Friday, January 18, 2013

இதுவும் ஒரு காதல் கதை - 21இப்ப நம்ம கல்யாணத்துக்கு என்ன செய்யறதுன்னு யோசிச்சேன்.”

“என்ன செய்யறது?”

“உங்கப்பா அம்மாவை எங்க வீட்டுக்குப் போய் பொண்ணு கேக்கச் சொல்லு”

“என்னது?”

"தமிழ்ல தானடா சொன்னேன்? உங்கப்பா அம்மாவை என் வீட்டுக்கு வந்து பொண்ணு கேக்கச் சொல்லு. புரிஞ்சிதா?”

“அதெல்லாம் நல்லாப் புரிஞ்சிச்சி. நீதான் புரிஞ்சி பேசுறியா இல்லையான்னு தெரியலை”

லூஸ் பிடித்துவிட்டதா இவளுக்கு? என் அப்பா சம்மதித்ததே பெரிய விசயம். இதில் இவள் வீட்டுக்குப் போய் பெண் கேட்பதெல்லாம் நடக்கக் கூடியதா?? ஒரு வேளை அப்படியே போய் அங்கே அவர்கள் எதையாவது பேசப் போக, இவர்கள் எதையாவது பேச, வெட்டுக்குத்தென்று ஆகிவிட்டால் என்ன செய்வது? அதன்பிறகு இது நடக்காமலே போய்விடுமே?

“நீ என்ன நினைக்கிறன்னு தெரியுதுடா. நீயும் கூட போ. வார்த்தை பெருசாகிடாம பாத்திக்கிடு. எதுக்கும் உன் சிஸ்டர் ஹஸ்பண்டையும் கூட்டிட்டுப் போ. அவர் புரிஞ்சி பேசுவார்ல?”

ம்ம். இவள் சொல்வதும் சரிதான். ஒரு முறை போய் பெண் கேட்டுப் பார்த்தால் என்ன? ஒரு வேளை எங்கள் வீட்டில் சம்மதம் தெரிவித்தது புரிந்து அவர்களும் இறங்கிவந்துவிடலாம் அல்லவா? அதே போல மாலாவின் குடும்பத்தைப் பார்த்து மகன் தவறான முடிவு எடுக்கவில்லை என்று அப்பாவும் சமாதானம் ஆக வாய்ப்பு இருக்கிறது. மயிரைக் கட்டி மலையை இழுப்போம். வந்தால் மலை. போனால் மயிரு.

“சரி மாலா. நான் மாப்ளைக்கிட்ட பேசிட்டு எப்ப போறோம்னு சொல்றேன்.”

*******************************************************************

இரண்டு நாட்கள் எப்படி அப்பாவிடம் ஓப்பன் செய்வது என்ற குழப்பத்திலேயே கடந்து போய்விட்டது. ஞாயிறு மாப்பிள்ளைக்குக் கூப்பிடலாம் என்று முடிவெடுத்திருந்த நேரம் மாப்பிள்ளையே அழைத்தார். அஃபிஷியலாக பெங்களூர் வரவேண்டியிருப்பதாகவும், தங்கையும் பெங்களூரைப் பார்த்ததில்லை என்பதால் அவளையும் அழைத்துக்கொண்டு புதன் காலை வருவதாகச் சொன்னார். சரி நேரிலேயே பேசிக்கொள்ளலாம் என்று திட்டத்தை இரண்டு நாட்களுக்கு ஒத்திப்போட்டேன்.

மாலாவுக்கும் ஹோட்டல் ஸ்டே முடிந்து அவள் முன்பு தங்கியிருந்த அதே வீட்டையே மீண்டும் வாடகைக்கு எடுத்துக்கொண்டு குடி வந்துவிட்டாள். அவள் பெற்றோருக்கும் கல்லூரி இருந்ததால் மாலாவைத் தனியாகவே விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். நான் அமெரிக்காவுக்குப் போவதற்கு முந்தைய எங்களது இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் வந்தோம்.

புதன் கிழமை காலை மாப்பிள்ளையையும் தங்கையையும் ரீசீவ் செய்ய இன்னோவா ஒன்றை எடுத்துக் கொண்டு நானும் செந்திலும் கிளம்பினோம். மாலாவும் அந்த நேரத்துக்கே தயாராக இருந்தாள். எனக்கு அவளை அழைத்துக் கொண்டு போக தயக்கமாகவே இருந்தது.

கண்டோன்மெண்ட் ஸ்டேஷன் வழக்கமான காலை நேரப் பரபரப்புடன் இருந்தது. ப்ரீ பெய்ட் ஆட்டோ ஏற கூட்டம் வரிசையில் நின்று கொண்டிருந்தது. ஆட்டோக்காரர்களும். தனது முறைக்குக் காத்திருக்கும் நேரத்தில் வரிசையில் நின்றிருந்தவர்களிடம் ப்ரிபெய்ட் சார்ஜுக்கே அழைத்துப் போவதாக சில பேராசை ஆட்டோ டிரைவர்கள் பேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். டிரைவரிடம் பார்க்கிங்குக்குக் காசு கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்தோம். ட்ரெயின் இன்னும் வந்திருக்கவில்லை. செந்தில் பத்து ரூபாய்க்குக் காபி என்ற பெயரில் விற்கும் சுடுதண்ணீரை வாங்கிவந்தான்.

போர்ட்டர்கள் பரபரப்பாகவும் ட்ரெயின் தூரத்தில் வருவது தெரிந்தது. ஏ2 கோச் இங்க தான் நிக்கும் என்று ஒன்றுக்கு மூன்று பேர் சொல்லிய இடத்தில் எஞ்சின் தான் நின்றது. இரண்டு நிமிடம் தான் ட்ரெயின் நிற்கும், என்னைப் பார்க்காது இறங்காமல் போய்விடப்போகிறார்கள் என்ற எண்ணத்தில் ஓட்டமும் நடையுமாக ஏ2வை நோக்கிப் போனேன். வாசலிலேயே நின்றிருந்த மாப்பிள்ளை பார்த்ததும் கையசைத்தார். அவருக்குப் பின்னால் தங்கை. இறங்கியதும் தங்கையின் கையில் இருந்த பெட்டியை வாங்கினேன்.

“என்னண்ணே, அண்ணியக் கூட்டிட்டு வரலையா?”

“அண்ணியா? அதுக்குள்ளயா?” என்றபடி என்னருகில் வந்து நின்றான் செந்தில். அவனுக்குப் பின்னால் மாலா.

இருவரையும் அறிமுகப் படுத்தினேன். ஓடிச் சென்று மாலாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அங்கிருந்து ஓட்டல் செல்லும் வரை பெண்கள் இருவரும் பேசிக்கொண்டே வந்தார்கள்.

மூன்று நாட்கள் அவரது அலுவலக வேலையை முடித்த பின்னர் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் மைசூர் அழைத்துக்கொண்டு போய் காண்பித்தேன். மாலாவும் கூட வந்திருந்தாள். அப்போது கிடைத்த சந்தர்ப்பத்தில் மாலாவும் நானும் சேர்ந்து பெண் கேட்கப் போகும் திட்டத்தை மாப்பிள்ளைக்கு விளக்கினோம். அவரும் தங்கையும் அப்பாவிடம் பேசுவதாக உறுதியளித்துவிட்டு சென்றார்கள்.

********************************************************************

மாப்பிள்ளை சொன்னது போலவே சாதித்தும் காட்டியிருந்தார். எங்கள் வீட்டிலிருந்து அம்மா, அப்பா, தங்கை மாப்பிள்ளை நான் ஐந்து பேரும் செல்வது என்று முடிவானது. இதைப் பற்றி அம்மாவிடம் ஃபோனில் பேசும்போது பின்னணியில் கெட்ட வார்த்தைகளாகக் கேட்டதில் இருந்து இந்த விசயத்தில் அப்பாவுக்கு முழு சம்மதம் இல்லை என்பது தெரிந்தது. மாலாவும் நானும் கலந்து பேசி ஒரு நாளை முடிவு செய்தோம். இருவரும் வெக்கேஷன் போட்டோம்.

திட்டமிட்ட நாளன்று ஊரிலிருந்து ஒரு குவாலிஸை புக் செய்துகொண்டு கிளம்பினோம். போகும் வழியில் அம்மாவும் தங்கையும் மட்டும் பேசிக்கொண்டே வந்தார்கள். திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் அருகில் நிறுத்தச் சொல்லிவிட்டு மாலாவுக்கு ஃபோன் செய்தேன்.

“மாலா திண்டுக்கல் வந்தாச்சி. லன்ச் இங்க எங்கயாவது ஒரு ஹோட்டல்ல சாப்டுட்டு ஒரு மூணு மணி போல உங்க வீட்டுக்கு வர்றோம். உங்க வீட்ல சொல்லிட்டில?”

“சொல்லி வச்சிட்டேண்டா. எங்க குடும்பத்துல எல்லாரும் இங்க தான் இருக்காங்க. எல்லாத்துக்கும் தயாரா வா”

வீட்டுக்கு வரும் வழியை தெளிவாகச் சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.

லன்ச் முடித்துவிட்டு வெளியே வந்ததும் அம்மா பூ, பழங்கள் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.

“இதெல்லாம் எதுக்குமா?”

“எலே பொண்ணு கேக்கப் போம்போது வெறுங்கையோடவா போறது?”

“அம்மா, நாம ஒண்ணும் முறையா பொண்ணு கேக்கப் போகலை. சும்மா போறோம்”

“சரிலே. சும்மா போறோம்னே இருக்கட்டும். ஒரு வேளை அவக வீட்டுல சம்மதிச்சிட்டாகன்னா தட்டு மாத்தவாச்சும் வேணும்ல?”

ஆப்டிமிஸம் தேவைதான் அதற்காக இந்த அளவுக்கா?? “எம்மா, அதெல்லாம் வேண்டாம்மா”

“அண்ணே அம்மா சொல்றதும் சரிதாண்ணெ. நீ வாங்கிட்டு வா”

வாங்கி ஒரு பையில் நிரப்பி தங்கையின் கையில் கொடுத்தேன்.

மாலாவின் வீடு இருக்கும் தெருவில் எல்லாம் பெரிய பெரிய வீடுகளாக இருந்தன. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு காராவது நின்றுகொண்டிருந்தது. மாலாவின் வீட்டு வாசலில் இரண்டு கார்களும் ஒரு ஸ்கார்ப்பியோவும் நின்றுகொண்டிருந்தன. எங்கள் கார் வாசலில் நின்றதும் எதிர்வீட்டு ஜன்னலில் இரண்டொரு தலைகள் முளைத்தன. எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் வீட்டுக்குள்ளே இருப்பவர்களின் மனநிலை ஒன்றாகத்தான் இருக்கும்போல.

வாசலில் நின்று காலிங் பெல் அடித்தேன். மாலாதான் வந்து திறந்தாள். பெரிதாக மேக்கப் எல்லாம் இல்லையென்றாலும் வீட்டில் இருப்பதை விட திருத்தமாகவே இருந்தாள்.

“வாங்க” என்று உள்ளே அழைத்துச் சென்றாள். விஸ்தாரமான ஹால். கொஞ்சம் பெரியதாயிருந்தால் ஃபுட்பால் விளையாடலாம். ஒரு மூலையில் 40 இன்ச் சாம்சங்க் ஃப்ளாட் ஸ்க்ரீன் டிவி. அதற்கு எதிர் மூலையில் லெதர் சோஃபா. அதில் மாலாவின் அப்பா, மாமா இன்னும் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் மாலாவின் அம்மாவும் இரண்டு பெண்களும். மாலாவின் அத்தைகளாக இருக்க வேண்டும். அந்த ஹாலை ஒட்டிய அறைக்குள் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பது தெரிந்தது.

சோஃபாவுக்கு எதிரில் எண்ணி ஐந்து சேர் போட்டிருந்தார்கள். எங்களை அங்கே உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே சென்று மறைந்தாள்.

அறைக்குள் குண்டூசி விழுந்தால் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதி. நாங்கள் ஐவரும் மெதுவாக நாற்காலிகளை நிரப்பினோம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரிய வீட்டையும் இத்தனை பேரையும் பார்த்த மலைப்பு முகத்தில் எதிரொளித்தது. மாப்பிள்ளை என் முகத்தைப் பார்த்தார்.

”வணக்கம் அங்கிள். இது எங்கப்பா, இது அம்மா, தங்கச்சி, தங்கச்சி மாப்பிள்ளை. ஸ்பிக்ல எஞ்சினியரா இருக்கார்”

அனைவரும் வணக்கம் வைத்தனர். எதிர் பக்கமிருந்து தலையசைப்பு மட்டும். இதற்குள் மாலாவும் இன்னொரு பெண்ணும் கப்பில் காப்பி கொண்டு வந்து எங்களுக்குக் கொடுத்தார்கள். அந்த சம்பிரதாயம் முடிந்ததும் தொலைந்து போயிருந்த மவுனம் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது.

தொண்டையைக் கனைத்துவிட்டு மாப்பிள்ளை தான் துவங்கினார். “சார், மச்சானும் உங்க பொண்ணும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க. அதான் முறைப்படி பொண்ணு கேட்டு வந்திருக்கோம். உங்க ஃபேமிலி பத்தி மச்சான் வர்ற வழியெல்லாம் சொல்லிட்டே வந்தாரு. நீங்க எல்லாரும் படிச்சவங்க. சமுதாயத்துல கவுரவமான வேலையில இருக்கீங்க. உங்களுக்குத் தெரியாதது இல்லை. இந்தக் காலத்துல ஜாதி, மதம்னு சொல்லிட்டு அவங்க விருப்பமில்லாத இடத்துல கட்டிக் குடுத்து நாலு பேரோட வாழ்க்கைய ஏன் வீணாக்கணும்?”

மாலாவின் அப்பா அருகில் இருந்த வழுக்கைத் தலையர் ஆரம்பித்தார். “தம்பி. நீங்கள்லாம் சின்னப்புள்ளைங்க. உங்களுக்கெல்லாம் சமுதாயம், சாதி சனத்தைப் பத்தி என்ன தெரியும்? சாதி மாத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நாளைக்கி அதுகளுக்குப் பொறக்குற புள்ளைங்க என்ன சாதின்னு சொல்லுவீங்க? அதுங்களுக்குக் கல்யாணம் பண்ணும்போது எந்த சாதியில மாப்ள பொண்ணு தேடுவீங்க? எளரத்தம் எல்லாம் சொல்லும். பெரியவுகளுக்குல்ல சாதி பத்தித் தெரியணும்?” அவர் பார்வை மாப்பிள்ளையின் மீதிருந்து அப்பாவின் மீது திரும்பியது. அது வரை தனக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை என்பது போல உக்கார்ந்திருந்த அப்பா, திரும்பி என்னை எரித்திடும் பார்வை பார்த்தார். நல்ல வேளையாக அம்மா உதவிக்கு வந்தார்.

“எங்க வீட்டுலயும் சாதி விட்டு சாதி கல்யாணமான்னு இவுக அப்பாவும் பெரியப்பாவும் எக்கிக்கிட்டுத் தான் நின்னாக. அப்புறம் சின்னப் புள்ளைக ஆசைப்படுது. அதுங்க ஆசைய நிறைவேத்திருவோம்னு, கல்யாணம் செஞ்சி வக்கிறோம். அதுக்குப் பொறவு நாளு கிழமைன்னு எல்லாம் எங்க வீட்டுல வந்து நிக்காதீக. நீயாச்சி உன் பொண்டாட்டி புள்ளைகளாச்சின்னு சொல்லிட்டாக. நீங்களும் இது மாதிரியாவது சொல்லி கல்யாணத்த செஞ்சி வச்சிரலாம்ல?”

மாலாவின் மாமா செல்வம் இப்போது குரலை உயர்த்தினார். “இங்க பாருங்க. நீங்க ஆம்பளைப் பையன பெத்து வச்சிருக்கீங்க. அதனால ஈஸியா சொல்லிப்புடுவீங்க. எங்களுக்குப் பொம்பளப் புள்ள. அதுவும் இதுதான் குடும்பத்துக்கே மூத்த புள்ள. இதுக்கு அப்புறம் ரெண்டு பொண்ணுங்க இருக்கே? அதுகளுக்கு மாப்ள தேடும்போது மூத்த மாப்பிள்ளை வேற சாதின்னா எப்பிடி சம்மந்தம் அமையும்? இல்ல அதுகளுக்கும் உங்க சாதியிலயே மாப்ளை பார்க்கச் சொல்லுவீங்களா?”

“என்னண்ணே, அண்ணி ஒரே பொண்ணுன்னு சொன்ன? இப்ப இன்னும் ரெண்டு பொண்ணு இருக்குதுன்னு சொல்றாங்க?” என் காதுக்குள் கிசுகிசுத்தாள் தங்கை. “சித்தப்பா பொண்ணுங்க” என்று பதில்கிசுத்தேன்.

“உங்க கோவம் புரியுதுங்க சார். ஆனா விருப்பமில்லாத வாழ்க்கையில உங்க பொண்ணை நீங்களே தள்ளுறது மட்டும் நியாயமா? அவங்க எதிர்காலம் என்னாகும்னு யோசிச்சீங்களா?” மாப்பிள்ளை மறுபடியும் அடித்தாடினார்.

“இங்க பாருங்க. எங்க பொண்ணு நல்ல பொண்ணு. அது மனசை உங்க மகன் கலைச்சிருக்கான். எங்க பொண்ணு மனசை எப்பிடி மாத்துறதுன்னு எங்களுக்குத் தெரியும். நீங்க வந்த வழியே திரும்பிப் போயிருங்க. அதுதான் உங்களுக்கு மரியாதை”

“சார். என்ன சார் சொல்றீங்க? ஒருத்தர் மட்டும் கலைச்சிப் போட இது என்ன சீட்டுக்கட்டா சார்? காதல் ம்யூச்சுவலா இருக்கப் போயித்தான இங்க வந்து நின்னுட்டிருக்காங்க? ரெண்டு பேருக்குமே இந்தக் காதல்ல சம பங்கு இருக்குது சார். ”

மாலாவின் அம்மா குறுக்கே புகுந்தார். “எங்க பொண்ணை நாங்க அப்பிடி வளக்கலைங்க. அது அப்பிடிப்பட்ட பொண்ணு இல்லை”

இது வரை அமைதியாக இருந்த அப்பா இப்போது வாயைத் திறந்தார். “அப்ப நாங்கதான் அப்பிடி வளர்த்துருக்கோம்னு சொல்றீங்களா? எங்க வீட்டுலயும் ஒரு பொண்ணு இருக்குதுங்க. அதுவும் பள்ளிக்கோடத்துக்கும் காலேசுக்கும் போயிட்டுத்தான் வந்திச்சி. நாங்க வீட்டுல பாத்து வெச்ச மாப்பிள்ளையத்தான் கட்டிக்கிட்டு இந்தா சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கு. அது ஒண்ணும் காதல் கத்திரிக்கான்னு உங்க வீட்டுப் பொண்ணு மாதிரி வந்து நிக்கலை.”

(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே

1 comment:

நாடோடி இலக்கியன் said...

செம்ம ஃப்ளோ தினேஷ்... சூப்பர்.. 20 மற்றும் 21 சேர்த்து இப்போதான் படிச்சேன். சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க...கீப் இட் அப்...