Thursday, August 2, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 12


பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 

“நாம முன்னாடி ஒரு தடவை செக்ஸ் டிப்ரைவ்ட் பத்தி பேசியிருக்கோம் நினைவிருக்கா?”

“ஆமா” எதுக்கு இவ இதைப்பத்தி இப்ப இழுக்கிறா?

“I was wrong then"

“என்ன சொல்ற? எனக்குப் புரியலை” நிஜமாகவே புரியவில்லை. என்ன சொல்ல வருகிறாள் இவள்?

“இல்லடா. நம்ம கௌசல்யா மேம் சிடுசிடுன்னு விழுந்ததுக்கு அவங்க செக்ஸ் டிப்ரைவ்டா இருக்கிறதுதான் காரணம்னு சொன்னேன்ல?”

“ஆமா”

மாலா இப்போது தலையைக் குனிந்து கொண்டாள். “அது மட்டும் காரணமில்லைன்னு நினைக்கிறேன். நமக்கு மனசுக்குப் பிடிச்சவங்க பக்கத்துல இல்லைன்னா கூட அப்பிடித்தான் எரிஞ்சி எரிஞ்சி விழுவோம் போல” டேபிளில் சிந்திய தண்ணீரைக் கோடு இழுத்துக் கொண்டே சொன்னாள்.

“மாலா. என்னைய மன்னிச்சிக்கோ. நான் ஒரு ட்யூப் லைட்டு தான். எனக்குப் புரியலை. நேரடியா சொல்லு”

“ம்ம்.. தேவா, நீ என்கிட்ட ப்ரொப்போஸ் பண்ணினதும் நான் அதை ரிஜெக்ட் பண்ணிட்டேன். ஏன்னா நான் அப்போ நமக்குள்ள இருந்த உறவு வெறும் ஃப்ரெண்ட்ஷிப்தான்னு நினைச்சேன். அந்த ஃப்ரண்ட்ஷிப் தாண்டி என்னால போக முடியாதுன்னு நான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, நீ என் பக்கத்துல இல்லாமலும் என் கிட்ட பேசாமலும் இருந்த இந்த மூணு மாசம் எனக்கு நரக வேதனையா இருந்தது. உன்னைய ரொம்பவே மிஸ் பண்ணேன். ஆனாலும் உன் கிட்ட பேச என்னோட ஈகோ தடுத்துருச்சி. விளைவு, நான் எல்லார்கிட்டயும் எரிஞ்சி எரிஞ்சி விழ ஆரம்பிச்சிட்டேன். எனக்கே என்னைய பிடிக்காமப் போயிருச்சி”

எனக்கு இதயத் துடிப்பு எகிற ஆரம்பித்தது. என்ன சொல்லப் போகிறாள்?

“அப்புறம் நம்ம டீம் நந்தினிதான் என்கிட்ட தனியாப் பேசினா. அவ கிட்ட பேசின பிறகுதான் எனக்கு ஒரு தெளிவு வந்தது. இந்த மூணு மாசமே கஷ்டமா இருக்கே. எனக்கோ உனக்கோ கல்யாணம் ஆன பிறகு காலம் முழுக்க எல்லாம் உன்னைப் பிரிஞ்சி இருக்க முடியுமான்னு நினைச்சிப் பார்த்தேன். இருக்க முடியாதுன்னு மனசு சொன்னது. அப்போதான் உணர்ந்தேன் உன் மேல எனக்கு இருக்கிறது வெறும் ஃப்ரண்ட்ஷிப் இல்லைன்னு. உன் கிட்ட நோ சொன்னதுக்கு என்னைய மன்னிச்சிருவியா?? இப்ப சொல்றேன் டபுள் எஸ். ட்ரிபிள் எஸ்”

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஜிவ்வென்று பறந்து கொண்டிருந்தேன். அடுத்தடுத்து அதிர்ச்சிகள். அதில் இது ஆனந்த அதிர்ச்சி. என் அமைதி மாலாவுக்கு உறுத்தியிருக்க வேண்டும். கோலம் போட்டுக் கொண்டிருந்த விரலை நிறுத்திவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்களின் ஓரம் நீர் கோர்த்துக் கொண்டிருந்தது.

“இதை என் கிட்ட நேர்ல வந்து சொல்லணும்னு இப்பிடி ஒரு சர்ப்ரைஸ் ட்ரிப் போட்டு வந்தியா??”

அவள் கன்னம் சடுதியில் சிவந்தது. வெட்கம். இது வரை இவள் வெட்கப் பட்டு பார்த்ததே இல்லை. என் கண்களைச் சந்திக்க முடியாமல் மீண்டும் தாழ்த்திக் கொண்டாள். தலையை மட்டும் மேலும் கீழும் அசைத்து ஆம் என்றாள்.

மாலாவின் நாடியைப் பிடித்து முகத்தை உயர்த்தினேன். “மாலா, உன் வாயால ஒரு தடவை ஐ லவ் யூன்னு சொல்லேன்?”

“ஐ லவ் யூடா”

“தேங்க் யூ மாலா. தேங்க்யு வெரி மச். எனக்கு இப்ப உயர உயர பறக்கிற மாதிரி இருக்கு” அவள் கைகள் இரண்டையும் என் கைகளுக்குள் அடைத்துக் கொண்டேன்.

“பட் இன்னொரு தடவை சண்டை போட்டுக் கூட என் கிட்ட பேசாம இருந்துடாதடா? என்னால தாங்கவே முடியலை”

“சாரி மாலா. ரொம்ப சாரி. என்னாலயும் உன்னோட நிராகரிப்பை தாங்க முடியலை. அதான்..”

“பரவாயில்லடா. இப்பத் தான் நான் ஒத்துக்கிட்டேனே”

எப்போது பேரர் வந்து சாப்பாடு வைத்தார், அதை எப்போது சாப்பிட்டோம் என்ற நினைவே இல்லை. ஒரு வழியாக சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம். மாலாவின் கைகளைக் கோர்த்துக் கொண்டேன். அவள் என் புஜத்தை அணைத்துக் கொண்டு என் தோளில் சாய்ந்து கொண்டாள். மெல்ல நடை பயின்றோம். இரண்டு பேருக்குள் காதல் சொல்லி ஏற்றுக் கொண்ட அந்தத் தருணத்தில் பேச வார்த்தை இருக்காது போலும். ஆனால் காதலர்கள் ஃபோனிலும் நேரிலும் பக்கம் பக்கமாக என்ன தான் பேசிக் கொள்வார்களோ. திடீரென்று எனக்கு அந்த ஆசை வந்தது.

“மாலா”

“ம்ம்”

“இது நியூயார்க் தானே? நம்ம ஊர் இல்லைல?”

“ஆமா. அதுக்கு என்ன இப்போ?”

“உன்னைக் கட்டிப் பிடிச்சிக்கட்டுமா?”

“ம்ம்”

கையைப் பிடித்து, தோளை வளைத்து எனக்கு எதிரில் அவளை நிறுத்தினேன். மாலாவின் கண்களுக்குள் பார்த்தேன். என் இரு கைகளையும் விரிக்கவே என் கைகளுக்குள் அடைக்கலமானாள். என் மார்பில் சாய்ந்து கொண்டாள். அவள் தலையைத் தடவிக் கொடுத்தேன். என் முதுகை அவள் கைகள் வருடின.

“தேவா..”

“என்ன மாலா? இப்பிடியே இருந்துடலாம்னு சினிமா டயலாக் அடிக்கப் போறியா?”

“இல்லடா? வெறும் ஹக் பட்டும் தானா? கிஸ் பண்ற எண்ணம்லாம் உனக்கு இல்லையா?”

நான் பதில் பேசவில்லை. பேச முடியாத வண்ணம் எங்கள் உதடுகள் இணைந்தன.

ஒரு நிமிடத்துக்குப் பிறகு, “நாட் பேட்” என்றாள்.

”என்னது?”

“You are not a bad kisser"

"என்னமோ இது வரைக்கும் நிறைய பேரை கிஸ் அடிச்ச மாதிரி சொல்ற?”

“அதெல்லாம் எங்களுக்கு பில்ட்-இன் அட்ரிப்யூட் டா. பசங்கதான் சொதப்புவீங்க”

“தோடா..” சிரித்துக் கொண்டே ஒரு டாக்ஸி பிடித்து ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.

“நைட்டு இங்கயே தூங்கிடேன்” கட்டிலில் உட்கார்ந்து கொண்டு தட்டிக் காட்டினாள்.

“வேணாம்பா. நான் என் ரூமுக்கே போறேன்”

“ஏன் என்னைப் பார்த்து பயமா?”

“க்ளிஷே தான். இருந்தாலும் சொல்லியே ஆகணும். உன்னைப் பார்த்து பயமில்லை மாலா. நம்ம இளமையைப் பார்த்துத்தான் பயம்”

“சும்மா பயப்படாத கண்ணு. தங்கிட்டுப் போ”

”அது மட்டுமில்லை, நான் ட்ரெஸ் எதுவும் கொண்டு வரலை. நாளைக்குக் காலைல கிளம்பி ரூமுக்குப் போயிட்டு வர்றது கஷ்டம்”

”சரி சரி போயிட்டு வா. காலைல என்னைக் கூப்புட வந்துடு. சரியா?”

“சரி மாலா. நான் போயிட்டு வர்றேன்”

மனதுக்குள் விசிலடித்துக் கொண்டே ரூமுக்கு வந்து சேர்ந்தேன்.

இவ்வளவு நேரம் காதல் நிறைவேறிய குதூகலம் மனதை நிரப்பியிருந்தது. இப்போது அந்தக் குதூகலம் வடியத் தொடங்கியது. காதல் வெற்றியடைவது என்பது திருமணத்தில் முடிவது தான். என்னால் மாலாவை வெற்றிகரமாகக் கைப்பிடிக்க முடியுமா? அதில் எவ்வளவு சிக்கல் இருக்கிறது?

முதலில் நான் யார்? என் பெயர் தேவா என்று தானே சொல்லி வந்திருக்கிறேன். என் முழுப் பெயர் நல்லுத்தேவன். வீர மறவர் என்று வீம்புக்கு சாதியைச் சுமந்து திரியும் தேவர் இனத்தைச் சேர்ந்தவன். அதிலும் என் குடும்பம் சாதிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஆம், எனக்கு இந்தப் பெயரை வைத்த பெரியப்பா பழனித் தேவர் இப்போது இருப்பது ஜெயிலில். அவர் ஜெயிலுக்குப் போன காரணம்? அவர் ஒரே மகள், எனக்கு அக்கா, ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டாள் என்பதற்காக, அவளையும் அவள் கணவனையும் வெட்டிக் கொன்ற குற்றத்திற்காக. அவர் ஜெயிலுக்குப் போனதை இன்றும் பெருமையாக சொல்லித் திரியும் குடும்பம் என் குடும்பம். இந்தக் குடும்பத்தை மீறி நான் மாலாவைத் திருமணம் செய்து கொள்ள முடியுமா? அதோடு தங்கை வேறு திருமண வயதில் நிற்கிறாள். அவள் திருமணம் முடிந்த பின்புதான் என் திருமணம் பற்றி யோசிக்க முடியும். அப்படியே தங்கை லைனை க்ளியர் செய்தாலும், அப்பாவின் சகோதரியும், அம்மாவின் சகோதரரும் ஆளுக்கொரு பெண்ணைப் பெற்று வைத்திருக்கிறார்கள். அந்த இரண்டு பெண்களில் ஒருத்தியைத்தான் நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று இரண்டு பக்கமும் நினைக்கிறார்கள். இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி மாலாவின் கரம் பிடிக்க முடியுமா??

மாலாவின் வீட்டுப் பக்கம் பிரச்சனை அதிகம் இருக்காது என்று நினைக்கிறேன். அவள் அப்பா அம்மா இரண்டு பேரும் கல்லூரி பேராசிரியர்கள். பி.எச்.டி முடித்தவர்கள். அவர்களின் படிப்புக்கேற்ற பக்குவம் இருக்கும். மாலாவும் ஒரே மகள். கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் எங்கள் வீட்டு காட்டுமிராண்டிகளிடம் அவர்கள் என்ன என்ன அவமானங்களைச் சந்திக்க வேண்டியிருக்குமோ? நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஹரி படம் போல அருவாள்களுக்கு நடுவில் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டியிருக்கும் போல.

காலையில் மாலாவைப் பார்த்ததும் முதல் வேலையாக இந்தச் சூழ்நிலையை அவளிடம் விளக்கி விட வேண்டும். என் தங்கையின் திருமணம் முடியும் வரை காத்திருக்கும் பக்குவம் அவளுக்கு இருக்கிறது. ஆனால் அவள் வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தால் அதைத் தடுக்கச் சொல்ல வேண்டும். என்னைப் பற்றியும் என் ஜாதியைப் பற்றியும் அதில் இருக்கும் சிக்கல்கள் பற்றியும், அவள் என்ன என்ன அவமானங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் அவளுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும். அவளை தயார்படுத்துவதே என் முதல் வேலை.

ஒரு வழியாக உறங்கிப் போனேன்.

காலை எழுந்ததில் இருந்து மாலாவிடம் எப்படிச் சொல்லப் போகிறோம் என்பதே என் மனதை அரித்துக் கொண்டிருந்தது. பலவாறாக வசனங்களை ஒத்திகை செய்து பார்த்துக் கொண்டேன். நான் பேசுவது எந்த முறையிலும் மாலாவிடம் கசப்பை ஏற்படுத்திவிடக் கூடாது. நேற்று என் காதலை ஏற்றுக் கொள்ள அவள் எடுத்த முடிவை மாற்றிவிடக் கூடாது என்பதற்காக வார்த்தைகளைக் கவனமாக எடுத்துக் கோர்த்துக் கொண்டேன். “மாலா, நம்ம காதல் கல்யாணத்துல முடியறதுல ஒரு சிக்கல் இருக்கு” பத்தாவது முறையாக சொல்லிப் பார்த்து திருப்தி அடைந்தேன்.

சப்வே பிடித்து ஹில்டன் போய் சேர்ந்தேன். மாலா தயாராக இருந்தாள். ப்ளாக் பேன்ட்டும் வெள்ளை நிற முழுக்கை டாப்ஸும் அணிந்திருந்தாள். பக்கா ப்ரொஃபெஷனல் உடை. முகத்தில் மெலிதான மேக்கப், உதட்டை லிப் பென்சிலால் எழுதியிருந்தாள். மேனேஜரும் மற்ற டீம்லீட்களும் தயாராக இருந்தார்கள்.

மானேஜர், “காம்ப்ளிமெண்டரி ப்ரேக்ஃபாஸ்ட் இருக்கே. சாப்டுட்டு போலாமே” என்றார்.

”நாங்க முன்னாடி போறோம். உங்களுக்கு ஆஃபிஸ் தெரியுமா?” என்றேன்.

“நான் ஏற்கனவே வந்திருக்கேன் பா. எனக்குத் தெரியும். நீங்க போங்க” என்றார்.

“நாம போலாமா மாலா?” அவளின் ட்ரேட் மார்க் சிரிப்பு. இருவரும் கிளம்பி அலுவலகம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

“தேவா, பயங்கரமா பசிக்குது தேவா. நாலு மணிக்கெல்லாம் முழிப்பு வந்திருச்சி”

“பாவி. அங்க தான் காப்ளிமெண்டரி ப்ரேக்ஃபாஸ்ட் இருந்ததே. அதைக் கொட்டிட்டு வந்திருக்கலாமே?”

”ஏன் நீ வாங்கித் தரமாட்டியா?”

“சரி சரி வா” மாலாவிடம் பேச, இது ஒரு நல்ல சந்தர்ப்பம் தான். Dunkin Donutsக்கு அழைத்துப் போனேன். அவளுக்கும் எனக்கும் ப்ரேக்ஃபாஸ்ட் வாங்கிக் கொண்டு அங்கே இருந்த டேபிள் ஒன்றில் அமர்ந்தோம்.

“மாலா, உன்கிட்ட ஒரு விசயம் பேசணும்”

“நானும் உன்கிட்ட ஒரு விசயம் சொல்லணும் தேவா”

“நான் முதல்ல சொல்லிடறேனே”

“நோ நோ. நான் தான் மாட்யூல் லீடர். நான் சொல்றதைத் தான் நீ கேக்கணும்”

“சொல்லுங்க மேடம்” கை கட்டி வாய் பொத்தி சொன்னேன். கல கலவென சிரித்தாள். “சிரிச்சது போதும்டி. சொல்லு”

அவள் முகத்தில் இருந்த சிரிப்பு வடிந்து போனது.

“தேவா, நம்ம காதல் கல்யாணத்துல முடியறதுல ஒரு சிக்கல் இருக்கு”

(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே

1 comment:

நவீன் said...

oru valiyaa kadhalai sollitangalaa.. appadaa...