கோட்டயம்.. அழகான ஊர்.. ஆனால் சுற்றிப் பார்க்கத்தான் நேரமில்லை. இண்டர் யூனிவர்சிட்டி யூத் ஃபெஸ்டிவலுக்காக ஆறு நாள் கோட்டயம் வாசம். தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களிலிருந்தும் மாணவச் செல்வங்கள் வந்து குவிந்திருந்தனர். “எவிட இருந்நா வருந்நது” என்று மலையாளிகளும், “எல்லிந்த பர்த்தீரா?” என்று கன்னடர்களும், “எக்கடனிஞ்சி வஸ்துன்னாரு” என்று தெலுங்கர்களும், “வேர் ஆர் யூ ஃப்ரம்யா?” என்று தமிழர்களும் அறிமுகம் செய்து கொண்டிருந்தனர்.
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நான் உண்மையில் நாடக நடிகன். ஆனால் இந்த முறை one act playஐயும் Skitஐயும் ஃபாத்திமா கல்லூரி மகளிர் அடித்துக் கொண்டு போய்விட்டதாலும், மிச்சம் இருக்கும் ஒரே நாடக வடிவான mimeஇல் பங்கு பெற ஏற்கனவே நடிப்பு மட்டுமே தெரிந்த ஆறு பேர் இருந்ததாலும் எனது இன்னொரு அம்சமான வினாடிவினாவில் பங்கு பெற வந்திருந்தேன்.
வந்த இடத்தில் என் நாடக அனுபவத்தை ஃபாத்திமா கல்லூரி மாணவிகளிடம் அள்ளி விட, பொறாமைப் பட்ட கோச் என்னைப் பயிற்சி அரங்கிலிருந்து வெளியேற்றி விட்டார்.
என்னடா செய்யலாம் என்று அவரிடம் அடித்து வைத்திருந்த வில்ஸ் ஃபில்டரை பற்ற வைத்துக் கொண்டே யோசித்த போது ராஜா அண்ணன் அந்தப் பக்கம் வந்தார். என் கையிலிருந்த வில்ஸ் பாக்கெட்டில் ஒன்றை எடுத்து பத்த வைத்துக் கொண்டு, “அந்த முசுடு உள்ள இருக்கானா?”
“இருக்கார்ணே.. என்ன மேட்டர்?”
“தந்தி வந்துச்சி?”
“தந்தியா?”
“ஆமாப்பா. பயப்புடுறா மாதிரி ஒன்னுமில்லை. மெட்றாஸ்ல ஒரு இண்டர்வியூவாம். நாளைக்கிக் காலையில”
“காம்பெடிஷனை விட்டுட்டு போறீங்களா?” ராஜா அண்ணன் நல்ல ஓவியர். ஓவியம், ரங்கோலி சம்மந்தப்பட்ட அத்தனை போட்டிகளிலும் தவறாது கலந்து கொண்டு பரிசுகள் அள்ளி வருபவர். எங்கள் பல்கலைக்கழகத்துக்குப் பரிசு என்று எதாவது வருமென்றால் அதை இவர் வாங்கித் தந்தால்தான் உண்டு. இவரும் போய்விட்டால் என்ன ஆவது?
“நாளைக்கு போஸ்டர் மேக்கிங் இருக்கு. நாளைக் கழிச்சி எதுவும் இல்லை. அதுக்கடுத்த நாள் திரும்பிடலாம்னு நினைக்கிறேன். முசுடுக்கிட்ட சொல்லணும். போஸ்டர் மேக்கிங்குக்கு மட்டும் யாரையாவதுப் பிடிச்சிப் போட்டுட்டாப் போதும்”
யோசித்தேன். இயக்க வேலைகளுக்குப் போஸ்டர் ஒட்டியதைத் தவிர போஸ்டருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இருந்தாலும், “நான் வேணும்னா பார்டிசிபேட் பண்றேண்ணே”
சிகரட்டை வாயில் வைத்துக் கொண்டு இருகைகளாலும் என்னை அணைக்காமல் அணைத்துக் கொண்டு, “ரொம்ப தேங்க்ஸ்டா. என் கிட்டையே உனக்குக்குடுத்துட்டுப்போறேன்”
போகும் அவசரத்திலும் ஆடு சிக்கிய சந்தோசத்திலும் எனக்கு வரையத் தெரியுமா என்பதைக் கேட்கவேண்டும் என்றே அவருக்குத் தோன்றவில்லை. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.
சிகரெட்டை முடித்து விட்டு உள்ளே போய்விட்டு வந்தார். கூடவே முசுடும். “என்னப்பா.. ராஜாவுக்கு பதிலா நீ பார்டிசிபேட் பண்றியா?”
