Thursday, August 22, 2013

ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 6


வழியிலேயே ஃபோன் செய்து சொல்லியிருந்ததால் கல்லூரி பிரின்ஸ்பல் தயாராக இருந்தார். கோல்ட் ஃப்ரேம் போட்ட கண்ணாடி. வெள்ளை சட்டை கருப்பு பேண்டுடன் நீல நிற டை அணிந்திருந்தார். கோட் உள்ளே இருக்கலாம். எங்காவது ப்ரொஃபசர் வேலை பார்த்து ரிட்டயரானவராக இருக்கலாம். தலையில் இருந்த நரை அவருக்கு வயது அறுபதுக்கும் மேல் இருக்கலாம் என்று காட்டியது. 

இருவரையும் வாசலிலேயே சந்தித்த பிரிஸ்பல் பரஸ்பரம் அறிமுகம் முடிந்த பின்னர், 

“வாங்க சார், நாம லாக்கர் ரூமுக்குப் போயிடலாம்”

கல்லூரி அலுவலகத்துக்கு அருகிலேயே கல்லூரியின் செல்வத்தைப் பறை சாற்றும் வகையில் பிரம்மாண்டமாக நின்று கொண்டிருந்தது லைப்ரரி. அதன் அடித்தளத்தில் தான் லாக்கர் ரூம் இருந்தது. வகுப்பு வாரியாக, பாலின வாரியாக பிரிக்கப்பட்டு அருமையாகப் பராமரிக்கப்பட்டு இருந்தது லாக்கர் ரூம். ரூம் வாசலில் ஒரு செக்யூரிட்டி கார்ட் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருந்தார். பிரின்ஸியைப் பார்த்ததும் எழுந்து ஒரு சல்யூட் வைத்தார். மேஜை மேல் இருந்த சாவிக் கொத்து ஒன்றை எடுத்து நீட்டினார். 

பெற்றுக் கொண்ட பிரின்ஸி. “எங்க காலேஜ்ல செல்ஃபோன் க்ளாஸ்க்கு எடுத்துட்டுப் போகக் கூடாது சார். ஆனா காலேஜ் கேம்பஸ்ல யூஸ் பண்ண தடை எதுவும் இல்ல. செல்ஃபோன் மாதிரி காஸ்ட்லி ஐட்டம்ஸ், கால்குலேட்டர், லேப் கோட் மாதிரி ஐட்டம்ஸ் எல்லாம் காலேஜ்லயே பத்திரமா வச்சிக்கிறதுக்காக கட்டினதுதான் சார் இந்த லாக்கர்ஸ். ஒவ்வொரு ஸ்டூடண்டுக்கும் ஒவ்வொரு லாக்கர். பணம் அதிகம் கட்டுற ஸ்டூடன்ஸ்க்கு பெரிய லாக்கரும் உண்டு.”

பேசிக்கொண்டே `1437 லாக்கர் அருகில் வந்து நின்றார்கள். சாவிக் கொத்துக்குத் தேவையே இல்லாமல், லாக்கர் திறந்தே கிடந்தது. உள்ளே சுத்தமாகத் துடைக்கப்பட்டு இருந்தது. 

சிவாவும் அருணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அருண் தரையை பார்வையால் ஸ்கேன் செய்தான். மூலையில் குனிந்து எதையோ எடுத்தான். ஒரு சிறிய சாவி. அதை பிரின்ஸிபாலின் முன்னால் நீட்டினான். “இதுதான் லாக்கர் சாவியா பாருங்க”

வாங்குவதற்காக கையை நீட்டிய பிரின்ஸியிடம், “கை ரேகை இருக்கலாம் சார். அப்பிடியே பாருங்க” 

குனிந்து சாவியைப் பார்த்துவிட்டு, ”இதுதான் சார்.”

சிவா அந்த சாவியை வைத்து சிவகுருவின் லாக்கரைத் மூடிப் பார்த்தான். “இதேதான்”. சிவா தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுத்த பாலித்தீன் கவரில் சாவியைப் போட்டு சிவாவின் கையிலேயே கொடுத்தான். 

