Friday, October 26, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 16

பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 


“வீக் எண்ட் என்ன ப்ளான் உனக்கு?”

“எனக்கென்ன ப்ளான். ஒண்ணுமில்லை. வீட்டுல தான்”

“கிளம்பி இங்க வா. அம்மா உன்னைப் பார்க்கணும்னு சொல்றாங்க”

“உங்கம்மாவா?? என்னய எதுக்கு?”

“ம்ம்.. தன் பொண்ணை லவ் பண்றவன் எப்பிடியிருக்கான்னு பாக்க.”

“மாலா. கெதக்குன்னு இருக்கு. என்ன பேசுவாங்கன்னு ஏதாச்சும் ஐடியா இருக்கா?”

“தெரியாதுடா. நீ கிளம்பி வா”

ஃபோனை வைத்ததிலிருந்து எனக்கு எதுவுமே தோன்றவில்லை. மாலாவின் அம்மா என்ன கேட்பார், எப்படி பதில் சொல்வது என்று விதவிதமாக மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு நாள் லீவ் போட்டு வீட்டில் படுத்துக்கொண்டு எல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன்.

கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் அழைத்தாள். “எப்படா கிளம்புற?”

“நாளைக்குக் காலையில”

“லேட் பண்ணாத. நைட்டே வந்துடு. அடுத்த ஸ்ட்ரீட்ல இருக்கிற ஹாலிடே இன்ல ஸ்டே பண்ணிக்கோ. ப்ரேக்ஃபாஸ்டுக்கே வீட்டுக்கு வந்துடு. சரியா?”

“ம்ம்.. இன்னைக்கு நைட்னா ரூம் கிடைக்குமா?”

“ஏற்கனவே புக் பண்ணிட்டேன். போய் உன் பேர் சொல்லி செக் இன் பண்ணிக்கோ”

“ஓக்கே” தயாராக இருப்பாள் போல.

“அப்புறம்?”

“வீட்டுக்கு வரும்போது எதுவும் வாங்கிட்டு வரணுமா? ஜஸ்ட் டு இம்ப்ரெஸ் யுர் மாம்”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். சும்மா வந்தா போதும்”

“ஓக்கே. நான் மதியமே கிளம்பிடுறேன்”

*******************

ஹோட்டலில் செக் இன் செய்துவிட்டு மாலாவுக்கு டெக்ஸ்ட் அனுப்பினேன்.  குட் என பதில் வந்தது. எச்.பி.ஓவில் ஏதோ ஒரு படத்தைப் பார்த்துக்கொண்டே தூங்கிப் போனேன்.

********************

காலை எழுந்து குளித்துவிட்டு நல்ல பிள்ளை போலத் தெரிவதற்காக தயாராக எடுத்து வந்திருந்த பவுடரை விபூதி போல வைத்துக்கொண்டு கிளம்பினேன்.

பார்க்கிங் லாட்டில் காரை நிறுத்திவிட்டு படியேறி அப்பார்ட்மெண்ட் கதவின் முன்னால் நின்றேன். கதவைத் தட்டலாமா என்று என்று யோசித்துக்கொண்டு நின்று கொண்டே இருந்தேன். முதல்முறை வருவது போல நடிக்க வேண்டும். கதவுக்கு மேல் கையை வைத்தேன். கதவு திறந்தது. மாலா.

“உள்ள வா”

முதல் முறை வருவது போலத்தான் இருந்தது. வீடே மாறியிருந்தது. மாலா அம்மாவின் வேலையாக இருக்க வேண்டும். புதிதாக ஒரு டைனிங் டேபிள், ஹாலில் ஃபூட்டான், சுத்தமான கிச்சன், இதையெல்லாம் விட என்ன அதிர்ச்சிக்குள் ஆக்கியது ஹால் சுவற்றில் நடுநாயகமாக இரண்டு கைகளையும் விரித்து கருணைப் பார்வை பார்த்துக்கொண்டு, ஜீஸஸ் ஹரால்ட் க்ரைஸ்ட்.

ஃபூட்டானில் உட்கார்ந்தேன்.

“காஃபியா டீயா?”

“நீங்க கிறிஸ்டியனா?”

“அம்மா கிறிஸ்டியன். காஃபியா டீயா?”

“காஃபி”

கிச்சனுக்குள் போய்விட்டாள். மாலாவின் அம்மா வருவதற்கு ஒரு வாரம் முன்னாள் கழித்த இரவு நினைவுக்கு வந்தது. எழுந்து மாலாவின் பின்னால் போகலாமா என்று நினைத்த போது மாலாவின் அம்மா வந்தார்.

