Sunday, November 8, 2009

ஐயோ போச்சு...

திமிர். இந்தப் புத்தியை இதை விட எளிதாக ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. 2001ல் பெங்களூருக்கு வேலைக்கு போனதிலிருந்து இன்று இந்த அமெரிக்காவில் குப்பை கொட்டும் வரை உடம்பு முழுக்க ஏறிவிட்டிருக்கிறது திமிர். விஷத்தை விட கொடியது. இத்தனை நாள் தெரியவில்லை. இன்று காணாமல் போனபின் தான் உறைக்கிறது. என்ன செய்வது? சில பேர் பிறவியிலேயே சாக்கிரதையாக இருக்கிறார்கள். சிலர் அடுத்தவர்களின் அனுபவம் பார்த்தாவது ஒழுங்காகிக் கொள்கிறார்கள். ஆனால் பட்ட பிறகுதான் புத்தி வருகிறது. அதுவும் கண்காணாத தேசத்தில் என்றால். ஐயோ...

2001ல் இருந்தே ரூபாய் நோட்டுக்களாக கையில் வைத்திருந்து பழக்கம் இல்லை. கேட்டால் - “I don't use paper, only plastic" என்று திமிராக பதில் சொல்ல மட்டும் தெரியும். கிரடிட் கார்டு வாங்குகின்ற இடங்களில் கிரடிட் கார்டு. இல்லையா, மூலைக்கு மூலை ஏ.டி.எம் இருக்கிறது. வேண்டும் பொழுது பணம் எடுத்துக் கொண்டால் போதும். எதற்காக எப்போதும் கையில் பணம் வைத்துக் கொண்டே அலைய வேண்டும்? என்று பதில் சொல்லிக்கொண்டு திரிந்தவன். அமெரிக்கா வந்த பிறகும் அதே கதை. இந்தியாவிலாவது பெட்டிக் கடைகளிலெல்லாம் கிரடிட் கார்டு வாங்க மாட்டார்கள். இங்கே, கடை என்று ஆரம்பித்ததும் சாமான் வாங்கி வைக்கிறார்களோ இல்லையோ ஒரு கிரடிட் கார்டு தேய்க்கும் இயந்திரம் வாங்கி வைத்து விடுகிறார்கள். அதனால் கவலை இல்லாமல் இருந்து வந்தான். இப்போது வைத்தார்கள் வேட்டு.

வேறு ஒன்றும் இல்லை. விசாவில் இரண்டு, மாஸ்டர் கார்டில் இரண்டு, அது போக பேங்க் ஏ.டி.எம் கார்டு மட்டும் இரண்டு என்று ஆறு அட்டைகளும், டிரைவிங் லைசன்ஸ், பிஜேஸ் க்ளப் மெம்பர்ஷிப் கார்ட், ஹெல்த் இன்சூரன்ஸ் கார்ட் என அத்தனை அட்டைகளையும் வைத்திருந்த வாலெட் தொலைந்து போய்விட்டது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

நல்ல வேளையாக எல்லா கடன் அட்டைகளுக்கும் ஆன்லைன் அக்கவுண்ட் அக்சஸ் இருந்ததால் வேறு ஏதாவது நடவடிக்கைகள் இருந்ததா என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. சோசியல் செக்யூரிட்டி எண்ணை வைத்தே அத்தனை அட்டைகளையும் திரும்ப அனுப்ப ஆவன செய்தாகிவிட்டது. ஏழு முதல் பத்து நாட்களுக்குள் அட்டைகள் கைக்கு வந்து விடும். அது வரை?

இதுவரை எங்கு சென்றாலும் கிரடிட் கார்டு கொடுத்து கொடுத்து பழகியதால் பணம் எடுத்து வீட்டில் வைக்கும் பழக்கமும் இல்லை. ஏ.டி.எம்மில் எடுக்கவும் முடியாது. வங்கிக்கு காலையில் தான் செல்ல முடியும். சென்றால் ஃபோட்டோ ஐ.டி இல்லாமல் பணம் எடுக்கவும் முடியாது. என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்து கடைசியில் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு போய் இரண்டு வாரங்களுக்கு கை செலவுக்கு குத்து மதிப்பாக எடுத்துக் கொண்டு வந்தாகிவிட்டது.

இப்போது டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் எங்கும் கார் ஓட்ட முடியாது. திங்கட்கிழமை முதல் வேலையாக டி.எம்.வி அலுவலகம் சென்று அதற்கும் பதிய வேண்டும்.

வாலட் தொலைந்து போவதென்பதை தவிர்க்க முடியாது தான். ஆனால் இப்படி எல்லா அட்டைகளையும் ஒரே வாலட்டில் வைத்திருப்பது என்பது இமாலயத் தவறு. இதிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள்.

1. தேவையான ஒன்று அல்லது இரண்டு அட்டைகள் தவிர மற்றவற்றை வீட்டில் பத்திரமாக வைத்திருப்பது.
2. எப்போதும் வீட்டில் நூறு அல்லது இருநூறு டாலர்கள் அவசரத்திற்கு வைத்திருப்பது.
3. வங்கியில் (காசு போனாலும் பரவாயில்லை என்று) மேலதிக செக் புக்குகளை வாங்கி வைத்துக் கொள்வது.

மிகவும் கடினமான வழியில் தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விதி. என்ன செய்வது? (தலையில் நங் என்று குட்டு விழுகிறது. ‘கவனக்குறைவா இருந்துட்டு விதி மேல பழியா?’ என்று சொல்லும் தங்கமணியின் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு)

அப்புறம் இன்னொரு விசயம் கேள்விப் பட்டேன். தமிழீழம் இருந்த பகுதிகளில் கோவில்களை இடித்து விட்டு சிங்களப் பள்ளிக்கூடங்கள் கட்டுகிறார்களாமே? உண்மையா? யாராவது சொல்லுங்களேன்?

3 comments:

பின்னோக்கி said...

அடக்கடவுளே...நானும் இப்படித்தான். நீங்க சொன்ன மாதிரி எல்லாக் கார்டையும் எடுத்துட்டு ஒன்னு ரெண்ட மட்டும் பர்ஸ்ல வெச்சுக்குறேன். இந்தியால உங்க அளவுக்கு பிரச்சினை இல்லதான் இருந்தாலும்

கலகலப்ரியா said...

எல்லாரும் இன்னைக்கு எச்சரிக்கிறதில இறங்கிட்டீங்க... என்ன சமாச்சாரம்...? நல்ல பதிவு.. ! கடைசில ஒரு நியூஸ் வேற.. =))... அருமை..!

Unknown said...

பின்னோக்கி..

உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னா, தங்கமணி பேர்லயும் ஒரு கார்டு போட்டு வச்சுக்கங்க, அவசரத்துக்கு உதவும்.

கலகலப்ரியா.

ஃப்ரீயா குடுக்க முடிஞ்சது எச்சரிக்கையும் அட்வைசும் தான..