“வெளிய ஒரு செக்யூரிட்டி உக்காந்திருந்தாரே, கம்ப்யூட்டரோட அவர் வேலை என்ன?”

“லாக்கர் ரூமுக்குள்ள வர்ற ஸ்டூடண்ட்ஸ் ஐடி கார்ட் செக் பண்ணுவாரு. யாராச்சும் சாவி தொலைச்சிட்டாங்கன்னா, சிஸ்டம்ல எண்ட்ரி போட்டுட்டு திறந்து விடுவாரு. வேற லாக் மாத்த ஒர்க் ஆர்டர் போயிடும். சார்ஜ் பையனோட ஃபீஸ்ல சேர்ந்துடும்.”

“ஐடி கார்ட் வெரிஃபிக்கேஷன் எப்பிடி மேனுவலா செக் பண்றதா?”

“உள்ள வர்ற ஸ்டூடண்ட்ஸ் ஐடி கார்ட் ஸ்கேன் பண்ணுவாங்க, ஸிஸ்டம்ல அவங்க டீட்டெயில்ஸ் வரும். எக்ஸ்பயர்ட் கார்ட், இன்வேலிட் கார்ட்னா ரெட் அலர்ட் வரும். அந்த ஸ்டூடண்ட்டை டெயில் கேட் பண்ண விடமாட்டாரு. ஸ்டூடண்ட்ஸ் ஃபீஸ் கட்டலைன்னா இந்த மாதிரி அக்ஸஸ் எல்லாம் ரிவோக் பண்ணிடுவோம்.”

“ஓ. அப்போ எவ்ரி டைம் உள்ள வரும்போதும் ஒரு எண்ட்ரி விழும். இல்லையா? அந்த எண்ட்ரியை லாக்(log) பண்ற மாதிரி இருக்கா உங்க சாஃப்ட்வேர்?”

“ஹ்ம்ம். எனக்குத் தெரியலையே சார். ஒரு நிமிஷம் இருங்க” 

மூவரும் வெளியே வந்தனர். செக்யூரிட்டி மறுபடி எழுந்து சல்யூட் வைத்தார். அவரின் சட்டையில் குத்தியிருந்த பெயரைப் பார்த்துவிட்டு, “சண்முகம், யார் யாரெல்லாம் உள்ள வர்றாங்கங்கிற லிஸ்ட் கம்ப்யூட்டர்ல ஸ்டோர் ஆவுமா?”

தலையைச் சொரிந்தார். “தெரியலையே சார். ஒவ்வொருக்கா ஸ்கேன் பண்ணும்போது ஸ்க்ரீன்ல டீட்டெயில்ஸ் விழும் சார். ரெட் அலர்ட் வந்தா மட்டும் தான் சார் நோட்டிஸ் பண்ணுவேன். மத்தபடி ஸ்டோர் ஆவுமான்னு தெரியலையே?”

அருண் பிரின்ஸியைப் பார்த்தான். “யாருக்குத் தெரியும் பிரின்ஸிபல் சார்?”

செக்யூரிட்டி “சார், சிஸ்டம்ல ஏதாச்சும் பிரச்சனைன்னா கால் பண்ணச் சொல்லி ஒரு நம்பர் குடுத்துருக்காங்க சார். அவங்களுக்கு ஃபோன் பண்ணிக் கேட்டாத் தெரியலாம்”

*****************************************************************
பிரின்ஸியின் அறையில் உட்கார்ந்திருந்தார்கள். அகலமான அறை. மூலையில் மேஜை போட்டு முதுக்குப் பின்னால் சுவற்றில் ஏசி போட்டு வைத்திருந்தார்கள். மேஜையின் மேல் ஒரு மூலையில் ஃபைல்கள் சிலவும் இன்னொரு மூலையில் ஒரு ஆப்பிள் ஐமேக்கும் உட்கார்ந்திருந்தன. நடு நாயகமாக இரண்டு தொலை பேசிகள். பக்கத்திலேயே பிரின்ஸியில் செல்ஃபோன். தினமும் துடைப்பதால் மேஜை பள பள என்றிருந்தது. ஒரு பக்கம் கண்ணாடி போட்ட ஷெல்ஃபில் கல்லூரி மாணவர்கள் வென்று வந்த ஷீல்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு பக்கம் ஒரு 40 இன்ச் ஃப்ளாட் ஸ்க்ரீன் டிவி. பியூன் வைத்துவிட்டுப் போன ஜூஸை சன்னமாக உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். 

“மே ஐ கமின் சார்?” வாசலில் சத்தம் கேட்டதும் அருணும் சிவாவும் திரும்பினார்கள். தோளில் தொங்கிய லேப்டாப்புடன் ஆக்ஸிஸ் செக்யூரிட்டி சிஸ்டம் என்ற ப்ளூ கோடு போட்ட வெள்ளை சட்டையும் பிரவுன் பேண்டும் அணிந்த அந்த இளைஞன் நின்றிருந்தான். 

“உள்ள வாங்க”

“சார் என் பேர் திவாகர். ஆக்ஸிஸ்ல இருந்து வர்றேன். ஆக்ஸஸ் லாக் எடுக்கணும்னு சொன்னீங்க. அதான் வந்திருக்கேன்”

“உட்காருங்க திவாகர்”

“தேங்க்யூ சார். சார் நான் என்னோட லேப்டாப் செட் அப் பண்ணனும், 5, 10 மினிட்ஸ் ஆவும். நீங்க உங்க வேலை எதாச்சும் இருந்தா பாருங்க சார். ரெடி ஆனதும் சொல்றேன்”

தன் லேப்டாப்பை 40 இன்ச் டிவி ஸ்க்ரீனுடன் இணைத்து தான் ஓப்பன் செய்த லாகை அனைவருக்கும் தெரியுமாறு செய்தான் திவாகர். 

“இதுதான் சார் நீங்க கேட்ட லாக்கர் ரூம்ல நேத்து ஈவினிங்ல இருந்து அக்ஸஸ் ஆன எண்ட்ரீஸ். என்ன தேடணும்னு சொன்னீங்கன்னா ஈஸியா இருக்கும் சார்”

“சிவகுருவோட ஐடி கார்ட் எப்ப அக்ஸஸ் செஞ்சிருக்குதுன்னு சொல்ல முடியுமா திவாகர்?” அருண் கேட்டான்.

“ஸ்டூடண்ட் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் என்ன சார்?”

அருண் பிரின்ஸியைப் பார்க்க,  லாக்கர் நம்பர் தான் சார் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பரும். 1437”

“1437 இன்னைக்குக் காலைல 11 மணிக்கு எண்ட்ரியாகியிருக்கு சார்”

“எக்ஸாக்ட் டைம் சொல்லுங்க”

“11:04 AM"

"அந்த டைம் அரவுண்டா, மே பி 10:30ல இருந்து 11:30 வரைக்கும் யார் எல்லாம் லாக்கர் ரூமை அக்ஸஸ் செஞ்சிருக்காங்கங்கிற லிஸ்ட் எடுத்துக் குடுக்க முடியுமா?”

“முடியும் சார்.”

“சிவா நீங்க அந்த லிஸ்ட்ல இருக்கிற ஸ்டூடண்ட்ஸ் கிட்ட எல்லாம் விசாரிங்க. யாராவது புது ஆளை உள்ள பாத்திருக்கலாம்.”

“குட் ஐடியா சார்”

“பிரின்ஸிபல் சார். உங்க காலேஜ்ல சிசிடிவி எங்கயாச்சும் இருக்கா?”

“எல்லா ஹால்வேயிலயும் இருக்குது மிஸ்டர் அருண்”

“குட். சிவா நீங்க அந்த ரெக்கார்டிங்க்ஸயும் வாங்கி அந்த ஸ்டூடண்ட்ஸ்க்குப் போட்டுக் காட்டி நம்ம அக்யூஸ்ட் எங்கயாச்சும் சிக்குறானான்னும் பாருங்க. நான் ஆஃபிஸ்க்குப் போயிடுறேன்”

“நீங்க ஜீப் எடுத்துட்டுப் போய் அங்க யாராவது டிரைவர்கிட்ட குடுத்து விடுங்க சார். நான் என்கொயரி முடிச்சிட்டு வர்றேன்”

“சூப்பர் சிவா. நாம ஆஃபிஸ்ல மீட் பண்ணலாம்”

***********************************************************

ஈரோடு காவல் நிலையம். இன்ஸ்பெக்டர் தொப்பியைக் கழற்றி மேஜைமேல் விசிறியபடி வந்து உட்கார்ந்தார். 

“ஏய் ஃபேனைப் போடு”

கான்ஸ்டபிள் ஓடிச் சென்று ஃபேனை ஆன் செய்தார். கர்ச்சீப்பை எடுத்து கழுத்தை அழுந்தத் துடைத்துக் கொண்ட இன்ஸ்பெக்டர், சட்டை மேல் பட்டன் மூன்றை கழட்டி சட்டையை விலக்கி காற்றை வாங்கிக் கொண்டார். “என்ன எளவு இது. இந்த எளவு ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கியாந்த நேரம் என் தாலியருக்காய்ங்க. எளவு எங்கன பாத்தாலும் வெட்டுக் குத்துன்னு ஓடிட்டு இருக்கு. ஈரோட்டுக்காரய்ங்க காசத் தான் ஏமாந்து போவாய்ங்கன்னா இப்பிடி வெட்டுக் குத்துன்னா அடிச்சிக்குவாய்ங்க.”

“மதுர அளவுக்கு இல்லை சார்”

“சரிதான். இந்த எளவு வேண்டாம்னுதான் மதுரையில இருந்து ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்தேன். இங்கயும் இப்பிடியா? எல்லாம் என் ராசி”

ரைட்டர் வந்து ஒரு ஃபைலை மேஜை மேல் வைத்தார். “சார் அந்த நமச்சிவாயம் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருக்கு சார்” 

“எந்த நமச்சிவாயம்வே”

“அதான் சார் அருவா வெட்டுக் கேஸ்.”

“ஓ அதுவா” ஃபைலை எடுத்து திறந்து மேலோட்டமாக மேய்ந்துவிட்டு, “வழக்கமான கதையத்தான் எழுதியிருக்காய்ங்க. ஆமா பக்கத்துல விசாரிச்சிங்களா? யாரும் எதிரி, பகை ஏதும் துப்புக் கிடைச்சிதா?”

ஹெட் கான்ஸ்டபிள் தலையைச் சொறிந்த வாறே, “இல்லிங் சார். இந்தாள் எந்தத் தப்புத் தண்டாவுக்கும் போகாத ஆளாம். எதிரின்னு யாரும் இருக்க வாய்ப்பே இல்லைன்னு சொல்றாங்க. வேற யாரையோ வெட்ட வந்து இவனைத் தப்பா வெட்டியிருப்பாங்கன்னு நினைக்கிறேன் சார்”

பக்கத்தில் இருந்த எவிடென்ஸ் பையைத் திறந்து மேஜை மேல் கொட்டினார். உள்ளே இருந்து ஒரு செல்ஃபோன், ஒரு கர்ச்சீஃப், கொஞ்சம் சில்லரை, சில நூறு ரூபாய்த் தாள்கள், கொரியர் ரசீது விழுந்தன. 

சட்டென நினைவுக்கு வந்தவராக, ஏட்டு, “சார், இந்தாள் ஒரு கைப்பை வச்சிட்டு இருப்பாராம். ஏதோ நகைக்கடை பையாம். அதைக் காணல சார்”

“அதுல பணம் எதாச்சும் வச்சிருப்பானா?”

“இல்லிங் சார். பணமெல்லாம் அண்ட்ராயர்லதான். கொஞ்ச நாளாவே அதை ரொம்ப பத்திரப்படுத்தி வச்சிட்டிருந்தானாம். இவனுக்கு ட்ரைசைக்கிள் ஓட்டுற பையன் சொன்னான்.” 

“ம்ம்ம்ம்”

செல்ஃபோனை எடுத்துப் பார்த்தார். நோக்கியா 1100 ஃபோன். பேட்டரியில் இரண்டு கோடுகள் இருந்தது. 3 மிஸ்ட் கால் என்றிருந்தது. பட்டனை அழுத்திப் பார்த்தார். wife என்ற நம்பரிலிருந்து இரண்டு கால். 98434 28738 நம்பரிலிருந்து ஒரு கால். கால் வந்த நேரத்தைப் பார்த்தார். எதோ பொறிதட்டியது போல ஃபைலைத் திறந்து பார்த்தார். டைம் ஆஃப் டெத்தும் அந்த கால் வந்த நம்பரும் ஒரே நேரமாக இருந்தது. 

“யோவ். இது நீர் சொன்ன மாதிரி வேற எவனையோ வெட்ட வந்து இவனைப் போட்ட மாதிரி தெரியலை. இவனுக்காகவே வந்திருக்காய்ங்க. இவன் தானான்னு தெரிஞ்சிக்க கால் பண்ணியிருக்காய்ங்க பாருங்க. இந்த நம்பருக்குக் கூப்புட்டுப் பாருங்க”

ஹெட்கான்ஸ்டபிள் தன் செல்ஃபோனில் அந்த நம்பரை அடித்து அழைத்துப் பார்த்தார். ‘திஸ் நம்பர் இஸ் கரெண்ட்லி ஸ்விட்ச்ட் ஆஃப்’. “ஸ்விட்ச்ட் ஆஃப்னு வருது சார்”. 

“ஃபோன் கம்பெனியில குடுத்து யார் பேர்ல வாங்கியிருக்குன்னு விசாரிங்க. முக்காவாசி வேற எவன் பேர்லயாவதுதான் இருக்கும். இருந்தாலும் விசாரிச்சிருங்க”

“சரிங் சார்”

**************************************************************

ஜீப் ஓட்டிச் செல்லும் வழியெங்கும் அருணுக்கு இரண்டு கேஸ்களைப் பற்றியும் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. சதாசிவம், டி.டி.ஆர். சூதாடி. கடனில் மூழ்கிக் கொண்டிருப்பவர். கையிருப்பு எதுவுமில்லாமல் திடீரென்று வாலண்டரி ரிட்டயர்மெண்ட் தருகிறார். சந்தேகப்பட்ட பையன் அவர் பையில் எதோ ஃபைனான்ஸியல் டாக்குமெண்ட்ஸைப் பார்க்கிறான். அடுத்தநாள் ரயிலில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். சிவகுரு காலேஜ் ஸ்டூடண்ட். அவனும் காதலியிடம் கோடிக்கணக்கில் பணம் வரும் என்று சொல்கிறான். அதற்கான விசயம் தனது லாக்கரில் இருப்பதாகச் சொல்லிய அன்றே கழுத்தறுபட்டு கொலைசெய்யப்பட்டிருக்கிறான். இரண்டு பேரும் வைத்திருந்ததாகச் சொல்லப்பட்ட எதோ இப்போது இல்லை. ஆக, கொலை அந்த விசயத்திற்காக நடந்திருக்கலாம். இரண்டு கொலைகளுக்கும் எதோ தொடர்பிருக்க வேண்டும். அல்லது வெறும் கோ -இன்சிடெண்டாகக் கூட இருக்கலாம். ஒரு வேளை இரண்டு கொலைக்கும் தொடர்பிருந்தால், இரண்டையும் இணைக்கும் இழை எதாவது ஒன்றைப் பிடிக்க வேண்டும். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கிறது. சிவா கல்லூரி மாணவர்களிடம் நடத்தும் என்கொயரியில் ஏதாவது ஃப்ரூட்ஃபுல்லாகக் கிடைத்தால் தான் உண்டு. 

