Saturday, April 10, 2010

எனக்குப் பிடித்த 10 தமிழ்ப் படங்கள்

நண்பர் கார்த்திகைப் பாண்டியன் பிடித்த 10 தமிழ்ப் படங்கள் என்று எழுத அழைத்திருந்தார்.


விதி: 
1. தமிழ்ப் படங்கள் மட்டுமே
2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.
3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட)


நான் ரஜினி ரசிகன். கிட்டத்தட்ட ரஜினி நடித்த அத்தனைப் படங்களையும் பிடிக்கும். கமல் நடித்ததிலும் ஒன்றிரண்டு தேறும். பாலா இயக்கிய படங்களையும் எனக்குப் பிடிக்கும். இதில் 10 படங்கள் மட்டும் எப்படித் தேர்வு செய்வது என்று கடந்த இரண்டு நாட்களாக மூளையைக்(??!!) கசக்கிப் பிழிந்து ஒரு வழியாக தேர்வு செய்துவிட்டேன்.


ரஜினி "நடித்ததில்" பிடித்தது:
1. முள்ளும் மலரும்


பொதுவாக நம் தமிழ்நாட்டில் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. ராஜா ரசிகர்களைப் பொறுத்தவரை ஏ.ஆர்.ரகுமானுக்கு இசை அமைக்கவே தெரியாது, தாதா ரசிகர்களுக்கு சச்சின் சுயநலமாக ஆடுபவர், விஜய் ரசிகர்களுக்கு அஜித் படமெல்லாம் ஃப்ளாப், இந்த வரிசையில் கமல் ரசிகர்களுக்கு ரஜினிக்கு நடிக்கவே தெரியாது.


ரஜினி தான் எவ்வளவு சிறந்த குணசித்திர(இந்த வார்த்தைக்கு என்னாதுங்க அர்த்தம்) என்று நிரூபித்தத் திரைப்படம் இது.


மகேந்திரன் ஒரு வகையில் தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் செட்டெர். இவர் சினிமா எடுக்கும் வரை தமிழ் சினிமாவில் வசனம் என்பது மிகவும் முக்கியமான சாதனம். வசனத்தின் மூலமாக மட்டுமே காட்சியின் சூழலை விளக்கிக் கொண்டிருப்பார்கள். காரணம் பல இயக்குநர்களும் (ஸ்ரீதர், பாலச்சந்தர்) பல நடிகர்களும் (சிவாஜி, எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, கமல்) நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்கள். நாடகத்தில் முகத்தில் காட்டும் உணர்ச்சிகள் கடைசி வரிசையில் அமர்ந்து பார்க்கும் ரசிகனுக்குத் தெரியாது. ஆகவே ஏற்ற இறக்கமான வசனங்கள் மூலம் காட்சியை விளக்க வேண்டிய கட்டாயம். ஆனால் சினிமா என்ற “மூவி”யில் வசனம் இல்லாமலே காட்சியை விளக்கலாம் என்பதை தமிழில் முதலில் உபயோகித்தவர் மகேந்திரன் எனலாம்.


வசனமே இல்லாமல் இந்தப் படத்தில் இவர் வைத்த கிளைமேக்ஸ் காட்சியும், அந்தக் காட்சியில் இளையராஜாவின் இசையும்.. திருமணத்துக்காக சரத்பாபு குழுவினரோடு நடக்க ஆரம்பிக்கும் ஷோபா திரும்பி ஓடி வந்து அண்ணனைக் கட்டிக் கொண்டு அழவும், ஷோபாவின் தோளில் கை போட்டுக் கொண்டு ரஜினி சரத்தைப் பார்ப்பார் பாருங்கள் ஒரு பார்வை.


எனக்கு இந்தப் படத்தில் பிடித்த காட்சி:
எஞ்சினியர் சரத் பாபு ரஜினியின் ஒரு கை போனதால் இனி வேலை பார்க்க முடியாது என்று சொல்லும் காட்சி.
“ரெண்டு கை ரெண்டு காலு போனாலும் இந்தக் காளி பொழச்சுக்குவான் சார். கெட்ட பய சார் இவன்” என்று தெனாவட்டாகச் சொல்லிவிட்டு, மோட்டு வளையைப் பார்ப்பார். அந்தப் பார்வையில் இனி எப்படி பிழைக்கப் போகிறோம்? தங்கையை எப்படி பட்டினி போடாமல் காப்பாற்றப் போகிறோம் என்ற கவலை வருத்தம் என உணர்ச்சிகள் தாண்டவமாடும். ரஜினி இஸ் கிரேட்.


கமல் நடித்ததில் பிடித்தது:
2. அன்பே சிவம்


எனக்குக் கமல் என்ற நடிகனின் மீது பல விமர்சனங்கள் உண்டு. எந்த ஒரு திரைப்படத்திலும் கமல் அந்தப் பாத்திரமாக மாறுவதே இல்லை. எங்காவது கமல் என்ற மனிதர் வெளியே தெரிந்து விடுவார். ஒரு சில படங்களே இதற்கு விதிவிலக்கு. அதில் எனக்குப் பிடித்த படம் அன்பே சிவம்.


