Sunday, November 18, 2012

சில்வியா - 3

பாகம்-1 பாகம்-2
The difference between seeing the things and observing them is the difference between normal people and detectives“இன்னைக்குக் காலைல ஜென்னிசி ரிவர்ல மீன் பிடிக்கப் போன ரெண்டு பேர் ஒரு டெட் பாடியப் பார்த்து ரிப்போர்ட் பண்ணியிருந்தாங்க”


“டெட் பாடியா? யாரோடது?”


“ஜான் ப்ரோடி”


“ஜான் ப்ரோடி? சில்வியாவோட எக்ஸ் பாய்ஃப்ரண்டா?”


“ஆமா மாமா. அவனே தான். சில்வியாவைக் கொன்னுட்டு கில்லர்ஸ் கில்ட்ல சூசைட் பண்ணிக்கிட்டான் போல. கேஸ் குளோஸ்ட்”


அருண் ஒரு விநாடி யோசித்தான். “இல்ல சௌந்தர். ஜான் கொலை செஞ்சிருக்க மாட்டான்னு நினைக்கிறேன்”


“நீதான மாமா அவனாக் கூட இருக்கலாம்னு சொன்ன?”


“அவனாக் கூட இருக்கலாம்னு தான் சொன்னேன். ஆனா, அவனுக்கு மோட்டிவ் என்ன? சில்வியாவைக் கூட இவன் தானே வெட்டி விட்டிருக்கான்? நியாயமா சில்வியாவுக்குத் தானே கோவம் வரணும்?”


“யூ ஹேவ் அ பாய்ண்ட் மாமா. இப்ப என்ன செய்யறது?”


“போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சதா?”


“அப்பிடின்னா?”


“ஓ உங்க ஊர் பாஷைல சொல்லணுமா? அடாப்ஸி முடிஞ்சதா?”


“ஆக்சிடண்ட் அப்பிடிங்கிறதால ஃபுல் அடாப்ஸி போக மாட்டாங்க. நான் ஷெரீஃப்கிட்ட சொல்லி ஃபுல் அடாப்ஸி செய்ய வைக்கிறேன்”


“ஓக்கே. அவன் ரிலேட்டடா என்கொயரிக்குப் போனா என்னையும் கூட்டிட்டுப் போ”


“அட நானே கேக்கலாம்னு இருந்தேன். எங்க டிபார்ட்மெண்ட்ல எப்பவாச்சும் காண்ட்ராக்ட்ல ப்ரைவேட் டிடெக்டிவ்ஸ் ஹயர் பண்ணுவோம். உன்னை அப்பிடி ட்ராஃப்ட் பண்ணட்டுமா?”


“டேய் நான் விசிட்டர் விசாவுல இருக்கேன். என்னால எப்பிடி வேலை செய்ய முடியும். அன் அஃபிஷியலா ஹெல்ப் பண்றேன்”


“ஓக்கே மாமா. அப்புறம் கூப்புடுறேன்”


ஃபோனை வைத்து விட்டு யோசித்தான். சில்வியாவைக் கொலை செய்துவிட்டு தற்கொலை போல ஜோடனை செய்யப்பட்டிருக்கிறது. குற்றவாளியாக இருக்கலாம் என்று கருதப்பட்டவன் ஆற்றில் பிணமாக மிதக்கிறான். இதில் வேறு யாரோ இருக்கிறார்கள். ப்ரோடியும் சம்மந்தப்பட்டிருக்கலாம். இப்போதைக்கு இந்த கேஸ் முட்டுச் சந்தில் முட்டி நிற்கிறது. எங்காவது ஒரு நூல் கிடைத்தால் தான் தொடர முடியும்.


********************


சௌமியாவும் அருணும் ஹாலில் செஸ் விளையாடிக் கொண்டிருந்த போது சௌந்தர் வந்தான்.


“மாமா! ப்ரோடி வீட்டை சல்லடை போட்டுப் பார்த்தாச்சி. எந்தத் துப்பும் கிடைக்கலை. இப்ப அவன் வேலை பார்த்த இடத்துக்குப் போய் விசாரிக்கலாம்னு இருக்கேன். நீயும் வர்றியா?”


“ஒரு நிமிஷம் இரு. ரெண்டு மூவ் தான். உன் தங்கச்சியைத் தோக்கடிச்சிட்டுக் கிளம்புவோம்”


சௌமியா முறைத்தாள். “என் ஸ்கில்லை அவ்ளோ குறைச்சலா எடை போடக் கூடாது” சொல்லிவிட்டு நைட்டால் என் கேஸ்ட்லை வெட்டினாள். பெருமையாக முகத்தை வைத்துக் கொண்டு அருணைப் பார்த்தாள். அருண் ஒரு புன்னகை சிந்திவிட்டு குயினால் அந்த நைட்டை வெட்டினான். “செக் & மேட்” கையைத் தட்டிவிட்டு எழுந்தான். சௌமியா குழப்பத்தோடு தப்பிக்க வழி இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருக்க, சௌந்தரைப் பார்த்து, “கிளம்புவோமா” என்றான்.


இருவரும் போலிஸ் காரில் டவுன் டவுனில் இருந்த அந்த ஆர்ட் கேலரி வாசலில் வந்து இறங்கினார்கள்.


