Sunday, April 19, 2009

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல்

ஒரு பக்கம் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் துவங்கி விட்டன. இன்னொரு புறம் இந்தியாவில் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.

(இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளை இந்தியாவிலும் பாராளுமன்ற தேர்தலை தென்னாப்பிரிக்காவிலும் வைத்து இருக்கலாம் என்று ஒரு நண்பர் தெரிவித்து இருந்தார் - கிரிக்கெட் போட்டிகளால் இந்தியாவுக்கு வருமானமும் தேர்தலால் செலவும் நிகழ்வதால்).

தன்னிகரில்லா தன் மானத் தலைவர் தமிழின காப்பாளன் என்று தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் தாத்தா கலைஞர் தலைமையில் அன்னை சோனியாவின் அடிபொடிகள் சேர்ந்து ஒரு கூட்டணி. நேற்று வரை புலியாக உருமிக்கொண்டிருந்த சிறுத்தை இன்று இரண்டு சீட் வாங்கி சோனியா முன் வாலாட்டி கொண்டிருக்கிறது. (இன்று காலை வரை இலங்கைக்கு போர் உதவிகள் வழங்கி விட்டு இன்று மத்தியானம் போரை நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுக்கிறார் பிரணாப் முகர்ஜி. போரை நிறுத்த வேண்டும் என்று அன்னை சோனியாவுக்கு கடிதம் எழுதுகிறாரம் தாத்தா கலைஞர். அவருக்கு தெரிந்துதான் இருக்கிறது போல போரை நடத்துவது சோனியாதான் என்று. )

முந்தா நாள் வரை இலங்கையில் நடப்பது தீவிரவாதிகளுக்கு எதிரான போர் என்றும், போர் நடக்கும்போது மக்கள் இறப்பது சகஜம் என்றும் சொல்லி வந்து விட்டு பின் தூக்கத்தில் திடீரென்று ஞானோதயம் வந்து தமிழ் மக்களுக்கு சம உரிமை வேண்டும் அப்படி கிடைக்க வில்லையென்றால் தனி ஈழம் என்று குரல் கொடுக்கும் அம்மாவின் தலைமையில் இன்னொரு அணி. காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போன மாதிரி புயல் மாதிரி உள்ளே வந்து ஏழு சீட் வாங்கி பொய் விட்டார் மருத்துவர் தமிழ்க்குடி தாங்கி. பாவம் வைகோ மறுபடியும் ஒரு தவறான முடிவால் நான்கு சீட் வாங்கி திருப்தி அடைந்திருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிகள் மறுபடியும், மத வாதத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிராக மூன்றாவது அணி கண்டுள்ளோம் என்ற கனவில், அம்மாவோடு கை கோர்த்து இருக்கிறார்கள்.

இந்த அணி இந்திய அளவில் தான் மூன்றாவது அணி. தமிழகத்தில் இது தான் இரண்டாவது அணி. அப்போ மூன்றாவது அணி?

அது தான் இன்றைய ஹாட் டாக். (dog இல்லை talk). தமிழகத்தில் 46 சீட் (மொத்தமே நாற்பது தானாமே) வெல்லக்கூடிய தகுதி படைத்த ஒரே கட்சியான சமத்துவ மக்கள் கட்சியும், பிரசாரத்துக்கு வராமலே ஜெயிக்கும் கலை தெரிந்த கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி அமைத்து மேலே சொன்ன இரண்டு அணி தலைவர்களின் தூக்கத்தையும் துரத்தி இருக்கிறார்கள். அதிலும் சரத் குமார் மற்றும் கார்த்திக்கின் செல்வாக்கை கண்டு அம்மாவும் அய்யாவும் நடுங்கி பொய் இருப்பதாக சமத்துவ மக்கள் கட்சி வட்டாரங்களில் பேசி கொள்கிறார்கள்.

அப்போ விஜயகாந்து? ஆங்.. அவரு தான் தனித்து போட்டி போடுறாரே, மக்களோட மட்டும் கூட்டணி வச்சிக்கிட்டு. காங்கிரஸ் கூட கூட்டணி வச்சுக்கலாம்னு கனவு கண்டுக்கிட்டு கொஞ்ச நாள் இலங்கை பிரச்சனை பத்தி வாய் திறக்காமலே இருந்தாரு. கடைசியிலே முத்தமிழ் கலைஞர் வச்ச ஆப்புல புரட்சி கலைஞர் மறுபடியும் தனியாவே நிக்கிறார். காஞ்சிபுரத்துல இருக்குற சொத்தை வித்துட்டதா கேள்வி.

மற்றபடி இந்த தேர்தலில் ஒரு முக்கியமான வி.ஐ.பி. நிற்கிறார். அவர் தேர்தலில் நிற்பதால் மக்களுக்கு தான் எவ்வளவு நன்மை (கவனிக்கவும் - அவர் ஜெயிப்பதால் அல்ல, நிற்பதால்). தான் நடித்த சினிமாவை பார்க்கவே ஆயிரம் ரூபாயும் ஒரு பிரியாணி பொட்டலமும் கொடுத்தவர், தனக்கு வோட்டு போடுவதற்காக என்ன என்ன வெல்லாம் செய்ய மாட்டார்? ஐயோ, எனக்கு ராமநாதபுரத்தில் வோட்டு இல்லையே.

அந்த வேட்பாளர் அளவுக்கு இவர் பாப்புலர் இல்லை என்றாலும் இவரும் தென் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய சக்தி. இவர் இப்போது தான் முதல் முதலாக தேர்தலை தனக்காக சந்திக்கிறார். மற்றவர்களுக்காகவே "பாடுபடும்" அஞ்சா நெஞ்சன் தனக்காக எவ்வளவு "பாடு பட" மாட்டார்? பார்க்கத்தானே போகிறோம்.

கடைசியாக வந்த செய்தி: தமிழகத்தில் பத்து கோடி உறுப்பினர்களைக் கொண்ட தனிப் பெரும் கட்சியான லட்சிய திமுக ஐந்து தொகுதிகளில் தனித்து போட்டி.

மேலும் பார்ப்போம்.

No comments: