Thursday, June 28, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 10“ஆனா உன்னை என்னோட காதலனாவோ கணவனாவோ ஏத்துக்க எனக்கு எதுவோ தடுக்குது. சாரிப்பா”

ட்வின் டவர் மேல் ஏரோப்ளேனை வைத்து இடித்துவிட்டு சாதாரணமாக சாரி என்கிறாள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் தான் தப்பாக நினைத்துவிட்டேனோ? ஆனால் செந்தில் கூட சொன்னானே? அப்படித்தான் இருக்கும் என்று? திடீரெண்டு நாக்கு வரண்டு போனது. டீஹட்ரேட் ஆனது போல நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டிக் கொண்டது.

“இதுதான் உன் முடிவா?”

சத்தியமாக நான் பேசியது எனக்கே கேட்கவில்லை. ஆனாலும் மாலா பதில் சொன்னாள்.

“தேவா. இங்க பாரு. திஸ் இஸ் நாட் என் எண்ட் ஆஃப் அவர் ஃப்ரெண்ட்ஷிப். இந்த ஒரு சம்பவம் நடக்காததாவே இருக்கட்டும். நாம பழையபடியே நல்ல ஃப்ரண்ட்ஸா இருப்போம்”

“மாலா நீ ஈஸியா சொல்லிட்ட. ஆனா நான் நிறைய எதிர்பார்த்திட்டேன். எனக்கு இது ஒரு பெரிய ஏமாற்றம் தான். இதைத் தாங்கிக்கவும் கடந்து போகவும் எனக்குக் கொஞ்சம் அவகாசம் வேணும். அதனால கொஞ்ச நாளைக்கு நீ பழைய தேவாவை எதிர்பார்க்காதே”

“தேவா. என்ன சொல்ற?”

“ஆமாம் மாலா. ஃபார் சம் டைம் லெட்ஸ் பீ ஜஸ்ட் கோவொர்க்கர்ஸ். அஃபிஷியலா மட்டும் பேசிக்குவோம். எனக்கு இதை சாதாரணமா எடுத்துக்கற பக்குவம் வர்ற வரைக்கும் உனக்கு நான் ஃபோன் பண்ண மாட்டேன். நீயும் பேசாத. ஓக்கே?” அவள் பதிலுக்குக் காத்திராமல் வைத்துவிட்டேன். லேப்டாப் ஸ்க்ரீன் மங்கலாகத் தெரிந்தது. கண்களில் கோர்த்திருக்கும் நீர்தான் காரணம். யாரும் பார்க்காத வண்ணம் முழுக்கைச் சட்டையின் கஃபால் துடைத்துக் கொண்டேன். ஓங்கிக் கத்தி அழவேண்டும் போல இருந்தது. ஆஃபிஸ் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. ரூமுக்குப் போக இன்னமும் நேரம் இருக்கிறது. ஒரு தம்மடிக்கலாம் போல இருந்தது. எல்லா இடத்தையும் காட்டியவள் தம்மடிக்கும் இடத்தைக் காட்டவே இல்லையே? ரீனாவிடம் போய் கேட்டு விடலாமா என்று யோசித்தேன். ரீனா அறிமுகப் படுத்திய ஜேக்கின் மேஜை மீது சிகரெட் பாக்கெட் ஒன்றைப் பார்த்த நினைவு வந்தது. ஜேக்கின் இடத்துக்கு சென்றேன்.

“ஹாய் ஜேக். மே ஐ நோ வேர் ஐ கேன் ஸ்மோக்?”

“வாவ். யு ஆர் அ ஸ்மோக்கர்? ஃபைனலி ஐ காட் கம்பெனி இன் திஸ் ப்ளேஸ். கம் ஐ வில் ஷோ யூ” என்று ஆரவாரத்துடன் எழுந்து அழைத்துச் சென்றான். ஒன்றுக்கு இரண்டாய் சிகரெட்டுகளைக் கரைத்தேன். ஜேக் இண்டியா, இண்டியன் கேர்ள்ஸ், ப்ரெட்டி, ஐஷ்வர்யா ரோய் என்றெல்லாம் என்னன்னவோ பேசினான். ம்ம், யெஸ் என்று எதோ பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் மனசெல்லாம் மாலா தான் நிறைந்திருந்தாள்.

**************************

அடுத்து வந்த நாட்களில் மாலாவிடம் அஃபிஷியலாகக் கூட பேசுவதைக் குறைத்துக் கொண்டேன். எதுவாக இருந்தாலும் ஈமெயிலிலேயே முடித்துக் கொண்டேன். செந்திலிடம் பேசி அழுதேன். செந்தில் அவனால் முடிந்த அளவுக்குத் தேற்றினான்.

இரண்டு வார ஓட்டல் தங்கலுக்குப் பிறகு ரீனாவின் பக்கத்து வீட்டு பேஸ்மெண்டில் ஒரு ஸ்டூடியோ அப்பார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டேன். மாதம் $600 டாலர் வாடகை. அந்த வீடு ரீனாவின் அத்தையினுடையது. அத்தை ரிட்டையராகி ஃப்ளோரிடாவில் செட்டில் ஆகிவிட்டாள். அவள் வீட்டை பல அப்பார்ட்மெண்டுகளாகப் பிரித்து வாடகைக்கு விட்டு வாடகையை அத்தையின் அக்கவுண்டில் சேர்க்கும் பொறுப்பை ரீனா ஏற்றுக் கொண்டிருந்தாள். அதனால் எனக்கு $600க்கு சல்லிசாகக் கிடைத்தது. ஸ்டுடியோ அப்பார்மெண்ட் என்றால் படுக்கை அறை, சமையல் அறை, ஹால் என எல்லாம் ஒரே இடத்தில் இருக்கும். ஏற்கனவே ஒரு ஃபுல்சைஸ் பெட் போடப்பட்டிருந்தது. மேலே விரிக்க ஷீட்ஸும், போர்த்திக்கொள்ள கம்ஃபர்ட்டரும் புதிதாக வாங்கிக்கொள்ளச் சொல்லி ரீனா அட்வைஸினாள். ஒரு 32 இன்ச் ஃப்ளாட் ஸ்க்ரீன் டிவியும் இருந்தது. கிச்சனில் கிட்டத்தட்ட தேவையான பாத்திரங்கள் எல்லாம் இருந்தன. சாப்பிடும்போது டைனிங் டேபிளாகவும், மற்ற நேரம் லேப்டாப் டேபிளாகவும் இருக்கும் வண்ணம் ஒரு டேபிள் சேரும் இருந்தது. பழைய காலத்து வீடு என்றாலும் பாத்ரூம் ஃபிட்டிங்க்ஸ் ஹோட்டலில் பார்த்தது போல புதிதாகவே இருந்தது. என் அபார்ட்மெண்ட் பேஸ்மெண்டில் இருந்த படியால் எனக்கு மட்டும் தனி எண்ட்ரன்ஸ் அமைந்திருந்தது. அதனால் வீட்டின் மற்ற பகுதிகளில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கூட அறியாமல் இருந்தேன். தினமும் ரீனாவுடனே கிளம்பி அலுவலகம் போவது, அவளுடனே சேர்ந்து திரும்புவது என்றாகிப் போனது.

நான்கு தெரு தள்ளி ஒரு பட்டேல் பிரதர்ஸின் கடை இருந்தது நம்மூர் காய்கறிகளில் இருந்து மசாலா வரை எதுவேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள ஏதுவாய்ப் போனது. ஒரு வருடமாக சொந்த சமையல் செய்த அனுபவம் வயிற்றுக்குப் பாதிப்பில்லாமல் காலம் தள்ள உதவியது. பொழுது போக்கிற்கு மாதம் $50 கட்டினால் இண்டர்நெட்டும் கேபிள் டிவியும் தரும் டைம் வார்னர் கனெக்‌ஷன் ஒன்றைப் பெற்றுக் கொண்டேன். பெங்களுரில் கூட வாங்கி வைத்துக்கொள்ளாத ஸ்மார்ட் ஃபோன் ஒன்றும் வாங்கிக் கொண்டேன். இங்கேதான் காண்ட்ராக்ட்டில் கையெழுத்துப் போட்டால் சல்லிசு விலையில் நல்ல நல்ல ஃபோன்கள் கிடைக்கிறதே.

சோசியல் செக்யூரிட்டி நம்பருக்கு விண்ணப்பிப்பதில் ஆரம்பித்து, பேங்க் அக்கவுண்ட் துவங்குவது, டிரைவிங் லைசன்ஸ் எடுக்கும் வரைக்கும் ஜேக் உதவினான். அலுவலகத்தில் சில இந்தியர்கள் காண்ட்ராக்டர்களாக வேலை பார்த்து வந்த போதிலும் தமிழ் ஆள் யாரும் இல்லாததால் அவர்களை விட ஜேக் நெருங்கியவனாகிப் போனான். அவனுடன் சேர்ந்து வார இறுதிகளில் ஸ்டிரிப் க்ளப்கள், பார்கள் என்று போகத் துவங்கினேன். வருகிற சம்பளத்தில் செலவு போக நல்ல தொகையாக சேமிக்கவும் முடிந்தது. மாதம் ஒரு முறை ஒரு பெரிய தொகையை அப்பாவுக்கு அனுப்பி வைக்கவும் முடிந்தது. இங்கேயே நிரந்தரமாக வேலை கிடைத்தால் தங்கிவிடலாம் என்ற முடிவுக்குக் கூட வந்துவிட்டேன். மாலா கொடுத்த ஏமாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக மனதை விட்டு அகல ஆரம்பித்தது. ஆனாலும் பழைய மாதிரி பேச ஆரம்பிக்கவில்லை.எப்போதாவது பேசும் செந்திலும் மாலாவைப் பற்றிப் பேசுவதை நிறுத்தியிருந்தான்.

மூன்று மாதங்கள் ஓடிப் போனது. இடையில் ஒரு முறை நயகராவுக்கும் ஒரு முறை அட்லாண்டிக் சிட்டிக்கும் போய் வந்திருந்தேன். அலுவலகத்தில் இயர்லி மீட்டிங் ஒன்று ஏற்பாடாகிக் கொண்டிருந்தது. நகரத்தின் மத்தியில் பெரிய ஹால் ஒன்றை புக்கியிருந்தனர். இன்னும் இரண்டு வாரங்களில் நடக்கப் போகும் அந்த மீட்டிங்குக்கு சிகாகோவிலிருந்து சி.இ.ஓ முதலான பல பெரிய தலைகள் வரப்போவதால் ரீனா உட்காரக்கூட நேரமில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தாள். ஆஃப்ஷோர் ரிலேஷன்ஷிப் முழுப் பொறுப்பையும் என் தலையில் கட்டிவிட்டு இதற்கெனவே சுற்றிக் கொண்டிருந்தாள்.

மாலா இரண்டொரு நாள் விடுப்பில் போயிருந்தாள். நிச்சயதார்த்தமாக இருக்குமோ? என்ற எண்ணம் என் மனதில் எழாமல் இல்லை. ஆனாலும் இன்னமும் அவளிடம் சகஜமாகப் பேசும் அளவுக்கு என் மனம் பக்குவப்படவில்லை. அதை நினைக்கும்போது எனக்கே சற்று அவமானமாகத்தான் இருந்தது. ஒரு நிராகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு கீழ்த்தரமாகப் போய்விட்டேனோ என்ற எண்ணம் எழும்போதெல்லாம் புகையையோ சரக்கையோ விட்டு அமுக்கிக்கொண்டிருந்தேன். செந்திலும் சொல்லி சொல்லி களைத்துப் போய் விட்டான். அவனுடன் பேசுவதும் குறைந்து கொண்டே வந்தது.

**************************
அன்று ஞாயிற்றுக் கிழமை. முந்தின நாள் ஜேக்குடன் இந்த அறையிலேயே வைத்து குடித்த நிகழ்வின் எச்சமாக காலி ப்ளாக் லேபிள் பாட்டிலும் சிக்கன் விங்க்ஸின் எலும்புத்துண்டுகளும் தரையில் சிதறிக் கிடந்தன. எடுத்து குப்பையில் போட்டுவிட்டு அறையை சிறிது சுத்தம் செய்தேன். சமைக்க சோம்பேறித்தனமாக இருந்தது. முந்தைய நாள் ஆர்டர் செய்த பிஸ்ஸாவை மைக்ரோவேவில் சூடு செய்து மிச்சம் இருந்த ஒரு டின் ஹெய்னெக்கனோடு சேர்த்து சாப்பிட்டேன். வயிறு நிரம்பியதும் தூக்கம் வந்தது. சிறிதுநேரம் டிவி பார்த்துக் கொண்டே தூங்கிப் போனேன்.

கதவை யாரோ தட்டும் சத்தம். முதலில் டிவியிலோ என்று நினைத்தேன். அறைக்கதவு தான் என்று உறுதியானதும் எழுந்தேன். கண்ணைக் கசக்கிக் கொண்டு மணி பார்த்தேன். மூன்று மணி. மாலை மூன்று மணிக்கு யார் வருகிறார்கள்? ரீனா அப்படி எல்லாம் டிஸ்டர்ப் செய்யும் பழக்கம் உடையவள் அல்லவே என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறந்தேன்.

மாலா.

(தொடரும்)


அடுத்த பாகம் இங்கே

Friday, June 22, 2012

Brave 3D - என் பார்வை


எனக்கு அனிமேஷன் படங்கள், கார்ட்டூன் படங்கள் பார்ப்பது மிகவும் பிடிக்கும். 2 டைமென்ஷன் படங்களாக வந்து கொண்டிருந்த காலத்தில் டாய் ஸ்டோரி என்ற முப்பரிமாண அனிமேஷன் படம் வந்தது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது. அந்தக் காலத்தில் கார்ட்டூன் படம் பார்ப்பது சின்னப்பசங்க செய்வது என்று கேலி செய்வார்கள் என்பதையும் பொருட்படுத்தாது பார்த்து வியந்த படம். நண்பர்கள் யாரும் அனிமேஷன் படங்கள் பார்க்க வர மாட்டார்கள். தனியாய்ப் போய்ப் பார்க்க சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு பல படங்கள் பார்க்காமலே இருந்திருக்கிறேன். பின்னர், ஏதாவது ஒரு டிவியில் எப்போதாவது போட்டால் பார்ப்பேன். அப்போதெல்லாம் படத்தை ஒரு பொழுதுபோக்கு என்ற பார்வையில் பார்த்து ரசித்திருக்கிறேனே ஒழிய, அதன் பின்னால் இருக்கும் தொழில்நுட்ப உழைப்பை வியந்தோதியதில்லை. அந்த அளவுக்கு தொழில்நுட்ப அறிவு இல்லாததும் ஒரு காரணம்.

பதிவுலகம் வந்த பிறகு ஹாலிவுட் பாலா எழுதிய பிக்ஸார் தொடர் படித்த பிறகு பிக்ஸார் கம்பெனி மேல் ஒரு தனி மரியாதை வந்துவிட்டது. விளைவு இது வரை ரிலீஸ் ஆன எல்லா பிக்ஸார் படங்களையும் தேடித் தேடி பார்த்தேன். ஒவ்வொரு படத்திலும் சின்னச் சின்ன டீட்டெயில்ஸ்க்கும் அவர்கள் உழைக்கிற உழைப்பு பிரம்மிக்க வைக்கிறது. 25 வருடங்களில் 12 படங்கள் தான் எடுத்திருக்கிறார்கள். ஆனால் 12 படங்களும் 12 ரத்தினங்கள். 

அவர்களின் சமீபத்திய வெளியீடு Brave. அமெரிக்கா வந்து 7 வருடங்கள் ஆனாலும் இதுவரை எந்த ஹாலிவுட் படத்தையும் முதல் நாள் முதல் ஷோ பார்த்ததில்லை. அந்தப் பெருமையும் Brave படத்துக்கே. 


பாட்டிமார் நமக்குச் சொல்லும் கதைகளில் ஒரு ராஜா, ஒரு ராணி, இளவரசன், இளவரசி எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சூனியக்காரி என்ற கதாபாத்திரங்கள் இல்லாமல் இருக்காது. நம் கலாச்சாரத்தில் மட்டுமல்ல, மேற்கத்திய கலாச்சாரத்திலும் அப்படியே. பிக்ஸார் இதுவரைக்கும் எடுத்த 12 படங்களில் வெவ்வேறு உலகங்களைக் காட்டியிருந்தாலும், இதுவரைக்கும் அவர்களும் தொடாத ஒரு சப்ஜெக்ட் மேலே சொன்ன ஃபேண்டஸி உலகம். அதை இந்த திரைப்படத்தில் தொட்டிருக்கிறார்கள். அதே போல இது வரை 5 டைரக்டர்களை அறிமுகப் படுத்தியிருந்தும் முதல் முறை ஒரு பெண் இயக்குநரை களமிறக்கியிருக்கிறார்கள் பிக்ஸார். அப்பா-மகன், அம்மா-மகன், அப்பா-மகள், தாத்தா-பேரன் என பல உறவுகளின் நெருக்கத்தை இது வரை அனிமேஷன் படங்கள் வெளிப்படுத்தியிருந்தாலும் அம்மா-மகள் உறவை வெளிப்படுத்திய கதைகள் இல்லை. இந்தப் படம் அந்தக் கதையையே சொல்கிறது.

டன்ப்ரோச் என்ற நாட்டின் ராஜா ஃபெர்கஸ். அவர் மனைவி எலினார். அவர்களுக்கு மெரிடா என்ற மகளும் மூன்று மகன்களும் இருக்கின்றனர். ஃபெர்கஸ், மோர்டு என்ற கரடியுடன் சண்டை போடும்போது தனது காலை இழந்துவிடுகிறார். அதற்குப் பழி வாங்க சந்தர்ப்பம் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டு இருக்கிறார். மெரிடாவுக்கு வில்வித்தையில் ஆர்வம் அதிகம். திறமைசாலியாகவும் விளங்குகிறாள். ஆனால் எலினாருக்கோ தன் மகள் ஒரு நல்ல அரசியாக வரவேண்டும் என்பதிலே நாட்டம். அதனால் மெரிடாவுக்கு எப்போது பார்த்தாலும் நல்ல இளவரசியாக, நல்ல பெண்ணாக, நல்ல அரசியாக இருக்க என்ன என்ன செய்யவேண்டும் என்ற பாடம் நடத்துவதிலேயே குறியாக இருக்கிறார். மகளுக்குத் திருமணம் செய்து வைக்க மூன்று குறுநில மன்னர்களின் மகன்களை சுயம்வரத்திற்கு அழைக்கிறார். எந்த முறையில் சுயம்வரம் நடக்க வேண்டும் என்பதை மணப்பெண்ணே -மெரிடா- தேர்ந்தெடுக்கலாம் என்றதும் தனது ஸ்பெஷாலிட்டியான வில்வித்தையைத் தெரிவு செய்கிறாள் மெரிடா. 

மூன்று மாப்பிள்ளைகளிலேயே சோப்ளாங்கியான இளவரசன் தற்செயலாக ஜெயித்துவிட, அவனை மணக்க விரும்பாத மெரிடா, தானே போட்டியில் குதித்து மூன்று இளவரசர்களையும் தோற்கடிக்கிறார். அது பிடிக்காத எலினார் மெரிடாவைக் கண்டபடி திட்ட, மெரிடா கோபத்தில் குடும்ப படம் பின்னப்பட்ட சால்வை ஒன்றை கத்தியால் அறுத்துவிட்டு குதிரையில் ஏறி போகிறாள். அங்கே ஒரு சூனியக்காரியை சந்தித்து, தன் அம்மாவின் மனதை மாற்ற மந்திரம் ஒன்றைத் தருமாறு கேட்க, சூனியக்காரியும் ஒரு மந்திர கேக் ஒன்றைத் தருகிறாள். அதை எலினாரிடம் கொடுக்க, சாப்பிட்ட எலினார் கரடியாக மாறிவிடுகிறார். அம்மாவை மீண்டும் பெண்ணாக மாற்ற சூனியக்காரியைத் தேடிப் போகும் மெரிடாவுக்கு, இரண்டாம் சூரிய உதயத்துக்கு முன்னர் உடைந்த உறவை ஒட்டாவிட்டால் எலினார் நிரந்தரமாக கரடியாக இருக்க வேண்டும் என்ற புதிர் ஒன்று மட்டுமே கிடைக்கிறது.

மெரிடா என்ன செய்தாள்? எலினார் பெண்ணாக மாறினாரா? ஃபெர்கஸ் மோர்டுவைப் பழி தீர்த்தாரா? வெற்றி பெற்ற சோப்ளாங்கி இளவரசனை மெரிடா மணந்தாளா? என்ற கேள்விகளுக்கு கடைசி அரை மணி நேரம் பதில் சொல்கிறது. 

ஸ்காட்டிஷ் கேஸ்ல், அதன் சுற்றுப்புறம் ஆகியவற்றை தத்ரூபமாக அனிமேஷனில் கொண்டுவந்திருக்கிறார்கள். பிக்ஸார் படங்களில் வழக்கமாக இருக்கும் சேஸிங் சீக்வென்ஸ் இந்தப் படத்தில் நீளமாக இல்லை. அதற்குப் பதிலாக குதிரையில் சென்று கொண்டே அம்பு விடும் காட்சியும், கரடியை படை வீரர்கள் துரத்தும் காட்சியும் ஈடு செய்கிறது. ஒரு பெரிய அருவியையும் அதை ஒட்டிய ஒரு மலையையும் கிராஃபிக்ஸ் செய்வதற்காக ஏஞ்செல்ஸ் நீர்வீழ்ச்சியை நேரில் சென்று பார்த்துவிட்டு வந்ததாம் பிக்ஸார் குழு. அதே போல ஸ்காட்லாந்தில் இருக்கும் பல கோட்டைகளையும் பார்வையிட்டுவிட்டு வந்தார்கள். வழக்கம்போல கல், மண், செடி கொடியெல்லாம் பொறுக்கிக் கொண்டு வந்திருப்பார்கள். 

நகைச்சுவைக்கு மெரிடாவின் மூன்று இளைய சகோதரர்கள் உத்திரவாதம் கொடுக்கிறார்கள். மோர்டு என்ற ஆண் கரடிக்கும், எலினார் கரடியாக மாறியதும் வரும் பெண் கரடிக்கும் நளினம் முக வெட்டு என அழகாக வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். கரடியாக மாறிய எலினார் மனிதர்களைப் போல சாப்பிட முயற்சி செய்வது, மெரிடா கரடிக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுத்ததும் மீன்கள் பல சாப்பிட்டு உள் மனதிலும் தான் ஒரு கரடி என்ற எண்ணம் வந்ததும் முரட்டுத் தனமாக நடக்க முயற்சி செய்வது, பின் தான் எலினார் என்பதை உணர்ந்து வருத்தப்படுவது என கரடிக்கு உணர்ச்சிகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். ரோபோவுக்கு, ஒற்றை விளக்குக்குமே உணர்ச்சிகள் கொடுக்க முடிந்த பிக்ஸாருக்கு இதெல்லாம் ஒரு தூசி. 

மேக்கிங் ஆஃப் ப்ரேவ் மற்றும் டிவிடி வெளிவந்ததும் இன்னும் பல தொழில்நுட்ப நுணுக்கங்கள் வெளிவரலாம். 

ஆரம்பத்தில் விறுவிறுப்பாகப் போகும் கதை, எலினார் கரடியாக மாறியதும் கொஞ்சம் இழுவையாகி பின்னர் இறுதிக் கட்டத்தில் மீண்டும் வேகமெடுக்கிறது. ஆனால் வழக்கமான சினிமா க்ளீஷே முடிவால் எதிர்பார்த்தது கிடைக்காத ஒரு ஏமாற்றம் கடைசியில் மிஞ்சுகிறது. நீங்கள் ஃபேண்டஸி கதை + அனிமேஷன் ரசிகராக இருந்தால் கண்டிப்பாக படத்தை ரசிப்பீர்கள்.

ஃபைண்டிங் நீமோ ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. செப்டம்பரில் ஃபைண்டிங் நீமோ 3Dயில் வெளிவருகிறது. அடுத்த மார்ச்சில் Monsters Universityயும் வெளி வருகிறது. 

வழக்கமாக முழுநீளப் படங்களோடு பிக்ஸார் வெளியிடும் குறும்படங்களில் இந்த முறை LaLuna. மூன்றே கதாபாத்திரங்கள் தான். அந்த மூன்று கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு ஐந்து நிமிடங்களில் பிக்ஸார் நிகழ்த்திக்காட்டும் அற்புதத்தைத் தவற விடாதீர்கள்.

http://www.imdb.com/title/tt1217209/

Thursday, June 21, 2012

Thick as Thieves (A.K.A) The Code - என் பார்வை


எனக்கு ஸ்போர்ட்ஸ் படங்கள் பிடிக்கும் என்பதை இங்கே சொல்லியிருந்தேன். அதைப் போலவே எனக்குப் பிடித்த இன்னுமொரு genre, Heist படங்கள். தமிழில் இந்த இரண்டு genreலுமே படங்கள் இல்லை. மங்காத்தாவைத் தவிர்த்தால் இதுவரை தமிழில் வந்துள்ள ஹீய்ஸ்ட் படங்கள் எல்லாவற்றிலும் ஹீரோவை ராபின் ஹுட் போல நல்லது செய்ய வந்த கெட்டவன் போலத்தான் காட்டுவார்கள். இந்த வரிசையில் கடைசி வரையில் ஹீரோவை திருடனாகவே காட்டும் மங்காத்தா ஒரு மாற்றுப் படம் தான். 