சாதாரணமாக கமல் தன் படங்களில் மற்ற நடிகர்களை டாமினேட் செய்வதில் வல்லவர். இந்தப் படத்தில் மாதவன் பல காட்சிகளில் கமலை டாமினேட் செய்திருப்பார்.


எனக்குப் பிடித்த காட்சி:
ஹோட்டல் அறையில் தங்கியிருக்கும் காட்சியில் கமல் தரையில் படுத்திருப்பார். மாதவன் மெத்தையில் படுத்திருப்பார். இருவரும் சுனாமி பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். அந்தக் காட்சியில் கமலின் வலது கால் இடது காலை விட குட்டையாக இருக்கும் வண்ணம் காலை இழுத்து வைத்து நடித்திருப்பார். படத்தில் தன் கால் குட்டை என்பதை பின்னால் ஒரு காட்சியில் தான் கமல் சொல்வார். இந்த சிரத்தை கமலிடம் எனக்குப் பிடித்தது.
எனக்குப் பிடித்த “ரஜினி” படம்.
3. பாட்சா


ரஜினி சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு மசாலா/ஸ்டைலிஷ் படங்களில் மட்டுமே நடிப்பதை செய்ய ஆரம்பித்து விட்டார். அப்படி வந்த ஸ்டைலிஷ் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது பாட்சா. இந்தப் படத்தை ரஜினியைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் படம் ஓடியிருக்காது.


எனக்குப் பிடித்த காட்சி:
ரஜினியின் தங்கையை மானபங்கப் படுத்த ரவுடி ஆனந்தராஜ் இழுத்து வருவார். ரஜினி குறுக்கே சென்று தங்கையை பிடிப்பார். அப்போது ஆனந்தராஜின் ஆட்களில் ஒருவர் ரஜினியைத் தாக்க ஓடி வருவார். அப்போது ரஜினி அவரை அடித்ததும் அவர் பறந்து போய் மின் கம்பத்தில் விழ அந்தக் கம்பத்திலிருந்து தீப்பொறி தெறித்து விழும். இது 100% நம்பவே முடியாத நிகழ்வு என்ற போதிலும் அந்தக் காட்சியைத் திரையில் பார்க்கும்போது புல்லரிப்பதை என்னால் தடுக்கவே முடியாது.


எனக்குப் பிடித்த காமெடி படம்
4. பஞ்சதந்திரம்


இதுவரை நான் பார்த்த படங்களில் முழு நீள நகைச்சுவைப் படம் எது என்று கேட்டால் நான் இந்தப் படத்தைத்தான் சொல்வேன். படத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒவ்வொரு வசனத்துக்கும் சிரித்துக் கொண்டே இருக்கலாம். கிரேசி மோகன் தன் வார்த்தை விளையாட்டால் கலக்கியிருப்பார். சிரித்துக் கொண்டே இருப்பதால் அடுத்தடுத்த வரிகளில் வரும் நகைச்சுவையை தவற விட்டுவிடுவோம். 


இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி 
பெங்களூரில் இருந்து திரும்பி வரும்போது செக் போஸ்டில் போலீஸ் இவர்களின் காரை மறிக்கும் காட்சி. பின்னாடி, முன்னாடி என்று விளையாடியிருப்பார்கள். கொஞ்சம் கடி ஜோக் மாதிரி தெரிந்தாலும் இதுதான் எனக்கு மிகவும் பிடித்த காட்சி. 


என்னைக் கலங்கடித்த படம்
5. சேது


மதுரையில் படித்துக் கொண்டிருந்த போது வெளிவந்த படம். சினிப்பிரியா தியேட்டரில் இரவுக் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காமல் ப்ளாக்கில் வாங்கி நானும் என் நண்பன் ஒருவனும் பார்த்தோம். 


வழக்கமாக படம் முடிந்து கூட்டம் கலையும்போது சளசளவென பேசிக் கொண்டே செல்வார்கள். இந்தப் படம் முடிந்து வரும் போது எனக்கு மனம் கனத்துப் போயிருந்தது. என்னைப் போலவே யாருமே பேசிக் கொள்ளாமல் கலைந்து போய்க் கொண்டிருந்தனர். நானும் என் நண்பனும் டூ வீலரில் சினிப்ரியாவில் இருந்து காமராஜர் யுனிவர்சிட்டி ஹாஸ்டல் வந்து சேரும் வரை ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை. 


எனக்கு மிகவும் பிடித்த காட்சி:
ஹால் டிக்கெட் தொலைந்து போனதால் பரிச்சை எழுத விட மாட்டார்கள் என்று சீயானிடம் வந்து அபியும் அவள் தோழியும் புகார் செய்யும் காட்சி. அதில் விக்ரம் பேசும் தத்துபித்து இங்க்லீஷும் அதை பெருமையுடன் பார்க்கும் அண்ணியும் கலக்கியெடுத்திருப்பார்கள்.


எனக்குப் பிடித்த திகில் படம்
6. யாவரும் நலம்


தமிழில் பல திகில்/பேய் படங்கள் பார்த்துள்ளேன். சிறு வயதில் மை டியர் லிசா பார்த்து பல நாள் தூங்காமல் இருந்திருக்கிறேன். ஆனால் அது எல்லாம் செய்யாத ஒன்றை இந்தப் படம் செய்தது. பேய் என்ற ஒன்றை விகாரமான உருவங்களின் மூலம் காட்டாமல் வெறும் டிவி, பல்பு எரிவது, சாமி படத்துக்கு ஆணி அடிக்க முடியாமல் போவது ஆகியவற்றை வைத்தே படம் காட்டியிருப்பார்கள். அதே போல திடுதிப்பென்று நம்ப முடியாமல் ஒரு திருப்பத்தைக் கொண்டு வந்தோ இல்லை சம்மந்தமில்லாமல் முடிச்சை அவிழ்க்கவோ செய்யாமல் சின்னச் சின்ன க்ளூவாக கொடுத்துக் கொண்டே வந்து கடைசியில் முடிச்சை அவிழ்ப்பது அருமையாக இருக்கும். நீங்கள் படத்தை ஒரு முறை பார்த்தவராக இருந்தால் மறுபடி ஒரு முறை பாருங்கள். அவர்கள் விட்டு வரும் க்ளூக்கள் உங்களுக்கு தெளிவாகத் தெரியும். நீங்களே ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று சேர்க்க முடியும்.


எனக்குப் பிடித்த காட்சி: 
தன்னால்தான் தன் குடும்பத்துக்கு ஆபத்து என்று பயந்து டாக்டர் வீட்டில் ஒரு அறையில் பூட்டிக் கொண்டு இருக்கும் மாதவன் டாக்டர் தான் குற்றவாளியாக இருக்கலாம் என்பதைக் கண்டுபிடிக்கும் காட்சி.


எனக்குப் பிடித்த “காதல்” படம்
7. காதல்


இந்தப் படம் தமிழில் இன்னொரு மைல் கல். இந்தப் படத்திற்குப் பிறகு மதுரைத் தமிழில் படம் எடுத்தால் ஓடி விடும் என்று எண்ணி மதுரைத் தமிழ் பேசும் படங்களாக வரிசைக் கட்டி வந்தது. 


சிறு வயதில் ஏற்படும் காதலுக்கு மறுப்பு வந்தால் மதத்தையும் குடும்பத்தையும் விட்டு விட்டு ஓடி போங்கள் என்று அலைகள் ஓய்வதில்லையில் பாரதிராஜா(மணிவண்ணன்?) சொன்னார். அப்படி ஓடிப்போனால் என்ன என்ன சிரமங்கள் நேரும் என்பதை பாலாஜி சக்திவேல் இந்தப் படத்தில் எடுத்துக் காட்டினார். 


அந்த ஜோடிகள் மேன்சனில் தங்கியிருக்கும் நண்பனை நம்பி வந்து நடுத் தெருவில் நிற்பதும். இரவு தங்க இடம் இல்லாமல் நைட் ஷோ படம் பார்த்து விட்டு திண்டிவனம் வரை பஸ்ஸில் சென்று திரும்புவதும், ஒவ்வொரு காட்சியிலும் அய்யோ இந்த ஜோடிக்கு ஒன்றும் நேர்ந்துவிடக்கூடாதே என்று பார்ப்பவர்களைப் பதைபதைக்க வைக்கும் படம். 


எனக்குப் பிடித்த காட்சி:
இருவரையும் சுமோவில் அழைத்து வரும்போது சித்தப்பா முருகனிடம் கேள்வி கேட்கும் காட்சி. ஆரம்பத்தில் இருந்து நல்லவர் போல வரும் இந்தச் சித்தப்பா, ஒவ்வொருவரிடமும் தகுந்த முறையில் பேசி விசயத்தை வாங்கும் இந்தச் சித்தப்பா மதுரை நெருங்க நெருங்க அவர் கேள்வி கேட்கும் தொனி மாறி முருகனை அடிக்க ஆரம்பிக்கும் போது பார்க்கும் நமக்கு அடி வயிற்றில் எதோ கலக்கம் ஏற்படும்.


எனக்குப் பிடித்த “குழந்தைகள்” படம்
8. பசங்க


அஞ்சலி படத்துக்குப் பிறகு தமிழில் சிறுவர்களுக்கான ஒரு படம் இல்லாமலேயிருந்தது. பெரியவர்களுக்கான படங்களையே நெளிந்துகொண்டே சிறுவர்களுக்கும் போட்டுக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். சிறுவர்களைக் கொண்டே பெரியவர்களுக்கும் மெசேஜ் வைத்திருந்தார் பாண்டியராஜ். 


