Monday, July 16, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 11

பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 


கதவை யாரோ தட்டும் சத்தம். முதலில் டிவியிலோ என்று நினைத்தேன். அறைக்கதவு தான் என்று உறுதியானதும் எழுந்தேன். கண்ணைக் கசக்கிக் கொண்டு மணி பார்த்தேன். மூன்று மணி. மாலை மூன்று மணிக்கு யார் வருகிறார்கள்? ரீனா அப்படி எல்லாம் டிஸ்டர்ப் செய்யும் பழக்கம் உடையவள் அல்லவே என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறந்தேன்.

மாலா.

என்னால் என்னையே நம்ப முடியவில்லை. இவள் எப்படி இங்கே? நான் தங்கியிருக்கும் இடம் இவளுக்கு எப்படித் தெரியும்? குழப்பத்தில் அவளை உள்ளே வரக்கூடச் சொல்லவில்லை. அவளாக உள்ளே நுழைந்து என் கையில் பலமாகக் கிள்ளினாள்.

“ஆ...”

“வலிக்குதா? கனவில்லடா. நிஜமாத்தான் வந்திருக்கேன்”

“மா..மாலா.. நீ எப்பிடி இங்க?”

“நல்ல வேளை எதுக்கு வந்தன்னு கேக்கலையே. ஏண்டா நீ என்ன பெரிய இவனா? உன் லவ்வை ஏத்துக்கலைன்னா பேசாமவே இருந்திருவியோ? அஃபிஷியலாக்கூட பேசுறதைக் கொறச்சிட்ட? என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல?”

“அது.. அது.. அதான் சொன்னேனே மாலா. எப்ப உன்னை வெறும் ஃப்ரண்டா மட்டும் ஏத்துக்க எனக்குப் பக்குவம் வருதோ அப்ப பேசுறேன்னு. இன்னும் அந்தப் பக்குவம் வரலை”

“அப்ப நான் போயிரவா??? இவ்வளவு தூரம் உன்னையப் பாக்க வந்திருக்கேன். என்னைய தொரத்தப் போறியா?” அவள் முகம் சூம்பிப் போனது. பார்க்கவே பாவமாய் இருந்தது.

“ச்சேச்சே. அவ்வளவு கல் நெஞ்சக்காரன் இல்லப்பா நான்”

“அதானே பார்த்தேன்” அவளின் ட்ரேட் மார்க்கான தலையைச் சாய்த்து கண்ணைச் சிமிட்டிச் சிரித்தாள். ஐயோ இப்படிக் கொல்கிறாளே. மூன்று மாதமில்லை. மூன்று ஜென்மம் எடுத்தாலும் இவளை மறக்க முடியாது போலிருக்கிறதே.

அறையை சுற்றும் முற்றும் பார்த்தாள். “பரவாயில்லை. சுத்தமாத்தான் வச்சிருக்க. சாப்புட ஏதாவது இருக்கா?” என்றவாறு கட்டிலில் அமர்ந்தாள்.

நானும் அவளை இப்போதுதான் முழுமையாகப் பார்க்கிறேன். முகத்தில் பிரயாணக் களைப்பு அப்பியிருந்தது. ஆகாய வண்ணத்தில் எங்கள் கம்பெனி லோகோ போட்ட டீ ஷர்ட்டும் கரும் நீல வண்ண ஜீன்ஸும் அணிந்திருந்தாள். டிஷர்ட்டின் காலரில் படிந்திருந்த அழுக்கு, பிரயாண உடையை இன்னமும் மாற்றவில்லை என்பதைச் சொல்லியது. ஆனால் பெட்டி எதுவும் எடுத்து வரவில்லையே. ஒருவேளை வெளியேவே வைத்திருக்கிறாளோ?

“என்னடா. பசிக்குதுன்னு சொல்றேன். என்னையவே பார்த்துட்டு இருக்க”

“ஒரு நிமிசம் இரு வர்றேன். ஃபிரிட்ஜைத் திறந்து பார்த்தேன். ஒன்றும் இல்லை. ஷெல்ஃபில் மேகி நூடுல்ஸ் ஒரு பாக்கெட் இருந்தது. “மேகி சாப்புடுறியா”

“சரி”

“டூ மினிட்ஸ்” மேகியை தயாரித்துக் கொண்டு பார்த்தால் என் கட்டில் படுத்திருந்தாள். தூங்கிவிட்டாளா தெரியவில்லை.

”மாலா”

“ம்.. ரெடியாயிருச்சா?” எழுந்து வேறு எதுவும் பேசாமல் என் கையில் இருந்த நூடில்ஸை வாங்கி சாப்பிட்டாள். சாப்பிட்டு விட்டு எழுந்து சின்க்கில் பாத்திரத்தைப் போட்டுவிட்டு கை கழுவி தண்ணீர் குடித்தாள்.

”சரி நீ எப்பிடி இங்கன்னு கேட்டேனே. இன்னும் பதில் சொல்லலையே?”

“இரு சொல்றேன். பாத்ரூம் எங்கருக்கு?”

காட்டினேன். கைப்பையைத் திறந்து, “அங்கிட்டுத் திரும்புடா” என மிரட்டி, திரும்பியதும் எதையே எடுத்துக் கொண்டு, “டவல் எங்க?” என்றாள். துவைத்து வைத்திருந்த டவல் ஒன்றை எடுத்துக் கொடுத்தேன்.

“ஃபைவ் மினிட்ஸ் குளிச்சிட்டு வந்துர்றேன்” என பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

இதுதான் இவளிடம் பிடிக்காத விசயம். அநியாயத்துக்கு சஸ்பென்ஸ் வைப்பாள். கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தேன். அவள் பெட்டி எதுவும் இல்லை. ஒன்றும் புரியாமல் உள்ளே வந்து சின்க்கில் இருந்த பாத்திரங்களைக் கழுவி வைத்தேன்.

குளித்து முடித்து ஃப்ரெஷாக வந்தாள். பழைய உடையையே அணிந்திருந்தாள். ”டேய் உன் டி ஷர்ட் எதாவது குடேன். வேற ட்ரெஸ் எடுத்துக்காம வந்துட்டேன்.”

ஷெல்ஃபைக் காட்டினேன். அவளே திறந்து பல உடைகளுக்குப் பின் ஒரு டி ஷர்ட்டை எடுத்துக் கொண்டாள். போட்டிருந்த டிஷர்ட்டை கழட்ட வந்தவள், என்னை ஒரு முறை முறைத்தாள். அர்த்தம் தெரிந்து வெளியே வந்தேன். “உள்ள வா” என்ற குரலுக்கு உள்ளே போனேன். என் டிஷர்ட் அவளுக்கு கொஞ்சம் நீளமாக இருந்தது. மோசமில்லை.

“மேடம் இப்பவாவது சொல்லுவீங்களா?”

“புதன் கிழமை இயர்லி மீட்டிங் இருக்கில்ல”

“ஆமா”

“அதுக்கு ஆஃப்ஷோர்ல இருந்து மேனேஜர், டீம் லீட்ஸ் எல்லாம் வந்திருக்கோம். மாட்யூல் லீடர்ல நான் மட்டும். ஸ்பெஷல் இன்விட்டேஷன் ஃப்ரம் ரீனா”

“ஓ.. என் கிட்ட யாருமே சொல்லலியே”

“ரெண்டு நாள் முன்னாடி தான் எல்லாருக்கும் தெரியும். உன் கிட்ட சொல்ல வேண்டாம்னு நான் தான் நம்ம டீம்ல சொல்லி வச்சிருந்தேன்”

“அடிப்பாவி” எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க என்னவெல்லாம் செய்திருக்கிறாள். “சரி இங்க எப்பிடி வந்த? நான் இருக்கிற அட்ரஸ் உனக்கு எப்பிடி தெரியும்?”

“வேற யாரு? ரீனா ஏர்ப்போர்ட் வந்திருந்தா ரிசீவ் பண்ண”

“அவ கூட சொல்லலையே என்கிட்ட”

“அவ கிட்டயும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேன்”

”இருக்கட்டும். அவளை ஆஃபிஸ் போய் வச்சிக்கிறேன்”

”சரி அதெல்லாம் இருக்கட்டும். எல்லாரும் ஹில்டன்ல தான் ரூம் போட்டிருக்கோம். செக் இன் பண்ணி என் லக்கேஜை அங்க வச்சிட்டு உன்னையப் பாக்க ஓடி வந்துட்டேன். இப்ப என்னைய அங்க கொண்டு போய் விடு”

“எவ்வளவு நாள் இங்க இருப்பீங்க?”

“டூ வீக்ஸ். வர்ற ஃப்ரைடே இல்லாம அடுத்த ஃப்ரைடே திரும்பப் போறோம். எனக்கு எல்லா இடமும் சுத்திக் காட்ட வேண்டியது உன் பொறுப்பு. சேத்து வச்ச காசை எல்லாம் கரைக்கப் போறேன்”

செய்தாலும் செய்வாள். இந்த இரண்டு வாரம் இன்னும் எத்தனை வருடங்களுக்கு என்னை வதைத்துக் கொண்டிருக்கப் போகிறதோ தெரியவில்லை.

நானும் ரெஃப்ரெஷ் செய்து கொண்டு உடை மாற்றி கிளம்பினேன். சப்வே ஸ்டேஷன் வரை நடந்து போய் அவளுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து சப்வேயில் ஏறி உட்கார்ந்தோம். அவள் சொந்தக்காரர்கள் 15 பேர் அவளை பெங்களூரு விமான நிலையத்தில் விமானம் ஏற்றிவிட வந்தது, விமானத்தில் பார்த்த படங்கள், சாப்பிட்ட சாப்பாடு, லே ஓவரில் அவள் என்ன செய்தாள் என ஒன்று விடாமல் சொல்லிக்கொண்டே வந்தாள். நான் அவள் வாய் பார்த்துக் கொண்டு மட்டும் வந்தேன்.

ஹில்டன் போய் சேர்ந்ததும் மேனேஜரையும் மற்ற டீம் லீட்களையும் பார்த்து நலம் விசாரித்தேன். பிரயாணக் களைப்பிலும் ஜெட் லேகிலும் எல்லோரும் தூங்கப் போகிறோம் என்று ஆறு மணிக்கெல்லாம் அவரவர் அறைக்குப் போய்விட்டார்கள். மாலாவைப் பார்த்தேன்.

“சரவணபவனுக்குக் கூட்டிட்டுப் போ” என்றாள்.

வெளியே வந்து டாக்ஸி பிடித்தோம். லெக்ஸிங்க்டன் அவென்யூவும் 26வது ஸ்ட்ரீட்டும் சந்திக்கும் முனையில் இருந்தது. நியூயார்க் நகரில் இருக்கும் சரவணபவன் எப்போதும் கூட்டம் அம்மும். காத்திருந்துதான் சாப்பிட வேண்டும். ஆறு மணிக்குத்தான் திறப்பார்கள். ஆனால் ஐந்தரை மணியிலிருந்து வெளியே கூட்டம் காத்திருக்கும். நாங்கள் போன நேரம் வரிசை அதிகமாக இல்லை. ஐந்து நிமிட காத்திருப்பிலேயே அமர இடம் கிடைத்தது. தனிமையாக ஒரு இடம் பிடித்தோம்.

பேரரிடம் ஆர்டர் கொடுத்துவிட்டு, மாலாவின் முகத்தைப் பார்த்தேன்.

“சொல்லு மாலா. என்ன ப்ளான்?”

“ப்ளான் கிடக்குது. உன் கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்னு தான் உன்னைய இப்பிடி தனியா கூட்டிட்டு வந்தேன்”

“என்ன?”

“நாம முன்னாடி ஒரு தடவை செக்ஸ் டிப்ரைவ்ட் பத்தி பேசியிருக்கோம் நினைவிருக்கா?”

“ஆமா” எதுக்கு இவ இதைப்பத்தி இப்ப இழுக்கிறா?

“I was wrong then"

(தொடரும்)


அடுத்த பாகம் இங்கே

3 comments:

Robert said...

ஒருவழியா அடுத்த பாகம் வந்தாச்சு....சீக்கிரம் மிச்சத்தையும் எழுதுங்க பாஸ்...
பதிவுக்கென்ன வழக்கம் போல அருமை..

நாடோடி இலக்கியன் said...

இப்படி சஸ்பென்ஸ் கொடுத்தா எப்புடி...மொத்தக் கதையையும் எனக்கு மெயில் பண்ணுய்யா மருவாதியா.

Unknown said...

please try to write some meanfull articles-- about this society, about nature, about our culture, about music.. about about about .. lot of abouts are there.. but don,t write this kind of stories.. so many writers told these kind of bloody stories..