Saturday, September 8, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 14


பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 
பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10
பகுதி-11 பகுதி-12 பகுதி - 13


“என்னாச்சி மாலா, குரல் ஒரு மாதிரி டல்லா இருக்கிற மாதிரி இருக்கு? எதுவும் பிரச்சனையா?”

“ஆமா தேவா. பெரிய பிரச்சனை”

எனக்கு வயிற்றைக் கலக்கியது. ஏதாவது ஒன்று என்றால் உடனே இந்தியாவுக்குப் போக முடியுமா? தங்கைக்கு இப்போதுதான் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். “என்ன சொல்ற மாலா?”

“தேவா. என்கிட்ட ரெண்டு கெட்ட செய்தி, ஒரு நல்ல செய்தி இருக்கு. எதை முதல்ல சொல்ல?”

“கெட்ட செய்தியையே சொல்லு. நல்ல செய்தி கடைசியில ஆறுதலா இருக்குமே”

“என்னை இந்த ப்ராஜக்ட்ல இருந்து ரிலீவ் பண்றாங்க. அடுத்த ப்ராஜக்ட் பெங்களூர்ல இல்லை”

“அடப்பாவிகளா? ஆன்சைட்ல இருந்தா எதுவுமே என் கிட்ட சொல்லமாட்டீங்களா? ஏன் இப்பிடி? அடுத்த ப்ராஜக்ட் எங்க? மாட்யூல் லீடராவா? நான் திரும்ப இந்தியா வரும்போது நீயும் பெங்களூருக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்க முடியுமா?”

“இரு இரு. ஒவ்வொரு கேள்வியா கேளு. இப்பிடி மொத்தமா கேட்டா என்னால பதில் சொல்ல முடியாது”

“சரி அடுத்த ப்ராஜக்ட் எங்க?”

“அதுதான சந்தோஷமான நியூஸ். அதை இப்பவே சொல்லிடவா?”

ஆஹா. இவளும் அமெரிக்கா வரப் போகிறாள் போல. இதைச் சொல்ல ஏன் இத்தனை கெடுபிடி போடுகிறாள்? என்னுடன் விளையாடுவதே இவளுக்கு வழக்கமாகப் போய்விட்டது. “சொல்லுடி. யு.எஸ்ல எங்க வரபோற?”

“அடப் பரவாயில்லையே. கெஸ் பண்ணிட்டியே. அல்பனி. கேட்டு வாங்கியிருக்கேன் தெரியுமா? ஜே.எஃப்.கே வழியாத்தான் வரப் போறேன்”

“ஐ. சூப்பர். வீக் எண்ட் வீக் எண்ட் மீட் பண்ணலாம். எவ்வளவு நாள்? இங்க லீட் பொசிஷன் இருக்கா என்ன?”

“இல்லடா. ஆன்சைட் கோஆர்டினேட்டர் தான்”

“ஏன்ப்பா டிமோட் பண்ணிக்கிட்ட? கெரியர்ல விளையாடலாமா? அடுத்து ப்ராஜக்ட் லீட் பொசிஷன்னா கூட போயிருக்கலாம். இப்பிடி செஞ்சது தப்பு. எனக்குப் பிடிக்கலை”

“அடி செருப்பால நாயே. நானே உன் கூட இருக்கலாமேன்னு எல்லா ரிசோர்ஸ் மேனேஜர்கிட்டயும் கால்ல விழாத குறையா கெஞ்சிக் கூத்தாடி இந்த பொசிசன் வாங்கியிருக்கேன். இதுல நீ வந்து குறை கண்டுபிடிக்கிறியா? உனக்குப் பிடிக்கலைன்னா போ, நான் வரலை” ஃபோனை வைத்துவிட்டாள்.

மறுபடியும் அழைத்தேன். எடுக்கவில்லை. மூன்று முறை அழைத்த பின் எடுத்தாள். “ஏய் சாரி மாலா. கோவிச்சிக்காத. தப்புதான் சொன்னது. நீ இங்க வர்றதுதான் நமக்கும் நல்லது”

“புரிஞ்சா சரி. இன்னும் ரெண்டு வாரத்துல கிளம்புறேன். விசா ஸ்டாம்பிங் மண்டே போறேன்”

“நல்லது. நான் ஜே.எஃப்.கே வந்துடுறேன். அல்பனி போய் உனக்கு இப்பவே வீடு பார்த்து வைக்கணுமா?”

“அதெல்லாம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து போய் பார்த்துக்கலாம். நீ ஒண்ணும் முந்திரிக்கொட்டையாட்டம் எதையாவது செஞ்சி வைக்க வேண்டாம்.”

“மாலா. இன்னொன்னு யோசிச்சேன். இப்ப நீ ஆன்சைட் வர்றதும் நமக்கு ஒரு விதத்துல நல்லதுதான்.”

“என்ன? எதுவும் விவகாரமா யோசிக்கிறீயா?”

“இல்லடி. நீ இங்க வந்துட்டா உங்க வீட்ல இப்போதைக்கு மாப்பிள்ளை தேட மாட்டாங்கள்ல?”

“எப்பிடிடா? எப்பவுமே இப்பிடித்தானா இல்ல இப்பிடித்தான் எப்பவுமேவா?”

“எது?”

“உன் அறிவு”

“எப்பவுமே இப்பிடித்தான்”

“லூசு. நான் சொன்ன ரெண்டாவது கெட்ட செய்தி இதுதான்”

“என்னது?”

“நான் அமெரிக்கா போகப் போறேன்னு சொன்னதுமே எங்க வீட்ல ஒரே குஷி. என்னன்னு கேட்டா, எனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்காங்களாம். டாலஸ்ல இருக்காராம். ரெண்டு குடும்பமும் மீட் பண்ணி பேசிட்டாங்களாம். குடும்ப அளவுல பிடிச்சிருக்காம். இப்ப மாப்பிள்ளையும் நானும் மீட் பண்ண வேண்டியதுதான் பாக்கியாம். அவருக்கு லீவ் கிடைக்கலையாம். ஆறு மாசத்துக்கு வரமுடியாது போல. இப்ப நான் அங்க வர்றதால நானும் அவரும் மீட் பண்றது ஈஸியாகிடும். ரெண்டு பேருக்கும் பிடிச்சிப் போச்சின்னா, ஆறு மாசமோ ஒரு வருசமோ கழிச்சி ரெண்டு பேரும் இந்தியாவுக்கு வர்றப்போ கல்யாணம் வச்சிக்கலாம்னு பேசியிருக்காங்களாம்”

தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுக்கொண்டே வந்தாள். “என்ன மாலா. நீ என்ன சொன்ன?”

“நான் என்ன சொல்ல? சரின்னு சொல்லிட்டேன்”

“அடப்பாவி. அப்ப அந்தாளை மீட் பண்ணப் போறியா?”

“அப்புறம். எங்கப்பா சொல்றதை மீற முடியுமா?”

“என்னடி இப்பிடி சொல்ற? அப்ப என் கதி?”

“அதோ கதி” சொல்லிவிட்டு கலகலவென சிரித்தாள். “உன் மூஞ்சி எப்பிடிப் போகும்னு என்னால இங்கருந்தே புரிஞ்சிக்க முடியுது?” விடாமல் சிரித்தாள். எனக்கு எரிச்சலாக வந்தது? என்ன ஜென்மம் இவள். விளையாடுகிறாளா? இல்லை சீரியஸாகத்தான் பேசுகிறாளா? ஒன்றும் புரியவில்லை.

பதில் சொல்லாமல் இருந்தேன்.

“என்னடா பேச்சையே காணோம்?”

“...”

“டேய் பேசுடா”

“என்ன மாலா சொல்லச் சொல்ற? நீ சீரியஸா பேசுறியா காமடி பண்றியான்னே தெரிய மாட்டேங்குது”

“ம்ம்.. ஏண்டா? அவ்வளவு ஈஸியா என்கிட்ட இருந்து உன்னைய தப்பிச்சிப் போக விட்டுருவேனா நான்? நான் அங்க வர்றேன். வந்துட்டு என்ன செய்யலாம்னு பேசுவோம். சரியா?”

“யப்பா கொஞ்ச நேரத்துல கதி கலங்க வச்சிட்டியே”

அதன்பிறகு வழக்கமான காதலர்கள் போல ஸ்வீட் நத்திங்க்ஸ் ஒரு மணி நேரம் பேசிவிட்டு ஃபோனை வைத்தேன். மிகவும் சந்தோசமாக இருந்தது. அடுத்த இரண்டு வாரங்கள் வேகமாக ஓடிப் போனது.

ஜே.எஃப்.கேவில் வந்து இறங்கியவளை வரவேற்று நேராக என் அறைக்கு அழைத்துப் போனேன். குளித்து, சாப்பிட்டுவிட்டு பயண அசதியில் தூங்கிப் போனாள். காலையில் எழுந்ததும் ப்ரேக்ஃபாஸ்ட் முடித்துவிட்டு ரெண்டல் காரில் அல்பனி சென்றோம். அங்கே அவளுக்கு ஏற்கனவே புக் ஆகியிருந்த ஹோட்டலில் செக் இன் செய்துவிட்டு, நான் தொலைபேசி வைத்திருந்த மூன்று அப்பார்ட்மெண்ட்களைப் போய் பார்த்துவிட்டு வந்தோம். மூன்றும் ஃபர்னிஷ்ட் அப்பார்ட்மெண்ட்ஸ். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் பிடித்திருந்தது. கடைசியாகப் பார்த்த சிங்கிள் பெட்ரூம் மாலாவுக்கு மிகவும் பிடிக்கவே பேப்பர் ஒர்க், அட்வான்ஸ் செய்துவிட்டு வந்தோம். இன்னும் 3 நாட்களில் சாவி தருவதாகச் சொன்னார்கள்.

அன்று இரவே கிளம்புவதாகச் சொன்ன என்னை காலையில் போகச் சொல்லி இருக்க வைத்தாள். அப்போதுதான் அவளைச் சந்திக்கப் போகும் அந்த மாப்பிள்ளையின் நினைவு வந்தது.

“ஏய் மாலா? அந்த டாலஸ் மாப்பிள்ளை யாரு? நாம எப்பிடி இதை சமாளிக்கப் போறோம்னு எல்லாம் நீ சொல்லவே இல்லையே?” ஹோட்டலின் வெளியே சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டே கேட்டேன்.

“லூசு, நீயா எதையும் செய்ய மாட்டியா? எப்பிடி சமாளிக்கப் போறோம்னு நீ யோசிக்கவே இல்லையா?” செப்டம்பரின் குளிர் காதுகளைத் தீண்டிவிடாமலிருக்க ஸ்கார்ஃபை சுற்றிக் கொண்டே கேட்டாள்.

“யோசிச்சேன். ஆனா அது சரியா வருமான்னு தெரியலை”

“உன் ஐடியா என்ன சொல்லு?”

“அவர் யாருன்னு சொன்னா, நான் கிளம்பி டாலஸ் போய் அவரைப் பார்த்து, அவர்கிட்ட நம்ம லவ்வைச் சொல்லி அவரையே வித்ட்ரா செய்ய வச்சிரலாம்னு நினைக்கிறேன்”

“ம்ம்.. நானும் நீ நினைச்சதைத்தான் நினைச்சேன். ஆனா எதுக்கு நாம டாலஸ் போகணும். அவர் எப்பிடியும் என்னைப் பார்க்க இங்க வருவார்ல. அப்ப ரெண்டு பேரும் அவரைப் பாத்து சொல்லிடலாம்”

“அதுவும் சரிதான். ஆமா அந்தாள் பேரென்னன்னு சொல்லவே இல்லையே?”

“அவர் பேரு சுதாகர். எம்.பி.ஏ படிச்சிருக்கார். ஏதோ ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனியில மேனேஜர். ஆறு டிஜிட்ல சம்பளம். எனக்கே அந்தாளைக் கட்டிக்கலாமான்னு ஒரு சபலம் வந்திருச்சி”

“வரும் வரும். அப்புறம் டால்ஸ்க்கு வந்து வெட்டுவேன். எங்க பரம்பரை எப்பிடின்னு தெரியும்ல?”

“தோடா” என்று சிரித்துக்கொண்டே என் வயிற்றில் குத்தினாள்.

****************************************************************************
சுதாகர், (ஸிட் என்றுதான் அழைக்கவேண்டுமாம்) தேங்க்ஸ் கிவிங் வீக்கெண்டுக்கு முன்னால் அல்பெனிக்கு வர முடியாது, லீவ் கிடைக்காது என்று மெயில் அனுப்பியிருந்தான். இரண்டு முறை மாலாவிடம் ஃபோன் நம்பர் கேட்டும், நேரில் பேசிய பிறகு ஃபோன் நம்பர் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ளலாம் என்று மெயிலில் தெரிவித்துவிட்டாள். நான் வார நாட்களில் நியூ யார்க்கிலும், வார இறுதிகளில் அல்பனியிலும் என செலவழித்துக் கொண்டிருந்தேன்.

தேங்க்ஸ் கிவிங் வீக்கெண்டும் வந்தது, (நவம்பர் மாத கடைசி வார இறுதி). புதன் காலையே அல்பனி வந்து சேர்ந்துவிட்டேன். மாலையில் டிராஃபிக் அதிகமிருக்கும் என்பதால். வியாழன் மாலை வருகிறான். ஏர்ப்போர்ட் அருகிலிருக்கும் ஹில்டனில் தங்குகிறான். டின்னருக்கு அவனை அங்கேயே மீட் செய்வதாகத் திட்டம். நாளை இதே நேரம் அவனுடன் சந்திப்பு நிகழ்ந்துகொண்டிருக்கும். அந்த நேரம் நெருங்க நெருங்க டென்ஷனாக இருந்தது. மாலாவும் நெர்வஸாகவே இருந்தாள்.

வியாழன் மாலை அவன் அல்பனியில் இறங்கியதும் மெயில் செய்திருந்தான். ஏழுமணிக்கு இரண்டு பேரும் காரில் ஏறி ஹில்டன் சென்றோம். எங்களுக்காக, இல்லை, இல்லை, மாலாவுக்காக ரிஷப்ஷனிலேயே காத்திருந்தான். டிப்பிக்கல் அமெரிக்க இளைஞனாக மாறிவிட்டதாக நினைக்கும் இந்திய இளைஞர்களின் தோற்றம், அவனுக்கு. ALL MY EX'S LIVE IN TEXAS என்று எழுதிய பனியன் அணிந்திருந்தான். சாயம் போன ஜீன்ஸ். கையில் ஐஃபோன். தலையை சைடில் வெட்டி உச்சந்த் தலையில் கோபுரம் போல சீவி விட்டிருந்தான். ஜெல்லின் உபயத்தால் அப்படியே நின்றது. தாடையில் குறுந்தாடி. குறுந்தாடி முடியும் இடத்திலிருந்து ஒரு மெல்லிய மயிற்கோடு கிளம்பி கிருதாவில் முடிந்தது. கட்டை விரலாலும் நடுவிரலாலும் மூக்கை இழுத்து இழுத்து விடுவதை மேனரிசமாக வைத்திருந்தான்.

ஃபோட்டோ பார்த்திருப்பான் போல. மாலாவை அடையாளம் கண்டுகொண்டான். மாலாவை எதிர்பார்த்துக் காத்திருந்தவன், என்னையும் அவளுடன் பார்த்த அதிர்ச்சி அவன் முகத்தில் எதிரொளித்தது.

“ஹாய் மாலா” என்று எழுந்து வந்து கை கொடுத்தான். அதை வாங்கிக் குலுக்கிய மாலாவிடம், இது யார் என்பது போல என்னைப் பார்த்தான்.

“திஸ் இஸ் தேவா. மை பாய் ஃப்ரண்ட்” என்றாள். அவன் முகம் சத்தியமாக மாறிப்போனது.

“ஹலோ” என்று கையை நீட்டினேன். வேண்டாவெறுப்பாக குலுக்கினான்.

“பாய் ஃப்ரண்ட்னா?”

“யெஸ். நீங்க நினைக்கிறதுதான் சுதாகர்... சாரி சிட். நானும் தேவாவும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்”

“அப்புறம் ஏன் என்னை இவ்வளவு தூரம் டைமையும் மணியையும் ஸ்பெண்ட் பண்ணி வர வச்சீங்க? ஒரு ஈமெயில்லயே சொல்லியிருக்கலாமே?”

“சொல்லியிருக்கலாம் தான் சிட். உங்களை அலைய வச்சதுக்கு என் மனசார மன்னிப்புக் கேட்டுக்கறேன். ஒரு வேளை நான் ஈமெயில்லயே சொல்லியிருந்தா நீங்க உடனே கோவப்பட்டு எங்க வீட்ல விசயத்தை சொல்லிருவீங்க. அது எந்த மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்னு தெரியலை. நாங்களா எங்க விசயத்தை எங்க வீட்டுல இருக்கிறவங்க முன்னாடி எடுத்து வைக்கணும்னு இருக்கோம். அதான் நேர்ல பார்த்து நிதானமா சொல்லலாம்னு...”

“புல் ஷிட். உங்க வாழ்க்கைக்காக என் நேரத்தோடயும் பணத்தோடயும் விளையாடுவீங்களா? What the fuck are you thinking about me? An asshole who would dance to your tunes? Sorry Mala, I aint that kind”

“மிஸ்டர் சிட். ப்ளீஸ் அண்டர்ஸ்டேண்ட். எங்களால உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டம் அண்ட் நஷ்டம் எனக்குப் புரியுது. இஃப் யு டோண்ட் மிஸ்டேக் மி, மானிட்டரி லாஸ் எவ்வளவுனாலும் காம்பன்ஸேட் பண்ண தயாரா இருக்கேன். நீங்க தயவு செஞ்சி எங்க நிலமையைப் புரிஞ்சிக்கோங்க. இங்க மாதிரி இல்ல இந்தியாவுல. இன்னமும் ஜாதி, மதம், அந்தஸ்து இதையெல்லாம் தலையில தூக்கி வச்சி ஆடிட்டுத்தான் இருக்காங்க. எங்க சிச்சுவேஷன் முள்ளு மேல விழுந்த சேலை மாதிரி. நிதானமாத்தான் அப்ரோச் பண்ணனும். அவசரப்பட்டுட்டோம்னா அப்புறம் முள்ளும் உடைஞ்சிரும், சேலையும் கிளிஞ்சிரும். அதனால தான் நேர்ல பாத்துப் பேசிட்டு இருக்கோம்”

உடன்படாதவன் போலவோ இல்லை மறுத்துப் பேச வார்த்தை இல்லாதவன் போலவோ தலையைக் குலுக்கிக் கொண்டான்.

“Ok guys. I give up. எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாடிட்டுப் போறேன். என்னோட ஃப்ரண்ட்ஸ் இந்த வீக்கெண்ட் வேகஸ் போலாம்னு சொன்னாங்க. நான் தான் இவளைப் பாக்கணும்னு இங்க ஓடி வந்தேன். I'm going to join my friend in Vegas. Will send you all the receipts and I expect you to compensate me.”

“தேங்க்யூ சிட். தென், இந்த விசயத்தை வீட்ல சொல்லிட வேண்டாம். ரெண்டு பேரும் பேசிப் பார்த்தோம். ஒத்து வராது போலன்னு மட்டும் வீட்ல சொல்லிருங்க. நானும் அதையே சொல்லிடுறேன்.” மாலா சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்த்தாள்.

தாடையத் தடவிய சிட், “ஓக்கேய். I ain't losing nothing” என்றான். இரவு உணவை அவனுடன் அருந்திவிட்டு பில்லும் கட்டிவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம்.

“இவ்வளவு ஈஸியா முடியும்னு நினைக்கலை. ஆனா காசுலையே குறியா இருக்கான் பாரு” மாலாவிடம் அங்கலாய்த்தேன்.

“விடு தேவா. எம்.பி.ஏ ஃபைனான்ஸ் படிச்சவன்ல. அதான் ஃபைனான்ஸ்ல குறியா இருக்கான். எவ்வளவு ஆனாலும் குடுத்துடலாம்ல. உன்கிட்ட சேவிங்க்ஸ் இருக்கா?”

“இருக்கு மாலா. டோண்ட் ஒர்ரி”

இரவு நெடுநேரம் எங்களின் எதிர்பார்ப்பையும் அவன் ரியாக்‌ஷனையும் பற்றிப் பேசிக் கொண்டே தூங்கிப் போனோம்.

அடுத்த நாள் ப்ளாக் ஃப்ரைடே. ஷாப்பிங்குக்குப் பெயர் போன தினம். முதல் நாள் இரவிலிருந்தே கடை வாசலில் வரிசை கட்டி நிற்பார்கள். எலெக்ட்ரானிக் சாதனங்கள் கம்ப்யூட்டரிலிருந்து கேமிரா வரை  (இந்த வருடத்தோடு ஒழித்துக் கட்டப் போகும் மாடல்களை) எல்லாம் சல்லிசாக சேல் போட்டிருப்பார்கள். அதை வாங்கத்தான் வரிசை. நானும் மாலாவும் காலை மெதுவாக எழுந்து ஷாப்பிங் செய்யப் போனோம். சேல் ஐட்டம் எதுவும் இல்லை. சுற்றிப் பார்த்ததோடு திரும்பினோம். ஞாயிறு காலையே - ட்ராஃபிக் தவிர்க்க - கிளம்பி நியூயார்க் வந்து சேர்ந்தேன்.

அன்று மாலை மாலா ஃபோன் செய்தாள்.

“என்னாச்சி மாலா?”

“அந்தப் படுபாவி கவுத்துட்டான் தேவா”

(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே

Monday, September 3, 2012

சொல்கலை - 2

கடந்த சொல்கலைக்கு அமோக ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி.

அதே போல ஒரு முயற்சி இது. இங்கே கொடுக்கப்பட்ட அத்தனை பெயர்களும் சுதந்திரப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் ஈடுபட்டவர்கள். இறுதி விடையும் அதையொட்டியதே.

இது போன்ற சொல்கலையை நீங்களும் உருவாக்க -> http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp







1.
2.
3.
4.
5.
6.


நள்ளிரவு

போன சொல்கலைப் போட்டியின் விடைகள்
1. திருக்குறள்
2. பரிபாடல்
3. முதுமொழிக் காஞ்சி
4. களவழி நாற்பது
5. திரிகடுகம்
6. நான்மணிக் கடிகை
7. சிறுபஞ்ச மூலம்

இறுதி விடை: கற்க கசடற (சந்திப் பிழையைச் சுட்டிக் காட்டிய பினாத்தலாருக்கு நன்றி)

விடை சொன்ன நாடோடி இலக்கியன், ரதி, வானம்பாடிகள், இளங்கோவன், மாதவ், கார்மேகராஜா, யோசிப்பவர் ஆகியோருக்கு வாழ்த்துகள். 

Saturday, September 1, 2012

சில்வியா - 2


There's something at the end of the trail that detectives are all looking for.



அருண் அதிர்ந்து சௌந்தரைப் பார்த்தான். “என்ன சௌந்தர். நீயும் சூசைட்னு சொல்ற? இது மர்டர். உங்க பாஷையில ஹோமிசைட்”

ஷெரீஃபும், சௌந்தரும் அதே அதிர்ச்சியை முகத்தில் காட்டினார்கள். “ஹோமிசைடா?? எப்பிடி மாமா சொல்ற?” என்றான். 

அருண், ‘இதுகூடத் தெரியலையா?’ என்பது போலப் பார்த்தான். “இவ லெஃப்ட் ஹேண்டட். கம்ப்யூட்டர் பக்கத்துல மவுஸ் எந்த சைட் இருக்குதுன்னு பாரு. மௌஸ் பட்டன் ஓரியண்டேஷன் கூட மாறியிருக்கும்னு நினைக்கிறேன்” மவுஸை க்ளிக்கி எம்.எஸ் வேர்ட் விண்டோவை மினிமைஸ் செய்தான். “ஸீ” என்று மற்ற இருவரையும் பெருமையாகப் பார்த்தான். “அது மட்டுமில்லை. டைனிங் டேபிள் மேல பாருங்க. காய்கறிகள் வெட்ட ஆரம்பிச்சிருக்கா. அங்கயும் கத்தி லெஃப்ட் சைட்ல தான் இருக்கு. தற்கொலை எண்ணம் வந்தவ எதுக்கு சமைக்க ஆரம்பிக்கணும்?”

“குட் பாயிண்ட் அருண்” ஷெரீஃப் தூரத்தில் நின்றிருந்த சி.எஸ்.ஐ டீமைப் பார்த்து, “டீம். திஸ் இஸ் எ ஹோமிசைட். எத்தனை ஃபிங்கர் ப்ரிண்ட், டி.என்.ஏ கிடைக்குதோ எடுத்து வைங்க” 

“சௌந்தர், எதுவும் கைகலப்பு நடந்த மாதிரி தெரியலை. சோ, கொலைகாரன் சில்வியாவுக்கு ஏற்கனவே தெரிஞ்சவனா இருக்கணும். அவளோட எக்ஸ் பாய் ஃப்ரண்ட் எங்கன்னு பாருங்க. அவனாக்கூட இருக்கலாம்”

“அவன் படம் ஏதாவது வேணுமே..” என சௌந்தர் சொல்ல, “இதோ” என கம்ப்யூட்டரின் பேக்ரண்ட் பிக்சரில் சில்வியாவை அணைத்தபடி நின்றிருந்தவனைக் காட்டினான் அருண்.

“குட். டேக் எ காப்பி சார்ஜண்ட். ஷெரீஃப் திஸ் இஸ் மை ஹெட் ஏக் நவ். நான் பார்த்துக்கறேன். எனக்கு ஒரு உதவி மட்டும் வேணும்” 

“என்ன உதவி சௌ?”

“என் கசினை வீட்டுல ட்ராப் பண்ணிடுங்க. எனக்கு ஆஃபிஸ் போய் பேப்பர் ஒர்க் பண்ணனும்” 

“வித் ப்ளஷர்” 

சார்ஜண்ட் ஒருவரோடு மார்க்ட் போலீஸ் காரில் வந்து அத்தையின் வீட்டில் இறங்கினான். வெளியே செல்லும் உடை அணிந்து கொண்டு சௌமியா காத்திருந்தாள். 

“காலையிலயே எங்கடா போன? உன்னை இன்னைக்கு நயகரா கூட்டிட்டுப் போலாம்னு இருந்தேன். நீ எங்கயோ போயிட்ட?” 

“சௌந்தருக்கு ஏதோ ஒரு கேஸ்னு ஃபோன் வந்தது. நானும் கூட வரட்டான்னு கேட்டேன். கூட்டிட்டுப் போயிருந்தான்”

“ஓ.. என்ன கேஸ்?”

“ஒரு கொலை. எல்லாரும் சூசைட்னு நினைச்சிட்டு இருந்தாங்க. நான் தான் கொலைன்னு கண்டுபிடிச்சேன். இனி சௌந்தர் பாத்துப்பான்”

“அடப்பாவி. அவன் வீக் டேய்ஸ்லயே நேரத்துக்கு வீட்டுக்கே வர மாட்டேங்கிறான்னு அவன் ஒயிஃப் பொலம்பிட்டு இருப்பா. வீக்கெண்டும் அதுவுமா அவனுக்கு வேலை குடுத்துட்டியா?”

“ஏய் நான் என்ன செஞ்சேன்?”

“நீ கொலைன்னு கண்டுபிடிக்கலைன்னா சூசைட்னு கேஸ் முடிச்சிட்டு உன் கூடவே வந்திருப்பான்ல?”

“அதுக்காக ஒரு கொலைகாரனை தப்பிக்க விட முடியுமா?”