மரியாதைக்காக எழுந்தேன். அவர் பார்வை என் நெற்றியில் ஆணி அடித்தாற்போல நின்றது. நல்ல பிள்ளை வேஷம் போட நினைத்த என் புத்தியில் மானசீகமாக செருப்பால் அடித்துக் கொண்டேன்.

“நீ தான் தேவாவா?. உன் ஃபுல் நேம் என்ன?”

“நல்லுத் தேவன்”

“இங்க பாரு தம்பி. நான் சுத்தி வளைச்சிப் பேச விரும்பலை. எங்க ஃபேமிலி பெரிய ஃபேமிலி. எங்க குடும்பத்துக்கு மூத்த பொண்ணு மாலா தான். எங்க பிரதர்ஸ் எல்லாருக்கும் மாலா தான் பெட். செல்லம் குடுத்து வளர்த்த பொண்ணு. என்னோட ப்ரதர்ஸ் குழந்தைங்க எல்லாம் இவளைத்தான் ரோல் மாடலா எடுத்துட்டு இருக்காங்க. இவதான் அவங்களுக்கெல்லாம் முன் மாதிரியா இருக்கணும். எங்க ஃபேமிலியில லவ் மேரேஜ், இண்டர்-காஸ்ட் மேரேஜ் எல்லாம் இதுவரைக்கும் நடந்ததில்லை. எங்க ஃபேமிலியில யாருக்கும் இது பிடிக்கவும் இல்லை. நான் ஒரு டீச்சர். உங்க வயசுப் பசங்களுக்குப் பாடம் எடுக்குறவ. இந்த வயசுல இது மாதிரி வர்றது சகஜம் தான். யோசிச்சிப் பார்த்தீங்கன்னா இது பிராக்டிக்கலி பாசிபிள் இல்லைங்கிறது உங்களுக்குப் புரிய வரும். நீங்க நல்லா படிச்சிருக்கீங்க. நல்ல வேலை பாக்குறீங்க. அமெரிக்கால டாலர்ல சம்பாதிக்கிறீங்க. உங்களுக்கு உங்க கம்யூனிட்டியிலயே மாலாவ விட நல்ல பொண்ணு கிடைக்கும். இதுவரைக்கும் உங்களுக்கும் மாலாவுக்கும் நடுவுல இருந்ததை ஒரு நல்ல ஃப்ரண்ட்ஷிப்பா மட்டும் நினைச்சிட்டு ரெண்டு பேரும் பிரிஞ்சிடுங்க. அதுதான் உங்க ரெண்டு பேருக்கும், ரெண்டு குடும்பத்துக்கும் நல்லது”

நிறுத்தாமல் பேசிவிட்டு என் முகத்தைப் பார்த்தார்.

“ஆண்ட்டி - இப்பிடி கூப்புடலாம்னு நினைக்கிறேன். நான் மாலாவைப் பிடிச்சி வைக்கலை. நீங்க மாலா மனசை மாத்தி உங்க இஷ்டப்படி கல்யாணம் செஞ்சி வைக்கணும்னு ஆசைப்பட்டீங்கன்னா, அதுக்கு மாலா சம்மதிச்சா, அதுக்குக் குறுக்க நிக்க மாட்டேன். ஆனா.. மாலாவுக்கு விருப்பமில்லாம நீங்க இதைச் செய்யணும்னு நினைச்சா அதைப் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன். எனக்கு வாழ்க்கையில கல்யாணம்னு நடந்தா அது மாலாவோட தான். மாலாவைத் தவிர வேற யாருக்கும் என்னோட வாழ்க்கையில இடம் இல்லை. இதுக்கு மேல உங்க இஷ்டம்”

என்று சொல்லிவிட்டு எழுந்தேன். காஃபி கப்பை கையில் வைத்துக்கொண்டு இந்த உரையாடலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாலாவை அர்த்தத்தோடு பார்த்து விட்டு விறுவிறுவென வெளியேறினேன்.
(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே

Thursday, October 25, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 15




அன்று மாலை மாலா ஃபோன் செய்தாள்.

“என்னாச்சி மாலா?”

“அந்தப் படுபாவி கவுத்துட்டான் தேவா”

“என்ன சொல்ற மாலா?” வீட்டில் சொல்லிவிட்டானா?

“எங்க வீட்ல போட்டுக் குடுத்துட்டான். அப்பாவும் அம்மாவும் கூப்புட்டு காய்ச்சி எடுத்துட்டாங்க”

“ஐயயோ. நீ என்ன சொன்ன?”

“நான் கல்யாணம் செஞ்சிக்கிட்டா உன்னைத்தான்னு செஞ்சிக்குவேன்னு சொல்லிட்டேன்”

“அப்புறம்?” பெருமையாக இருந்தது. பெண் ஸ்ட்ராங்காக இருந்தால் தான் எந்தக் காதலும் திருமணத்தில் முடிய முடியும்.

“என்னை உடனே கிளம்பி இந்தியாவுக்கு வரச் சொன்னாங்க”

“நாம 10000 மைல் தாண்டி இருக்கிறதும் ஒரு விதத்துல நல்லதுதான் என்ன? இதே பெங்களூர்ல இருந்திருந்தாங்கன்னா ஃபோனா பேசியிருப்பாங்க? கிளம்பி வந்திருக்க மாட்டாங்க?”

“கரெக்டுடா. நான் ப்ராஜெக்ட் இருக்கு. இப்ப நினைச்சதும் வர முடியாது. ஆறு மாசமாவது ஆகும்னு சொல்லிட்டேன்”

“குட். ஆறு மாசம் போதுமான டைம். அதுக்குள்ள தங்கச்சிக்கி கல்யாணம் ஏற்பாடு செஞ்சிட்டு நானும் வீட்டுல இந்த விசயத்தை ஓப்பன் செஞ்சிடுவேன்”

“ஆனா ஒரு சிக்கல்”

“என்ன?”

“ஆறு மாசமும் அம்மா இங்க வந்து என் கூட இருக்கப் போறாங்க. விசாவுக்கு இன்விட்டேஷன் அனுப்ப சொல்லியிருக்காங்க. இன்னும் 2-3 வீக்ஸ்க்குள்ள இங்க வந்துடுவாங்க”

“ஐயோ நேர்ல பார்த்துக்க முடியாதா?”

“ஆமாம்” அவள் குரலில் உண்மையான சோகம் எதிரொலித்தது. எனக்குள்ளும் அந்த சோகம் வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்தது. வீட்டிற்கு அழைத்து தங்கையின் திருமண ஏற்பாடு பற்றி விசாரித்தேன். பார்த்துவிட்டுப் போன மாப்பிள்ளைக்கு தங்கையைப் பிடித்திருக்கிறதாம். ஸ்பிக்கில் ஆஃபிஸராக வேலை பார்க்கிறாராம். குவார்ட்டர்ஸ் எல்லாம் கொடுத்திருக்கிறார்களாம். பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பமாம். நகையும் வரதட்சணையும் தான் கொஞ்சம் அதிகம் எதிர்பார்ப்பார்கள் போல. கவலைப் படாமல் பேசி முடிக்கச் சொன்னேன். பேங்க் பேலன்ஸ் மொத்தத்தையும் துடைத்து எடுக்க வேண்டும். பரவாயில்லை. சமாளித்துவிடலாம்.

கொஞ்சம் கொஞ்சமாக அலுவலக வேலையில் இந்தக் கவலையைத் தொலைத்திருந்தேன். அவ்வப்போது மாலாவுக்கு ஃபோன் செய்து அவளிடம் இருந்து தைரியம் கொஞ்சம் கடன் வாங்கிக் கொண்டேன். வெள்ளிக்கிழமை எப்போது வரும் என்றிருந்தது. வெள்ளி இரவு அல்பனியில் மாலாவின் அப்பார்ட்மெண்ட் பால்கனியில் கையில் சிகரெட் புகைய நின்றிருந்தேன். எதிரே மாலா.

“அம்மா மண்டே விசா இண்டர்வியூ போறாங்க. விசா கிடைச்சதும் புதன்கிழமை கிளம்பிடுவாங்க”

“ஓ. அப்போ இதுதான் நாம தனியா இருக்கிற கடைசி வீக்கெண்டா?”

மாலா என் கையில் இருந்த சிகரெட்டைப் பிடுங்கி கைப்பிடியில் நசுக்கி வெளியே எறிந்துவிட்டு, என்னை நெருங்கி என் தோளில் சாய்ந்து கொண்டாள். இடது கையால் அணைத்துக் கொண்டேன்.

“உன்னைப் பாக்காம எப்பிடி இருக்கப் போறேன்னு தெரியலடா. ரொம்பக் கஷ்டமா இருக்கும்”

“ஏய் என்ன. கிட்டத் தட்ட ஒரு வருசம் இந்தியாவுல இருந்தியே..”

“ம்ம்.. அது வேற வழியில்ல. 10,000 மைல் டிஸ்டன்ஸ். இது அப்பிடியா? 4 மணி நேர டிரைவ் தூரத்துல இருந்தும் பார்க்க முடியாதே”

“கொஞ்ச நாள் தானே. அதுக்குப் பிறகு ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு ஒரே வீட்டுல ஒரே ரூம்ல தானே இருக்கப் போறோம். அப்ப நமக்கு நடுவுல டிஸ்டன்ஸே இல்லாம இறுக்கமாக் கட்டிப் பிடிச்சிக்கலாம்”

“இப்பவே என்னைய இறுக்கக் கட்டிப் பிடிச்சிக்கோ”

இறுக்கிக் கொண்டேன். என் கழுத்தில் முகம் புதைத்தாள். அவள் கன்னத்தில் முத்தமிட்டேன். காது மடலை மூக்கால் உரசினேன். பற்களால் கவ்வினேன். அவளுக்குக் கூசியது போல. நெளிந்தாள்.

“ஏய் என்ன பண்ற நீ?” என் முகத்தில் இருந்து விலகி என்னை நோக்கிக் கேட்டாள்.

“ஒண்ணும் பண்ணலை” அவள் முகத்தை நெருங்கி என் மூக்கால் அவள் மூக்கை நசுக்கினேன். “3 இடியட்ஸ்ல சொன்ன மாதிரி கிஸ் குடுக்க வரும்போது மூக்கு முட்டுது பார்த்தியா?”

“அதான் தலைய சாச்சிக்கலாமே” தலையைச் சாய்த்து என் உதட்டைக் கவ்வினாள். முத்தம் கொடுத்துக் கொண்டே என் கையை அவள் டிசர்ட்டுக்குள் விட்டேன்.

“ஏய் என்ன பண்ற?”

“ஓ. சாரி சாரி. உணர்ச்சிவசப் பட்டுட்டேன்” கையை வேகமாக வெளியில் இழுத்தேன்.

“இப்பிடி பால்கனியில நிக்கும்போதா செய்வ? வா உள்ள போயிடலாம்”

அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தேன். “என்னடா பாக்குற? வா உள்ள” கையை இழுத்துக் கொண்டு போய் மெத்தையில் விழுந்தாள். அவள் மேல் பரவினேன். உடைகள் களைந்தோம். முயங்கத் துவங்கையில் “மாலா ப்ரொட்டெக்‌ஷன் இல்லாம..” என்று இழுத்தேன்.

“அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்டா. நீ கண்டினியூ பண்ணு” என்று இழுத்து அணைத்துக் கொண்டாள்.

*********************************************************************************************
அடுத்த வாரம் ஒரு வியாழக்கிழமை அவள் அம்மா வந்திறங்கினார். ஆஃபிஸில் இருக்கும் நேரம் தவிர தொலை பேசுவது குறைந்து போனது. சில நாட்கள் நள்ளிரவில் அழைப்பாள். நான்கு வார்த்தை பேசிவிட்டு வைத்துவிடுவாள். தினமும் அவள் அம்மா நீதிபோதனைகள் வழங்கி அறுப்பதாகப் புலம்பினாள். சிரிப்பு வந்தாலும் சிரித்து வைத்தாள் திட்டுவாள். ஊரில் தங்கை திருமணத்துக்கு நாள் நிச்சயம் செய்துவிட்டதாக ஃபோன் வந்தது. ஃபிப்ரவரியில் திருமணம். ஆஃபிஸில் சொல்லி லீவ் கேட்டு வைத்தேன்.

கிறிஸ்துமஸ்க்கு இன்னும் ஒரு வாரமே இருக்கையில் மாலா அழைத்தாள். அதிசயமாக மாலை நேரத்தில்.

“என்ன மாலா வழக்கமா ஈவினிங் கூப்புட மாட்ட?”

“வீக் எண்ட் என்ன ப்ளான் உனக்கு?”

“எனக்கென்ன ப்ளான். ஒண்ணுமில்லை. வீட்டுல தான்”

“கிளம்பி இங்க வா. அம்மா உன்னைப் பார்க்கணும்னு சொல்றாங்க”

(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே