Tuesday, July 13, 2010

ஆயுதம்

ணேசன் தனது கீறல் விழுந்த கண்ணாடியை மறுபடியும் துடைத்தார். அது என்ன அழுக்கா துடைத்தும் போவதற்கு. கீறல் அல்லவா? கணேசன் கடைசியாக கண்ணாடியை எப்போது மாற்றினோம் என்று யோசித்து பார்த்தார். நினைவுக்கே வரவில்லை.

அரசு அலுவலகம் ஒன்றில் தலைமை கணக்கராக இருந்து ஓய்வு பெற்ற பின் இப்போது ஒரே மகனின் குடும்பத்துடன் சொந்த வீட்டிலேயே அனாதை போலக்குடித்தனம். அவர் மனைவி தனம் கொடுத்து வைத்தவள் இவர் பணியில் இருக்கும் போதே சுமங்கலியாக போய் சேர்ந்து விட்டாள். இவர் தான் தனியாக மகனிடமும் மருமகளிடமும் பேச்சு வாங்கிக்கொண்டு காலம் தள்ள வேண்டி இருக்கிறது.

"தாத்தா டிக்கெட் வாங்கியாச்சா?" கண்டக்டர் குரல் கேட்டு நிமிர்ந்தார். பையை துழாவி ஒரு இரண்டு ரூபாய் நாணயத்தையும் ஒரு ஐம்பத்து பைசா நாணயத்தையும் எடுத்து கண்டக்டர் இடம் கொடுத்தார். கண்டக்டர் டிக்கெட் கிழித்து கொடுத்து விட்டு அந்தப்பக்கம் சென்றார்.

இன்று பென்ஷன் வாங்கும் நாள். மகன் சரியாக ஒரு வழிக்கு மட்டும் டிக்கெட் காசு தந்து விடுவான். பென்ஷன் ஆயிரத்து நானூற்று ஐந்து ரூபாய். அதில் இருநூறு ரூபாயை பென்ஷன் பட்டுவாடா செய்யும் கணக்கன் எடுத்துக்கொண்டு விடுவான். கொசுறு ஐந்து ரூபாயில் பாய் கடையில் ஒரு டீ குடித்தால் சரியாக திரும்ப வருவதற்கு தான் காசு இருக்கும். அந்த கணக்கனுக்கு லஞ்சம் கொடுக்காவிட்டால் ஆள் உயிரோடு இல்லை என்று பென்ஷன் பைல் மூடி விடுவான்.

இவர் தந்தை பெரிய காந்தியவாதி. சுதந்திர போராட்ட தியாகி. அவர் தனது அஹிம்சை கொள்கைகளைத் தன் மகனுக்கு போதித்து வந்ததன் பலனாக இவரும் 1940களிலேயே இருக்கிறார். இவர் மகன் இந்த நூற்றைண்டை சேர்ந்தவன். அப்பா பிழைக்க தெரியாத ஆள் என்பதை உணர்ந்து கொண்டவன். மருமகளோ இவரை தண்டசோறு என்று காது படவே அழைப்பவள். பென்ஷன் பணத்தை அப்படியே மகனிடம் கொடுத்து விடுவதால் தான் இவர் பிழைப்பு அங்கே ஓடுகிறது. இல்லை என்றால் என்றோ வெளியே துரத்தப்பட்டிருப்பார்.

மூக்கு கண்ணாடியில் கீறல் விழுந்திருப்பது மட்டும் அல்ல, கண்ணும் மங்கலாக தெரிய ஆரம்பித்து இருக்கிறது. இந்த முறை லஞ்சம் கொடுப்பதை தவிர்த்தால் கண்ணாடி மாற்றிக்கொள் என்று மகன் சொல்லி இருக்கிறான். அந்த கணக்கனிடம் கெஞ்சிப் பார்க்க வேண்டும்.

"தாத்தா கலெக்டர் ஆபீஸ் வந்துடிச்சி. இறங்குங்க" என்று கண்டக்டர் குரல் கொடுக்கவும், இருக்கையிலிருந்து எழுந்து கொண்டார். கைத்தடியை மறக்காமல் எடுத்துக்கொண்டார். பஸ்சிலிருந்து இறங்கி மெதுவாக அரசுக் கருவூலம் என்ற பெயர்ப் பலகை மாட்டி இருந்த அலுவலகம் நோக்கி நடை போட்டார்.

"கணேசன் சார், நல்ல இருக்கீயளா?" பாய், டீக்கடை கல்லாவில் இருந்து குரல் கொடுத்தார்.

"ம்ம் ம்ம் " என்று ஒப்புதலாக தலை அசைத்தார்.

கால் கடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்து விட்டு இவர் முறை வரும் போது உள்ளே போனார்.

பான்பராக்கை குதப்பிக் கொண்டிருந்த அந்த கணக்கன் இவரைப் பார்த்ததும் முன்னால் இருந்த ஃபைலை மூடிவிட்டு எழுந்து வெளியே போய் எச்சிலைத் துப்பி விட்டு வந்தான்.

“என்ன பெருசு. பென்சன் வாங்க சரியா வந்துட்டீரு போலருக்கு” என்று கேட்டுக் கொண்டே பணத்தை எண்ணி அவருக்கு முன்னால் அந்த லெட்ஜரை நீட்டினான்.

இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொண்டு அவரிடம் மீதியைக் கொடுக்க, கணேசன் கெஞ்சலாக ஆரம்பித்தார், “தம்பி. கண்ணாடில கீறல் விழுந்துரிச்சி. இந்த தடவை இந்த இருநூறு ரூவாயைக் குடுக்கலைன்னா கண்ணாடி மாத்திக்கன்னு மகன் சொல்லிட்டான். நீங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணி..” என்று இழுத்தார்.

“என்ன தாத்தா இப்பிடி சொல்றீங்க?” என்று கொஞ்ச நேரம் யோசித்தான்.

"தாத்தா உங்க நிலைமையை கேட்டா பாவமாத்தேன் இருக்கு. ஆனா என் பொழைப்பையும் பாக்கணும்லா. அதுனால நான் இந்த வாட்டி நூறு ரூவா மட்டும் எடுத்துக்கிடுதேன். இதுல கண்ணாடி போட முடியுதான்னு பாருங்க. இல்லாட்டி அடுத்த மாசமும் நூறு ரூவா தர்றேன். அடுத்த மாசம் கண்ணாடி போட்டுக்குங்க. என்ன சொல்லுதிய?" தன் பணத்தை தருவதற்கே தன்னிடம் பேரம் பேசும் கொடுமையை எண்ணி நொந்துகொண்டு தலை அசைத்து வைத்தார் கணேசன். பணத்தை எண்ணி வாங்கிக் கொண்டு வெளியே வந்தார்.

"ஏலே கணேசன் சாருக்கு ஸ்பெஷல் டீ போடுல" என்று டீ ஆற்றுபவனை பார்த்து குரல் கொடுத்து விட்டு, "என்ன கணேசன் சார் எப்பிடி போகுது?" என்று கரிசனமாக கேட்கும் பாயை பார்த்தார். "போவுது பாய். என்னைய எப்ப கூப்பிட்டுக்குவான்னு கெடக்கேன்" என்றார்.

"என்ன இப்பிடி அலுத்துக்குதீய? நீங்களாவது ரிடயர் ஆனப்பரமும் சம்பளம் வாங்குரவரு. நானெல்லாம் முடியாம படுத்தா எம்மவனுங்க என்னையத் தூக்கி வெளிய கடாசிருவானுங்கள்ள"

"என் நிலைமையும் கிட்டத்தட்ட அதே மாதிரி தான் பாய்" என்றவாறு பையிலிருந்த ஐந்து ரூபாயை எடுத்து கொடுத்தார். பாய் கொடுத்த சில்லறையை பையில் போட்டுக்கொண்டு "நான் வர்றேன் பாய்" என்று சொல்லிவிட்டு பஸ் ஸ்டாப் நோக்கி நடந்தார்.

இவர் பஸ் ஸ்டாப் வருவதற்கும் பஸ் வருவதற்கும் சரியாக இருந்தது. பஸ்சில் ஏறி கூட்டத்தில் புகுந்து நடுவில் ஒரு கம்பியில் சாய்ந்து நின்று கொண்டார். பஸ் புற நகர் பகுதியை நோக்கி செல்ல செல்ல கூட்டம் குறைந்தது. இவர் ஒரு சீட்டில் உக்காருவதற்கும் கண்டக்டர் வருவதற்கும் சரியாக இருந்தது.

"யோவ் பெருசு, டிக்கெட் எடுத்தியா?"

"இன்னும் இல்லை தம்பி"

"அப்பத்தில இருந்து கழுதை மாதிரி கத்திக்கிட்டு இருக்கேன் யாரு டிக்கெட் எடுக்கலைன்னு. நீ என்ன தூங்கிக்கிட்டு இருந்தியா? காசை குடு" என்று கத்தினான்.

கணேசன் பையிலிருந்த சில்லறைகளை எடுத்து கண்டக்டர் கையில் கொடுத்து "என்.ஜி.ஒ காலனி குடுங்க தம்பி" என்று சொன்னார்.

"எங்க ஏறுன"

"கலெக்டர் ஆபீஸ்"

"கலெக்டர் ஆபீஸ்ல ஏறுனா டிக்கெட் ரெண்டு அம்பதுன்னு தெரியாதா? ரெண்டு ரூவா தான் குடுக்குற? எங்க இருந்திய்யா வர்ரிங்க காலங்காத்தால எங்க தாலி அறுக்குரதுக்கு? இன்னொரு அம்பது பைசா குடு."

கணேசன் பதட்டத்தில் பைக்குள் கை விட்டு துழாவினார். எதுவும் தட்டுப்படவில்லை. 'அய்யய்யோ பாய் சரியா சில்லறை குடுக்கலை போல இருக்கே. அங்கயே சரி பாத்து வாங்கி இருக்கணுமோ?'

"தம்பி சில்லறை இல்லப்பா நூறு ரூவா நோட்டா தான் இருக்கு"

"ஆமாய்யா உனக்கு சில்லறை குடுக்கத்தான் நாங்க பைய தூக்கிகிட்டு வந்திருக்கோம்" விசிலை வாயில் வைத்து பலமாக ஊதினான். பஸ் டிரைவர் உடனடியாக பிரேக்கில் காலை வைத்து அழுத்தவும் பஸ் நின்றது.

"இறங்குயா கீழ. உன்னை எல்லாம் யாருயா பஸ்ல வர சொன்னது. போய் சேர வேண்டிய வயசுல எங்க உயிரை எடுக்குறதுக்கு வந்துட்ட"

"தம்பி இங்க இறங்குனா ரெண்டு கிலோ மீட்டர் நடக்கணுமே"

"நீ குடுத்த ரெண்டு ரூவாய்க்கு இங்க தான் இறங்கனும்" என்று சொல்லி கிட்டத் தட்ட அவரை பஸ்ஸில் இருந்து கீழே தள்ளி விட்டான்.

கணேசன் தட்டு தடுமாறி கீழே இறங்கி நிற்க, டபுள் விசில் கொடுத்து பஸ் போயே விட்டது. அடுத்த பஸ் ஏறினால் மினிமம் சார்ஜ் ஒன்னைம்பது கொடுக்க வேண்டும். பேசாமல் ஒன்னரை கிலோ மீட்டர் நடக்க வேண்டியது தான் என்று மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.

இந்த பகுதி புற நகர் பகுதி. இன்னும் சரியாக முன்னேற்றம் அடையாத பகுதி. இங்கே ஒரு கல்லூரி வரப் போவதாக பேச்சு அடிபடுகிறது. எப்போது வரும் என்று தெரியவில்லை. இந்த ஒன்னரை கிலோ மீட்டர்க்கு ஆள் நடமாட்டமே இருக்காது.

நடந்து வரும்போது இருபது வருடங்களுக்கு முன்னாள் தன்னுடன் வேலை பார்த்த நண்பர்களுடன் இந்த பகுதியில் நிலம் வாங்க வந்தது, பார்த்து பார்த்து வீடு கட்டியது, வீட்டு கிரகப்பிரவேசம், மகனின் திருமணம், மனைவியின் மரணம் ஆகியவை ஒரு சினிமா போல அவர் மனத்திரையில் ஓடியது..

"என்ன விட்டுடு, என்ன விட்டுடு" என்று யாரோ கத்துவது கேட்டு அவர் நினைவு கலைந்தார்.

சற்று தொலைவில் ஒரு பெண் ஓடுவதும், அவளை ஒருவன் துரத்துவதையும் பார்த்தார். இவர் மனம் படபடத்தது. நடையை எட்டி போட்டு அவர்கள் பக்கம் நடந்தார்.

இப்போது அந்த இளைஞன் அந்த பெண்ணை பிடித்து விட்டான். அவளைக் கீழே தள்ளி அவள் மீது படர்ந்தான். கணேசன் அவர்களை நெருங்கி விட்டார்.

"டேய் அவளை விடுடா" என்று கத்தினார்.

அவன் தலை மட்டும் திருப்பி அவரைப் பார்த்தான்.

"யோவ் கிழடு போயிரு. உனக்கு தேவை இல்லாதது. பாக்காத மாறி போய்ட்டே இரு" என்றான்.

"தாத்தா தாத்தா காப்பாத்துங்க தாத்தா. லவ் பன்றேனு சொல்லி இங்க கூப்பிட்டு வந்து தப்பா நடந்துக்குறான். என்னை காப்பாத்துங்க தாத்தா" என்று கதறினாள் அந்தப் பெண்.

கணேசனுக்கு எங்கிருந்து பலம் வந்ததென்றே தெரியவில்லை. கையிலிருந்த கைத் தடியை ஓங்கி அவன் தலையில் அடித்தார். விடாமல் மாறி மாறி அவன் முதுகில் தடியால் அடித்தார். அவன் வலி தாங்காமல் கத்தினான். எழுந்து நின்றான். கணேசன் விடாமல் அடித்தார். அவன் அடி தாங்க முடியாமல் ஓட ஆரம்பித்தான். அவன் ஓடவும் கீழே இருந்து கல் எடுத்து அவன் மீது எறிந்தார். அவன் திரும்பி பார்க்காமல் ஓடி ஒரு மரத்தடியில் நிறுத்தி இருந்த பைக் எடுத்துக்கொண்டு பறந்தான்.

"இப்பிடிப் பசங்கள எல்லாம் நம்பி வரலாமாம்மா? என் கூட வா நான் அடுத்த பஸ் ஸ்டாப்ல பஸ் ஏத்தி விடுதேன்" என்று அந்த பெண்ணுக்கு எழ கை கொடுத்தார்.

சுட்டெரித்துக் கொண்டிருந்த சூரியன் ஒரு மேகத்துக்கு பின்னால் சென்று ஒளிய வெயிலின் கடுமை சற்றே குறைந்தது.

நீதி: நீ என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை உன் எதிரியே தீர்மானிக்கிறான்

13 comments:

Unknown said...

மீள் பதிவு

எறும்பு said...

நல்லாருக்கு

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மூச்சு விடாம படித்தேன்..
கலக்கல்..

Paleo God said...

நீதியும் சேர்த்தே மீள்பதிவா இல்ல மீதி மட்டுமா? நீதிய வெச்சு ஒரு வெண்ணை எழுதலாம்னு இருக்கேன்..;)

நல்லா இருக்கு முகிலன். :))

vasu balaji said...

சொன்னேன்ல பியாண்ட் ரீச்னு. :). ப்ரமாதம்.

எல் கே said...

excellentttt

Anonymous said...

நீதிக்கதைகள் தொடர் எழுதுங்க முகிலன்

சாமக்கோடங்கி said...

ஆஹா.. . இத்தனை நாள் உங்களை கவனிக்காம விட்டுட்டேனே.. பட்டையை கிளப்பி இருக்கீங்க.. சூப்பரான நடை..

ஈரோடு கதிர் said...

நீதி.. ”நச்”

அது சரி(18185106603874041862) said...

ம்ம்ம்....அப்புறம் சொல்றேன்....

ஹேமா said...

//நீ என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை உன் எதிரியே தீர்மானிக்கிறான்//

எடுத்த அப்புறம் பயங்கரவாதின்னு சொல்றான் !

கதை நல்லாயிருக்கு முகிலன்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ம்ம்.. கதையும் நீதியும் யோசிக்க வைக்குது.. எதிரியின் செயல் தான் தீர்மானிக்குதுன்னு எடுத்துக்கறேன்.. வித்தியாசமான சிந்தனை.. குட் ஒன்..

Think Why Not said...

அருமையான கதை...

Great Mukilan sir, Keep it up...