Saturday, October 3, 2009

தேவுடு - சிறுகதை

சுப்ரபாதம் சி.டி ஒலித்துக் கொண்டிருக்க கடூரமான குரலில் உடன் பாடிக் கொண்டிருந்த ராம்பாபுவின் குரல் கேட்டு தூக்கத்திலிருந்து விழித்தேன். நான்.. ரவி சங்கர். பி.இ படித்துவிட்டு சென்னையில் ஒரு உப்புமா கம்பெனியில் சிறிது காலம் ஜாவாவை ஓட்டிக் கொண்டிருந்து விட்டு பின் ஒரு நண்பனின் மூலம் எச்.ஒன்.பி விசாவைப் பெற்று அமெரிக்கா வந்து நேற்றோடு மூன்று வருடம் முடிந்து விட்டது. இந்த மூன்று வருடத்தில் ஆறு காண்ட்ராக்ட்களில் வேலை செய்து விட்டேன். வழக்கமாக முதல் காண்ட்ராக்ட் முடியும் முன்பே அடுத்த அசைன்மெண்ட் ரெடியாக வைத்திருக்கும் நான் இப்போது தான் முதல் முறையாக ஒன்னரை மாதங்களாக பென்ச்சைத் தேய்த்துக் கொண்டிருக்கிறேன்.

ராம்பாபு உப்புமாக் கம்பெனியில் என்னுடன் வேலை பார்த்த ஒரு அக்கட பூமிக்காரன். சென்னையில் படித்து அங்கேயே இரண்டு வருடம் வேலை பார்த்த காரணத்தால் கொஞ்சம் நன்றாகவே தலுங்கு பேசக் கூடியவன். அதனால் அவன் ரூம் மேட்டாக காலம் ஓடுகிறது. இதுவரை அவன் மிளகாய் சாம்பாரை நானும் என் தண்ணி மோர்க்குழம்பை அவனும் ரசிக்கப் பழகிவிட்டோம்.

மற்றபடி நானும் ராம்பாபுவும் நேரெதிர் துருவங்கள். அவன் சுப்ரபாதத்தில் முழித்து மாலை அலுவலகம் விட்டு வந்ததும் விஷ்ணு சகஸ்ஹரநாமத்தை பாராயணம் செய்யவில்லை என்றால் அவன் உயிரோடு இல்லை என்று அர்த்தம். நான் சுயமரியாதைக் குடும்பத்தில் வளர்ந்தவன். சரஸ்வதி பிரம்மனின் நாவில் குடியிருந்தால் அவள் மலஜலம் கழிப்பதெங்கே என்று தொடங்கி ராம்பாபுவை வம்புக்கிழுத்துக் கொண்டே இருப்பேன். வேறு வழியில்லாமல் அவனோடு ரூம்மேட்டாக இருந்து வருகிறேன்.

இன்று வெள்ளிக்கிழமை. திங்கட்கிழமை ஒரு இண்ட்டர்வ்யூ இருக்கிறது. அதற்கு எம்.க்யூ வொர்க் ஃப்ளோ தெரிந்திருக்க வேண்டும். எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும். திங்கட்கிழமைக்கு தான் இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறதே என்று கிடைத்த டாக்குமெண்ட்டுகளை வைத்து விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தேன். அவ்வப்போது ராம்பாபுவும் உதவிக்கொண்டிருந்தான்.

"ஒரே ரவி. நாளிக்கி பிட்ஸ்பர்க் போவணும். மெமரி இருக்கில்ல?"

"என்ன பிட்ஸ்பர்க்கா? அடேய் எனக்கு மண்டே இண்டர்வ்யூ இருக்குடா"

"அட எண்ணடா இண்டர்வ்யூ? தேவுடுகிட்ட போய் கேட்டுட்டு வந்தா அவர் குடுக்குறாரு இண்ட்டர்வ்யூ"

"எனக்கு பதிலா அவர் போவாரா? அவர் நெத்தில போட்டிருக்குற நாமத்த பாத்தாலே மெரண்டு ஓடிடுவான் வெள்ளக்காரன்"

"டேய் எனிக்கு பர்த்து டே டா. அதுக்கு பிட்ஸ்பர்க் போய் சத்தியநாராயணா பூஜா செய்யணுண்டா"

"பர்த் டேயா. சொல்லவே இல்லை. அடேய். பர்த் டேன்னா நம்ம பக்கத்து பப்க்கு போய் தண்ணியடிச்சுட்டு வந்தா போதுண்டா. பிட்ஸ்பர்க் ஏண்டா போகணும்"

"டேய் இப்பிடி சொல்லாதேடா.யூ ஹாவ் டு கம் வித் மீ.யூ ஆர் த பெஸ்ட் ட்ரைவர். ஐ வில் ப்ரிங்க் த ரெண்ட்டல் கார். ஓக்கே?" என்று கேட்டுவிட்டு பதிலுக்கு நிற்காமல் வேலைக்குப் போய் விட்டான்.

என்னிடம் லைசன்ஸ் மட்டும்தான் இருக்கிறது. கார் இல்லை. அவனிடம் இருக்கும் 1992 காரில் சென்றால் I-90 வரை மட்டும் தான் செல்ல முடியும். அதற்கு மேல் போகாது. அதனால் ரெண்ட்டல் கார். சரி போகும் வழியில் இவனிடம் எம்.க்யூ பற்றி கதைத்துக் கொண்டே போகலாம் என்ற எண்ணத்தில் அன்றைய எம்.க்யூ படிப்பை ஒத்தி வைத்துவிட்டு முக்கியமான வேலை பார்க்கப் போய் விட்டேன்.

மாலை வரும்போது வெக்மன்ஸில் இருந்து இரண்டு பை நிறைய நொறுக்குத்தீனி வாங்கி வந்திருந்தான் - சிப்ஸ், குக்கீஸ், கேண்டிஸ்.

நான் என் முக்கியமான வேலை கலைந்து எழுந்து "எதுக்குடா இது?"

"ஃபைவ் அவர்ஸு ட்ரைவுடா. எதாவது சாப்புட்டுட்டே போகலாம்"

"அது சரி"

காலை ஏழு மணிக்கு எழுந்து அவனிடம் திட்டு வாங்கிக் கொண்டே கிளம்பி இதோ இப்பொது பிட்ஸ்பர்கை நெருங்கும்போது மணி மதியம் ஒன்று. அவன் கோயிலுக்குள் செல்ல நான் பிட்ஸ்பர்க் வந்த வேலையை செய்ய கேண்டினுக்குள் நுழைந்து ஒரு புளியோதரையையும் தயிர்சாதத்தையும் ருசித்து - என்னதான் சொல்லுங்கள் பெருமாள் கோயில் புளியோதரைக்கு ஈடு இணை எதுவுமில்லை - க்கொண்டிருந்த போது சுருங்கிய முகத்தோடு வந்தான்.

"என்னடா? என்னாச்சு?"

"மார்னிங்கே முடிஞ்சதுடா பூஜை. அடுத்து செவன் தர்ட்டி ஸ்லாட்டுல இருக்கு. புக் செஞ்சிட்டேன்."

"என்னது 7:30? டேய் அது முடிய எய்ட் தட்டி ஆயிடுமேடா? அதுக்கப்புறம் கிளம்பி எப்போடா போயி சேர்றது?"

"போயிடலாம்டா"

"டேய் வர்ற வழியெல்லாம் வெக்மன்ஸ்ல வாங்கின நொறுக்குத்தீனிய தின்னுட்டு வந்ததுல எம்.க்யூவ மறந்தாச்சு. போகும்போதாவது தூக்கம் வராம இருக்க எம்.க்யூவ பத்தி சொல்லிட்டே வாடா?"

"ஓக்கேடா. இப்போ செவன் தர்ட்டி வரை ஏமி செய்யறது?"

"பக்கத்துல க்ராவிட்டி ஹில்லுனு ஒரு இடம் இருக்குடா. அங்க போயிட்டு வரலாம்"

கிராவிட்டி ஹில்லுக்கு போய் கார் தானாக ரிவர்ஸில் மலையேறுவதைப் பார்த்து அதிசயித்துவிட்டு சரியாக ஏழு மணிக்கு கோவிலுக்குத் திரும்பினோம். அவன் பூசை முடித்து விட்டு மறுபடி கேண்டினில் ப்ரசாதம் சாப்பிட்டு விட்டு கார் ஏறும்போது மணி 9:15.

"ரொம்ப லேட்டாயிடுச்சேடா"

"பருவாயில்லடா. நாளிக்கு சண்டேதான?"

"அது சரி"

காரை வேறுவழியில்லாமல் விரட்ட வேண்டியாதாகிவிட்டது. எம்.க்யூ வொர்க்ஃப்ளோ பற்றி பேச வேண்டியவன் உண்ட களைப்பில் மல்லாந்துவிட்டான். அவன் குறட்டைதான் என்னுடன் பேசிக் கொண்டுவந்தது.

பாங்க் பாங்க் என்ற சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். எப்போது கண்ணசந்தேன் என்று தெரியவில்லை. பின்னால் நீல சிவப்பு விளக்குகள் சுழல போலிஸ் கார். காரை புல்லோவர் செய்து நிறுத்தினேன். போலிஸ் காரர் என் ஜன்னலுக்கு வந்து நின்றார். கண்ணாடியைக் கீழே இறக்கிவிட்டேன்.

"மிஸ்டர். டூ யூ நோ ஒய் ஐ புல்ட் யூ?"

"நோ ஆஃபிசர்."

"இரண்டு காரணங்கள். நீங்கள் மிக வேகமாக சென்றீர்கள். மேலும் உங்கள் கார் நிலையில்லாம இரண்டு லேன்களில் சென்றது. குடித்திருக்கிறீர்களா?"

"இல்லை ஆஃபிசர்"

"தயவு செய்து கீழே இறங்குங்கள்"

வழக்கமாக குடித்தவர்களை சோதிக்கும் நூறிலிருந்து தலை கீழாக எண்ணுதல், கை இரண்டையும் விரித்துக் கொண்டு நடத்தல் ஆகியவற்றை செய்து முடித்தபின் ஓவர் ஸ்பீடிங்கிற்கான டிக்கட் மட்டும் கொடுத்தார். சத்தியமாக தூக்கம் போய் விட்டது.

ராம்பாபுவை எழுப்பி விசயத்தை சொன்னேன். "தேவுடா" என்று கன்னத்தில் போட்டுக் கொண்டான்.

ஊருக்கு வந்தது அசதியில் ஞாயிறு முழுக்கத் தூங்கியதும், இண்ட்டர்வ்யூவில் கோட்டை விட்டதும் இந்தக் கதைக்கு அவுட் ஆஃப் ஸ்கோப்.

டிக்கட்டை கில்ட்டி என்று கையொப்பமிட்டு அனுப்பி இரண்டு வாரம் ஆன பின், ஜட்ஜ்மெண்ட் வந்திருந்தது. நூற்று எழுபத்தைந்து டாலர் அபராதம். நான்கு பாயிண்டுகள் வேறு.

நொந்து போன நான் ராம்பாபு வரவும் அவனிடம் சொன்னேன். மறுபடியும் "தேவுடா" என்று கன்னத்தில் போட்டுக் கொண்டான்.

"என்னடா தேவுடா? அவராலதான் எனக்கு $175 தண்டம்"

"டேய் தேவுடு பவர்ஃபுல் காடு. அவரெ அப்புடி பேசாத"

"என்னடா பவர்ஃபுல்லு. வேலையும் கிடக்கல. நூத்தி எழுவத்தஞ்சி ரூவா தண்டம் வேற"

"பாத்தியா. உனக்குத்தான் வேல கிடக்கல. ஃபைனும் விழுந்துச்சி. எனக்கொண்ணும் ஆவல பாத்தியா? அது தாண்டா தேவுடு பவரு"

நான் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.

5 comments:

பித்தனின் வாக்கு said...

கதையில் கடைசி வரிதான் நகைச்சுவை. அருமை. ஆனாலும் கடவுள் ஒரு கதவை மூடி மறு கதவை திறப்பார்.
இம்ம் இரஜினி ஸ்டல சொன்னா நீ என்னாதான் நினைச்சாலும் நடக்கிறது நடக்காம போகாது

துளசி கோபால் said...

//நான் என் முக்கியமான வேலை கலைந்து எழுந்து..//

ஆஹா..... இது:-)))))

Unknown said...

பித்தன்
துளசி கோபால்

வருகைக்கு நன்றி.

மணிஜி said...

கேபிளின் பின்னுட்டத்திலிருந்து வந்தேன்..நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்

நாடோடி இலக்கியன் said...

சுவாரஸ்யமான நடை.