Sunday, August 30, 2009

பாஸ்தா செய்வது எப்படி - சமையல் குறிப்பு

முன் குறிப்பு: இந்த சமையல் குறிப்பு திருமணமான ஆண்களுக்கு மட்டும். மற்றவர்கள் வெறுமனே படிப்பதோடு நிறுத்திக் கொள்ளவும். செய்து பார்க்கத் துணிய வேண்டாம்.

முதலில் பாஸ்தா பற்றிய சிறு குறிப்பு:
பாஸ்தா என்பது நம் சோனியா காந்தி நாட்டினர் கண்டுபிடித்த ஒரு உணவு. நம் ஊர் சேமியாவின் ரெண்டு விட்ட அக்கா. பாஸ்தா மைதா அல்லது கோதுமை மாவு மற்றும் தண்ணீர் கலந்து செய்யப்படுகிறது. மற்ற மாவுகளிலும் செய்யலாம்.

பாஸ்தா பல வடிவங்களில் கிடைக்கிறது. மிகவும் பிரசித்தி பெற்ற வடிவங்கள் ஸ்பகட்டி, மக்கரோனி, ஃபுஸ்ஸிலி ஆகியவை. பாஸ்தாவில் க்ளுட்டன் எனப்படும் மாவுச்சத்து அதிகமாக இருப்பதால் கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு இது உகந்தது அல்ல.

இப்போது பாஸ்தா சமைக்க தேவையான பொருட்கள்:
பாஸ்தா - 2 கப்
தண்ணீர் - 4 கப்
சுகினி - 1
காளான் - 10
வெங்காயம் - 1
ஸ்பினாச் (கீரை) - 1 கட்டு
ஆலிவ் எண்ணை - 2 மேஜைக்கரண்டி
பாப்ரிகா - 1 மேஜைக்கரண்டி
சீஸ் (துருவியது) - 2 மேஜைக்கரண்டி
பாஸ்தா சாஸ் - 2 மேஜைக்கரண்டி
முக்கியமான இரண்டு பொருட்கள் (இவற்றைப்பற்றி கடைசியில் சொல்லப்படும்)

சில பொருட்களை வாங்கக் கூடிய இடங்கள்:
பாப்ரிகா உங்கள் ஊரில் உள்ள பலசரக்கு கடையில் கிடைக்கும். ஸ்பைசஸ் அல்லது ஹெர்ப்ஸ் என்ற பிரிவில் இது கண்டிப்பாக கிடைக்கும். ஆனால் கொஞ்சம் விலை கூடுதலாக இருக்கும். ஆதலால் ஒவ்வொரு முறை பிஸ்ஸா ஹட்டுக்கு செல்லும்போதும் கை நிறைய பாப்ரிகா பாக்கட்டுகளை அள்ளிக் கொண்டு வந்து விட்டால் கவலை இல்லை.

பாஸ்தா சாஸ் - உங்கள் ஊர் பலசரக்கு கடையில் இத்தாலிய பிரிவு என்று ஒன்று இருந்தால் அங்கே இருக்கும். இல்லையென்றால் பாஸ்தா பிரிவில் இருக்கும். பிஸ்ஸா ஹட்டில் பிஸ்ஸா ஆர்டர் கொடுக்கும்போது எக்ஸ்ட்ரா பிஸ்ஸா சாஸ் கேட்டீர்கள் என்றால் டப்பாவில் கொண்டு வந்து கொடுப்பார்கள். அதையே ஃப்ரிட்ஜில் வைத்திருந்து உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.

இப்போது செய்முறை:
முதலில் அடுப்பைப் பற்றவைத்துக் கொள்ளவும். பின் வாய் அகண்ட ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 4 கப் தண்ணீரை ஊற்றவும். தண்ணீர் கொதிக்கவும் அதில் 2 கப் பாஸ்தாவைப் போடவும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து, அவ்வப்போது கிளறி விட்டு பாஸ்தா வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டிவிட்டு பாஸ்தாவை எடுத்துவைத்துக் கொள்ளவும்.

பாஸ்தா வெந்து கொண்டிருக்கும்போதே எல்லாக் காய்கறிகளையும் சின்ன சின்னதாக வெட்டிக் கொள்ளவும். ஒரு வாணலியில் இரண்டு கரண்டி ஆலிவ் ஆயில் ஊற்றி காய்கறிகள் அனைத்தையும் போட்டு நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு போட்டுக் கொண்டு ஒரு மேஜைக்கரண்டி பாப்ரிக்காவையும் போட்டு நன்றாக வதக்கவும். காய்கறிகள் வதங்கியதும் வேகவைத்த பாஸ்தாவை அதில் போட்டு நன்றாக கிளறவும். ஒரு நிமிடம் கிளறியதும் பாஸ்தாவை எடுத்து ஒரு கிண்ணத்தில் போடு அதன் மேல் சீஸையும் பாஸ்ட்தா சாஸையும் போட்டு விட்டீர்களென்றால் பாஸ்தா ரெடி.

பின் குறிப்பு: மேலே செய்த பாஸ்தாவை தங்கமணிக்கும் குழந்தை(களு)க்கும் கொடுத்து விட்டு, ஃப்ரிட்ஜில் இருக்கும் நேற்று வைத்த சாதத்தையும் முந்தா நாள் வைத்த புளிக்குழம்பையும் (அதாவது முக்கியமான அந்த இரண்டு பொருட்களையும்) மைக்ரவேவில் வைத்து சூடு பண்ணிக்கொண்டு அதை சாப்பிட்டு மகிழவும் (அப்புறம் இந்தக் கண்ணறாவியல்லாம் யாரு சாப்புடுறது?)

கந்தசாமி - விவாதம்

உலகெங்கிலுமிருந்து என் வலைப்பூவை படித்து ரசிக்கும் கோடானுகோடி வாசகப்பெருமக்களே!
(என்னவோ இந்த வலைப்பூவை ஒரு நாளைக்கு நானூறு பேரு பாக்குறாங்கன்னு இவனுக்கு மனசுல நெனப்பு)

இப்போது சினிமா சம்மந்தப்பட்ட பதிவுலகத்தில் சூடான விஷயம் கந்தசாமி நொந்த சாமியானதுதான்.

பலர் மிகவும் இலக்கியத்தரமான படங்களை மட்டுமே பார்ப்பவர்கள் என்று நினைத்துக்கொண்டு கந்தசாமியை அடித்துக் கிழித்து கந்தல்சாமியாக்கிவிட்டார்கள்.
இவர்களில் எத்தனை பேர் நாடோடிகள், பசங்க, சுப்ரமணியபுரம், பருத்திவீரன் படங்களை பாராட்டி பதிவு போட்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. இது சம்மந்தமாக பல விவாதங்களும் நடக்கிறது. இதற்கு ஒரு தீர்ப்பு வழங்குங்கள் என்று நமது பட்டிமன்ற நடுவர் பாலமன் ஆப்பையாவை அழைத்துக் கொண்டு வந்துள்ளோம். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
இனி ஓவர் டூ பாலமன் ஆப்பையா.