அலுவலகத்தில் நுழைந்ததும் கார்த்தியிடம் நடந்ததை ரிப்போர்ட் செய்துவிட்டு டேபிள் முன்னல் சென்று அமர்ந்தான். இப்போது அருணுக்கு கமிஷனர் ஆஃபிஸிலேயே ஒரு டேபிள் கொடுத்துவிட்டார்கள். டேபிளின் மேல் சிவகுரு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இருந்தது. எடுத்துப் பார்த்தான். ஓரமாக வைத்துவிட்டு கிரைம் ஸ்பாட் ஃபோட்டோஸ் என்றிருந்த கவரைப் பிரித்து புகைப்படங்களைப் பார்த்தான். சுரத்தில்லாமல் பார்த்துக்கொண்டே வந்தவன் சிவகுரு சாகும் முன் எழுதியிருந்த புகைப்படம் பார்த்ததும் நிறுத்தினான். ஃபோட்டோவைக் கையில் எடுத்துக்கொண்டு கம்ப்யூட்டர் ரூமுக்குச் சென்றான். உள்ளே இருந்தவர் அருணைப் பார்த்ததும் எழுந்து சல்யூட் வைத்தார். “ரமேஷ், இந்த பிக்சரை என்லார்ஜ் பண்ணிப் பாக்கணுமே” 

“எந்தக் கேஸ் சார்?”

“சிவகுரு மர்டர் கேஸ். இன்னைக்கு காலைல ஆச்சே. அதுதான்”

“சாஃப்ட் காப்பியே இருக்கு சார். ஒரு நிமிஷம்”

கம்ப்யூட்டரில் எங்கெங்கோ போய் அந்த புகைப்படங்களை எடுத்தார். வரிசையாகப் பார்த்துக்கொண்டே வந்து குறிப்பிட்ட ஃபோட்டோ வந்ததும் நிறுத்தினார். ஜூம் செய்தார். 

“ரெண்டாவது இருக்கிற Aவை ஜூம் பண்ணுங்க.” 

அந்த ஏயில் இடது பக்கம் இருக்கும் கால் நேராக இல்லாமல் லேசாக இழுத்து விட்டதுபோல் தெரிந்தது. “இன்னொரு மானிட்டர்ல ரெண்டாவது ஏயை ஜூம் பண்ணி வைங்க” பெரிது படுத்திப் பார்க்கும் போது இரண்டு ஏக்களுக்கும் பெருத்த வித்தியாசம் தெரிந்தது.

“சார் ஃபர்ஸ்ட் ஏ, திடீர்னு பாத்தா ஏ மாதிரி தெரிஞ்சாலும், இப்பிடி மேக்னிஃபை பண்ணிப் பார்க்கும்போது நம்பர் 4 மாதிரி இருக்கு.”

“கரெக்ட் ரமேஷ். எனக்கும் அதுதான் தோணுது. இந்த கேஸ்ல ஒரு செல்ஃபோன் கிடைச்சதுல? அது எங்க இருக்கு?”

“எவிடென்ஸ் ரூம்ல இருக்கும் சார்”

“தேங்க்யூ ரமேஷ்”

எவிடென்ஸ் ரூமில் இருந்து வாங்கிக் கொண்டு வந்த ஃபோனை ஆன் செய்து கொண்டே சீட்டுக்குத் திரும்பினான். அட்ரஸ் புக்கில் எஸ் 4 என்ற எண்ணைப் பார்த்த நினைவு இருந்ததால் அட்ரஸ் புக்கில் தேடினான். எஸ் 3 தான் இருந்தது. ஒரு நிமிடம் யோசித்துவிட்டு அந்த எண்ணை அழைத்தான். 

எதிர்முனையில் ரிங் போனது.

“அலோ”

“ஹலோ. சென்னை போலிஸ் கமிஷனர் ஆஃபிஸ்ல இருந்து பேசறோம். அங்க யாரு பேசுறது?”

“இது ஈரோடு போலிஸ் ஸ்டேஷன். இன்ஸ்பெக்டர் பரமசிவம் தான் பேசுறேன்”

“ஈரோடு போலிஸ் ஸ்டேஷனா? இது உங்க ஃபோனா?”

“இல்ல சார். ஒரு மர்டர் விக்டிம் ஃபோன். இந்த நம்பர் உங்கக்கிட்ட எப்பிடி?”

(தொடரும்) 

2 comments:

vasu balaji said...

top notch:). great

திவாண்ணா said...

. டைம் ஆஃப் டெத்தும் அந்த கால் வந்த நம்பரும் ஒரே நேரமாக இருந்தது//
Time of death is almost always approx unless there is some other factor to tie up with. medically you cant pinpoint the time.