Tuesday, September 17, 2013

ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 8மாநிலத்தின் முந்நாள் ஆளுங்கட்சி இந்நாள் எதிர்க்கட்சி மக்கள் முன்னேற்ற கழகத்தின் வட்ட அலுவலகம். வாசலின் ஐந்தாறு பேர் கரை வேட்டியுடன் வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டு நின்றிருந்தார்கள். காம்பவுண்டுக்குள் நின்றிருந்த வெள்ளை நிற சுமோவை கைலி கட்டியிருந்த ட்ரைவர் ஒருவர் கழுவிக் கொண்டிருந்தார். 

அந்தக் கட்சி அலுவலகத்திற்கு சற்றும் சம்மந்தமில்லாமல் வெள்ளை சட்டை கறுப்புப் பேண்ட் அணிந்து கழுத்தில் நீல நிற டை கட்டியிருந்த அந்த இளைஞன் தயக்கத்தோடு உள்ளே நுழைந்தான்.

உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய ஹால். அந்த ஹாலின் இரண்டு பக்கமும் போட்டிருந்த மர பெஞ்சில் நானகைந்து பேர் உட்கார்ந்திருந்தார்கள். இந்த இளைஞனை வித்தியாசமான பிராணீயைப் பார்ப்பது போல பார்த்தார்கள். ஓரமாக ஒரு மூலையில் ஒரு டேபிள் போட்டு அதற்குப் பின்னால் ஒல்லியாக, 50 வயதை ஒத்த ஒருவர் மடக்கு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். வெளிறிய பச்சைச் சட்டை அணிந்து தோளில் கொடிக்கரை போட்ட துண்டைப் போட்டிருந்தார். முகத்தில் ஒரு வார தாடி. 

“என்ன தம்பி? யாரைப் பாக்கணும்?”

“சொக்கலிங்கம் சாரைப் பாக்கணும்?”

“வட்டமா? அவரை எதுக்குப் பாக்கணும்?”

“எக்ஸ் மினிஸ்டர் பழனிச்சாமி பாக்கச் சொன்னாரு”

“பழனிச்சாமி அண்ணனா? சரி இங்க ஒரு நிமிஷம் உக்காரு. வட்டத்துக்கிட்ட கேட்டுட்டு வர்றேன்.”

கதவை இரண்டு முறை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார். வட்டம் என்றழைக்கப்பட்ட சொக்கலிங்கம் மேஜைக்குப் பின்னால் உட்கார்ந்திருந்தார். கரிய நிறம். முன்னந்தலையில் தொடங்கியிருந்த வழுக்கை. லேசாக முறுக்கி விடப்பட்ட மீசை. மேஜைக்கு எதிரில் இரண்டு பேர் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து தெவையில்லாமல் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். முன்னால் இருந்த ப்ளேட்டில் இருந்து நெய்யில் வறுத்த முந்திரியை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் உள்ளே வந்தவரைப் பார்த்ததும்,

“என்ன தலைவரே”

“வட்டம், பழனிச்சாமி அண்ணே அனுப்பி வச்சதா சொல்லிக்கிட்டு ஒரு பய வந்திருக்கான். வரச்சொல்லட்டுமா?”

“வரச்சொல்லுங்க, வரச்சொல்லுங்க. அண்ணன் ஃபோன் பண்ணி சொன்னாரு”

தலைவர் என்றழைக்கப்பட்டவர் வெளியே போனதும் இளைஞன் உள்ளே வந்தான்.

“சொல்லு தம்பி. என்ன பிரச்சனை?”

“வணக்கம் சார். நான் எக்ஸ் மினிஸ்டர் பழனிச்சாமி சாரோட பால் பண்ணைல மார்க்கெடிங் மேனேஜரா வேலை பார்க்குறேன்”

“சொன்னாரு தம்பி. அமைச்சரு கூப்புட்டு சொன்னாரு. பிரச்சனை பண்றவன் யாரு?”

“விஜயபவன் ஹோட்டல்ல பால் வாங்க ஆர்டர் பிடிக்கப் போயிருந்தேன் சார். அவங்க ஏற்கனவே அமுதம் பால் வாங்கறாங்களாம். நம்மக்கிட்ட வாங்க மாட்டேங்கிறாங்க. சார் உங்களைப் பாக்கச் சொன்னாரு”

“அப்புடியா.. எந்த ப்ராஞ்ச்?”

“மவுண்ட்ரோடு ப்ராஞ்ச் சார்.”

முன்னால் இருந்த ஆட்களைப் பார்த்து, “நம்ம சேகரு கார்ப்பரேஷன்ல தான இருக்கான்?”

“எந்த சேகரு? சந்திரசேகரா?”

“அவந்தான்”

“ஆமா. அங்க தான் இருக்கான்”

“அவனுக்கு ஃபோனைப் போடு”

மேஜை மேல் இருந்த செல்ஃபோனை எடுத்து ஃபோன் நம்பரை அடித்தான் ஒருவன். 

“அல்லோ, சந்திரசேகரா?”

“ஆமா, நீங்க யாரு?”

“நம்ம வட்டம் உங்கிட்ட பேசணும்னு சொன்னாரு, ஒரு நிமிசம் இருங்க”

போனை வாங்கிய சொக்கலிங்கம், ”என்ன சேகரு, எப்பிடியிருக்க?”

“நல்லா இருக்கேன் தலைவரே. என்ன மேட்டர் சொல்லுங்க”

“மவுண்ட்ரோடு விஜயா பவன் இருக்குதுல்ல”

“ஆமா”

“அவன் கொஞ்சம் மொரண்டு பிடிக்கிறான். நீ என்ன பண்ணு” என்று ஆரம்பித்து விவரித்தார்.

ஃபோனை அணைத்துவிட்டு, “தம்பி ஒரு ரெண்டு மணி நேரம் நம்ம ஆஃபிஸ்ல இருங்க. அதுக்குள்ள மேட்டரை முடிச்சிரலாம்”

அந்த இளைஞன் சிறிது நேரம் உள் ஹாலில் பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். வெளியே போய் டீகுடித்தான். அங்கே நடக்கும் பஞ்சாயத்துகளை வேடிக்கப் பார்த்தான். 

சொல்லி வைத்தது போல இரண்டு மணி நேரத்தில் வாசலில் ஒரு அம்பாசிடர் வந்து நின்றது. விஜயபவன் மேனேஜர் ஓட்டமும் நடையுமாக உள்ளே வந்தார். 

“வட்டம் இருக்காரா?”

இளைஞனைக் கவனிக்காமல் சேர் போட்டு உட்கார்ந்திருந்த பெரியவரைப் பார்த்துக் கேட்டார். 

“நீங்க யாரு?”

“மவுண்ட் ரோடு விஜயபவன் மேனேஜர்”

“வட்டம் கொஞ்சம் பிஸியா இருக்கார். இன்னைக்குப் பாக்க முடியாது. நாளைக்குக் காலைல 9 மணிக்கு மேல வாங்க”

“தலைவரே அப்பிடிச் சொல்லாதீங்க. ரொம்ப அர்ஜெண்ட்”

“சரி உள்ள போங்க”

உள்ளே நுழைந்தவரை கண்டுக்காதது போல அல்லக்கைகளுடன் சுவாரசியமாக நடிகைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார் சொக்கலிங்கம்.

“அண்ணே, அண்ணே..”

ஏளனமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, “வாய்யா, என்ன இவ்வளவு தூரம்?”

“அண்ணே. ஹோட்டல்ல இருந்து போற ட்ரெயினேஜ் பைப்பை அடைச்சிட்டாங்கண்ணே.. கார்ப்பரேஷனுக்கு ஃபோன் போட்டுக் கேட்டா, உங்களப் பாத்துட்டு வரச் சொன்னாங்க. அதான்...”

”வைத்தி, போய் அந்தத் தம்பிய வரச் சொல்லு”

வைத்தி வெளியே போய் இளைஞன் உள்ளே வந்தான். 

“நம்ம ஓட்டலுக்கு இனிமே இந்தத் தம்பிக்கிட்டயே பால் வாங்கிக்கோங்க. சரியா?”

மேனேஜர் தயக்கம் அப்பிய முகத்தோடு அந்த இளைஞனை ஒரு முறை பார்த்துவிட்டு, “சரிங்க”

“தம்பி, சார் கூட ஹோட்டலுக்குப் போய் ஆர்டர் எடுத்துக்கோ. அமைச்சரைக் கேட்டதா சொல்லு. சரியா?”

“சரிங்கண்ணே”

”அண்ணே, அந்த ட்ரெயினேஜ்...”

“அதெல்லாம் நீங்க ஹோட்டலுக்குப் போறதுக்குள்ள சரியாயிடும்” வைத்தியை அர்த்தத்துடன் ஒரு பார்வை பார்த்ததும் ஃபோனை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

சிறிது நேரம் கழித்து அவன் உள்ளே வந்தான். ஒல்லியான உருவம். பீடியும் கஞ்சாவும் இழுத்து இழுத்து ஒடுங்கிய கன்னங்கள். கண்கள் இரண்டும் உள்ளே போயிருந்தன. எண்ணை காணாமல் வறண்ட தலை. கோடு போட்ட பனியனும் உடலை ஒட்டிய வெளுத்த ஜீன்ஸும் அணிந்திருந்தான். அவன் உள்ளே நுழைந்ததும் சொக்கலிங்கம் மற்ற இருவரையும் ஒரு பார்வை பார்த்தார். இருவரும் வெளியெறினர்.

அவன் பல நாள் தாடியைச் சொறிந்தவாறு இருவரும் வெளியேறக் காத்திருந்தான்.

“என்னடா? என்ன விசயம்? அவ வாயத் தொறந்தாளா இல்லையா?”

“இல்லண்ணா, என்ன செஞ்சாலும் தெரியாது தெரியாதுன்னு தான் சொல்றா.. அவ புருசனைத் தேடிப் போன முத்துகிட்ட இருந்து ஒரு தகவலும் இல்லை. இப்ப இன்னா செய்யலாம்னு நீங்கதான் சொல்லணும்”

”நா வந்து பேசிப் பாத்தா எதும் நடக்குமா?”

“ஒரு வாட்டி செஞ்சி பாக்கலாம்ணா”

“சரி வெளிய இருக்கிற வைத்திய வரச் சொல்லு”

பாதிக் கதவைத் திறந்து வைத்தியை வரச் சொல்ல, வைத்தி உள்ளே வந்தான். அறையின் மூலையில் மடக்கி வைத்திருந்த சக்கர நாற்காலியைப் பிரித்தான். மேஜைக்குப் பக்கத்தில் நிறுத்திவிட்டு சொக்கலிங்கம் உட்கார்ந்திருந்த சேரைப் பிடித்து இழுத்து மேஜைக்கும் சேருக்கும் இடைவெளியை அதிகப் படுத்தினான். இரண்டுகைகளால் சொக்கலிங்கத்தை அலேக்காகத் தூக்கி சக்கர நாற்காலியில் உட்கார வைத்தான். இடுப்புக் கீழே சொக்கலிங்கத்தின் கால்கள் இரண்டும் சூம்பித் தொங்கின. சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு வர சுமோ சரியாக வாசலில் நின்றது. சொக்கலிங்கத்தைத் தூக்கி சுமோவில் உட்கார வைத்துவிட்டு நாற்காலியை மடக்கி பின்னால் ஏற்றினான். டிரைவர் சீட்டுக்குப் பக்கத்தில் சொக்கலிங்கம் உட்கார்ந்துகொள்ள வைத்தியும் புதிதாய் வந்தவனும் பின்னால் ஏறிக் கொண்டார்கள்.

***********************************************

பேச்சிலர்ஸ் பேரடைஸ் என்றழைக்கப்படும், மேன்ஷன்களால் நிரம்பி வழியும் திருவல்லிக்கேணியில், ஒரு சுமோ நுழைந்தால் சைக்கிள் கூட எதிரே வர முடியாத ஒரு சந்துக்குள் சொக்கலிங்கத்தின் சுமோ நுழைந்தது. முன்னொரு காலத்தில் பேச்சிலர்கள் சிலர் தங்கியிருந்திர்ப்பார்கள் போல. இப்போது ஒண்டுக் குடித்தனங்களுக்கு அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருந்தது அந்தக் கட்டிடம். பல இடங்களில் பாதிப் படிக்கட்டுகளாக இருந்த மாடிப் படியில் ஒரு குழந்தையைத் தூக்கி வருவது போல வைத்தி சொக்கலிங்கத்தைத் தூக்கிக்கொண்டு ஏறி வந்தான். முன்னால் ஜீன்ஸ் பேண்ட் நடந்தான். ஒரு கையை வைத்தியைச் சுற்றி வளைத்துப் பிடித்து இன்னொரு கையால் கோர்த்துக் கொண்டு பேலன்ஸ் செய்து வந்தான் சொக்கலிங்கம். மூன்றாவது மாடியான மொட்டை மாடிக்குள் நுழைந்ததும் கதவை அடைத்து ஜீன்ஸ் பேண்ட் ஒரு கம்பியால் வளைத்துப் பூட்டினான். 

மொட்டை மாடி மழையாலும் பலர் நடையாலும் கருப்படைந்து போயிருந்தது. மூலையில் ஒரு சிறிய அறை. இரண்டு பேர் தங்கலாம். சொக்கலிங்கம் தன்னை இறக்கிவிடச் சொல்லிவிட்டு தவழ்ந்தே அந்த அறையை நோக்கி நகர்ந்தார். மற்ற இருவரும் அவருக்குப் பின்னால் மெதுவாக நடந்தார்கள். கதவுக்கு அருகே போய் ஒரு கையால் கதவைத் தள்ளித் திறந்து விட்டு உள்ளே நுழைந்தார். அறைக்குள் ஒரு பெண் கைகள் பின்னால் கட்டப்பட்டு தரையில் உட்கார்ந்திருந்தாள். சித்ரவதை செய்யப்பட்டிருப்பதற்கான காயங்கள் முகம் மற்றும் கைகளில் தெரிந்தது. உதடுகள் உலர்ந்து ஓரிரு வெடிப்புகளில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கண்கள் இரண்டும் சொருகி இருந்தன. எத்தனை நாட்களாக சாப்பிடவில்லையோ தெரியவில்லை. 

அந்தப் பெண்ணின் அருகில் தவழ்ந்து போன சொக்கலிங்கம் அவள் அருகே அமர்ந்து அவள் முகவாயைத் தூக்கி முகத்தின் அருகில் போய் உற்றுப் பார்த்தார்.

“என்னடா சோறு போடவே இல்லையா நீங்க?”

“இல்லைங்க்ணா. தேவிடியா முண்ட என்ன கேட்டாலும் எனக்குத் தெரியாது தெரியாதுன்ட்டே சொல்றாண்ணா. அதான் சோறு போடாம பட்டினி போட்டாலாச்சும் வாயத்தொறக்குறாளான்னு பாப்போம்னு”

“டேய் சோறு திங்காம செத்துப் போயிட்டான்னா? போய் முக்குல பாய் கடையில ஒரு பிரியாணி வாங்கிட்டு வா”

அவன் பதில் பேசாமல் வெளியேறிப் போனான். 

“வைத்தி, தண்ணி ஒரு கிளாஸ் எடுத்துக் குடு” 

அறையின் மூலையில் ஒரு ப்ளாஸ்டிக் குடத்தின் மூது ஒரு டம்ப்ளர் சாய்வாக உள்ளே விழுந்துவிடாத வண்ணம் வைக்கப் பட்டிருந்தது. அந்த டம்ப்ளரில் நீரை நிரப்பிக் கொண்டு வந்து சொக்கலிங்கத்திடம் நீட்டினான் வைத்தி.

தண்ணீரை வாங்கி கையில் ஊற்றி அவள் முகத்தில் விசிறியடித்தார் சொக்கலிங்கம். தண்ணீரின் குளுமை பட்டதும் சற்றே கண் திறந்து பார்த்தாள். “இந்தா குடி” என்று டம்ப்ளரை வாய்க்கு முன் நீட்டினார். வேகவேகமாக குடித்தாள். 

“உன் பேரு என்ன?”

“பா.. பார்வதி” கழுத்தை இறுக்கிப் பிடித்த பின் பேசினால் கேட்பது போல குரல் நசுங்கிக் கேட்டது. 

“கணேசனுக்கு நீ ஒருத்திதான் பொண்டாட்டியா? இல்ல வேற யாரும் கூத்தியா வச்சிருக்கானா?”

“அதெல்லாம் இல்லீங்க. நான் ஒருத்திதான்”

“அவப் எங்க இருக்கான்னு தெரியுமா?”

“சத்தியமா தெரியாதுங்கயா.. தெரிஞ்சா சொல்லிரமாட்டேனா? உங்க கையில அடி வாங்கணுமா?”

கதவைத் திறந்து கொண்டு ஜீன்ஸ் பேண்ட் உள்ளே நுழைந்தான். கையில் ஒரு பொட்டலம். 

“கட்ட அவுத்து விட்டுட்டு குடு”

கையில் கொடுக்கப்பட்ட பிரியாணி பொட்டலத்தை வாங்கிப் பிரித்து வேக வேகமாக உண்ண ஆரம்பித்தாள். அவள் வேகத்தை தொண்டை ஒத்துக் கொள்ளாததால் விக்கல் எடுத்தது. சொக்கலிங்கம் திரும்பி வைத்தியைப் பார்க்க அவன் ஓடிப்போய் அந்த டம்ப்ளரில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு வந்து நீட்டினான். வாங்கி ஒரு வாய் குடித்தவள் மீண்டும் பிரியாணிக்குத் திரும்பினாள். 

சாப்பிட்டு முடித்து மீதம் இருந்த தண்ணீரில் தரையிலேயே கை கழுவி விட்டாள். அவள் சாப்பிட்டு முடிப்பதற்காகக் காத்திருந்தது போல சொக்கலிங்கம் இடது கையால் அவள் முடியைக் கொத்தாகப் பிடித்து வலது கையால் கன்னத்தில் ஒரு அறை விட்டார்.

அடித்த அடியில் பொறிகலங்கிப் போனாள். கண்களில் கண்ணீர் கட்டியது. "சொல்லுடி பார்வதி. உன் புருசன் கணேசன் இப்ப எங்க?"

"அய்யா அதான் சொன்னேனேய்யா எனக்குத் தெரியாதுய்யா"

"சிறுக்கி முண்ட. உம் புருசன் ஒரூவா ரெண்டுரூவா திருடிட்டு ஓடலடி. ஆறு கோடி ரூவா. முழுசா ஆறு கோடி ரூவாவோட ஓடிப் போயிருக்கான். உலகத்துல எங்க இருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சுருவேன். கண்டுபிடிச்சேன். அப்புறம் நீ முண்டச்சிதான். புரியுதா. உன் புருசன் உசுரோட உனக்கு வேணும்னா ஒழுங்கு மரியாதையா சொல்லு. எங்க போகணும்னு திட்டம் போட்டீங்க?"

"அய்யா சத்தியமா சொல்றேனுங்க. அந்த பேப்பருக்கு அம்புட்டு மதிப்புன்னு எனக்கும் தெரியாது அவருக்கும் தெரியாதுங்க. அவரு இம்புட்டு நாளு எவ்வளவு விசுவாசமா இருந்தாரு. உங்களுக்குப் போய் துரோகம் செய்ய மாட்டாருங்கய்யா. நம்புங்கய்யா. அந்த மனுசன் எங்க இருக்காருன்னு எனக்குத் தெரியாதுய்யா?"

தொடர்ந்து தலையை சுவற்றில் முட்டி அவள் அழுது கொண்டிருக்க ஜீன்ஸ் பேண்டில் செல்ஃபோன் ஒலித்தது. எடுத்துப் பேசியவன் முகம் வெளிச்சமானது.

"அண்ணா, கணேசன் கிடைச்சிட்டாண்ணா"

"அப்பிடியா? எங்க இருக்கான்?"

"வேலூர் ஜி.எச்ல"

"கிளம்புங்கடா உடனே போவோம்"

"இவளை?"

"இவ எதுக்கு இனிமே அவுத்து விட்டுரு. பொழச்சிப் போவட்டும்"

வைத்தி தூக்கிக் கொள்ள மூவருமாக கீழே இறங்கினார்கள்

Monday, August 26, 2013

ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 7


“மர்டர் விக்டிமோட ஃபோனா? இங்கயும் ஒரு மர்டர் விக்டிமோட ஃபோன்ல இருந்த நம்பர் தான் அது.”

“என்ன சார் இது ஆச்சரியமா இருக்கு. இது கோ இன்சிடன்ஸா இல்ல ரெண்டு கொலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?”

அருணும் குழப்பத்தில் ஆழ்ந்தான். 

“பை த வே என் பேரு அருண். எக்ஸ் காப். இப்ப கன்சல்டிங் மட்டும் பண்றேன்.”

“சார் என்னை நினைவில்லையா சார்? மதுரையில அந்த ரெட்டைக் கொலைக் கேஸ்ல நீங்க ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் ஆஃபிசரா வந்தப்ப நான் தான் உங்களுக்கு அஸிஸ்ட் பண்ணேன் சார். அப்ப எஸ்.ஐயா இருந்தேனே”

“அட காரியாபட்டி பரமசிவம். எப்பிடி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் சார். ஈரோட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி வந்திருக்கேன். வந்த உடனே ரெண்டு கொலைக் கேஸ் டீல் பண்ணிட்டு இருக்கேன். அதுல ஒண்ணு தான் இந்தக் கேஸ்”

“பரமசிவம், இந்தக் கேஸைப் பத்திக் கொஞ்சம் டீட்டெயில்ஸ் சொல்லுங்க”

“சார் விக்டிம் பேரு நமச்சிவாயம். ப்ரிஸம் எக்ஸ்போர்ட்ஸ்ங்கிற பனை ஓலை பொம்மை செய்யற கம்பெனியில ஃபீல்ட் ஏஜெண்ட். ஊர் ஊரா போய் பொம்மைகளைச் செய்ய ஆள் பிடிச்சி ஆர்டர் குடுத்து, வாரா வாரம் ஐட்டம்ஸை சென்னைக்கு லாரியில போட்டு அனுப்புற வேலை. இந்த வாரமும் அப்பிடி செஞ்சிட்டு வீட்டுக்குத் திரும்பும் போது வழியில யாரோ அருவாளால வெட்டிட்டாங்க. யூஸுவல் கிரிமினல்ஸோ இல்லை லோக்கல் ரவுடிஸோ செஞ்ச மாதிரி தெரியலை. வெட்ட முன்னாடி இந்த செல்ஃபோனுக்கு ஒரு கால் அடிச்சிப் பார்த்து வெரிஃபை செஞ்சிருக்காங்க. அதனால இது கூலிப்படை வேலையா இருக்கலாம். கால் வந்த ஃபோன் ஸ்விட்ச்ட் ஆஃப்னு வருது. ஹெட் கான்ஸ்டபிளை ஃபோன் கம்பெனியில விசாரிக்கச் சொல்லியிருக்கேன். அப்புறம் அவரு ஒரு கைப்பை வச்சிருந்திருக்காரு. ரொம்பப் பாதுகாப்பா வச்சிட்டு இருந்தாராம். அதுல பணம் எதுவும் இல்லைன்னு வீட்டுக்காரம்மா சொல்லியிருக்காங்க. ஆனாலும் ரொம்பப் பத்திரமா வச்சிருந்தாராம். இப்ப அதைக்காணலை. அந்த கைப்பைக்காகக் கொலை நடந்திருக்கலாம்னு ஒரு கோணத்துல விசாரணை செய்யலாம்னு இருக்கேன் சார்”

“பரமசிவம். இங்க நான் இப்பப் பாத்துட்டு இருக்கிற கேஸும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான்...” என்று ஆரம்பித்து முழுக் கேஸ் கதையையும் சொல்லி முடித்தான். 

“சார் ரெண்டு கேஸுக்கும் சம்மந்தம் இருக்கும் போலருக்கே சார்?”

“கரெக்ட் பரமசிவம். ரெண்டு கேஸ் மட்டும் இல்லை மூணு கேஸ்”

“மூணா?”

“ஆமா.. “ டிடிஈ கேஸையும் சொல்லி முடித்தான். 

“இண்ட்ரஸ்டிங் சார்”

“ஓக்கே. பரமசிவம். நான் இங்க கமிஷனர்கிட்ட பேசிட்டு மூணு கேஸையும் ஒரே கேஸா மாத்த முடியுதான்னு பார்த்துட்டு உங்களுக்குச் சொல்றேன். உங்க நம்பர் என்ன?”

சொன்ன நம்பரைக் குறித்துக் கொண்டு ஃபோனை அணைத்தான். செல்ஃபோனில் சார்ஜ் தீரப் போனது. கான்ஸ்டபிளைக் கூப்பிட்டு ஃபோனை சார்ஜ் போட்டு எவிடென்ஸ் ரூமில் வைக்கச் சொல்லிவிட்டு யோசித்தான். 

டி.டி.ஈ கோயமுத்தூர் போகும் ரயிலில் விஷம் கொடுக்கப்பட்டு உயிரிழக்கிறார். அவர் வைத்திருந்த எதுவோ காணாமல் போய்விட்டது.
சிவகுரு சென்னையில் கழுத்தறுபட்டு உயிரிழக்கிறான். அவன் வைத்திருந்த எதுவோவும் காணாமல் போய்விட்டது.
நமச்சிவாயம் ஈரோட்டில் அருவாளால் வெட்டப்பட்டு உயிரிழக்கிறார். அவர் வைத்திருந்த எதுவோவும் காணாமல் போய்விட்டது. 

டி.டி.ஈ, சிவகுரு, நமச்சிவாயம் - இந்த மூவரையும் இணைப்பது எது? அதைக் கண்டுபிடித்துவிட்டால் கேஸ் பாதி தீர்ந்துவிடும். 

சட்டென்று ஒரு யோசனை வந்தது. பரமசிவத்தின் எண்ணை அழைத்தான்.

“ஹலோ”

“பரமசிவம். நான் அருண்”

“சொல்லுங்க சார்”

“கொஞ்ச நேரம் முன்னாடி நான் கூப்பிட்டேனே, அந்த நமச்சிவாயத்தோட செல்ஃபோன். நான் கூப்பிட்டப்ப ஏதும் பேர் வந்திச்சா, இல்ல ஃபோன் நம்பர் தான் வந்ததா?”

“ஃபோன் நம்பர் தான் வந்தது சார். இருந்தாலும் செக் பண்ணிட்டு சொல்றேன். நீங்க வச்சதும் பேட்டரி டை ஆகிடுச்சி. சார்ஜ் போட்டு பார்த்துட்டு உங்களுக்குக் கூப்புடுறேன் சார்”

“ஓக்கே பரமசிவம்”

ஃபோனை வைத்துவிட்டு யோசித்தான். சிவகுரு செல்ஃபோனில் நமச்சிவாயத்தின் நம்பர் S3 என்று ஸ்டோராகியிருக்கிறது. சாகும் முன்பு S4RAV என்று எதையோ எழுத முனைந்திருக்கிறான். இண்டர்காமில் ரைட்டரை அழைத்தான். 

“மகேஷ்னு ஒரு பையன் அவங்கப்பா சாவுல மர்மம் இருக்குதுன்னு ஒரு கம்ப்ளெயிண்ட் குடுத்தானே இன்னைக்குக் காலைல, அவன் ஃபோன் நம்பர் எதுவும் குடுத்தானா?”

”குடுத்திருக்காரு சார். நோட் பண்ணிக்கிறீங்களா?”

மகேஷின் நம்பரை அழைத்தான். ரிங் போய்க்கொண்டே இருந்தது. அப்பாவின் கடைசி சடங்குகளைச் செய்துகொண்டிருப்பானே என்பது நினைவுக்கு வந்தது. So near and yet so far என்று சொல்வார்களே அது போல இருக்கிறது. மூன்று கொலைகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்ன என்பதைக் கண்டுபிடித்துவிட்டால், கேஸ் தீர்ந்துவிடும். ஆனால் அதைக் கண்டுபிடிப்பதுதான் கடினமாக இருக்கிறது. 

கார்த்தியின் அறைக்குப் போய் மூன்று கொலைகளைப் பற்றியும் ரிப்போர்ட் செய்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான். வழியிலேயே சாப்பிட்டு விட்டு, ஷெல்ஃபில் இருந்த ஸ்காட்ச்சைக் கொஞ்சம் சரித்துக் கொண்டு, இரண்டு சிகரெட்டுகளை நுரையீரலுக்குக் கொடுத்துவிட்டு தூங்கிப் போனான்.

*******************************************************

காலை வழக்கம்போல ஜிம்மையும் ஸ்விம்மிங்கையும் முடித்து விட்டு ஒன்பதரை மணிக்கெல்லாம் கமிஷனர் ஆஃபிஸில் நின்றான். இன்ஸ்பெக்டர் சிவா ஏதோ வேலையாக இருந்தார். இவனைப் பார்த்ததும், “சார் காலேஜ்ல என்கொயர் பண்ணதுல ஒரு ப்ரேக் கிடைச்சிருக்கு சார். இந்த வேலையை முடிச்சிட்டு உங்க சீட்டுக்கு வர்றேன்”

“நோ பிராப்ளம் சிவா. இங்கயும் இன்னும் கொஞ்சம் இன்ஃபர்மேஷன் கிடைச்சிருக்கு. நானும் உங்களுக்கு ப்ரீஃப் பண்ணனும்”

அரை மணி நேரம் கழித்து வந்த சிவா, கையில் ஒரு புகைப்படம் வைத்திருந்தார். சிசிடிவியின் வீடியோவை ஃப்ரீஸ் செய்து புகைப்படமாக ஆக்கியதைப் போல இருந்தது. 

“சார் நீங்க சொன்ன மாதிரி என்கொயர் பண்ணதில, ஒரு ஸ்டூடண்டும், அந்த செக்யூரிட்டியும் இந்தப் படத்துல இருக்கிறவன் அந்தட் டயத்துல வந்திருக்கலாம்னு சொல்றாங்க சார். ஒரு வைல்ட் கெஸ் தான் சார். அக்யூரேட்டா சொல்ல முடியலைன்னுட்டாங்க”

அருண் அந்தப் படத்தை வாங்கிப் பார்த்தான். டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட ஃபோட்டோ. தொப்பி அணிந்திருந்தான். முகத்தில் பாதியை தொப்பி மறைத்திருந்தது. கையில் நோட்டு புத்தகம் என்று எதுவுமே இல்லை. கோடு போட்ட டிஷர்ட் அணிந்திருந்தான். ஜீன்ஸ் பேண்ட். கழுத்தில் டேக் தொங்கியது. 

“சிவா, காலேஜ் டேக் போட்டிருக்கானே? அதை ஜூம் பண்ண முடிஞ்சதா?”

“நானும் நினைச்சேன் சார். அந்த டேக் ரிவர்ஸ் ஆகியிருக்கு. ஃபோட்டோ எதுவும் தெரியலை”

“ம்ம்.. பின்னாடி பக்கத்தை வச்சி அது சிவகுருவோட டேகான்னு கண்டுபிடிக்க முடியலை?”

“இல்ல சார். பின்னாடி காலேஜ் பேரு & அட்ரஸ் தான் இருக்கு”

“ஓக்கே”

“சார் நீங்க ஏதோ ப்ராக்ரஸ் இருக்குதுன்னு சொன்னீங்களே?”

“ஓ அதுவா” ஈரோடு கொலையையும் பரமசிவத்துடன் நடந்த உரையாடலையும் பற்றி சிவாவிடம் சொன்னான். 

“சார் இந்த மூணு கொலைக்கும் தொடர்பு கண்டுபிடிச்சிட்டா கேஸ் சால்வ் ஆகிடும் போலயே சார்?”

“கரெக்ட் சிவா”

அருணின் ஃபோன் ஒலித்தது. எடுத்துப் பார்த்தான். மகேஷின் நம்பர்.

“ஹலோ அருண் ஹியர்”

“சார் நான் மகேஷ் பேசுறேன். நேத்து ஈவினிங் நீங்க கூப்புட்டுருந்தீங்க போல.”

“ஆமா மகேஷ். அப்பாவோட செல்ஃபோன் இப்ப யார்கிட்ட இருக்கு? ரயில்வே போலீஸா? இல்ல உங்கக்கிட்டயா?”

“என் கிட்ட தான் சார் இருக்கு. கொண்டு வந்து குடுக்கட்டுமா?”

“கொண்டு வாங்க மகேஷ். எந்த நம்பரையும் அழிச்சிட வேண்டாம். அப்பிடியே கொண்டு வாங்க”

“ஓக்கே சார். காலைல கொஞ்சம் வேலை இருக்கு. மதியம் லஞ்ச் அப்போ கொண்டு வரட்டுமா?”

“சரி மகேஷ். ஒண்ணும் அவசரம் இல்லை”

உரையாடலை கவனித்துக் கொண்டிருந்த சிவா, “எதுக்கு சார் இப்ப அந்த டி.டி.ஈயோட ஃபோன்?”

ஒரு வேளை அதுல இந்த சிவகுரு அல்லது நமச்சிவாயத்தோட ஃபோன் நம்பர் எதுவும் இருக்குதான்னு பார்க்கத்தான்”

*******************************************************

மதியம் மூன்று மணி போல ஃபோனைக் கொண்டு வந்து கொடுத்தான் மகேஷ். “ஏதாவது ப்ராக்ரஸ் இருக்குதா சார்?”

“இன்னும் ரெண்டு கொலைகள், ஒண்ணு சென்னையில இன்னொண்ணு ஈரோட்ல, அதுகளுக்கும் உங்கப்பா மர்டர்க்கும் சம்மந்தம் இருக்கலாம்னு ஒரு டவுட் வந்திருக்கு மகேஷ். கன்ஃபர்ம் ஆனதுன்னா சொல்றேன்”

“தேங்க்யூ சார்”

“தென், உங்கப்பா பேக்ல ஏதோ ஃபைனான்ஸியல் டாகுமெண்ட்ஸ் பார்த்தேன்னு சொன்னீங்கள்ல? என்ன டாக்குமெண்ட்னு நினைவிருக்கா?”

“மறுபடி பார்த்தா அதுதானான்னு கரெக்டா சொல்ல முடியுமே தவிர அது என்ன டாகுமெண்ட்னு தெரியலையே சார்”

“ஓக்கே மகேஷ். ஏதாச்சும் வேணும்னா கூப்புடுறேன்”

மகேஷ் அந்தப் பக்கம் போனதும், அவன் தந்துவிட்டுப் போன சதாசிவத்தின் ஃபோனை எடுத்தான். அட்ரஸ் புக்கைத் திறந்து சிவகுருவின் நம்பர் அல்லது நமச்சிவாயத்தின் நம்பர் இரண்டில் ஒன்றாவது இருக்கிறதா என்று பார்த்தான். இரண்டு எண்களுமே இல்லை என்றதும் வருத்தமுற்றான். 

எதற்கும் முயற்சி செய்வோம் என்று நமச்சிவாயத்தின் ஃபோனுக்கு அழைத்தான்.

ஐந்து ரிங்குக்குப் பிறகு, பரமசிவம் ஃபோனை எடுத்தார்.

“ஹல்லோ ஈரோடு போலிஸ் ஸ்டேஷன்”

“பரமசிவம், நான் அருண் பேசுறேன்”

“சார். என்ன சார். வேற நம்பர்ல இருந்து கூப்புடுறீங்க?”

“இது தான் அந்த டி.டி.இ நம்பர். அங்க எதுவும் பேர் வந்ததா?”

“யெஸ் சார். டிடின்னு வந்திச்சி”

“ம்ம்.. ஸோ, டிடீஇயோட நம்பர் நமச்சிவாயத்துக்கிட்ட இருக்கு. நமச்சிவாயம் வீட்டுல டி.டி.ஈ சதாசிவம் பத்தி விசாரிங்க. தெரிஞ்சவங்களா, பழக்கமான்னு விசாரிங்க. விசாரிச்சிட்டு எனக்குக் கூப்புடுங்க”

“ஓக்கே சார்.”

இண்டர்காமில் சிவாவை அழைத்தான். “சிவா, இந்தக் கேஸ்ல ஒரு ப்ரேக் கிடைச்சிருச்சின்னு நினைக்கிறேன். நீங்க உடனே இங்க வர முடியுமா?”

“வாவ் சூப்பர் சார். ஃபைவ் மினிட்ஸ்ல வர்றேன்”

ஐந்து நிமிடத்தில் வந்தான். 

“சிவகுருகிட்ட நமச்சிவாயத்தோட நம்பர். நமச்சிவாயத்துக்கிட்ட டி.டி.ஈயோட நம்பர். ஆனா டி.டி.இ ஃபோன்ல இவங்க ரெண்டு பேரு நம்பரும் இல்லை. நமச்சிவாயம் ஃபேமிலிக்கு டி.டி.ஈயைத் தெரியுமான்னு கேக்கணும். அதே போல டி.டி.ஈ ஃபேமிலி கிட்ட நமச்சிவாயம் பத்தி விசாரிக்கணும். அது மட்டுமில்லாம சிவகுரு ஃபேமிலிக்கிட்ட நமச்சிவாயத்தைத் தெரியுமான்னு விசாரிக்கணும்.”

“சார் அதுக்கு எப்பிடியும் ரெண்டு மூணு நாளாகிடுமே சார்”

“கரெக்ட். ஆகிடும். ஆனா அதுக்குள்ள மர்டரர் தப்பிச்சிருவான். அதனால என்னொட இன்ஸ்டிக்ட் சொல்றதைக் கேக்கப் போறேஎன். இன் த மீன் டைம் டிப்பார்ட்மெண்ட் என்கொயரி நடத்தட்டும்”

“உங்க இன்ஸ்டின்க்ட் என்ன சொல்லுது சார்?”

“இந்த மூணு பேரும் சம்மந்தப்பட்ட நாலாவது ஆள் ஒருத்தன் இருக்கான். அவன் தான் இந்த மூணு கொலையையும் செஞ்சிட்டு அந்த ஃபைனான்ஸியல் டாகுமெண்ட்ஸைத் திருடிட்டுப் போயிருக்கணும்”

“ஆனா மூணு பேரையும் லின்க் பண்ற மாதிரி எவிடென்ஸ் எதுவுமே இல்லையே சார். செயின் ரியாக்‌ஷன் மாதிரி இவனை அவன், அவனை அவன்னு தானே இருக்கு?”

“கரெக்ட். லெட் மி கம்ப்ளீட்”

“அந்த ஃபைனான்ஸியல் டாகுமெண்ட்ஸ்கு ஏதாவது வேல்யூ இருக்கணும். அல்லது யாரோ ஒரு முக்கியமான ஆளோட டாகுமெண்ட்ஸை வச்சி இவங்க மூணு பேரும் சேர்ந்து ப்ளாக் மெயிலிங் மாதிரி ஏதாவது செஞ்சிருக்கணும்”

“பட் சார். இவங்க மூணு...”

“வெயிட் சிவா. இவங்க மூணு பேரும் சந்திச்சிருக்க வாய்ப்பே இல்லைன்னு நினைக்கிறீங்களா?”

“அப்படி இல்லை சார். எங்க மீட் பண்ண வாய்ப்பு இருக்கும்னு யோசிக்கிறேன்.”

“சிவா... இட்ஸ் ஆப்வியஸ். டி.டி.ஈ, கோயமுத்தூரை சொந்த ஊராக் கொண்ட சென்னை பையன், ஈரோட்டு டாய் ப்ரோக்கர். இந்த மாதிரி வேரீட் க்ளாஸ் பீப்புள் எங்க மீட் பண்ண முடியும்?”

“ட்ரெயின்?”

“கரெக்ட். நம்ம சிவா என்ன எழுத ட்ரை பண்ணான்? S4 RAV இல்லையா? டிடீஇ எஸ் 4 ரெண்டையும் சேத்துப் பார்த்தேன். ரயில் ரிசர்வேஷன் கோச்சா இருக்கலாம்னு ஒரு ஸ்பார்க். என் இன்ஸ்டிக்ண்ட் என்னன்னா, இவங்க மூணு பேரு + நம்ம சஸ்பெக்ட், நாலு பேரும் ஏதோ ஒரு நாள் ஒரே ட்ரெயின்ல வந்திருக்கணும். அப்ப நடந்த ஏதோ ஒரு சம்பவத்துல மூணு பேர்கிட்டயும் இந்த டாகுமெண்ட்ஸ் கிடைச்சிருக்கணும். அதை வச்சிப் பணம் சம்பாதிக்கலாம்னு நினைச்சிட்டு இருக்கிற நேரத்தில நாலாவது ஆள் மூணு பேரையும் ஒவ்வொருத்தரா போட்டுத் தள்ளிட்டு அந்த டாகுமெண்ட்ஸை எடுத்துட்டுப் போயிட்டான்”

“கிரேட் சார்”

“சோ, நம்ம மர்டர் விக்டிம், எஸ்4 கோச்ல வந்த RAVனு ஆரம்பிக்கிற பேர் வச்ச ஒருத்தன். சிவகுரு சென்னை-கோயமுத்தூர் அல்லது கோயமுத்தூர் - சென்னை எஸ்-4 கோச்ல என்னைக்கு ரீசண்டா ட்ராவல் பண்ணான்னு அவங்க வீட்டுல தெரிஞ்சிட்டு அந்த தேதியில ரிசர்வேஷன் சார்ட்ல RAVனு பேர் வச்சவங்களை எல்லாம் ஃபில்டர் பண்ணி விசாரிச்சா நம்ம மர்டரரைப் பிடிச்சிரலாம்னு எனக்குத் தோணுது”

“குட் சார். இந்த டைரக்‌ஷன்லயும் நாம விசாரிச்சிப் பார்க்கலாம்”

“சிவகுரு பேரண்ட்ஸ்கிட்ட விசாரிக்கும்போது அவன் ட்ராவல் பண்ண டேட்ஸ் & ட்ரெயின் பத்தி விசாரிங்க. அதே போல நமச்சிவாயம் பத்தியும்” 

பேசிக் கொண்டே சதாசிவத்தின் ஃபோனைப் பார்த்தவன், சட்டென்று நின்றான்.  ஏதோ யோசித்தவனாக ஃபோன் புக்கை மறுபடி தேடினான்.  அவன் தேடியது கிடைத்தது. “S4"

“சிவா, ஐ தின்க் ஐ காட் அவர் சஸ்பெக்ட்” ஃபோனை சிவா முகத்தின் நேராக நீட்டினான். 

“எஸ் 4” 

“யெஸ்.” ஒரு குழந்தையின் குதூகலத்தோடு அந்த நம்பரை அழைத்தான். 

“த ஸப்ஸ்க்ரைபர் இஸ் நாட் ரீச்சபிள் அட் திஸ் மொமண்ட். ப்ளீஸ் ட்ரை யுவர் கால் லேட்டர்”


Thursday, August 22, 2013

ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 6


வழியிலேயே ஃபோன் செய்து சொல்லியிருந்ததால் கல்லூரி பிரின்ஸ்பல் தயாராக இருந்தார். கோல்ட் ஃப்ரேம் போட்ட கண்ணாடி. வெள்ளை சட்டை கருப்பு பேண்டுடன் நீல நிற டை அணிந்திருந்தார். கோட் உள்ளே இருக்கலாம். எங்காவது ப்ரொஃபசர் வேலை பார்த்து ரிட்டயரானவராக இருக்கலாம். தலையில் இருந்த நரை அவருக்கு வயது அறுபதுக்கும் மேல் இருக்கலாம் என்று காட்டியது. 

இருவரையும் வாசலிலேயே சந்தித்த பிரிஸ்பல் பரஸ்பரம் அறிமுகம் முடிந்த பின்னர், 

“வாங்க சார், நாம லாக்கர் ரூமுக்குப் போயிடலாம்”

கல்லூரி அலுவலகத்துக்கு அருகிலேயே கல்லூரியின் செல்வத்தைப் பறை சாற்றும் வகையில் பிரம்மாண்டமாக நின்று கொண்டிருந்தது லைப்ரரி. அதன் அடித்தளத்தில் தான் லாக்கர் ரூம் இருந்தது. வகுப்பு வாரியாக, பாலின வாரியாக பிரிக்கப்பட்டு அருமையாகப் பராமரிக்கப்பட்டு இருந்தது லாக்கர் ரூம். ரூம் வாசலில் ஒரு செக்யூரிட்டி கார்ட் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருந்தார். பிரின்ஸியைப் பார்த்ததும் எழுந்து ஒரு சல்யூட் வைத்தார். மேஜை மேல் இருந்த சாவிக் கொத்து ஒன்றை எடுத்து நீட்டினார். 

பெற்றுக் கொண்ட பிரின்ஸி. “எங்க காலேஜ்ல செல்ஃபோன் க்ளாஸ்க்கு எடுத்துட்டுப் போகக் கூடாது சார். ஆனா காலேஜ் கேம்பஸ்ல யூஸ் பண்ண தடை எதுவும் இல்ல. செல்ஃபோன் மாதிரி காஸ்ட்லி ஐட்டம்ஸ், கால்குலேட்டர், லேப் கோட் மாதிரி ஐட்டம்ஸ் எல்லாம் காலேஜ்லயே பத்திரமா வச்சிக்கிறதுக்காக கட்டினதுதான் சார் இந்த லாக்கர்ஸ். ஒவ்வொரு ஸ்டூடண்டுக்கும் ஒவ்வொரு லாக்கர். பணம் அதிகம் கட்டுற ஸ்டூடன்ஸ்க்கு பெரிய லாக்கரும் உண்டு.”

பேசிக்கொண்டே `1437 லாக்கர் அருகில் வந்து நின்றார்கள். சாவிக் கொத்துக்குத் தேவையே இல்லாமல், லாக்கர் திறந்தே கிடந்தது. உள்ளே சுத்தமாகத் துடைக்கப்பட்டு இருந்தது. 

சிவாவும் அருணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அருண் தரையை பார்வையால் ஸ்கேன் செய்தான். மூலையில் குனிந்து எதையோ எடுத்தான். ஒரு சிறிய சாவி. அதை பிரின்ஸிபாலின் முன்னால் நீட்டினான். “இதுதான் லாக்கர் சாவியா பாருங்க”

வாங்குவதற்காக கையை நீட்டிய பிரின்ஸியிடம், “கை ரேகை இருக்கலாம் சார். அப்பிடியே பாருங்க” 

குனிந்து சாவியைப் பார்த்துவிட்டு, ”இதுதான் சார்.”

சிவா அந்த சாவியை வைத்து சிவகுருவின் லாக்கரைத் மூடிப் பார்த்தான். “இதேதான்”. சிவா தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுத்த பாலித்தீன் கவரில் சாவியைப் போட்டு சிவாவின் கையிலேயே கொடுத்தான். 

“வெளிய ஒரு செக்யூரிட்டி உக்காந்திருந்தாரே, கம்ப்யூட்டரோட அவர் வேலை என்ன?”

“லாக்கர் ரூமுக்குள்ள வர்ற ஸ்டூடண்ட்ஸ் ஐடி கார்ட் செக் பண்ணுவாரு. யாராச்சும் சாவி தொலைச்சிட்டாங்கன்னா, சிஸ்டம்ல எண்ட்ரி போட்டுட்டு திறந்து விடுவாரு. வேற லாக் மாத்த ஒர்க் ஆர்டர் போயிடும். சார்ஜ் பையனோட ஃபீஸ்ல சேர்ந்துடும்.”

“ஐடி கார்ட் வெரிஃபிக்கேஷன் எப்பிடி மேனுவலா செக் பண்றதா?”

“உள்ள வர்ற ஸ்டூடண்ட்ஸ் ஐடி கார்ட் ஸ்கேன் பண்ணுவாங்க, ஸிஸ்டம்ல அவங்க டீட்டெயில்ஸ் வரும். எக்ஸ்பயர்ட் கார்ட், இன்வேலிட் கார்ட்னா ரெட் அலர்ட் வரும். அந்த ஸ்டூடண்ட்டை டெயில் கேட் பண்ண விடமாட்டாரு. ஸ்டூடண்ட்ஸ் ஃபீஸ் கட்டலைன்னா இந்த மாதிரி அக்ஸஸ் எல்லாம் ரிவோக் பண்ணிடுவோம்.”

“ஓ. அப்போ எவ்ரி டைம் உள்ள வரும்போதும் ஒரு எண்ட்ரி விழும். இல்லையா? அந்த எண்ட்ரியை லாக்(log) பண்ற மாதிரி இருக்கா உங்க சாஃப்ட்வேர்?”

“ஹ்ம்ம். எனக்குத் தெரியலையே சார். ஒரு நிமிஷம் இருங்க” 

மூவரும் வெளியே வந்தனர். செக்யூரிட்டி மறுபடி எழுந்து சல்யூட் வைத்தார். அவரின் சட்டையில் குத்தியிருந்த பெயரைப் பார்த்துவிட்டு, “சண்முகம், யார் யாரெல்லாம் உள்ள வர்றாங்கங்கிற லிஸ்ட் கம்ப்யூட்டர்ல ஸ்டோர் ஆவுமா?”

தலையைச் சொரிந்தார். “தெரியலையே சார். ஒவ்வொருக்கா ஸ்கேன் பண்ணும்போது ஸ்க்ரீன்ல டீட்டெயில்ஸ் விழும் சார். ரெட் அலர்ட் வந்தா மட்டும் தான் சார் நோட்டிஸ் பண்ணுவேன். மத்தபடி ஸ்டோர் ஆவுமான்னு தெரியலையே?”

அருண் பிரின்ஸியைப் பார்த்தான். “யாருக்குத் தெரியும் பிரின்ஸிபல் சார்?”

செக்யூரிட்டி “சார், சிஸ்டம்ல ஏதாச்சும் பிரச்சனைன்னா கால் பண்ணச் சொல்லி ஒரு நம்பர் குடுத்துருக்காங்க சார். அவங்களுக்கு ஃபோன் பண்ணிக் கேட்டாத் தெரியலாம்”

*****************************************************************
பிரின்ஸியின் அறையில் உட்கார்ந்திருந்தார்கள். அகலமான அறை. மூலையில் மேஜை போட்டு முதுக்குப் பின்னால் சுவற்றில் ஏசி போட்டு வைத்திருந்தார்கள். மேஜையின் மேல் ஒரு மூலையில் ஃபைல்கள் சிலவும் இன்னொரு மூலையில் ஒரு ஆப்பிள் ஐமேக்கும் உட்கார்ந்திருந்தன. நடு நாயகமாக இரண்டு தொலை பேசிகள். பக்கத்திலேயே பிரின்ஸியில் செல்ஃபோன். தினமும் துடைப்பதால் மேஜை பள பள என்றிருந்தது. ஒரு பக்கம் கண்ணாடி போட்ட ஷெல்ஃபில் கல்லூரி மாணவர்கள் வென்று வந்த ஷீல்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு பக்கம் ஒரு 40 இன்ச் ஃப்ளாட் ஸ்க்ரீன் டிவி. பியூன் வைத்துவிட்டுப் போன ஜூஸை சன்னமாக உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். 

“மே ஐ கமின் சார்?” வாசலில் சத்தம் கேட்டதும் அருணும் சிவாவும் திரும்பினார்கள். தோளில் தொங்கிய லேப்டாப்புடன் ஆக்ஸிஸ் செக்யூரிட்டி சிஸ்டம் என்ற ப்ளூ கோடு போட்ட வெள்ளை சட்டையும் பிரவுன் பேண்டும் அணிந்த அந்த இளைஞன் நின்றிருந்தான். 

“உள்ள வாங்க”

“சார் என் பேர் திவாகர். ஆக்ஸிஸ்ல இருந்து வர்றேன். ஆக்ஸஸ் லாக் எடுக்கணும்னு சொன்னீங்க. அதான் வந்திருக்கேன்”

“உட்காருங்க திவாகர்”

“தேங்க்யூ சார். சார் நான் என்னோட லேப்டாப் செட் அப் பண்ணனும், 5, 10 மினிட்ஸ் ஆவும். நீங்க உங்க வேலை எதாச்சும் இருந்தா பாருங்க சார். ரெடி ஆனதும் சொல்றேன்”

தன் லேப்டாப்பை 40 இன்ச் டிவி ஸ்க்ரீனுடன் இணைத்து தான் ஓப்பன் செய்த லாகை அனைவருக்கும் தெரியுமாறு செய்தான் திவாகர். 

“இதுதான் சார் நீங்க கேட்ட லாக்கர் ரூம்ல நேத்து ஈவினிங்ல இருந்து அக்ஸஸ் ஆன எண்ட்ரீஸ். என்ன தேடணும்னு சொன்னீங்கன்னா ஈஸியா இருக்கும் சார்”

“சிவகுருவோட ஐடி கார்ட் எப்ப அக்ஸஸ் செஞ்சிருக்குதுன்னு சொல்ல முடியுமா திவாகர்?” அருண் கேட்டான்.

“ஸ்டூடண்ட் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் என்ன சார்?”

அருண் பிரின்ஸியைப் பார்க்க,  லாக்கர் நம்பர் தான் சார் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பரும். 1437”

“1437 இன்னைக்குக் காலைல 11 மணிக்கு எண்ட்ரியாகியிருக்கு சார்”

“எக்ஸாக்ட் டைம் சொல்லுங்க”

“11:04 AM"

"அந்த டைம் அரவுண்டா, மே பி 10:30ல இருந்து 11:30 வரைக்கும் யார் எல்லாம் லாக்கர் ரூமை அக்ஸஸ் செஞ்சிருக்காங்கங்கிற லிஸ்ட் எடுத்துக் குடுக்க முடியுமா?”

“முடியும் சார்.”

“சிவா நீங்க அந்த லிஸ்ட்ல இருக்கிற ஸ்டூடண்ட்ஸ் கிட்ட எல்லாம் விசாரிங்க. யாராவது புது ஆளை உள்ள பாத்திருக்கலாம்.”

“குட் ஐடியா சார்”

“பிரின்ஸிபல் சார். உங்க காலேஜ்ல சிசிடிவி எங்கயாச்சும் இருக்கா?”

“எல்லா ஹால்வேயிலயும் இருக்குது மிஸ்டர் அருண்”

“குட். சிவா நீங்க அந்த ரெக்கார்டிங்க்ஸயும் வாங்கி அந்த ஸ்டூடண்ட்ஸ்க்குப் போட்டுக் காட்டி நம்ம அக்யூஸ்ட் எங்கயாச்சும் சிக்குறானான்னும் பாருங்க. நான் ஆஃபிஸ்க்குப் போயிடுறேன்”

“நீங்க ஜீப் எடுத்துட்டுப் போய் அங்க யாராவது டிரைவர்கிட்ட குடுத்து விடுங்க சார். நான் என்கொயரி முடிச்சிட்டு வர்றேன்”

“சூப்பர் சிவா. நாம ஆஃபிஸ்ல மீட் பண்ணலாம்”

***********************************************************

ஈரோடு காவல் நிலையம். இன்ஸ்பெக்டர் தொப்பியைக் கழற்றி மேஜைமேல் விசிறியபடி வந்து உட்கார்ந்தார். 

“ஏய் ஃபேனைப் போடு”

கான்ஸ்டபிள் ஓடிச் சென்று ஃபேனை ஆன் செய்தார். கர்ச்சீப்பை எடுத்து கழுத்தை அழுந்தத் துடைத்துக் கொண்ட இன்ஸ்பெக்டர், சட்டை மேல் பட்டன் மூன்றை கழட்டி சட்டையை விலக்கி காற்றை வாங்கிக் கொண்டார். “என்ன எளவு இது. இந்த எளவு ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கியாந்த நேரம் என் தாலியருக்காய்ங்க. எளவு எங்கன பாத்தாலும் வெட்டுக் குத்துன்னு ஓடிட்டு இருக்கு. ஈரோட்டுக்காரய்ங்க காசத் தான் ஏமாந்து போவாய்ங்கன்னா இப்பிடி வெட்டுக் குத்துன்னா அடிச்சிக்குவாய்ங்க.”

“மதுர அளவுக்கு இல்லை சார்”

“சரிதான். இந்த எளவு வேண்டாம்னுதான் மதுரையில இருந்து ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்தேன். இங்கயும் இப்பிடியா? எல்லாம் என் ராசி”

ரைட்டர் வந்து ஒரு ஃபைலை மேஜை மேல் வைத்தார். “சார் அந்த நமச்சிவாயம் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருக்கு சார்” 

“எந்த நமச்சிவாயம்வே”

“அதான் சார் அருவா வெட்டுக் கேஸ்.”

“ஓ அதுவா” ஃபைலை எடுத்து திறந்து மேலோட்டமாக மேய்ந்துவிட்டு, “வழக்கமான கதையத்தான் எழுதியிருக்காய்ங்க. ஆமா பக்கத்துல விசாரிச்சிங்களா? யாரும் எதிரி, பகை ஏதும் துப்புக் கிடைச்சிதா?”

ஹெட் கான்ஸ்டபிள் தலையைச் சொறிந்த வாறே, “இல்லிங் சார். இந்தாள் எந்தத் தப்புத் தண்டாவுக்கும் போகாத ஆளாம். எதிரின்னு யாரும் இருக்க வாய்ப்பே இல்லைன்னு சொல்றாங்க. வேற யாரையோ வெட்ட வந்து இவனைத் தப்பா வெட்டியிருப்பாங்கன்னு நினைக்கிறேன் சார்”

பக்கத்தில் இருந்த எவிடென்ஸ் பையைத் திறந்து மேஜை மேல் கொட்டினார். உள்ளே இருந்து ஒரு செல்ஃபோன், ஒரு கர்ச்சீஃப், கொஞ்சம் சில்லரை, சில நூறு ரூபாய்த் தாள்கள், கொரியர் ரசீது விழுந்தன. 

சட்டென நினைவுக்கு வந்தவராக, ஏட்டு, “சார், இந்தாள் ஒரு கைப்பை வச்சிட்டு இருப்பாராம். ஏதோ நகைக்கடை பையாம். அதைக் காணல சார்”

“அதுல பணம் எதாச்சும் வச்சிருப்பானா?”

“இல்லிங் சார். பணமெல்லாம் அண்ட்ராயர்லதான். கொஞ்ச நாளாவே அதை ரொம்ப பத்திரப்படுத்தி வச்சிட்டிருந்தானாம். இவனுக்கு ட்ரைசைக்கிள் ஓட்டுற பையன் சொன்னான்.” 

“ம்ம்ம்ம்”

செல்ஃபோனை எடுத்துப் பார்த்தார். நோக்கியா 1100 ஃபோன். பேட்டரியில் இரண்டு கோடுகள் இருந்தது. 3 மிஸ்ட் கால் என்றிருந்தது. பட்டனை அழுத்திப் பார்த்தார். wife என்ற நம்பரிலிருந்து இரண்டு கால். 98434 28738 நம்பரிலிருந்து ஒரு கால். கால் வந்த நேரத்தைப் பார்த்தார். எதோ பொறிதட்டியது போல ஃபைலைத் திறந்து பார்த்தார். டைம் ஆஃப் டெத்தும் அந்த கால் வந்த நம்பரும் ஒரே நேரமாக இருந்தது. 

“யோவ். இது நீர் சொன்ன மாதிரி வேற எவனையோ வெட்ட வந்து இவனைப் போட்ட மாதிரி தெரியலை. இவனுக்காகவே வந்திருக்காய்ங்க. இவன் தானான்னு தெரிஞ்சிக்க கால் பண்ணியிருக்காய்ங்க பாருங்க. இந்த நம்பருக்குக் கூப்புட்டுப் பாருங்க”

ஹெட்கான்ஸ்டபிள் தன் செல்ஃபோனில் அந்த நம்பரை அடித்து அழைத்துப் பார்த்தார். ‘திஸ் நம்பர் இஸ் கரெண்ட்லி ஸ்விட்ச்ட் ஆஃப்’. “ஸ்விட்ச்ட் ஆஃப்னு வருது சார்”. 

“ஃபோன் கம்பெனியில குடுத்து யார் பேர்ல வாங்கியிருக்குன்னு விசாரிங்க. முக்காவாசி வேற எவன் பேர்லயாவதுதான் இருக்கும். இருந்தாலும் விசாரிச்சிருங்க”

“சரிங் சார்”

**************************************************************

ஜீப் ஓட்டிச் செல்லும் வழியெங்கும் அருணுக்கு இரண்டு கேஸ்களைப் பற்றியும் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. சதாசிவம், டி.டி.ஆர். சூதாடி. கடனில் மூழ்கிக் கொண்டிருப்பவர். கையிருப்பு எதுவுமில்லாமல் திடீரென்று வாலண்டரி ரிட்டயர்மெண்ட் தருகிறார். சந்தேகப்பட்ட பையன் அவர் பையில் எதோ ஃபைனான்ஸியல் டாக்குமெண்ட்ஸைப் பார்க்கிறான். அடுத்தநாள் ரயிலில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். சிவகுரு காலேஜ் ஸ்டூடண்ட். அவனும் காதலியிடம் கோடிக்கணக்கில் பணம் வரும் என்று சொல்கிறான். அதற்கான விசயம் தனது லாக்கரில் இருப்பதாகச் சொல்லிய அன்றே கழுத்தறுபட்டு கொலைசெய்யப்பட்டிருக்கிறான். இரண்டு பேரும் வைத்திருந்ததாகச் சொல்லப்பட்ட எதோ இப்போது இல்லை. ஆக, கொலை அந்த விசயத்திற்காக நடந்திருக்கலாம். இரண்டு கொலைகளுக்கும் எதோ தொடர்பிருக்க வேண்டும். அல்லது வெறும் கோ -இன்சிடெண்டாகக் கூட இருக்கலாம். ஒரு வேளை இரண்டு கொலைக்கும் தொடர்பிருந்தால், இரண்டையும் இணைக்கும் இழை எதாவது ஒன்றைப் பிடிக்க வேண்டும். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கிறது. சிவா கல்லூரி மாணவர்களிடம் நடத்தும் என்கொயரியில் ஏதாவது ஃப்ரூட்ஃபுல்லாகக் கிடைத்தால் தான் உண்டு. 

அலுவலகத்தில் நுழைந்ததும் கார்த்தியிடம் நடந்ததை ரிப்போர்ட் செய்துவிட்டு டேபிள் முன்னல் சென்று அமர்ந்தான். இப்போது அருணுக்கு கமிஷனர் ஆஃபிஸிலேயே ஒரு டேபிள் கொடுத்துவிட்டார்கள். டேபிளின் மேல் சிவகுரு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இருந்தது. எடுத்துப் பார்த்தான். ஓரமாக வைத்துவிட்டு கிரைம் ஸ்பாட் ஃபோட்டோஸ் என்றிருந்த கவரைப் பிரித்து புகைப்படங்களைப் பார்த்தான். சுரத்தில்லாமல் பார்த்துக்கொண்டே வந்தவன் சிவகுரு சாகும் முன் எழுதியிருந்த புகைப்படம் பார்த்ததும் நிறுத்தினான். ஃபோட்டோவைக் கையில் எடுத்துக்கொண்டு கம்ப்யூட்டர் ரூமுக்குச் சென்றான். உள்ளே இருந்தவர் அருணைப் பார்த்ததும் எழுந்து சல்யூட் வைத்தார். “ரமேஷ், இந்த பிக்சரை என்லார்ஜ் பண்ணிப் பாக்கணுமே” 

“எந்தக் கேஸ் சார்?”

“சிவகுரு மர்டர் கேஸ். இன்னைக்கு காலைல ஆச்சே. அதுதான்”

“சாஃப்ட் காப்பியே இருக்கு சார். ஒரு நிமிஷம்”

கம்ப்யூட்டரில் எங்கெங்கோ போய் அந்த புகைப்படங்களை எடுத்தார். வரிசையாகப் பார்த்துக்கொண்டே வந்து குறிப்பிட்ட ஃபோட்டோ வந்ததும் நிறுத்தினார். ஜூம் செய்தார். 

“ரெண்டாவது இருக்கிற Aவை ஜூம் பண்ணுங்க.” 

அந்த ஏயில் இடது பக்கம் இருக்கும் கால் நேராக இல்லாமல் லேசாக இழுத்து விட்டதுபோல் தெரிந்தது. “இன்னொரு மானிட்டர்ல ரெண்டாவது ஏயை ஜூம் பண்ணி வைங்க” பெரிது படுத்திப் பார்க்கும் போது இரண்டு ஏக்களுக்கும் பெருத்த வித்தியாசம் தெரிந்தது.

“சார் ஃபர்ஸ்ட் ஏ, திடீர்னு பாத்தா ஏ மாதிரி தெரிஞ்சாலும், இப்பிடி மேக்னிஃபை பண்ணிப் பார்க்கும்போது நம்பர் 4 மாதிரி இருக்கு.”

“கரெக்ட் ரமேஷ். எனக்கும் அதுதான் தோணுது. இந்த கேஸ்ல ஒரு செல்ஃபோன் கிடைச்சதுல? அது எங்க இருக்கு?”

“எவிடென்ஸ் ரூம்ல இருக்கும் சார்”

“தேங்க்யூ ரமேஷ்”

எவிடென்ஸ் ரூமில் இருந்து வாங்கிக் கொண்டு வந்த ஃபோனை ஆன் செய்து கொண்டே சீட்டுக்குத் திரும்பினான். அட்ரஸ் புக்கில் எஸ் 4 என்ற எண்ணைப் பார்த்த நினைவு இருந்ததால் அட்ரஸ் புக்கில் தேடினான். எஸ் 3 தான் இருந்தது. ஒரு நிமிடம் யோசித்துவிட்டு அந்த எண்ணை அழைத்தான். 

எதிர்முனையில் ரிங் போனது.

“அலோ”

“ஹலோ. சென்னை போலிஸ் கமிஷனர் ஆஃபிஸ்ல இருந்து பேசறோம். அங்க யாரு பேசுறது?”

“இது ஈரோடு போலிஸ் ஸ்டேஷன். இன்ஸ்பெக்டர் பரமசிவம் தான் பேசுறேன்”

“ஈரோடு போலிஸ் ஸ்டேஷனா? இது உங்க ஃபோனா?”

“இல்ல சார். ஒரு மர்டர் விக்டிம் ஃபோன். இந்த நம்பர் உங்கக்கிட்ட எப்பிடி?”

(தொடரும்) 

Saturday, August 17, 2013

ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 5


வளைத்து வளைத்து ஃபோட்டோகிராஃபர் ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருக்க, கான்ஸ்டபிள் ஒருவர் பிணத்தைச் சுற்றி சாக்பீஸால் கோடு போட ஆரம்பித்தார். கிளவுஸ் போட்ட கையால் குப்புறக் கிடந்தவனின் தலையை சற்றே உயர்த்தி கழுத்தில் விழுந்திருந்த வெட்டை ஆராய்ந்து கொண்டிருந்த பேரமெடிக் இருவரும் வந்து நின்றதைப் பார்த்ததும் எழுந்தார். “ஸ்லிட் த்ரோட் சார். ஜகுலார் கட் ஆகியிருக்கு. மேக்ஸிமம் 2 மினிட்ஸ் உயிரோட இருந்திருக்கலாம். போஸ்ட் மார்ட்டம் பண்ணினா எக்ஸாக்ட் டைம் ஆஃப் டெத் சொல்லிடலாம் சார்” என்று நிறுத்தாமல் சொன்னார்.

“இப்ப அப்ராக்ஸிமேட் டைம் சொல்ல முடியுமா?” - சிவா.

“அரவுண்ட் 10:00 சார்”

ஏரியா இன்ஸ்பெக்டர் உள்ளே வரவும், சிவா அவரைப் பார்த்து, “என்ன சுவாமிநாதன்? டீட்டெயில்ஸ் சொல்லுங்க”

“சார் விக்டிம் பேரு சிவகுரு. இங்க ஈ.சி.ஆர் ரோட்டுல இருக்கிற எஞ்சினியரிங் காலேஜ்ல பி.ஈ படிக்கிறான். இவங்கப்பாவும் அம்மாவும் கோயமுத்தூர்ல டாக்டர்ஸ். தகவல் சொல்லியாச்சி. அடுத்த ஃப்ளைட்ல கிளம்பி வர்றாங்க. ஹாஸ்டல் வசதியா இருக்காதுன்னு இவங்கப்பாம்மா இந்த ஃப்ளாட்டை வாங்கி இவனைத் தங்க வச்சிருக்காங்க. தனியாத்தான் தங்கியிருக்கான். பக்கத்து வீடுகள்ல விசாரிச்சதுல பையன் ரொம்ப பிரச்சனை பண்ணாதவன்னு தெரியுது. யாரோ ஒரு பொண்ணு மட்டும் எப்பவாச்சும் வருமாம். லவ்வா இருக்கலாம்னு சொல்றாங்க. பொண்ணு டீட்டெயில் எங்கயாச்சும் கிடைக்குமான்னு கான்ஸ்டபிளை வீட்டுல தேடச் சொல்லியிருக்கேன். இல்லைன்னா காலேஜ்ல விசாரிக்கணும்.”

அருண் குறுக்கிட்டான். “செல்ஃபோன்ல பார்த்தீங்களா? வைஃப், கேர்ள்ஃப்ரண்ட், லவர்னு எதாச்சும் பேர்ல ஸ்டோர் பண்ணியிருப்பான் பாருங்க?”

“சார் இதை யோசிக்கவே இல்ல சார். 402, சார் சொன்னது கேட்டுச்சில்ல. செல்ஃபோன்ல தேடுங்க”

“சரி நீங்க மேல சொல்லுங்க”

“நைட் டியூட்டி பார்த்த வாட்ச்மேனைக் கூட்டிட்டு வர வீட்டுக்கு ஆள் அனுப்பியிருக்கேன் சார். வந்ததும் அவன் எதாச்சும் பார்த்தானான்னு கேக்கணும்.”

“கொலைக்கு மோட்டிவ் ஏதாச்சும் தெரிஞ்சதா?”

“ராப்பரி மாதிரி தெரியலை சார். வீட்டுல எல்லாம் அப்பிடியே வச்சது வச்ச மாதிரி இருக்கு.”

“விக்டிம்க்கு கொலை செஞ்சவனைத் தெரிஞ்சிருக்கு. அவன் பேரைத்தான் எழுத வந்திருக்கான் போல. இவனுக்கு யாரும் எதிரிங்க, காலேஜ் பிரச்சனை, அந்தப் பொண்ணு மேட்டர்ல ஏதும் பிரச்சனை இருக்குதான்னு காலேஜ்ல விசாரிங்க”

402 ஃபோனை எடுத்துக்கொண்டு வந்து அருணிடம் கொடுத்தார். ஐஃபோன் 4S. ஆன் செய்ததும் வால் பேப்பரில் புஜத்தை மடக்கிக் காட்டிக்கொண்டிருந்தான். ஓப்பன் செய்யக் காத்திருந்தது போல ஃபோன் அடித்தது. ஒற்றை விரலைக் காட்டி மிரட்டுவது போல ஒரு பெண் படமும் கீழே GF என்ற எழுத்துகளும் தோன்றின. பச்சை answer பொத்தானை அழுத்தி காதுக்குக் கொடுத்தான்.

“டேய் எங்கடா போன. இன்னும் ஹாஃப் அன் அவர்ல லேப். இன்னும் தூங்கிட்டுத்தான் இருக்கியா?”

“ஹலோ”

புதிய குரலைக் கேட்ட அதிர்ச்சியில் எதிர்முனை அமைதியானது.

“ஹலோ” கொஞ்சம் குரலை உயர்த்தினான் அருண்.

“ஹ ஹலோ, நீ நீங்க யாரு? இது சிவா ஃபோன் தானே?”

“நீங்க சிவகுரு ஃப்ரண்டா?”

“ஆ ஆமா. உங்ககிட்ட சிவா ஃபோன் எப்பிடி? நீங்க யாரு?”

“போலிஸ். ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட். ”

“ஆ ஆக்ஸிடெண்டா? சிவாவுக்கு ஒண்ணும் ஆகலையே?”

“ஒண்ணுமில்லைங்க. உங்க பேரு என்ன?”

“என் பேரு மீனா சார். சிவா எப்பிடி இருக்கான்? அவன்கிட்ட பேச முடியுமா?”

“அவன ஜி.எச்க்கு கொண்டு போயிருக்காங்க.”

“எந்த ஜி.எச் சார்?”

“ராயப்பேட்டா”

“அங்க வந்தா அவனைப் பார்க்கலாம்ல சார்?”

“ம்ம்..”

“ஓக்கே சார். நான் ஃப்ரண்ட்ஸ் கிட்ட சொல்லிடுறேன். எல்லாரும் வந்திருவோம்”

“ஓக்கே” காலை கட் செய்துவிட்டு, “சிவா, இவனோட காலேஜ் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் ஜி.எச்க்கு வந்திருவாங்க. அங்கயே நம்ம விசாரணையை வச்சிக்கலாம்”

“ஓக்கே சார். நான் ரெண்டு மூணு லேடி கான்ஸ்டபிள்ஸை வரச்சொல்லிடுறேன் சார். கேர்ள்ஸை விசாரிக்கும்போது உதவியா இருக்கும்”

“ஓக்கே”

உடலை போஸ்ட் மார்ட்டத்துக்கு எடுத்துப் போக ஏற்பாடு செய்து கொண்டிருக்க, அருண் ஃபோன் அட்ரஸ் புக்கை நோண்டினான். SARAVயில் ஆரம்பிக்கும் பெயர் ஏதாவது இருந்து தொலைக்காதா என்ற நப்பாசையில்.

Raja
Rajesh
Robert
Ryan
S3
Saran
Saroj
Sathya
Sekar

“எனி லக் சார்?” சிவா.

“நோ லக் சிவா. நீங்க இன்ஸ்பெக்டரை அனுப்பி அவன் காலேஜ்ல தகவலைச் சொல்லிட்டு அப்பிடியே ஸ்டாஃபை விசாரிச்சிட்டு வரச் சொல்லுங்க. நாம ஜி.எச் போயிடலாம்.”

“ஓக்கே சார்”

******************************************************************************************************

ஜி.எச்ல் சிவகுருவின் கல்லூரி நண்பர்கள் அதிரடித்துவிட்டார்கள். சிவகுரு இறந்துவிட்டான் என்று தெரிந்ததும் அரை மணி நேரத்துக்கு அழுது தீர்த்துவிட்டாள் மீனா. சிவாவின் பெற்றோரும் வந்து சேர்ந்து விட்டனர். சிவாவின் நண்பர்களை ஆங்காங்கே போலிஸ் விசாரித்துக் கொண்டிருந்தது.

மீனா அழுது ஓயும் வரை காத்திருந்து விட்டு, அருணும் சிவாவும் அவளை நெருங்கினர்.

“ஹலோ. நான் தான் உங்கக்கிட்ட ஃபோன்ல பேசினது. என் பேரு அருண். போலீஸ்ல கிரைம் கன்ஸல்டண்டா இருக்கேன்?”

அழுது சிவந்த கண்களால் அருணை நிமிர்ந்து பார்த்தாள்.

“உங்க இழப்பும் வேதனையும் என்னால புரிஞ்சிக்க முடியுது. சிவகுருவக் கொலை செஞ்சது யாருன்னு கண்டுபிடிக்கணும். அதுதான் நல்ல நண்பர்களா சிவகுருவுக்கு இனிமே உங்களால செய்ய முடிஞ்சது. இந்த இன்வெஸ்டிகேஷன்ல எங்களுக்கு இது கோல்டன் ஹவர். சீக்கிரமா ஆக்ட் பண்ணலைன்னா தடயங்களைக் கொலைகாரன் அழிச்சிடலாம். உங்க நண்பனுக்கு நியாயம் கிடைக்க உங்க உதவி வேணும். செய்ய முடியுமா?”

“ம்ம்”

“உங்க ஃப்ரண்டுக்கு எதிரிங்க யாரும் இருக்காங்களா?”

“அப்பிடியெல்லாம் இல்ல சார். சிவா ரொம்ப நல்ல டைப். கலகலன்னு பேசுவான். டூ மினிட்ஸ் பேசினா போதும் நீங்க அவன் ஃப்ரண்ட் ஆகிடுவிங்க” மீனாவின் தோளை ஆறுதலாகப் பிடித்திருந்த சிவப்பு சுடிதார் பேசினாள்.

“அவங்க சொல்லட்டுமே?”

“இல்ல சார். இவ சொல்றதுதான் சரி” கர்ச்சீஃபால் கண்களைத் துடைத்துக் கொண்டே பேசினாள்.

“சமீபத்துல எதுவும் அவன் நடவடிக்கைல மாற்றம் ஏதாவது நோட்டிஸ் பண்ணீங்களா?”

“இல்ல சார். யூசுவலா தான் இருந்தான்”

“ஓக்கே. உங்களுக்கு ஏதாவது நினைவுக்கு வந்ததுன்னா சொல்லுங்க” தன் விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான். வாங்கி உள்ளங்கைக்குள் மூடி வைத்துக் கொண்டு தலையாட்டினாள்.

திரும்பி நடக்கும்போது, “என்ன சிவா ஏதாச்சும் தேறிச்சா?”

“இல்ல சார். எல்லாரும் ஒரே டயலாக் தான் சொல்றாங்க. சிவகுரு நல்லவன், வல்லவன், எல்லாருக்கும் ஃப்ரண்டுன்னு. அப்பிடியே காலேஜ் பிரச்சனையா இருந்தாலும் அடி தடி கைகலப்புன்னு வருமே தவிர இப்பிடி கழுத்தறுக்கிறது எல்லாம் நடக்காது சார்”

“கரெக்ட் சிவா. நீங்க சொல்றதும் சரிதான். டெட் எண்ட்ல தான் இருக்கோம். எங்கயாச்சும் நூல் கிடைச்சாத்தான் உண்டு”

மார்ச்சுவரி தாண்டி வரும்போது ஓரமாக மகேஷும் இன்னும் இரண்டு பேரும் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்ததும் டி.டிஆர் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய ஏற்பாடு செய்யச் சொன்னது நினைவுக்கு வந்தது.

“ஹலோ மகேஷ்” என்று அவன் முன்னால் போய் நின்றான்.

“ஹலோ சார்” என்று மலர்ந்தவன், “சார் இது என்னோட ஃப்ரண்ட்ஸ். டேய் இவர் தான் அருண் சார். சொன்னேனே”

“ஹலோ சார்”

“என்ன இங்க?”

“சார் அப்பா பாடியை போலிஸ் டேக் ஓவர் செஞ்சி இங்க தான் போஸ்ட் மார்ட்டம் செய்யறாங்க சார். வீட்டுல சொந்தக்காரங்க எல்லாம் ஒரே திட்டு. இப்பிடிப் பண்ணிட்டியேடான்னு. ஒரு வேளை கொலையா இருந்தா எங்கப்பாவை யார் கொன்னதுன்னு கண்டு பிடிக்கணும்ல சார். அதுக்குத்தானே? அது புரிஞ்சிக்காம” கண் கலங்கினான்.

“விடுங்க மகேஷ். அவங்கள்லாம் அப்பிடித்தான். சரி போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சதா?”

“முடிஞ்சது சார். இன்னும் அரை மணி நேரத்துல பாடியை குடுக்குறேன்னு சொல்லியிருக்காங்க. வாங்கிட்டுப் போகலாம்னு தான் சார் வெயிட் பண்றோம்”

“ஓ. ஓக்கே. நான் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் பாத்துட்டு உங்களுக்கு அப்டேட் பண்றேன்”

“தேங்க்ஸ் சார்”

“பரவாயில்ல மகேஷ்”

அவர்களிடம் இருந்து விலகி வந்ததும், “சிவா, போஸ்ட் மார்ட்டம் செஞ்ச டாக்டரை மீட் பண்ணலாமா?”

“ஷ்யூர் சார். யாருன்னு விசாரிச்சிட்டு வர்றேன். நீங்க ஜீப் பக்கத்துல வெயிட் பண்ணுங்க சார்”

*****************************************************************************************************************************

போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர் சகாயம் ஒடிசலாக ரகுவரனை நினைவு படுத்தினார். அருண் உள்ளே வருவதைப் பார்த்ததும் கண்ணாடியைக் கழட்டிக் கையில் எடுத்துக் கொண்டு எழுந்தார்.

“ஹலோ டாக்டர், ஐ ம் அருண். போலிஸ் கிரைம் கன்ஸல்டண்ட்”

“சிவா சொன்னாரு சார். ஐ ம் சகாயம்” - ரகுவரனின் குரலைப் போலவே லேசான கரகரப்புடன் இருந்தது. கையை ஆட்டி ஐ நோ என்று சொன்னால் ரகுவரனே தான்.

“இந்த டி.டி.ஈ போஸ்ட் மார்ட்டம்”

“யெஸ் அருண். நீங்க சொன்னதால பாய்ஸன் ப்ரொஃபைலிங் செஞ்சோம். ஹீ இஸ் பாய்ஸண்ட். 36 ஹவர்ஸ்க்கு மேல ஆகிட்டதால வயித்தில இருந்த ஃபுட்ல எந்த ஃபுட்ல பாய்ஸன் இருந்ததுன்னு கண்டுபிடிக்க முடியலை. லக்கிலி, வீ ஃபௌண்ட் த பாய்ஸனஸ் ஃபுட்.”

‘ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கிறாரே டாக்டர்’ என்று நினைத்துக் கொண்டு ஆர்வத்துடன் டாக்டர் முகத்தையே ஏறிட்டான்.

“அவரோட பல் இடுக்கில ஒட்டிட்டு இருந்த துணுக்குல பாய்ஸன் இருக்கிறதைக் கண்டு பிடிச்சிட்டோம். அதோட டெக்ஸ்ட்சர் & கலர் பார்க்கும்போது அது பீடாவா இருக்கலாம். விசாரிச்சதுல அவருக்கு பீடா போடுற பழக்கம் இருக்காம்”

“தேங்க்யூ டாக்டர். டீட்டெயில்ட் ரிப்போர்ட் கமிஷனர் ஆஃபிஸ்க்கு அனுப்பிடுங்க. நான் பாத்துக்கிறேன். நாங்க கிளம்பறோம். நைஸ் மீட்டிங் யு”

மீண்டும் கை குலுக்கிவிட்டு வெளியே வந்தான்.

தூரத்தில் ஆம்புலன்ஸில் பாடியை ஏற்றிக் கொண்டிருக்க பக்கத்தில் நின்ற மகேஷ் தென்பட்டான். “மகேஷ்” என்று சத்தமாகக் கூப்பிடவும் திரும்பிப் பார்த்தவனை கையசைத்துக் கூப்பிட்டான் அருண்.

“மகேஷ் உங்க சந்தேகம் சரிதான். உங்கப்பா விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டுருக்காரு”

“நினைச்சேன் சார்.” கண்கள் ஈரத்தால் பளபளப்பாயின. “எங்கப்பாவை யார் கொன்னாங்க, எதுக்காகக் கொன்னாங்கன்னும் கண்டுபிடிச்சிடுங்க சார். என்னால ஆன என்ன ஹெல்ப்னாலும் செய்யறேன்”

“ஷ்யூர் மகேஷ். என்னால முடிஞ்சதைச் செய்யறேன். தென், உங்கப்பாவுக்கு பீடா, வெத்தலை சாப்புடற பழக்கம் இருக்கா?”

“இருக்கு சார். நைட் ட்ரெயின்ல போனார்னா பீச் ஸ்டேஷன் வாசல்ல இருக்கிற ஒரு பீடாக் கடையில பீடா வாங்கிட்டு தான் போவாரு. கடைக்காரன் பேரு கூட மாரின்னு நினைக்கிறேன்”

“தேங்க்ஸ் மகேஷ். நான் ப்ராக்ரெஸை உங்களுக்கு அப்பப்ப இன்ஃபார்ம் பண்றேன். அப்பாவை நல்லபடியா வழியனுப்பப் பாருங்க”

***********************************************************************************************************************************
ஜீப்பில் போய்க் கொண்டிருக்கும்போது, “சிவா, அந்த பீடாக் கடை மாரியை விசாரிக்க ஒரு கான்ஸ்டபிளை அனுப்புங்க. சாதரணமா விசாரிக்கச் சொல்லுங்க. ஏதாச்சும் சந்தேகப்படும்படியா ஒளறினா மட்டும் ஸ்டேஷனுக்குத் தூக்கிட்டு வந்தாப் போதும்”

“ஏன் சார்? பீடால தான் பாய்ஸன் இருக்கும்னா அவனை தூக்கிட்டு வந்து நாலு கும்மு கும்மலாமே சார்?”

“இல்ல சிவா. அவன் ஏன் இவரைக் கொல்லணும். என்ன மோட்டிவ்?”

“அதுவும் சரிதான் சார்”

அருணின் செல்ஃபோன் ஒலித்தது. “ஹலோ”

“சார் நான் மீனா பேசுறேன். சிவாவோட கேர்ள் ஃப்ரண்ட்”

“ஐ ரிமெம்பர். சொல்லுமா”

“சார் ஒரு முக்கியமான விசயம் நினைவுக்கு வந்தது. அதான் உங்கக்கிட்ட சொல்லிடலாம்னு...”

“என்ன விசயம்?”

“சிவா கொஞ்ச நாளா ஏதோ தப்பு பண்றான்னு நினைக்கிறேன் சார். நேத்து காலைல” என்று ஆரம்பித்து அவர்கள் இருவருக்குள் நடந்த உரையாடல் முழுக்க சொன்னாள்.

“கையில சாவி வச்சிருந்தான்னு சொன்னியே. என்ன சாவின்னு நினைவிருக்கா?”

“யெஸ் சார். அது எங்க காலேஜ் லாக்கர் கீ”

“சிவாவோட லாக்கர் நம்பர் என்னம்மா?”

“1437”

“தேங்க்யூம்மா. வேற ஏதாச்சும் நினைவுக்கு வந்தா உடனே கால் பண்ணு”

ஃபோனை அணைத்து விட்டு சிவாவைப் பார்த்தான். அருணின் முகத்தில் ட்யூப் லைட் போட்டாற்போல வெளிச்சத்தைப் பார்த்ததும், சிவா, “என்ன சார் எதுவும் நூல் கிடைச்சிருச்சா?”

“ஆமா சிவா. நீங்க உடனே சிவகுரு காலேஜ்க்கு வண்டியை விடுங்க”

Sunday, April 28, 2013

ப்ளூ மர்டர் எக்ஸ்ப்ரஸ் - 4


jigsaw_puzzle

அருண் டென்னிஸ் முடித்து ஸ்விம்மிங் பூலில் பத்து ரவுண்ட் அடித்து ஷவரில் ஒரு குளியல் போட்டுவிட்டு தலையைத் துவட்டிக் கொண்டே வெளியே வந்தான். அருணின் லாக்கர் அருகே இரண்டு இளைஞர்கள் நின்றிருந்தார்கள். ஒருவனை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. க்ளப் ஜிம்மில் வேலை செய்யும் இளைஞன். பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. இன்னொரு இளைஞன் புதியவனாய் இருந்தான். எக்ஸர்ஸைஸ் செய்யவோ குளிக்கவோ வந்தவன் போலத் தெரியவில்லை. ஜீன்ஸ் பேண்டும் டி-ஷர்ட்டும் அணிந்து இன் செய்திருந்தான். அருணின் தலை தெரிந்ததும் இருவரின் உடலிலும் ஒரு விறைப்பு. அவனுக்காகத்தான் காத்திருக்கிறார்கள் போல.

அருண் கேள்வியாகப் பார்த்தான். ஜிம் அஸிஸ்டன்ட் உதடுகளைப் பிரித்தான். “சார் வணக்கம் சார்”

அவன் பெயர் நினைவுக்கு வந்துவிட்டது. “என்ன விஸ்வா? எனக்காகவா வெயிட் பண்றீங்க? என்ன விசயம்?”

“சார் இவன் என்னோட ஃப்ரண்ட். பேர் மகேஷ். ஒரு கேஸ் விசயமா உங்கக்கிட்ட”

“நான் இப்போ டிப்பார்மெண்ட்ல இல்லைன்னு உனக்குத் தெரியும் தானே? என்னால என்ன உதவி செய்ய முடியும்னு தெரியலையே” மகேஷின் கண்கள் லேசாகக் கலங்கத் துவங்கியது தெரிந்தது.

“சார். இவங்கப்பா ரயில்வேஸ்ல டிடிஆரா இருந்தாரு சார். ரெண்டு நாள் முன்னாடி கோயமுத்தூர் ட்ரெயின்ல டியூட்டிக்குப் போகும்போது இறந்துட்டாரு சார். போலீஸ் அது ஹார்ட் அட்டாக்னு கேஸை மூடிட்டாங்க சார். ஆனா இவன் சந்தேகப் படுறான். அதான்”

அருண் மகேஷைப் பார்த்தான். இரண்டு நாள் தாடி முகத்தில். தலை கலைந்திருந்தது. கண்கள் அழுததாலோ என்னவோ சிறியதாகியிருந்தன. கண்ணாடி போடுவான் போல மூக்கின் மீது தழும்பு ஒன்றை உருவாக்கியிருந்தது.

“உங்களுக்கு என்ன சந்தேகம் மகேஷ்?”

“சார் நான் பயோடெக்னாலஜி படிச்சிருக்கேன். கொஞ்சம் மெடிக்கல் தெரியும். சில பாய்ஸன்ஸ்ல கூட ஹார்ட் அட்டாக் சிம்ப்டம்ஸ் இருக்கும் சார். எங்கப்பா நல்ல ஹெல்த்தி ஆள் சார். அவருக்கு ஹார்ட் அட்டாக் வர சான்ஸே இல்லை”

சத்தமில்லாம பேசிக் கொண்டிருந்தாலும் மூவரும் அங்கே நின்று பேசிக் கொண்டிருப்பதை மற்ற கிளப் உறுப்பினர்கள் குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த அருண், “சரி வாங்க போய்ட்டே பேசலாம்”

“எப்பிடி வந்தீங்க மகேஷ்?”

“ஆட்டோல தான் சார்”

“ஓக்கே. என் கார்ல போயிட்டே பேசலாம் அப்போ”

காரில் போகும்போது “அப்பா உடம்பு இன்னமும் ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கு?”

“ஆமா சார். ரயில்வே ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கு. இன்னைக்குக் காலைல 10 மணிக்கு எடுத்துட்டுப் போக வரச் சொல்லியிருக்காங்க. போஸ்ட் மார்ட்டம் பண்ணவே இல்லை சார். அப்பாவோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து எதுக்கு உடம்பை அறுக்கணும்னு தடுத்துட்டாங்க. நீங்க தான் உங்க இன்ஃப்ளுயன்ஸ் யூஸ் பண்ணி போஸ்ட் மார்ட்டம் பண்ணச் சொல்லணும் சார்”

“வெயிட் வெயிட். நீங்க இன்னும் என்ன காரணத்துக்காக உங்க அப்பா சாவு கொலையா இருக்கலாம்னு சந்தேகப்படுறேன்னு சொல்லலையே?”

“அப்பாவுக்கு கேம்ப்ளிங் ப்ராப்ளம் உண்டு சார். சீட்டு, ரேஸ், கிரிக்கெட் பெட்டிங் கூட செஞ்சிருக்காரு. ட்ரெயின்ல போகும்போது பேஸஞ்சர்ஸ் கூடக்கூட சீட்டாடுவாரு. சண்டே ஆச்சின்னா ரேஸ்க்குப் போயிருவாரு. அக்கா லவ் மேரேஜ் பண்ணிண்டு போயிட்டா. அவ கல்யாணத்துக்கு அம்மா சேத்து வச்ச பணத்தை எடுத்து அவட்ட குடுத்துட்டு வந்துர்றேன்னு போனவரு அவ்வளவு காசையும் ரேஸ்ல விட்டுட்டு வந்துட்டாரு. அம்மாவுக்குக் கூட இது தெரியாது. ஒரு நாள் தண்ணியடிச்சிட்டு என்னைக் கூப்புட்டு அழுதுண்டே சொன்னாரு. நிறைய கடன் வேற வாங்கி வச்சிருக்காரு. பி.எஃப் காசு எல்லாம் லோன் போட்டு எடுத்துட்டாரு. இதெல்லாம் இருக்க போன மாசம் திடீர்னு வந்து வாலண்டரி ரிட்டயர்மெண்ட் குடுக்கப் போறேன்னு சொன்னாரு. எனக்கு ஷாக். ஏன்ப்பான்னு கேட்டா நீ வேலைக்குப் போகப் போற இனிமே அம்மாவுக்குத் துணையா நான் இருக்கப் போறேன்னு சொன்னாரு. கடன்லாம் என்ன பண்ணப் போறேனு கேட்டதுக்கு ஒரு திட்டம் இருக்குடா. நான் நினைச்சபடி நடந்துட்டா நாம் கோடிஸ்வரங்களாயிடலாம்னு சொன்னாரு. எனக்கென்னவோ தப்பாப் போறாரோன்னு பட்டது. கொஞ்ச நாளா அவரோட ப்ரீஃப் கேஸை ரொம்ப ப்ரொடெக்ட் பண்ணிண்டிருந்தாரு. அன்னைக்கு ட்யூட்டிக்குப் போறதுக்கு முன்னாடி அவரு குளிக்கும்போது திறந்து பார்த்தேன். ஏதோ ஃபைனான்ஸியல் டாகுமெண்ட்ஸ். அவர் ப்ரீஃப்கேஸ் முழுக்க இருந்தது. அவரை ஸ்டேஷன்ல விடப் போகும்போது கேக்கலாம்னு இருந்தேன். ஆனா அவரு ஆட்டோல ஏறிப் போயிட்டாரு. திரும்பி வந்த பின்னால கேக்கலாம்னு நினைச்சா..” விசும்பினான்.

“ஸோ?”

“இப்ப அவரோட ப்ரீஃப்கேஸ்ல அந்த டாகுமெண்ட்ஸ் இல்லை. அதான்..”

“ஓக்கே. அந்த டாகுமெண்ட்ஸ்காக யாரும் அவரைக் கொலை செஞ்சிருக்கலாம்னு சந்தேகப் படுறீங்க. இல்லையா?”

“ஆமா சார். நீங்கதான் ஹெல்ப் பண்ணனும். ஒரு வேளை இது கொலையா இருந்தா அந்தக் கொலைகாரனைக் கண்டுபிடிக்கவும் நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்”

“ஓக்கே மகேஷ். என்னால முடிஞ்சதை செய்யறேன். கமிஷனர் என்னோட ஃப்ரண்ட் தான். அவர்கிட்ட சொல்லி உங்கப்பா பாடியை போஸ்ட் மார்ட்டம் செய்ய ஏற்பாடு பண்றேன். பட் நீங்க ஒரு அஃபிஷியல் கம்ப்ளெயிண்ட் குடுக்கணும். அப்போதான் போஸ்ட் மார்ட்டம் பண்ண முடியும்?”

“குடுக்குறேன் சார்”

அருண் செல்ஃபோனில் மணி பார்த்தான். 8:30. “உங்களுக்கு வேற வேலை இப்போ இல்லைன்னா இப்பவே கமிஷனர் ஆஃபிஸ் போய் கம்ப்ளெயிண்ட் குடுத்துட்டு வந்துடலாமா?”

“ஓக்கே சார்”

காரை எக்மோர் நோக்கித் திருப்பினான். செல்ஃபோனில் நம்பரைத் தேடி அழைத்தான்.

“அருண் சொல்றா. நானே கூப்புடணும்னு இருந்தேன்”

“கார்த்தி. ஒரு டி.டி.ஆர் கோயமுத்தூர் ட்ரெயின்ல ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாருன்னு ரயில்வே ஹாஸ்பிட்டல்ல பாடிய வச்சிருக்காங்க. ஹார்ட் அட்டாக்ங்கிறதால போஸ்ட் மார்ட்டம் பண்ணலை போல. பட் அவர் பையன் இது கொலையா இருக்கலாம்னு சந்தேகப் படுறாரு. அதான் கம்ப்ளெயிண்ட் வாங்கிட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு ஏற்பாடு பண்ணனும்”

“செஞ்சிடலாம்டா. நம்ம ஆஃபிஸ்ல ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதிக் குடுக்கச் சொல்லிடு. அப்புறம் வேளச்சேரியில ஒரு அப்பார்ட்மெண்ட்ல ஒரு கொலைக்கேஸ். அதுல உன் எக்ஸ்பெர்ட் அட்வைஸ் வேணும். கொஞ்சம் ஆஃபிஸ் வரைக்கும் வர முடியுமா?”

“ஆக்சுவலி அங்க தான் வந்துட்டே இருக்கேன்”

“க்ரேட். சீக்கிரம் வா. மீட் பண்ணலாம்”

**********************************************************

கமிஷனர் அலுவலகத்தில் நுழைந்து காரை பார்க் செய்துவிட்டு, மகேஷை ரைட்டரிடம் ஒப்படைத்துவிட்டு கமிஷனர் அறைக்குள் நுழைந்தான்.

“வாடா. சாப்ட்டியா?”

“இன்னும் இல்லைடா. க்ளப் போயிருந்தேன். அங்க இந்தப் பையன் பார்த்து விஷயத்தைச் சொல்லி ஹெல்ப் கேட்டான். சரின்னு நேரா இங்கயே கூட்டிட்டு வந்துட்டேன். வீட்டுக்குப் போய் தான் சாப்பிடணும்.”

“சரிடா நீ அப்போ வீட்டுக்குப் போய் சாப்டுட்டு வெயிட் பண்ணு. நான் இன்ஸ்பெக்டர் சிவாவை அனுப்பி வைக்கிறேன். உன்னை வீட்ல பிக்கப் செஞ்சிட்டு கிரைம் சீனுக்குக் கூட்டிட்டுப் போவாரு”

“ஓக்கேய்” கிளம்பி வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுக் காத்திருந்தான். சிவா வந்து அழைத்துக் கொண்டு போனார்.

*********************************************************

அது சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு அப்பார்ட்மெண்ட். உள்ளே போக வெளியே வர என இரண்டு வழிகள். இரண்டு வழிகளுக்கும் நடுவில் ஒரு ஸ்டூலில் வாட்ச்மேன் ஒருவர் உட்கார்ந்திருந்தார். போலிஸ் ஜீப்பைப் பார்த்ததும் எழுந்து விஷ் செய்தார். உள்ளே பார்க்கிங் ஏரியாவில் ஃபாரன்ஸிக் வேனும், இன்னுமொரு போலிஸ் ஜீப்பும் ஆம்புலன்ஸும் நின்றிருந்தன. சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் சிவாவைப் பார்தததும் சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டு சல்யூட் ஒன்றைப் போட்டார். படியேறி அந்த வீட்டுக்குள் வந்தனர். கழுத்து அறுபட்டு ரத்தம் வெளியேறி கை விரல் ரத்தத்தால் “S A R A V" என எதையே எழுதத் தொடங்கி முடிக்காமலே செத்துப் போயிருந்தான்.

Friday, April 19, 2013

ப்ளூ மர்டர் எக்ஸ்ப்ரஸ் - 3


jigsaw_puzzle

அடையார் க்ளோபஸ் வாசலில் நகம் கடித்தபடி நின்றிருந்தாள் மீனா. பின்க்கும் வெள்ளையும் கலந்த சுடிதார் போட்டு துப்பட்டாவை குறுக்காகக் கட்டியிருந்தாள். தோளில் ஒரு சிவப்பு நிறை கைப்பை தொங்கிக் கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த கர்சீஃபால் நெற்றி வேர்வையைத் துடைத்துக் கொண்டாள். வலது கையில் கட்டியிருந்த கடிகாரத்தில் அடிக்கொரு முறை மணி பார்த்துக் கொண்டாள். யாருக்கோ காத்திருக்கிறாள் என்பதை யாரும் புரிந்து கொள்வார்கள்.

தூரத்தில் கோயமுத்தூர் ரெஜிஸ்ட்ரேஷன் கறுப்பு பல்சரில் சிவாவின் தலை தெரிந்ததும் அவள் முகம் மலர்ந்தது. உதட்டோரத்தில் ஒரு புன்னகை பூத்தது. வந்து அவள் அருகில் கொண்டு வந்து நிறுத்தினான். உடலைப் பிடிக்கும் இளமஞ்சள் டீஷர்ட்டும் கருநீல ஜீன்ஸும் அணிந்திருந்தான். காலில் ரீபாக் ஷூ. கண்களில் கூலிங் கிளாஸ்.

பைக்கில் ஏறி இரண்டு பக்கமும் காலைப் போட்டு உட்கார்ந்தாள். கியரை மாற்றி ரோட்டில் சீறினான்.

“ஏய் உன்னை ஹெல்மெட் போடாம பை ஓட்டிட்டு வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல?” அடுத்த சிக்னலில் யு-டர்ன் எடுக்க நிற்கும்போது கேட்டாள்.

“ஹெல்மெட் போட்டா சைட் அடிக்க முடியாதுல?”

“ஏன், கண்ணு தெரியாதா?”

“அய்யே, நான் அடிக்கிறதைச் சொல்லலை. ரோட்டுல போற பொண்ணுங்களால என்னை சைட் அடிக்க முடியாதுல்ல, அதான்”

“பரதேசி அலையுது பாரு” முஷ்டியை மடக்கி முதுகில் குத்தினாள்.

பைக் எக்ஸ்பிரஸ் அவென்யூவுக்குள் நுழைந்தது. பார்க் செய்துவிட்டு லிஃப்ட் பிடித்து ஃபுட் கோர்ட் போனார்கள்.

“இருடா, என்கிட்ட கார்ட் இருக்கு. இதை லோட் பண்ணிக்கோ. புது கார்ட் வாங்க வேண்டாம். அதுக்கு ட்வெண்டி ருப்பீஸ் சார்ஜ் பண்ணுவான்”

“கேபிள் சங்கர்னு ஒரு ப்ளாக்கர் இருக்காருப்பா. கேட்டால் கிடைக்கும்னு ஒரு மூவ்மெண்ட் நடத்திட்டு இருக்காரு. இந்த மாதிரி அநியாயக் கொள்ளை அடிக்கிற இடத்துல எல்லாம் ஆர்க்யூ பண்ணி எக்ஸ்ட்ரா காசு கேக்காம, மிச்சம் இருக்கிற காசையும் திருப்பி வாங்கிட்டு வந்துடுறாங்க அவங்க குரூப்ல தெரியுமா?”

“அடப் போடா, மிஞ்சிப் போனா அஞ்சு ரூபா மிச்சமிருக்கும். அதைப் போய்க் கேட்டுட்டு நிக்கலாமா? அதான் கார்ட் பத்திரமா வச்சிருக்கேனே. நெக்ஸ்ட் டைம் வரும்போது வாங்கிட்டுப் போறேன்”

“நீ வாங்கிட்டுப் போவ, வெளியூர்ல இருந்து வந்தவன் இதுக்காக இன்னொரு தடவை சென்னை வரமுடியுமா? அவங்கள்லாம் வேஸ்ட் தானே செய்வாங்க”

“அட ஆமா. சரி எங்க நீ போய் நமக்கு ஏதாச்சும் வாங்கிட்டு மீதிக் காசை கேட்டு வாங்கிட்டு வா பார்ப்போம்?”

“ஹி ஹி.அதெல்லாம் படிக்க மட்டும் தான் செய்வோம். கேக்கல்லாம் நம்மால முடியாது. சரி உனக்கு என்ன வேணும்?”

“நளாஸ்ல ஆப்பம் சிக்கன் கறி”

பணத்தைக் கொடுத்து கார்டில் லோட் செய்து கொண்டு ஆப்பமும் சிக்கன் கறியும் வாங்கிக் கொண்டு உட்கார்ந்தான்.

“சரி காலைல ஃபோன்ல என்னவோ சொன்னியே? நிஜமாத்தான் சொன்னியா? இல்ல வழக்கம்போல விளையாடினியா?”

“இல்லடி நிஜமாத்தான். இன்னும் ஒன் ஆர் டூ மன்த்ஸ்ல காலேஜ் விட்டு நின்னுடப் போறேன்”

“டேய் செகண்ட் இயர்தாண்டா படிக்கிறோம். உங்கப்பா ஆர்.டி.ஓவா இருக்கலாம். ஆனா படிக்காம வீட்டுல கிடந்தா அடிச்சித் தொரத்திருவாரு”

“எங்கப்பா கையை எதிர்பார்த்துட்டு இருக்க வேண்டியதே இல்லை”

“என்னடா சொல்ற ஒண்ணும் புரியல”

பாக்கெட்டுக்குள் கையை விட்டு பைக் சாவியை எடுத்தான். அதில் கோர்த்திருந்த ஒரு சிறிய சாவியை எடுத்துக் காட்டினான். குரலை தணித்துக் கொண்டு, “இந்த சாவியைப் பாரு. இதோட மதிப்பு கிட்டத்தட்ட ஒரு கோடி. இன்னும் ஒன் ஆர் டூ மன்த்ஸ்ல அந்தப் பணம் என் கைக்கு வந்துடும். அப்புறம் என்ன மஜா தான்”

“டேய் எதுவும் தப்புக் காரியம் பண்றியா? பயமா இருக்குடா?”

“பயப்படாத மீனா. நான் செய்யறது எல்லாம் நல்ல காரியம் தான். இப்போதைக்கு என்னால வெளிய சொல்ல முடியாது. கைல காசு வரட்டும் அப்புறமா சொல்றேன். ஓக்கே”

அவள் முகத்தில் கலவரம் குறையவில்லை. மருண்ட விழிகளால் அவனையே பார்த்தவாறு இருந்தாள்.

அவள் மூடை மாற்றுவதற்காகக் கேட்டான், “படத்துக்குப் போலாமா?”

“என்ன படத்துக்கு?”

“கேபிகேஆர்?”

“போன வாரம் தானடா பார்த்தோம். திரும்பவும் பாக்க அந்தப் படத்துல என்ன இருக்கு?”

“அந்தப் படத்துக்கு தாண்டி கூட்டமே இருக்காது”

“ச்சீ போடா. நீ ரொம்ப மோசம்”

“ஆமா வெளிச்சத்துல எல்லாப் பொண்ணுங்களும் அப்பாவி மாதிரிதான் பேசுறீங்க. இருட்டுக்குப் போயிட்டா அப்பாவிகள் எல்லாம் அடப்பாவிகளாயிடுறீங்க”

“நல்லா பேசுடா? சரி போய் டிக்கெட் எடுத்துட்டு வா. நான் வீட்டுக்கு ஃபோன் பண்ணி லேட்டாகும்னு சொல்லிடுறேன்”

**********************************

படம் முடிந்து அவள் வீட்டுத் தெருமுனையில் இறக்கி விட்டு அவள் வீட்டுப் படியேறும் வரை பார்த்திருந்து விட்டு வேளச்சேரியை நோக்கி விரட்டினான். விஜயநகரத்தைத் தாண்டி தாம்பரம் போகும் சாலையில் திரும்பி மடிப்பாக்கம் விலக்கத்துக்கு சற்று முன்னால் இருக்கும் அப்பார்மெண்டில் பைக்கைப் பார்க் செய்துவிட்டு வாட்ச்மேனைப் பார்த்து ஒரு சிரிப்பை சிந்திவிட்டுப் படியேறினான். கதவில் சாவியைப் போட்டுத் திறந்து உள்ளே நுழைந்து லைட்டைப் போட்டான். ஷெல்ஃப்கள் எல்லாம் திறந்து கிடந்தன. வீட்டை அதிகமாகக் கலைக்காமல் யாரோ எதையோ தேடியிருப்பது புரிந்தது. மெதுவாக அடி எடுத்து பெட்ரூமுக்குள் நுழைந்து பார்த்தான். அங்கேயும் ஷெல்ஃப்கள் திறந்து கிடந்தன. அதை காலேஜ் லாக்கரில் வைத்துப் பூட்டியது நல்லதாகப் போய் விட்டது. ஆனால் அது என்னிடம் இருப்பது வேறு யாருக்கும் தெரியாதே?? ஒரு வேளை வேறு யாராவது பெட்டித் திருடனாக இருக்குமோ? ஆனால் அப்படி வந்தவன் ஏன் கலைத்துப் போடாமல் தேடியிருக்க வேண்டும்? ஒன்றும் புரியாமல் வலது கையால் தலையைக் கலைத்துக் கொண்டான். திறந்திருந்த ஷெல்ஃப் எல்லாம் மூடி விட்டு ஜீன்ஸையும் டி ஷர்ட்டையும் கழற்றி மூலையில் வீசினான்.

ஜட்டியோடு நடந்து போய் பால்கனியில் துவைத்துப் போட்டிருந்த ஷார்ட்ஸை எடுத்துப் போட்டுக்கொண்டு ஹாலுக்கு வந்து டிவியைப் போட்டான். போட்டதும் கரெண்ட் போனது. ச்சே என்று நொந்து கொண்டு மீண்டும் பால்கனியை நோக்கி நடையைப் போட்டான்.

உச்சந்தலையின் முடியை வலிக்குமாறு யாரோ பிடித்து பின்னால் இழுத்தார்கள். “ஆ” என்ற சத்தத்தை அனிச்சையாக எழுப்பிய அவன் தொண்டை மீது உலோகத்தில் சில்லிப்பு.

“கத்துன, கழுத்த அறுத்துட்டுப் போயிட்டே இருப்பேன்”

“யாரு நீ? உனக்கென்ன வேணும்? வீட்டுல என் கிட்ட பணமே இல்லை. என் லேப்டாப் செயின் மோதரம் வேணும்னா வாங்கிட்டுப் போ. என்னைய விட்டுடு”

கத்தி கழுத்தில் அழுத்தத்தை அதிகரிக்கவே லேசான வெட்டு விழுந்து ரத்தம் கோடாக வழிய ஆரம்பித்தது.

“எங்க வச்சிருக்க?”

“எதை?”

அழுத்தம் அதிகமானது. “தெரியாத மாதிரி கேக்காதடா. சொல்லு எங்க வச்சிருக்க?”

எச்சில் விழுங்கினான். உயிரா கோடியா? இரண்டு விநாடி யோசித்துவிட்டு “காலேஜ் லாக்கர்ல இருக்கு. சாவி என் பைக் சாவியோட இருக்கு”

முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டே வந்து வாசல் கதவருகே இருந்த மெயின் சுவிட்ச் போர்டைத் திறந்து மெயினை ஆன் செய்தான். வீடு வெளிச்சமானது.

கழுத்தைத் திருப்பி பின்னால் நிற்பது யார் என்று பார்க்க முயன்றான் சிவா. கழுத்தை அசைக்கவும் வெட்டு ஆழமானது “அம்மா” என்ற கத்தலை வெளிப்படுத்திக் கொண்டு அசையாமல் நின்றான்.

சிவாவின் தலைக்குப் பின்னால் முகத்தை வைத்து மறைத்துக் கொண்டிருந்த அவன் ஹால் மேஜை மீதிருந்த பைக் சாவியை எடுத்து அதில் கோர்த்திருந்த சின்ன சாவியைப் பிரித்து சிவாவின் முகத்தின் முன் நீட்டினான்.

“இதுவா?”

“ஆ..ஆமா”

“லாக்கருக்கு நம்பர் இருக்கா?”

“என்னோட சீரியல் நம்பர்தான்”

“அதுதான் என்ன?”

“1437”

முடியைப் பிடித்திருந்த கையை கொஞ்சம் தளர்த்தினான். தூக்கியே இருந்த தலை கொஞ்சம் தாழ்ந்ததும் சுவற்றில் மாட்டியிருந்த கண்ணாடியில் சிவாவின் முகமும் அவன் முகமும் தெரிந்தது. கழுத்தில் கத்தியை வைத்திருப்பவன் யாரென்று தெரிந்ததும் சிவாவின் முகம் அதிர்ச்சியை வாங்கியது.

“நீயா?” என்று வாய்விட்டுக் கேட்டதும் உணர்வுக்கு வந்த அவன் தன் பிடியை இன்னும் இறுக்கி தலையைப் பின்னால் இழுத்து கத்தியை கழுத்தில் ஆழமாக இறக்கினான்.

“ஹக்” என்ற ஓசையை மட்டுமே வெளிப்படுத்திவிட்டு சிவாவின் உடல் தொய்வாய் தரையில் விழுந்தது. லாக்கர் சாவியை மட்டும் எடுத்துக் கொண்டு பைக் சாவிக் கொத்தை மீண்டும் டேபிளின் மீது வைத்து விட்டு கீழே துடித்துக் கொண்டிருந்த சிவாவின் உடலைப் பார்த்து ஒரு கேவலமான பார்வையை வீசிவிட்டு அவன் வெளியேறினான்.

Thursday, April 18, 2013

ப்ளூ மர்டர் எக்ஸ்ப்ரஸ்- 2


jigsaw_puzzle
ஈரோடு பக்கம் கணக்கன்பாளையம் கிராமம். மொத்தமே 50 வீடுகள் மூன்று தெருக்கள் - மேலத் தெரு, நடுத்தெரு, கீழத் தெரு. இந்த ஊருக்கு ஒரு மந்தை. ஒரு காலத்தில் ஆடு மாடுகளைக் கட்டி வைத்திருந்த இடமாம். இப்போது ஒரு நாளைக்கு மூன்று முறை வரும் அரசுப் பேருந்தும், ஐந்து முறை வரும் மினி பஸ்ஸும் நின்று போகும் இடமாகப் பயன்படுகிறது. அந்த ஊருக்கு டீக்கடையும் இல்லாமல் ஓட்டலும் இல்லாமல் இரண்டும் கெட்டானாக ஒரு கடை. டீ மாஸ்டர், செஃப், சர்வர், முதலாளி எல்லாம் ஒருவரே. அந்த டீக்கடையிலும் - மேலத் தெரு, நடுத்தெருக்காரர்களுக்கு ஒன்று, கீழத் தெருக்காரர்களுக்கு ஒன்றாக இரட்டைக் குவளைகள். போடப்பட்டிருந்த ஒரே ஒரு பெஞ்சில் காலை ஆட்டிக் கொண்டு தினத்தந்தியை மடித்து விசிறிக் கொண்டிருந்தார் நமச்சிவாயம். வெள்ளைச் சட்டை, வெள்ளை வேஷ்டி. தோளில் துண்டு. முன்னந்தலையில் வழுக்கை. மாலை வெயிலுக்கு முத்து முத்தாக வேர்த்திருந்ததை துண்டால் அழுந்தத் துடைத்தார்.

“ஏனுங் டீ போட்ட்டுங்களா?”

“இல்லீங்ணா, சித்த போகுட்டு. இப்பதா சோறுண்ட்டு வாறன்!”

“நெம்ப நாளா உங்ககிட்ட ஒன்னு கேக்கோணும்ண்ட்டே இருக்கணுங். இவிங்க செய்றதையெல்லாம் வாங்கிட்டுப் போய் என்னங் பண்ணுவீங்?”

“அல்லாமு வட நாட்டுக்குப் போவுதுங். அங்க சுத்திப் பாக்க வாற வெளிநாட்டுக்காரங்க மம்மேனியா வாங்கிட்டுப் போறாங்களாமா!”

“ஓ” தூக்குப்போசியைக் கையில் தூக்கிக்கொண்டு ஒரு பையன் சற்றுத் தொலைவில் நடந்து வந்தான். “ஏனுங், மணி அஞ்சாச்சுங்ளா?”

கையில் கட்டியிருந்த வாட்சைத் தூக்கிப் பிடித்து மணி பார்த்துவிட்டு, “அட ஆமாங். எதெப்படி கணக்காச் சொல்றீங்கோ?”

“அந்தா அங்க பையன் வந்துட்டானுங். அம்பிகாக்கா ஊட்டுப் பையன். அஞ்சு மணியாச்சுன்னா தூக்குப்போசியத் தூக்கீட்டு டீ வாங்க வந்துருவானுங்” சொல்லிவிட்டு டீ போட ஆரம்பித்தார்.

இந்தக் கணக்கம்பாளையம் ஒரு காலத்தில் செழிப்பான ஊராக இருந்தது. எல்லாரும் விவசாயம் பார்த்து கை நிறைய காசோடு வாய் நிறைய பல்லோடு இருந்தார்கள். இப்போது நிலம் காய்ந்து விவசாயம் செத்து ஒரு எக்ஸ்போர்ட்ஸ் கம்பெனிக்கு பனை ஓலையால் பொருட்கள் செய்து தரும் கூலியாக வேலை பார்க்கிறார்கள். நமச்சிவாயம் அவர்களுக்கு ஏஜெண்ட். இவர்கள் செய்து தரும் பொருட்களை வாரம் ஒரு முறை வாங்கிக் கொண்டு போய் சென்னைக்கு லாரி ஏற்றி விடுவார். சென்னையில் இருந்து ரயிலில் ஏற்றி பாம்பே போய் அங்கிருந்து விமானம் ஏறி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. வெளிநாட்டுக்குப் போகும் விவகாரம் நமச்சிவாயத்துக்குக் கூட தெரியாது. இன்று கலெக்‌ஷன் தினம்.

காலையிலே வந்து விட்டார். காலையில் வீடு வீடாக ஒரு எட்டுப் போய் வேலை எவ்வளவு தூரம் நடந்திருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு வந்துவிட்டார். மாலை ஏழு மணி கடைசி பஸ்ஸில் ஏற்றி ஈரோடு போய் லாரி பார்சல் சர்வீஸ் கம்பெனியில் போட்டு விட வேண்டும். ஏழு மணி பஸ்ஸை விட்டுவிட்டால் லாரி போய்விடும். சென்னையில் இருந்து கூப்பிட்டு காதில் ரத்தம் வரும் வரை திட்டுவார்கள். ரெண்டு நாளாக ஊரில் திருவிழா என்று யாரும் சரியாக வேலை செய்யவில்லை. காலையிலேயே வந்து அவர்களை விரட்டிக் கொண்டிருக்கிறார் நமச்சிவாயம்.

“அண்ணா, இன்னிக்கு டீ, பத்து வேணுமுங்க!:, பையன் தூக்குச்சட்டியை டீக்கடை மேஜை மீது வைத்தான்.

“அம்பிகாக்கா ஊட்டுக்குத்தான தம்பி?”

“ஆமாங்.”

“வேலையெல்லாம் ஒழுங்கா நடக்குதாக்கு?”

“எல்லாம் நடக்குதுங். இன்னும் ரெண்டு மணி நேரத்துல அல்லா ஆயிருமுங்க”

“டீக்கடைக்காரண்ணா, டீக்குக் காசு நான் குடுத்துர்றனுங். பையங்கிட்ட வாங்க வேணாங்”

டீயை வாங்கிக் கொண்டு பையன் கிளம்பினான். “நாய்ப் பொழப்பு” மனதுக்குள் புலம்பியது வாயை விட்டு வந்து விட்டது. ‘இன்னும் ஒரு மாசமோ ரெண்டு மாசமோ தான். அதுக்குப் பொறவு இந்தக் கழிசடையை விட்டுப் போடோணும்’ பையில் வைத்திருந்த செல்ஃபோனை எடுத்துப் பார்த்தார். ‘எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்னு சொன்னானே? இன்னும் வரலயே? ரெண்டு மூணு நாள் தள்ளிப் போவுதோ என்னவோ?’ அவருக்குள்ளாகப் பேசிக் கொண்டு எழுந்து புட்டத்தைத் தட்டிவிட்டு துண்டை ஒரு உதறி உதறி தோளில் போட்டுக் கொண்டார். “அண்ணா, நான் ஒரு எட்டு உள்ள போய் ஒரு விரட்டு விரட்டிட்டு வரேனுங்”

“சரிங்ணா. போயிட்டு வாங்க”

அம்பிகாக்கா என்பவர் தான் இந்த ஊரின் மகளிர் சுய உதவிக் குழு தலைவர். விவசாயம் இல்லாமல் நொடித்துப் போன போது சுய உதவிக் குழுவை ஏற்படுத்தி பெண்களை ஊக்கப் படுத்தி இந்தத் தொழிலை செய்ய வைத்தார். அவர் வீட்டின் பெரிய வராந்தாவில் தான் 20 பெண்கள் வரை உட்கார்ந்து ஓலை பொம்மை செய்வார்கள். சென்னையில் இருக்கும் கம்பெனிக்காரனே கிள்ளி தான் கொடுப்பான். அந்தப் பணத்திலும் கணிசமான பங்கு அம்பிகாக்காவுக்குத்தான் போகிறது.

வீட்டுக்குள் நுழைந்த நமச்சிவாயம், “எல்லாம் வெரசா நடக்குதாக்கு? ஏழு மணி பஸ்ஸுக்குப் போகோணும். தெரீந்தானொ?”

சற்றே உயரமாயிருந்த திண்ணையில் பாதி உட்கார்ந்தும் பாதி படுத்துமிருந்த அம்பிகாக்கா நமச்சிவாயத்தைப் பார்த்ததும் மாராப்பை சரி செய்துகொண்டாள். “அதெல்லாம் ஒண்ணும் ரோசனை வேண்டாங். புள்ளைங்க வெரசா ரெடி பண்ணிருவாளுக”

“நீங்க பயப்படாதீங்ண்ணா. ஏழு மணி பஸ்ஸை நிறுத்தி வச்சுப்போட்லாமுங்” கைகள் பனை ஓலையைப் பின்னிக் கொண்டிருக்க வாய் கேலி பேசியது ஒரு பெண்ணுக்கு.

“அது சரி. நீ இங்க பஸ்ஸை நிறுத்திப் போடுவ. ஈரோட்ல லாரியை நிறுத்துறது யாரு?” திண்ணையில் ஒரு ஓரமாக துண்டைப் போட்டு அதன் மீது உட்கார்ந்துகொண்டார்.

வேலை செய்து கொண்டிருந்த பெண்களுடன் வாயடித்துக் கொண்டே அவர்களுக்குக் களைப்புத் தெரியாமல் பார்த்துக் கொண்டார். சரியாக ஆறு முப்பதுக்கு எல்லா பொம்மைகளையும் பெட்டியில் போட்டு டேப் ஒட்டி மந்தைக்குக் கொண்டு வந்து அடுக்கி வைத்து விட்டார்கள். நமச்சிவாயம் வேட்டியை விலக்கு டவுசர் பைக்குள் கை விட்டு பணத்தை எடுத்து ஆறு தடவை எண்ணிவிட்டு அம்பிகாவிடம் நீட்டினார்.

“அடுத்த வாரம் இதே நாள் வந்துருவனுங். அடுத்த வாரத்துல இருந்து அம்பது உருப்படி கூடுதலா செய்யச் சொல்லியிருக்காங் கம்பெனியில. அஞ்சு ரூவா கூடக் குடுக்குறதா சொல்லியிருக்காங். சரிங்ளா?”

ஒரு விநாடி யோசித்துவிட்டு, “சரிங். புள்ளைங்ககிட்ட சொல்லிர்றனுங்” பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு ஜாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.

டீக்கடையில் ஒரு டீயும் இரண்டு இட்லி சாம்பாரும் சாப்பிட்டு விட்டு ஏழு மணி பஸ்ஸின் கூரையில் பெட்டிகளை ஏற்றிவிட்டு கடைசி சீட்டில் உட்கார்ந்து பெருமூச்சு ஒன்றை வெளிப்படுத்தினார்.

**************************************
பஸ் ஈரோடு பஸ் ஸ்டேண்டுக்குள் நுழைந்தது. படியில் நின்று கொண்டே ராசுவைத் தேடியது நமச்சிவாயத்தின் கண்கள். ஓரமாக நின்று பீடி வலித்துக் கொண்டிருந்தவன் இவர் தலையைப் பார்த்ததும் பீடியைப் போட்டுவிட்டு ஓடி வந்தான். பஸ் ஓரம் கட்டி நின்றதும் விறுவிறுவென்று மேலே ஏறி பெட்டிகளைத் தூக்கி வந்து கீழே அடுக்கினான்.

“நாம்போய், என்ற மூணுசக்கர வண்டிய எடுத்துட்டு வந்துர்றனுங்ணா”

“ராசு, காலையில் உங்கிட்ட ஒரு பையக் குடுத்தனே? பத்தரமா வெச்சிருக்கிறயா??”

“ஆமாங்ணா. எங்கிட்ட பத்தரமாத்தானுங் இருக்குது!”

“அத மொதல்ல எடுத்தாந்துரு. அப்புறமாட்டு போய் உன்ற வண்டியக் கொண்டு வரலாம்.”

“சரிங்” ஓடிப் போய் பஸ் ஸ்டாண்ட் மூலையில் இருந்த டீக்கடையில் கொடுத்து வைத்திருந்த பையை வாங்கிக் கொண்டுவந்து நமச்சிவாயத்தின் கையில் கொடுத்தான். ஆலுக்காஸ் ஜுவல்லர்ஸ் என்று எழுதியிருந்த அந்தப் பையின் ஜிப்பைத் திறந்து எல்லாம் சரியாய் இருப்பதைப் பார்த்து ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

“என்னாதா என்ற உடம்பு கணக்கம்பாளையத்துல இருந்தாலும் மனசெல்லாம் இந்தப் பையிலதா இருந்துச்சி. கைல வாங்கிப் பாத்தபிற்பாடுதேன் உசுரே வந்திருக்கு. சரி சரி ஓடிப் போய் உன்ற வண்டிய எடுத்தாந்துரு போ”

ட்ரை சைக்கிளில் பெட்டிகளை அடுக்கி, பக்கத்திலேயே அவரும் காலைத் தொங்கப் போட்டு உட்கார்ந்து கொண்டார். ராசு சட்டையக் கழட்டிவிட்டு பனியனோடு சைக்கிளை மிதித்தான். சி.என்.காலேஜ் பக்கத்திலிருக்கும் லாரி ஆஃபிஸில் கொண்டு சேர்க்கும்போது மணி 9:00ஆகியிருந்தது. டவுசர் பைக்குள் கையை விட்டு பணத்தை எடுத்து ராசுவுக்குக் கொடுத்து அனுப்பினார். லாரி ஆஃபிஸில் ஃபில்லப் செய்ய வேண்டிய பேப்பரை ஃபில்லப் செய்து ரசீதை வாங்கிக் கொண்டு செல்ஃபோனில் கம்பெனி ஆளை அழைத்து ரசீது நம்பரைக் கொடுத்தார். பக்கத்து ஜெராக்ஸ் கடையில் ரசீதை மூன்று காப்பி எடுத்துக் கொண்டு சென்னை ஆஃபிஸ்க்கு ஒரு காப்பியை அதே ஜெராக்ஸ் கடையில் இருந்த புரஃபெஷனல் கொரியர்ஸில் கொரியர் செய்தார்.

பையைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு நடந்தே சத்தி ரோட்டில் இருந்த ரோட்டுக் கடையில் நான்கு தோசை ரெண்டு ஆஃப் பாயில் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் ஒன்றை வெளிப்படுத்திவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

வழக்கமாகப் போகும் பாதையில் இருந்த பொட்டல் வெளி இன்று இருட்டாக இருந்தது. எப்போது ஒரே ஒரு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்கும் அந்தப் பொட்டல் இருட்டாக இருக்கவும் ஒரு விநாடி தயங்கினார். டார்ச் இருந்த செல்ஃபோனை மகளிடம் கொடுத்துவிட்டு இந்த செல்ஃபோனை மாற்றியதற்கு நொந்து கொண்டார். செல்ஃபோனை ஆன் செய்து அந்த வெளிச்சத்தில் குத்து மதிப்பாக பாதையை கணித்துக் கொண்டு நடந்தார். பின்னால் ஏதோ சத்தம் கேட்க திரும்பி செல்ஃபோனை நீட்டிப் பார்த்தார். எதுவும் தெரியவில்லை. மனதில் லேசாக பயம் வந்தது. தூரத்தில் வீடுகளில் வெளிச்சம் தெரிவதைப் பார்த்துக் கொண்டே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடையைத் தொடர்ந்தார்.

அவர் செல்ஃபோன் “கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை, கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை?” என்று ஒலிக்கத் தொடங்கியது. சட்டைப் பையில் இருந்து எடுத்து காதைக் கொடுத்து “அலோ” என்றார். அடுத்த விநாடி அவரது கழுத்தில் அந்த அரிவாள் இறங்கியது.