“இங்க தான் ஜான் ப்ரோடி வேலை பார்த்திருக்கான்”


இருவரும் உள்ளே நுழைந்தனர். கொஞ்சமே பெரிய கேலரி. சுவர்களில் சித்திரங்கள் கலை நயத்துடன் தொங்கவிடப்பட்டிருந்தன. சிலவற்றின் மேல் SOLD என்று டேப் ஒட்டப்பட்டிருந்தது. ஆங்காங்கே சிலைகளும், சைனா க்ளே பாத்திரங்களும் அழகாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.


சேல்ஸ் கவுண்டரில் அமர்ந்திருந்தவன் இவர்களைப் பார்த்ததும் படித்துக் கொண்டிருந்த “Tourism & Migration to Paraguay" என்ற புத்தகத்தை மேஜை மீது வைத்துவிட்டு, எழுந்து “How may I help you" என்றான். சௌந்தர் தனது பேட்ஜை எடுத்துக் காட்டிவிட்டு, “I am Soundar, RPD's chief detective and this is Arun our private consultant" என்று அறிமுகம் செய்தான். அவன் முகத்தில் சிறிது கூட அதிர்ச்சி இல்லை. “I am Sean. Owner of this Gallery" என்று கையை நீட்டினான். கை பற்றி குலுக்கினார்கள்.


“மிஸ்டர் ஷான். ஜான் ப்ரோடி உங்க எம்ப்ளாயி தானே?”


“யெஸ். ஆனா ரெண்டு மூணு நாளா அவன் வேலைக்கே வரலை. ஃபோன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கிறான். ஃபயர் பண்ணிடலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்”


“ஓ. ஜான் இனிமே வேலைக்கு வரமாட்டான். ஏன்னா இன்னைக்குக் காலையில அவன் டெட் பாடி ஜெனிசியில கிடைச்சது” அருண் ஷானின் முகத்தைக் கூர்மையாக கவனித்தான். லேசான அதிர்ச்சி தெரிந்தது.


“ஓ.. வாட் ஹேப்பண்ட்? சூசைய்ட்?”


“நோ. ஆக்சிடெண்ட்டா இருக்கலாம்னு சந்தேகப்படுறோம். கேசுவல் என்கொயரிக்காக வந்தோம்.”


“ஓ. ஓகே. ஜான் என்கிட்ட வேலைக்கு சேர்ந்து ஆறு மாசம் தான் இருக்கும். அவன் கேர்ள் ஃப்ரண்டோட ப்ரேக் அப் ஆனதில இருந்து சரியாவே கவனம் காட்ட மாட்டேங்கிறான். கணக்குல தப்பு செஞ்சிடறான். போன வாரம் ரொம்பவே டென்ஷனா இருந்தான். ரெண்டு தடவை வார்ன் பண்ணேன். இந்த மண்டேல இருந்து ஆஃபிஸ்கே வரலை”


“ம்ம். அவனோட ஒர்க் ஸ்டேஷனைப் பார்க்கலாமா?”


“ஷ்யூர்” பின்னாலிருந்த ஒரு அறைக்கு அழைத்துப் போனான். போகும் வழியில் சுவற்றில் “Sold" என்று போட்டிருந்த ஒரு படத்தைப் பார்த்ததும் அருண் நின்றான்.


“என்ன மாமா?”


“இந்தப் படத்தை எங்கயோ பார்த்திருக்கேன் சௌந்தர்”


“எங்க பார்த்திருக்க?”


“அதுதான் நினைவுக்கு வரமாட்டேங்கிது. சமீபத்துல தான் எங்கயோ பார்த்த மாதிரி நினைவு.”


ஷான் இடைமறித்தான். “நோ. நீங்க இந்தப் படத்தைப் பார்த்திருக்க முடியாது. இது டாவின்ஸியோட தொலைஞ்சி போன ஒரு பெயிண்டிங். லாஸ்ட் டா வின்சி பெயிண்டிங்னு பேரு. உலகம் முழுக்க கலை ஆர்வலர்கள் இதைத் தேடிட்டே இருக்காங்க. எனக்கு சமீபத்துல தான் எதிர்பாராத இடத்துல கிடைச்சது. இண்டர்நெட்ல போட்டதும் ஒருத்தர் வாங்கிட்டாரு. ஜென்யூனிட்டி செக் அப் முடிஞ்சதும் எனக்குப் பணம் கைக்கு வந்துடும். டெலிவர் செஞ்சிருவேன்”


“ம்ம்.. ரேர் பெயிண்டிங்க்னா பெரிய தொகை கிடைச்சிருக்குமே?”


“ஆமா. மோர் தேன் 50 மில்லியன் டாலர்ஸ். இதை மட்டும் வித்துட்டா இதோட கடைய மூடிட்டு ரிட்டயர் ஆகிடப் போறேன்”


“குட் ஃபார் யு” என்றவாறு ஜானின் ஆஃபிஸ் ரூமுக்குள் நுழைந்தோம். வழக்கமான அமெரிக்க அலுவலக அறை போல குப்பையாக இருந்தது. மானிட்டர் முழுக்க போஸ்ட் இட் காகிதங்களை ஒட்டி வைத்திருந்தான். பி.சியை ஆன் செய்து உள்ளே ஒரு பார்வை பார்த்தான் சௌந்தர்.


சுவாரஸ்யம் தரும் டாக்குமெண்டுகளோ புகைப்படங்களோ இல்லை. எல்லாம் கேலரி சம்மந்தப்பட்டதாகவே இருந்தன. மேஜை ட்ராக்களையும் ஷெல்ஃபுகளையும் அலசிப்பார்த்தும் ஒன்றும் தேறவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் எதையோ தேடிக் கொண்டிருந்துவிட்டு ஷானிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.


போகிற வழியில் சௌந்தர் கேட்டான். “என்ன மாமா, இங்கயும் ஒண்ணும் கிடைக்கல? உன் லாஜிக் தப்பா இருக்குமோ? ”


“தெரியல சௌந்தர். ஆனாலும் ஒரு ஹன்ச். மூணாவது ஒரு ஆளும் இன்வால்வ் ஆகியிருக்கணும்னு”


“என்னமோ போ மாமா. நான் டி.ஏ கிட்ட நாளைக்கு ரிப்போர்ட் குடுக்கணும். எனக்கு வேற சில கேஸும் பெண்டிங் இருக்கு. ஏதாச்சும் சாலிடா தோணிச்சின்னா சொல்லு”


அருணை வீட்டு வாசலில் இறக்கிவிட்டுப் போனான். சத்தம் கொடுக்காமல் கிளம்பிப் போன காரையே குழப்பத்தோடு பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் அருண்.


(தொடரும்)


அடுத்த பாகம்

Friday, November 16, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 18

பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10
பகுதி-11 பகுதி-12 பகுதி - 13 பகுதி-14 பகுதி-15 பகுதி-16 பகுதி-17

“உங்க பெரியப்பந்தான் ஜெயில்ல இருந்து ரிலீஸாகி வந்துட்டாருல்ல. பாப்பா மறுவீட்டுக்கு வந்துட்டுப் போவட்டும், அண்ணன வச்சிட்டுப் பேசுவோம்”

பெத்த மகளை வெட்டிட்டு ஜெயிலுக்குப் போன பெரியப்பாவை வச்சிக்கிட்டா?

எனக்கு அடிவயிறு கலங்கியது. தனியே நேரம் கிடைத்ததும் மாலாவுக்கு ஃபோன் செய்தேன். எடுக்கவே இல்லை. இந்தப் பாழாய்ப்போன கிராமத்தில் இண்டர்நெட்டுக்கு எங்கே போவேன். வீட்டில் சொல்லிவிட்டு திருநெல்வேலிக்குப் போய் ஒரு பிரவுசிங் செண்டரில் எல்லாவற்றையும் விவரமாக மாலாவுக்கு மெயிலடித்தேன். பதில் வருமா என்று அரை மணி நேரம் ரெஃப்ரெஷ் தட்டிக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன்.

சாப்பிடப் பிடிக்காமல் மேலே போய் படுத்துக் கொண்டேன். 10 மணிக்கு ஃபோன் வந்தது. மாலா.

“என்னடா! வீட்ல ஒத்துப்பாங்களா?”

“தெரியல மாலா. பயமா இருக்கு. எங்க பெரியப்பா அவர் மகளையே வெட்டிட்டுப் போனவரு”

“பாண்டவர் பூமி ரஞ்சித் மாதிரி திருந்தி நம்மளை சேர்த்து வச்சிட்டாருன்னா?”

“விளங்கும். இதெல்லாம் சினிமால மட்டும் தான் நடக்கும். இவிங்களும் அங்க போய் கை தட்டிட்டு வருவாங்க. தன் வீட்டுல நடக்குதுன்னா அருவாள எடுப்பாங்க. போ மாலா”

“சரிடா. தைரியமா பேசு. அப்பிடி ரொம்ப முறுக்குனாங்கன்னா நாமளா கல்யாணம் பண்ணிக்கலாம்”

“கடைசியா அதான் செய்யணும்னு நினைக்கிறேன்”

“சரி இன்னொரு முக்கியமான விசயம். இன்னும் 2 வீக்ஸ்ல எனக்கு இங்க அசைன்மெண்ட் முடியுது. புனே போக முடியாது. பெங்களூருக்கு ட்ரான்ஸ்ஃபர் குடுங்கன்னு கேட்டுட்டு இருக்கேன். அனேகமா கிடைச்சிடும். நீ திரும்ப யு.எஸ் வரணுமா?”

“இல்லையே. நான் தான் விஷ்வத்க்கு கே.டி குடுத்துட்டேனே. இனி இங்க தான். மண்டே ரிப்போர்ட் பண்றேன்”

“குட். நான் அப்புறம் கூப்புடுறேன். ஸ்மார்ட் ஃபோன்ல ஈமெயில் செக் பண்ண முடியாதா?”

“முடியும். ஆனா 3ஜி ஒர்க் ஆவாது”

“ஓக்கே. அப்புறம் கூப்புடுறேன்”

ஃபோனை வைத்துவிட்டாள். இன்னும் இரண்டு நாட்களில் வரப்போகும் கண்டத்தை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று யோசித்துக்கொண்டே விழித்திருந்தேன்.

*****************************************

மறுவீட்டுக்குத் தங்கையும் மாப்பிள்ளையும் வந்திருந்தார்கள். மோதிரம் போட்டு வரவேற்ற பின்னால் மாப்பிள்ளையுடன் பேசுவதற்கு நேரமே கிடைக்கவில்லை. மதிய உணவுக்குப் பின்னால் வெற்றிலை போட்டுக் கொண்டு திண்ணையில் அமர்ந்தோம்.

“வாங்க மச்சான் அப்பிடியே நடந்துக்கிட்டே பேசுவோம்”

எழுந்து நடக்க ஆரம்பித்தேன்.

“என்ன மச்சான்! அமெரிக்கா எல்லாம் எப்பிடி இருந்திச்சி?”

“ம்ம்.. நல்லா இருந்திச்சி மாப்ள. சம்மர் தான் ரொம்ப நல்லா இருந்தது. விண்டர்ல ஒரே குளிர்”

“அப்பிடியா?  ஸ்னோ ஃபால் எல்லாம் பார்த்தீங்களா?”

“ம்ம் பார்த்தேன்”

“ஆமாம் மச்சான். நீங்க லவ் பண்ற பொண்ணு அமெரிக்கால தான் இருக்காங்களா?”

அதிர்ச்சி + ஆச்சரியமாகப் பார்த்தேன்.

“அதெல்லாம் உங்க தங்கச்சி சொல்லிட்டா. சொல்லுங்க”

“ஆமா மாப்ள. இப்ப அங்க தான் இருக்கா. இன்னும் ரெண்டு வாரத்துல இந்தியாவுக்கு வந்திடுவா”

“மாமா கிட்ட பேசிட்டீங்களா?”

“பேசினேன். நீங்க ஊருக்குப் போன பிறகு பெரியப்பாவை வச்சிட்டுப் பேசலாம்னு சொல்லியிருக்காங்க”

“மச்சான். இவங்கள்லாம் போன ஜெனரேஷன். இன்னமும் சாதி, மதம்னு அருவாளத் தூக்கிட்டு திரியறவங்க. இது உங்களோட வாழ்க்கை. நீங்கதான் முடிவெடுக்கணும்”

“சரிதான் மாப்ள. பெரியவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறோம்”

“நினைக்கிறதெல்லாம் சரிதான் மச்சான். ஆனா இவங்க எத்தனை வருசமானாலும் மாற மாட்டாய்ங்க. நீங்க முடிவெடுங்க. நானும் உங்க தங்கச்சியும் வந்து நடத்திக்க் குடுக்குறோம் உங்க கல்யாணத்தை”

நிம்மதியாக இருந்தது. சப்போர்ட் செய்வதற்கு சொந்தத்திலும் ஒரு ஆள் இருக்கிறது என்று தெரிந்ததும்.

“தேங்க்ஸ் மாப்ள. ரொம்ப சந்தோஷமா இருக்கு. தைரியமா பேசுவேன் அப்பாகிட்ட”

வழக்கமான பெட்டிக்கடையில் பின்னால் ஒளிந்து ஆளுக்கொரு சிகரெட்டைப் பிடித்தோம். பாக்கு போட்டுக்கொண்டு வீட்டுக்குப் போனோம்.

பெண்களைப் பெற்ற இரண்டு மாமாக்கள், பெரியப்பா, அப்பா எல்லாம் உட்கார்ந்திருந்தார்கள்.

பெரியப்பாவும் மாமாக்களும் பார்த்த பார்வையே சரியில்லை.

“வாங்க பெரியப்பா. வாங்க மாமா. வாங்க மாமா” என்று வரவேற்று விட்டு நின்றுகொண்டேன். காலியாக இருந்த சேரில் மாப்பிள்ளை உட்கார்ந்து கொண்டார். தங்கையும் அம்மாவும் பின்னால் நின்றிருந்தார்கள். அப்பா தங்கையைப் பார்க்க ஒரு மடக்கு சேரை எடுத்துக் கொண்டு வந்தாள். வாங்கி விரித்து உட்கார்ந்து கொண்டேன்.

“என்னடா. என்னன்னவோ கேள்விப் படுறோம். எல்லாம் உண்மையா?” பெரியப்பா துவக்கினார்.

“அது வந்து...”

“என்ன மாப்ள நீங்க. உங்களுக்காக பொண்ணை பெத்து வச்சிட்டு ரெண்டு பேரு இருக்கோம். நியாயமா நாங்க ரெண்டு பேரும் தான் சண்டை புடிச்சிட்டு நிக்கணும். நீங்க என்னடான்னா, எந்த சாதிப் புள்ளையையோ காதல் கீதல்னு வந்து நிக்கிறீங்க?” அம்மாவோடு பிறந்த மாமா தொடர்ந்தார்.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வார்த்தைகளை மனதுக்குள் சரியாக செதுக்கிக் கொண்டு ஆரம்பித்தேன். “நீங்க கேள்விப்பட்டதெல்லாம் நிஜம் தான். நான் மாலாங்கிற பொண்ணை லவ் பண்றேன். அவளை தான் கல்யாணம் செஞ்சிக்கலாம்னு இருக்கேன். பெரியவங்க நீங்கதான் முன்னாடி இருந்து நடத்தித் தரணும்”

“எலேய் யார்கிட்ட பேசுறன்னு தெரிஞ்சிதான் பேசுறியா? கீழ் சாதி நாயைக் கல்யாணம் பண்ணினதுக்காக நாம் பெத்த மகளையே வெட்டிப்புட்டு ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவனாக்கும். என் கிட்டயே கல்யாணத்தை நடத்தித் தரச் சொல்றீயே உனக்கு என்னா தைரியம் வேணும். என் தம்பி மவனாச்சேன்னு பாக்குறேன். இதுவே நான் பெத்ததா இருந்தா இந்நேரம் தலை தனியாக் கிடக்கும்”