ஒரு சில சினிமாட்டிக் க்ளீஷேக்களைத் தவிர்த்துப் பார்த்தால் இந்தப் படம் தமிழில் ஒரு ஆகச் சிறந்த படம். 


எனக்குப் பிடித்த காட்சி:
கணக்கு வாத்தியாரும் அன்புக்கரசுவின் அப்பாவும் படிக்கட்டில் அமர்ந்து பேசும் காட்சி. இந்தக் காட்சியின் ஒவ்வொரு வசனமும் பெற்றோர்களுக்குப் பாடம்.


எனக்குப் பிடித்த பீரியட் படம்
9. சுப்பிரமணியபுரம்


காதலுக்காக உயிரையே தியாகம் செய்யும் காதலர்களையும், நட்புக்காக எதையும் கொடுக்கும் நண்பர்களையும் பார்த்து வந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு காதலி செய்யும் துரோகமும், நண்பன் செய்யும் துரோகமும் பளிச்சென்று முகத்தில் அறையும் படம். 


1980களில் நடந்ததாகக் காட்டுவதற்காக சில்வர் கலர் பெயிண்ட் அடித்த பஸ்ஸிலிருந்து வீடுகளில் மாடல், இளையராஜா பாட்டு, வயர் பின்னிய சோபா செட், வீடியோவில் பாட்டு என்று மெனக்கிட்டிருப்பார்கள். 


ஜில்லென்று ஒரு காதல் படத்தில் ஜோதிகா சூர்யாவின் டைரியைப் படிப்பார். ஆறு வருடத்துக்கு முன்பு தன் கணவன் காதலித்த பெண்ணைப் பற்றி அதில் இருக்கும். உடனே ஃப்ளாஷ் பேக். ஆறு வருடத்துக்கு முன்னால் கோவையில் எஞ்சினியரிங் படிக்கும் சூர்யா ஓட்டுவது டி.வி.எஸ் ஸ்டார் சிட்டி மோட்டார் பைக். இப்படி லாஜிக்கில் ஓட்டை என்பதை விட லாஜிக்கையே ஓட்டையாகக் கொண்டு படம் எடுக்கும் தமிழ் சினிமா உலகில் பீரியட் படத்துக்காக மெனக்கெட்டிருந்த காரணத்துக்காகவே எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்த படம்.


எனக்குப் பிடித்த காட்சி:
காதலியைப் பார்க்க சென்று விட்டுத் திரும்பும் ஜெய்யையும் கஞ்சா கருப்புவையும் எதிரிகள் விரட்டும் போது ஒரு வீட்டுக்குள் ஒளிந்து கொண்டு அங்கே இருக்கும் பெண்ணின் காலில் விழுந்து கெஞ்சும் காட்சி. அப்போது ஜெய்யின் கண்களில் மரண பயத்தைப் பார்க்கலாம்.


எனக்குப் பிடித்த “தோல்வி”ப் படம்
10. வெயில்


இந்தப் படம் விருதுநகரைச் சுற்றி வந்ததாலோ என்னவோ எனக்கு மிகவும் பிடிக்கும். வெற்றி பெற்ற மனிதர்களையே படங்களில் பார்த்து வந்த நமக்கு தோல்வியை மட்டுமே பார்த்த ஒரு மனிதனின் வாழ்க்கையைப் படமாக்கித் தந்திருப்பார் வசந்த பாலன். 


வெயிலோடு விளையாடி பாடல் விருதுநகர் மாவட்டத்தில் கழித்த என் சிறுவயது நினைவுகளை தாலாட்டிச் சென்றது. ஆனாலும் படத்தில் வன்முறை சற்றே அதிகம் தான். அம்மாவே தான் திருடியிருப்பேன் என்று சந்தேகப் பட்டதும் வெளியேறும் முருகேசன், “அண்ணே எங்கம்மா?” என்று பரத் கேட்கவும் “இங்க தாம்பா இருந்துச்சி” என்று அம்மா பதில் சொல்லும்போது மாலை வெயில் முகத்தில் அடிக்க கையில் மஞ்சப் பையோடு முருகேசன் நடந்து செல்லும் போதே எ ஃபில்ம் பை வசந்த பாலன் என்று போட்டிருக்கலாம் (நன்றி: தர்ஷன்). அதற்குப் பிறகும் சண்டையை இழுத்து முருகேசனை சாகடித்து தியாகியாக்கியிருக்கத் தேவையில்லை.


எனக்குப் பிடித்த காட்சி:
விருதுநகர் பஸ்டாண்ட் அருகில் இருக்கும் டீக்கடையில் நின்று கொண்டிருப்பார் முருகேசன். அப்போது தன் சொந்தத் தம்பி பரத் அந்தப் பக்கம் பைக்கில் வருவார். அவரது நண்பன் பரத்தை நிறுத்தி பேசிக் கொண்டிருப்பார். தம்பி என்று தெரிந்ததும் அவரிடம் சென்று அவரைப் பற்றி விசாரிப்பார். “நீங்க யாருண்ணே?” என்று பரத் திரும்பத் திரும்பக் கேட்டதும், தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பது போல திக்கித் திணறி “அண்ணன்டா” என்று முருகேசன் சொல்லும் அந்தக் காட்சி. 


தொடர நான் அழைப்பது


1. வானம்பாடிகள்
2. சிங்கை சிங்கம் பிரபாகர்
3. விசா பக்கங்கள் 
4. பலா பட்டறை ஷங்கர்
5. நர்சிம் (தொடர் பதிவுகளை தொடர மாட்டார் என்று கேள்வி, இருந்தாலும்...)
6. கேபிள் சங்கர் 
7. ஜெய்லானி

43 comments:

vasu balaji said...

ந்ந்ந்ந்ந்ந்நோ! பஞ்ச தந்திரம் சிம்ரனுக்காக புடிச்சது:)). என்னிய போய் தொடர்பதிவுக்கா. நான் படம் பார்த்து வருஷக்கணக்காச்சே!

Paleo God said...

ஏற்கனவே பின்னூட்டத்திலயே சொல்லிட்டனே! தருமி அய்யா கூ்ட தொடரச்சொல்லி இருந்தார்..! ட்ரை பண்றேன் முகிலன்.!
:)

Paleo God said...

நீங்கள் விவரித்த விதம் அருமை.:)

தர்ஷன் said...

உங்கள் சமீபத்திய கிரிக்கெட் பதிவொன்றைப் பார்த்த போது உங்கள் மீது கோபமாக இருந்தது. அதை வாசித்த போது அதற்கும் அதற்கு பின்னரான எந்தப் பதிவுக்கும் நான் உங்களுக்கு பின்னூட்டமிடவில்லை.
நண்பர்களுக்குள் கோபமாவது மண்ணாவது
எப்படி இருக்கிறீர்கள்?
உங்கள் பதிவில் நீங்கள் சொன்னப் பல படங்கள் எனக்கும் பிடித்தவை. நானும் பயங்கர ரஜினி ரசிகன்தான். தலைவரின் பிறந்தநாள் பதிவில் அவரை தலையாய நடிகர் என்று எழுதியதால் நிறையப்பேர் எப்படி இப்படி எழுதலாம் என கேள்வியெழுப்பினர். முடிந்தால் நான் தலைவர் பற்றி எழுதியப் பதிவுகளைப் படித்துப் பாருங்கள்.
அப்புறம் வெயில் தொடர்பில் நீங்கள் எழுதிய வரிகளை எங்கோ படித்த ஞாபகம் Wise man think alike இல்லையா?
பதிவர்கள் எல்லோரும் தமிழர்கள்தான் முகிலன் அதில் இலங்கை,இந்திய,மலேசிய வேறுபாடுகள் அவசியமற்றது. ஒவ்வொருவருக்கும் இருக்கக்கூடிய தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் மற்றவரை புண்படுத்தாது வெளிவருதல் ஆரோக்கியமானது. ஆயிரம்தான் இருந்தாலும் நான் என்னை இலங்கையனாகவே உணர்கிறேன். என்நாட்டை நான் நேசிக்கிறேன். நீங்கள் இந்தியாவை நேசிப்பது போலவே. என்னைப் போலத்தான் இங்கு எழுதும் நிறைய இலங்கை நண்பர்கள். இனிமேல் எழுதும் போது என்னைப் போன்ற உங்கள் இலங்கை நண்பர்களையும் கருத்தில் கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்
நட்புடன்
தர்ஷன்

Unknown said...

@தர்ஷன்:

உங்கள் கோபம் நியாயமானதே.

நான் பொதுவாக இலங்கைப் பதிவர்கள் என்று மட்டும் எழுதியிருக்கக் கூடாது. அது என் தவறுதான். நீங்கள் உங்கள் வருத்தத்தை அந்தப் பதிவிலேயே சொல்லி இருக்கலாம். லோஷன் அவர்கள் சொல்லியிருந்தார். அவருக்கு நான் விளக்கமும் சொல்லியிருந்தேன்.

எனக்கு எல்லா இலங்கைப் பதிவர்கள் மீதும் கோபம் இல்லை. இந்திய அணியைப் பற்றி மட்டுமே தவறாகப் பேசி எழுதிக் கொண்டிருக்கும் பதிவர்கள் மீதுதான் கோபம்.

உதாரணத்திற்கு ஒன்று: பெங்களூர்-கொல்கத்தா போட்டியில் மேத்யூஸ் 4 விக்கெட் எடுத்ததற்கு அவருக்கு மேன் ஆஃப் த மேட்ச் கொடுத்திருக்க வேண்டும்தான். ஆனால் அதைப் பற்றி எழுதும் போது இவனுங்களே இப்பிடித்தான் என்று எழுதுவது சரியா? அதுதான் என் கோபத்தைத் தூண்டி விட்டது.

நான் அந்தப் பதிவிலேயே என் மன்னிப்பைக் கோரியதோடு எழுத்தையும் மாற்றியிருந்தேன்.

எனிவே..

வெயில் பற்றி எழுதியதை எங்கோ படித்த நியாபகம்.எங்கே என்பதைத் தான் நான் மறந்து விட்டேன். இப்போது நீங்கள் நினைவு படுத்தியதற்கு நன்றி. உங்கள் பெயரைச் சேர்த்துவிட்டேன்.. :))

Chitra said...

விசில்.......... விசில்...... விசில்.........!!!!! எந்த எந்த படங்களுக்கு என்று உங்களுக்குத் தெரியும்..... உய்.......
சூப்பர் பதிவுங்க.....!!!!

Anonymous said...

நல்ல தேர்வுகள் முகிலன்

Unknown said...

@சித்ரா..

உங்களைத் தொடர அழைக்க பயமாய் இருக்கிறது.

@சின்ன அம்மிணி என்ன ரொம்ப நாளா ஆளக் காணோம்? நீங்க இதைத் தொடருங்களேன்?

VISA said...

"தமிழ் படம்" ஒண்ணே ஒண்ணு தானே வந்திச்சு. சரி சரி......அசத்திடுவோம்.

கலகலப்ரியா said...

ஆரம்பிச்சிட்டாய்ங்கையா ஆரம்பிச்சிட்டாய்ங்க...
முள்ளும் மலரும் பார்க்கணும்...
யாவரும் நலம் எல்லாம் பார்க்கற அளவு நம்ம ஹார்ட் பக்குவப்படலை...

மீதி எல்லாம் ஓகே... எனக்கும் பிடிச்சிருந்தது... :D

பிரபாகர் said...

எனக்கும் பிடித்த எல்லாப்படங்களையும் எழுதிவிட்டு என்னை தொடரச்சொன்ன என் நண்பா, இதனை சவாலாக்கியிருக்கிறீர்கள். கண்டிப்பாய் எழுதுகிறேன்...

பிரபாகர்...

Prathap Kumar S. said...

தலைவர் கமலை விமர்சித்தற்கு தாறுமாறுமாறாக கண்டனங்களை தெரிவித்து நான் வெளிநடப்பு செய்கிறேன்.....
தலைவரை விமர்சித்தற்கு மன்னிப்பு தெரிவிக்கும்வரை கவுஜை எழுதும் போராட்டம் நடத்தப்போறோம்...எப்படி வசதி...??? :))

பனித்துளி சங்கர் said...

புதுமையான முயற்சி !
பகிர்வுக்கு நன்றி !

தொடருங்கள் மீண்டும் வருவேன் .

க.பாலாசி said...

நீங்க சொன்னதுலேயே எனக்கு புடிச்ச படம் அன்பே சிவம்... நான் அந்தப்படத்த இன்னும் பார்க்காததால கூட இருக்கலாம்....

Anonymous said...

VaaanamPadi - Simrana pathi pesa vendiya vayasayya?

சரவணகுமரன் said...

வரிசையை நல்லா எழுதியிருந்தீங்க...

கலகலப்ரியா said...

//
Anonymous said...
VaaanamPadi - Simrana pathi pesa vendiya vayasayyaa//

ஏன் சிம்ரனுக்கு வயசாயிடுத்தா?

இல்ல பல்லு முளைக்காத பாப்பாக்கள்தான் சிம்ரன் பத்தியும் தமனா பத்தியும் பேசலாமா?

வானம்பாடி ஐயாவுக்கு நூறு வயசு ஆயிடிச்சா? அப்படி ஆனாலும் அவங்க சிம்ரன் பத்திப் பேசக்கூடாதுன்னு எந்த உலகத்தில சட்டம் வகுத்திருக்காங்க...

சிம்ரன் பத்தி வானம்பாடிகள் பேசினதில பெயர் போடக் கூடத் தெம்பில்லாத நபருக்கு என்ன மண்டைக் காய்ச்சல்?

(வானம்பாடிகள் சார்.. நீங்க பேசாம தேவாரம்... திருவாசகம்.. திருக்குறள் அப்டின்னு பாடிக்கிட்டு... வயசானது தெரியணும்ல... வாக்கிங் ஸ்டிக் ஊன்றிக்கிட்டு டண்டனக்கா டனக்குனக்கான்னு கைலாசத்துக்கு நடக்க ஆரம்பிங்க... பெயரில்லாத நபர் பின்னாடி ஜிங்குச்சா ஜிங்குச்சான்னு அடிச்சுக்கிட்டு வருவாரு..)

(முகிலன் சாரிப்பா... நெஞ்சு பொறுக்குதில்லை.. இந்த நிலைகெட்ட மாந்தர்.. நோ... மாந்தர்ல எல்லாம் சேர்த்தி இல்லை..)

பின்னோக்கி said...

எல்லாப் படங்களும் அருமையான படங்கள்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்ல தேர்வு முகிலன்.. சொல்லியிருக்கற எல்லாமே எனக்கும் பிடிக்கும்.. சேது மட்டும் ரொம்ப லேட்டாப் பார்த்ததால, அந்த பாதிப்பு ஏற்படல :))பஞ்சதந்திரம், அன்பே சிவம் இன்னும் பார்க்கல.. இன்னிக்கு பார்த்திட வேண்டியது தான் :)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

வெய்ட்டீஸ்.. கமல் ரசிகர்கள் ஆராச்சும் கோச்சுக்கப்போறாங்க.. இன்னமும் முள்ளும் மலரும், பாட்சா - இந்த ரெண்டும் கூட பார்க்கலைங்க.. :))

Anonymous said...

//
@சின்ன அம்மிணி என்ன ரொம்ப நாளா ஆளக் காணோம்? நீங்க இதைத் தொடருங்களேன்? //

ஆணி அதிகம்.

நிறைய தொடர்பதிவு அழைப்பு இருக்கு. நேரம்தான் இல்லை. :)

Raghu said...

க‌ம‌லோட‌ சிற‌ந்த‌ ப‌ட‌ங்க‌ளில் ஒன்று 'அன்பே சிவ‌ம்'!

Philosophy Prabhakaran said...

நான் இந்தப் பதிவை தொடர விரும்புகிறேன்... தொடரலாமா... பதிலளிக்கவும்...

Philosophy Prabhakaran said...

சூப்பர்... மிக்க நன்றி...

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல தொகுப்பு!!!

பாட்ஷாவில் எனக்கு பிடித்த காட்சி:
தங்கைக்கு கல்லூரியில் சீட் வாங்கும் காட்சி
" உண்மையை சொன்னேன்"


யாவரும் நலம் எனக்கும் பிடித்தது.


காதல் & வெயில் படங்களில் நீங்கள் குறிப்பிட்ட
அதே காட்சிகள் பிடித்திருந்தது.

க‌ரிச‌ல்கார‌ன் said...

சொன்ன‌வித‌ம் அட்ட‌காச‌ம்

தாறுமாறுமாறாக கண்டனங்களை தெரிவித்த‌ நாஞ்சிலுக்கு ஏறுமாறான‌ க‌ண்ட‌ன‌ங்க‌ள்

settaikkaran said...

நீங்க ரஜினி ரசிகராயிருந்தாலும், உலக நாயகனோட படங்களைப் பற்றியும் எழுதி வயித்துலே பாலை வார்த்திருக்கீங்க! :-))

சத்ரியன் said...

யப்பா,

பழைய படங்களுக்கு விமர்சனம் எழுத இப்பிடி ஒரு வழி இருக்கா...? அப்ப சர்தான்...!

சத்ரியன் said...

//சிங்கை சிங்கம் பிரபாகர்...///

முகிலா,

பிரபாகர்...சிங்கை சிங்கம்...?
உங்களுக்கு யாரோ தவறான தகவல் குடுத்துருக்காங்க.

"Be care full". நான் என்னையச் சொன்னேன்.

ஜெட்லி... said...

அனைத்துமே நல்ல படங்கள் தான்.....
யாவரும் நலம் எனக்கும் ரொம்ப பிடிக்கும்....
நான் எதிர்ப்பார்க்காத படம்.....

ஜெய்லானி said...

குறிப்பிட்ட எல்லா படமும் அருமை.( சிம்ரன் பிடிக்காது எப்பவும் ரெண்டு கையையும் மேலே தூக்கிகிட்டு )கூப்பிட்டுடீங்க. ஓகே போட்டுடலாம். விரைவில்.

நாடோடி said...

யாவ‌ரும் ந‌ல‌ம் என‌க்கு ரெம்ப‌ பிடித்த‌ ப‌ட‌ம் முகில‌ன் சார்..

செந்தில்குமார் said...

அருமை முகிலன்

பத்து படங்கலும் பத்து (அனுபவ)சுவையை தரும்

தோழன் செந்தில்குமார்.அ.வெ
தேடல் முடிவில்லா பயணத்தின் முதல் படி...........

துபாய் ராஜா said...

நல்லா ஃபீல் பண்ணி எழுதியிருக்கீங்க. இதுல நிறைய படங்கள் என்னையும் பாதித்தவை...

ரேஷன் ஆபீசர் said...

ஆஹா !
அருமையான பதிவு!!

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல பட்டியல் தல.. நீங்க மதுரயில தான படிச்சீங்களா? சந்தோசம்..

கிரி said...

முகிலன் படங்கள் தேர்வு சிறப்பாக உள்ளது.. வெயில் படம் தோல்வி படமல்ல பெரியளவில் வெற்றியில்லை அவ்வளவே, ஓரளவு ஓடியது நஷ்டமில்லாமல்.

"ஆறு வருடத்துக்கு முன்னால் கோவையில் எஞ்சினியரிங் படிக்கும் சூர்யா ஓட்டுவது டி.வி.எஸ் ஸ்டார் சிட்டி மோட்டார் பைக். "

அநியாத்துக்கு கவனிக்கறீங்க போல ;-)

Philosophy Prabhakaran said...

இந்தப் பதிவை நான் தொடர்ந்திருக்கிறேன்... படிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ள தொடுப்பை சொடுக்கி படிக்கவும்...

http://philosophyprabhakaran.blogspot.com/2010/04/10.html

Unknown said...

@வானம்பாடி - சார் எனக்குப் பிடித்த 10 சிம்ரன் படங்கள் அப்பிடின்னு ஒரு பதிவு போட வேண்டி வரும் ஆமா சொல்லிட்டேன்.

@ஷங்கர் - பரவாயில்ல, அந்த பத்து படங்களையே எதுக்குப் பிடிக்கும்னும் விளக்கிருங்க.

@விசா - அசத்துங்க

@கலகலப்ரியா - ஆரம்பிச்சிட்டு தொடரவும் சொல்லிருவோம் ஆமா

@பிரபாகர் - க.மு, க.பி ரெண்டும் சூப்பர்

@நாஞ்சில் பிரதாப் - ஹலோ ரெண்டு படம் உங்க தலைவர் படம்..

@பனித்துளி சங்கர் - மீண்டும் வாங்க

@க.பாலாசி - உம்ம லொள்ளு தாங்கல சாமி

@அனானி - கலகலப்ரியா நல்லா குடுத்துருக்காங்க வாங்கிட்டுப் போங்க.

@வினோத்கௌதம் - நன்றி

@சரவணகுமரன் - நன்றி

@கலகலப்ரியா- :))

@பின்னோக்கி - நன்றி

@எல்போர்ட் பீ சீரியஸ் - பாத்தீங்களா?

@சின்ன அம்மிணி - தொடருங்க ப்ளீஸ்

@ரகு - நன்றி

@பிலாசபி பிரபாகர் - படிச்சிட்டேன் பின்னூட்டியிருக்கேன்.

@சைவகொத்துப்பரோட்டா - அதுவும் எனக்குப் பிடிச்ச சீன் தான்.

@கரிசல்காரன் - நன்றி

@சேட்டைக்காரன் - நன்றி

@சத்ரியன் - ஹி ஹி ஹி

@ஜெட்லி - நீங்களும் தொடருங்க ஜெட்லி

@ஜெய்லானி - நன்றி

@நாடோடி - நன்றி

@செந்தில்குமார் - நன்றி

@துபாய் ராஜா - நன்றி

@ரேஷன் ஆபீசர் - நல்ல பேருங்க உங்களுக்கு. நன்றி

@கார்த்திகைப் பாண்டியன் - ஆமாங்க.

@கிரி - வெயிலை தோல்விப் படம்னு சொன்னது தோல்வி அடைந்த ஒரு மனிதனின் வாழ்க்கையைப் படம்பிடித்ததற்காக.

ஹி ஹி ஹி ஆமாங்க.

Cable சங்கர் said...

பத்து படம லிஸ்டா..? அஹா அது எனக்கு கஷ்டமாச்சே..:)

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

எம்.எம்.அப்துல்லா said...

almost same :)

வில்லன் said...

ரஜினி "நடித்ததில்" பிடித்தது:
1. முள்ளும் மலரும்
கமல் நடித்ததில் பிடித்தது:
2. அன்பே சிவம்
எனக்குப் பிடித்த காமெடி படம்
3. உள்ளத்தை அள்ளித்தா!!!! (ரம்பா ரசிகருல்லா நாங்க.... )
எனக்குப் பிடித்த திகில் படம்
4. விடிஞ்சா கல்யாணம்.
5. நூறாவது நாள்.
எனக்குப் பிடித்த “சத்தியராஜ்” படம்.
6. அமைதி படை
7. மக்கள் என் பக்கம்.
எனக்குப் பிடித்த “ரஜினி” படம்.
8. தம்பிக்கு எந்த ஊரு
எனக்குப் பிடித்த “காதல்” படம்
9. கடலோர கவிதைகள்
எனக்குப் பிடித்த “குழந்தைகள்” படம்
10. மை டியர் குட்டி சாத்தான்
எனக்குப் பிடித்த “தோல்வி”ப் படம்
11. வெயில்
12. அன்பே சிவம்..
என்னைக் கலங்கடித்த படம்
13. நிழல் நிஜமாகிறது
14. அவள் ஒரு தொடர்கதை
15. நிழல்கள்