Tuesday, December 18, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 19


ஒரு சில விநாடிகள் அப்பாவின் முகத்தையே பார்த்தேன். என் பார்வையைத் தாங்க முடியாமல் எழுந்து விட்டார். “இங்க பாருலே. நீ எவள வேணும்னாலும் கல்யாணம் செஞ்சிக்கோ. ஆனா கல்யாணம் இந்த ஊட்டுலயோ இந்த ஊர்லயே நடக்கக் கூடாது. நீ அந்தப் பொண்ணு ஊர்ல வச்சிக்கோ இல்ல பெங்களூர்ல வச்சிக்கோ. பெத்த கடனுக்கு நானும் எம்பொண்டாட்டியும் வந்துருவோம். வேற சொந்தக்காரங்களக் கூப்புடணும்னு எல்லாம் கனாக் காணாத. கல்யாணம் முடிஞ்சப் பிறகு நீ பெங்களூருலயே இருப்பியோ இல்ல அமெரிக்காவுக்கே போயிருவியோ உன் இஷ்டம். ஒம் பொண்டாட்டியக் கூட்டிட்டு இந்த வீட்டுப் பக்கம் வந்துராத. என் சாதிக் கவுரவத்தைக் கெடுத்துராத. அம்புட்டுத்தேன்”

சொல்லிவிட்டு சட்டைப் பையில் இருந்து ஒரு பீடியை எடுத்து பல்லிடுக்கில் கடித்துக் கொண்டு வெளியேறிவிட்டார்.

‘சம்மதம் சம்மதம் சம்மதம்’ என்று உச்சக் குரலில் கத்த வேண்டும் போல இருந்தது. இந்த ஊருப்பக்கம் தலையே வைக்கக் கூடாது என்பதுதானே என் லட்சியம். அதை நிறைவேற்ற அப்பாவே துணை நிற்பார் என்று எதிர்பார்க்கவே இல்லை. மிகவும் மகிழ்ச்சியுடன் மாப்பிள்ளையின் கையப் பற்றிக் குலுக்கினேன். “மாப்ள நீங்க மட்டும் இல்லைன்னா இது வெட்டுக் குத்துன்னு வந்து நின்னிருக்கும். ரொம்ப தேங்க்ஸ் மாப்ள”

“அட விடுங்க மச்சான். சும்மா சும்மா தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு. சரி தங்கச்சிக்கிட்ட மேட்டரை சொல்லலையா?”

“அது அவங்கம்மா அங்க இருக்காங்க. நினைச்ச நேரத்துக்குப் பேச முடியாது. இமெயில் தான் அடிக்கணும்”

“வாங்க டவுனுக்குப் போய் அனுப்பிட்டு வருவோம்”

இருவரும் வண்டியில் போய் மாலாவுக்கு ஈமெயில் அனுப்பி விட்டு டாஸ்மாக்கில் ஒரு ஆஃபை ஆளுக்கு ஒரு குவாட்டராக அடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தங்கச்சியிடம் திட்டு வாங்கினோம்.

இரவு மாலா அழைத்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் சந்தோஷமாக ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

********************************************

திங்கட்கிழமை காலை. ஒரு வருடத்தில் ரொம்பவே மாறியிருந்தது பெங்களூரு. ஆங்காங்கே ரோடு வேலை நடந்துகொண்டே இருந்தது. எத்தனை பாலம் கட்டினாலும் பெங்களூரு ட்ராஃபிக்கைக் கட்டுப் படுத்த முடியாது என்று நினைத்துக் கொண்டே ஆட்டோவில் சென்றிறங்கினேன். வாசலிலேயே காத்திருந்தான் செந்தில். ஆட்டோவிலிருந்து இறங்கியதும் ஆரத்தழுவிக் கொண்டான்.

“ரொம்ப சந்தோஷம் டா. நீயும் மாலாவும் ஒரு வழியா ஒண்ணு சேர்ந்துட்டீங்க” கையில் இருந்த பைகளில் ஒன்றை வாங்கிக் கொண்டே சொன்னான்.

“அடச் சும்மாருடா. முக்கால் கிணறு தான் தாண்டியிருக்கோம். இன்னும் மாலா வீட்டுல சம்மதிக்கல தெரியும்ல?”

“அதல்லாம் சம்மதிச்சுருவாங்கடே. நீ கவலைப் படாத” லிஃப்டில் ஏறி நானும் அவனும் தங்கியிருந்த ஃப்ளோரில் இறங்கி, அந்த அப்பார்ட்மெண்ட் கதவைத் தட்டினான். ஓமனா கதவைத் திறந்தாள். மேடிட்டிருந்த அவள் வயிறு ஒன்பது மாதம் என்று சொன்னது.

“டேய் சொல்லவே இல்ல. கங்க்ராட்ஸ்டா” என்று இருவருக்கும் கை கொடுத்தேன். “எப்ப டியூ”

இன்னும் ஃபோர் வீக்ஸ்லடா. புதன் கிழமை ஓமனாவோட அப்பா அம்மா வந்து கூட்டிட்டுப் போகப் போறாங்க”

“ஓ பிரசவம் உங்க ஊர்லயா?”

“ஆமா. இன்னைக்கு ராத்திரி அம்மா அப்பா வர்றாங்க”

“நல்லது”

“இன்னும் 4 மாசம் ஓமனா அங்க தான் இருப்பா. நீ இங்கயே என் கூட தங்கிக்கலாம். அதுக்குள்ள கல்யாணம் செஞ்சிக்கப் பாருங்க. என்ன?” செந்தில் கண்டிப்புடன்.

