Monday, October 11, 2010

ஆயுதம் செய்வோம்

இன்று சன் டிவியில் குஷ்புவின் கணவர் சுந்தர்.சி நடித்த ஆயுதம் செய்வோம் என்றவொரு மொக்கைப் படத்தைக் காணும் சந்தர்ப்பம் வாய்த்தது. ஆரம்பம் முதல் விவேக்கும் சுந்தர்.சியும் காமெடி என்ற பெயரில் அடித்த கூத்துகளைப் பார்த்து ரத்தக் கண்ணீர் வடித்து வந்த நானும் தங்கமணியும் படத்தின் கடைசி அரை மணி நேரத்தில் அடக்கமாட்டாமல் வயிறு வலிக்க சிரித்தோம்.

படத்தின் கதை இதுதான். எதைப் பற்றியும் கவலைப் படாமல் ரவுடித்தனம் செய்து திரியும் சுந்தர்.சியும், போக்குவரத்துக் காவலராக வரும் விவேக்கும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததற்காக ஒரு வழக்கில் மதுரையில் இருக்கும் காந்தி மியூசியத்தில் 15 நாள் தங்கி காந்தியம் கற்று வர வேண்டும் என்ற வினோத தண்டனை பெறுகின்றனர். இவர்களுக்குத் தண்டனை வாங்கித் தந்த வக்கீல் விஜயகுமார் - பொதுநல வழக்குகள் ஸ்பெசலிஸ்ட், ட்ராஃபிக் ராமசாமியின் திரைப்படைப்பு என்றும் சொல்லலாம் - ஒரு முன்னாள் அமைச்சர் சம்மந்தப்பட்ட வழக்கின் ஆதாரங்களை வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டு அந்த முன்னாள் அமைச்சருக்காக அவரை மிரட்டப் போகிறார் சுந்தர்.சி. அப்போது தெரியாத்தனமாக விஜயகுமார் உயிரை விட்டு விட, சாகும் தருவாயில் அவர் சொல்லிப்போன “வாழ்க வளமுடன்” என்ற வார்த்தைகள் சுந்தர்.சியை நிம்மதி இழக்கச் செய்கிறது. அவர் விட்டுப் போன அந்த முன்னாள் அமைச்சரின் குற்றத்தை வெளிக்கொண்டு வர சுந்தர்.சி அந்த ஆதாரங்களைத் தேடி எடுக்கிறார். அதை போலிஸில் கொண்டு சேர்க்க நீதிமன்றத்தின் முன் அவற்றைச் சமர்ப்பிக்குமுன் அமைச்சரின் ஆட்களால் ஆதாரம் அழிக்கப் படுகிறது.

இதற்குப் பிறகு ஆரம்பிக்கிறது காமெடிக் காட்சிகள். ஆதாரம் போனால் என்ன, குற்றவாளி அந்த முன்னாள் அமைச்சர்தான் என்ற சத்தியம் இருக்கிறதே என்று , வடபழனி காந்தி பஜாரில் இருக்கும் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருக்கிறார் முன்னாள் ரவுடியான ஹீரோ. கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு ஆதரவு திரண்டு தமிழகம் முழுக்க உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவரை யாரோ சுட்டு விட, இளைஞர்கள் வெகுண்டெழுந்து வன்முறையில் இறங்க, உடனே காந்தி, ச்சே, ஹீரோ அவர்களை வன்முறைப் பாதையில் இறங்க வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறார். உடனே மக்களும் வன்முறையை கைவிட்டு விடுகின்றனர். இதைப் பார்த்ததும் மனம் மாறிய முன்னாள் அமைச்சர், தன் குற்றங்களை ஒப்புக் கொண்டு போலிஸில் சரணடைகிறார். எல்லாம் முடிய சுபம்.

இதில் என்ன காமெடி என்கிறீர்களா? அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து இந்த நாட்டில் நியாயம் அடைய முடியுமா? அதுவும் ஒரு அரசியல்வியாதி சம்மந்தப்பட்ட வழக்கில்?

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் சுதந்திரத்துக்குப் பிறகு உண்ணாவிரதம் மூலம் இரண்டே இரண்டு விடயங்கள் தான் நடந்துள்ளன. காவிரித்தாய் சென்னை மெரினாவில் இருந்த உண்ணாவிரதத்தினால் தங்கு தடையின்றி காவிரி தமிழகத்துக்குள் பாய்கிறது. தமிழினத் தலைவர் நான்கு மணி நேரம் பீச் ரோட்டில் இருந்த உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர் நின்று பிரபாகரனும் ராஜபக்‌ஷேவும் கை குலுக்கினர். வேறு எதுவும் நிகழ்ந்ததாக சரித்திரம் சொல்லவில்லை.

ஆனால் உண்ணாவிரதம் இருந்து மண்ணாகிப்போனவர்கள், போகப்போகிறவர்கள் இருக்கிறார்கள். அதைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் இந்தத் திரைப்படத்தில் மக்கள் ஹீரோவுக்கு ஆதரவாகத் திரளும்போது காந்தியவாதி நாசர் சொல்வதாக வரும் இந்த வசனத்தை ஹீரோ நினைத்துப் பார்ப்பார் - “நீ ஆயுதம் ஏந்திப் போராடுனா நீ தனியாத்தான் போராடனும். அதுவே அஹிம்சை வழியிலப் போராடுனா உலகமே உன் பின்னாடி நிக்கும்” சத்தியமாக வடிவேலு, விவேக் காமெடிக்குக் கூட இந்தளவுக்கு நான் சிரித்திருக்க மாட்டேன்.

அஹிம்சை வழியில் போராடினான், சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆயுதமாக ஏந்தினான். ஐயா, உலகம் பின்னால் திரள வேண்டாம். அவனை சாகவிட்டு வேடிக்கை பார்க்காமலாவது இருக்க வேண்டுமே? 26 வயது சாகக் கூடிய வயதா?

சாக விட்டது நமது ராணுவமாய் இருந்தாலும், அது பக்கத்து நாட்டு சமாச்சாரம் என்று சொல்வீர்கள். சரி, பக்கத்து நாடு வேண்டாம். நம் நாட்டிலேயே பார்ப்போம்.

ஐரோம் சர்மிளா. நவம்பர் நான்காம் தேதி வந்தால் அவர் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து 10 வருடம் நிறைவடையும். எதற்காக உண்ணாவிரதம் இருக்கிறார்? 1958ஆம் வருடம் மணிப்பூர் உட்பட கிழக்கு மாகாணங்களின் மீது இந்திய அரசு நிறைவேற்றிய AFSPA - Armed Forces Special Powers Act - என்ற அடக்குமுறைச் சட்டத்தை இந்திய அரசு வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து. ஆனால் அரசாங்கம் என்ன செய்கிறது? அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் தங்க வைத்து உணவை ட்யூப் மூலம் ஏற்றி வருகிறது. அவர் வாய் வழியாக தண்ணீர் கூட உண்பதில்லை. எத்தனை வருடங்களுக்கு இது தொடரப்போகிறது? அவர் மரணிக்கும் வரையிலா?

இந்த இரு நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது காந்தி சொல்லிக் கொடுத்த அகிம்சையும் காந்தியமும் எந்த வகையில் நமக்கு உதவும்? முன்னா பாய், ஆயுதம் செய்வோம் போன்ற திரைப்படங்களை எடுப்பதைத் தவிர?

ஒரு படத்தில் சத்யராஜ் சொன்ன வசனம் நினைவுக்கு வருகிறது - “டேய் பேசிக்கலி வெள்ளக்காரன் நல்லவன்டா”

14 comments:

Prathap Kumar S. said...

ஆகா...அது ஒரு மகா மெகா மொக்கைப்படமாச்சே...அதை முழுசா வேற பார்த்திங்களா...:) முதல்ல கொஞ்சம் சீன் பார்த்துட்டு விவேக்கோட அலம்பல் தாங்ககாம மூடிட்டேன்.... :))

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,...... படமே பேராயுதம் போல ...

எல் கே said...

oru murai travelsla vera vali illama padam paarthen kodumai

NaSo said...

இங்கு அகிம்சை வழியில் உண்ணாவிரதமே இருக்க முடியாது தனி ஒரு மனிதனால். பின் எப்படி அதில் வெற்றி பெற முடியும்??

Jayaprakashvel said...

இது மாதிரியான படங்களில் தான் கொஞ்சமாவது நல்ல கருத்துக்களை சொல்கிறார்கள். பெரிய பெரிய இயக்குனர்கள் கோடிகளைக் கொட்டி வெகு நேர்த்தியாக எடுக்கும் படங்களில் மக்களுக்கான செய்தி வைக்க இடமேது. உண்ணாவிரதம் இப்பொது வேலைக்காகாது என்ற ஒரு விவாத்தத்தையாவது இந்தப் படம் கிளப்புமே? நீங்கள் ஐரோம் சர்மிளா பற்றி எழுதவும் இது உதவி இருக்கிறது. குறைந்த பட்ச நன்மை விளைந்தாலும் அதை வரவேற்போம்.

Unknown said...

Indha maadhiri padam eduka koodadhunu unna viradham irukalama?

vasu balaji said...

எந்திரன் பார்த்ததுல இருந்து நசரேயரு காணாம போய்ட்டாரு. தலைவரு 2 குதிரை படத்த போட்டு ஒரு மார்க்கமாயிட்டாரு. நீர் இந்தமாதிரி படமெல்லாமும் பார்த்த்துட்டு விமரிசனமும் எழுதுறீர். எச்சச்ச கச்சச்சன்னு உங்க த்லைவர் வந்து மந்திரிச்சாதான் சரியாவும் போல நாராயணா:))

கிரி said...

ஹலோ! தினேஷ் இத்தனை சொன்னீங்களே! தலைவி மாளவிகா பற்றி ஒரு வார்த்தை சொன்னீங்களா! கடுமையான கண்டனம் தெரிவிக்கிறேன் :-)

அது சரி(18185106603874041862) said...

Good one!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து இந்த நாட்டில் நியாயம் அடைய முடியுமா? அதுவும் ஒரு அரசியல்வியாதி சம்மந்தப்பட்ட வழக்கில்?//

நியாயமான கேள்வி..

//காவிரித்தாய் சென்னை மெரினாவில் இருந்த உண்ணாவிரதத்தினால் தங்கு தடையின்றி காவிரி தமிழகத்துக்குள் பாய்கிறது. தமிழினத் தலைவர் நான்கு மணி நேரம் பீச் ரோட்டில் இருந்த உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர் நின்று பிரபாகரனும் ராஜபக்‌ஷேவும் கை குலுக்கினர். வேறு எதுவும் நிகழ்ந்ததாக சரித்திரம் சொல்லவில்லை.//

:)))

லகே ரஹோ முன்னா பாய்..

rajasundararajan said...

'இன்றைய காந்தி' எழுதி ஜெயமோகன் கண் திறந்திருக்கிற இன்றையக் காலக்கட்டத்தில் இப்படி எழுதினால் எப்பூடி?

காவிரித்தாயும் தமிழினத்தலைவரும் பிழைத்துப் போகட்டும். திலீபன் என்றொருவரும் இருந்தார்தானே?

எதனை வேண்டுகிறீர்கள்? எல்லைகள் என்ன? ஈவார் யார்? எனப் பல காரணிகள் காந்தீயக் கணக்கில் உண்டு. கணிதச் சமன்பாடுகளின் கச்சிதம், படித்த நமக்கும் படியாதது நகைச்சுவைதானே?

Mrs. Krishnan said...

Indha padam ellam pakaringala?

Anisha Yunus said...

நல்ல வேளை படத்தை பாத்த கோபத்துல ஆயுதம் எதும் செய்யாம போனிங்களே அதே பெரிசு!! :)

ம.தி.சுதா said...

தங்கள் பார்வையால் எனது இரண்டரை மணித்தியாலம் தப்பி விட்டது...