Friday, March 7, 2014

ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 10

கணேசன் சொல்லச் சொல்ல சொக்கலிங்கத்தின் முகம் கறுத்தது.

ஒன்றரை மாதமாக கோமாவில் இருக்கிறான். முழித்ததும் மனைவியைக் கூடக் கேட்காமல் சொக்கலிங்கத்தின் பெயர் சொல்லி கேட்கிறான். இவனை எப்படி நம்பாமல் இருப்பது?

“அவன் பேர் என்னன்னு நினைவு இருக்கா?”

“இருக்குதுண்ணே, ரவி”

“எந்தக் கோச்?”

“அண்ணே?” புரியாமல் முழித்தான் கணேசன்.

“ட்ரெயின்ல எந்தப் பொட்டியில வந்தான், எஸ்1 எஸ்2 இப்பிடி”

“ஓ, அதுவாண்ணே, எஸ்4ண்ணே. சீட் நம்பர் 64. எனக்குப் பக்கத்து சீட் தாண்ணே. அந்த விவரம் சாகுற வரைக்கும் மறக்காதுண்ணே”

“பரவாயில்லடா, தலையில அடிபட்டு கோமாவுல கிடந்தாலும் இதை எல்லாம் நினைவுல வச்சிருக்க. உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்டா”

“என்னண்ணே?”

“நீ காணாமப் போயிட்டன்னதும், பாண்ட் பேப்பரை எல்லாம் எடுத்துக்கிட்டு நீதான் ஓடிப் போயிட்டியோன்னு நினைச்சி உன் பொண்டாட்டியை ரொம்பக் கொடுமைப் படுத்திட்டேண்டா. என்னை மன்னிச்சிடுடா”

“அய்யோ அண்ணே என்னண்ணே பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு. உங்க நிலமையில நான் இருந்தாலும் அப்பிடித்தாண்ணே நினைச்சிருப்பேன். காசு ஒர்ருவா ரெண்டுர்ரூவாயா? ஆறு கோடியிலண்ணே. அப்பிடி நினைக்கிறதுல என்னண்ணே தப்பு? இப்ப எம்பொண்டாட்டி எங்கண்ணே இருக்கா?”

“தெரியலைடா, ஆனா தேடிக் கண்டுபிடிச்சி இங்கக் கூட்டிட்டு வரச் சொல்றேன். இப்ப நான் அந்த ரவியைத் தேடப் போகோணும். போலீஸ் வருவாங்க. வந்து கேட்டா ரயில்ல இருந்து தவறி விழுந்துட்டன்னு சொல்லிடு. நம்ம பேப்பர் பத்தியோ அந்த ரவியைப் பத்தியோ மூச்சு விடவேண்டாம். என்ன?”

“சரிண்ணே” கணேசன் தொடர்ந்து பேசிய களைப்பில் கண்ணை மூடினான்.

சொக்கலிங்கம் கண்ணைக் காட்டியதும் வைத்தி செல்ஃபோனில் ஸ்டேஷன் நம்பரை அழைத்தான்.

************************************************

சுமோ சென்னை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. சொக்கலிங்கம் ஃபோனில் யாரிடமோ படபடத்துக் கொண்டிருந்தார். “இந்தா பாரு, நான் இப்ப சென்னைக்கு வந்துட்டே இருக்கேன். நான் வந்து ஆஃபிஸ்ல நுழையிறதுக்குள்ள அந்த ரவியோட அட்ரஸ் என் டேபிள்ல இருக்கணும். யாரைப் பிடிப்பியோ, எவன மெரட்டுவியோ தெரியாது. எனக்கு அட்ரஸ் வேணும். ஒன்னால முடியுமா முடியாதா?”

“....”

“சரி. ஒன்னைய நம்புறேன்”

போனை வைத்துவிட்டு, வைத்தியைப் பார்த்து, “மணிகண்டண்ட்ட சொல்லிட்டேண்டா. அவன் எப்பிடியும் ரயில்வேய்ஸ்ல ரிசர்வேஷன் ஃபார்ம் பாத்து ரவியோட அட்ரஸ் எடுத்துக் குடுத்துருவான். அந்த ரவி மட்டும் கையில கிடைக்கட்டும், அவன் கொட்டைய நசுக்கிடுறேன். என்ன நினைச்சிட்டு இருக்கான்? யார் கையில வெளையாடுறோம்னு தெரிய வேண்டாம்?”

“கவலைப் படாதண்ணே, கண்டிப்பா அவனைப் பிடிச்சிரலாம்”

*****************************************************

சப்வேயில் வாங்கி வந்திருந்த ஃபுட் லாங் வெஜிட்டேரியன் சப் சாண்ட்விட்ச்சைக் கடித்துக் கொண்டே டிவியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த அருணின் செல்ஃபோன் ஒலித்தது.

“ம்ம். சொல்லுங்க சிவா”

“சார் நீங்க சொன்ன மாதிரி மீனாகிட்ட விசாரிச்சேன். ஒன் அண்ட் எ ஹாஃப் மாசத்துக்கு முன்னாடி ஏதோ தப்பு செஞ்சதுக்காக சிவகுருவை காலேஜ்ல இருந்து ஒரு வாரம் சஸ்பெண்ட் செஞ்சிருக்காங்க. லெட்டர் வீட்டுக்குப் போறதுக்குள்ள போய் அதைப் பிடிக்கணும்னு அன்னைக்கு நைட்டே கிளம்பி ஊருக்குப் போயிருக்கான் சிவா. மீனாவுக்கு என்ன டேட்னு கன்ஃபர்ம்டா தெரியலை. நான் காலேஜ் ரெக்கார்ட்ஸ்ல பாத்து கன்ஃபர்ம் செஞ்சிக்கிட்டேன். நமச்சிவாயம் சென்னையில இருந்து திரும்பிப் போன அதே நாள், சதாசிவம் டி.டி.ஈயா போன அதே நாள். ஸோ மூணு பேரும் ஒரே நாள்ல ஒரே ட்ரெயின்ல பிரயாணம் செஞ்சிருக்காங்க சார்.”

“குட். சோ கோ இன்சிடன்ஸ், வெறும் இன்சிடெண்டா ஆகியிருக்கிறதுக்கான வாய்ப்பு இருக்குன்னு சொல்றீங்க?”

“எஸ் சார். ஆனா ஒரே ஒரு பிராப்ளம் என்னண்ணா, நம்ம சதாசிவம் எப்பவும் அன் ரிசர்வ்ட்ல போறவர். திடீர் ட்ராவல்ங்கிறதால சிவகுருவுக்கும் டிக்கெட் கிடைக்காம அவனும் அன்ரிசர்வ்ட்ல போனதா மீனா சொல்றா. பட் சதாசிவம், ரிசர்வ்ட் கோச்க்கு டி.டி.ஈ. அவங்க எப்பிடி மீட் பண்ணியிருப்பாங்கன்னு டவுட்டா இருக்கு”

“சிம்பிள் சிவா. நீங்க அன்ரிசர்வ்ட் டிக்கெட் எடுத்து டி.டி.இ கிட்ட காசு குடுத்து ரிசர்வ்ட் டிக்கெட் வாங்கிப் போனதே இல்லையா?”

“ம்ம். அப்போ சதாசிவம் சிவகுருவுக்கும், நமச்சிவாயத்துக்கும் ரிசர்வ்ட் கோச்ல சீட் குடுத்துருக்கலாம்னு சொல்றீங்களா?”

“எக்ஸாக்ட்லி”

“பாஸிபிள் சார். ஆனா அதைக் கன்ஃபர்ம் பண்ண இவங்க மூணு பேருமே உயிரோட இல்லையே சார்?”

“நோ பிராப்ளம் சிவா. அந்த டேட்ல எஸ்-4 கோச்சோட ரிசர்வேஷன் சார்ட் வாங்கிட்டீங்களா?”

“இன்னும் இல்லை சார். காலைல முதல் வேலையா செஞ்சிடுறேன்”

“தென் அந்த டேட்ல ட்ரெயின் ஆக்ஸிடெண்ட் எதுவும் ரிக்கார்ட் ஆகியிருக்கான்னு விசாரிச்சீங்களா?”

“ப்ளூ மவுண்ட்டென் ரூட்ல இருக்கிற எல்லா ஸ்டேஷன்ஸ்க்கும் தகவல் குடுத்துருக்கேன் சார். ரயில்வே போலீஸ்க்கும் நோட்டிஃபிக்கேஷன் அனுப்பியிருக்கேன். நாளைக்குத் தெரிஞ்சிரும்”

“குட். நாளைக்குக் காலைல ஆஃபிஸ்ல மீட் பண்ணுவோம்”

“ஷ்யூர் சார் குட் நைட்”

ஃபோனை அணைத்துவிட்டு சாண்ட்விட்ச்சில் கவனத்தைத் திருப்பினான். இதுவரை இருட்டு அறையில் கருப்புப் பூனையைத் தேடிக் கொண்டிருந்ததுபோல இருந்த கேஸில் நாளை ஒரு டைரக்‌ஷன் கிடைக்கும் என்ற நம்பிக்கை அருணுக்கு வந்தது.

*************************************************
மக்கள் முன்னேற்றக் கழக வட்ட அலுவலகம். மேஜை மேல் வைத்த டீ ஆறிப்போயிருந்தது. அடிக்காத செல்ஃபோனை வெறித்தவாறு அமர்ந்திருந்தார் சொக்கலிங்கம். “என்னடா இந்த நீலகண்டன் இன்னும் கூப்புட மாட்டேங்கிறான்?”

வாசலில் நிழலாடியது. “இந்தா நேர்லயே வந்துட்டானே”

“வணக்கம் சார். நல்லா இருக்கீங்களா?” சிரித்த முகத்துடன் உள்ளே நுழைந்தான் நீலகண்டன். சோடாபுட்டி கண்ணாடி அணிந்திருந்தான். லேசாகச் சாயம் போன வெளிர் நீல வண்ண சட்டையும் கறுப்புப் பேண்டும் அணிந்திருந்தான். நெற்றியில் கீற்றாக திருநீர் வைத்திருந்தான். கையில ஒரு பேப்பரைச் சுருட்டி வைத்திருந்தான்.

“நல்லா இருக்கிறதெல்லாம் இருக்கட்டும்யா. நான் கேட்ட விசயம் என்னாச்சி?”

“இந்தா கையோட கொண்டாந்திருக்கேனே சார். பேரு அட்ரஸ் எல்லாம் இருக்கு. கொஞ்சம் கஷ்டமாயிடுச்சி சார் இந்த விவரம் தேடிக் கண்டுபிடிக்க” தலையச் சொறிந்தான்.

சொக்கலிங்கம் பேப்பரை வாங்கிக் கொண்டு வைத்தியைப் பார்க்க, வைத்தி நீலகண்டனின் தோளில் கை போட்டு திருப்பிக் கொண்டு வாசலை நோக்கி நடந்தான். நீலகண்டன் நின்று திரும்பிப் பார்த்தான், “சரி சார், எதுக்கு இதைக் கேட்டீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“தெரிஞ்சிக்கக் கூடாது” சொக்கலிங்கத்தின் குரலில் கடுமை இருந்தது.

“இல்ல போலீஸ்ல இருந்து யாரோ வந்து இதே தேதிக்கு எஸ்.4 கோச்சோட ரிசர்வேஷன் சார்ட் கேட்டுட்டு இருந்தாங்க அதான் கேட்டேன்”

சொக்கலிங்கத்தின் முகத்தில் எந்த உணர்ச்சி மாற்றமும் இல்லை. ஆனால் கண்களில் ஒரு ஒளி வந்து மறைந்தது. “அதுக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை. நீ வைத்தி குடுக்குற காசை வாங்கிட்டு நடையைக் கட்டு”

அவனை அனுப்பி விட்டுத் திரும்பி வந்த வைத்தியைப் பார்த்து சொக்கலிங்கம் குரலை உயர்த்தினார். “என்னடா நடக்குது இங்க. போலீஸ் எதுக்கு மோப்பம் புடிச்சிட்டு வர்றாய்ங்க? கணேசன் எதுவும் உளறிட்டானா?”