“கண்டிப்பாடா. அதுக்குதான போராடுறோம். இந்த அப்பார்ட்மெண்டை நீயே வாங்கிக்கப் போறதா சொன்னியே வாங்கிட்டியா?”

“அட்வான்ஸ் குடுத்துட்டேண்டா. இன்னமும் பத்திரம் பதியலை”

“மறுபடியும் ஒரு கங்க்ராட்ஸ்டா. எல்லாம் குழந்தை பிறக்கப் போற நேரம்”

அவர்களுக்காக யு.எஸ்ஸிலிருந்து வாங்கிவந்திருந்த ஐபேடையும் டிஜிட்டல் ஃபோட்டோ ஃப்ரேமையும் கொடுத்துவிட்டு குளித்து முடித்து அலுவலகம் கிளம்பினேன்.

மாலாவின் பல்சர் செந்தில் வீட்டு பார்க்கிங் லாட்டிலேயே நின்றது. அதை எடுத்துக்கொண்டு அலுவலகம் வந்து சேர்ந்தேன்.

பாதி டீம் மாறிப் போயிருந்தது. பல முறை கான்ஃப்ரன்ஸ் காலில் பேசியிருந்தாலும் அறிமுகமாயிருந்த பெயர்களுக்கு முகங்களை ஒட்டிக்கொள்ள முடிந்தது. மாட்யூல் லீடராகியிருந்ததால் பொறுப்பு கூடியிருந்தது. மானேஜரோடும் ப்ராஜக்ட் லீடரோடும் ஒரு மணி நேரம் மீட்டிங் போட்டுவிட்டு தம்மடிக்க வெளியே வந்தேன். என்னோடு ப்ராஜக்ட் லீடர் கிஷோரும்.

சிகரெட்டால் தீமைகள் அதிகம் என்றாலும் இது போன்ற நன்மைகளும் உண்டு. மிகவும் சுலபமாக நட்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும். கிஷோரும் ஒட்டிக் கொண்டான். கலிஃபோர்னியாவில் நான்கு வருடங்கள் பணியாற்றிவிட்டு இங்கே வந்திருக்கிறான். அதனால் யுஎஸ்ஸில் ஆரம்பித்து சினிமாவில் முடித்தோம் குட்டி அரட்டையை.

இரண்டு நாட்களில் மிகவும் நெருங்கிவிட்டான் கிஷோர். அவன் மாமனார் ஆந்திராவில் அமைச்சராக இருக்கிறார். அவன் திருமணத்துக்கு 5000 பேர் வந்தனராம். என் தங்கையின் திருமணத்துக்கு வந்த முந்நூத்திச் சொச்சம் பேருக்கே நாக்கு தள்ளிப்போனது நினைவுக்கு வந்து போனது. எனக்கும் மாலாவுக்கு இடையில் இருக்கும் லவ் எங்கள் டீமுக்கே பரிச்சயம் ஆனதால் இவனுக்கும் தெரிந்திருந்தது. எங்கள் திட்டம் பற்றி விசாரித்தான். உதவி எதுவும் தேவைப்பட்டால் தயங்க வேண்டாம் என்று உத்தரவாதம் கொடுத்திருந்தான். சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கிறது என்று கொஞ்சம் தைரியம் வந்தது.

ஓமனாவை வழியனுப்பி விட்டு நானும் செந்திலும் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். செந்தில் இருப்பது அதுவும் ஓமனா என்ற கமிட்மெண்ட் இல்லாமல் உடன் இருப்பது ஒரு தனி பலம் வந்தது போல இருந்தது.

***************************************
மாலாவும் வந்துவிட்டாள். அவள் கேட்ட படியே பெங்களூரு ப்ராஜெக்ட் ஒன்றிற்கு அவளை மாற்றியிருந்தார்கள். மாட்யூல் லீடர் பொசிஷனே கிடைத்திருந்தது. ஒரே காம்ப்ளக்ஸ் ஆனால் வேறு பில்டிங். எப்படியோ ஒரே டைம் ஜோன் என்பதால் இன்ஸ்டண்ட் மெசெஞ்சரிலும் தேவைப்பட்டால் இண்டர்காமிலும் பேசுக்கொள்ளும்படியான சந்தர்ப்பம். லஞ்சுக்கு சந்தித்தோம். மெரிடியனில் கம்பெனி அக்கமொடேஷனில் தங்கியிருக்கிறாள். உடன் அவள் அம்மாவும் அப்பாவும். இன்னும் கரையவில்லை அவர்கள் என்பது கண்கூடாகத் தெரிந்தது. ஆனாலும் மாலாவிடம் ஒரு தெளிவு இருந்தது. எங்கள் வீட்டில் க்ரீன் சிக்னல் காட்டியதாகக் கூட இருக்கலாம். பைக்கில் அவளை மெரிடியன் பின் வாசலில் இறக்கிவிட்டு வந்தேன்.

****************************
அடுத்த நாள் செந்திலுக்கு செகண்ட் ஷிஃப்ட் என்பதால் தூங்கிக் கொண்டிருந்தான். நான் கிளம்பி அலுவலகம் வந்திருந்தேன். மீட்டிங்குக்கு நோட்ஸ் ரெடி செய்து கொண்டிருக்கும்போது செல்ஃபோன் அழைத்தது. செந்தில்.

“என்னடா? தூங்கிட்டு இருப்பன்னு நினைச்சேன். என்ன விஷயம்? ஒரு மீட்டிங் இருக்கு சீக்கிரம் சொல்லுடா”

“மச்சி இங்க உன்னைப் பார்க்க மாலாவோட அப்பா வந்திருக்காருடா. கூட ரெண்டு பேரும்”

“என்னது?”

(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே

No comments: