போன (மீள்!?) பதிவுல அந்தக் கதை எந்தப் படத்தோட இன்ஸ்பிரேஷன்னு ஒரு கேள்வி கேட்டிருந்தேன். அதுக்கு யாருமே பதில் சொல்லலை. சிலர் இந்தக் கதையே ஒரு ஆங்கிலப் படத்தோட கதைன்னு நினைச்சிட்டாங்க.
CONfidence - அப்பிடின்னு ஒரு படம். அந்தப் படம் வழக்கமான ஒரு Con movie. எனக்கு இந்த மாதிரி படங்கள் ரொம்பப் பிடிக்கும். அந்தப் படத்துல ஹீரோ ஒரு சீன்ல எப்பிடி CON செய்யறதுன்னு விளக்குவாரு. அந்த விளக்கத்தையும், அந்தப் படத்தோட முதல் சீனையும் வச்சி நான் எழுதின கதை இது. படம் பாக்க முடிஞ்சா பாருங்க.
இப்ப இந்தப் பதிவுக்கு வருவோம். சின்ன அம்மிணி ஒரு
தொடர்பதிவுக்கு என்னைக் கூப்பிட்டிருந்தாங்க.
நான் ஒண்ணாவதுல இருந்து அஞ்சாவது வரைக்கும் படிச்ச ஸ்கூலுக்குப் பக்கத்துல ஒரு மாரியம்மன் கோவில் இருக்கும். அந்தக் கோவில் நாடார் சமூகத்தவங்களோட கோவில். ஆனா அந்தக் கோவில்ல ஒரு அய்யர் தான் பூசாரியா இருப்பார். எங்க ஸ்கூலுக்கு காலைல இண்டர்வல் விடுற நேரம் அவர் கோவில் நடை சாத்திட்டு வீட்டுக்குப் போயிட்டிருப்பார். நல்ல தாட்டியான உருவம். கோவில் சாவிகளை ஒரு பெரிய கயிறுல ரெண்டு பக்கமும் கட்டி தோள்ல தொங்க விட்டுக்கிட்டுப் போவார். அவரைப் பாத்தாலே தெரியும் இது பாலும் நெய்யுமா சாப்புட்டு சாப்புட்டு ஏறிப்போன உடம்புன்னு.
பரிட்சை நேரத்துல நாங்க அந்தக் கோவிலுக்குப் போயி சாமி கும்புடுவோம். ரொம்ப ஜாக்கிரதையா தன் விரல் நகம் கூட எங்க மேலப் பட்டுடாத மாதிரி விபூதி குங்குமம் குடுப்பார். எங்கக் கூட படிச்சக் கிறிஸ்துவ நண்பன் ஒருத்தனை மட்டும் கோவிலுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லிடுவார். அப்ப ஆரம்பிச்சது எனக்குள்ள கேள்விகள்.
1. சாமி எல்லாருக்கும்ன்னா, சாமிக்கும் எனக்கும் நடுவுல எதுக்கு ஒரு புரோக்கர்?
2. ஏன் அந்த ஆள் எங்க மேல விரல் தீண்டாம நடந்துக்குறார்.?
3. அந்த கிறிஸ்துவப் பையனை மட்டும் ஏன் கோவிலுக்குள்ள வர விட மாட்டேங்கிறார்?
4. அவர் சன்னிதிக்குள்ள போய் சாமியைத் தொட்டு பூஜை செய்யும் போது நான் ஏன் சாமியைத் தொடக்கூடாது?
5. அப்பிடி என்னை விட அந்தாள் எந்த விதத்துல ஒசந்துட்டாரு?
இப்பிடியெல்லாம் எனக்குள்ள கேள்விகள் எழுந்த நேரத்துல எனக்கு இந்த பூசாரிகள் யாரு. அவங்க என்ன எல்லாம் சொல்லி நம்மளை விலக்கி வச்சிருக்காங்க அப்பிடிங்கிற விஷயங்களைச் சொல்லிக் குடுத்தாங்க சில நண்பர்கள். இவங்களுக்காக மட்டுமே நான் கோவில் போறதை அறவே வெறுத்தேன்.
எங்க வீட்டுல வத்திராயிருப்பு பக்கத்துல இருக்கிற சுந்தர மகாலிங்கம் கோவில்ல ஏதோ வேண்டுதல் இருந்ததுன்னு அதை நிறைவேத்த ஒரு மண்டலம் - 48 நாள் - வீட்டுல விரதம் இருக்கணும், கவுச்சி சாப்புடக்கூடாதுன்னு சொன்னாங்க. என்ன வேண்டுதல்னு கேட்டேன். கடா வெட்டுறதா வேண்டுதல்னு சொன்னாங்க. சாமிக்கே கடாவை வெட்டப் போறீங்க. அப்புறம் எதுக்கு நான் 48 நாள் கவுச்சி சாப்புடக்கூடாதுன்னு கேட்டுட்டு நான் பாட்டுக்கு என் இஷ்டத்துக்கு இருந்தேன். அதுனால கடைசியில என்னைக் கூப்புடாமலே அவங்க மட்டும் கோவிலுக்குப் போயிட்டு வந்துட்டாங்க. அந்தக் கடாவை சாப்புட முடியாமலே போயிடுச்சி.
அப்புறமா சில பல பிராமின் ஃப்ரண்ட்ஸ் கிடைச்சாங்க. அவங்க மூலமா எல்லா பிராமின்ஸும் அப்பிடி இல்ல. ஒரு குரூப்புதான் அப்பிடித் திரியிறாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டேன். ஆனாலும், ஒருத்தர் பிராமின்னு தெரிஞ்சா ஒரு அடி வெளிய நின்னு அவங்க எந்த குரூப்புங்கிறத நோட்டம் விட்டுட்டுத்தான் அவங்க கூட பழகுறது. ஆனாலும் கோவிலுக்கு மட்டும் போறதில்லை.
“நட்ட கல்லை சாமியென்று நாலு புட்பம் சாத்தியே,
சுற்றி வந்து முணு முணுவென சொல்லு மந்திரம் ஏதடா,
நட்ட கல்லும் பேசுமோ?…நாதன் உள்ளிருக்கையில்.
சுட்ட சட்டி சட்டுவந்தான், கறிச்சுவை அறியுமோ?.
நான் பி.எஸ்.சி பிசிக்ஸ் படிக்கும் போது எங்க ஹெச்.ஓ.டி எங்களுக்கு முதல் நாள் வகுப்பில் மேல இருக்கிற பாட்டைச் சொல்லிக் குடுத்தார். அவர் எனக்குள்ள மேலும் மேலும் இறை எதிர்ப்பை வளர்த்தார்.
அப்ப இந்திய மாணவர் சங்கத்துல ஈடுபாட்டோட இருந்து வந்தேன். மாவட்டக் கவுன்சில் உறுப்பினராவும் இருந்தேன். அப்போ மார்க்ஸியமும் கடவுள் எதிர்ப்பும் அறிமுகமானது. இந்து மதக் கடவுள்களையும் இந்து மத நம்பிக்கைகளையும் மட்டும் எதிர்க்கும் பெரியாரிஸ்டுகளோட விவாதம் செய்யிற அளவுக்கு ஞானம் வளர்ந்தது. கல்லூரியில அனைத்து மதங்கள்லயும் இருக்குற மூட நம்பிக்கைகளைப் பத்தி பேசி எதிரிகளை சம்பாதிச்சிக்கிட்டேன். சில நண்பர்களும் கோவிச்சிக்கிட்டுப் பிரிஞ்சிட்டாங்க.
2004ல அமெரிக்கா வந்தேன். நியூ ஜெர்சியில இருக்கிற ஒரு கோவில் - ப்ரிட்ஜ் வாட்டர் டெம்பிள் - ல மசால் தோசை(?!) நல்லா இருக்கும்னு சொன்னதைக் கேட்டு அங்க போனோம். என் கூட வந்திருந்த அக்கட தேச நண்பர் $11 குடுத்து அர்ச்சனை செஞ்சார். அங்கயும் அர்ச்சகர்களா பிராமின்ஸ் தான். கோவில் கர்ப்பக்கிரகத்துக்குள்ள அவங்களைத் தவிர யாரும் போகக் கூடாது. சாமி சிலைகளை யாரும் தொடக்கூடாது. சாமியை யாரும் ஃபோட்டோ எடுக்கக் கூடாதுன்னு போர்ட் போட்டிருந்தாங்க. ஆனா வீடியோ கேமிரால உள்ள இருக்கிர வெங்கிடாசலபதியை வெளிய டி.வியில லைவா காட்டிட்டு இருந்தாங்க. அவங்க படம் எடுத்தா கடவுள் பவர் குறையாது போல.
(மசால் தோசை உண்மையிலேயே ரொம்ப நல்லா இருந்தது)
அடுத்து 2005ல ராச்சஸ்டர்ல இலங்கைத் தமிழர்கள் நடத்துற ஒரு கோவில் இருக்கு. அங்க சாப்பாடு ஃப்ரீ அப்பிடின்னு ஒரு நம்பகமானத் தகவல் கிடைச்சது. சரி ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுவோம்னு நானும் தங்கமணியும் கிளம்பிப் போனோம்.
கோவிலுக்குள்ள போனதும் ப்ரிட்ஜ் வாட்டர் மாதிரி கேண்டீன் எதுவும் இல்லைங்கிறதப் பாத்ததும் கொஞ்சம் ஏமாத்தமா போச்சி. சரின்னு கோவில் சன்னிதிக்குள்ள போனோம். அங்க ஒரு பெண் கழுத்துல ருத்ராட்ச மாலை போட்டுக்கிட்டு நின்னுக்கிட்டிருந்தாங்க. எங்களைப் பாத்ததும் “அர்ச்சனை செய்யணுமா?” அப்பிடின்னு கேட்டாங்க. எனக்கு ப்ரிட்ஜ் வாட்டர் டெம்பிள் நினைவுக்கு வரவும் வேண்டாம்னு சொல்லிட்டு கோவிலை சுத்திப் பாத்தோம். நாங்க அப்போ நின்னுக்கிட்டிருந்தது கர்ப்பக் கிரகம். மூலஸ்தானத்தை சுத்தி வந்து எங்க கையால சாமி சிலைகளைத் தொட யாரும் மறுப்பு சொல்லலை. எங்கக்கிட்ட இருந்த கேமிரால சாமியை ஃபோட்டோ எடுக்கலாமான்னு கேட்க, தாராளமான்னு பதில் வந்தது.
ஆச்சரியப்பட்டுக்கிட்டே கர்ப்பக்கிரகத்தை விட்டு வெளிய வந்ததும், ஒருத்தர் எங்களைப் பாத்து - “போங்க போய் சாப்புடுங்க”ன்னு சொன்னாங்க. அதுக்குத்தான வந்தோம்னு நினைச்சிக்கிட்டு உள்ள போயி ஒரு ப்ளேட்ல சாப்பாடு வாங்கிக்கிட்டு வெளிய வந்து உக்காந்து சாப்பிட்டோம். சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது.
அதுக்கப்புறம் அந்தக் கோவிலைப் பத்தி நிறைய கேள்விப்பட்டு அடிக்கடி போக ஆரம்பிச்சோம். எங்களுக்கு அமெரிக்கால சொந்த பந்தங்கள்னு சொல்லிக்க யாரும் இல்லாததால அந்தக் கோவில் தான் எங்களுக்கு தாய் வீடாச்சி. அங்க வரவங்க எல்லாம் சொந்தக் காரவுங்க ஆயிட்டாங்க.
அந்தக் கோவில்ல பூஜை பண்ண அப்பாயிண்டட் அய்யர் யாரும் இல்லை. ஒவ்வொரு நாள், ஒவ்வொரு வேளையும் வாலண்டியர்கள் தான் செய்வாங்க. இன்னைக்கி இவங்க அப்பிடின்னு பிரிச்சி குடுத்துருக்காங்க. இந்த வாலண்டியர்கள்ல எல்லா ஜாதி, மொழி, நாட்டுக்காரவங்களும் இருக்காங்க. நாங்களும் (நான் அல்லது தங்கமணி) ஞாயிற்றுக் கிழமைகள்ல காலை பூஜை செய்யறோம். சமஸ்கிருத மந்திரங்கள் தான் சொல்றோம். சிவ புராணமும் படிப்போம். எங்களை தமிழ்லயே மந்திரங்கள் (திருவாசகம், திருப்புராணம் இதுல இருந்து) சொல்லலாம்னு அனுமதி குடுத்துருக்காங்க. ஆனாலும் அந்தப் பாடல்களைத் திரட்ட வேண்டிய வேலையும் நாங்களே செய்யணுங்கிற சோம்பேறித்தனத்தால அல்ரெடி பிரிண்டடா இருக்கிற சமஸ்கிருத மந்திரங்களைத்தான் வாசிக்கிறோம்.
இந்தக் கோவிலோட நிறுவனர், ஒரு இலங்கைத் தமிழர். அவர் இந்தியாவுல இருக்கிற ஒரு முன்னாள் நியூக்ளியர் சயண்டிஸ்ட்-இன்னாள் கோவில் குரு ஒருத்தர்கிட்ட தீட்சை வாங்கி இந்தக் கோவிலை நிறுவியிருக்கார். சாதி, மதம், இனம், மொழி, நாடு, பாலினம் பாக்காம தீட்சை கேக்கிற எல்லாருக்கும் கொடுப்பார். எங்களுக்கும் கொடுத்தார்.
என்னைப் பொருத்த வரைக்கும் கடவுள் அப்பிடிங்கிறது ஒரு கருத்து, நம்பிக்கை. அதை நான் அந்த அளவிலயே வச்சிருக்கேன். அதை மட்டுமே நம்பி மூடத்தனமாவும் இருக்கிறதில்லை. அங்க போனாத்தான் எனக்கு நிம்மதின்னு போய் அங்க விழவும் இல்லை. அதுக்காக அதை முழுக்க இக்னோர் செஞ்சிடவும் இல்லை. எனக்கு கஷ்டம்னு வரும்போது காப்பாத்தும்மான்னு கேட்டுக்கவும், எதாவது நல்ல விசயம் நடந்தா தேங்க் பண்ணிக்கிறதுக்கும் ஒரு நம்பிக்கையான கருத்து. அவ்வளவுதான்.
இதைத் தொடர நான் கூப்புடுறது
1. கலகலப்ரியா
2. அதுசரி
3. நசரேயன்
4. பட்டாப்பட்டி
5. பிரபாகர்
6. சேட்டைக்காரன்
7. சித்ரா