பெரியோர்களே, தாய்மார்களே. எல்லாருக்கும் வணக்கம். இது ஒரு சிக்கலான விவாதம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொண்ணு சொல்லுராங்க. முத குரூப்பு என்ன சொல்லுதுன்னா - சினிமா ஒரு இலக்கியம். ஊடகம். அந்த ஊடகம் மூலமா மக்களுக்கு நல்ல விசயங்க தான் போய் சேரணும். அப்படிப்பட்ட சினிமாவ பணம் சம்பாதிக்க மட்டுமே உபயோகப்படுத்தி மக்கள முட்டாளாக்க முயற்சி செய்றாய்ங்க அப்பிடின்னு இந்த குரூப்பு சொல்லுது.

இவங்க சொல்றதும் நியாயமாத்தான்யா இருக்கு. காசு குடுத்து படம் பாக்க வர்றேன். அப்படி வரும்போது ஏற்கனவே நான் காசு குடுத்து பாத்த நாலு படத்த திரும்பவும் வேற நடிகர்கள வச்சு எடுத்து ஓட்டுனா நான் என்னய்யா பண்ணுவேன்? ஏதோ இந்த ஷ்ரேயா புள்ள மிய்யாவ் மிய்யாவ்னு ஒரு துண்ட கட்டிட்டு பாடிச்சு நான் குடுத்த காசுல 25% சரியாப் போச்சு. மிச்ச காசு எங்கய்யா?

இப்ப இன்னொரு குரூப்பு என்ன சொல்லுது? சினிமாங்கறது பொழுதுபோக்குக்கு. நான் வீட்டுலயும் வேலையிலயும் உளச்சல் தாங்க முடியாம சினிமாவுக்கு வர்றேன். இங்கயும் நண்பன் துரோகம் பண்ணுறான், காலு போக காதல சேத்து வச்சா பிரிஞ்சி போயிடுறாய்ங்க, வீட்ட விட்டு ஓடிப்போன புள்ளகள தேடி கண்டுபிடிச்சி வந்து பிரிச்சுப்புடுறாய்ங்க.. இப்பிடி வெளிய இருக்குற கவலையோட இந்த கவலயும் சேந்துப்புடுது.. இப்பிடி படம் பாக்குறதுக்கு ஏதோ கந்தசாமிக்கு வந்தோமா, விக்ரம் கோழி மாதிரி பறக்குறத பாத்தமா, ஷ்ரேயா புள்ள துண்ட கட்டிட்டு ஆடுறத பாத்தமானு மூணு மணி நேரத்த செலவு பண்ணிப்புட்டு வெளிய வரவும் மறுபடி வீடு வேலைன்னு கவலயப்பட்டுக்கிட்டு போயிட்டே இருப்போம்ல.. இப்பிடின்னு இந்த குரூப்பு சொல்லுது. அதுவும் சரிதானய்யா?

ஆக இவிங்க சொல்றதும் சரியாத்தான் இருக்கு அவிங்க சொல்றதும் சரியாத்தான் இருக்கு. அப்ப என்னதான் பண்ணுறது? இப்போ வர்றாய்ங்கய்யா மூணாவது குரூப்பு.. அவிங்க என்ன சொல்றாய்ங்க?
எங்களுக்கு சினிமா பத்திரிக்க மாதிரி. நாங்க ஆனந்த விகடன், குமுதமும் படிப்போம், கணையாழி மற்றும் பல சிற்றிலக்கியங்களையும் படிப்போம், சரோஜாதேவியும் படிப்போம். ரஜினி ஸ்க்ரீன்ல வந்தா விசிலடிச்சு தேங்கா உடச்சு கொண்டாடவும் செய்வோம், விக்ரம் கால இழுத்து இழுத்து பாண்டிமட வேனுல ஏறும்போது மனசுக்குள்ளயே அழுதுக்கிட்டு மௌனமா எந்திரிச்சும் வருவோம், மலையாள படத்துக்குப் போயிட்டு பிட்டு போடலன்னு ஆபரேட்டர திட்டிப்புட்டும் வருவோம். எங்களுக்கு தேவ சினிமா. அத நீ எப்பிடி குடுத்தாலும் நாங்க ஏத்துக்குவோம்னு. இவிங்கள என்னான்னு சொல்லுறது?

இப்ப நம்மள வேற இங்க இழுத்து உட்டுட்டாய்ங்க.. தீர்ப்பு சொல்லுங்கன்னு. என்னத்த சொல்லுறது? எங்க வூட்டு அம்மாக்கிட்ட கேட்டேன். அது சொல்லிச்சி, அடுத்து எடுக்கப்போற படத்துல சான்ஸு குடுக்குறதா சங்கரும் சசிகுமாரும் சொல்லியிருக்காய்ங்க. இந்த நேரத்துல நீங்க யாருக்காவது சாதகமா தீர்ப்பு சொல்லப்போக இன்னொருத்தரு கோவிச்சிக்கிட்டு பொழப்புக்கு பங்கம் வந்துடப்போவுதுன்னு. அது சொல்லுறதும் நியாயமாத்தானய்யா இருக்கு..

அதுனால, பெரியோர்களே தாய்மார்களே, இது உங்க காசு, உங்க நேரம். நீங்க என்ன படத்த பாக்கணும்னு நினைக்கிறீகளே அதப்போயி பாருங்க. யாரு சொல்லுறதயும் கேக்காதீங்க. தியேட்டர்ல பூட்டிட்டு தண்ணி தெளிச்சி, தண்ணி தெளிச்சி அடிச்சாய்ங்கன்னா வாங்கிக்கிங்க. மால போட்டு மரியாத பண்ணா அதயும் வாங்கிக்கிங்க என்று சொல்லி இந்த விவாதத்தை முடித்து வைக்கிறேன். நன்றி வணக்கம்.

Friday, August 28, 2009

அன்புக் கதை பற்றிய என் விமர்சனத்தை மேலிடத்து உத்தரவின் பேரில் நீக்கி விட்டேன்.

Monday, August 24, 2009

உளவு

“இது நம் திருமண நாளுக்காக” என்றவாறு தன் கையிலிருந்த ஷாம்பெயின் கோப்பையை உயர்த்தி பிடித்துவிட்டு, கோப்பையிலுருந்த ஷாம்பெயினை ஒரு சீப்பு சீப்பினார்.
எதிரே அவர் மனைவி ஒரு புன்னகையுடன் தன் கோப்பையைக் கீழிறக்கினாள்.
இரண்டாவது சிப் எடுக்கும்போது புரை ஏறியது.. நெஞ்சைப் பிடித்துகொண்டு இருமினார்.
மனைவி புன்னகை விலகாமல் அவரையே பார்த்தாள்.
இருமல் அடைப்பாகி கையிலிருந்த கோப்பையை கீழே போட்டு விட்டு மேஜை மேலேயே விழுந்தார்.
மனைவி இயல்பாக எழுந்து அவர் கழுத்தில் விரல் வைத்துப் பார்த்தாள். மேஜை மீதிருந்த செல்பேசியை எடுத்து நம்பர்களை அழுத்தினாள்.

ஐந்து நிமிடங்களுக்கு முன்..
======================
“டியர்! ஐ யாம் ஹோம்” என்றவாறு உள்ளே நுழைந்த அவர் யாரையோ தேடினார். ஒவ்வொரு அறையாக தேடி விட்டு, கடைசியாக சமையலறைக்குள் வந்தார். பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த அவளைப் பின்னால் இருந்து கட்டியணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டார்.
“வேலைக்காரி எங்கே? நீ ஏன் இதையெல்லாம் செய்கிறாய்?”
“இன்றைய தினத்தை நாம் தனியாக கழிப்பதற்காக அவளை சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பி விட்டு என் கையால் சமைத்திருக்கிறேன்.”
“வாவ் க்ரேட். கோழியின் வாசம் என்னை இப்போதே சாப்பிட சொல்கிறது”
“சாப்பாடு ரெடி. மேஜை மீது பரப்பி இருக்கிறேன். சாப்பிடலாம்”
“நான் போய் ஷாம்பெயின் எடுத்து வருகிறேன்”
ஷாம்பெயினைத் திறந்து க்ளாஸ் ஹொல்டரில் இருந்த கோப்பைகளில் ஒன்றை எடுத்து ஒரு கை தேர்ந்த பட்லரின் திறமையோடு ஊற்றி மனைவியிடம் கொடுத்தார். இன்னொரு கோப்பையை எடுத்து அதிலும் ஊற்றி ஷாம்பெயின் பாட்டிலைக் கீழே வைத்தார்.
“இது நம் திருமண நாளுக்காக”

ஒரு மணி நேரத்துக்கு முன்னால்
=========================
கையிலிருந்த அந்தக் கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்தாள். லைட்டரைக் கொளுத்தி காகிதத்தைப் பற்ற வைத்தாள். எரிந்து முடிந்ததும் அந்தக் காகிதத்தை டாய்லட்டில் போட்டு ஃப்ளஷ் செய்தாள். இரண்டாம் முறையும் ஃப்ளஷ் செய்து விட்டு வெளியே வந்தாள்.
சமையலறைக்கு வந்து ஷாம்பெயின் கோப்பைகளை எடுத்து துணியால் துடைத்தாள். மேஜை இழுப்பறையைத் திறந்து உள்ளே இருந்து “PEANUT OIL” என்று எழுதப்பட்ட பாட்டிலை வெளியே எடுத்தாள். குக்கிங்க் ப்ரஷ்ஷால் அந்த எண்ணையை தொட்டு 6 ஷாம்பெயின் கோப்பைகளின் உள்ளேயும் தடவினாள்.
ரெஃப்ரிஜிரேட்டரில் இருந்து கோழிக் கறியை எடுத்து சமைக்கத் தொடங்கினாள்.

இரண்டு மணி நேரத்துக்கு முன்னால்
=============================
உடற்பயிற்சி அறையில் வழக்கமான அரைமணி நேர உடற்பயிற்சியை முடித்தாள். வெளியே வந்து வீட்டிற்குள் கட்டப்பட்டிருந்த நீச்சல் குளத்தில் சிறிது நேரம் நீந்தினாள். பின்னர் குளியலறையில் குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்து ஹாலில் அமர்ந்தாள்.
வேலைக்காரி கையில் ஜூஸ் கிளாசையு அவளிடம் நீட்டி விட்டு, கையிலிருந்த அன்றைய தபால்களை அவள் முன்னால் இருந்த மேசையின் மீது வைத்தாள்.
ஜூஸை சீப்பிக் கொண்டே தபால்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்தாள்.
XXX முக்கியம் XXX
என்று எழுதப்பட்ட தபால் நிலைய முத்திரை குத்தப்படாத அந்தக் கடிதம் அவளை ஈர்த்தது. ஜூஸைக் குடித்து விட்டு அந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.
கவரைக் கிழித்து உள்ளே இருந்த கடிதத்தை எடுத்தாள்.
“சந்தேக விதை விழுந்துவிட்டது. முடித்துவிடு” என்று எழுதியிருந்ததைப் படித்தாள். கையிலிருந்த லைட்டரால் கடிதத்தின் கவரைக் கொளுத்தி சாம்பலை டாய்லட்டுக்குள் போட்டாள்.
செல் பேசியை உயிர்ப்பித்தாள்.
“ஹனி. இன்றைய தினத்தை நாம் வீட்டிலேயே கொண்டாடலாமே? ரெஸ்டாரண்ட் பிளான் வேண்டாமே?”
மறுமுனை சொன்னதை மௌனமாக கேட்டாள்.
“தேங்க் யூ ஹனி”
செல்பேசியை அணைத்து விட்டு வெளியே வந்தாள்.
“மார்சி. நீ வீட்டுக்கு போகலாம். ஜோவையும் போகச் சொல்லிவிடு. இன்றைய மாலையை நானும் அவரும் தனியாகக் கழிக்க விரும்புகிறோம்”
“சரி அம்மா. நாளை காலை வருகிறேன்” என்று சொல்லிவிட்டு மார்சி வெளியேறினாள்.
மீண்டும் பாத்ரூமுக்குள் நுழைந்தாள். கையிலிருந்த அந்தக் கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்தாள்.

இரண்டரை மணி நேரத்துக்கு முன்
===========================
அந்த உருவம் புதருக்கு அருகில் மறைந்திருந்தது. பையில் வைத்திருந்த கைக்கடிகாரத்தை எடுத்து ஒருமுறை பார்த்துக் கொண்டது. தபால்காரர் அந்த வீட்டின் தபால் பெட்டியில் கடிதங்களைப் போட்டுவிட்டு நகர்ந்தார். அவர் அந்தப்பக்கம் நகர்ந்ததும், வேகமாக அந்தப்பெட்டியை நெருங்கி கையில் இருந்த கடிதத்தை எடுத்து அதற்குள் போட்டு விட்டு விரைந்தது.
வாட்ச்மேன் போஸ்ட்மேன் அந்தப்பக்கம் போனதைப் பார்த்ததும் தபால் பெட்டியைத் திறந்து தபால்களை வெளியே எடுத்தான்.
வீட்டுக் கதவின் அருகில் இருந்த காலிங்க் பெல்லை அடித்தான்.
மார்சி வந்து கதவைத்திறந்து அவன் கையில் இருந்த கடிதங்களை வாங்கிச் சென்றாள்.
உள்ளே வந்த மார்சி கடிதங்களை மேஜை மீது வைத்து விட்டு, மணியைப் பார்த்தாள்.
‘அம்மா உடற்பயிற்சி முடித்து வரும் நேரம்’ - என்று நினைத்துக் கொண்டு ஜூஸ் கலக்க சென்றாள்.
அவள் உடற்பயிற்சி அறையில் வழக்கமான உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தாள்.

எட்டு மணி நேரத்துக்கு முன்
=======================
அவரது அலுவலக அறையில் உட்கார்ந்திருந்தார். அவர் முன் ஒரு பெரிய காகிதத்தில் ஒரு வருட கேலண்டர் இருந்தது. அதில் சில நாட்கள் சிவப்பு மையில் வட்டமிடப் பட்டிருந்தன. சில நாட்கள் ஆரஞ்சு வண்ணத்தில், சில நீல வண்ணத்தில்.
தலையில் கை வைத்தவாறு இருந்தார்.
அவர் முன்னால் உட்கார்ந்திருந்தவன் தன் பையில் இருந்து கைக்கடிகாரத்தை எடுத்து மணியைப் பார்த்துக்கொண்டான்.
“பீட், நம் அலுவலக ரகசியங்கள் வெளியே செல்கின்றன என்று 6 மாதங்களுக்கு முன் எஃ.பி.ஐயிடம் இருந்து தகவல் வந்த உடனே நம் அலுவலகத்தில் இருக்கும் அந்த கறுப்பு ஆட்டைக் கண்டுபிடிக்க ஆவன செய்து விட்டேன். ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை அணுகி நம் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க சொன்னேன். அவர்கள் அனுப்பிய அறிக்கைப்படி அனைவரும் சுத்தமானவர்கள்.”
“அப்படியென்றால் நம் ரகசியங்கள் எப்படி வெளியேறுகின்றன?”
“அதை மேலும் ஆராய நான் சில தேதிகளைப் எஃப்.பி.ஐ யிடம் இருந்து பெற்றேன். அந்தத் தேதிகளில் தான் நம் ரகசியங்கள் வெளியே சென்றிருக்கின்றன. அந்த நாட்களில் நான் என் மனைவியுடன் வெளியூரில் விடுமுறையில் இருந்திருக்கிறேன் அல்லது ஏதாவது காரணம் சொல்லி என் மனைவி அலுவலக நேரத்தில் என்னை வீட்டுக்கு அழைத்திருக்கிறாள்.”
“உங்கள் மனைவியை சந்தேகப் படுகிறீர்களா?”
“என் மனைவி வைரம். என்னுடன் இருபது வருடங்களாக குடும்பம் நடத்துகிறாள். ஆனால் யாரவது வெளி நபர்கள் அல்லது ஏஜென்சிகள் அவளை மிரட்டலாம் என்று சந்தேகப்படுகிறேன்”
“இதில் நான் என்ன செய்ய வேண்டும்?”
“இந்த அலுவகத்தில் எனக்கு அடுத்து நீதான். என் நம்பகமானவனும் கூட. அதனால் தான் உன்னிடம் சொல்கிறேன். எஃப்.பி.ஐக்கு நான் ரிப்போர்ட் அனுப்புமுன் இதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். அந்தப் பொறுப்பை உன்னிடம் கொடுக்கிறேன்”
“என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்பை கொடுத்ததற்கு நன்றி. உங்கள் குடும்ப வாழ்க்கைக்கு பாதிப்பு வராமல் நான் இந்த விசாரணையை முடிக்கிறேன்”
“நீயே இதில் பெர்சனலாக செயல்படு. வேறு யாரையும் பயன்படுத்த வேண்டாம்”
“உறுதியாக”
“நீ. போகலாம்”
“வருகிறேன் சர். விசாரணை முடியும் வரை உங்கள் மனைவியுடன் வழக்கமாக இருங்கள். அவரை அலர்ட் செய்துவிட வேண்டாம்”
“இதை நீ சொல்லி நான் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை”
அவன் வெளியேறியதும் தனது பைப்பை எடுத்து புகையிலையை நிரப்பி பற்ற வைத்து புகையை விட்டத்தை நோக்கி வெளியிட்டார். வெளியேறிய புகையை வெறித்து பார்த்தவாறு இருந்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்
=======================
அதி முக்கியமான அந்த கோப்பை அவர் பார்த்துக் கொண்டிருந்தார். நாட்டின் இராணுவம் சம்மந்தப்பட்ட கோப்பு அது. இவருக்கு நேரடியாக வந்து சேரும் தகவல். இவரைத்தவிர இவரது அலுவலகத்தில் வேறு யாரின் பார்வைக்கும் போகாது. அதில் உள்ள செய்திகளை இவர் மனம் ஆழ ஆராய்ந்து கொண்டிருந்தது.
இவர் அறைக்குள் அந்தக் கோப்பைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அவன், தன் தொலைபேசியை எடுத்து ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டான். மூன்று முறை மணி அடித்ததும் தொலை பேசியை வைத்து விட்டான். பையிலிருந்து கடிகாரத்தை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான். சரியாக இரண்டு நிமிடம் கழிந்ததும் மீண்டும் தொலலபேசியை எடுத்து மற்றொரு எண்ணைத் தொடர்பு கொண்டான். இரண்டு மணி அடித்ததும் மீண்டும் தொடர்பைத் துண்டித்தான். மீண்டும் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். சரியாக ஒரு நிமிடம் ஆனதும் முதலில் தொடர்பு கொண்ட எண்ணைத் தட்டினான். ஒரு மணி அடித்ததும் தொலைபேசியைத் துண்டித்தான்.
சிறிது நேரம் கழித்து உள்ளே அவரது அறையில் தொலைபேசி ஒலித்தது. அவர் பதட்டமாகப் பேசினார். பேசிவிட்டு, கையில் இருந்த கோப்பை, அவரது ஸேஃபுக்குள் வைத்து விட்டு வெளியே வந்தார்.
“பீட். நான் அவசரமாக வெளியே செல்ல வேண்டியிருக்கிறது. நான் பங்கு கொள்ள வேண்டிய மீட்டிங்குகளைப் பார்த்துக் கொள். ஒரு முக்கியமான மீட்டிங்கை நான் கான்சல் செய்து கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.
“அவர் அந்தப்பக்கம் போனதும், இவன் கணிணியில் சில பொத்தான்களைத் தட்டினான். அவரது அறையில் பொருததப்பட்ட CCTV யின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினான். இதுவரை பதிவான காலி அறையின் வீடியோவை திரும்ப திரும்ப பதியுமாறு விட்டு விட்டு அவரது அறைக்குள் நுழைந்தான்.
பையில் இருந்து இரண்டு கையுறைகளை எடுத்து அணிந்தான். இரண்டு கைகளின் கட்டை விரலையும், ஆட்காட்டி விரலையும் அவரது ஸேஃபில் இருந்த கைரேகை அறியும் பட்டியில் வைத்தான். ஸேஃபின் மேலே இருந்த இரும்புப் பட்டை விலகியது. உள்ளே இருந்த சாவித் துவாரத்தில் பையிலிருந்து எடுத்த சாவியை நுழைத்தான். திறந்ததும் ஸேஃப் திறந்து கொண்டது. உள்ளே இருந்த கோப்பை எடுத்து கையிலிருந்த போர்ட்டபிள் ஸ்கேன்னரில் பதிவு எடுத்துக் கொண்டு, கோப்பை இருந்த மாதிரி வைத்து விட்டு ஸேஃபை பூட்டினான்.
திரும்ப தன் அறைக்கு வந்து CCTVயின் கட்டுப்பாட்டை பழைய படிக்கு மாற்றிவிட்டு தன் கையில் இருந்த ஸ்கேன்னரில் இருந்த கோப்பின் பிரதிகளை உடனடியாக ஒரு சிப்புக்கு மாற்றினான். பின் அந்தச் சிப்பை தன் ஷூவில் பொருத்திக் கொண்டான்.
இருபது வருடங்களுக்கு முன்
=========================
அந்த சர்ச்சின் வாசலில் கார்கள் குவிந்திருந்தன.
இசை ஒலித்தது. முதலில் ஜான் நடந்து வந்தார். பின்னர் சூசன்.
அவர்களிருவரும் பாதிரியாரின் முன் நின்றனர்.
“மிஸ். சூசன், நீங்கள் உங்கள் வாழ்வின் இறுதிவரை மிஸ்டர். ஜான் அவர்களுடன் உங்கள் சுக துக்கங்களை அவர் மனைவியாகப் பங்கு கொள்ள சம்மதிக்கிறீர்களா?”
“சம்மதிக்கிறேன்”
“மிஸ்டர். ஜான், நீங்கள் உங்கள் வாழ்வின் இறுதிவரை மிஸ் சூசன் அவர்களுடன் உங்கள் சுக துக்கங்களை அவரது கணவனாகப் பங்கு கொள்ள சம்மதிக்கிறீர்களா?”
“சம்மதிக்கிறேன்”
“உங்கள் இருவரையும் கணவன் மனைவி என இறைவனின் பெயரால் அறிவிக்கிறேன்”
இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள்.
“நீங்கள் இப்போது உங்கள் மனைவியை முத்தமிடலாம்”

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்
=============================
பாப் இசை அந்த பாரின் எல்லா ஸ்பீக்கர்களிலிருந்தும் வழிந்து கொண்டிருந்தது. ஜான் தனது இரண்டாவது பியரை சிப்பினான். அங்கே இருந்த அனைவரும் ஜோடி ஜோடியாக நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.
‘என்னிடம் என்ன குறை? அழகில்லையா? இல்லை பணமில்லையா? ஒரு செனட்டருக்கு மகனாகப் பிறந்தும் நமக்கு மட்டும் ஏன் எந்தப் பெண்ணும் நிலையாக அமைய மாட்டேன் என்கிறாள்?’ என்று எண்ணிக் கொண்டே அந்த பியரையும் காலி செய்து விட்டு, பார் டெண்டரை நோக்கி “ஒன் மோர்” என்று சொல்லிவிட்டு திரும்பும்போது அவளைப் பார்த்தான்.
கண்டிப்பாக எந்த ஒரு ஆணும் அவளைத் திரும்பிப் பார்க்காமல் போக மாட்டான். அப்படி ஒரு அழகு. உடன் வந்தவனை அவள் நடத்திய விதம் ஒரு அடிமையை ராணி நடத்துவது போல இருந்தது. ஜான் எழுந்து நேராக அவளிடம் சென்றான்.
“ஹாய், என் பெயர் ஜான். மூன்றாம் வருடம். நீ?”
“சூசன் முதல் வருடம்”
“நீ மிகவும் அழகாக இருக்கிறாய். நீ என்னுடன் ஒரு ட்ரிங்க் அருந்துவாயா?”
“பிறகு பார்க்கலாம்” என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்.
ஜானின் முகம் சுண்டிவிட்டது. மீண்டும் பாருக்கு போய் அமர்ந்து கொண்டு தன் பியரைச் சப்பினான்.
நான்காவது பியரை முடித்துவிட்டு, “ஒன் மோர்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, “எனக்கும் ஒன்று சொல்வாயா?” என்ற குரல் கேட்டு திரும்பினான்.
சூசன் நின்று கொண்டிருந்தாள். அவள் தோள் சிவந்திருந்தது. யாரோ பிடித்து அழுத்தியது போல.
“என்ன காயம்?”
“அந்த இடியட் அத்து மீறப் பார்த்தான். நான் திமிறினேன். அவன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டான். விட்டேன் ஒரு அறை ஓடிப் போய்விட்டான்” என்று சிரித்தாள்.
“ரொம்பவும் தைரியசாலிதான். அவன் கத்தி ஏதாவது வைத்திருந்து குத்திவிட்டுப் போயிருந்தால்?”
“செத்துப் போயிருப்பேன். தட்ஸ் ஆல். செத்துபோனாலும் போவேனே தவிர சம்மதமில்லாததை ஏன் செய்ய வேண்டும்?”
“சரியான வாதமாகத்தான் இருக்கிறது”
இப்படித் துவங்கிய பழக்கம் டேட்டிங்கில் முடிந்து ஒரே வீட்டில் குடியேறும் வரை தொடர்ந்தது. ஒரு கூடைப்பந்தாட்டப் போட்டியில் வைத்து சூசனைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டான். அவளும் மறுக்காமல் உடனே சம்மதித்தாள்.
இவன் செனட்டர் தந்தையை சமாதானம் செய்வது தான் கொஞ்சம் கடினமாக இருந்தது. அவர் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் சூசனின் முழு பின்னணியையும் ஆராய்ந்த பின்னரே சம்மதித்தார்.

இருபத்தேழு வருடங்களுக்கு முன்பு
==============================
அவள் அந்த வரவேற்பரையில் அமர்ந்திருந்தாள். மிகவும் பதட்டத்துடன் இருந்தாள்.
அந்தப் பெண் அதிகாரி வந்தார்.
“அலெக்சாண்ட்ரா நீ இப்போது உள்ளே போகலாம்”
“காம்ரேட் அலெக்சாண்ட்ரா - வயது பதினெட்டு. தாய் தந்தை இல்லை. எட்டு வயதில் செம்படையால் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு கல்வி புகட்டப்பட்டிருக்கிறாய். ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், ஜெர்மன் சரளமாக பேசவும் எழுதவும் தெரியும். அனைத்து தற்காப்பு கலைகளிலும் தேர்ந்திருக்கிறாய். அனைத்து வகை துப்பாக்கிகளையும் கையாளத் தெரியும்”

“உனக்கு இந்தப் பணியை செய்வதில் முழுச் சம்மதம் தானே?”

“சம்மதம் தான் காம்ரேட்”

“இது தான் உன் அசைன்மெண்ட். அலெக்சாண்ட்ரா. நாளை முதல் உன் பெயர் சூசன் ஸ்கின்னர். உன் குடும்பத்தைப் பற்றிய அனைத்து தகவல்களும் இதில் இருக்கிறது. நன்றாக மனனம் செய்து கொள். நீ கொலம்பியா பல்கலைக் கழகத்தில் படிக்கும் ஜான் ஃபோர்டை சந்திக்க வேண்டும். அவனை உன் மீது மையல் கொள்ள வைக்க வேண்டும். அவனை நீ மணக்க வேண்டும். உனக்கு வரும் உத்தரவுப் படி நடந்து கொள்ள வேண்டும். ஏதாவது கேள்விகள் இருக்கிறதா?”

“இல்லை காம்ரேட்”

“நீ போகலாம்.”

Wednesday, August 19, 2009

ஆனைப்பட்டி டூ ஆனைநகர்

ஒருவழியாக ஆனைப்பட்டியானின் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

"மாப்ள தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி குடுடா" தர்மபுரியான்.

ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். தண்ணீரையே உற்றுப் பார்த்தான் தர்மபுரியான்.
"என்ன மாப்ள பாக்குற? கம்மால தண்ணி வந்திருச்சில்ல. அதுனால தண்ணி கொஞ்சம் கலங்கலாயிடுச்சி"
"எலய் தண்ணி கலங்கலடா, கலங்கல்ல தான் தண்ணியே இருக்கு"
வேறு வழியில்லாமல், ஹார்லிக்ஸை இனிப்பில்லாமல் குடிப்பது போல நினைத்துக் கொண்டு குடித்து முடித்தோம்.

மாலை மயங்கியதும் ஆனையூரானை மடக்கி, "என்ன பங்காளி, சரக்கு இருக்கும்னு சொன்ன கண்ணுலய காட்ட மாட்டங்குற?"
"இருங்கடா, நான் போயி எங்க மாமங்கிட்ட கேட்டுட்டு வாரேன். அவர் தான் சரக்கு இன் சார்ஜ்"
போனவன் சிறிது நேரத்தில் திரும்பி வந்தான்.
"பங்காளி ஒரு சின்ன சிக்கல்"
"டேய் நீ சிக்கல்னு சொன்னாலே பெருசா தானடா இருக்கும்?"
"ஒயினெல்லாம் இல்லடா. மத்த சரக்குதான் இருக்கு"
"அவ்வளவுதானா? ஒயினெல்லாம் லேடீஸ் சரக்குடா. நமக்கு விஸ்கி, பிராந்தி, ரம்மு இப்பிடி ஏதாவது ஒன்னு இருந்தா போதும்."
"சரக்க எடுத்துட்டு எங்கயாவது ஒதுக்குப்புறமா போயிடுவோம்டா. இங்க பெரிசுங்க நிறைய இருக்கு"
"சரிடா, நீங்க ஆலமரத்துக்கிட்ட இருங்க. நான் எங்க மாமங்கிட்ட சரக்க வாங்கிட்டு, கிளாஸ் எடுத்துட்டு வந்திடுறேன்"
"டேய் அப்பிடியே சைட் டிஷ் எடுத்துட்டு வாடா"
நாங்கள் போய் ஒரு அரை மணி நேரம் கழித்து கையில் ஒரு தூக்குச்சட்டி, ஒரு பெரிய சொம்பு, மூன்று டம்ளர்களுடன் வந்தான்.
தூரத்தில் இவனைப் பார்த்ததும் தர்மபுரிக்காரனுக்கு சந்தேகம்.
"மாப்ள என்னடா சொம்பு கொண்டுட்டு வர்றான். சந்தேகமா இருக்கு?"
"இடுப்புல வச்சிருப்பான் மாப்ள. வெளிய தெரியிற மாதிரி எடுத்துட்டு வர்ற அயிட்டமா அது"
"அது சரி"
பக்கத்தில் வந்தான்.
"அம்மா கோழி வச்சிட்டுருந்தாங்கடா. அதை எடுத்துட்டு வர லேட்டயிடுச்சி"
"டேய் அம்மாக்கிட்ட சொல்லிட்டியா?"
"ஆமா"
"அடப்பாவி"
"அதுனால என்ன பங்காளி. நாந்தான் தண்ணி அடிக்க மாட்டேனே?"
"அப்ப எங்க பேரு கெட்டுபோனா பரவாயில்லயா?"
"சரி விடுடா. நேரமாயிட்டே இருக்கு. ஆரம்பிப்போம். சரக்க எடு மாப்ள"
"இந்தா இருக்கேடா" என்று சொம்பை காண்பித்தான்.
"டேய் இது என்னவோ மிக்ஸிங்க்குக்கு தண்ணி கொண்டு வந்திருக்கன்னு நினச்சா? இத சரக்குன்ற"
"தண்ணி சுத்தமா இருக்கும்போதே எனக்கு டவுட்டு. நாட்டுச் சரக்க குடுத்து கவுத்திட்டியேடா?"
"அதான் சொன்னேனேடா. ஒயினெல்லாம் இல்லைன்னு"
"ஒயின் தானடா இல்லன்னு சொன்ன?"
"ஆமா. ஒயின் ஷாப்புல வாங்காதது"
"அடப்பாவி. இவ்வளவு கேணயனா இருக்கியேடா?"
"எனக்கு அப்பவே தெரியும்டா. இவன் இப்பிடி ஏதாவது செய்வான்னிட்டு. அதான் கமுதியிலயே வாங்கச் சொன்னேன்"
"டேய் இது எங்க மாமன் கல்யானத்துக்காக ஸ்பெசலா காச்சினது"
போடிக்காரன் "டேய் பரவாயில்லடா. ஸ்டார்ட் பண்ணுவோம்"
"டேய் காட்டுப்பயலே. நீ எல்லா சரக்கும் அடிச்சிருக்க. எங்களுக்கு எல்லாம் பழக்கம் இல்லயேடா"
"அதுக்காக இந்நேரம் கமுதிக்கு போக முடியுமா? விடிஞ்சா கல்யானம் வேற"
என்று சொல்லிவிட்டு ஒரு டம்ப்ளரில் சரக்கை ஊற்றி ஒரே மூச்சில் குடித்தான் போடிக்காரன்.
குடித்து விட்டு "டேய் செம்ம டேஸ்டுடா. இவங்க மாமன் நல்ல பழமா போட்டு செமயா காச்சி இருக்காருடா. சும்மா கொஞ்சம் டேஸ்ட் பாருங்க"
அனைவரும் கொஞ்சம் டேஸ்ட் பார்த்தோம். ரம்மை விட கேவலமாகவும் பிராந்தியை விட நன்றாகவும் இருந்தது. ஆளுக்கு ஒரு கிளாஸ் அடித்து விட்டு மட்டையானோம்.

மறுநாள் திருமணம் முடிந்து கறி சோறு சாப்பிட்டு விட்டு ஹாஸ்டல் வந்து சேர்ந்தோம்.
ஆனைப்பட்டியான் ஒரு வாரம் கழித்து ஹாஸ்டல் வந்தான். அவனை உட்கார வைத்து நடந்தவற்றை கொஞ்சம் மிகைப்படித்து கிண்டல் அடித்து மகிழ்ந்தது மொத்த ஹாஸ்டலும்.

கடுப்பாகிப்போன ஆனைப்பட்டியான் ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவெடுத்தான்.

"நான் படிச்சி முடிச்சி அரசியல்ல சேந்து மந்திரியாகி, எங்க ஊரு பேர ஆனைநகர்னு மாத்துவேன். அப்ப வாங்கடா கிண்டல் பண்ண"

ஆனைப்பட்டியை ஆனைநகர் என்று மாற்றிவிட்டால், ரோடு வருமா? குடிக்க சுத்தமான தண்ணீர் கிடைக்குமா? கிங்க்ஸ் சிகரெட் கிடைக்குமா? ஒயின்ஷாப்தான் திறந்துவிடுவார்களா?

இது நடந்து 13 வருடங்கள் ஆகி விட்டன. இன்று ஆனைப்பட்டி ஆனை நகர் ஆகிவிட்டதா தெரியவில்லை. அந்த ஊருக்கு ரோடு வந்துவிட்டதா என்றும் தெரியவில்லை. அநேகமாக டாஸ்மாக் மட்டும் திறந்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.

Friday, August 14, 2009

ஆனைப்பட்டி அனுபவம்

கல்லூரியில் படிக்கிற காலத்தில் உடன் படித்த நண்பன் ஆனைப்பட்டியான் விரும்பி வருந்தி அழைத்ததை தட்ட முடியாமல் நண்பர்கள் நாலு பேர் சேர்ந்து ஆனைப்பட்டிக்கு கிளம்பினோம்.

"டேய் ஆனைப்பட்டியான். உங்க ஊருக்கு பஸ் எல்லாம் இருக்கா? " - இது தர்மபுரியான்.

"டேய் என்ன இப்பிடி கேட்டுப்புட்ட. கமுதியில இருந்து எங்க ஊருக்கு பதினஞ்சி நிமிசத்துக்கு ஒரு பஸ் இருக்கு"

"எலேய். உங்க ஊருல சிகரெட் எல்லாம் கிடைக்குமால? இல்ல இங்கயிருந்து வாங்கிட்டு போயுருவமா?" இது கயத்தார்க்காரன்.

"அதெல்லாம் கிடைக்கும் மாப்ள. கமுதி பஸ் வந்திருச்சி வாங்க போலாம்."

கமுதி பஸ் எங்கள் மீது ஏறுவது போல நெருங்கி வந்தது. ஏறி இடம்பிடித்து உட்கார்ந்தோம். எனக்கு பஸ்ஸில் டிரைவர் சீட்டுக்கு இந்தப்பக்கம் இருக்கும் ஒற்றை சீட்டில் அமர்ந்து செல்வதென்றால் மிகவும் பிடிக்கும். போய் உட்கார்ந்தேன்.

"டேய் பங்காளி. அங்க உக்காரதடா. இங்க வா"

"ஏண்டா? எனக்கு இங்க உக்காரத்தாண்டா பிடிக்கும்"

"டேய் அங்க முன்னாடி கண்ணாடி இல்லடா. தூசி வந்து கண்ணுல விழும்."

அப்போது தான் பார்த்தேன். டிரைவருக்கு முன்னால் மட்டும் தான் கண்ணாடி இருந்தது. டிரைவரைத் திரும்பி பார்த்தேன். என் பார்வையின் அர்த்தம் புரிந்தவர் போல "ஆமாந்தம்பி. கண்ணாடியைப் போட்டா மட்டும். போன வாரம் சாதிக்கலவரத்துல கண்ணாடியை உடச்சுப்புட்டானுங்க. போய் பின்னுக்க உட்காருங்க" என்றார்.

போய் பின்னால் உட்கார்ந்தோம். பஸ் ரெட்டியபட்டி அருகில் வந்திருக்கும். பின் பக்கமிருந்து "டபடபடபடப" என்று ஒரே சத்தம். டிரைவர் பஸ்ஸை ஓரமாக நிறுத்தினார். பஸ்ஸில் இருந்த ஆண்கள் அனைவரும் கீழே இறங்கி பின் டயரைச் சுற்றி கூடினார்கள்.

"தள்ளுங்கப்பா, தள்ளுங்கப்பா" என்று கூறியவாறு கூட்டத்தை விலக்கி உள்ளே நுழைந்தார் டிரைவர். டயரிலிருந்து ஒரு பிசிறு விட்டு பஸ்ஸின் தகரத்தில் அடித்துக் கொண்டே வந்திருக்கிறது.

"யாராச்சும் கத்தி வச்சிருக்கிங்களாப்பா?" என்று ஒரு பெரிசு குரல் கொடுக்கவும் ஒரு பத்து பேர் இடுப்பில் இருந்து கத்தியை எடுத்தனர். எல்லா கத்தியையும் சோதித்துப்பார்த்த பெரிசு. உதட்டைப் பிதுக்கினார். "எல்லாம் மொட்டக்கத்தியா இருக்கே". இன்னொருவர் கக்கத்தில் சுருட்டி வைத்திருந்த மஞ்சப்பையை பிரித்து உள்ளே இருந்து ஒரு கத்தி எடுத்தார். பளபள என்று இருந்தது.

"கத்தி இன்னும் ரத்தம் பாக்கல பெருசு. இத வெட்டுனா துரு பிடிச்சிடும். அதான் எடுக்கல" என்றார் அந்த ஆள்.

"அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுப்பா. என்று சொல்லி அந்தக் கத்தியை வாங்கி டயரின் பிசிரை வெட்டி விட்டார் பெரிசு.

எல்லாரும் பஸ்ஸில் ஏறி கமுதி பஸ்ஸ்டாண்ட் வந்து சேர்ந்தோம்.

"டேய் என்னடா? இந்த ஊருல எல்லாரும் இடுப்புல கத்தியோட அலையிரனுங்க? "ஆச்சரியத்துடன் கேட்டான் தர்மபுரியான்.

"இந்தப்பக்கம் கத்திதாண்டா. இன்னும் உள்ள போனா முதுகுல அருவாவோடதான் வருவாய்ங்க.."

"டேய் அங்கன ஒரு முதுகுளத்தூர் பஸ் நிக்குதுடா"

"அது எங்க ஊருக்குப் போகாதுடா"

இப்படியே ஒரு ஐந்து பஸ்களை விட்டபின் ஆறாவதாக வந்த பஸ்ஸில் ஏறச் சொன்னான்.

"ஏண்டா பதினஞ்சி நிமிசத்துக்கு ஒரு பஸ்ஸுன்னு சொன்ன, கடைசியில ரெண்டு மணி நேரம் காத்திட்டு இருந்தோமேடா?"

"அந்த பஸ்காரனுக எல்லாம் எங்க ஊர்ல நிருத்தமாட்டானுக. இந்த பஸ்தான் நிக்கும்".

நிக்கும்போல தோன்றினாலும், ஓடுமா என்ற சந்தேகம் எழுந்ததை தவிர்க்க முடியவில்லை.

"அஞ்சி ஆனப்பட்டி விலக்கு" என்று டிக்கட்டும் எடுத்தாயிற்று. இனி தவிர்க்க முடியாது.

ஒரு அரை மணி நேரம் பயணம் போனது. பஸ் ஒரு ஒற்றைப் பனை மரத்தின் அருகில் நின்றது.

"டே எரங்குங்கடா"

"எங்கடா ஊரு?"

"இந்தா இந்தப் பாதையில கொஞ்ச தூரம் போனா வந்திடும்டா?"

"வெரும் பா தாண்டா இருக்கு. தய காணோமே?"

"கிண்டல் பண்ணாதிங்கடா. வாங்க நடப்போம்".

நடந்து கொண்டே இருந்தோம்.

"டேய் இன்னும் கொஞ்ச தூரம் நடந்தா முதுகுளத்தூரே வந்திடும் போல"

"அதெல்லாம் இல்லடா, அந்தா அங்கன தெரியுது பாருங்க. அதுதான் ஊரு"

ஒருவழியாக ஒரு மூன்று கிலோ மீட்டர் நடந்து ஊருக்கு வந்தோம்.

"என்னடா ஊருன்னு சொன்ன இங்க ஒரு தெரு மட்டும் தான் இருக்கு".

"ஏய் எங்க ஊரு கொஞ்சம் சின்ன ஊருதாண்டா. ஆனா மூணு தெரு இருக்கு".

அங்கே மொத்தமாக ஒரு இருபது வீடுகள் தான் இருந்தன..

"எங்கடா? "

"அந்தா கருப்பசாமித்தேவர் வீட்டுல - ஒரு மச்சு வீடு இருக்குல, அங்கன்
இருந்து இங்கன வரைக்கும் மேலத்தெரு. இங்கன இருந்து அந்த கூரை வீட்டு வரைக்கும் நடுத்தெரு"

"மூணாவது கீழத்தெருவா? அது எங்கன இருக்கு?"

"வர்ர வழியில ஒரு காலனி இருந்துச்சில்ல"

"எது அந்த ரெண்டு வீடு மட்டும் தனியா இருந்துச்சே? அதுவா?"

"ஆமா அந்தக் காலனி தான் கீழத்தெரு".

"இதுக்கு ஒண்ணியும் குறச்சல் இல்ல. பத்து வீடு இருந்தாக்கூட அதுல ரெண்டு வீட்டை தனியா பிரிச்சி காலனின்னு ஆக்கிடுவிங்க"

"சரிடா, சிகரெட்டு வாங்கனும். பெட்டிக்கடை இருக்குன்னு சொன்னியே?"

"அந்தா அந்தப் புளியமரத்தடியில ஓலப்பெட்டிய வச்சிக்கிட்டு உக்காந்து இருக்காரே பச்சமுத்து மச்சான். அதுதான் எங்க ஊர் பெட்டிக்கடை."

"அடப்பாவிகளா, பெட்டிக்கடைன்னா 'பெட்டி' கடையேவா?"

பச்சமுத்துவிடம் போய் கோல்ட் ஃப்ளேக் கிங்க்ஸ் ரெண்டு குடுங்க.. என்று கேட்டான் தர்மபுரியான்.

"அப்புடின்னா என்ன தம்பி?"

"சிகரெட்".

"அப்புடி கேளுங்க அதை விட்டுப்புட்டு என்னவோ தஸ்ஸு புஸ்ஸுன்னுட்டு"

"என்னங்க, சிசர்ஸ் தர்ரிங்க?"

"சிசர்ஸ் இல்ல, கத்திரி சிகரெட்டு. எங்க ஊர்ல இது மட்டுந்தான் கிடைக்கும். அது கூட கருப்பசாமித்தேவர் பையன் மட்டுந்தான் வாங்குவாப்புல.
மத்தவிங்கல்லாம் பீடியும் சுருட்டும்தான்"..

நாங்கள் அனனவரும் ஆனப்பட்டியயனனப் பார்க்க - "எனக்கு சிகரெட்டு பேரெல்லாம் எப்பிடீடா தெரியும். நாந்தான் சிகரெட்டு பிடிக்க மாட்டேனே?"

தர்மபுரியான் ஆனைப்பட்டியானைப் பார்த்த பார்வையில், கத்திரி சிகரெட்டு பத்த வைக்காமலே புகைந்தது..

ஒருவழியாக அந்த ஊரில் இரண்டு நாட்களைக் கடத்தி ஊர் வந்து சேர்ந்தோம்.

அடுத்த வருடம், ஆனைப் பட்டியானின் தங்கைக்கு திருமணம். ஆனைப் பட்டியான் விரும்பி, வேண்டி, மிரட்டி, கெஞ்சி, கதறிக் கேட்டுக் கொண்டதால் மீண்டும் கிளம்பினோம். கமுதியில் வந்து எங்களை அழைத்துக் கொண்டு போவதாக திட்டம்.

கமுதி வந்தாயிற்று. நிஜ சட்டை போட்ட காமராசர் சிலைக்கு அருகில் நிற்பதாகவும், அங்கே வந்து சந்திப்பதாகவும் சொன்னபடி (அரை மணி நேரம் காத்திருந்த பின்) ஆனைப்பட்டியான் வந்து சேர்ந்தான்.

"டேய் என்ன சிகரெட் வேணுமோ இங்கயே வாங்கிக்குங்க. எங்க ஊர்ல கிடைக்கலைன்னு புகார் வாசிக்க கூடாது"

"சரிடா தங்கச்சி கல்யாணம். சரக்கெல்லாம் இருக்குமா?"

"ஏய் ஆமாண்டா, இங்கயே வாங்கிட்டு போயிடலாம்டா"

"அதெல்லாம் எங்க ஊரில இருக்கும்டா"

தர்மபுரியான் - "இவன நம்ப முடியாதுடா. இங்கயே வாங்கிட்டு போயிடலாம்".

போடிக்காரன் - "இல்லடா மாப்ள, கல்யாணம்ங்கிறப்ப ஊர்ல
இருக்குறவனுவல்லாம் தண்ணி அடிப்பானுங்க. அதுனால இருக்கும்."

"ஆமாண்டா. நானும் காசு ரொம்ப கொண்டு வரல. இங்க வாங்கணும்னா கூட வாங்க முடியாது"

தர்மபுரியான் அரை மனதுடன் ஒத்துக்கொள்ள மறுபடியும் ஓடுமோ ஓடாதோ என்ற பஸ்ஸில் ஏறி, ஆனைப்பட்டி விலக்கில் இறங்கினோம்.

"இந்த தடவ நாம ஷார்ட் கட்ல போகமுடியாதுடா. கொஞ்சம் சுத்திதான் போகணும்"

"என்னது போன தடவ நாம போனது ஷார்ட் கட்டா? சொல்லவேயில்ல?"

இந்த முறை பாதை இன்னும் குறுகலாக இருந்த்து. அதிசயமான ஊர், நெருஞ்சி முள்ளிலேயே பாதை. நெருஞ்சி முள்ளும் செருப்புக்கு மேலே குத்தியது.

பாதை ஒரு கண்மாயில் வந்து முடிந்தது. அதிசயமாக கண்மாயில் தண்ணீர் இருந்தது..

"எப்பிடிடா இதை தாண்டுறது?" என்று கேட்டுக் கொண்டே திரும்பிப் பார்த்தால், ஆனைப்பட்டியான் வெறும் ஜட்டியோடு நின்றுகொண்டிருந்தான்.

"டே? என்னடா? எப்படா கழட்டுன? எதுக்குடா கழட்டுன?"

"தண்ணில எறங்கித்தாண்டா போகணும். பேண்ட் நனஞ்சிடக்கூடாதென்னு தான் கழட்டிட்டேன். நீங்களும் கழட்டுங்கடா"

நாங்களும் பேண்டை கழட்டி கிட்டத்தட்ட நீச்சல் அடித்து கண்மாயைக் கடந்து கரையேறினோம்.

நாங்கள் எல்லாம் பேண்டை போட்டுக்கொள்ள, ஆனப்பட்டியான் மட்டும் தோளிலேயே போட்டிருந்தான்.

"என்னடா? இப்பிடியே வர்ற?"

"உடம்புல ஈரம் காயட்டும் பங்காளி. அப்புரம் போட்டுக்கலாம்."

"டேய் இங்க பொம்பளக எல்லாம் வர்றாங்கடா"

"பரவாயில்லடா".

வந்தவர்களில் ஒரு பெண், "என்னா சம்முவம் மவனா? தங்கச்சி கல்யானத்துக்கு சேக்காளிகள கூட்டிட்ட்டு வந்திகளாக்கும்?"

"ஆமாத்தா" என்று சொல்லிவிட்டு ஜட்டியோடு நடக்கிறோமே என்ற சங்கோஜமே இல்லாமல் நடந்தான்.

ஒருவழியாக ஊருக்குள் நுழையுமுன் பேண்டைப் போட்டுக் கொண்டான்.
இந்த தூரம் வருவதற்குள், தர்மபுரியானும் கயத்தார்க்காரனும் தலா மூன்று சிகரெட்டை முடித்திருந்தார்கள்.

(தொடரும்)