Monday, May 21, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 2

பாகம் - 1



“நீங்களும் இங்கதான் வர்றீங்கன்னு தெரிஞ்சிருந்தா ஆட்டோவை ஷேர் செஞ்சிருக்கலாம். காசு மிச்சமாகியிருக்கும்” குரல் கேட்டதும் திடுக்கிட்டுத் திரும்பினேன்.

“மாலா” என்று வலது கையை நீட்டினாள்.

என் கை அனிச்சையாக நீண்டது. "நல்..தேவா" பெங்களூரின் குளிரா இல்லை இயற்கை கொடுத்த வரமா தெரியவில்லை. சில்லென்றிருந்தது அவள் விரல்கள்.

"இங்க தான் ஸ்டே பண்ணியிருக்கீங்களா தேவா?"

முதல் முறை பார்க்கும்போதே அன்னியோன்யமாகப் பெயர் சொல்லிக் கூப்பிடும் பெண்ணை இப்போதுதான் பார்க்கிறேன். "இல்லைங்க. BIMல இன்னைக்குத்தான் ஜாய்ன் பண்றேன்".

"ஓ ஃப்ரஷரா? நானும் தான். நீ எந்தக் காலேஜ்?" இவ்வளவு சீக்கிரம் ஒருமைக்குத் தாவியது எனக்கு ஒரு மாதிரியாய் இருந்தது. என் காலேஜ் பெயரைச் சொன்னேன்.

அவள் காலேஜ் பெயரைச் சொல்லி, "கம்ப்யூட்டர் சயன்ஸ். நீ?"

"மெக்கானிக்கல்" பேசிக்கொண்டே எங்கள் கம்பெனி கெஸ்ட் ஹவுஸுக்கு வந்துவிட்டிருந்தோம். மொத்தம் நான்கு அப்பார்ட்மெண்டுகள். ஒரே தளத்தில் அமைந்தவை. ஒவ்வொன்றும் மூன்று பெட்ரூம். முதல் அப்பார்மென்டில் ஒரு படுக்கை அறை அட்மின் அலுவலமாக மாற்றப்பட்டிருந்தது. அங்கே தான் ரிப்போர்ட் செய்யச் சொல்லி என் கையில் இருந்த கடிதம் சொன்னது. இருவரும் உள்ளே நுழைந்தோம்.

பத்துக்குப் பதினைந்து அறை. ஒரு மூலையில் ஒரு டேபிள் போடப்பட்டு அதன் மீது ஒரு கம்ப்யூட்டர் வைக்கப்பட்டிருந்தது. டேபிளுக்கு அந்தப் பக்கம் ஒரு எக்ஸிக்யூட்டிவ் சேர் போடப்பட்டிருந்தது. அதற்கு எதிரில் இரண்டு ப்ளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருந்தன. அறையின் இன்னொரு மூலையில் ஒரு ரெஃப்ரிஜிரேட்டட் வாட்டர் கூலர் ஹ்ம்ம்ம் என்ற சத்தத்தோடு உட்கார்ந்திருந்தது. சுவரோடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கண்ணாடிக் கதவிட்ட அலமாரியில் தட்டுகளும், பவுல்களும், இதர சாப்பாடு மேஜைக்கான பாத்திரங்கள் அனைத்தும் அழகாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தது.

எக்ஸிக்யூட்டிவ் சேரில் கழுத்தே இல்லாமல் ஒருவர் உட்கார்ந்திருந்தார். குறைந்த பட்சம் 10 செமீ தடிமனான கண்ணாடி ஒன்று அவர் மூக்கின் நுனியில் ஒட்டிக் கொண்டிருந்தது. புருவத்தின் மத்தியிலிருந்து கிளம்பிய திரிசூர்ணம் கிட்டத்தட்ட வழுக்கைத் தலையின் உச்சி வரை சென்றது. தலைக்கு நேர் மேலே இருந்த ஸ்பிளிட் ஏசி ஓடாத காரணத்தாலோ என்னவோ அவர் தலையில் முத்து முத்தாக வியர்வை பூத்திருந்தது.

நாங்கள் உள்ளே நுழைந்ததும் எங்களைக் கண்களைக் குறுக்கு கண்ணாடிக்கு மேலாகப் பார்த்தார். "குட்மார்னிங். ஃப்ரஷர்ஸா?"

"யெஸ் சார்" என்றோம் கோரஸாய்.

"ஜாயினிங் லெட்டர்?"

என் கையில் வைத்திருந்த லெட்டரை எடுத்து நீட்டினேன். வாங்கி டேபிளின் மீது வைத்து விட்டு மாலாவை ஏறிட்டார். மாலா கைப்பைக்குள் இருந்து எடுத்து நீட்டவும், அதை வாங்கி கம்ப்யூட்டரில் எதையோ தட்டிவிட்டு அவளிடமே திருப்பிக் கொடுத்தார். பிறகு என் லெட்டரை எடுத்தும் அதே போல. "சிட் டவுன்"

உட்கார்ந்தோம்.

"யு கேன் இஸ்டே அப்டூ 15 டேஸ். யு வில் பி ஷேரிங் த ரூம் வித் அனதர் பெர்சன். வீ சர்வ் ப்ரேக்ஃபாஸ்ட் அன்ட் டின்னர். யூ ஹாவ் டு கம் டு திஸ் அப்பார்ட்மென்ட் ஃபார் திஸ். யூ ஆர் க்ரோன் அப்ஸ். ஸோ யூஸ் த கெஸ்ட் ஹவுஸ் சென்சிப்ளி" மனனம் செய்ததை ஒப்பிப்பது போன்ற பாவனையுடன் சொல்லி முடித்தார். தலையை ஆட்டி வைத்தேன்.

டிராவைத் திறந்து ஒவ்வொரு சாவியாக எடுத்து வெளிச்சத்தில் உயர்த்திப் பிடித்துப் பார்த்தார். எதையோ சரி பார்த்துவிட்டு இரண்டு சாவிகளை மட்டும் எடுத்துக் கொண்டு எழுந்தார்.

"கம்"

மேய்ப்பனைத் தொடரும் ஆட்டுக் குட்டிகள் போலப் பின் தொடர்ந்தோம். முதலில் ஒரு அப்பார்ட்மெண்டின் கதவைத் திறந்தார். என்னைப் பார்த்து, "லெஃப்ட் ஃபர்ஸ்ட் ரூம் இஸ் யுவர் ரூம்" என்று என் கையில் சாவியைக் கொடுத்துவிட்டு நகர்ந்தார். ஒரு விநாடி தயக்கத்துக்குப் பிறகு உள்ளே நுழைந்தேன்.

"வெயிட், கிவ் மீ எ ரூம் இன் த சேம் அப்பார்ட்மெண்ட். ஐ ஃபீல் சேஃபர் ஹியர்" மாலாவின் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். என் அப்பார்ட்மென்ட் வாசலில் நின்று கொண்டிருந்தாள். அந்தாள் ஏதோ கன்னடத்தில் சொல்லிவிட்டு சாவி எடுக்க ஆஃபிஸ் ரூம் நோக்கி நடந்தார்.

உள்ளே வந்த மாலா பையை கீழே வைத்து விட்டு அங்கே இருந்த சோஃபாவில் உட்கார்ந்து என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். "நீ எந்த ஊரு?"

"திருநெல்வேலி. நீங்க?"

"திண்டுக்கல். சும்மா நீ வா போன்னே கூப்புடு. உனக்கொன்னும் பிரச்சனை இல்லையே?"

"வாடா போடான்னு கூப்புடாத வரைக்கும் ப்ராப்ளம் இல்லை."

"சொல்ல முடியாது கொஞ்ச நாள் கழிச்சி அப்பிடிக் கூப்பிட்டாலும் கூப்புடுவேன்".

போன ஆள் திரும்பி வந்தார். "திஸ் ரூம்" என்று ஒரு அறையைக் காட்டி, மாலாவின் கையில் ஒரு சாவியைக் கொடுத்து விட்டு திரும்பினார். "வெயிட். மே ஐ நோ யுர் நேம்?"

"கெம்பண்ணா." குரல் மட்டும் வந்தது. திரும்பிப் பார்க்காமலே நடையைக் கட்டினார்.

கெம்பண்ணா போனதும், "அப்புறம் இன்னைக்கு சண்டே. நாளைக்குத் தான் ரிப்போர்ட்டிங். என்ன செய்யலாம்னு இருக்க?" சோஃபாவில் இருந்து எழுந்தவாறே கேட்டாள்.

"தெரியலை. சும்மா எம்.ஜி ரோடு பிரிகேட் ரோடுன்னு சுத்திட்டு வரலாம்னு இருக்கேன்."

"ஓ ஏற்கனவெ பெங்களூர் வந்திருக்கியா?"

"காலேஜ் படிக்கிறப்போ வந்திருக்கேன்"

"சரி. கிவ் மி அன் ஹவர். என்னையும் கூட்டிட்டுப் போ"

எதிர்பார்க்கவே இல்லை. காலையில் பஸ்ஸில் பார்த்தாள். இப்போது ஒரே கம்பெனியில் சேரப் போகிறோம். தென் தமிழ்நாடு.இதைத்தவிர வேறு எந்த பழக்கமும் இல்லை. அறிமுகம் இல்லாத ஒருவனுடன் ஊர் சுற்ற வருகிறேன் என்று சொல்கிறாளே? அதுவும் திண்டுக்கல்லில் வளர்ந்த பெண். ஆச்சரியத்துடனே அறைக்குள் நுழைந்தேன். அங்கே ஆஃபிஸ் ரூமாகப் பார்த்த அதே அறை. இரண்டு சிங்கிள் பெட்கள் இந்தப் பக்கம் ஒன்றும் அந்தப் பக்கம் ஒன்றுமாய். இரண்டு பெட்டுக்கும் நடு நாயகமாய் ஸ்பிளிட் ஏசி. அறைக்குள்ளேயே இணைந்த ஒரு பாத்ரூம். ஏசி அறை என்பதால் ஜன்னல் மூடியே கிடந்தது. இந்த சுவரில் ஒன்றும் அந்த சுவரில் ஒன்றுமாய் இரண்டு கப்போர்டுகள் இருந்தன. கதவிலேயே சாவி. ஒரு பெட்டையும் ஒரு கப்போர்டையும் தேர்ந்தெடுத்து என் பையை அதற்குள் வைத்தேன். பரவாயில்லை எதிர்பார்த்ததை அறை சுத்தமாகத்தான் இருந்தது. ஷூவை மட்டும் கழட்டிப் போட்டுவிட்டு கட்டிலில் ஏறிப் படுத்தேன்.

வந்தாயிற்று. ஊரில் அம்மா என்ன செய்து கொண்டிருப்பாள்? காலையில் எழுந்து சாணித் தண்ணி தெளித்துக் கோலம் போட்டு பால் வாங்கி காப்பித் தண்ணி போட்டு அப்பாவை எழுப்பியிருப்பாள். அப்பாவும் எழுந்ததும் ஒரு பீடியைப் பற்ற வைத்துவிட்டு அம்மா குடுத்த காப்பியைக் குடித்துக் கொண்டிருப்பார். ஆத்தா திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தெருவில் போவோர் வருவோரை வம்பிழுக்க ஆரம்பித்திருப்பாள். ஊரைத் தொலைக்க வேண்டும் என்ற கங்கனத்தோடு பஸ் ஏறியவன் இங்கே வந்து இறங்கியதும் அந்த நினைப்புத்தான் வருகிறது. குரங்கை நினைக்காமல் மருந்தைக் குடி என்ற கதையாக ஆகிவிட்டது. மனம் ஒரு குரங்கு தானே? மனம் என்றதும் ஏன் மாலாவின் முகம் நினைவுக்கு வருகிறது? தைரியமானப் பெண் தான். சட்டென என்னையும் கூட கூட்டிட்டுப் போ என்று சொல்லிவிட்டாளே. ம்ம். பையா படத்தில் கார்த்தி தமன்னாவைப் பார்த்தது போல யாராவது ஒரு பெண்ணைப் பார்த்து அவள் பின்னால் திரியலாம் என்று நினைத்திருந்தேன். கடைசியில் எங்கேயும் எப்போதும் படத்தைப் போல கூடவே சுத்த ஒரு பெண் வருகிறாள். பார்ப்போம் நாள் எப்படிப் போகிறதென்று - கலவையான நினைவுகளோடு காலைக் கடன்களை முடித்து இருப்பதிலேயே நல்லதான டி-ஷர்ட் ஒன்றையும் ஒரு ஜீன்ஸையும் அணிந்து கொண்டு வெளியே வந்தேன்.

மாலா இன்னமும் வந்திருக்கவில்லை. சோஃபாவில் உட்கார்ந்து டிவியைப் போட்டேன். இதற்கு முன் இங்கிருந்தவன் எவனோ கொல்ட்டி போல இருக்கிறது. ஜெமினி சேனலில் பாலகிருஷ்ணா வந்து அசினின் அக்குளை முகர்ந்து கொண்டிருந்தார். சேனல் மாற்றி மாற்றி சிரிப்பொலியில் கொண்டு வந்து நிறுத்தினேன். பின்னால் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. பளீரென்ற மஞ்சள் நிறத்தில் சிவப்புப் பூப்போட்ட சுடிதார் ஒன்றை அணிந்து நின்றிருந்தாள். இருங்கள். சுடிதார் இல்லை. வெறும் குர்தா தான். கீழே அடர் நீல ஜீன்ஸ் ஒன்றை அணிந்திருந்தாள். துப்பட்டா எதுவுமில்லை.

"போலாமா?" என்றவளை மேலிருந்து கீழாகப் பார்த்தேன்.

"ட்ரெஸ் நல்லாருக்கா?" என்றவள் என் பதிலுக்குக் காத்திராமல் என் டி-ஷர்ட்டின் வாசகத்தை வாசிக்கத் துவங்கினாள். "I went to college for 4 years and all I got was this lousy t-shirt and No Job"

கலகலவென சிரித்தாள்.

"போன தடவை பெங்களூர் வந்தப்ப வாங்கினது"

இரண்டு பேரும் அலுவலக அப்பார்ட்மென்டில் சாப்பிட்டுவிட்டு ஆட்டோ பிடித்து எம்.ஜி ரோடு வந்தோம். இரண்டு வருடங்களில் கொஞ்சம் மாறித்தானிருந்தது. மேயோ ஹால் ஞாயிறு ஆனதால் கூட்டமில்லாமல் இருந்தது. எதிரில் இருந்த சென்ட்ரல் மாலுக்குள் நுழைந்தோம். சில பல கடைகளில் அவள் நுழைந்து நுழைந்து வெளியே வந்து கொண்டே இருந்தாள். எதையும் வாங்கியதாகத் தெரியவில்லை. கடைசி கடைசியாக ஒரு கடையில் ஒரே ஒரு சுடிதார் வாங்கினாள். நேரம் போனத் தெரியவில்லை.

"சாப்பிடலாமா?" நடந்த களைப்பில் கேட்டேன்.

"ம்ம்".

மாலில் இருந்த ஃபுட் கோர்ட்டில் எதையோ வாங்கிக் கொறித்தோம். நிறுத்தாமல் பேசிக் கொண்டே இருந்தாள். அவள் ஊரைப் பற்றி, கொடைக்கானல் கான்வென்டில் படித்ததைப் பற்றி, கல்லூரியில் சேர்ந்ததைப் பற்றி அவள் நண்பர்கள், வேலை கிடைத்த விதம் என்று 22 வருட வாழ்க்கையை அரை மணி நேரத்தில் சொல்லி முடித்திருந்தாள். நான் வெறுமனே தலையை மட்டும் ஆட்டிக் கொண்டே இருந்தேன்.

சாப்பிட்ட பின் சிறிது நேரம் கமெர்சியல் தெருவில் சுற்றினோம். மாலில் வாங்கிய சுடியை விட சீப்பாக சுடிகள் இங்கே கிடைப்பதாக சொல்லிக்கொண்டிருந்தாள். இந்தத் தெருவுக்கு ஏன் முதலிலேயே அழைத்து வரவில்லை என்று கடிந்து கொண்டாள். காஃபி டேயில் காஃபி குடிக்கும் போது கோல்ட் காஃபி க்ளாஸை இரண்டு விரல்களால் வருடிக் கொண்டே "மெக்கானிக்கல் படிச்சிட்டு எப்பிடி பிஐஎம்ல ப்ளேஸ்மெண்ட் வாங்கின?" என்றாள்.

"ஓ அது ஒரு பெரிய கதை"

"என்ன கதை. காலைல இருந்து நானே பேசிட்டு இருக்கேன். ஒரு சேஞ்சுக்கு நீ சொல்லேன்"

"எனக்கு சாஃப்ட்வேர் சைட் வர அவ்வளவா விருப்பம் இல்லை. என் ரூம்மேட் ஒரு இ.சி.இ பையன். அவனெல்லாம் பிஐஎம்முக்கு விழுந்து விழுந்து படிச்சிட்டு இருந்தான். இந்தக் கம்பெனி வந்த அன்னைக்கு ஒரு அசைன்மெண்ட் சப்மிட் பண்ணனும். நான் முடிக்காததால க்ளாஸ் கட் அடிச்சிட்டு வெளிய சுத்திட்டு இருந்தேன். அப்போ எல்லாரும் ரெஸ்யூம் சப்மிட் பண்ணவும் நானும் சப்மிட் பண்ணிட்டு வந்துட்டேன். என் வகுப்புப் பசங்க எல்லாம் க்ளாஸ் முடிஞ்சி சப்மிட் பண்றதுக்குள்ள ஷார்ட் லிஸ்ட் பண்ணிட்டாங்க. என்னோட ரெஸ்யூமும் செலக்ட் ஆயிருச்சி. அதுக்குப் பிறகு எக்ஸாம்ல வெறும் அப்டிட்யூட் தானே. க்ளியர் செஞ்சிட்டேன். காமெடி என்னன்னா, என் ரூம்மேட் க்ளியர் பண்ணலை. அப்புறம் இன்டர்வியூவுல உன்னை எல்லாம் எடுக்க மாட்டாங்கன்னு சொல்லிட்டே இருந்தான். அதனாலோ என்னவோ பெரிய எதிர்பார்ப்பு இல்லாம இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணேன். கேள்வி எல்லாம் மெக்கானிக்கல் ரிலேட்டடாவே கேட்டுட்டு இருந்தாங்க. கடைசியில ரிசல்ட் பார்த்தா ஆஃபர் பண்ணிட்டாங்க. எங்க காலேஜல ப்ளேஸ் ஆனது ஆறு பேரு. அதுல நான் மட்டும் தான் பெங்களூர் கேட்டுட்டு இங்க வந்துட்டேன்"

"ஆக்சிடெண்டலா வந்திருக்க. என்ன பண்ணப் போறன்னு பார்ப்போம்"

காசைக் கொடுத்துவிட்டு வெளியே வந்து நடந்தோம்.மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. பெண்களும் ஆண்களுமாய் வாகனங்களில் ப்ரிகேட் சாலையை மொய்க்கத் துவங்கியிருந்தனர். பெண்களுக்குத்தான் எத்தனை எத்தனை உடைகள். பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையை வெறிப்பது போல பார்த்துக்கொண்டே இருந்தேன்.

"போதும் போதும். இங்க தான் இனிமே வாழ்க்கை. மீதி நாட்களுக்கும் மிச்சம் வையி" என்றாள் கேலியாகச் சிரித்தபடி. அசடைத் துடைத்துக் கொண்டு நடந்தேன்.

நடந்து நடந்து ரெஸிடன்ஸி ரோட்டில் இருந்த அர்பன் எட்ஜ் பப்புக்கு அருகில் வந்துவிட்டோம். இரண்டு வருடங்களுக்கு முன்பு நண்பர்களோடு பெங்களுர் வந்திருந்த போது இந்த பப்பில் நோ ஸ்டாக் என்ட்ரி என்று துரத்தப்பட்டது நினைவுக்கு வந்தது. கும்பல் கும்பலாய் உள்ளே நுழைவதும் வெளியே நண்பர்களுக்குக் காத்திருந்ததும் பார்க்கப் பார்க்க ஒரு ஏக்கப் பெருமூச்சை வெளியேற்றியது.

தலையை சாய்த்து, ஒற்றைக் கண்ணை மூடி, மாலா என்னைப் பார்த்துக் கேட்டாள்.

"இந்தப் பப்புக்குள்ள போலாமா??"

(தொடரும்)


அடுத்த பாகம் இங்கே

No comments: