Friday, August 29, 2014

ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 11

சி.எம்.சி மருத்துவமனை.

அதிகாலை 4:00 மணி. ஜெனரல் வார்டில் கட்டில்கள் வரிசையாகப் போடப்பட்டு கொசுவலை போன்ற திரையால் தடுக்கப்பட்டிருந்தன. நோயாளிகளுக்குத் துணையாக வந்தவர்கள் கட்டில்களுக்கு நடுவில் நியூஸ் பேப்பரையோ பழைய பெட்ஷீட்டையோ விரித்துப் படுத்துக்கொண்டிருந்தனர். ஒரு சிலரிடம் இருந்து குறட்டை ஒலி சீராக வந்து கொண்டிருந்தது. ஓரமாகப் போட்டிருந்த மேஜையின் மீது தலை வைத்துப் படுத்துக்கொண்டிருந்தார் டியூட்டி நர்ஸ். அந்த உருவம் மெதுவாக உள்ளே நுழைந்தது. ஒவ்வொரு கட்டிலாகப் பார்த்துக்கொண்டே வந்து கணேசன் படுத்திருந்த கட்டிலின் அருகே வந்ததும் நின்றது. கணேசனின் மனைவியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை போலும். அவன் பக்கத்தில் யாரும் இல்லை.

அந்த உருவம் பையில் இருந்த சிரிஞ்சை எடுத்து அதனுள் ஒரு மருந்தை ஏற்றியது. அதை ஏறிக்கொண்டிருந்த கணேசனின் சலைன் பாட்டிலில் ஏற்றியது. சலைன் ஏறும் அளவை அட்ஜஸ்ட் செய்யும் சக்கரத்தை மேலே ஏற்றி உட்செல்லும் அளவை அதிகப்படுத்தியது. சில விநாடிகள் நின்று பார்த்துவிட்டு வேக வேகமாக வெளியேறியது.

*************************************************

கமிஷனர் அலுவலகம்.

அருணும் சிவாவும் கமிஷனர் கார்த்தியின் எதிரில் உட்கார்ந்திருந்தார்கள். அருண் விவரம் அனைத்தையும் விளக்கினான்.

“சாரி கார்த்தி. உன்கிட்ட கேக்காம டீல் பேசிட்டு வந்துட்டேன்.”

“நோ பிராப்ளம் அருண். நாம மொத்த டாகுமெண்ட்ஸையும் கைப்பத்தியிருந்தாலும் சொக்கலிங்கம் எப்பிடியாவது பூந்து அதை வாங்கிட்டுப் போயிருப்பான். டீல்னால ரவியை சீக்கிரம் நெருங்க முடியும்ங்கிறதால சந்தோசம் தான். சரி நெக்ஸ்ட் ஸ்டெப்ஸ் என்ன?”

“பெரிய அளவுல பேரர் பாண்ட்ஸ் டீல் நடக்கணும்னா கண்டிப்பா யாராச்சும் ப்ரோக்கர் இல்லாம நடக்காது. இந்த மாதிரி டீலிங்க்ல இறங்கற ஆட்கள் எல்லாருக்கும் ஒரு நோட்டிஃபிகேஷன் அனுப்புவோம். ஆறு கோடியையும் இங்கயே மாத்துவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை. கொஞ்சம் பணத்தை இந்தியாவுல மாத்திட்டு எங்கயாச்சும் வெளிநாடு போய் அங்க தான் மீதியை மாத்துவான்னு எதிர்பார்க்கிறேன். சோ, அவன் பாஸ்போர்ட்டை ஃப்ளாக் பண்ணிடுவோம். ஏற்கனவே சிவா அவன் கிரெடிட் கார்ட் எல்லாத்தையும் ஃப்ளாக் பண்ணியிருக்காரு. எப்பிடியாச்சும் அவனைப் பிடிச்சிரலாம்”

சிவாவின் செல்லுக்கு ஒரு கால் வந்தது. எடுத்துப் பேசினார்.

“ஓ அப்பிடியா? எப்ப?”

..

“ஓ. ஓக்கே சார். நான் அருண் சார்ட்ட பேசிட்டுக் கூப்புடுறேன்”

“சார் ஒரு அன்ஃபார்ச்சுனேட் இன்சிடெண்ட்.”

“என்ன ஆச்சி?”

“ஹாஸ்பிட்டல்ல இருந்த கணேசன் திடீர்னு செத்துப் போயிட்டானாம் சார்.”

“வாட்? நல்லா இருந்தான்னு சொன்னீங்களே? சொக்கலிங்கம் கூட அவன் நல்லாப் பேசினதா தானே சொன்னாரு?”

“ஆமா சார். என்னான்னு தெரியல. போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சதும் ரிப்போர்ட் அனுப்பி வைக்கிறதா சொல்லியிருக்காரு சார்”

“ம்ஹ்ம். கார்த்தி, திஸ் த்ரோஸ் அஸ் இன் வாட்டர். ஒரு வேளை ரவியை வளைச்சிட்டாலும், நம்மளால கேஸை ஸ்ட்ராங்கா ப்ரொட்யூஸ் பண்ண முடியுமான்னு தெரியலை. வாட் டு டூ நவ்?”

“முதல்ல ரவியை மடக்குவோம். அதுக்குப் பிறகு என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்.”

“ஓக்கே”

*********************************************

சொக்கலிங்கம் சொல்படி தவறி விழுந்ததாகவே கணேசனும் வாக்குமூலம் கொடுத்திருந்தான். ரவியைப் பிடிப்பதற்கு எல்லா இடங்களிலும் பொறி வைத்தாகிவிட்டது. எலி சிக்கும் வரை காத்திருக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில், சிக்கிய பின் ரவியை தகுந்த சாட்சியங்களுடன் சிறையில் அடைப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்திருந்தான்.

சிவா வேகமாக உள்ளே வந்தான். “சார் பய ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கான். எங்கயுமே டிரேஸ் விடாம இருக்கான். இன்னமும் கிரெடிட் கார்ட் எதையும் யூஸ் பண்ணலை. ஏ.டி.எம்ல பணமும் வித்டிரா பண்ணலை”

“அவன் கம்பெனி பிசியை கான்ஃபிஸ்கேட் செஞ்சிங்களே அதுல எதுவும் மேட்டர் சிக்கிச்சா?”

“இல்ல சார். அதுவும் டெட் எண்ட் தான்”

“ம்ம்.. லெட்ஸ் வெயிட் அண்ட் சீ”

அருண் மேஜையின் மீதிருந்த ஃபோன் ஒலித்தது. எடுத்துப் பேசினான்.

“சிவா. ஒரு ப்ரேக்த்ரு கிடைச்சிருக்கு. 25 லட்சம் மதிப்புள்ள பேரர் பாண்ட்ஸை ரெண்டு வாரம் முன்னாடி என்கேஷ் பண்ணியிருக்கான். ஹவாலால இன்வால்வ் ஆகிற ஒரு ஏஜெண்ட் மூலமா இந்தப் பரிமாற்றம் நடந்திருக்கு. நம்பகமான காண்டாக்ட் மூலமா இந்த நியூஸ் கிடைச்சது. பணம் கிடைச்சும் பய எஸ்கேப் ஆகாம இருக்கான்னா, ஒண்ணு அவன் போலி பாஸ்போர்ட் விசா ஏற்பாடு செஞ்சிட்டு இருக்கணும். அல்லது அவன் லின்க் எதையாவது மிஸ் பண்ணியிருக்கணும். அதை அடைச்சிட்டு எஸ்கேப்பாவலாம்னு இருக்கணும். எது எப்பிடியோ அவன் இந்தியாவுக்குள்ள தான் இருக்கணும்”

“சார் தென் கணேசனோட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருச்சி. He was poisoned. சயனைடை சலைன் பாட்டில்ல ஏத்தியிருக்காங்க. லேப் ரிப்போர்ட்ஸ் கன்ஃபர்ம் பண்ணிட்டாங்க. சொக்கலிங்கத்துக்கும் விசயம் போயிடுச்சி. கொதிச்சிப் போய் இருக்காரு. உங்களுக்கும் பேசலாம்”

“சிவா, ஐ சஸ்பெக்ட் இந்தக் கொலையையும் ரவியே செஞ்சிருக்கலாம். அவனோட மிஸ்ஸிங் லிங்க் கணேசன் மட்டும் தான்.”

“கணேசன் அங்க அட்மிட் ஆகியிருக்கிறது அவனுக்கு எப்பிடி சார் லீக் ஆகியிருக்கும்?”

“அவன் தானே தள்ளிவிட்டது. வாட்ச் பண்ணிட்டே இருந்திருப்பான். இத்தனை நாள் ஐசியுல இருந்ததால அவனால உள்ள போக முடிஞ்சிருக்காது. கோமால இருந்து முழிச்சதும் ஜெனரல் வார்டுக்கு மாத்தியிருப்பாங்க. ஈஸியா உள்ள நுழைஞ்சிட்டான். எனிவே வி ஷுட் இன்ஃபார்ம் சொக்கலிங்கம்”

“சார் சொக்கலிங்கம் ஏற்கனவே பாண்ட்ஸை எடுத்துட்டுப் போயிட்டான்னு காண்டுல இருப்பார். இதுல கணேசனைக் கொன்னதும் ரவிதான்னு தெரிஞ்சா”

“தெரிஞ்சா?”

“நமக்கு முன்னாடி ரவி அவர் கையில மாட்டினா சின்னா பின்னமாகிருவான் சார்”


“ம்ம்.. நாம அதுக்கு முன்னாடி அவனைப் பிடிக்கணும்”



***************************************************



சொக்கலிங்கம் அருண் முன்னால் உட்கார்ந்திருந்தார்.

“அருண் சார், நீங்க சொன்னதால சும்மா இருந்தேன். இப்ப அவன் ஆஸ்பத்திரியேறி வந்து என் ஆளைக் கொன்னுட்டுப்போயிருக்கான். அவன் ரொம்ப விசுவாசமானவன் சார். பணத்தை எடுத்துக்கிட்டு போயிட்டான்னு நினைச்சி  அந்தத் தேவிடியாப் பய மட்டும் என் கையில கெடச்சான் இந்தக் கையாலயே அவனை நசுக்கிக் கொன்னுருவேன்”

“கூல் டவுன் சொக்கலிங்கம். டிப்பார்ட்மெண்ட் அவனைத் தீவிரமாத் தேடிக்கிட்டு இருக்கு. அரெஸ்ட் வாரண்ட் வாங்கி வச்சிருக்கோம். பாஸ்போர்ட் ஃப்ளாக் பண்ணியிருக்கு. அவன் எங்கயும் தப்பிக்க முடியாது. பிடிச்சிரலாம். கவலைப் படாதீங்க. அப்புறம் 25 லட்சத்தை அவன் ஏற்கனவே மாத்திட்டான்.”

”அவன் சிக்கினாப் போதும் அருண் சார். 25 லட்சத்தை எப்பிடி வாங்கிறதுன்னு எனக்குத் தெரியும். ரெண்டு வாரம் டைம் தர்றேன். அதுக்குள்ள நீங்க அவனைப் பிடிக்கலைன்னா நம்ம டீல் ஓவர். புரிஞ்சதா?”

“புரிஞ்சது சொக்கலிங்கம். தூண்டில் போட்டிருக்கோம். மீன் முள்ளைக் கடிக்கிற வரைக்கும் காத்திருக்கத்தான் வேணும்”

“ஏதோ சொல்றீங்க. சரி வர்றேன்” சொக்கலிங்கம் அந்தப் பக்கம் போனதும் அருணின் செல்ஃபோன் ஒலித்தது.

“ஹலொ”

...

“வாட்?”

...

“ஓக்கே நான் உடனே வர்றேன்”

அருண் அவனது ஐ20ஐ சைதாப்பேட்டை கோர்ட் வாசலில் நிறுத்தினான். பதட்டத்துடன் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த சிவா அருணின் தலையைப் பார்த்ததும் சிகரெட்டைக் கீழே போட்டு நசுக்கிவிட்டு ஓடி வந்தான்.

“எங்க இருக்கான் சிவா?”

“உள்ள தான் சார். லாயர்ஸ் கூட இருக்கான்”

”ஜட்ஜ் என்ன சொன்னாரு?”

“பிபி 15 டேய்ஸ் கஸ்டடி கேட்டிருக்காரு. கிடைச்சுடும்னு நினைக்கிறேன்”

“வாங்க உள்ள போகலாம்”

இருவரும் உள்ளே நுழைந்தனர். இரண்டு வக்கீல்கள் இரண்டு பக்கமும் உட்கார்ந்திருக்க, நடுவில் நீலக் கலர் சூட் போட்டு உட்கார்ந்திருந்தான். சமீபத்தில் பணமாக்கியிருந்த 25 லட்ச ரூபாய் தந்ததா இல்லை இயல்பாகவே இருப்பதா என்று தெரியாமல் ஒரு பணக்காரக் களை அவன் முகத்தில் ஒட்டியிருந்தது. சிவாவின் காக்கி யூனிஃபார்மைப் பார்த்ததும் ஒரு சங்கடம் அவன் உடல்மொழியில் வெளிப்பட்டது. லாயரைப் பார்த்தான். அவர் ஆறுதலாகத் தலையசைத்து அவனை அமைதிப்படுத்தினார்.

அருண் நேராக அவன் எதிரே நின்று வலது கையை அவன் முன்னால் நீட்டினான். ”ஹலோ ரவிச்சந்திரன். ஐ அம் அருண்.”

(தொடரும்)