“என்ன பெரியப்பா பேசுறீங்க? அக்காவைக் கொன்னுட்டு நீங்க ஜெயிலுக்குப் போயிட்டீங்க. பெரியம்மா எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு நாங்க தானே பார்த்தோம். சாதி கவுரவத்தை நிலை நாட்டினதால உங்களுக்கு என்ன கிடைச்சிச்சி? 7 வருசம் ஜெயில்ல அச்சடிச்ச சோறும் அவுன்ஸ் குழம்பும் தான? இது என்னோட வாழ்க்கை. யார் கூட வாழ்ந்தா என் வாழ்க்கை நல்லாருக்குமுன்னு தான் நான் பார்க்க முடியும். என் பொண்டாட்டி என்ன சாதியா இருக்கணும், என்ன மதமா இருக்கணும்னு பார்க்க வேண்டியதில்ல”

மாப்பிள்ளை ஆர்ம்பித்தார். “மாமா மச்சான் சொல்றதுலையும் ஒரு பாயிண்ட் இருக்கு. அவருக்குப் பிடிக்காத கல்யாணத்தை செஞ்சி வச்சி அவரோட வாழ்க்கையையும் கெடுத்து இன்னொரு பொண்ணோட வாழ்க்கையயும் கெடுக்கணுமா?”

“என்ன மாப்ள சொல்றீங்க?”

“ஆமா மாமா. மச்சான் பெங்களூர்ல வேலை. திரும்பவும் அமெரிக்காவுக்குப் போனாலும் போவாரு. அவரு இருக்கிற இடத்துக்கே போய் உங்க பொண்ணை நல்லா வச்சிருக்காரான்னு பாத்துட்டே இருப்பீங்களா? இல்ல மிரட்டி மிரட்டி ஒருத்தரை குடும்பம் நடத்த வச்சிர முடியுமா? இதையெல்லாம் யோசிச்சிப் பாருங்க”

“அதெல்லாம் கட்டி வச்சிட்டா சரியாப் போயிரும் மாப்ள. ஒரு வீட்டுக்குள்ளயே ரெண்டு பேருமா இருந்தா ஒருத்தர் மூஞ்ச இன்னொருத்தர் பாத்துப் பாத்து பிடிச்சிப் போயிரும்.”

“ஐயோ மாமா. நீங்க இன்னும் உங்க காலத்துலயே இருக்கீங்க. காலம் மாறிப் போச்சி. இப்ப உங்க பொண்ணை எனக்குக் கொடுக்க முன்னாடி நல்லா விசாரிச்சிருப்பீங்க. எனக்கு ஏற்கனவே ஒரு பொண்ணோட லவ்னு தெரிஞ்சிருந்தா பொண்ணு குடுக்க யோசிச்சிருப்பீங்களா இல்லையா?”

“அது வேற மாப்ள. இப்ப பொண்ணு குடுக்கத்தான் ரெண்டு பேரு இருக்காய்ங்களே”

மாப்பிள்ளை தாய்மாமாவின் பக்கம் திரும்பினார். “சரி சித்தப்பு நீங்க சொல்லுங்க. உங்க பொண்ணை மச்சானுக்குக் கட்டிக் குடுத்த பின்னாடி பொண்ணு சந்தோசமா இல்லைன்னா உங்களால நிம்மதியா இருந்துட முடியுமா?”

மாமா யோசித்தார்.

"சொல்லுங்க சித்தப்பு. இல்ல நீங்க தான் அருவாளோட தங்கச்சி பக்கத்துல உக்காந்து பார்த்துட்டே இருக்க முடியுமா? உங்க பொண்ணோட வாழ்க்கையும் இதுல இருக்குதுன்னு நினைச்சிப் பாருங்க”

தயக்கத்துடன் பெரியப்பாவைப் பார்த்து ஆரம்பித்தார் மாமன் - “பெரிய மச்சான், மகன் சொல்றதிலையும் ஞாயம் இருக்கத்தான செய்யுது. பெரியவங்க கூடிப் பேசுங்க. எம்பொண்ணுகூட காலையில எதுக்குன்னு லேசா இழுக்கத்தான் செஞ்சிச்சி. விருப்பமில்லாம எதுக்குக் கட்டாயப் படுத்தணும்?”

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அம்மா அப்பாவைப் பார்த்து, “நம்ம மவன்.. நீங்கதான் பார்த்து..” என்று இழுத்தாள்.

“இந்தாடி அப்ப எங்கண்ணனப் பேசக் கூடாதுன்னு சொல்றியா?” அப்பா சேரை பின்னுக்குத் தள்ளி துண்டை முறுக்கிக் கொண்டு அம்மாவை அடிக்க எழுந்தார்.

நான் எழுந்து அம்மாவை மறைத்து நின்றேன். “அய்யா, நிறுத்துங்க. இப்ப எதுக்கு அம்மாவை அடிக்கப் போறீங்க?”

“தோளுக்கு மேல வளந்துட்ட. உன்னையவா அடிக்க முடியும்?”

