பிடி ஒரு வேளை நல்ல சீட்ல உக்காந்து பாக்க முடியலைன்னா ஞாயிற்றுக்கிழமை இன்னொரு தடவை வரணும் - போட்டு வச்சிட்டேன்.

தியேட்டருக்குள்ள நுழைஞ்சி (ஏற்கனவே ஆன்லைன புக் செஞ்சியிருந்ததால) அங்க இருந்த கயாஸ்க் (Kiosk) போய் டிக்கெட்டைப் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வந்திடலாம்னு போனா எனக்கு முன்னாடி ஒருத்தர் - 17 டிக்கெட் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு இருந்தாரு. முதல்லயே மத்தவங்களை எல்லாம் க்யூல (மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் - எந்திரன் ஓடுறது ஸ்க்ரீன் 1. அதுக்குள்ள போறதுக்கான க்யூ) நிக்க சொல்லிட்டு நானும் நாலு டிக்கெட்டையும் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு க்யூல போய் சேந்துக்கிட்டேன்.


அந்த தியேட்டர்ல இருந்தவங்கள்ல முக்கால்வாசி பேரை நான் ராச்செஸ்டர்ல பாத்ததில்லை. இவ்வளவு பேரு இங்க இருக்காங்களான்னு எனக்கு ஒரே ஆச்சரியம். ஆமா நாம வீட்ட விட்டு வெளிய போறதேயில்ல. நாலு எடத்துக்குப் போய் வந்தாதான மனுசங்களைப் பாக்க முடியும்னு கொமட்டுல தங்கமணி குத்தவும், ஆமால்லன்னு நினைவுக்கு வந்தது.

7:40க்கெல்லாம் தியேட்டர் உள்ள விட ஆரம்பிச்சிட்டாங்க. அதிசயமா நம்ம மக்கள் வரிசையாவே தியேட்டர் உள்ள போனாங்க. வரிசையா போற கிரவுட்ல ஒரு பகுதி.


தியேட்டருக்குள்ள நுழைஞ்சதும் என்னோட அதியசத்துல விழுந்தது மண்ணு. உள்ள வந்தவங்க ஜஸ்ட் சாம்பிள். ரெண்டு பேரா உள்ள வந்தவங்க நல்லதா ஒரு ரோல இந்தக் கடைசியில ஒருத்தர் அந்தக் கடைசியில ஒருத்தர்னு உக்காந்துக்கிட்டாங்க. என்னாங்கனு கேட்டா, நடுவுல இருக்கிற சீட்டுக்கெல்லாம் அவங்க ஃப்ரண்ட்ஸ் & ஃபேமிலி வராங்களாம். இதுதான் ரிசர்வ் பண்றதா? கொடுமையேன்னு, சைட்ல இருந்த நாலு பேர் சீட்ல உக்காந்தோம்.

படம் போடுற வரைக்கும் எதேதோ படங்களோட ட்ரெயிலர் ஓடிட்டு இருந்தது. மக்கள் பொறுமையில்லாம கத்திக்கிட்டே இருந்தாங்க. நாமும் நம்ம பங்குக்கு விசில் போட்டோம். (சென்னை சூப்பர் கிங்க்ஸ் விளம்பரம் பாத்ததுல இருந்து முகிலன் விசில் போடுறார் - அப்பிடின்னா சும்மா ஒரு விரல் இல்லைன்னா ரெண்டு விரலை வாயிக்குள்ள வச்சி உஃப் உஃப்னு ஊதுவார்) நான் விசிலடிக்கிறதைப் பாத்துட்டு முகிலனும் விசில் போட்டார்.

ஆப்பரேட்டர், படத்தப் போடுய்யா...

ஆப்பரேட்டருக்குத் தமிழ் தெரியுமா?