“பண்றேன் சார்”
“வரையத் தெரியுமா?” இப்பயாவது கேட்டாங்களே என்று நினைத்துக் கொண்டு, “அதெல்லாம் அதகளம் பண்ணிடுவேன் சார்.”
“என்னவோ சொல்ற. நான் ரெக்கார்ட்ஸ் அட்ஜஸ்ட் பண்ணிடுறேன். ராஜா, நீ வெல்கம் கமிட்டிக்கிட்ட சொல்லிட்டுப் போயிடு”
“அவங்களுக்கு ஏற்கனவே தெரியும் சார். அவங்க தான் தந்தி ரிசீவ் பண்ணது”
“ஓக்கே ஓக்கே” என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டது கிழம்.
நாங்கள் தங்கியிருந்த அறைக்குள் வேகமாக போன ராஜா அடுத்த நிமிடம் பெட்டியோடு வந்தார். இன்னொரு கையில் ஒரு ப்ளாஸ்டிக் பை.
“இதுல எல்லாம் இருக்கு. உனக்கு டவுட் ஏதாவது வந்தா செல்வரங்கத்துக்கிட்ட கேளு. அவனுக்குக் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்”
பேசிக் கொண்டே மெயின் ரோட்டுக்கு வந்து ஆட்டோ ஏற்றி அனுப்பி விட்டு மறுபடியும் தங்கியிருந்த அறைக்கு வந்தேன்.
மற்ற நண்பர்கள் மைம் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்க நான் மீண்டும் வெளியேறி மற்ற பல்கலைக் கழகங்களின் பயிற்சியை நோட்டம் விடப் போனேன்.
***************************************************************************************
போட்டி நடக்கும் ஹாலை தேடிப் பிடிக்கவே எனக்கு நேரமாகிவிட்டது. போட்டி ஆரம்பித்து பத்து நிமிடங்கள் கழித்தே உள்ளே நுழைந்தேன். போட்டி நடத்துபவர் என்னை முறைத்துக் கொண்டே போஸ்டர் வரைய வேண்டிய தாளைக் கொடுத்தார். அப்பாவியாகத் தெரிந்த ஒருவனின் அருகே போய் அமர்ந்து கொண்டு தேர்ந்த ஓவியனைப் போல பைக்குள் இருந்து பிரஷ்களையும் பெயிண்ட்களையும் எடுத்து வைத்தேன். போர்டில் என்ன தலைப்பில் வரைய வேண்டும் என்பதை கொட்டை எழுத்தில் எழுதிப் போட்டிருந்தார்கள் - “VANDALISM". எனக்குத் தெரிந்த ஆங்கில அறிவில் அர்த்தம் புரிந்து கொண்டு பென்சிலால் ஸ்கெட்ச் போட ஆரம்பித்தேன்.
பக்கத்தில் இருந்தவன் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தான். “பாஸ், வாட்டிஸ் வாண்டலிசம்?” என்று கிசுகிசுத்தான்.
“தமிழா?”
“ஆமாங்க. நீங்களும் தமிழா?”
“ஆமா. காமராஜ் யுனிவர்சிட்டி. நீங்க?” பென்சிலை டேபிளின் மீது வைத்து விட்டு கையை நீட்டினேன்.
“நான் பாரதிதாசன்.” என் கைபிடித்துக் குலுக்கினான்.
அவனுக்கு வாண்டலிசத்தை விளக்கிச்சொல்லிவிட்டு “இது உங்கள் சொத்து” என்னும் தமிழக அரசின் கேப்ஷனைத் திருடி ஏனோ தானோவென்று வரைந்து கொண்டிருந்தேன்.
மஞ்சள் வண்ணமும் சிவப்பு வண்ணமும் குழைத்து தீயைக் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கும்போது அவள் வந்தாள்.
கேரளப் பெண்களுக்கே உரிய மினுமினுப்பு. தலைக்குக் குளித்து நீளக் கூந்தலைப் பின்னாமல் நுனியில் சின்னதாக முடிந்து வைத்திருந்தாள். பார்த்ததும் அடிக்கும் அழகில்லை என்றாலும் திரும்பிப்பார்க்க வைக்கும் அழகு. தோழிகளுடன் தூரத்தில் வரும்போதே என் மீது வைத்த கண்ணை மாற்றாமல் பார்த்தபடியே வந்தாள். ஒவ்வொரு போட்டியாளரின் போஸ்டர்களாகப் பார்த்துக் கொண்டே வந்தாள். மடப் பயல்கள் அத்தனை பேரும் கடமையே கண்ணாயிருந்தனர். நான் மட்டும் அவளை பார்த்துக் கொண்டே போஸ்டரிலும் ப்ரஷை வைத்து எதையோ அடித்துக் கொண்டிருந்தேன்.
என்னை நெருங்க நெருங்க அவள் இதழ்களில் ஒரு புன்னகை வழிந்தது. பதிலுக்குப் புன்னகைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தேன். எங்கிருந்தோ ‘மனம் விரும்புதே உன்னை உன்னை’ என்று சிம்ரன் ஆடுவது கேட்டது.
என்னைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த தேவதையின் இதழோரத்தில் இருந்த மச்சம் இப்போது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. என்னருகில் வர வர அவள் புன்னகையின் அளவு பெரிதானது. அதிகமாகிக் கொண்டே போனது. என் போஸ்டரைப் பார்த்துவிட்டு என்னையும் பார்த்து புன்னகைத்தாள். நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன். கொஞ்சம் தூரத்தில் இருந்த பெஞ்சில் போய் அவள் தோழிகளோடு அமர்ந்து கொண்டாள். என் மீது வைத்த பார்வையையும் உதட்டில் வழிந்த புன்னகையையும் மாற்றவேயில்லை.
நானும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் போக மீதி நேரத்தில் போஸ்டரில் என்னத்தையோ கிறுக்கினேன்..
நேரம் முடியப் போகிறது என்பதை சூப்பர்வைசர் அறிவித்ததும் அவளும் அவள் தோழிகளும் கிளம்பினர். என்னருகில் மீண்டும் வந்த அவள் ஒரு காகிதத்தை என் டெஸ்கின் மேல் வைத்துவிட்டு என்னைப் பார்த்து ஒரு சிரிப்பைச் சிந்திவிட்டுப் போனாள்.
ஆரவமாக எடுத்தேன். “BATHROOM AT THE END OF THE CORRIDDOR" என்று எழுதியிருந்தது. சந்திப்பதற்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? என்று நொந்து கொண்டு போட்டி நடத்துபவரிடம் என் போஸ்டரை நீட்டிவிட்டு வேகமாக வெளியே வந்தேன். தூரத்தில் தெரிந்தது பாத்ரூம். ஆனால் அவளையோ அவள் தோழிகளையோ காணவில்லை.
அங்கே பாய்ஸ் பாத்ரூம் மட்டுமே இருந்தது. குழப்பத்துடன் உள்ளே நுழைந்தேன். உள்ளே நுழைந்ததற்காகக் கடமையை முடித்து விட்டு கை கழுவ வாஷ்பேசின் வந்தேன். கையைக் கழுவிவிட்டு நிமிர்ந்து பார்த்தால் கண்ணாடியின் என் முகம். கன்னத்தில் என்ன? சிவப்பும் மஞ்சளும் கலந்து நான் அடித்த பெயிண்ட் போஸ்டரில் தீ மாதிரி தெரிந்ததோ இல்லையோ என் கன்னத்தில் தெரிந்தது.
நல்ல வேளையாக வாட்டர் கலர் என்பதால் தண்ணீரால் அலசியே கழுவி விட்டேன். என்னவளைத் தேடிக் கொண்டே “அவள் வருவாளா, அவள் வருவாளா!” என்று என் மனதுக்குள் மெலிதாக ஒலிக்க அன்று முழுக்க அவளைத் தேடினேன். அடுத்த நாளும் பார்க்கவே முடியவில்லை.
அடுத்த நாள் ராஜா அண்ணன் வந்து என்னிடமிருந்த பெரும் பொறுப்பைப் பெற்றுக் கொண்டதும் சேர்ந்து சுற்ற ஆள் கிடைத்ததால் கொஞ்ச நேரம் அவளை நினைக்காமலிருக்க சந்தர்ப்பம் கிடைத்தது.
ராஜா அண்ணனுடன் ரங்கோலிப் போட்டிக்காக அதே ஹாலுக்குப் போக நேர்ந்தது. அங்கே போஸ்டர் மேக்கிங் போட்டியின் முடிவுகள் வெளியிட்டிருந்தார்கள்.
மூன்றாம் பரிசு ஆந்திராவில் ஏதோ ஒரு யுனிவர்சிட்டி,
இரண்டாம் பரிசு காலிகட் யுனிவர்சிட்டி,
முதல் பரிசு.. கண்ணைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் பார்த்தேன்.. பாரதிதாசன் யுனிவர்சிட்டி. ஒரு பெரு மூச்சை வெளியிட்டு விட்டுத் திரும்பினேன்.
“எந்தா சாரே.. பெயிண்ட் போயோ?” களுக்கென்று சிரித்து விட்டு அகன்றாள் என் தேவதை..
எவனோ ஒரு கபோதி “நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், தெய்வம் ஏதுமில்லை” என்று தன் ஸ்டீரியோவில் கசிய விட்டான்.