வழக்கமாக இந்த ஹீய்ஸ்ட் படங்களில் ஹீரோ ஒரு குழுவோடு சேர்ந்து ஒரு பொருளைத் திருட திட்டம் போடுவார். பார்வையாளர்கள் கதை ஒரு நேர்க்கோட்டில் போவதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். இடையில் அங்கங்கே ட்விஸ்ட் வரும். ஹீய்ஸ்ட் எதிர்பார்த்த மாதிரி போகலையேன்னு நினைப்போம். கடைசியில அந்த ட்விஸ்ட் எல்லாம் ஏற்கனவே ப்ளான் செஞ்சதுதான்னு காட்டுவாங்க. மங்காத்தாவுல கடைசியில அர்ஜூனும் அஜித்தும் கூட்டணின்னு காட்டின மாதிரி. அந்த சுவாரசியத்துக்காகவே இந்த ஸ்டைல் படங்கள் பார்க்க எனக்குப் பிடிக்கும். அதோட திருட்டுக்கு அவங்க போடுற எக்ஸ்டென்சிவ் திட்டம். அதை எக்ஸிக்யுட் செய்யும்போது வர்ற கஷ்டங்கள் எல்லாம் சுவாரசியமா இருக்கும். தமிழ்ல குரு, என் சுவாசக் காற்றே, தில்லாலங்கடி போன்ற திரைப்படங்களில் திருடும் காட்சிகள் இதே போல சுவாரசியமா இருந்தது ஆனா இதெல்லாம் பெரும்பாலும் இங்கிலீஷ் படத்துல சுட்ட காட்சிகள் தான். இது மாதிரி படங்கள் தமிழ்ல நிறைய வரணும்.The Code அல்லது Thick as Thieves 2009ல வந்த படம். இதுவும் ஒரு Heist படம் தான். என்னோட ஃபேவரைட் ஹீரோக்கள்ல ஒருத்தர் மோர்கன் ஃப்ரீமேன் நடிச்சது. படத்தோட கதை இதுதான். கேப்ரியல் மார்டின்(Antonio Banderas) ஒரு குட்டி திருடன். நியூயார்க் சப்வேல ஒருத்தன் கிட்ட இருந்து வைரம் கொண்டு வர்ற பெட்டியை பல பேர் முன்னாடியே திருடிட்டு ஓடுறான். இதைப் பார்க்கிறாரு கீய்த் ரிப்ளே(Morgan Freeman). அவரு ஒரு தில்லாலங்கடித் திருடன். நிறைய இடத்துல திருடி போலிஸ் கண்ணுல மண்ணைத் தூவிட்டு திரியிறவர். அவரைப் பிடிச்சே தீருவேன்னு சவால் விட்டுட்டு ப்ரொமோஷனே இல்லாம இருக்காரு வெபர்னு ஒரு NYPD போலீஸ்காரர். ரிப்ளீயோட நீண்ட நாள் ஃப்ரண்ட் விக்டர் கோரலென்கோ, ஒரு ரஷ்யன் மாப் கிட்ட கடன் வாங்கியிருக்கார். அந்தக் கடனைத் திருப்பித் தர்றதுக்காக கடைசியா ஒரு பெரிய திருட்டு - ஒரு ப்ரைவேட் மியூசியத்துல இருந்து ரெண்டு Faberge Eggs - செய்யத் திட்டம் தீடியிருக்காங்க. அந்தத் திட்டத்தை நிறைவேத்த நேரமானதால அந்த ரஷ்யன் மாப், விக்டரைக் கொன்னுடுறாங்க. பார்ட்னர் இல்லாம தன் திட்டத்தை நிறைவேத்த முடியாததால ரிப்ளே மார்ட்டினைத் துணைக்கு சேர்த்துக்குறார். விக்டரோட பொண்ணு அலெக்சாண்ட்ரா(Radha Mitchell) இப்ப ரிப்ளேயோட பாதுகாப்புல இருக்கா (இந்தப் பொண்ணோட காட்-ஃபாதர் ரிப்ளேதான்). மார்ட்டினுக்கும் அலெக்சாண்ட்ராவுக்கும் நடுவுல ஒரு ரிலேஷன்ஷிப் உருவாகுது. அதை ரிப்ளே எதிர்க்கிறார். ஆனா எதிர்க்க எதிர்க்கத்தானே காதல் உருவாகும். அது நடக்குது.

ரெண்டு பேரும் சேர்ந்து அந்த மியூசியத்துக்குள்ள திருட்டுத்தனமா, போலிஸ்க்கு கொடுக்கிற ஒரு பார்ட்டியில, நுழைஞ்சி படமெல்லாம் எடுத்துட்டு வர்றாங்க. திட்டம் முழு வடிவம் அடையுது. அதைச் செயல்படுத்த முன்னாடி, பொறுமை இழந்த நிக்கி (ரஷ்யன் மாபோட பாஸ்), அலெக்ஸாண்ட்ராவைக் கடத்திட்டுப் போயிடுறான். அந்த எக்ஸைக் கொண்டு வந்தாதான் அந்தப் பொண்ணை உயிரோட விடுவேன்னு சொல்லிடறான். 

ரிப்ளேயும் மார்ட்டினும் சேர்ந்து அந்த மியூசியத்துக்குள்ள பாதாளச் சாக்கடை வழியா புகுந்து, முட்டைகள் இருக்கிற லாக்கரை உடச்சி உள்ள புகுந்துடறாங்க. இன்னும் மூணு நிமிசத்துல அந்த லாக்கர் தானா மூடிரும்ங்கிற நிலமையில மார்ட்டின் துப்பாக்கியெடுத்து தான் திருடன் இல்லை, மியாமி போலிஸ். NYPD ரிப்ளீயைப் பிடிக்கிற திட்டத்துக்காக அண்டர் கவர்ல இருக்கேன்ங்கிற உண்மையச் சொல்லி முட்டைகளை கீய்த் கையில இருந்து வாங்கிட்டு கீய்த்தை லாக்கர் உள்ளயே விட்டுட்டுப் போயிடறான். 

அதுக்குப் பிறகு என்ன நடந்தது. கீய்த் வெளிய வந்தானா, ரஷ்யன் மாப் கிட்ட இருக்கிற அலெக்ஸாண்ட்ரா என்ன ஆனா, அப்பிடிங்கிறதுதான் கடைசியில வச்சிருக்கிற ட்விஸ்ட். 

மோர்கன் ஃப்ரீமேன் வழக்கப்படி கலக்கியிருக்காரு இந்தக் கேரக்டர்ல. அலெக்சாண்ட்ரா மேல காட்டுற பாசமாகட்டும், பேண்டரஸ் அத்து மீறும்போதெல்லாம் குட்டு வைக்கிறதாகட்டும், திருடும் காட்சியில் காட்டும் உழைப்பாகட்டும், ஃப்ரீமேன் ஸ்டைல். அண்டானியோ பேண்டரஸும் ஒரு திருடனா, அண்டர்கவர் காப்பா பொறுத்தமா நடிச்சிருக்கார். ராதாவை அசத்த சைனீஸ் சாப்பாடு வாங்கி பல்பு வாங்குற காட்சியிலையும், அதே ராதாவோடு நைட்டு ஃபுல்லா “இருந்துட்டு” அடுத்த நாள் மோர்கன் ஃப்ரீமேன்கிட்ட மாட்டிக்கிற காட்சியிலையும் வெளுத்துக் கட்டியிருக்கார். ஹீரோயின் ராதா மிட்செல் ஆஸ்திரேலிய நடிகை. ஆனா ஒரு ரஷ்யனோட முக வெட்டு அமைஞ்சிருக்கு. 

Heist Genre படங்கள் பிடிக்கிறவங்களுக்கு இந்த படம் ஒரு நல்ல பொழுதுபோக்கு.
Monday, June 18, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 9“மாலா..”

“ம்”

“ஃப்ளைட் ஏற்ரதுக்கு முன்னாடி நான் ஒண்ணு சொன்னேனே”

“லூசு. மொதல்ல தூங்கி ரெஸ்ட் எடு. அதைப் பத்தி அப்புறம் பேசலாம்”

நான் பதில் சொல்வதற்குள் வைத்து விட்டாள். ஏமாற்றமாகிப் போனது. எழுந்து ஜன்னலை லேசாகத் திறந்து வைத்து சிகரெட்டைப் பற்ற வைத்தேன். கட்டிலின் அருகே இருந்த எலெக்ட்ரானிக் டைம்பீஸ் மணி 1:00 என்றது. ஜன்னல் வழியே 42வது தெரு தெரிந்தது. கண்ணுக்குத் தெரியும் இடமெல்லாம் விளக்குகள். சாலைகளில் ஆட்களின் நடமாட்டம் மாலை 8:00 மணியைப் போல இருந்தது. இறங்கிப் போகலாமா என்று ஒரு நப்பாசை. ஆனாலும், பலர் பலவிதமாக சொல்லியதால் இரவு இந்த நேரத்துக்குப் பிறகு தனியாக சாலைகளில் நடமாட ஒரு தயக்கம் வந்தது. சிகரெட் பிடித்துக் கொண்டே நியூயார்க்கின் ஸ்கைலைன்களை இருட்டில் வேடிக்கை பார்த்தேன். விடிந்ததும் ஆஃபிஸ் செல்ல வேண்டும். வாய் கொப்புளித்துவிட்டு வந்து படுத்தேன். தூக்கம் வரவே இல்லை. டிவியைப் போட்டு சேனல் சர்ஃப் செய்து எச்.பி.ஓவில் நிறுத்தினேன். ஏதோ ஒரு மொக்கை படம் ஓடிக்கொண்டிருந்தது.

*************************

பாத்ரூமில் பல் விளக்கிக் கொண்டிருந்த போது ஃபோன் அடித்தது. நல்ல வேளை பாத்ரூமிலேயே ஒரு இண்டர்காம் வைத்திருக்கிறார்கள். வாயில் இருந்த எச்சிலை வாஷ் பேசினில் துப்பி விட்டு, ரிசீவரை காதுக்குக் கொடுத்து, “ஹலோ” என்றேன்.

“ஹேய் தேவா.. ஹவ் வாஸ் த ட்ரிப்?” பல முறை கான்ஃப்ரன்ஸ் காலில் கேட்ட குரல்தான் என்றாலும், இப்படி ரிசீவரில் கேட்கும் போது வேறு மாதிரி ஒலித்தது.

“ரீனா? ட்ரிப் வாஸ் ஓக்கே. பட் ஐ குட்ண்ட் ஸ்லீப் லாஸ்ட் நைட். ஜெட் லேக்”

இதர நல விசாரிப்புகளுக்குப் பிறகு சொன்னாள், “ஐ வில் பி இன் யுர் ஹோட்டல் அட் 7:45. வில் டேக் யு டு ஒர்க் மைசெல்ஃப்” கையில் கட்டியிருந்த வாட்சைப் பார்த்தேன். இன்னமும் இந்திய நேரம் தான் காட்டியது. வெளியே வந்து டைம்பீஸில் நேரம் பார்த்து வாட்சை சரி செய்தேன். இன்னும் அரை மணி இருக்கிறது. அதற்குள் குளித்து ரெடி ஆக வேண்டும். மள மளவென வேலைகளை முடித்து இருப்பதிலேயே நல்ல உடை ஒன்றை அணிந்தேன். ப்ருட்டை விசிறிக்கொண்டிருக்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டது. மூடி பெட்டிக்குள் வைத்துவிட்டு கதவைத் திறந்தேன்.

கருப்பு நிற டாப், அதே நிற ஸ்கர்ட் அணிந்து தோள் வரை வெட்டப்பட்ட ப்ரவுன் நிற முடியை சீராக வாரி முகத்தில் ஒட்ட வைத்த புன்னகையோடு நின்றிருந்தாள் ரீனா. “ஹாய்” என்றவாறு கையை நீட்டினாள். பிடித்துக் குலுக்கினேன்.

ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் என்றாலும், குடும்பத்தில் எங்கோ கலப்படம் இருந்திருக்க வேண்டும். கொஞ்சம் வெளுப்பாகவே இருந்தாள். பற்கள் சீராகவும் வெண்மையாகவும் இருந்தன. படிக்கும்போது மூக்குக்கண்ணாடி அணிவாள் போலும், மூக்கின் நடுவில் கண்ணாடி உட்கார்ந்த தடம் தெரிந்தது. நாற்பதைத் தொட்ட வயதாக இருந்தாலும், மேக்கப் மூலம் முகத்தின் சுருக்கங்களை மறைக்கப் பிரயத்தனம் செய்திருந்தாள். அணிந்திருந்த லிப் ஸ்டிக் பெருத்த உதடுகளை சற்றே மெல்லியதாக்கிக் காட்டியது. பரந்த மார்புகள் இருந்தாலும் அணிந்திருந்த உடையில் கண்ணியம் தவறாமல் இருந்தன. கால்களின் மேல் தோல் நிறத்துக்கு ஏற்ப ஸ்டாக்கிங் அணிந்திருந்தது தெரிந்தது.

“கம் லெட்ஸ் கோ” என்றவாரு திரும்பி நடந்தாள். பசுவைத் தொடரும் கன்றுக்குட்டி போல பின்னாலே போனேன். வழியில் Dunkin Donuts என்ற கடையில் காபியும் ப்ரேக்ஃபாஸ்டும் - Egg and cheese on a croissannt- வாங்கிக்கொண்டு ஆஃபிஸ் பில்டிங் போய்ச் சேர்ந்தோம். நான் தங்கியிருந்த 42வது தெருவிலேயே நான்கு ப்ளாக்குகள் தள்ளி இருந்தது அந்த கட்டிடம். 60 மாடி கட்டிடத்தில் 30-35 மாடிகள் எங்கள் அலுவலகம். செக்யூரிட்டியிடம் என்னை அறிமுகப் படுத்தி எனக்கொரு ஐடி கார்ட் வாங்கித் தந்து, எங்கள் அலுவலக தளத்துக்குக் கூட்டிப் போய், க்ளையண்ட் டீமை அறிமுகப் படுத்தி, நான் அமரும் இடம், பாத்ரூம், சாப்பாடு சாப்பிடும் இடம் என ஒன்று விடாமல் காட்டி கடைசியில் நான் லேப்டாப்பைத் திறக்கும்போது மணி ஒன்பதை நெருங்கியிருந்தது. திங்கள், புதன், வெள்ளி நியூயார்க் நேரம் 9:00 மணிக்கு ஆஃப்ஷோர் மீட்டிங் இருப்பது நினைவுக்கு வந்தது. ரீனா அறையிலிருந்து எட்டிப் பார்த்து, “ப்ளானிங் டு ஜாயின்?” என்றாள். ஒரு நோட்டையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு அவள் அறைக்குள் நுழைந்தேன்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம், ரீனா என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறாள், ஆஃப்ஷோர் டீமிடம் இருந்து நான் என்ன எதிர்பார்க்கிறேன், ஆஃப்ஷோர் டீம் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை அலசிக் காயப் போட்டு விட்டு சீட்டுக்குத் திரும்பினேன். அடுத்தடுத்த மீட்டிங்குகள் இவ்வளவு நேரம் எடுக்காது என்று சொல்லி வயிற்றில் பாலை வார்த்தாள்.

சீட்டுக்கு வந்ததும், லேப்டாப் பேகில் இருந்த காலிங் கார்டை எடுத்தேன். அட்டையின் பின்னாலிருந்த வழிகாட்டுதல்களின் படி நம்பரை ஒற்றினேன். முதலில் அப்பாவின் செல்ஃபோன். அது எப்போதும் அம்மாவிடம் தான் இருக்கும். மூன்று நாட்கள் பிரயாணவிபரம் சொல்லி முடித்தேன். தங்கை இப்போதே திரும்ப வரும்போது என்ன என்ன வேண்டும் என்பதை பட்டியலிட ஆரம்பித்திருந்தாள். “த சும்மாரு கழுத. அண்ணன் இப்பத்தான் அங்க போயிருக்கு” என்று ஆத்தா அதட்டினாள்.

அடுத்ததாக செந்தில் நம்பர். அவனிடமும் ஓமனாவிடமும் பேசி முடித்துவிட்டுக் கடைசியாக மாலாவின் செல்லை அழைத்தேன். “ஹேய், என்னடா மீட்டிங் முடிஞ்சி இவ்வளவு நேரமாச்சி. இன்னமும் கூப்புடலையேன்னு நினைச்சென். கூப்டுட்ட”

“இல்லை மாலா. உன்கிட்ட ரொம்ப நேரம் பேசவேண்டியிருக்குமேன்னு முதல்ல அம்மா அப்பா கிட்ட பேசினேன். அப்புறம் செந்தில் ஓமனா”

“ஓ அப்ப நான் கடைசிதானா”

“ஏய் அதான் சொன்னேனே. உன்கிட்ட ரொம்ப நேரம் பேச வேண்டியிருக்கும் அதால அவங்களுக்கு முதல்ல கூப்டேன்னு”

“சரி சரி மன்னிச்சிட்டேன். ஆமா, ஆஃபிஸ் எப்பிடி? ஃபிகருங்க எல்லாம் சம்மர் காஸ்ட்யூம்ல கலக்கறாளுங்களா?”

“அடப்போடி. எல்லாம் நாப்பது அம்பதுன்னு இருக்காங்க. ஒவ்வொருத்தருக்கும் எக்ஸ்பீரியன்ஸ் என் வயசு இருக்கும் போல”

“ஹாஹாஹா”

“மாலா, நல்ல மூட்ல இருக்கியா?”

“...”

“சொல்லு”

“ம்ம்”

“நான் ஏர்ப்போர்ட்ல வச்சி உன்கிட்ட ஒரு விசயம் சொன்னேனே. நீ அதுக்கு பதில் சொல்லலையே இன்னமும்?”

“தேவா, எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்”

அமைதியானேன். எதிர்முனையிலும் அமைதி. கிட்டத்தட்ட அரை நிமிடத்துக்குப் பிறகு, “ஹலோ”

“இந்த டைம் போதும்ல. இப்ப சொல்லு”

“டேய்..”

“ப்ளீஸ் மாலா. காக்க வைக்காத”

“சரி ரெண்டு நிமிசமோ ரெண்டு நாளோ இதேதான் என்னோட பதிலா இருக்கப் போவுது”

“என்ன என்ன என்ன”

“தேவா, நீ எனக்கு ஒரு நல்ல ஃப்ரண்ட். ஓமனாவை விட, செந்திலை விட, உன்னை எனக்கு ரொம்ப க்ளோஸா நான் நினைக்கிறேன்.”

“சரி”

“ஆனா..”

“ஆனா?”

“ஆனா உன்னை என்னோட காதலனாவோ கணவனாவோ ஏத்துக்க எனக்கு எதுவோ தடுக்குது. சாரிப்பா”

ட்வின் டவர் மேல் ஏரோப்ளேனை வைத்து இடித்துவிட்டு சாதாரணமாக சாரி என்கிறாள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் தான் தப்பாக நினைத்துவிட்டேனோ? ஆனால் செந்தில் கூட சொன்னானே? அப்படித்தான் இருக்கும் என்று? திடீரெண்டு நாக்கு வரண்டு போனது. டீஹட்ரேட் ஆனது போல நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டிக் கொண்டது.

“இதுதான் உன் முடிவா?”

(தொடரும்)


அடுத்த பாகம் இங்கே

Friday, June 15, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 8மாலா நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தாள். அவள் பார்வையைச் சந்திக்கத் திராணியில்லாமல் தலையைக் குனிந்தேன்.

“நீ வாழ்க்கை முழுக்க இப்பிடி என் கையைப் பிடிச்சிட்டு என் கூடவே வரணும்னு விரும்புறேன். ஐ லவ் யூ மாலா”…

சொல்லிவிட்டு மாலாவின் கண்களைச் சந்தித்தேன். என்னால் அந்தக் கண்கள் என்ன சொல்கிறது என்பதை மொழிபெயர்க்க முடியவில்லை. சந்தோசமா, அதிர்ச்சியா, கோபமா, குழப்பமா? தெரியவில்லை. ஆனால் என் மனதில் இப்போது ஒரு நிம்மதி. ஏற்றியிருந்த பாரத்தை இறக்கிவிட்டுவிட்டதைப் போல. இனி என் காதலை மாலா ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கவலை இல்லை.

மாலா பதில் ஏதும் பேசாமல் என்னையே பார்த்தாள். “இப்ப நீ நியூயார்க் போய்ச் சேர்றதுதான் முக்கியம். முதல்ல ஃப்ளைட்ல ஏறு. அங்க போன பிறகு பேசிக்கலாம்.”

அதற்கு மேல் மாலாவை வற்புறுத்தவும் விரும்பவில்லை. அவள் ஒரு வேளை மறுத்துவிட்டால், நான் நியூ யார்க் போகாமல் வழியிலேயே எங்காவது ஓடிப்போனாலும் போய்விடுவேன். மறுபடியும் செந்திலுக்கும் ஓமனாவுக்கும் விடை கொடுத்துவிட்டு மாலாவை அர்த்தத்துடன் பார்த்துக்கொண்டே நகர்ந்தேன். கண்களைச் சுருக்கி தலையைச் சாய்த்து என்னைப் பார்த்து சிரித்தாள். முதல் முறை பஸ்ஸில் என்னைப் பார்த்துச் சிரித்த அதே மேனரிஸம். நானும் இமைகளை மூடி தலையை அசைத்துவிட்டு திரும்பி செக்யூரிட்டி செக் இன் நோக்கி நகர்ந்தேன்.

எப்படி விமானம் ஏறினேன், எப்படி லண்டனில் மாறினேன், நியூயார்க் வந்து சேர்ந்தேன் என்று நினைவில்லை. நியூயார்க்கில் இறங்கியதும் இமிக்ரேஷனில் சின்ன சிக்கல். என் எச்.ஒன் விசாவில் ஏதோ கோளாறு என்று இரண்டு மணி நேரம் ஒரு அறையில் உட்கார வைத்துவிட்டார்கள். யார் யாருக்கோ தொலை பேசிய பின்னர் ஒரு வழியாக அனுமதி கிடைத்து கஸ்டம்ஸ் கிளியர் செய்து வெளியே வந்தேன். ரீனாவைக் காணவில்லை. கைப்பைக்குள் இருந்த ஹோட்டல் ரிசர்வேஷன் காப்பியை எடுத்து ஹோட்டல் முகவரியைப் பார்த்தேன். 42வது தெருவில் இருந்தது. ஏர்ப்போர் வாசலிலேயே டாக்ஸிகள் பல இருந்தன. பெரும்பாலான டிரைவர்களுக்கு இந்திய முகங்கள். ஓரிருவர் வந்து இந்தியில் கதைக்கவும் செய்தார்கள். ஓரளவுக்கு அப்பாவியாகத் தெரிந்த ஒருவரைத் தெரிவு செய்து, ஹில்டன் ஆன் த 42nd Street என்றேன். முகமெல்லாம் சிரிப்புடன் பெட்டியை வாங்கி டிக்கிக்குள் தள்ளினார். பின் சீட்டில் ஏறிக் கொண்டேன். எனக்கும் முன் சீட்டுக்கும் நடுவில் ஃபைபரால் ஆன தடுப்பு. ஒரு சிறிய சன்னல் மட்டுமே திறக்கக் கூடிய வகையில். அது கூட டிரைவர் நினைத்தால் தான் திறக்க முடியும்.

“தமிழா சார்?”

அட நம்மூர்க்காரர் போலிருக்கிறதே.. “ஆமாங்க. திருநெல்வேலி. நீங்க?”

“நான் வேலூர் சார். இங்க வந்து 20 வருசமாச்சி”

ம்ஹ்ம். நாமெல்லாம் பி.இ படித்து ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து இங்கே வரவே தலையால் தண்ணீர் குடிக்க வேண்டிய அளவுக்கு பேப்பர் ஒர்க் செய்ய வேண்டியிருக்கிறது. இவர் எப்படி இங்கே சுலபமாக வந்து டாக்ஸி ஓட்டிக் கொண்டிருக்கிறார்? ஆச்சரியமாக இருந்தது.

“என்ன சார், இந்த நாட்டுக்கு வந்து எப்பிடி டாக்ஸி ஓட்டுறேன்னு ஆச்சரியப் படுறியா?”

“ஆமாங்க.”

“என் வொய்ஃப் ஈழத் தமிழ்ப் பொண்ணு சார். அதான் இங்க வந்துட்டோம்”

“நல்லது”

“நீ என்ன சாஃப்ட்வேர் ஃபீல்டா சார்?”

“ஆமாங்க”

“நம்மூர் பசங்க. இந்த ஊர்ல ஒண்ணு சாஃப்ட்வேருக்கு வர்றாங்க, இல்லை படிக்க வர்றாங்க”

“ம்ம்”

“42ண்ட் ஸ்ட்ரீட் ஹில்டன் ரொம்பப் பெரிய ஓட்டல் சார். கம்பெனி காசா?”

“ஹி ஹி ஆமாங்க”

“பக்கத்துல தான் டைம் ஸ்கொயர். ஈவினிங், வீக்கெண்ட் எல்லாம் சும்மா ஜெகஜ்ஜோதியா இருக்கும். எஞ்சாய் பண்ணு சார்”

“சரிங்க”

அதற்குப் பிறகும் பேச்சை நிறுத்தாமல் பேசிக் கொண்டே வந்தார். பெரும்பாலானவை நியுயார்க்கில் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பதாகவே இருந்தது. இந்த லெக்சரை பல முறை பலர் வாயால் கேட்டிருந்த படியாலும், பயணக் களைப்பாலும் கொட்டாவிகளாக விட்டுக் கொண்டே வந்தேன். ஒரு வழியாக ஹில்டன் வாசலில் இறக்கி விட்டு விட்டு, ஐம்பது டாலர் கேட்டார். பலர் சொல்லியிருந்த படியால் 10 டாலர் டிப்ஸையும் சேர்த்து $60 கொடுத்துவிட்டு ஹோட்டலில் செக் இன் செய்தேன். குளித்துவிட்டு படுக்கையில் விழுந்தவன் தூங்கிப் போனேன். கனவில் மாலா வந்து என்னுடன் டூயட் பாடினாள். டைரியில் எழுதிக் கொண்டே, நியூயார்க் நகரம் உறங்கும்போது என்று சூர்யாவின் உடையில் பாட்டுப் பாடினேன். தலைக்குள் யாரோ மணியடிக்கவே எழுந்தேன். யாரோ அல்ல, ஃபோன்.

“ஹலோ”

“டேய் எருமை. போய்ச் சேர்ந்ததும் ஃபோன் பண்ணச் சொன்னேன்லடா நாயே. ஏண்டா ஃபோன் பண்ணலை?”

சுத்தமாகத் தூக்கம் கலைந்து விட்டது. மாலா. “சாரி மாலா. டயர்டா இருந்ததா, தூங்கிட்டேன்”

“போடா பன்னி. இங்க ஒருத்தி மூணு நாளா தூங்காம உன் ஃபோனுக்காகக் காத்திருக்கேன். நீ கூலா தூங்கிட்டேன்னு சொல்ற. கொஞ்சமாச்சும் அறிவு இருக்காடா?”

“அதான் சாரி சொல்லிட்டேன்ல மாலா” கடைசி வார்த்தையைச் சொல்லும்போதே மாலாவின் குரல் தழுதழுத்தது அப்போதுதான் உரைத்தது. இப்போது அந்தப் பக்கம் விசும்பல்கள் தான் கேட்டுக் கொண்டிருந்தன.

“ஏய் மாலா அழறியா என்ன?”

...

“பதில் சொல்லு மாலா”

“டேய், ட்ராவல் எப்பிடிடா இருந்தது? பிரச்சனை ஒண்ணுமில்லையே?”

“செந்தில்.. அதெல்லாம் ஒண்ணுமில்லைடா. மாலா எதுக்கு அழறா?”

“அது ஒண்ணுமில்லைடா. உன் இமிக்ரேஷன்ல ஏதோ சிக்கல்னு சொல்லிட்டு இருந்தா. இங்க நம்ம மேனேஜருக்கும், க்ளையண்ட் மேனேஜருக்கும், யுஎஸ் BAMக்கும் ஃபோன் போட்டிருந்திருக்காங்க. அது என்னாச்சின்னு ஸ்டேட்டஸ் எங்களுக்கும் சொல்லலை. நீயும் ஃபோன் பண்ணலையா. அதான் ரொம்ப கவலைப் பட்டுக்கிட்டே இருந்தா. நான் தான் ஹில்டன் ஃபோன் நம்பர் நெட்ல பிடிச்சி ஃபோன் பண்ணி பாக்கலாம்னு சொன்னேன். நீ என்னடான்னா ஹாயா செக் இன் பண்ணிட்டு தூங்கிட்டு இருக்க”

அப்போதுதான் என் பைத்தியக்காரத்தனம் உரைத்தது.

“டேய் சாரிடா. டயர்ட்னெஸ்ல என்ன செய்யறேன்னு தெரியாம தப்பு செஞ்சிட்டேன். சாரி சொல்லிட்டேண்டா. அழுகைய நிறுத்திட்டாளா?”

செந்தில் இப்போது மெல்லிய குரலில், “சொல்லிட்டியாமேடா? ஓமனா கிட்ட மாலா சொல்லியிருக்கா.. உன்கிட்ட பதில் எதுவும் சொன்னாளா?”

“இல்லைடா செந்தில். ஊருக்குப் போன பிறகு பேசிக்கலாம்னு சொல்லிட்டா. ஓமனா கிட்ட வேற எதுவும் சொன்னாளா?”

“இல்லடா. அவ வேற ஒண்ணும் சொல்லலை”

“சரி அவ ரியாக்‌ஷன் எப்பிடி இருந்திச்சாம்? சந்தோசமா இருந்தாளா இல்ல கவலையா இருந்தாளா?”

“கேட்டேண்டா. அவகிட்ட எந்த ரியாக்‌ஷனையும் பார்க்க முடியலைன்னு ஓமனா சொன்னா”

ஏமாற்றமாக இருந்தது. ஒரு பக்கம் என்னிடம் இருந்து தகவலே இல்லை என்று விசும்பி விசும்பி அழுகிறாள். இன்னொரு பக்கம் காதலைச் சொல்லியும் எந்த ரியாக்‌ஷனையும் காட்ட மாட்டேன் என்கிறாள். ஆழம் எது அய்யா, அந்த பொம்பள மனசு தான்யா என்று சால்வை சுற்றிப் பாடும் சந்திரசேகர் போல உணர்ந்தேன்.

“சரி செந்தில் அவ கிட்ட குடு”

பத்து செகண்ட் மவுனத்திற்குப் பிறகு, உடைந்த குரலில், “ஹலோ”

“மாலா”

“ம்”

“சாரி சொல்லிட்டேனே மாலா. நான் செஞ்சது தப்புதான். என்னைய மன்னிச்சி விட்டுரு”

“சரி மன்னிச்சிட்டேன். அதுக்கு தண்டனையா வரும்போது எனக்கு பெர்ஃப்யூம் வாங்கிட்டு வந்துரு. சரியா”

“சரி”

“சரி நீ தூங்கு. காலைல ஆஃபிஸ் வந்துட்டு பேசு”

“மாலா..”

“ம்”

“ஃப்ளைட் ஏற்ரதுக்கு முன்னாடி நான் ஒண்ணு சொன்னேனே”

“லூசு. மொதல்ல தூங்கி ரெஸ்ட் எடு. அதைப் பத்தி அப்புறம் பேசலாம்”

(தொடரும்)


அடுத்த பாகம் இங்கே

போக்கர் விளையாடலாம் வாங்க!!
முன்குறிப்பு-1: போக்கர் (Poker) ஒரு சூதாட்டம். சூதாடுவது எங்க பரம்பரையில யாருக்குமே பழக்கம் இல்லைன்னு நினைக்கிறவங்க அப்டிக்கா லெஃப்ட் எடுத்து போயிட்டே இருங்க.
முன்குறிப்பு-2: ஏற்கனவே போக்கர் விளையாடத் தெரிஞ்சவங்க ரைட் எடுத்துப் போய்க்கிட்டே இருங்க.

  1. போக்கர் ஒரு சீட்டாட்டம். ஒரே ஒரு கட்டு வச்சிட்டு ஆடுற ஆட்டம். இந்த ஆட்டம் ஆட என்ன என்ன தேவைன்னு முதல்ல பார்க்கலாம்.
  2. விளையாட ஆட்கள். குறைந்தது 4 பேராவது இருந்தாத்தான் சுவாரசியமா இருக்கும்.
  3. ஒரே ஒரு சீட்டுக்கட்டு. அதுல இருக்கிற ஜோக்கர் எல்லாம் எடுத்து எறிஞ்சிடுங்க. புதுக் கட்டா இருக்கிறது நல்லது. அட்டையோட பின் பக்கத்தை வச்சி என்ன கார்டுனு கண்டுபிடிக்கிற அளவுக்கு பழைய கட்டுகள் கதைக்காவாது.
  4. சிப்ஸ். சைட் டிஷா வச்சிக்கிற சிப்ஸ் இல்லை. சில பல ஹாலிவுட் படங்கள்ல பார்த்திருப்பீங்களே. வட்ட வட்டமா ப்ளாஸ்டிக் வில்லைகளை ஒரு கையில சரக்க வச்சிக்கிட்டு டேபிள்க்கு நடுவுல வீசி வீசி எறிவாங்களே. அதுதான் சிப்ஸ். இதை ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு மதிப்பு (காசு மதிப்பு) வச்சிக்கணும்.
  5. பணம். இதை Buy-Inனு சொல்லுவாங்க. மொத்த ஆட்டத்துக்கும் எவ்வளவு buy-inஅப்பிடின்னு முதல்லயே முடிவெடுத்துடுங்க. அந்தப் பணத்தை பொறுப்பா ஒருத்தர் வசூல் பண்ணி வச்சிக்கிட்டு (சிட் ஃபண்ட் நடத்துற நண்பர்கள் இருந்தா அவங்க கையில குடுத்துறாதீங்க) அதுக்கு சமமான சிப்ஸ் அவங்களுக்குக் குடுத்திரணும். எந்த ரவுண்ட் வரைக்கும் buy-in செய்யலாம்ங்கிறதையும் முடிவெடுத்துடுங்க.
  6. டீலர். இது வழக்கமா ஃப்ரண்ட்ஸா விளையாடும்போது ரம்மில ஒவ்வொருத்தரா கலைச்சிப் போடுற மாதிரி செஞ்சிக்கலாம். கேஸினோவுக்கெல்லாம் போய் விளையாண்டிங்கன்னா அங்க டீல் செய்ய ஒருத்தர் இருப்பாங்க. அவங்க தான் ரூல்ஸ்படி நடக்கறீங்களான்னும் பார்த்துக்குவாங்க.
  7. ஒரு ஆட்டத்துக்கு மினிமம் பெட் எவ்வளவுங்கிறதையும் முடிவு செஞ்சிக்கணும்.


இதெல்லாம் போக சரக்கு வச்சிக்கிறதும் வச்சிக்காததும் அவங்க அவங்க இஷ்டம். பெரும்பாலும் வெள்ளிக்கிழமை ராத்திரி வீட்டம்மணிங்க எல்லாம் தூங்கின பிற்பாடு சரக்கை சரிச்சிக்கிட்டே விளையாட ஏத்த விளையாட்டு போக்கர்.

இப்ப எப்பிடி விளையாடுறதுன்னு பார்ப்போம். முதல்ல சீட்டுக்கட்டை விரிச்சி வைச்சி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சீட்டு எடுக்கணும். யார் பெரிய சீட்டு எடுக்கறாங்களோ அவங்க தான் ஃபர்ஸ்ட் ரவுண்டுல டீலர். எடுத்த சீட்டு வரிசைப்படி உக்காந்துக்கணும். டீலருக்கு அடுத்து இருக்கிற ஆள் ஸ்மால் ப்ளைண்ட்(Small blind), அவருக்கு அடுத்து இருக்கிறவர் பிக் ப்ளைண்ட் (Big Blind).

ஸ்மால் ப்ளைண்ட்: ஒரு ஆட்டத்துக்கு மினிமம் பெட் எவ்வளவோ அதுல பாதியை இவர் கண்டிப்பா கட்டியே ஆகணும். சீட்டு என்னன்னு பார்க்கிறதுக்கு முன்னாடியே இவர் கட்டியாகணும்.
பிக் ப்ளைண்ட்: மினிமம் பெட் முழுக்க இவர் கண்டிப்பா கட்டியே ஆகணும். இவரும் சீட்டைப் பார்க்கிறதுக்கு முன்னாடியே கட்டணும்.

இப்ப டீலர் ஒவ்வொருத்தருக்கும் ரெண்டு ரெண்டு சீட்டு போடுவாரு. ரம்மி மாதிரியே ஒவ்வொரு சீட்டாத்தான் போட்டுட்டு வருவார். ஸ்மால் ப்ளைண்ட்ல ஆரம்பிச்சி, டீலர்ல முடிக்கணும். இப்பவே எல்லாரும் அவங்களுக்கு வந்திருக்கிற சீட்டைப் பார்த்துக்கலாம்.

அடுத்ததா, பிக் ப்ளைண்டுக்கு அடுத்து இருக்கிற ஆட்டக்காரர், இந்த ரவுண்டுல கலந்துக்கிறதா இல்லையான்னு முடிவெடுப்பாரு. கலந்துக்கிறதா இருந்தா குறைந்த பட்சம் மினிமம் பெட்டைக் கட்டணும். அதுக்கு மேலயும் கட்டலாம். விளையாட விரும்பலைன்னா ஃபோல்ட் (fold)னு சொல்லி கார்டைக் காட்டாமலே டீலர்கிட்ட குடுத்துரணும்.
இது மாதிரி ஒவ்வொருத்தரா செஞ்சிட்டே வருவாங்க. ஒரு வேளை யாராவது மினிமம் பெட்டுக்கு மேல (இது குறைந்த பட்சம் மினிமம் பெட் அளவுக்கு இருக்கணும்) கட்டினா (அதை raiseனு சொல்லுவாங்க) அடுத்த ஆட்டக்காரர்ல இருந்து முந்தின ஆட்டக்காரர் வரைக்கும் அந்தத் தொகையை மேட்ச் பண்ணனும்.

இப்ப யாரும் ரெயிஸ் பண்ணலைன்னு வச்சிக்குவோம். பிக் ப்ளைண்ட் (இவர் தான் முதல்லயே மினிமம் பெட் கட்டினவர்)க்கு ரெண்டு சாய்ஸ் உண்டு. ஒண்ணு தொகையை ரெய்ஸ் பண்ணலாம். அல்லது செக் (Check) அப்பிடின்னு சொல்லலாம். செக்னு சொன்னா, டீலருக்கு வேலை.

இப்ப டீலர் என்னா செய்யணும்னா, எல்லாருக்கும் ரெண்டு ரெண்டு சீட்டு போட்டது போக மீதி இருக்கிற சீட்டுக்கட்டுல மேல இருக்கிற சீட்டை எடுத்து கடைசியில வச்சிக்கிட்டு – இதை burnனு சொல்லுவாங்க, அதாவது எரிக்கிறது – அடுத்த மூணு கார்டை திருப்பிப் போடுவார் . இதுதான் ஃப்ளாப் (flop). இப்ப நம்ம கையில இருக்கிற ரெண்டு சீட்டையும் டேபிள் மேல இருக்கிற மீதி மூணு சீட்டையும் மேட்ச் செஞ்சி பாத்துட்டு வின்னிங்க் காம்பினேஷன் (இதை அப்புறம் பார்ப்போம்) வரும்னு நினைச்சா மேல பெட் கட்டலாம். அதாவது ரெய்ஸ் பண்ணலாம்.

முதல் ரெய்ஸ் பண்ற வாய்ப்பு ஸ்மால் ப்ளைண்டுக்கு (அவர் தானப்பா ஃபர்ஸ்ட் சீட்டை வாங்கினாரு). ரெய்ஸ் பண்ண விரும்பலைன்னா செக்னு சொல்லிடலாம். வேற யாராவது ரெய்ஸ் பண்ணா அதை எல்லாரும் மேட்ச் பண்ணனும். இது கதைக்காவாதுன்னா ஃபோல்ட் பண்ணிடலாம். ஆனா இதுவரைக்கும் கட்டின பெட் வடை போச்சுதான்.

எல்லோரும் மேட்ச் பண்ணதும், அடுத்த கார்டை burn செஞ்சிட்டு, அதுக்கு அடுத்த கார்டை திருப்பிப் போடுவாரு. இதுக்குப் பேரு டர்ன் (turn). மறுபடி மேல சொன்ன மாதிரி எல்லாருக்கும் இன்னுமொருமுறை ரெயிஸ் செய்யவோ இல்லை checkனு இருக்கிற தொகையையே தொடரவோ வாய்ப்பு.

நிற்க. இடையிலயே எல்லாரும் ஃபோல்ட் செஞ்சிட ஒருத்தர் மட்டும் மிச்சமிருக்கவும் வாய்ப்பு இருக்கு. அந்தக் கட்டத்துல மிச்சமிருக்கிற ஆள் ஜெயிச்சவராகிடுவார்.
மண்டை சுத்துதா? எத்தனை பேரு மங்காத்தாவே ஆடிக்கிறோம் சாமின்னு கிளம்பிட்டீங்கன்னு தெரியலை. யாராவது இன்னும் இருந்தீங்கன்னா தொடர்றேன்.

இந்த ரவுண்ட் பெட் கட்டினதும், அடுத்த கார்டை burn செஞ்சிட்டு, அதுக்கு அடுத்த கார்டை திருப்புவாரு. இதுக்குப் பேரு ரிவர் – rivar. இதுக்குப் பிறகு இன்னொரு ரவுண்டு ரெயிஸ், செக்னு ஓடும்.

கடைசியா எல்லாரும் கார்டை திருப்பிக் காட்டணும். யாரு ஜெயிச்சாங்கன்னு பார்த்து அவங்க பெட் கட்டின (இதை பாட் மணின்னு சொல்லுவாங்க) எல்லா காசையும் (சிப்ஸாத்தான்) வழிச்சிக்குவாங்க.

இப்ப யாரு ஜெயிச்சான்னு எப்பிடி கண்டு பிடிக்கிறது. (அடங்கொன்னியா நான் ஜெயிப்பேனான்னு தெரியாம எப்பிடிடா பெட் கட்டுறது? இதையில்லடா மொதல்ல சொல்லியிருக்கணும்ங்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது). நம்ம கையில இருக்கிற ரெண்டு கார்டு (அல்லது ரெண்டுல ஒரு கார்ட்) + டேபிள்ல இருக்கிற அஞ்சுல மூணு கார்ட் (அல்லது நாலு கார்ட்) சேர்த்து வின்னிங் காம்பினேஷன்ல ஒண்ணா இருக்கணும். அதுலையும் ஒரு காம்பினேஷன் இன்னொரு காம்பினேஷனை பீட் பண்ணும். ஆக இருக்கிறதுலையே கூடின காம்பினேஷனா இருந்தா நாம தான் வின்னர்.

என்ன என்ன வின்னிங் காம்பினேஷன்னு பார்க்க முன்னாடி, suit அப்பிடின்னா, ஒரே பூ( அதாவது க்ளாவர், ஹார்ட்ஸ், ஸ்பேட், டைஸ் இது நாலுல ஒண்ணு).
ஃப்ளஷ் – Flush – அப்பிடின்னா ஒரே பூவுல 5 கார்ட்னு அர்த்தம்.
ஸ்ட்ரெயிட் – Straight – அப்பிடினா ஒரு வரிசையில (2,3,4,5,6 அல்லது 9,10,J,Q,K) இந்த மாதிரி இருக்கிற 5 கார்ட்ஸ். (JQKA2 அப்பிடின்னு wrap around பண்ணக்கூடாது. கரெக்ட் ரம்மி மாதிரியே தான்).
பெர் – pair – ஒரே நம்பர்ல ரெண்டு கார்ட்.
Three of a kind – ஒரே நம்பர்ல மூணு கார்ட்
Four of a kind – ஒரே நம்பர்ல நாலு கார்ட்
இதெல்லாம் புரிஞ்சதா? இப்ப எது பெரிய கை எது சின்ன கைன்னு பார்ப்போம்.

1.    ராயல் ஃப்ளஷ் – Royal Flush – அதாவது ஒரே பூவுல 10 J Q K A னு வச்சிருக்கிறது.
2. ஸ்ட்ரெயிட் ஃப்ளஷ் – Straight Flush – அதாவது ஒரே பூவுல அஞ்சு நம்பர் வரிசையா வர்றது.
3.    Four of a kind
4.  Full House – அதாவது ஒரு நம்பர்ல மூணு கார்டும், இன்னொரு நம்பர்ல ரெண்டு கார்டும் (ஒரு pairம் ஒரு three of a kindம்)
(என்னது அஞ்சும் ஒரே நம்பரா?? பாஸ் நீங்க போய் பாதியில விட்டுட்டு வந்த தட்டாங்கல்லை கண்டினியூ பண்ணுங்க ப்ளீஸ்)
5.  Flush
6.  Straight
7.  Three of a kind (இதுல ரெண்டு பேரு three of a kind வச்சிருந்த பெரிய நம்பர் யார் வச்சிருக்காங்களோ அவங்க தான் ஜெயிச்சவங்க)
8. Two pairs (ரெண்டு நம்பர்ல ரெண்டு ரெண்டு கார்ட். இதுலையும் ரெண்டு பேரு Two pairs வச்சிருந்தா பெரிய நம்பர் தான் ஜெயிக்கும்)
9. Pair – இதுலையும் ரெண்டு பேரு ஜோடி வச்சிருந்தா பெரிய ஜோடி தான் ஜெயிக்கும்.
10. High Card  யாருமே மேல இருக்கிற 9 காம்பினேஷன்ல எதுவுமே வச்சிருக்கலைன்னா, இருக்கிறதுலையே பெரிய கார்டு யார் கையில இருக்கோ அவங்க தான் ஜெயிச்சவங்க. (இது ரொம்ப அரிதாத்தான் நடக்கும்).

இப்ப ஒரு எக்ஸாம்பிள் பார்ப்போம். நாலு பேரு இருக்காங்க. அவங்க அவங்க கையில கார்ட் இருக்கு.
          முதல் ஆள் கையில  2§ 2©
          ரெண்டாவது ஆள் கையில 8¨ 8§
          மூணாவது ஆள் கையில A© 8©
          நாலாவது ஆள் கையில 4ª 5ª
         டேபிள் மேல Aª 2ª 3ª A¨ 8ª
இப்போ முதல் ஆள் – ஃபுல் ஹவுஸ் மூணு 2 & ரெண்டு A.
இரண்டாவது ஆள் – ஃபுல் ஹவுஸ் – மூணு 8 & ரெண்டு A 8, 2ஐ விட பெருசுங்கிறதால முதல் ஆள் அவுட்டு
மூணாவது ஆள் – ஃபுல் ஹவுஸ் – மூணு A & ரெண்டு 8. A, 8ஐவிட பெருசுங்கிறதால ரெண்டாவது ஆளும் அவுட்டு.
நாலாவது ஆள் – ஸ்ரெட்யிட் ஃப்ளஷ் – A, 2, 3, 4, 5 இந்த வரிசை, ஒரே ஸூட் ல இருக்கிறதால மூணாவது ஆளும் அவுட்டு. இவர் தான் ஜெயிக்கிறார்.
(குறிப்பு: மேல உள்ள கேம் Casino Royale படத்துல வர்ற போக்கர் டோர்னமெண்ட்டோட கடைசி  கேம். பாண்ட் கையில Straight Flush தான் இருக்கும்)

இதுல எல்லாரும் இப்பிடி உண்மையா விளையாடணும்னு அர்த்தம் இல்லை. யாராவது ரெண்டாவது ரவுண்ட்லயே Bluff செய்வாங்க. அதாவது, அவங்க கையில பெரிய கார்ட் எதுவும் இருக்காது. ஆனாலும் மத்தவங்களை பயமுறுத்த பெரிய தொகையைக் கட்டுவாங்க. மத்த ப்ளேயர்ஸ் பயந்து ஃபோல்ட் செஞ்சிட்டுப் போயிருவாங்க. அப்ப எல்லாரும் அதுவரைக்கும் கட்டுன பெட் எல்லாம் இவங்களுக்குத்தான். இப்படி எல்லாரும் ஃபோல்ட் செஞ்ச பிறகு ஜெயிச்சோம்னா நம்ம கையில இருக்கிற கார்டைக் காட்ட வேண்டியதில்லை. நீங்க ஒரு வேளை Bluff செஞ்சிருந்தீங்கன்னா காட்டாம இருக்கலாம். காட்டினீங்கன்னா அடுத்த வாட்டி bluff பண்ணும்போது நம்ப மாட்டாங்க. (bluff செஞ்ச பிறகு காட்டுறதிலையும் ஒரு அட்வாண்டேஜ் இருக்கு. அடுத்த வாட்டி நிஜமாவே நல்ல கார்ட் வச்சிருக்கும்போது நீங்க Bluff செய்யறதா நினைச்சி உங்களை மடக்க பெட்டை நல்லா ஏத்தி விடுவாங்க. நீங்க double bluff செய்யலாம்)

இந்த விளையாட்டுல எதிராளிகளோட ரியாக்‌ஷன்ஸை கவனிக்க வேண்டியது முக்கியம். நம்மில பலருக்கு பொய் சொல்லும்போது வியர்க்கும், அல்லது கை லேசா நடுங்கும், இல்ல மத்தவங்களை கண்ணோட கண் பார்க்க பயப்படுவாங்க. இதையெல்லாம் நோட் பண்ணனும். உண்மையிலேயே நல்ல கை வந்திருச்சின்னா, அவங்களை அறியாமலே மகிழ்ச்சியை வெளிப்படுத்துவாங்க (excited). அதிகப்படியா பெட் கட்டுவாங்க. அப்ப ஜாக்கிரதையா ஃபோல்ட் செஞ்சிட்டோம்னா நம்ம காசு பொழைக்கும். நாமும் பெரும்பாலும் நம்ம ரியாக்‌ஷனைக் காட்டிக்காம இருக்கிறது நல்லது. எப்பவும் ஒரே அளவுல பெட் கட்டுறது, அடிக்கடி ஃபோல்ட் பண்றது இதெல்லாம் நம்மை ஒரு ஜென்யூன் ப்ளேயராக் காட்டும். அப்பப்ப bluff செஞ்சிக்கலாம்.

சரி ஃப்ரண்ட்ஸ் இல்லை, இருந்தாலும் காசு கட்டி ஆட விரும்பலைன்னு சொல்றவங்களும் இருப்பாங்க. உங்களுக்காகத்தான் Facebook மாதிரி சமூகத் தளங்கள்ல இலவசமா poker விளையாட்டுகள் நடத்துறாங்களே? பிற நண்பர்களோட சேர்ந்து அங்க போய் போக்கர் விளையாடுங்க.

கடைசியா, போதையோ சூதோ, உங்களை சுலபமா அடிமைப் படுத்திடும். கார்டை கையில பிடிக்கிறது எப்பிடின்னு உங்களுக்குத் தெரியிறது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் கார்டை எப்பக் கீழ போடுறதுன்னு தெரிஞ்சிக்க வேண்டியது. ஆகவே விளையாடுங்க, எஞ்சாய் பண்ணுங்க. ஆல் த பெஸ்ட். 

Stick It (2006) - என் பார்வை

நான் கிரிக்கெட் விளையாட்டின் ரசிகன். கிரிக்கெட் போட்டிகளில் ஒரு சில முறை நடுவர்கள் தவறான முடிவால் ஆட்டத்தின் போக்கே மாறிப்போவதுண்டு. அதே போல கால்பந்தாட்டத்திலும், நடுவரின் கவனக்குறைவால் பெனால்டி கிக் எல்லாம் எதிரணிக்குப் பரிசளிக்கப்பட்டு அந்த அணி வெற்றி பெறக் காரணமாய் இருக்கிறது. 

நடுவர்களின் கவனக்குறைவையோ அல்லது சில இந்திய, இலங்கை நடுவர்களைப் போல பக்கச்சார்பான நடுவர்களோ இருந்தாலும் அதையும் மீறி வீரர்களின் திறமையால் வெற்றியைத் தட்டிப் பறித்த ஆட்டங்கள் பல உண்டு. 

ஆனால் நடுவர்களால் மட்டுமே வெற்றி தோல்வி தீர்மானிக்கப் படும் விளையாட்டுகளில் வீரர்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் நடுவர்கள் மனது வைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலமை இருந்தால்?

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் பார்த்திருப்பீர்கள். யாராவது ஒருவர் மிக நன்றாக பாடியிருப்பார். நாமும் ஆகா அருமையா பாடுனான்யா, ஃபுல் மார்க் வாங்கிருவான் என்று நினைத்திருப்போம். நடுவர்களில் ஒருவர், நன்னா பாடினேள், ஆனா உச்ச ஸ்தாயில சங்கதி கொஞ்சம் மிஸ்ஸாயிடுத்து. ரெண்டாவது ச்சரணம் பாடுறச்சே கொஞ்சம் ஸ்ருதி பிசகிடுத்து. அடுத்த தடவை நன்னாப் பாடுங்க. காட் ப்ளெஸ் என்று நம் முகத்தில் கரி பூசுவார். பல முறை சூப்பர் சிங்கர் போட்டிகளில் பக்கச்சார்பு இருப்பது பலர் பேசியிருக்கிறார்கள்.

சரி இது டிவியில் வரும் ரியாலிட்டி ஷோ. இதில் டி.ஆர்.பிக்காக டிவிக்காரர்கள் கொஞ்சம் முன்னே பின்னே செய்யத்தான் செய்வார்கள். விளையாட்டிலும் கூடவா என்று கேட்கலாம். ஆம் சாமி இருக்கிறதே..

ஜிம்னாஸ்டிக்ஸ் என்றொரு விளையாட்டு. அதில் பல events உண்டு. vault, uneven bars, floor, balance beam என. இதில் ஒவ்வொரு eventலும் வீரர்கள் தங்கள் உடற்பயிற்சித் திறமையைக் காட்டுவார்கள். அதை நடுவர்கள் மதிப்பிட்டு மானாட மயிலாட போல ஒரு ஸ்கோர் போடுவார்கள். யார் அதிக ஸ்கோர் பெறுகிறார்களோ அவர்கள் பதக்கம் பெறுவார்கள். உள்ளூர் ஜிம்னாஸ்டிக்ஸில் இருந்து ஒலிம்பிக் போட்டிகள் வரை இதுதான் வரைமுறை. 

இதில் வீரர்கள் திறமையை விட, அவர்கள் விதிகளை ஒழுங்காகப் பின்பற்றுகிறார்களா என்பதையே நடுவர்கள் அதிகம் கவனிக்கிறார்கள் என்ற ஒரு குறையை வீரர்களும் கோச்களும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அதாவது ஒருவன்/ஒருத்தி எப்படி பெர்ஃபார்ம் செய்கிறார் என்பதை விட என்ன தவறு செய்கிறார் என்பதையே நடுவர்கள் பார்க்கின்றனர் என்கிறார்கள். விதிகள் என்றால் சில்லறைத்தனமான விதிகளும் உண்டு - வீராங்கனைகளின் பிரா பட்டி தெரிகிறது என்பதற்கெல்லாம் கூட 1/10 ஸ்கோர் குறைத்துவிடுவார்கள். மடத்தனமாக இருக்கிறதுதானே?2006ம் ஆண்டு வெளிவந்த Stick It என்ற திரைப்படம் இந்தக் குறையைத்தான் பேசுகிறது. ஹேலி கிரஹாம் என்ற இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை. இவர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அமெரிக்கா சார்பாக கலந்து கொள்ளத் தேர்ந்தெடுக்கப் படுகிறார். ஆனால் இவரது பெர்ஃபாமன்ஸுக்கு முன்னால் அவரது அம்மாவுக்கும், கோச்சுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு தெரிய வந்ததும் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிவிடுகிறார். அமெரிக்கா தங்கப்பதக்கத்தை இழந்துவிடுகிறது. ஜிம்னாஸ்டிக்ஸ் ரசிகர்கள் பலரின் கோபத்துக்கு ஆளாகிறார். அந்த சம்பவத்திற்குப் பிறகு ஜிம்னாஸ்டிக்ஸ் பக்கமே தலை வைத்தும் படுக்காமல் இருக்கிறார். ஒரு சைக்கிள் விளையாட்டில் ஒரு வீட்டுக்குள் அனுமதி பெறாமல் (உடைத்துக்கொண்டு)  நுழைந்துவிட, அலாரமடித்து போலிஸ் இவரைக் கைது செய்கிறது. ஜட்ஜ் இவரை வி.ஜி.ஏ என்னும் ஜிம்னாஸ்டிக்ஸ் அகாடமியில் சேர்ந்து பயிற்சி எடுக்கப் பணிக்கிறார். 

அந்த அகாடமியின் கோச் பர்ட் விக்கர்மேன், ஹேலியை மீண்டும் ஜிம்னாஸ்டிக் விளையாட அழைக்கிறார். சேதமடைந்த வீட்டிற்கான நஷ்ட ஈடு கொடுக்க இந்த விளையாட்டு உதவும் என்று அவரை சமாதானப் படுத்தி விளையாட வைக்கிறார். ஆனால் மீண்டும் அவர் அம்மாவின் தலையீட்டினால் பாதி போட்டியிலேயே வெளியேறுகிறார். ஆனாலும் தேசிய சேம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபெற தேர்ந்தெடுக்கப் படுகிறார். அவரோடு அந்த அகாடமியைச் சேர்ந்த இன்னும் மூன்று பேரும் (மினா, ஜோயன்னா, வெய் வெய்) தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

முதல் நாள் ஆல் ரவுண்ட் பெர்ஃபாமன்ஸ். அதில் ஹேலியின் மீதிருந்த கசப்பும், பர்ட் விக்கர்மேனின் மீது இருக்கும் வெறுப்பும் சேர்ந்து நடுவர்கள் ஹேலியை ஏழாவது இடத்துக்குத் தள்ளிவிடுகிறார்கள். அடுத்த நாள் Individual Events championship. அதில் முதலில் vaultல் மினா ஒரு கஷ்டமான பெர்ஃபாமன்ஸ் செய்தும் நடுவர்கள் 9.5/10 என்ற ஸ்கோர் கொடுக்கிறார்கள். காரணம் கேட்கும் பர்ட்டிடம் மினாவின் பிரா பட்டி தெரிந்ததை சுட்டிக் காட்டுகிறார் நடுவர்களில் ஒருவர். வெறுப்படைந்த ஹேலி தனது முறையின் போது வேண்டுமென்றே தனது பிராவின் பட்டையைக் காட்டி ஸ்க்ராட்ச்g செய்து வெளியேறுகிறார். அவரைத் தொடர்ந்து வந்த எல்லா வீராங்கனைகளும் இதே போலவே செய்ய, நடுவர்கள் வேறு வழியில்லாமல் மினாவுக்கு தங்கப் பதக்கம் வழங்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகிறார்கள். 

அதன் பிறகு என்ன நடந்தது. இந்த முட்டாள்தனமான நடுவர்களின் விதிகளை எதிர்த்து வீராங்கனைகளால் என்ன செய்ய முடிந்தது, அதற்கு எதிராக அட்மினிஸ்ட்ரேட்டர் என்ன செய்கிறார்கள் என்பதே படத்தின் கதை.

ஹேலியாக நடித்த Missy Peregrym ஒரு ஜிம்னாஸ்டுக்குத் தேவையான உடல் கட்டும் revolutionary girl பாத்திரத்துக்கான முக மிடுக்குடனும் நடித்திருக்கிறார். Invitational Competition போது அவரது அம்மா அப்பா இரண்டு மடங்கு பணம் கொடுத்ததால் தான் விக்கெர்மென் ஹேலியை அகாடமியில் சேர்த்துக் கொண்டார் என்ற உண்மையைச் சொல்லும்போது உடைந்துபோகும் காட்சியிலும் அதன் பிறகு விக்கெர்மேனிடம் அம்மாவுக்கும் பழைய கோச்சுக்கும் இருந்த தொடர்பைப் பற்றிச் சொல்லும் காட்சியிலும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பர்ட் விக்கெர்மேனாக வந்த ஜெஃப் ப்ரிட்ஜஸ் ஒரு கோச்சுக்குத் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டின் இன்னொரு பக்கத்தை வெளிப்படுத்தும் படம். 

எனக்குப் பொதுவாகவே ஸ்போர்ட்ஸ் மூவிஸ் பிடிக்கும். அந்த வரிசையில் இந்தப் படமும் சேர்ந்து கொண்டது. 


Monday, June 11, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 7மகாராஜா ரெஸ்டாரண்டில் வைத்து ஓமனா, தனக்கும் செந்திலுக்கும் உள்ள காதலைச் சொன்னதும், மாலா எழுந்து ஓமனாவைக் கட்டிக் கொண்டாள். நான் செந்திலுக்குக் கை கொடுத்தேன். மாலாவின் ஆச்சரியம் உண்மையானதாக இருந்தது. பெண்கள் ரகசியத்தைக் காப்பாற்றுபவர்கள்தான் போலும். லஞ்சோடு அவர்களின் காதல் கதையையும் கொறித்துக் கொண்டோம். அவ்வப்போது என் கண்களை உரசிப் போன மாலாவின் பார்வையில் ஏதோ அர்த்தம் தெரிவதாகத் தோன்றியது. வைரமுத்துவின் காதலித்துப் பார் கவிதையும் நினைவில் வந்து போனது.

கிடைத்ததொரு சந்தர்ப்பத்தில் செந்தில் என்னை பார்த்து “சொல்லிட்டியா?” என்று கண்களை உருட்டினான். இல்லை என்பதாய் மௌனமாய் தலையசைத்தேன். “சீக்கிரம் சொல்லிரு” என்று உதடசைத்தான். சரிடா என்று சிக்கன் மஞ்சூரியனை வாய்க்குள் திணித்துக் கொண்டேன்.

சாப்பிட்டு முடிந்ததும் பீடா போட்டுக் கொண்டு செந்திலின் பைக் பின்னால் ஏறப் போக, “மச்சி, நானும் ஓமனாவும் ஷாப்பிங் போறோம்டா. நீ மாலா கூட போயிடு” என்றான். நான் மாலாவைப் பார்க்க, அவள் உட்கார்ந்தவாறே பின்னால் நகர்ந்து “நீயே ஓட்டு” என்றாள்.

முன் பக்கமாக காலைப் போட்டு பல்சரை உதைத்தேன். “எங்க போலாம் மாலா? வீட்டுக்கா?”

“வேணாண்டா. லால் பாக் போலாம் வா”

ஓசூர் ரோடு எடுத்து லால் பாக் நோக்கி வண்டியை விரட்டினேன். அவள் இயல்பாகத்தான் என் தோள்களைப் பற்றியிருந்தாள். எனக்குத்தான் உள்ளே எதோ பற்றியெறிந்தது.

லால் பாக் முழுவதும் பூக்களும் காதலர்களும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தனர். நாங்கள் லால் பாக் வந்தால் வழக்கமாக உட்காரூம் பொட்டானிக்கல் கார்டனை ஒட்டி இருந்த பெஞ்சில் அமர்ந்தோம்.

“ரொம்ப சந்தோசமா இருக்கு தேவா. நம்ம ஃப்ரண்ட்ஸ் ரெண்டு பேர் லவ் பண்றாங்கன்னு தெரிஞ்சிக்கும் போது”

“ஆமா மாலா. திருட்டுப் பயலுவ ரெண்டு பேரும் சொல்லாம கமுக்கமா வச்சிருந்திருக்காங்க பாரேன்”

“சில பேர் அப்பிடித்தான் இருக்காங்க தேவா. என்னோட காலேஜ்லயும் ரெண்டு ஜோடி இப்பிடித்தான் திரிஞ்சாங்க. ஒரு ஜோடி பட்டும் படாம பழகிட்டு இருந்தாங்க. நல்ல ஃப்ரண்ட்ஸ்னு நினைச்சிட்டு இருந்தோம், நாங்க நினைச்சதுக்கு மாறா லவ் பண்றோம்னு வந்து நின்னுச்சிங்க. இன்னொரு ஜோடி ரொம்ப க்ளோஸா பழகுவாங்க. சரி, லவ் பண்றாங்கன்னு நினைச்சிட்டே இருந்தோம். அந்தப் பொண்ணு என்னடான்னா, ஃபைனல் இயர்ல யாரோ ஒரு டாக்டர் மாப்பிள்ளையோட நிச்சயதார்த்தம்னு வந்து நின்னா. அவன் என்னடான்னா நிச்சயதார்த்த வீட்டுல எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செஞ்சிட்டு இருந்தான். நம்பவே முடியறதில்லை”

‘இந்த ரெண்டு ஜோடியின் கதையும் அப்படி ஆகிவிடுமோ? ஒரு வேளை இவள் தனக்கு நிச்சயதார்த்தம் என்று வந்து நின்றால் நான் என்ன செய்வேன்? அந்தப் பையனைப் போல முன்னால் நின்று வரவேற்றுக் கொண்டிருப்பேனோ??’

“என்ன தேவா யோசிக்கிற?”

“ஒண்ணுமில்ல மாலா. எங்க காலேஜ்லயும் இந்த மாதிரி ஜோடிங்க இருந்தது அதை யோசிச்சேன்”

அதன் பிறகு அவள் என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தாள். எல்லாம் இந்தக் காதில் விழுந்து அந்தக் காதுக்குப் போய்க் கொண்டிருந்தது. மாலை ஆக ஆக கூட்டம் அதிகமானது.

“கிளம்பலாமா?”

*************************************

மூன்று மாதங்கள் ஓடிப் போனது. லேசான எதிர்ப்புக்குப் பிறகு ஓமனா வீட்டிலும் செந்திலின் வீட்டிலும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டார்கள். தையில் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவும் ஆனது. காசர்கோட்டில் திருமணம். திருநெல்வேலியில் ரிசப்ஷன் என்று முடிவானது. திருமணத்துக்குப் பிறகு நாங்கள் இப்போது இருக்கும் அப்பார்மெண்டிலேயே குடியேறுவது என்று முடிவெடுத்திருந்தார்கள் ஓமனாவும் செந்திலும். இதே பில்டிங்கிலேயே இன்னொரு அப்பார்ட்மெண்ட் ஏதாவது காலியானால் அதில் குடியேறிவிடலாம். அப்படி காலியாகாத பட்சத்தில் நான் வெளியே போகிறேன் என்று சொல்லிவிட்டேன். அரை மனதுடன் மாலாவும் சம்மதித்தாள். ஒரே வீட்டில் இருந்துவிடலாம் தான். ஆனாலும் எதுவோ தடுக்கிறது. 

இன்னும் திருமணத்துக்கு இரண்டு மாதங்கள் இருக்கின்றன. செந்தில் தினமும் நச்சரிக்க ஆரம்பித்துவிட்டான். “மாலாகிட்ட சொல்லிருடா. அவ கண்டிப்பா ஏத்துக்குவா. நீ வேற வீடு பார்த்துப் போக வேண்டிய தேவை இருக்காது.” என்றெல்லாம் ஓத ஆரம்பித்துவிட்டான். ஆனால் காதலைச் சொல்லிவிட்டால் மட்டும் போதாது, திருமணம் என்பதற்கு என் தங்கையில் ஆரம்பித்து சாதி வரை பல பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை எப்படி அவனுக்குப் புரிய வைப்பது என்று தெரியவில்லை.

அன்று கிளையண்டுடன் மந்த்லி மீட்டிங். டீம் லீடர்களும் மாட்யூல் லீடர்களும் மட்டும் பங்கேற்பார்கள். எனக்கு வேலையில்லை. மாலா பல்சரை என்னிடம் கொடுத்து “நீ போ, நான் கார் ட்ராப்ல வந்துக்குறேன்” என்று அனுப்பிவிட்டாள். நானும் அறைக்கு வந்தேன். செந்திலும் ஓமனாவும் வெளியே சாப்பிடக் கிளம்பினார்கள். எனக்கும் மாலாவுக்கும் பார்சல் வாங்கி வரச் சொல்லிவிட்டு பால்கனியில் நின்று கொண்டு வழக்கம்போல காற்றுமண்டலத்தை அசுத்தப் படுத்திக் கொண்டிருந்தேன். பில்டிங் வாசலில் கார் வந்து நிற்பதும் அதிலிருந்து மாலா இறங்குவதும் தெரிந்தது. சரியாக அடுத்த பத்தாவது நிமிடம் காலிங் பெல் அடித்துவிட்டு திறந்திருந்த கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தாள்.

“தேவா, ஒரு ஹேப்பி நியூஸ்”

“என்ன நியூஸ்?”

“இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம மாட்யூல்ல இருந்து ஒருத்தர் ஆன்சைட்ல கோ-ஆர்டினேட்டரா போகணும்”

“வாவ். நீ போகப் போறீயா?”

“இல்லடா. நான் தான் மாட்யூல் லீடரா இருக்கேனே. நான் அங்க இப்பப் போக முடியாது”

“அப்ப”

“நீதாண்டா போற. நான் கூட உன் பேரை ரெகமெண்ட் பண்ணவேயில்ல. கிளையண்டாவே கேட்டாங்க. உன்னை அனுப்ப முடியுமான்னு. எனக்குக் கசக்கவா செய்யும். சரின்னு சொல்லிட்டேன்”

காதலைச் சொல்ல சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இவள் என்னடாவென்றால் என்னைத் தூரமாக அனுப்பிவிடுவாள் போல? என்ன செய்வது இப்போது? சொந்த பந்தத்தில் யாருமே வெளிநாட்டுக்குப் போனதில்லை. அங்கே போகும் முதல் நபராக இருப்பதில் பெருமை தான். அப்பாவும் அம்மாவும் மகிழ்ச்சியடையத்தான் செய்வார்கள். தங்கையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆனால், மாலாவைப் பிரிந்து..

என் மவுனம் மாலாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்க வேண்டும். “என்னடா, சந்தோசத்துல குதிப்பன்னு நினைச்சா இப்பிடி யோசிக்கிற? ஆன்சைட் போக விருப்பம் இல்லையா?”

“அய்யோ அப்பிடியெல்லாம் இல்லை மாலா. திடீர்னு ஆன்சைட் கோ-ஆர்டினேட்டர்னா கொஞ்சம் பயமா இருக்கு. தோள்பட்டையில எக்ஸ்ட்ராவா ஸ்டார் ஏறினா அவஸ்தைதான்னு நீ கூட மாட்யூல் லீடராகும்போது சொன்னியே”

“அது சரிதாண்டா. ஆனா உன்னைய அப்பிடி அம்போன்னு நான் விட்ருவேனா? அதோட ஆன்சைட் கோ-ஆர்டினேட்டருக்கு உன்னைய விட நல்ல ஆள் எனக்குக் கிடைப்பாங்கன்னு தோணலை. நீ ஒத்துக்கோடா. நாளைக்கே பேப்பர் ஒர்க் ஆரம்பிச்சிரலாம்”

“சரி மாலா. உனக்கு சம்மதம்னா எனக்குப் பிரச்சனை இல்லை”

“தேங்க்யூடா” என்று இயல்பாக என்னைக் கட்டிப் பிடித்து சந்தோசத்தை வெளிப்படுத்திவிட்டு “நான் போய் ரிஃப்ரஷ் பண்ணிட்டு வர்றேன் வெளிய போய் சாப்பிடலாம்” என்று விலகிக் கதவைத் திறந்து ஓடினாள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு பக்கம் இந்த அவஸ்தையிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் போலத் தோன்றினாலும், மாலாவைத் தினமும் பார்க்க முடியாத தூரத்துக்குப் போவது கொஞ்சம் கஷ்டமாயிருந்தது. குழப்பத்துடன் அடுத்த சிகரெட்டையும் காலி செய்தேன்.

மாலா உடை மாற்றிக் கொண்டு வந்தாள். வெள்ளை நிறச் சுடிதார். முடியைப் பின்னாமல் லூஸ் ஹேர் விட்டு இரண்டு கற்றைகளை மட்டும் தோள்களின் மேல் வழியவிட்டிருந்தாள். முகம் கழுவி மெல்லிய பவுடர் பூச்சும் தெரிந்தது. லிப் க்ளாஸ் ட்யூப் லைட் வெளிச்சத்தில் மின்னியது.

“என்னடா இன்னும் லுங்கியிலயே இருக்க. சாப்புடப் போலாம் வா”

“இல்ல மாலா. செந்தில்கிட்ட நமக்கு பார்சல் வாங்கிட்டு வரச் சொல்லியிருந்தேன்”

“அதனால என்ன அதை நாளைக்கு லஞ்சுக்கு எடுத்துக்கலாம். இப்ப வெளிய போலாம் வா”

அரை மனதுடன் உடை மாற்றிக் கொண்டு கிளம்பினேன். லன்ச் சாப்பிடும் நேரம் முழுக்க ஆன்சைட் கோ-ஆர்டினேட்டரிடம் ஒரு மாட்யூல் லீடராக அவள் எதிர்பார்ப்பது என்ன என்ற லெக்சர் தான் ஓடியது. ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் நிறுத்திக்கோ மாலா என்று வாய் விட்டு சொல்லிவிட்டேன். இந்த ஏற்பாட்டில் இருந்த இன்னொரு நிம்மதி, நான் வீடு தேட வேண்டிய தேவை இன்னும் ஒரு வருடத்துக்கு இல்லை என்பதும்.

ஒரு பக்கம் செந்தில்-ஓமனா திருமண வேலைகளும் இன்னொரு பக்கம் என் ஆன்சைட் பேப்பர் ஒர்க்கும் என நேரம் நன்றாகக் கழிந்தது. செந்திலுக்கு நான் ஆன்சைட் போவதில் மகிழ்ச்சி என்றாலும், ஒரு வருடம் மாலாவை விட்டுப் பிரிவதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற கவலையும் இருந்தது. காதலைச் சொல்லச் சொல்லி அவன் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை நச்சரிக்கத் தொடங்கிவிட்டான்.

விசா பிரச்சனையில்லாம பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் செய்த பிறகு, செந்தில் ஓமனா திருமணம் முடிந்த அடுத்த வாரம் நான் நியூயார்க் செல்ல டிக்கெட் போட்டார்கள். வழக்கமாக விசா கையில் கிடைத்ததும் விமானத்தில் ஏற்றிவிடும் எங்கள் கம்பெனியில் செந்தில்-ஓமனா திருமணத்தின் காரணமாக எனக்கு மட்டும் சலுகை கிடைத்தது.

காசர்கோட்டில் வெகு விமர்சையாக திருமணம் நடந்தது. கேரள உணவுவகைகள் வித்தியாசமாக இருந்தன. சிவப்பு நிறத்தில் காரமாக இருக்கும்போல என்று நினைத்து லேசாக தொட்டு நக்கிப் பார்த்தால் இனித்துத் தொலைத்தது. பச்சை நிறத்தில் இனிப்போ என்ற எண்ணத்தைக் கொடுத்த பண்டம் கார்ந்துத் தொலைத்தது. அங்கே திருமணம் முடித்து இரண்டு நாட்களுக்குள் திருநெல்வேலியில் ரிசப்ஷன். மாலாவையும் இன்னும் சில அலுவலக நண்பர்களையும் ஒரே ஒரு மணி நேரம் மட்டும் வீட்டுக்கு அழைத்துப் போய்வந்தேன். அம்மாவிடம் மாலா நடந்து கொண்ட விதம் இன்னும் பிடித்தமாயிருந்தது.

ஓமனாவும் செந்திலும் ரிசப்ஷன் முடிந்த கையோடு ஊட்டிக்கு ஹனிமூன் கிளம்பினார்கள். நானும் மாலாவும் பெங்களூர் திரும்பினோம். தினமும் 11 மணி வரை பேசிக் கொண்டிருந்து விட்டு தூங்க மட்டும் அவரவர் அப்பார்மெண்ட் வரும் வழக்கமாகிப் போனது. ஊட்டியிலிருந்து ஓமனாவும் செந்திலும் திரும்பிய தினத்தின் நள்ளிரவில் நான் கிளம்ப வேண்டும்.

செந்தில் வந்ததும் கேட்ட முதல் கேள்வி - “சொல்லிட்டியா?”

என் உதடு பிதுக்கலில் அவன் முகத்தில் எதிரொளித்த ஏமாற்றம் அவன் என் மீது கொண்டிருந்த அன்பையே எனக்கு வெளிக்காட்டியது. ஏமாற்றத்தைக் கோபமாக மாற்றி அன்று மதியம் வரை என்னோடு பேசவேயில்லை. மாலாவும் ஓமனாவும் ரெண்டு பேருக்கும் என்னாச்சு என்று நச்சரித்ததால் வேறு வழியின்றிப் பேசினான்.

அன்று இரவு கம்பெனி கார் வந்ததும், மூன்று பேரும் என்னை வழியனுப்ப பெங்களூர் விமான நிலையம் வந்தார்கள். சம்பிரதாய விடைபெறுதல்கள் விமான நிலையமெங்கும் நடந்து கொண்டிருக்க நாங்கள் பேசாமலே இருந்தோம். செக் இன் செய்ய வேண்டிய நேரம் வந்துவிடவே செந்தில் என்னைக் கட்டிக் கொண்டு, “டச்லயே இருடா. வெளிநாடு போயிட்டோம்னு எங்களையெல்லாம் மறந்துடாதே” என்றான்.

“ச்சேச்சே என்னடா? நீங்களும் நான் திரும்ப வர்றதுக்குள்ள ஒரு குட்டி ஓமனாவுக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்று சொல்லி ஓமனாவை முகம் சிவக்க வைத்தேன்.

மாலா என் கைகளைப் பிடித்துக் கொண்டு, “போனதும் கால் பண்ணுடா. ஆஃபிஸ்ல குடுத்த காலிங் கார்ட் இருக்குதானே? ரீனா ஏர்போர்ட் வர்றதா சொல்லியிருக்கா வரலைன்னாலும் யோசிக்காம ஒரு டாக்ஸி எடுத்து ஹோட்டல் போயிடு என்ன?” என்றாள்.

செந்தில் ஓமனாவை அழைத்துக் கொண்டு சற்றே விலகினான்.

தனிமை கிடைத்ததை உணர்ந்த மாலா, “என்னதான் ஃப்ரண்டு ஆன்சைட் போறான்னு சந்தோசமா இருந்தாலும், உன்னைப் பிரிஞ்சி தனியா இருக்கணுமேன்னு நினைக்கும்போது கொஞ்சம் வருத்தமாத்தாண்டா இருக்கு” என்றாள். அவள் விழியோரத்தில் ஒற்றைத் துளி கண்ணீரும் எட்டிப் பார்த்தது.

“இன்னும் ஒரு வருசம் நீ பல்சர்ல தனியாத்தான் ஆஃபிஸ் போகணும்”

தலை குனிந்தபடியே “ம்ம்”

“செந்தில்-ஓமனா கூட ரெஸ்டாரண்ட் போனாக்கூட நீ உன்னோட பைக்ல தனியாத்தான் போகணும்”

“ம்ம்ம்”

“மாலா”

“ம்ம்ம்”

“இதைச் சொல்லாம நான் நியூயார்க் போயிட்டு அப்புறம் அடடா சொல்லியிருக்கலாமென்னு வருத்தப்பட விரும்பலை”

மாலா நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தாள். அவள் பார்வையைச் சந்திக்கத் திராணியில்லாமல் தலையைக் குனிந்தேன்.

“நீ வாழ்க்கை முழுக்க இப்பிடி என் கையைப் பிடிச்சிட்டு என் கூடவே வரணும்னு விரும்புறேன். ஐ லவ் யூ மாலா”

(தொடரும்)


அடுத்த பாகம் இங்கே