இப்பிடியெல்லாம் கத்திக்கிட்டே இருந்தாங்க. சரியா 8:10க்கு படம் போட ஆரம்பிக்க முன்னாடி, மத்தவங்கள டிஸ்டர்ப் பண்ணாம சைலண்டா இருந்து படம் பாருங்கன்னு ஸ்லைட் போடவும் தியேட்டரே சத்தத்துல அதிர்ந்திச்சி.

படம் ஆரம்பிச்சி, புதிய மனிதா பாட்டுப் போடவும் முகிலனுக்கு கண்ணு ரெண்டும் பிரைட் ஆகிடுச்சி. ஆஹா நாம கேட்ட பாட்டுடானு. டைட்டில் போடும்போது ரஜினி, சுஜாதா, ரஹ்மான், ஷங்கர் இவங்களுக்கு பெரிய கைத்தட்டல். பாட்டப்போ எல்லாம் ஜாலியா பாத்த முகிலன் ரோபோவைக் காட்டினதும் பயப்பட ஆரம்பிச்சிட்டாரு. (ஏற்கனவே டிவியில வர்ற மஹிந்த்ரா மினி ட்ரக் விளம்பரத்துல அந்த மினி ட்ரக் ரோபோவா மாறுரதைப் பாத்தே பயந்தவரு). என் மடியில இருந்து அவங்கம்மா மடிக்கு ஷிஃப்ட் ஆயிட்டாரு. அப்புறம் கொஞ்ச நேரத்துல இறங்கி நம்ம ஃப்ரண்ட்கிட்ட போய் உக்காந்துக்கிட்டாரு.


மேல இருக்கிற ஃபோட்டோ காதல் அணுக்கள் பாட்டு ஓடும்போது எடுத்தது. சிட்டி ரோபோ செய்யற சாகசங்களுக்கு தியேட்டர் கைத்தட்டும்போதெல்லாம் கை தட்டினாரு. ஆனா அதே ஸ்கின் இல்லாத மெட்டல் ரோபோவா வரும்போதெல்லாம் பயப்படறதை நிறுத்தல. அதிலயும் டேனி டென்சொங்பாவோட ரோபோஸைப் பாத்து ரொம்பவே பயந்தாரு. குறிப்பா சிட்டி ஃபயர்ல இருந்து ஆளுங்களைக் காப்பாத்தும்போது அம்மாவைக் கட்டிப் பிடிச்சிக்கிட்டு முகத்தைத் திருப்பிக்கிட்டாரு.

இண்டர்மிஷன்னு போட்டும் இண்டர்வல் விடல - ஹாலிவுட் படம் மாதிரி. அதுனாலயோ என்னவோ கிளிமாஞ்சாரோ பாட்டுக்கு கொஞ்சம் பேர் வெளிநடப்பு செஞ்சிட்டாங்க. முகிலனும் பொறுமை இழந்து வெளிய போகணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிட்டாரு, பாவம் தங்கமணிதான் வெளிய கூட்டிட்டுப் போனாங்க. (என்ன ஒரு ஆணாதிக்கம்?) அதுக்கப்புறம் ஒரே உள்ளே வெளியே தான்.

கடைசி அரை மணி நேரம் எல்லாரையும் கட்டிப் போட்டுடுச்சி. ரஜினி அதகளம். நான் பின்னாடி போய் நின்னுக்கிட்டே பாத்தேன் - முகிலன் புண்ணியம். அரிமா அரிமா - முகிலனோட ஃபேவரைட் பாட்டு போடவும், முகிலன் டான்ஸ் ஆடினாரு. இருட்டா இருந்ததால படமோ வீடியோவோ எடுக்க முடியலை. படம் முடியவும் ஒருத்தர் சத்தமா - “தலைவா உனக்கு இன்னும் வயசாவலை”னு சொல்லவும் இன்னும் சிலர் கைத்தட்டுனாங்க. (அந்த இன்னும் சிலர்ல நான் இல்லைன்னா நீங்க நம்பவா போறீங்க).

மொத்தத்துல எந்திரன் சினிமா இல்லை. எக்ஸ்பீரியன்ஸ். DOT.