“அப்பிடியெல்லாம் இருக்காதுண்ணே. போலீஸ் வேற எதுக்காகவாது தேடியிருக்கும். கணேசன் அப்பிடிப்பட்டவன் இல்லை”

“ம்ம்.. நம்புவோம். எதுக்கும் கமிஷனர் ஆஃபிஸ் பக்கம் ஒரு காதைப் போட்டு வையி”

“சரிண்ணே”

பேப்பரை மேஜை மீது போட்டான். ”அந்த ரவிங்கிறவன் அட்ரஸ் இதுல இருக்கு. நம்ம பயக ரெண்டு பேரை அனுப்பி விசாரிக்க சொல்லு. கண்டிப்பா அவன் இங்க இப்ப இருக்க மாட்டான். ஆனா வீட்டுல இருக்கிறவிங்க பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட விசாரிச்சி அவன் எங்க வேலை பாக்குறான், சொந்த ஊர் எது, முடிஞ்சா அவன் சொந்த ஊர் அட்ரஸ் எல்லாம் விசாரிச்சிட்டு வரச் சொல்லு. சாயந்திரத்துக்குள்ள எனக்கு எல்லா விவரமும் வரணும். சரியா?”

“சரிண்ணே.” பேப்பரை எடுத்துக் கொண்டு அகன்றான்.

*************************************************
கமிஷனர் அலுவலகம். ரிசர்வேஷன் சார்ட் மேஜை மீது கிடந்தது.

சிவா ப்ரீஃப் செய்து கொண்டிருந்தார். “எஸ்-4 கோச்ல ரவிங்கிற பேர் வர்ற பேசஞ்சர்ஸ் ரெண்டு பேர் அன்னைக்கு ட்ராவல் பண்ணியிருக்காங்க சார். ரவிக்குமார் 14, ரவிச்சந்திரன் 64. ரெண்டு பேருமே ஆன்லைன்ல ரிசர்வ் பண்ணியிருக்காங்க. ரவிச்சந்திரன் குடுத்த ஃபோன் நம்பர் நம்ம டிடீஇ ஃபோன்ல இருந்த எஸ்-4 நம்பர். அட்ரஸ்ல விசாரிக்க ஆள் அனுப்பியிருக்கேன்.”

அருண் இடைமறித்தான். “யூஸ் இல்ல சிவா. அவன் கண்டிப்பா அங்க இருக்க மாட்டான். ஆனா அவன் கிரெடிட் கார்டை flag பண்ண ஏற்பாடு பண்ணுங்க. அவன் எங்க கிரெடிட் கார்ட் யூஸ் பண்ணாலும் நமக்கு உடனே தகவல் வரணும்”

“குட் ஐடியா சார். இப்பவே பேங்குக்குக் கால் பண்ணிடுறேன்.”

போன சிவா அரைமணி நேரத்தில் திரும்பி வந்தார். “சார் ரவிச்சந்திரன் பேர்ல இருக்கிற பேங்க் அக்கவுண்ட், ஏடிஎம் கார்ட், கிரெடிட் கார்ட் எல்லாத்தையுமே ஃப்ளாக் பண்ணியாச்சு. அவன் எங்க யூஸ் பண்ணாலும் உடனே நமக்குத் தெரிஞ்சிரும்”

“குட். அவனோட வெஹிக்கிள் ஏதாவது?”

“அவன் பேர்ல ஒரு பல்சர் ரெஜிஸ்டர் ஆகியிருக்கு. அது அவன் வீட்டுல தான் இருக்காம். நீங்க சொன்ன மாதிரி அவன் வீட்டுல இல்லை. அவன் சொந்த ஊர் கோயமுத்தூர் பக்கத்துல ஒரு கிராமம். அங்கயும் விசாரிக்க லோக்கல் போலீஸ் அனுப்பியாச்சு”

“குட் சிவா. எக்ஸ்பெக்ட் பண்ணினதை விட ஃபாஸ்ட்டா இருக்கீங்க”

“சார் இன்னொரு முக்கியமான விசயம். மக்கள் முன்னேற்றக் கழகத்தோட வட்டச் செயலாளர் சொக்கலிங்கத்தோட ஆளுங்க ரெண்டு பேரு ரவியைப் பத்தி விசாரிச்சிட்டுப் போயிருக்காங்க. என்ன காரணம்னு தெரியலை”

“விசாரிங்க. ஒரு வேளை நாம தேடிட்டு இருக்கிற ஃபைனான்ஸியல் டாக்குமெண்ட்ஸ்க்கு சொக்கலிங்கம் ஓனரா இருந்தாலும் இருப்பாரு”

“ஓக்கே சார் விசாரிக்க சொல்றேன்.”

“சிவா, ஆக்ஸிடெண்ட்ஸ் பத்தி விசாரிக்க சொன்னேனே. விசாரிச்சீங்களா?”

“யெஸ் சார். விசாரிச்சேன். வேலூர்ல ஒரு ஆக்ஸிடெண்ட் ரிப்போர்ட் ஆகியிருக்கு. கொஞ்ச நேரத்துல வேலூர் ஸ்டேஷனுக்குக் கால் பண்ணி கேட்டுட்டு உங்களுக்கு அப்டேட் பண்றேன் சார்.”

காலையில் போன சிவாவை மதியம் முழுக்கக் காணவில்லை. மேஜை மீது கிடந்த மற்ற கேஸ் கோப்புகளில் சிலவற்றை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தான். ஆனாலும் மனதில் இந்தக் கேஸே ஓடிக் கொண்டிருந்தது. ரவிச்சந்திரன் தான் குற்றவாளியாக இருக்க வேண்டும் என்று ஓரளவுக்கு ஒரு முடிவுக்கு வந்தாயிற்று. காரணமும் காணாமல் போன ஃபைனான்ஸியல் டாகுமெண்ட்ஸாக இருக்கலாம். ஒரு வேளை ரவிச்சந்திரன் அந்த டாகுமெண்ட்ஸைப் பணமாக மாற்றியிருந்தானென்றால் இந்நேரம் வெளிநாட்டுக்குத் தப்பியிருப்பான். அட்லீஸ்ட் வெளிமாநிலத்துக்காவது. மாற்றவில்லை என்ற பட்சத்தில் அவனைப் பிடிக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது. முதலில் அது என்ன டாகுமெண்ட்ஸ் என்று தெரிய வேண்டும்.

குழப்பத்தில் ஒரு பாக்கெட் சிகரெட்டைக் காலி செய்திருந்த வேளையில் சிவா வந்தார். “சார் எ ப்ரேக் த்ரு”.

“ரவிச்சந்திரன் வேலை பார்க்கிற இடம் ஒரு பெரிய இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி. அந்த டாகுமெண்ட்ஸ் பத்தி யாருக்கு விவரம் தெரியலைன்னாலும் ரவிக்குத் தெரியாம இருக்காது. அவன் லாஸ்ட் ஃபோர் டேய்ஸா ஆஃபிஸ்க்கு வரலை. அவனோட ஆஃபிஸ் பிசியை நம்ம எவிடென்ஸாக் கொண்டு வர வாரண்ட் வாங்க ஏற்பாடு செஞ்சிருக்கேன். அதை நோண்டினா கண்டிப்பா விவரம் தெரியலாம்”

“குட் சிவா”

“தென் சார், அந்த வேலூர் ஆக்ஸிடெண்ட் கேஸ் ரயில்ல இருந்து தவறி விழுந்துட்டதா ஃபைல் ஆகியிருக்கு. ஆனா ஒரு விசயம். அந்த விக்டிம் பேரு கணேசன். அவனுக்கும் வட்டச் செயலாளர் சொக்கலிங்கத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கு. நேத்துக் காலையில சொக்கலிங்கம் போய் அவனைப் பாத்துட்டு வந்திருக்கார்”

“சிவா, அந்த கணேசனுக்கும் ரவிக்கும் ஏதோ கனெக்‌ஷன் இருக்கு. இல்லைன்னா சொக்கலிங்கம் ரவியை எதுக்குத் தேடணும்? நான் சொக்கலிங்கத்தைப் பார்க்கணுமே. ஏற்பாடு செய்ங்க.”

“ஓக்கே சார்”

***************************************************************************************************

சொக்கலிங்கத்தின் முன்னால் இருந்த சேரில் சாய்ந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்து கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டியவாறு சொக்கலிங்கத்தின் முகத்தை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அருண். சொக்கலிங்கம் எதுவும் பேசாமல் உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல் அமர்ந்திருந்தார்.

“சொல்லுங்க சொக்கலிங்கம் சார். நீங்க எதுக்காக ரவிச்சந்திரனைத் தேடுறீங்க?”

“யார் ரவிச்சந்திரன்?”

“மறுபடி மறுபடி அதையே சொல்லாதீங்க சொக்கலிங்கம். நான் போலீஸா வரலை. போலீஸும் இல்லை. ஜஸ்ட அ கன்சல்டண்ட். நீங்க சொல்ற எந்த விவரமும் போலிஸ் ரெக்கார்ட்ல போகாமப் பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு. இன் ஃபேக்ட் நீங்களும் ரவி வச்சிருக்கிற அந்த டாகுமெண்ட்ஸைத்தான் தேடுறீங்கன்னு கூட எனக்குத் தெரியும்” சொல்லிவிட்டு சொக்கலிங்கத்தின் கண்களையே உற்றுப் பார்த்தான். அதில் தெரிந்த அதிர்ச்சியை சரியாகக் கண்டுகொண்டான்.

“நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்குப் புரியலைங்க அருண். நீங்க ட்யூட்டில இருக்கும்போது நாம ரெண்டு பேரும் கொஞ்சம் உரசியிருக்கோம். உண்மைதான். இப்ப எங்க ஆட்சியில்லைங்கிறதால என்னைப் பழிவாங்க நினைக்கிறீங்க. இதுக்கு மேல என்னால எதுவும் பேச முடியாது. நீங்க என்னோட லாயரைப் பாருங்க”

“பாருங்க மிஸ்டர் சொக்கலிங்கம். உங்களை என்னால நேரடியா எதுவும் செய்யமுடியாது. ஆனா உங்க ஆள் கணேசனைக் கஸ்டடியில எடுத்து விசாரிச்சேன்னா, அவன் உண்மையச் சொல்லிடுவான். அவ்வளவு தூரம் போகவேண்டாமேன்னு பார்க்கிறேன். எனக்கு ரவியைப் பிடிக்க ஹெல்ப் பண்ணுங்க. உங்க டாகுமெண்ட்ஸ் உங்களுக்குக் கிடைக்க நான் ஹெல்ப் பண்றேன்” சொக்கலிங்கம் யோசிக்க ஆரம்பித்துவிட்டது தெரிந்தது. அடுத்த வலையை வீசினான்.

“போலிஸ் டிப்பார்ட்மெண்ட்க்கு அந்த டாகுமெண்ட்ஸ் அவ்வளவு முக்கியமில்லை. ரவி மூணு கொலை கேஸ்ல பிரைம் சஸ்பெக்ட். அதுக்காகத்தான் போலிஸ் அவனைத் தேடுது. மோட்டிவ்க்கான எவிடென்ஸ் தான் அந்த டாகுமெண்ட்ஸ். அதோட மொத்த மதிப்பு 4ல இருந்து 6 கோடி வரைக்கும் இருக்கலாம்ங்கிறது எங்க எஸ்டிமேட். ஆனா எதுவுமே இன்னும் ரெக்கார்ட்ல ஏறலை. நீங்க அந்த டாகுமெண்ட்ஸ் பத்தி போலிஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணாம ப்ரைவேட்டா தேடுறதுல இருந்து அது செகண்ட் அக்கவுண்ட்னு புரியுது. டாகுமெண்ட்ஸைக் கைல வாங்கினதும் அதுல ஒரு 5 அல்லது 10 லட்சம் மதிப்புள்ளதை மட்டும் கோர்ட் கணக்குல காட்டி ரவிக்கு தண்டனை வாங்கிக் குடுத்துட்டு அதை உங்கக்கிட்டக் குடுத்துரலாம். மீதியை நீங்க செகண்ட் அக்கவுண்டாவே வச்சிக்கலாம். உங்களால மட்டும் ரவியைக் கண்டுபிடிக்க முடியாது. டீல் ஓக்கேன்னா சொல்லுங்க. சேர்ந்து தேடலாம்” மீன் கொக்கியைக் கடித்துவிட்டது என்பதை சொக்கலிங்கத்தின் விரிந்த கண்களின் மூலமாகத் தெரிந்து கொண்டான்.

“ஓக்கே அருண். நீங்க ஜெண்டில்மேன். சொன்ன வார்த்தையக் காப்பாத்திடுவீங்கங்கிற நம்பிக்கை இருக்கு. ஆனா நான் ஜெண்டில்மேன் இல்லை. நீங்க சொன்ன வார்த்தையைக் காப்பாத்தலைன்னா நான் என்ன செய்வேன்னு உங்களுக்குத் தெரியும்”

அருண் மையமாகத் தலையை ஆட்டினான்.

“இப்ப நான் என்ன செய்யணும்?”

“முதல்ல அது என்ன டாகுமெண்ட்னு தெரியணும். அப்போதான் அது சம்மந்தமான ட்ரான்ஸாக்‌ஷன் எதாவது நடந்தா உடனே எங்களுக்குத் தகவல் தெரிய வரும். அதை வச்சித் தான் ரவியைப் பிடிக்கணும்”

சொக்கலிங்கம் மேஜையைத் திறந்து ஒரு ஜெராக்ஸ் காப்பியை எடுத்து அருணின் முன்னால் போட்டார். அருண் அதை எடுத்துப் பார்த்தான். “ பேரர் பாண்ட். யார் பெயரும் போடாத இந்த பாண்டைப் பணமாக்குவது எளிது. ஆனாலும் பிடித்துவிடலாம்.

“தேங்க்ஸ் சொக்கலிங்கம். நீங்க உங்க இன்ஃப்ளுயென்ஸ் வச்சி பணம் காணாமப் போன அன்னைக்கே போலிஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணின மாதிரி ஏற்பாடு செஞ்சிக்கோங்க. உங்க கம்ப்ளெயிண்ட்ல இருக்கிற மதிப்புப் போக மீதி உங்கக் கைக்கு வர வைக்க வேண்டியது என் பொறுப்பு. ரவி கிடைச்சதும் உங்களுக்குத் தகவல் சொல்றேன்.”

“அருண் உங்களை நம்பித்தான் சொல்லியிருக்கேன். விசயம் வெளிய வந்தாலோ இல்லை அந்த ரவி தப்பிச்சிட்டாலோ நீங்கதான் பதில் சொல்லணும். அப்பக் கேள்வியை நான் இப்பிடி உக்காந்துட்டுக் கேக்க மாட்டேன். தெரிஞ்சிக்கோங்க”

“கண்டிப்பா சொக்கலிங்கம். நான் குடுத்த வாக்கை மீற மாட்டேன்”

அந்த ஃபோட்டோகாப்பியோடு வெளியே வந்தான் அருண். இதை வைத்துப் பிடித்துவிடலாம். வெளியே ஜீப்பில் சிவா காத்திருந்தான். சொக்கலிங்கத்துக்கும் தனக்கும் நடுவில் நடந்த டீலை சிவாவுக்கு ப்ரீஃப் செய்ய ஆரம்பித்தான்.

(தொடரும்)