“போலீஸ்காரங்ககூட சேரவே கூடாதுப்பா”

இருவரும் கிளம்பி நயகரா வந்தார்கள். அமெரிக்க சுற்றுலாப் பயணிகளின் மெக்கா. திரைப்படங்களிலும் புகைப்படங்களிலும் மட்டுமே பார்த்தது. நேரில் பார்க்கும்போது அதன் பிரம்மாண்டம் அருணை அசத்தியது. இருவரும் பாஞ்சோ போட்டுக்கொண்டு பாதி நனைந்து மெய்ட் ஆஃப் த மிஸ்ட் போட்டில் அருவியின் அருகில் போய் பார்த்துவிட்டு வந்தார்கள். கேவ் ஆஃப் த விண்ட்ஸ் என்று லிஃப்டில் 160 அடிக்குக் கீழே போய் அருவியின் அடியில் இருந்து பார்த்து மகிழ்ந்தார்கள். ஹரிக்கேன் டெக்கில் நின்று அருவியின் இரசலுக்குத் தலையைக் கொடுத்து மகிழ்ந்தான். 

“என்ன அருண். எப்பிடி இருக்கு நேச்சுரல் ஒண்டர் ஆஃப் அமெரிக்கா?”

“எவ்வளவு பெரிய அருவியா இருந்து என்ன புண்ணியம்? உடம்புல எண்ணை தேச்சி மசாஜ் பண்ணிட்டு தலையைக் குடுத்து குளிக்க முடியுதா?”

“ச்சீ. உங்க நாட்டுல குற்றாலம்னு ஒரு ஊர்ல பக்கத்துல நிக்கிறவர் உடம்புல தடவி இருக்கிற எண்ணெய் எல்லாம் நம்ம மேல பட, அரைகுறையா உடம்பை நனைச்சிட்டு வெளிய வந்தோம்னா அடுத்துக் குளிக்க வர்ற ஆள் எண்ணைய நம்ம மேல தடவிட்டுப் போவாரு. அதுல குளிக்கிறது ஒரு குளியல். அது போல இல்லைன்னு வருத்தம் வேறயா? உன்னைய..” என்று அடிக்க ஓடி வந்தாள். 

வெளியே வந்து அடிக்கிற வெயிலில் உடை காயட்டும் என்று இருவரும் கனடிய அருவியின் பக்கமாக நடந்தார்கள். “மணி என்னாச்சி சௌமியா? நான் இன்னமும் யு.எஸ் டைமுக்கு வாட்சை செட் பண்ணலை” 

“2:10. ஏய் நாம இன்னமும் லஞ்ச் சாப்பிடவே இல்லை. வா போலாம்” அங்கே ஒரு ஃபால்ஸ் வியூ ரெஸ்டாரண்டில் பர்கர் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்த போது சௌமியாவின் செல்ஃபோன் ஒலித்தது. எடுத்துப் பேசிவிட்டு அருணிடம் நீட்டினாள். “சௌந்தர். உன்கிட்ட பேசணுமாம்”

“சொல்லுடா சௌந்தர்”

“டேய் மாமா. உன் கெஸ் கரெக்ட். ஜான் ப்ரோடி, சில்வியாவோட எக்ஸ் பாய் ஃப்ரண்ட். பார்ட்டி வீட்டுல இல்லை. அவன் வேலை பார்க்கிற இடத்துலையும் இல்லை. ஃபோனுக்குக் கால் பண்ணா வாய்ஸ் மெயில் போகுது. அவன் தான் கொலை பண்ணிட்டு எஸ்கேப் ஆகிட்டான் போல. அவனைத் தேட ஒரு டீம் உருவாக்கியிருக்கோம். உனக்கு அப்டேட் பண்ணனும்னு தோணிச்சி”

அருணின் முகத்தில் ‘எதுவோ சரியில்லை’ என்பது போல ஒரு உணர்ச்சி. “

“இல்லடா.. கொலை செஞ்சிட்டு தற்கொலை மாதிரி செட் பண்ணினவன், எதுக்கு பயந்து ஓடணும்? தைரியமா அங்கயே தானே இருப்பான்? ஏதோ சரியில்லை. மீடியால கொலைன்னு நியூஸ் குடுத்தாச்சா?”

“இல்லடா. சூசைட்னு தான் குடுத்துருக்கோம். கொலைகாரன் அலர்ட் ஆகிடக்கூடாதுன்னு”

“அப்பிடியே இருக்கட்டும். ஜான் ப்ரோடியைப் பிடிச்சா வேற எதாவது க்ளூஸ் கிடைக்கலாம்”

“ஓக்கே மாமா. உன் ஹெல்ப் இல்லைன்னா சூசைட்னு கேஸ் மூடியிருப்போம். அம்மா சொல்ற மாதிரி நீ பெரிய மூளைக்காரன்தான் மாமா.”

“தேங்க்ஸ்டா. ஃபோனை வச்சிடுறேன், உன் தங்கச்சி முறைக்கிறா.” 

“அவ கிடக்கா. டின்னர் ப்ளான் இருக்குடா. டைமுக்கு வந்துடுங்க”

“ஓக்கேடா” ஃபோனை அணைத்து இரண்டு முறை திருப்பிப் பார்த்துவிட்டு, சௌமியாவிடம் கொடுத்தான். “ஒரு வேளை ஆப்பிள் கேஸ்ல ஜெயிச்சிட்டா, இந்த ஃபோனை எல்லாம் கடையில திருப்பிக் குடுத்துரணும். தெரியுமா??” 

“ஐயோ... திருப்பிக் குடுக்கணுமா?” சேம்சங்க் எஸ்-3ஐ இப்போதே பிடுங்கிவிவார்களோ என்பது போல மார்போடு அணைத்துக் கொண்டாள். 

“ஆமா. ஆப்பிள் ஸ்டோருக்குப் போய் குடுத்துடணும். அதுக்குப் பதிலா ஆப்பிள் ஐஃபோனை டிஸ்கவுண்டட் ப்ரைஸ்ல குடுக்கும் வாங்கிக்கலாம்”

“என்னப்பா சொல்ற? நிஜமாவா?” உண்மையான வெகுளித்தனத்தோடு கேட்டாள். “எனக்கு இந்த ஃபோன் தான் பிடிச்சிருக்கு. நான் திருப்பிக் குடுக்க மாட்டேன்”

“குடுக்காத. மாசா மாசம் பில்லுல ஆப்பிளுக்குக் கொடுக்க வேண்டிய ஃபைனை உன்கிட்ட இருந்தும் பிடிச்சிப்பாங்க”

“கேஸ்ல சேம்சங்க் ஜெயிச்சிட்டா??”

“அவங்க ஜெயிக்கிற பணத்தைப் பிரிச்சி ஃபோன் பில்ல க்ரெடிட் குடுத்துருவாங்க.”

“நிஜமாவா?? அப்ப சேம்சங்க் ஜெயிக்கணும்னு பிரேயர் பண்ணப் போறேன்.” கண்களை மூடிப் பிரார்த்தனை செய்யப் போனவளைப் பார்த்து கேலியாகச் சிரித்தான்.

“ஏய். பொய் தான சொன்ன?”

“யப்பா. உங்கண்ணனை விட பெரிய டிடெக்டிவ் தான் போ”

தட்டில் இருந்த ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸை செல்லக் கோபத்தோடு அருணின் மீது எறிந்தாள். 

அடுத்த இரண்டு நாட்கள் ஜெட் லேக் போக தூங்குவதிலும் லோக்கல் அட்ராக்‌ஷன்ஸைப் பார்ப்பதிலும் கடந்தது. இடையில் சௌந்தர் வீட்டில் க்ரில் செய்து பியரைச் சப்பிக்கொண்டே சாப்பிட்டது ஒரு புது அனுபவமாக இருந்தது. கார் ஓட்டிப் பார்க்கச் சொல்லி சௌமியா விடாமல் நச்சரித்ததால் எடுத்து ஓட்டி ஓரளவுக்குப் பழகிவிட்டான். வலது பக்கம் ஓட்டுவது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் பெரிய பிரச்சனை எதுவும் வரவில்லை. 

அன்று. செவ்வாய்க்கிழமை. ஏதோ வேலை இருக்கிறது என்று சௌமியா பள்ளிக்கூடத்துக்குச் சென்றிருந்தாள். அத்தை பிங்கோ விளையாடப் போயிருந்தாள். பொழுது ஓடாமல் எச்.பி.ஓவில் அன்ஸ்டாப்பபிள் பார்த்துக் கொண்டிருந்த போது ஃபோன் அழைத்தது. டிவியிலே காலர் ஐடி சௌந்தர் சாமிக்கண்ணு என்று பளிச்சிட்டது. எடுத்துப் பேசினான்.

“மாமா. நம்ம கேஸ்ல ஒரு பெரிய ட்விஸ்ட்”

“நம்ம கேஸா????”

“அதான் அந்த சில்வியா கேஸ்”

“புரியுது. என்ன டிவிஸ்ட்?”

“இன்னைக்குக் காலைல ஜென்னிசி ரிவர்ல மீன் பிடிக்கப் போன ரெண்டு பேர் ஒரு டெட் பாடியப் பார்த்து ரிப்போர்ட் பண்ணியிருந்தாங்க”

“டெட் பாடியா? யாரோடது?”

“ஜான் ப்ரோடி”

(தொடரும்)