“ஏன் அடிங்களேன்? அடிச்சி வெட்டிப் போடுங்க. அதுக்கப்புறமாவது உங்க சாதி வெறி அடங்குதான்னு பாப்போம். நீங்க சாதியைக் கட்டிக்கிட்டு அழுங்க. நான் போறேன்” எழுந்து விறுவிறுவென வீட்டை விட்டு வெளியேறினேன்.

“மச்சான் மாப்ள அண்ணே” என்று கலவையான குரல்கள் என் முதுகில் மோதி விழுந்தன. வேக வேகமாக நடந்து பெட்டிக்கடைக்கு வந்தேன். ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கிக் கொண்டு கம்மாக் கரைக்குப் போனேன். ஒதுக்குப் புறமாக இருந்த கிணற்றின் உள்ளே இறங்கி தண்ணீருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். படபடப்பு அடங்கவே இல்லை.

ஒவ்வொன்றாக முழு பாக்கெட்டையும் ஊதித் தள்ளினேன். இரண்டு மணி நேரங்கள் ஆகியிருந்தது. யாரும் தேடி வரக் காணோம். செல்ஃபோனை எடுத்துப் பார்த்தேன். சிக்னல் இரண்டு கோடுகள் மட்டும் இருந்தது. நான் எடுத்துப் பார்ப்பதற்கே காத்திருந்தது போல அடித்தது. மாப்பிள்ளை.

“சொல்லுங்க மாப்ள”

“எங்க மச்சான் இருக்கீங்க?”

“இங்க பக்கத்துல தான்”

“கிளம்பி வீட்டுக்கு வாங்க. பெரியவங்களை ஒரு வழியா சம்மதிச்சாச்சி. ஒரு கண்டிசன் தான் போடுதாக”

“என்ன கண்டிஷன்?”

“நேர்ல வாங்க பேசிக்கலாம்”

மனம் குதூகலமானது. விசிலடித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன். தங்கையும் வாயெல்லாம் பல்லாக “வாண்ணே” என்றாள்.

மாப்பிள்ளையும் அப்பாவும் உட்கார்ந்திருந்தார்கள். அப்பா முகம் சிறுத்துப் போய் இருந்தது.

“வாங்க மச்சான். உக்காருங்க” கையைப் பிடித்து அருகில் அமர்த்திக் கொண்டார் மாப்பிள்ளை.

”மச்சான் உங்களுக்காகப் பேசிப் போராடி சம்மதம் வாங்கிக் குடுத்துருக்கேன். நினைவுல வச்சிக்கிடுக. ஆமா.”

“தேங்க்ஸ் மாப்பிள்ளை. ரொம்ப தேங்க்ஸ். ஏதோ கண்டிஷன்னு சொன்னீங்களே என்ன?”

“மாமா நீங்களே சொல்லுங்க” அப்பாவைப் பார்த்தார்.

சிடுசிடுப்பு மாறாமல் அப்பா சொன்னார், “நீங்களே சொல்லுங்க மாப்ள. நான் இவங்கிட்ட பேசுறதா இல்ல”

ஒரு சில விநாடிகள் அப்பாவின் முகத்தையே பார்த்தேன். என் பார்வையைத் தாங்க முடியாமல் எழுந்து விட்டார். “இங்க பாருலே. நீ எவள வேணும்னாலும் கல்யாணம் செஞ்சிக்கோ. ஆனா கல்யாணம் இந்த ஊட்டுலயோ இந்த ஊர்லயே நடக்கக் கூடாது. நீ அந்தப் பொண்ணு ஊர்ல வச்சிக்கோ இல்ல பெங்களூர்ல வச்சிக்கோ. பெத்த கடனுக்கு நானும் எம்பொண்டாட்டியும் வந்துருவோம். வேற சொந்தக்காரங்களக் கூப்புடணும்னு எல்லாம் கனாக் காணாத. கல்யாணம் முடிஞ்சப் பிறகு நீ பெங்களூருலயே இருப்பியோ இல்ல அமெரிக்காவுக்கே போயிருவியோ உன் இஷ்டம். ஒம் பொண்டாட்டியக் கூட்டிட்டு இந்த வீட்டுப் பக்கம் வந்துராத. என் சாதிக் கவுரவத்தைக் கெடுத்துராத. அம்புட்டுத்தேன்”

சொல்லிவிட்டு சட்டைப் பையில் இருந்து ஒரு பீடியை எடுத்து பல்லிடுக்கில் கடித்துக் கொண்டு வெளியேறிவிட்டார்.

(தொடரும்)


Tuesday, November 6, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 17

பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 
காஃபி கப்பை கையில் வைத்துக்கொண்டு இந்த உரையாடலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாலாவை அர்த்தத்தோடு பார்த்து விட்டு விறுவிறுவென வெளியேறினேன்.

காரில் ஏறி ஹோட்டல் அறைக்கு வந்து சேரவும் என் செல்ஃபோன் பீப் பீப் என்றடிக்கவும் சரியாக இருந்தது. எடுத்துப் பார்த்தேன். மாலாதான் டெக்ஸ்ட் அனுப்பியிருந்தாள் - “Good. You nailed it. Played as we planned" என்று ஒளிர்ந்தது வாசகம். ஆம். எங்கம்மா இப்பிடித்தான் பேசுவாங்க, அதுக்கு நீ இப்பிடித்தான் பேசணும் என்று திரைக்கதை வசனம் எழுதிக் கொடுத்தது மாலாதான். அதைத்தான் இத்தனை நாட்கள் பயிற்சி எடுத்து கச்சிதமாக நிறைவேற்றிவிட்டு வந்திருக்கிறேன். இதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதையும் மாலா சொல்லியிருந்தாள்.

அறையின் ஜன்னலை லேசாகத் திறந்து வைத்துவிட்டு ஒரு சிகரெட் பற்ற வைத்துப் பிடித்துக் கொண்டிருந்தேன். செல்ஃபோன் அடித்தது. மாலா, எடுத்து, “ஹலோ” என்றேன்.

எதிர்முனையில் பதில் இல்லை. மாலாவின் அம்மா குரல் கேட்டது. ஃபோனை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்தேன்.

“பாத்தியாடி எப்பிடி திமிராப் பேசிட்டுப் போறான்? அவன் ஜாதி அப்பிடிடி. நம்மளால எல்லாம் அந்தக் குடும்பத்துல போய் வாழ முடியாதுடி. அவங்க பழக்க வழக்கம் வேற நம்ம பழக்க வழக்கம் வேற”

“அம்மா. நீங்க என்ன வேணும்னா சொல்லுங்க. எனக்குக் கல்யாணம்னு ஆனா அது தேவாவோடதான். நீங்க சம்மதிச்சி நீங்களே நடத்தி வக்கணும்னு நானும் தேவாவும் விரும்புறோம். அதுக்குப் பிறகு உங்க இஷ்டம்”

“பைத்தியக்காரத்தனமா பேசாதடி. நம்ம வீட்டுல யாருக்குமே இது பிடிக்கலை”

“அம்மா அவங்களா வாழப் போறாங்க. என் லைஃப் இது. நான் தான் வாழணும்”

“உங்க தாத்தா இப்ப இருந்திருந்தா உன்னை வெட்டிப் பொலி போட்டிருப்பாரு”

“அப்பிடியெல்லாம் இல்லம்மா. தாத்தா இருந்திருந்தா என் விருப்பத்தை நிறைவேத்தியிருப்பாரு”

“என்னவோ போடி. அப்பிடி அவனை தான் கல்யாணம் செஞ்சிக்குவன்னா எங்கயாவது ஓடிப்போய் பண்ணிக்கோ. உன்னைத் தலை முழுகிட்டு நாங்க நிம்மதியா இருக்கோம்” அவள் அம்மா விசும்புவது கேட்டது. அதற்குமேல் கேட்க விருப்பமில்லாமல் காலை கட் செய்துவிட்டுப் படுத்தேன்.

********************************

கிறிஸ்துமஸ் விடுமுறை, நியூ இயர் என நாட்கள் ஓடியது. பொங்கலை நெருங்கவும் ஊரில் தங்கை கல்யாண வேலைகள் பற்றி தினமும் ஃபோனில் பேசி, அனுப்ப வேண்டிய பணத்தை அனுப்பிக் கொண்டிருந்தேன். சேமிப்பு எல்லாம் கரைந்து கொண்டிருந்தது.

ஊருக்குக் கிளம்பும் நாள் நெருங்கியது. ஆன்சைட் அசைன்மெண்டை மொத்தமாகவே முடித்துவிட்டுக் கிளம்பிவிடச் சொல்லிவிட்டார்கள். என்னை ரீப்ளேஸ் செய்ய வந்த விஷ்வத்துக்கு கே.டி கொடுப்பதிலேயே நேரம் சரியாக இருந்தது. மாலாவிடம் அரை மணி நேரம் ஃபோனில் பேசிவிட்டு ஃபிளைட் ஏறினேன்.

******************************************

ஊருக்கு வந்து இறங்கியதும் திருமண வேலைகள். எல்லாருக்கும் பத்திரிகை கொடுக்க அப்பாவோடு வாடகைக்கார் எடுத்துக் கொண்டு போனது, பந்தக் கால் நடுவதிலிருந்து மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்பது வரை இடுப்பொடிய வேலை. எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாகவே திருமணம் நடந்தது. அம்மாவிடம் மட்டும் தொட்டும் தொடாமல் மாலாவைப் பற்றிச் சொல்லிவைத்தேன். அம்மா அதிர்ச்சியடைந்தாலும் கல்யாணம் முடிஞ்சாப்புறம் பேசிக்கலாம் என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்.

மாப்பிள்ளை வரவேற்பின்போதுதான் பார்த்தேன். ஃபோட்டோவில் பார்த்ததை விட இளமையாக இருந்தார். மாப்பிள்ளை முறுக்கு எதுவும் இல்லாமல் இயல்பாகப் பேசினார். படித்தவர் என்ற வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது. எக்ஸர்ஸைஸ் செய்வார் போல கைகள் இறுகி, மார்பு விரிந்து சினிமா கதாநாயகன் போலத் தான் இருந்தார். மீசை அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் அளவாக இருந்தது. வேஷ்டி சட்டை பேண்ட் சர்ட் என எல்லா உடையும் பொருத்தமாகவே இருந்தது. பணம் காசு என்று அதிகம் எதிர்பார்த்த குடும்பமாய் இருந்தாலும் மாப்பிள்ளை தங்கையை அன்பாகப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை கொடுத்தது.

கல்யாணம் முடிந்து மதியச் சாப்பாடும் ஓய்ந்த பிறகு கல்யாண மண்டபத்தில் ஆட்கள் அதிகம் இல்லாது இருந்த சேர்களில் நான்கை ஒன்றாகப் போட்டு லேசாக கண்ணயர்ந்தேன். வேலம்மா பாட்டி - அம்மாவின் அம்மா - எழுப்பினார்.

“என்ன பாட்டி? சாப்ட்டீங்களா?”

வெத்திலையை வாயோரமாகக் குதப்பி கையில் இருந்த சொம்பில் சாறைத் துப்பிவிட்டு, “அதெல்லாம் சாப்புட்டாச்சி. ஆமா அம்பேரிக்காவுக்குப் போயிருந்தியே, அங்கல்லாம் சாப்பாடு எப்பிடி? நம்மூரு சோறு கிடைக்குமா?”

“கிடைக்கும் பாட்டி. ஓட்டல்ல சாப்புடுறது எப்பயாச்சும் தான். மத்தபடி நானே சமைச்சி சாப்புட்டுக்குவேன்”

“ம்ம்ம்.. இப்பத்தான் தங்கச்சிக்கு கண்ணாலம் முடிஞ்சிருச்சில்ல. அடுத்த முகூர்த்தத்துல உனக்கு வச்சிரவேண்டியதுதான். பொண்ணு தேட வேண்டியதில்ல. அதான் உனக்குன்னு காத்துட்டு இருக்காளே வேலுச்சாமி மவ.” பாட்டி நைசாக தன் மகன் வயிற்றுப் பேத்தியை என்னோடு முடிச்சிப் போட்டாள். விடக்கூடாது.

“சும்மா இருங்க பாட்டி. சொந்தத்துக்குள்ள கல்யாணம் பண்ணா பொறக்குற புள்ளைங்களுக்கு பாதிப்பு வருமாம். வேற சாதியில பொண்ணு பார்த்தாலும் பார்ப்பேனே ஒழிய சொந்தத்துல கட்டிக்க மாட்டேன்”

“டேய் இதென்ன கோட்டித்தனமா பேசிக்கிட்டு. நம்ம சாதிய விட்டு வேற சாதியில பொண்ணெடுப்பானாக்கும். தேவனை மாதிரியா பேசுற? அந்நியத்துல பொண்ணெடுப்பேன்னு மட்டும் சொல்லு. வேற சாதிக்காரிய எல்லாம் மனசுல நினைச்சிட்டு இருக்காத. அது நடக்காது. உங்கப்பனுக்குத் தெரிஞ்சா வெட்டிப்புடுவாரு. ஆமா”

அம்மா சொல்லிவிட்டாள் போலிருக்கிறது. மெதுவாக நூல்விட்டுப் பார்க்கிறாள் பாட்டி.

“சரி பாட்டி. அந்நியத்துலதான் பொண்ணெடுப்பேன். போதுமா?”

“ஆஆ. இப்பத்தான் என் பேரன் மாதிரி பேசுற.” விரல்களை மடக்கி தலையின் இரண்டு பக்கமும் வழித்து நெற்றியில் சொடக்குப் போட்டுக் கொண்டாள். “சரி அசதியா இருப்ப. படுத்துக்க” எழுந்து மெதுவாக ஆடி ஆடி தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அம்மாவை நோக்கி நகர்ந்தாள்.

நாளையே அப்பாவிடம் மாலாவைப் பற்றிச் சொல்லிவிட வேண்டும். முடிவெடுத்தவனாய் கண்ணசந்தேன்.

************************************************

பொண்ணு மாப்பிள்ளையை ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு கல்யாண மண்டபத்துக்குக் கணக்குப் பார்த்து காசு செட்டில் செய்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். அய்யா வாசலில் உட்கார்ந்து பீடி குடித்துக் கொண்டிருந்தார்.

“அய்யா! உங்கக்கிட்டக் கொஞ்சம் பேசணும்”

“கல்யாண மண்டபத்துக்குக் காசு குடுத்து கணக்கு முடிச்சிட்டியாலே? பூக்காரன் ரெண்டாயர்ரூவா பாக்கி வரணும்னு சொன்னான். வா பேசிக்கிட்டே அவன்கிட்ட போய் பணத்தைக் குடுத்துட்டு வந்துருவோம்”

சிறிது தூரம் நடந்தோம். ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை.

“என்னலே. என்னமோ பேசணும்னு சொன்ன. இப்ப சும்மாவே வர்ற?”

“இல்லையா.. அது வந்து..”

“உங்கம்மாக்காரி சொன்னா. யாரோ ஒரு புள்ளையாமே?”

“ஆமா. கூட வேலை பாக்குறா”

“அமெரிக்காவுலையா பெங்களூருலையா?”

“பெங்களூர்லயும், அமெரிக்காவுலையும்”

“ம்ம்ம்.. என்ன சாதி?”

“நம்ம சாதி இல்ல”

என்னை அர்த்தமாக ஒரு பார்வை பார்த்தார்.

“உங்க பெரியப்பந்தான் ஜெயில்ல இருந்து ரிலீஸாகி வந்துட்டாருல்ல. பாப்பா மறுவீட்டுக்கு வந்துட்டுப் போவட்டும், அண்ணன வச்சிட்டுப் பேசுவோம்”

பெத்த மகளை வெட்டிட்டு ஜெயிலுக்குப் போன பெரியப்பாவை வச்சிக்கிட்டா?

(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே