Monday, November 30, 2009

ப்ளாக்கர் - தொடர் பாகம் நான்கு

அத்தியாயம் - 3

அத்தியாயம் - 2

அத்தியாயம் - 1



அருணின் கார் கமிஷனர் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்தது. காரில் இருந்து இறங்கிய அருண் குளிர் கண்ணாடியைக் கழற்றி விட்டு வாசலில் இருந்த போலீஸ்காரரைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்தான். அவர் அடித்த சல்யூட்டைத் தலையசைப்பில் ஏற்றுக் கொண்டான். 


கார்த்திகைப் பாண்டியன் - காவல்துறை ஆணையாளர் என்று போர்டு மாட்டியிருந்த அந்த அறையின் கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தான். 


“ஹே வாடா..” என்றவாறு இருக்கையிலிருந்து எழுந்து வந்து அருணைத் தழுவிக் கொண்டார்.


“என்ன கார்த்தி எப்பிடி இருக்க?”


“நல்லா இருக்கேன், கோம்”


“சுஜாதா ஸ்டைல்ல பதில் சொல்றத இன்னும் விடலியா”


“அது எப்பிடி முடியும்”


“ஓக்கே நான் ஃபோன்ல சொன்ன விசயம் என்னாச்சு?” இரண்டு சிகரெட்டுக்களை ஒன்றாகப் பற்ற வைத்து ஒன்றை கார்த்தியிடம் நீட்டினான் அருண்.


“நோ டா. நான் க்விட் பண்ணி மூணு மாசமாச்சி”


“என்னடா திடீர் ஞானோதயம்?”


“பானுவோட அப்பா ஹார்ட் அட்டாக்ல போனதுல இருந்து.”


“ஹேய் அது எப்போ நடந்தது? எனக்கு ஏண்டா தகவல் சொல்லல”


“ரிலேடிவ்ஸ் தவிர வேற யாருக்கும் சொல்லலடா. நீயும் நிறுத்திடறது நல்லது”


“ட்ரை பண்றேன். அப்புறம் அந்த சுஷ்மா மர்டர் விசயம்?”


“காலைலயே கருப்பையாவைப் பிடிச்சிக் காச்சிட்டேன். பொலிட்டிக்கல் ப்ரஷர் எல்லாம் எதுவுமில்ல. இனி அந்தக் கேஸ் என்னோட ஆஃபீஸ்லயே ஹாண்டில் பண்ணப்போறோம். அதாவது அன் - அஃபிஷியலா நீயே ஹாண்டில் பண்ணப் போற”


“சூப்பர் டா.”


“அஃப்ஃபிஷியல் ரெக்கார்ஸ்க்காக ஒரு எஸ்.ஐ அப்பாயிண்ட் பண்ணியிருக்கேன். அவர் உனக்கு எல்லா விதத்துலயும் ஹெல்ப் பண்ணுவார். வெரி யங் கை. இன் ஃபாக்ட் திஸ் இஸ் ஹிஸ் ஃபர்ஸ்ட் கேஸ்”


“வாவ் லவ்லி. நான் அவரை மீட் பண்ணலாமா?”


கார்த்தி மேஜை மீதிருந்த மணியை அழுத்தவும் ஆர்டர்லி ஒருவர் உள்ளே வந்து சல்யூட் அடித்தார். 


“எஸ் ஐ சிவாவ வரச் சொல்லுங்க”


“யெஸ் சார்”


ஆர்டர்லி போய் சரியாக அரை நிமிடத்தில் அடர்த்தியான மீசை வைத்த அப்பாஸ் போல ஒருவன் உள்ளே நுழைந்து விரைப்பாக சல்யூட் வைத்தான்.


“சிவா, இவர்தான்..”


“தெரியும் சார். மிஸ்டர் அருண். நீங்க காலைல என்கிட்ட விசயத்த சொன்ன உடனே நான் ரெக்கார்ட்ஸ் பாத்து இவரப் பத்தி தெரிஞ்சிக்கிட்டேன் சார். ஐ அம் ப்ளீஸ்ட் டு ஒர்க் வித் அ லெஜெண்ட் லைக் ஹிம்”


“தாங்க்ஸ் சிவா. அருண் இட்ஸ் யுர் கேஸ் நவ்”


“தாங்க்ஸ் கார்த்தி. ஐல் கீப் யூ போஸ்டட் ஆஃப் தி ப்ராக்ரஸ்”


அருண் எழுந்து சிவாவின் கையைப் பிடித்துக் குலுக்கினான். இருவரும் வெளியே நடந்தனர்.


############################################################################################


அருணின் கார் சுஷ்மா தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட்டை நோக்கி சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. 


“சிகரெட்?” என்று ஒரு சிகரெட்டை உதட்டால் கவ்விக்கொண்டு சிவாவை நோக்கி நீட்டினான். 


“தாங்க்ஸ் சர் என்றபடி ஒரு சிகரெட்டை உறுவிக்கொண்டான். காரின் சிகரெட் லைட்டரை எடுத்து பற்ற வைத்துக் கொண்ட அருண்,


“சிவா நான் சம்பவ இடத்த நேத்துக் காலைல போய் பார்த்தேன். கொலை அங்க நடந்திருக்க வாய்ப்ப்பு இல்ல. ஒண்ணு அங்க ரத்தம் அவ்வளவா சிந்தல. ரெண்டாவது 11 மணிக்கு கூட அங்க ட்ராஃபிக் இருக்குது. அந்த ட்ரஃபிக்ல கொலை செய்யறது கஷ்டம். சோ வேற எங்கயாவது கொலை பண்ணிட்டு இங்கக் கொண்டு வந்து போட்டிருக்கணும். அந்தப் பக்கம் இது மாதிரி வேற எப்பயாவது இப்பிடி நடந்திருக்கா?”


“இதே இடத்துல இல்ல சார். பட் அந்த ரோட்டுல இதுக்கு முன்னாடி 4 கேஸ் நடந்திருக்கு சார். முதல்ல ஒரு கால் செண்டர் எம்ப்ளாயிய செண்டரோட வேன் ட்ரைவரே ரேப் பண்ணி கொன்னு போட்டுட்டு போயிருக்கான் சார். அப்புறம், மூணு கேஸ் அடையாளம் தெரியாத நபர்கள்னு கேஸ் மூடப்பட்டிருக்கு சார். இந்த மூணு கேஸுமே மடிப்பாக்கம் லிமிட்ல தான் சர் வருது.”


“ஓக்கே. ஒரு வேளை ஏதாவது கூலிப்படை இல்லைன்னா ரவுடிஸ் கேங்க் இந்த ரோட்ட இது மாதிரி டம்பிங்ஸ்க்கு யூஸ் பண்ணியிருக்கலாம்.”


“அதே ஆங்கிள் தான் சர் எனக்கும் தோணுது.”


பேசிக்கொண்டிருக்கும்போதே சுஷ்மாவின் அப்பார்ட்மெண்டுக்குள் கார் நுழைந்தது. வாட்ச்மேனிடம் விபரம் சொல்லி சுஷ்மா அப்பார்ட்ம்ர்ண்ட் நம்பரை வாங்கிக் கொண்டு லிஃப்ட் ஏறி அடைந்தனர்.


“சர் சுஷ்மாவோட இன்னொரு பொண்ணு தங்கியிருக்கா. அவ பேரு வைஷ்ணவி”


“ஓக்கே!” என்று சுவற்றில் பொறுத்தியிருந்த அழைப்பு மணியை அழுத்தினான் அருண்.


யாரோ நடந்து வரும் சத்தம் முதலில் மெல்லியதாக அருகில் வர வர சத்தமாகக் கேட்டது. கதவில் பொறுத்தப்பட்டிருந்த மேஜிக்-ஐயின் வழியாகக் கசிந்து கொண்டிருந்த வெளிச்சம் தடைப் பட்டதும் “போலீஸ்” என்று சற்று உரத்தக் குரலில் சொன்னான் அருண்.


கதவு திறந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். ரோஜாவையும் நமீதாவையும் தப்பான விகிதத்தில் கலந்தது போல இருந்தாள்.


“ப்ளீஸ் கம்மின்” 


உள்ளே நுழைந்து சுற்றும் முற்றும் பார்த்தான் அருண். பெரிய ஹால். அதில் மூன்று பேர் உட்காரக்கூடிய சோஃபா ஒன்றும் அதன் சைடில் ஒரு ஆள் உட்காரக்கூடிய சோஃபாவும் போடப்பட்டிருந்தன. அந்த சோஃபாவுக்கு முன் ஒரு சிறிய டீப்பாய். அதன் மீது ஃபெமினா, ரீடர்ஸ் டைஜஸ்ட். எதிரில் ஒரு 32 இன்ச் எல்.சி.டி டீவி. அதன் மேல் ஆணி அடித்து மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தில் சுஷ்மாவும் வைஷ்ணவியும்.


“மிஸ்.வைஷ்ணவி. நீங்க சம்பவம் நடந்த அன்னிக்கு ஊர்ல இல்லைன்னு போலீஸ் விசாரணைல சொல்லி இருக்கீங்க. எங்க போயிருந்திங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?” 


“சொந்த ஊருக்கு”


“என்ன விசயமா?”


“எனக்கு நிச்சயதார்த்தம்.”


“ஐ சீ”


“எப்பிடி செத்துப் போனது சுஷ்மா தான்னு உங்களுக்குத் தெரியும்?”


“சுஷ்மாவோட ப்ளாக் ஃபாலோயர் ஒருத்தர் வீட்டுக்கு ஃபோன் பண்ணி பேப்பர் நியூஸ் பாத்ததாவும், அதுல இருக்குற பொண்ணு சுஷ்மா மாதிரி இருக்குறதாவும் சொன்னார். அப்புறம் தான் நான் போலீசுக்குப் போய் மார்ச்சுவரில பாடி பார்த்து கன்ஃபிர்ம் பண்ணேன்”


“ஓ சுஷ்மா ப்ளாக் எழுதுவாளா?”


“ஆமா. எப்போ பாத்தாலும் லாப்டாப்பக் கட்டிட்டே தான் அழுவா”


“ஐ சீ. அப்புறம் சுஷ்மாவோட ஸ்கூட்டி இப்போ எங்க இருக்கு?”


“தெரில. கொலை பண்ணவங்க அதை திருடிட்டுப் போயிருக்கலாம்”


“மே பி”


“ரமேஷ உனக்குத் தெரியுமா?”


“தெரியும். சுஷ்மாவும் அவனும் ப்ரேக்-அப் ஆனதும் குடிச்சிட்டு வந்து ஒரே கலாட்டா பண்ணான். போலீஸ்ல சொல்லிடுவேன்னு மிரட்டுனாப்புறம் தான் போனான்”


“ஐ சீ. சுஷ்மாவுக்கு வேற யாராவது எதிரிகள் உண்டா?”


“அப்பிடி யாரும் இல்ல. அவ எல்லார் கூடயும் ஃப்ரண்ட்லியாத்தான் பழகுவா”


“சுஷ்மாவோட ப்ளாக் யூ.ஆர்.எல் தெரியுமா?” 


“publikservent.blogspot.com அவ அனானிமஸ் நேம்தான் யூஸ் பண்றா. அதன் மூலமா யாரும் எதிரிகள் உருவாக வாய்ப்பு இல்ல”


“அனானிமஸ் நேம்னா எப்பிடி ஃபால்லோயர்க்கு சுஷ்மாவோட முகம் தெரியும்?”


“இந்த ஃபால்லோயர் சுஷ்மாவுக்கு ரொம்ப க்ளோஸ். வீட்டுக்குக் கூட 2 டு த்ரீ டைம்ஸ் வந்திருக்கார்”


“அவரோட காண்டாக்ட் நம்பர் இருக்கா?”


ஒரு பேப்பரை எடுத்து செல்ஃபோனில் நம்பர் பார்த்து எழுதிக்கொடுத்தாள்.


“ஓக்கே. தாங்க்ஸ் ஃபர் யுர் கோ-ஆப்பரேஷன் மிஸ் வைஷ்ணவி. அண்ட் விஷ் யூ அ ஹாப்பி மேரீட் லைஃப்”


“தாங்க் யூ”


இருவரும் லிஃப்ட்டில் வரும்போது சிவா ஆச்சரியத்துடன் கேட்டான் “சார் சுஷ்மாக்கிட்ட வெஹிக்கிள் எதுவும் இருக்குறதா போலீஸ் ரெக்கார்ட்ஸ்ல இல்ல. நீங்க எப்பிடி கரக்டா கேட்டீங்க?”


“சிம்பிள் சிவா. உள்ள வரும்போது இவங்க அப்பார்ட்மெண்ட்டுக்கான பார்க்கிங் லாட்டுல ஒரே ஒரு ஹோண்டா தான் நின்னுட்டு இருந்தது. உள்ள இருந்த ஃபோட்டோல ரெண்டு பேரும் ஆளுக்கொரு வண்டியில உக்காந்துட்டு போஸ் குடுத்துட்டு இருந்தாங்க. சரினு ஒரு கல்லு விட்டுப் பாத்தேன்”


“சிவா. நான் உங்கள ஆஃபிஸ்ல ட்ராப் பண்ணிட்டு வீட்டுக்குப் போறேன். நீங்க ரெண்டு விசயம் பண்ணனும். யூஸ் யுர் போலீஸ் ஃபோர்ஸ்.”


“என்ன பண்ணனும் சர்”


“ஒண்ணு சுஷ்மாவோட ஸ்கூட்டிய ட்ராக் பண்ணுங்க. திருடுனவன் எங்க விப்பான், வித்தா அது எங்க எப்பிடி எப்பிடி போகும் அப்பிடிங்கிறது நம்ம டிப்பார்ட்மெண்ட் ஆளுங்களுக்கே தெரியும். ரெண்டாவது, இதுவரைக்கும், சுஷ்மாவோட செல்ஃபோன் என்ன ஆச்சுன்னும் தெரியல. அவ செர்விஸ் ப்ரொவைடரை அப்ரோச் பண்ணி ஐ.எம்.இ.ஐ நம்பர் வச்சி ட்ராக் பண்ண முடியுமான்னு பாருங்க. நாளைக்கு பதினோரு மணிக்கு உங்க ஆஃபிஸ்க்கு வர்றேன்.”


“இல்ல சர். நானே உங்க வீட்டுக்கு வந்திடுறேன்”


“ஓக்கே. என் வீட்டு அட்ரஸ் தெரியுமா?”


“உங்க செல்ஃபோன் நம்பர் கூட தெரியும் சர்.”


“குட்”


சிவாவை கமிசனர் அலுவலகத்தில் இறக்கி விட்டு விட்டு வீட்டை நோக்கிக் காரை செலுத்தினான். வீட்டை நெருங்கும் போதுதான் பார்த்தான். வாசலில் இருவர் நின்றிருந்தனர்.


(தொடரும்)

Friday, November 27, 2009

கண்ணியம் - சிறுகதை

பல வருடங்களுக்கு முன்:


நிலவின் ஒளி அந்த அடர்ந்த காட்டினுள் ஆங்காங்கே திட்டுத்திட்டாகப் பரவியிருந்தது. தூரத்தில் கத்தும் ஆந்தையின் அலறல் அந்த சூழலை அமானுஷ்யமாக்கிக் கொண்டிருந்தது. லேசான குளிர்தான் என்ற போதிலும் அவளின் முதுகெலும்பு வரை ஊடுறுவிக் குத்தியது. சேலையை இன்னும் இறுக்கமாகப் போர்த்திக் கொண்டாள். அந்த செயலால் அவள் நடையின் வேகம் சற்றே மட்டுப் பட்டது.


ம்ம்ம். வேகம். நாம் விடிவதற்குள் இன்னும் ஆறு மைல்கள் உள்ளே செல்ல வேண்டும். விடிந்து விட்டால் உங்கள் ராணுவத்திடம் இருந்து தப்ப முடியாது


கிசுகிசுப்பான குரலில் அவன் சொன்னாலும் அந்தக் குரலின் தீவிரம் அவளுக்குப் புரியாமல் இல்லை. நடையை எட்டிப் போட்டாள். கடந்த ஆறு வாரங்களாக யார் யாரையோப் பிடித்துக் கெஞ்சி, சில பல சோதனைகளுக்கு உட்பட்டு இப்போதுதான் அவர்களின் தலைவரைப் பார்க்க அவளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. அவளின் தாயைத் தவிர வேறு யாருக்கும் அவள் இப்படி ஒரு காரியம் செய்யப் போகிறாள் என்பது தெரியாது. அவள் தாய் தந்த ஊக்கம் தான் இப்படி ஒரு செயலைச் செய்து பார்க்க அவளுக்கு ஒரு தைரியத்தை அளித்தது என்று கூட சொல்லலாம். 


நீண்ட நேரம் நடந்த பின்னர் “எங்கள் எல்லைக்குள் நுழைந்து விட்டோம். இனி நமக்குப் பயமில்லை.” நடை சற்றுத் தளர்ந்தது. 


நிலா வெளிச்சத்தில் அவன் இவளைப் பார்த்து புன்னகைப்பது தெரிந்தது. “எதற்காக இவ்வளவு பெரிய ஆபத்தைத் தாண்டி எங்கள் தலைவரை நீ சந்திக்க வேண்டும் என்று துடிக்கிறாய் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?


அந்தத் தகவல் உங்கள் தலைவருக்குத் தெரிவித்தாகி விட்டது. வேறு யாரிடமும் பகிரக் கூடாது என்று உத்தரவு


சரி. தலைவனின் கட்டளை அது என்றால் எனக்கு தெரிய வேண்டியதில்லை


இன்னும் சிறிது தூரம் நடந்ததும் ஒரு சிறிய குடில் தெரிந்தது. இரண்டு பெண்கள் சீருடையில் கையில் துப்பாக்கிகளோடு நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கண்ணுக்குத் தெரிந்ததும், “இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கொள்” என்று சொல்லிவிட்டு அவனும் அவ்வாறே செய்தான். 


அந்தக் குடிலை நெருங்கியதும் இருவரும் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவன் கையில் இருந்த ஒரு கடிதத்தை அவர்களிடம் கொடுத்தான். அவர்கள் அதைப் படித்துப் பார்த்துவிட்டு கையிலிருந்த ஒரு கோப்பில் எதையொ சரி பார்த்தனர்.


நீங்கள் வருவதாக எங்களுக்குத் தகவல் வந்து விட்டது. நீங்கள் இங்கேயே தங்கிக் கொள்ளலாம். இதற்கு மேல் செல்ல உங்களுக்கு அனுமதி இல்லை. அவளை மட்டுமே அழைத்துச் செல்ல முடியும்.


அவன் ஆமோதிக்கும் வண்ணம் தலையசைத்தான்.


சிறிது ஓய்வுக்குப் பின் இன்னொரு போராளியோடு கண்கள் கட்டப்பட்ட நிலையில்அவள் பயணம்  தொடர்ந்தது. இன்னும் சில கை மாற்றல்களுக்குப் பிறகு அவள் அங்கே வந்து சேர்ந்தாள். மீண்டும் கடுமையான சோதனைகளுக்க்குப் பின் அவள் ஒரு அறையில் அமர வைக்கப் பட்டாள்.


அவர் உள்ளே நுழைந்தார். அவருடன் அவரது பாதுகாவலர்களும் இன்னும் இரண்டு பேரும் வந்தனர். 


அவரைப் பார்த்ததும் அவள் தானாக எழுது கொண்டாள்.


வணக்கம் அம்மா. உன் தைரியத்தையும் மன உறுதியையும் பாராட்டுகின்றேன். கணவனைப் பார்க்க வேண்டும் என்பதற்காக நீ பல ஆபத்துகளைத் தாண்டி வந்திருக்கிறாய். உன் கணவன் மீது நீ வைத்திருக்கும் அன்பையே இது காட்டுகிறது.


திருமணம் ஆன மூன்றாம் நாளே அவர் என்னைப் பிரிய நேரிட்டு விட்டது. அவர் துரதிருஷ்டம், உங்களிடம் மாட்டிக் கொண்டார்


அது துரதிருஷ்டமா இல்லை அதிர்ஷ்டமா என்பதை உன் கணவனிடமே கேட்டுக் கொள். இன்னும் பதினைந்து நிமிடத்தில் அவன் இங்கே இருப்பான். பாதுகாப்பு காரணங்களுக்காக உங்கள் இருவரையும் தனியே சந்திக்க என்னால் அனுமதிக்க முடியாது. இவர்கள் இருவரும் உடன் இருப்பார்கள்


அவள் சம்மதம் என்பதைப் போன்று தலையசைக்கவும் அவரும் அவரது பாதுகாவலர்களும் வெளியேறினர். சூடான தேநீர் ஒரு கோப்பையில் அவளிடம் நீட்டப் பட்டது. இரவு முழுக்க செய்த பிரயாணக் களைப்பு தேநீர் குடிக்கச் சொன்னாலும், கணவனைப் பார்த்து விட்டுதான் தொண்டையை நனைப்பது என்ற குறிக்கோள் மறுக்கச் சொன்னது.


அவள் கணவன் உள்ளே நுழைந்தான். தன்னை விட்டுப் பிரிந்த சமயத்தைக் காட்டிலும் இப்போது சற்று மெலிந்திருந்தான். அவனைப் பார்த்ததும் அவள் கண்கள் குளமாயின. பிரிந்தவர்கள் கூடும் போது மௌனம் தானே பெரிய மொழி. அவள் ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொண்டாள்.


நலம் பறிமாறலும், அளவளாவல்களும் முடிந்த பின்னர் “எங்கிருந்து உனக்கு இப்படி ஒரு துணிவு வந்தது?


என் நண்பர்களும் அம்மாவும் கொடுத்த தைரியம் தான். எங்கே கடைசி வரை உங்களைப் பார்க்காமலே போய் விடுமோ என்று பயந்தேன். இனி நான் நிம்மதியாக செத்துப் போவேன்


அதற்கு அவசியம் இல்லை” என்றவாறு அந்தக் குடிலுக்குள் மறுபடியும் நுழைந்தார் தலைவர். “உன்னை விட்டு விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். நீ இனி உன் மனைவியுடன் சந்தோசமாக இருக்கலாம்


இருவருக்கும் மகிழ்ச்சியில் வார்த்தைகள் வராமல் அவரைப் பார்த்தவாறே நின்றிருந்தனர்.


நீ” என்று அந்தப் பெண்ணைப் பார்த்து “எப்படி வந்தாயோ அதே முறையில் ஊருக்கு திருப்பி அனுப்பப் படுவாய். நீ” என்று அந்த ராணுவ வீரனைப் பார்த்து “எங்களிடம் இருந்து தப்பியவன் போல உங்கள் ராணுவம் இருக்கும் இடத்தின் அருகில் விடப்படுவாய். அவர்களிடம் ஏதாவது கதை சொல்லி அவர்களை நம்ப வைத்து உன் மனைவியிடம் போய் சேர்வது உன் சாமர்த்தியம்


எனக்கு இது போதும். நான் எந்தக் கதையையாவது சொல்லி சமாளித்து விடுவேன். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை


உன் மனைவிக்கு சொல்”. உடனிருந்தவர்களுக்கு சில உத்தரவுகளை வழங்கி விட்டு அவர் வெளியேறினார். இருவரும் அவர் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் கண்கள் முழுக்க கண்ணீருடன் நன்றியும் கலந்திருந்தது.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


சில மாதங்களுக்கு முன்


அந்த ஜீப் ராணுவ முகாமுக்குள் நுழைந்த போதே அந்த அலறல் அவர் காதுகளுக்கு எட்டியது. முகாமின் வாயிலில் காவலுக்கு இருந்த அந்த ராணுவ வீரன் அவரது ஜீப்பைப் பார்ததும் விறைப்பாக ஒரு சல்யூட் வைத்தான். ஜீப் அவனுக்கு அருகில் வந்ததும் நின்றது.


அவன் குனிந்து “மூன்று ” என்றான். ஜீப் கிளம்பி உள்ளே சென்று மூன்று என்று பெரிதாக எழுதிய அந்த சிறிய கூடாரத்தின் முன் நின்றது. 


அந்தக் கூடாரத்துக்கு உள்ளே இருந்து தொடர்ந்து அலறல்கள் கேட்டுக் கொண்டே இருந்தது. ஜீப்பிலிருந்து இறங்கிய அவர் தனது பெல்ட்டை சரி செய்து கொண்டார். அவர் இறங்கியதும் ஜீப் கிளம்பி மறைந்தது. 


மெதுவாக அடி மேல் அடி எடுத்து அந்தக் கூடாரத்திற்குள் நுழைந்தார். உள்ளே என்ன மாதிரியான அதிர்ச்சியை சந்திக்க வேண்டி இருக்குமோ என்ற எண்ணம் அவர் அடி வயிற்றில் எதுவோ செய்தது. 


உள்ளே, எதை நினைத்து அவர் பயந்தாரோ அதை விட பல மடங்கு கொடூரமாக இருந்தது. பதிமூன்று வயதான அந்தப் பாலகனை நிர்வாணமாக்கி, கைகள் இரண்டையும் பின்னால் கட்டி மண்டியிடச் செய்திருந்தனர். அவன் உடல் முழுவதும் சிகரெட் சுட்ட காயங்கள். அவனைச் சுற்றி ராணுவ அதிகாரிகள் சிலர் சிரித்துக் கொண்டு கைகளில் மது அல்லது சிகரெட்டோடு நின்றிருந்தனர். சில அண்டை நாட்டு ராணுவ அதிகாரிகளும் அடக்கம்.


இவர் உள்ளே நுழைந்ததைப் பார்த்த ராணுவத் தளபதி “ஹே வா வா. நீ ஒருவன் தான் பாக்கி. மற்ற எல்லாரும் தங்கள் மரியாதையைச் செலுத்தி விட்டனர். நீயும் செலுத்தி விடு.” என்று ஏதோ பெரிய நகைச்சுவையை சொன்னதை போல உரத்த குரலில் சிரித்தான். மற்றவர்களும் பலமாக சிரித்தனர்.


என்ன மரியாதை


என்ன மரியாதையா... ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா. இதோ அடுத்த தலைவன் ஆகியிருக்க வேண்டியவன். அவனுக்குத் தக்க மரியாதை செலுத்த வேண்டாமா” என்று தன் கையில் இருந்த சுருட்டை பலமாக இழுத்து அந்தச் சிறுவனின் மார்பில் அழுத்தினான் தளபதி. 


அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ” என்ற அந்தச் சிறுவனின் அலறல் எங்கும் எதிரொலித்தது.


அவர் திரும்பி நடந்தார். 


ஹே எங்கே போகிறாய்?” 


நான் சிறுநீர் கழிக்க வேண்டும்


அதற்கெதற்கு வெளியே போக வேண்டும். இதோ இப்படிப் போகலாமே” என்று அண்டை நாட்டு அதிகாரி ஒருவன் ஜிப்பைத் திறந்து அந்தச் சிறுவனின் முகத்தின் மீது சிறுநீர் கழித்தான். 


அதற்கு மேல் காணச் சகிக்காமல் திரும்பி நடந்தார். “ஹே! என்ன?” என்ற குரல் பின்னால் கேட்டது. “எனக்கு விருப்பமில்லை” என்று திரும்பிப் பார்க்காமல் சொல்லிவிட்டு கூடாரத்தை விட்டு வெளியே நடந்தார். 


போகட்டும் விடு. இவனை அவன் குடும்பத்தாரோடு சேர்த்து விடலாம்” என்று யாரோ பின்னால் சொல்வது கேட்டது.


மெதுவாக நடந்து ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். அவர் கண்களுக்கு முன் பல வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவங்கள் நிழலோவியமாக ஓடின. இடுப்பில் பொருத்தியிருந்த துப்பாக்கியைக் கையில் எடுத்தார். 


ட்டுமீல்” 


இரண்டு துப்பாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்தன.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

விசாரணை - பாகம் மூன்று

அத்தியாயம் - 2

அத்தியாயம் - 1



விரலுக்கிடையில் புகையும் சிகரெட்டின் புகை வளைந்து வளைந்து போவதையே பார்த்துக் கொண்டிருந்தான் அருண். 


சார்! செத்துப்போன சுஷ்மாவும் ரமேஷும் லவ் பண்ணியிருக்காங்க சார். இந்தப் பையன் அவள ரொம்ப உருகி உருகிக் காதலிச்சிருப்பான் போல. ஆனா அந்தப் பொண்ணு சும்மா வெளாட்டா இருந்திருக்கு. இவன் கூட பழகுற மாதிரி இன்னும் ரெண்டு மூணு பேரு கூடயும் பழகியிருக்கும் போல. இவனுக்குத் தெரிஞ்சி சண்டை போட்டிருக்கான். அது இவனப் போடான்னு சொல்லிட்டுப் போயிருச்சி. இவன் ஃப்ரெண்ட்ஸ் கிட்டயெல்லாம் கோவமா அவளத் திட்டிப் பேசிட்டு இருந்திருக்கான்”


“ஆனா இது நடந்தது ஆறு மாசத்துக்கு முன்னால தான? இப்ப அவன் அந்த மாயாவ லவ் பண்ணிட்டு இருக்கானே?”


“ஆமா சார். ஆனா இப்ப அந்த சுஷ்மாவுக்கு கல்யாணம் நிச்சயம் ஆனது தெரிஞ்சதும் இவனுக்கு மறுபடி கோவம் வந்துரிச்சி போல. அந்தப் பொண்ணுக்கு சம்பவத்தன்னிக்கு ரெண்டு மூணு தடவ பேசியிருக்கான். இவங்க ரெண்டு பேரும் பழகுனப்ப எடுத்த ஃபோட்டோ, கிஃப்ட் எல்லாம் வச்சி மிரட்டியிருக்கான். காசு கேட்டிருக்கான். காச வாங்க அந்த இடத்துக்கு வர சொல்லியிருக்கான். அப்ப ஆத்திரப்பட்டு அவள கொன்னுட்டான். திருட்டு மாதிரி காட்டுறதுக்காக அவ காசு செல்ஃபோன் எல்லாம் எடுத்துட்டு ஓடிப்போயிருக்கான். இவன நாங்க அரெஸ்ட் பண்ணும்போது அவன் வீட்டுல இந்த பேக்ல எல்லா டாகுமெண்ட்சும் இருந்திச்சி. நாலு தட்டு தட்டினா எல்லா உண்மையையும் சொல்லிடுவான். ரெண்டு நாள்ல ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்கிருவேன்.”


“நேர்ல பாத்த மாதிரி சொல்றீங்களே கருப்பையா?”


“எல்லாம் ஒரு அனுமானம் தான் சார். எத்தன கேஸ் பாத்துருக்கோம்”


“சரி கருப்பையா. நானும் கொஞ்சம் விசாரிச்சிப் பாக்குறேன். எனக்கு எதாவது க்ளூ கிடைச்சா உங்களுக்குச் சொல்றேன். சரியா?”


“அருண். உங்களுக்கு எதுக்கு சிரமம்? அதிலயும் இந்தக் கேஸ்ல எல்லா எண்டும் மூடியிருக்கு.தெவையில்லாத வேலை” சற்றே எரிச்சல் தொனிக்க சொன்னார் கருப்பையா.


சிகரெட்டைப் பாதி இழுத்த அருண் சட்டென்று நிமிர்ந்து அவரைப் பார்த்தான். 


அருணைக் கவனிக்காமல் கருப்பையா தொடர்ந்தார். “நீங்க பேசாம இருங்க. இப்ப டிப்பார்ட்மெண்ட்ல வேற இல்ல. உங்களுக்கு வீண் தொந்தரவு” எரிச்சல் எச்சரிக்கையாக மாறி விட்டிருந்தது. 


“ஓக்கே கருப்பையா. நான் ரமேஷ்கிட்ட பேசிட்டுப் போறேன்”


“சரி அருண். பத்து நிமிசம் பேசிட்டு உங்க வேலையப் பாத்துட்டுப் போங்க.”


அருண் மீதமிருந்த சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் நசுக்கிவிட்டு எழுந்தான். கருப்பையாவின் அறையை விட்டு வெளியே வந்தான். வெளியே இருந்த பெஞ்சில் மாயா உட்கார்ந்திருந்தாள். காலையில் பார்த்ததை விட இப்போது தெளிவாக இருந்தாள். தலையை வாரி குதிரை வால் போட்டிருந்தாள். காட்டன் குர்தாவும் ஜீன்ஸ் பண்ட்டும் போட்டிருந்தாள். அருணைப் பார்த்ததும் எழுந்து ஒரு ஸ்நேகமான புன்னகையை உதிர்த்தாள்.


“ஹாய் மாயா. வா நாம போய் ரமேஷைப் பாத்துட்டு வந்திடலாம்.”


“ஓக்கே அருண்.”


இருவரும் அந்த நீளமான வராந்தாவில் நடந்து லாக்கப் அருகில் இருந்த அறைக்குள் நுழைந்தார்கள். அங்கே ஒரு மேசையும் அதன் ஒரு பக்கத்தில் ஒரு நாற்காலியும் இன்னொரு பக்கத்தில் இரண்டு நாற்காலிகளும் போடப் பட்டிருந்தன. 


“இது தான் இன்கொயரி ரூம். சிட்” என்று நாற்காலியைக் காட்டினான். ஒரு சிகரெட்டை பாக்கெட்டில் இருந்து உறுவியவாறு,, “ஐ கெஸ் யூ டோண்ட் மைண்ட்” 


“ஓ. நோ ப்ராப்ளம். இன் ஃபாக்ட் ஐ கேன் ஹாவ் ஒன் டூ” என்று அருண் நீட்டிய பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உறுவி உதட்டில் பொறுத்திக் கொண்டாள்.


அருண் லைட்டரால் இருவரின் சிகரெட் நுனிகளையும் சிவப்பாக்கினான். பெண்மையின் நளினத்தோடு அவள் புகைப்பதைப் பார்த்துக்கொண்டே நுரையீரலைப் புகையால் நிரப்பினான்.


ரமேஷை இரண்டு காவலர்கள் உள்ளே நடத்திக் கொண்டு வந்தனர். அவன் சட்டைப் பொத்தான்கன் எல்லாம் அறுந்து போயிருந்தன. உதட்டின் ஓரம் கிழிந்து ரத்தம் கட்டிப் போயிருந்தது. கண்ணுக்குக் கீழே கன்றிப் போய் கறுப்பாகப் பொட்டு வைத்ததுபோல இருந்தது. அடி வாங்கி வாங்கிக் களைத்துப் போயிருந்தான். 


“ரமேஷ்!” என்று அலறியபடி எழுந்தாள் மாயா. அவள் விழிகளில் இன்ஸ்டண்ட் கண்ணீர். 


மாயாவின் கையைப் பிடித்து அமர்த்தினான் அருண் “நோ மாயா. டோண்ட் கெட் எக்சைட்டெட்” அருணின் குரலில்போலீஸ்ல இதெல்லாம் சகஜமப்பாஎன்ற தொனி.


ரமேஷ் மேசையின் அந்தப்பக்கம் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். மாயாவைப் பார்த்ததும் சிரிக்க முயற்சி செய்து அவன் உதடுகள் வலியால் கோணிக்கொண்டன.


மாயா அருணை ரமேஷுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். ரமேசின் கண்களில் ஒரு நம்பிக்கைக் கீற்று தெரிந்தது. 


“சார் சத்தியமா நான் சுஷ்மாவக் கொலை பண்ணல சார்”


“நான் நம்புறேன் ரமேஷ். ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு சில கேள்விகளுக்கு விடை தெரியணும். நீ எதுக்கு பத்து மணிக்கு அங்க போன?”


“சுஷ்மாவப் பாக்க”


“அவள எதுக்குப் பாக்கப் போன?”


“அவளோட ஐட்டம்ஸ் கொஞ்சம் என் கிட்ட இருந்தது. அவளுக்கு கல்யாணம் ஆகப் போறதுனால அதெல்லாம் என் கிட்ட இருக்குறது நியாயமாப் படல. அதான்..”


“மாயாவுக்கு இதெல்லாம் தெரியுமா?”


“இதையெல்லாம் குடுத்துடச் சொன்னதே அவ தான். ஆனா அன்னிக்கு குடுக்கப் போனது அவளுக்குத் தெரியாது. சர்ப்ரைஸா வச்சிருந்து அடுத்த நாள் சொல்லலாம்னு இருந்தேன்.”


“எத்தன மணிக்கு சுஷ்மாவ மீட் பண்றதா ப்ளான்?”


“8:30 க்கு”


“ஏன் நீ லேட்டாப் போன”


“மாயாவொட ஷாப்பிங் பொனதுல லேட் ஆயிடுச்சி. நான் சுஷ்மாவுக்கு கால் பண்ண ட்ரை பண்ணேன் சிக்னல் கிடைக்கல. 9:30க்கு அங்க போனேன். அவ இல்ல. அங்க இருந்த ஒரு பெட்டிக்கடைல கேட்டேன். அவன் பாக்கலன்னு சொல்லிட்டான். மறுபடி மறுபடி ட்ரை  பண்ணேன். மொபைல் ஸ்விட்ச்ட் ஆஃப்னு மெஸ்ஸேஜ் வந்திச்சி. 10:30 வரைக்கும் வெயிட் பண்ணிட்டு வீட்டுக்குப் போயிட்டேன்.”


“நீ வீட்டுக்கு வந்ததப் பாத்த சாட்சி யாராவது இருக்காங்களா?”


சிறிது யோசித்துவிட்டு தலையை இட வலமாக ஆட்டினான். "யாரும் பாக்கல. ஆனா நான் வீட்டுக்குப் போனதும் மாயாவுக்குக் கால் பண்ணேன்”


“இந்த மோதிரம் யாருதுன்னு தெரியுதா?”


“இது நான் சுஷ்மாவுக்கு குடுத்த கிஃப்ட் சார். இது உங்களுக்கு எப்பிடி கிடச்சது”


“எப்பிடியோ கிடச்சது. இது சாகிற வரைக்கும் சுஷ்மா கிட்ட தான் இருந்ததா?”


“ஆமா சார். நாங்க மீட் பண்ணும்போது நான் அவளுக்குக் குடுத்த கிஃப்டையும் கொண்டு வர்றதா சொல்லியிருந்தா சார்.”


“ம்ஹ்ம். நீ பொய் சொல்ற மாதிரி தெரியல. ஆனா சந்தர்ப்ப சூழ்நிலை உனக்கு பாதகமா இருக்கு. நல்ல ஒரு லாயர் கிடச்சா உன்னை இந்தக் கேஸ்ல இருந்து வெளிய கொண்டு வந்துடலாம். ஆனா யார் இந்தக் கொலைய செஞ்சிருப்பாங்கன்னு கண்டு பிடிக்கணும். தட்ஸ் மோர் இம்ப்பார்ட்டண்ட்”


“அருண் உங்க டைம் ஓவர்.” கருப்பையாவின் குரல் பின்னாலிருந்து ஒலித்தது. 


நாற்காலியில் இருந்து எழுந்து கொண்டே அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்தான். வாசலில் குறுக்காகக் கையை வைத்தபடி நின்றிருந்த கருப்பையாவைப் பார்த்து ஒரு புன்னகையை தவழ விட்டான். கருப்பையா அதை ஒரு முறைப்பைப் பதிலாகக் கொடுத்து “நோ ஸ்மோக்கிங் இன்சைட்” என்றார் சற்றே கடுமையான குரலில்.


“ஓ சாரி” என்று சிகரெட்டை மேசை மேல் அணைத்து குப்பைத்தொட்டிக்குள் எறிந்தான்.


“நான் உங்கள அப்புறமா மீட் பண்றேன்” 


வெளியே வந்ததும் மாயாவை ஏறிட்ட அருண். “லுக் ஹியர் மாயா. ரமேஷை ஈஸியாக் காப்பாத்திடலாம். ஆனா, அதோட மட்டும் நான் நிறுத்திக்க முடியாது. ஐ வாண்ட் டொ சட்ச்ஹ் தெ கில்லெர். எனக்கு இந்த இன்ஸ்பெச்டொர் கிட்ட கோ-ஆப்பரேஷன் கிடைக்கும்னு தோணல. ஐ ஆம் கோயிங் டு அப்ரோச் மை அதெர் சோர்ஸஸ்.”


“ஓக்கே அருண். நான் ஏதாவது பண்ணனுமா?”


“யெஸ். தம்புச் செட்டி தெருவில லாயர் கணேஷ்னு ஒருத்தர் இருக்கார். வெரி குட் லாயர். அவரப் பிடிச்சி ரமெஷை ஜாமீன்ல எடுக்கப் பாரு. ஐ வில் டாக் டு யூ லேட்டர்”


அருண் தன் காரில் ஏறி எஞ்சினை உயிர்ப்பித்து ஏசியைப் போட்டான். ‘இந்த கேசில் எந்த முடிச்சை முதலில் அவிழ்ப்பது’ என்ற யோசனையுடன் ட்ராஃபிக்கில் கலந்து காணாமல் போனான்.


(தொடரும்)

Thursday, November 26, 2009

கை - சிகிச்சைக்கு முன்னும் பின்னும்

எமர்ஜென்சி ரூமுக்குப் போயிட்டு வந்ததும் கை இப்பிடித்தான் இருந்தது




அப்புறம் புதன்கிழமை கை ஸ்பெசலிஸ்ட் கிட்ட போயி, அவர் கட்ட பிரிச்சி வேற “ஸ்ப்ளிண்ட்” போட்டப்புறம் இப்பிடி இருந்தது


அப்புறம் வெள்ளிக்கிழமை சர்ஜரி முடிஞ்சதும் முதல் ஃபோட்டோ மாதிரியே ஆயிடுச்சி. மறுபடி நேத்து போயி கட்டு பிரிச்சிட்டு வந்தேன். இப்போ விரல் இப்பிடி இருக்கு..


மொத்தம் பன்னெண்டு தையல் போட்டிருக்கு. மறுபடியும் ரெண்டாவது ஃபோட்டோல இருக்குற ஸ்ப்ளிண்ட்டையே போட்டிருக்கேன்..

கூடிய சீக்கிரம் கை சரியாகி ஜோதில கலந்துக்கிறேன்..

Monday, November 23, 2009

அறுவை - சிகிச்சையும் பதிவும்:

என் பதிவு மாதிரியே என் கைக்கு செய்த சிகிச்சையும் அறுவையாகி விட்டது. போன புதன் அன்னிக்கி “கை” சிறப்பு வைத்தியர்ட்ட போய் என்னோட கையக் காட்டுனேனா, அவர் விரல நீட்ட மடக்க சொல்லி நாலு புகைப்படம் எடுத்துக்கிட்டு, போயிட்டு ரெண்டு நாளு கழிச்சு வா. கையை அறுத்து உள்ளார அறுந்து போன அந்த தசைய தச்சி விட்டுடுரேன்னு சொல்லிட்டு அவர் பங்குக்கு புதுசா வேற ஒரு கட்டு போட்டு விட்டுட்டாரு.


கடேசியா போன வெள்ளிக்கிழமை போய் கையில அறுவை சிகிச்சை செஞ்சிட்டு வந்துட்டேன். அழகான செவிலியரோ மருத்துவரோ இல்லாததாலயும், மொத்த மூணு மணி நேரமும் மயக்கத்துலயே இருந்ததாலயும், சுவாரசியமான விசயம் எதுவும் பகிர்ந்துக்கிறதுக்கு இல்ல. கட்டப் பிரிக்கிற வரைக்கும் எவ்வளவு பெருசா கிழிச்சி விட்டாங்கன்னோ எத்தன தையல் போட்டிருக்காங்கன்னோ தெரியாது. அதுனால கட்டப் பிரிச்சப்புறம் ஒரு பதிவு போடுறேன்.


இதுக்கு நடுவுல அல்லாரும் பிடிச்ச/பிடிக்காதது போட்டுட்டாங்க. நம்ம பங்குக்கு நாமும் போடுவோம்:


அரசியல்’வியாதி’


பிடித்தவர்: மாசம் ஒரு ரூவா சம்பளம் வாங்கினாலும், மகனோட திருமணத்த நூறு கோடி செலவுல செய்யலாம்னு காட்டி, தெனக்கூலி பத்து ரூவா வாங்குற ஏழை பாளைகளோட நம்பிக்கையைக் கூட்டுனதுக்காக புரட்சித்தலைவி அம்மா செல்வி.ஜெயலலிதாவ எனக்குப் பிடிக்கும்
பிடிக்காதவர்: முதல்ல அரசியல்ல இருந்து ஓய்வு பெறுவது அப்படிங்கிறதே தப்பு. அதுல அப்பிடி ஓய்வு பெறும்போது கட்சிக்காரங்க காசு பொரட்டி குடுத்தா அதக் கட்சிக்கே நிதியா திருப்பி குடுக்குறதுங்கிறது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? அப்படிப்பட்ட அயோக்கியர் நல்லகண்ணுவ எனக்கு சத்தியமாப் பிடிக்காது.


இயக்குநர்


பிடித்தது : நாலு குத்துப் பாட்டு, நாலு சண்ட, நாலு குத்து வசனம் வச்சா போதும் தமிழ்நாட்டுல சினிமா எடுத்து ஓட விட்டுடலாம்னு நிரூபிச்சதுனால இயக்குநர் பேரரசுவ எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
பிடிக்காதது: படம் முடியும்போது கதாநாயகன் வெற்றி அடைஞ்சி, கதாநாயகி மார்புக்குள்ள மோந்து பாத்துட்டு வணக்கம் போட்டுட்டு இருக்கும்போது, பாண்டி மடத்துக்கு திரும்பிப் போற கதாநாயகன், அம்மா கையால விசம் சாப்பிட்டு செத்துப்போற கதாநாயகன்னு முடிவு வச்சி படம் பாத்துட்டு போறவங்கள கனத்த மனசோட வீட்டுக்கு அனுப்புற பாலாவ எனக்கு சுத்தமா பிடிக்காது. இதுல இவரோட நிக்காம, அமீரு, சசிக்குமாருன்னு ஒரு கூட்டத்தையே வேறக் கிளப்பி விட்டுட்டாரு.


இசை


பிடித்தது: இந்தப் படத்து பாட்டா இல்ல அந்தப் படத்து பாட்டான்னு கண்டு பிடிக்கவே முடியாத அளவுக்கு ஒரே மாதிரி லாலாலா பாட்டு தந்து அசத்துற எஸ்.ஏ.ராஜ்குமாரோட இசை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
பிடிக்காதது: முந்தி ஒரு பாட்ட கேட்டா யாரு பாடுனதுன்னு சரியா கண்டு பிடிச்சிடலாம். ஆனா இன்னிக்கி? ஒரே மாதிரி போயிட்டிருந்த தமிழிசைய அடுத்தக் கட்டதுக்கு எடுத்துட்டுப் போயி, புதுசு புதுசா பல பாடகர்களும், இசையமைப்பாளர்களும் பெருகி வர்றதுக்கு ஒரு காரணியாய் அமைஞ்சு போன ஏ.ஆர்.ரஹ்மான்


நடிகர்


பிடித்தது: நடிகன்னா ஒரு மேதாவித்தனம், ஒரு கர்வம், ஒரு செருக்கு இருக்கணும்னு சரியா புரிஞ்சுக்கிட்டு, பள்ளிக்கோடத்துக்கிப் போயி படிக்கலியின்னா கூட, திருமணங்கள் பல தோல்வியில் முடிகிறது. அதனால் திருமணமே தேவையில்லைன்றத மாரி உன்னத கருத்துக்கள் பல சொல்ற கமலஹாசன் எனக்கு ரொம்பவும் பிடிச்ச நடிகர்.
பிடிக்காதது: படம் ஓடலயின்னா தயாரிப்பாளர் தலையிலயோ இல்ல இயக்குநர் தலைலயோ பொறுப்ப தூக்கிப் போட்டுட்டு போவாரா, அத உட்டுட்டு நஷ்டமான விநியோகஸ்தர்களுக்கு குடுத்த காச திருப்பி குடுக்குறதுன்னு தமிழ் சினிமாவுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாப் போன ரஜினிகாந்த் ரொம்பவேப் பிடிக்காது.


நடிகை


பிடித்தது: கதை எவ்வளவு பெருசா இருந்தாலும் கவலை இல்லை, எனக்கு குடுக்குற உடை மட்டும் சின்னதாத்தான் இருக்கணும் அப்படிங்கிற மா பெரிய கொள்கை கொண்ட மச்சான் நமீதாவ எனக்குப் பிடிக்கும்
பிடிக்காதது: ஷபனா ஆஸ்மியோட ஓரினச் சேர்க்கைக் காட்சிகள்ல நடிக்கும்போது உங்களுக்கு எப்பிடி இருந்ததுன்னு கேட்கப்பட்ட ஒரு சுவாரசியமான கேள்விக்கு உங்க மனைவிக்கிட்ட போய் கேளுங்கன்னு அசிங்கமா பதில் சொன்ன நந்திதா தாஸ்ச எனக்கு சுத்தமாப் பிடிக்காது.

பாடலாசிரியர்


பிடித்தது: தமிழ் மேடையில் அழுகின்ற குழந்தைக்குப் பாலூட்டும் தாய், திரையுலகிலே எறிகின்ற எலும்புக்கு வாலாட்டும் நாய் அப்படிங்கிற ஒரு சுய விளக்கத்த தனக்குத்தானே கற்பிச்சிட்டு அதன்படி வாழ்ந்தும் வர்ற, காலத்தால் அழியாத எப்படி எப்படி சமஞ்சது எப்படிங்கற அறிவுப்பூர்வமான கேள்விப்பாடல் எழுதின வாலி.
பிடிக்காதது: பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வாய மூடிட்டு இருக்கும்போது, கலைஞரின் ஆட்சி தமிழர்களின் அமாவாசை, அதிமுகவின் ஆட்சி அதற்கு அடுத்த நாள் அப்படின்னு அதிகப் பிரசங்கியா இலங்கைத் தமிழர்களுக்குக்காகக்  குரல் கொடுத்த தாமரை.


எழுத்தாளர்


பிடித்தது: ஒரே மாதிரியான கதை வடிவத்தை, நடையை பெண்களின் சோக உணர்வைத் தூண்டி அவர்களை அழ வைக்கிற மாதிரியான பல வெற்றிக் கதைகளை எழுதி, இன்னக்கி பல வருசமா ஓடுற தொலைக்காட்சித் தொடர்களுக்கு எல்லாம் முன்னோடியாகத் திகழுற ரமணி சந்திரன்
பிடிக்காதது: கதை, கட்டுரை எழுதுறதுகு பி.ஏ தமிழ் படிச்சிருக்க வேண்டாம் பி.டெக் மின்னணுவியல் கூடப் படிச்சிருக்கலாம். பேனா எடுக்க முடிஞ்சா எழுத்தாளன், இன்னக்கி பொட்டி தட்டத் தெரிந்த “அரை வேக்காடு”கள் எல்லாம் பதிவர்னு இருக்கக் கூடிய சூழலை உருவாக்கியதற்காக சுஜாதா


விளையாட்டு வீரர்


பிடித்தது: தன் குடும்பத்தைப் பற்றி எதோ தவறாக சொல்லிவிட்டதற்காக ஒட்டு மொத்த உலகமும் பார்ப்பதையும், பல சிறுவர்கள் தன்னை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு இருப்பார்கள் அப்படிங்கிறதையெல்லாம் பத்தி கவலைப் படாம பழி வாங்குறதே முக்கியம்னு தலையால முட்டித் தள்ளின ஜிடேன்.


பிடிக்காதது: பதினாறு வயசுல வெளயாட வந்துட்டு இருபது வருசமா வெளயாடிக்கிட்டு, 12ம் வகுப்புல பரிச்சையில தவறிப்போயி அப்பா அம்மா திட்டினா, சச்சினுக்குக் கூட தான் பன்னண்டாப்பு புட்டுக்கிச்சி. இன்னிக்கு எம்புட்டு சம்பாதிக்கிராரு என்று தப்பான முன்னுதாரணமா இருக்குற சச்சின் டெண்டுல்கர்.


பதிவர்கள்


பிடித்தது: “அறிவு ஜீவிகள்” அத்தனை பேரும்
பிடிக்காதது: வெளிப்படையாக விமர்சனம் செய்யும் எவரும்

பி.கு: கஷ்டப்பட்டு ஆங்கிலமே கலக்காம எழுத முயற்சி செஞ்சிருக்கேன். பிடிச்சிருந்தா பாராட்டுங்க. கேவலமா இருந்தா நாலு வார்த்த நறுக்குன்னு கேட்டுட்டு போங்க

Sunday, November 15, 2009

கடை லீவு

சனிக்கிழமையானா லேட்டா பத்து மணிக்கு எந்திரிச்சி, பல்லு மட்டும் வெளக்கிட்டு தங்கமணி போட்டுத் தர டீயக் குடிச்சுப்புட்டு, சோஃபால கால நீட்டி உக்காந்துக்கிட்டு, கைல ரிமோட்டோட டீ.வி சேனல்களை மேஞ்சிக்கிட்டே இருந்தோம்னா மணி 12:30 ஆனதும் சுட சுட சாப்பாடு தயாராகி இருக்கும் அத சாப்புட்டுட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டு சாயந்திரம் எழுந்திருக்கலாம்.

இத உட்டுட்டு இந்த வாரம் தங்கமணிக்கு ஹெல்ப்பு பண்றேன்னு சொல்லி, காய்கறி நறுக்குரேன் பேர்வழின்னு கை விரலை நறுக்கிக்கிட்டு, எமெர்ஜென்சி ரூம் போய், 3 மணி நேரம் கழிச்சு, கையில பெரிய மாவுக்கட்டோட வீட்டுக்கு வந்தா தங்க்ஸ் கேக்குராங்க, விரல்ல லேசா கிழிச்சிக்கிட்டேன்னு தான போன இப்ப என்ன கைய முறிச்சிக்கிட்ட மாதிரி பெரிய கட்டோட நிக்கிறன்னு...

நான் என்னத்த சொல்றது? காயம் என்னவோ சுண்டு விரல்ல ரெண்டு செ.மீ அகலம் தான். ஆனா ஆழம் கூடிப்போச்சு போல. என் சுண்டு வெரலோட மேல இருக்குற எலும்பையும் தசைகளையும் இணைக்குற டெண்டனை அறுத்துட்டதால என் சுண்டு வெரல மடக்கவே முடியல. அதுனால வெறும் தையல் மட்டும் போட்டு விட்டு மூனு நாள் கழிச்சி கை ஸ்பெசலிஸ்ட் ஒருத்தர் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் போட்டு சர்ஜரி பண்ணனுமா வேண்டாமான்னு கேட்டுக்க, அது வரைக்கும் கைய அசைக்காம இருன்னு ஒரு மாவுக்கட்டு போட்டு உட்டுட்டா அந்த டாக்டர். ஏதோ அவ அழகா இருந்ததுனால ரொம்ப பதில் பேசாம சொன்னதுக்கு எல்லாம் மண்டைய மண்டைய ஆட்டிட்டு வந்துட்டேன். (இதுல டாக்டரப் பத்தி சொன்னத மட்டும் தங்க்ஸ் கிட்ட சென்ஸார்ட்).

அதுனால மகா ஜனங்களே! வெட்டுப்பட்ட விரல் வலது கையில இருக்குறதுனாலயும், நான் இடது கைப்பழக்கம் இல்லாதவனா இருக்குரதாலயும் கை சரியாகுர வரைக்கும் கடைக்கி லீவு.

மத்தவுங்க பதிவயெல்லாம் தொடர்ந்து படிப்பேன்னும், பின்னூட்டம் போட்டே ஆகனும்னு நெனக்கிம்போது பின்னூட்டம் பொடுவேன்னும் சொல்லிக்கிறேன்.

Friday, November 13, 2009

நீண்ட நெடிய இருபது வருடங்கள்

1989ம் வருடம். ஸ்ரீகாந்த் தலைமையில் இந்திய அணி பாகிஸ்தானின் சுற்றுப் பயணம் செய்கிறது. அந்த அணியில் இடம் பெற்றிருந்தான் பதினாறு வயதே நிரம்பிய அந்தச் சிறுவன். அவனைப் பற்றி கிரிக்கெட்டின் பெரிய ‘தல’ கவாஸ்கர் பெருமையாகச் சொல்லியிருந்தார். முதல் டெஸ்ட் மேட்ச் அவ்வளவாக சோபிக்கவில்லை. கவாஸ்கர் ஊர்ப்பாசத்தில் பேசியிருக்கிறார் என்று தான் நினைத்தோம். பாகிஸ்தானிலும் அச்சிறுவனைக் கேலி செய்யும் வண்ணம் பேனர்கள் வைத்திருந்தார்கள். “பால் குடிக்கும் குழந்தையே, வீட்டுக்குப் போய் பால் குடி” என்று.

இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஒரு கண்காட்சிப் போட்டி. அதில் முஸ்தாக் அகமதுவின் ஓவரில் இரண்டு சிக்ஸர் விளாசியிருந்தான் அச்சிறுவன். அப்போது உலகின் தலை சிறந்த சுழல் பந்து வீச்சாளர் அப்துல் காதிர் (முஸ்தாக் அகமதுவின் குரு) அச்சிறுவனை நோக்கி - “ஏன் சிறுவர்களின் பந்து வீச்சை அடிக்கிறாய்? என் பந்தை அடித்துப் பார்?” என்று சவால் விடுத்துவிட்டு பந்து வீச வந்தார். அந்தச் சிறுவனும் அவரது சவாலை ஏற்றுக் கொண்டான். அந்த ஓவர் முடிந்த போது ஸ்கோர் கார்ட் இப்படி இருந்தது - 6 0 4 6 6 6. சச்சின் என்ற பேட்ஸ்மெனை உலகம் கண்டு கொண்டது.

அந்தச் சிறுவன் இன்றுடன் சர்வதேச கிரிக்கெட் விளையாடத் தொடங்கி 20 வருடங்கள் நிறைவு பெருகின்றன.

இருபது வருடங்கள் ஒரு பணியில் இருப்பது பெரிய விசயமில்லை. ஆனால் அப்பணி விளையாட்டுத் துறையில் விளையாட்டு வீரராக என்றால்? பெரிய விசயம் தான் இல்லையா? அதுவே இருபது வருடங்களாக தலை சிறந்த விளையாட்டு வீரராக? கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

சச்சின் ஆரம்ப காலங்களில் இருந்து இன்று வரை பேட்டிங் செய்ய களத்தில் இறங்கும் போதும் நூறு கோடி இந்தியர்களும் அவர் மீது வைக்கும் எதிர்பார்ப்பு? அவர் அவுட்டாகிவிட்டால் உடைந்து போகும் இந்திய அணியைப் பின்பற்றுபவர்களும், கூத்தாடும் எதிர் அணியைப் பின்பற்றுபவர்களும் இருபது வருடங்களாக இருக்கத்தானே செய்கிறார்கள்? அன்று முதல் இன்று வரை இந்திய அணியின் மதிப்பு வாய்ந்த விக்கெட்டாகக் கருதப்படுவது சச்சினின் விக்கெட் தானே?

அவரின் திறமைக்குச் சான்றாக எத்தனையோ ஆட்டங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். வயதாகிவிட்டலும் தன் திறமை சற்றும் மங்கவில்லை என்பதைக் காட்டும் வண்ணம் ஹைதராபாத்தில் 175 ரன் எடுத்தாரே? மறக்க முடியுமா?

இந்திய கிரிக்கெட் என்னும் மதத்தின் கடவுளாக விளங்கும் சச்சின் இன்னும் பல ஆண்டுகள் விளையாட வேண்டும் என்பது என் விருப்பம் தான் ஆனால் அதற்கு அவர் உடல் ஒத்துக் கொள்ளுமா என்று தெரியாததால், 2011 உலகக் கோப்பைப் போட்டிகள் வரையாவது அவர் விளையாடி இந்தியாவுக்கு கோப்பையைப் பெற்றுத் தர வேண்டும்.

இன்று இருபது ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் சச்சினை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

Thursday, November 12, 2009

முட்டுச் சந்து (தொடர் பாகம் இரண்டு)

அத்தியாயம் - 1

ஒரு பேப்பர் பேனாவை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தான் அருண். கணினியில் பார்த்த இந்தக் கொலை பற்றிய செய்திகளைக் கீழ்க்கண்டவாறு பேப்பரில் எழுதினான்.

1. பெண்ணின் பிணத்தைப் பார்த்தது மூன்று நாட்களுக்கு முன் அதிகாலை 4:00 மணி
2. பெண்ணின் கைப்பை பிணம் கிடந்த இடத்துக்கு சற்று தள்ளி கிடந்தது.
3. அதில் இருந்த பணம், செல்ஃபோன் ஆகியவை காணக்கிடைக்கவில்லை
4. பிணத்திலும் நகைகள் எதுவுமில்லை - தோடு தவிர
5. பிரேதப் பரிசோதனையின் படி கொலை சுமார் இரவு 11:00 மணிக்கு நடந்திருக்கலாம்.
6. போலிஸ் முதலில் இது பணத்துக்காக செய்யப்பட்ட கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம்.

7. பின் பெண்ணின் - பெயர் சுஷ்மா -  நண்பிகளிடம் விசாரித்ததன் பேரில் முன்னாள் காதலன் ரமேஷ் மீது சந்தேகம்.
8. ரமேஷை அழைத்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சந்தேகம் வலுவடைகிறது.
9. ரமேஷை போலிஸ் சந்தேகத்தின் பேரில் கைது

பதில் தெரியாத கேள்விகள்
1. அந்தப் பெண் இரவு 11:00 மணிக்கு எதற்காக அங்கே வந்தாள்?
2. ரமேஷுக்கும் அவளுக்கும் உறவு முறிந்த பின், (ஒரு வேளை ரமேஷ் அழைத்திருந்தால்)ரமேஷ் அழைத்து அங்கே வர வேண்டிய காரணம் என்ன?
3. இல்லை வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு பின் பிணம் இங்கே வீசப்பட்டிருந்தால், வாகனம் எதுவுமில்லாமல் நடந்திருக்காது. அப்படி (வாடகை அல்லது சொந்த) வாகனம் எதுவும் பயன்படுத்தப்பட்டிருப்பது பதியப்பட்டிருக்கிறதா?
4. ரமேஷ் அந்த நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தான்?
5. ரமேஷ் தவிர இந்தக் கொலையில் ஈடுபட்டிருக்கக் கூடிய மோட்டிவ் உள்ள ஆட்கள் வேறு யார் யார்?

இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிந்தால் ஓரளவுக்கு இந்தக் கேஸில் தீர்வை நெருங்கிவிட முடியும் என்று அருண் நம்பினான்.

ஒரு முடிவுக்கு வந்து விட்டவனாக பாத்ரூமுக்குள் நுழைந்தான்.

*********************************************************************************************

அருணின் ஸ்விஃப்ட் வேளச்சேரியிலிருந்து தாம்பரம் செல்லும் சாலையில் வழுக்கிக் கொண்டு இருந்தது. சுஷ்மாவின் பிணம் இருந்த இடத்துக்கு அருகில் வந்ததும் காரை நிறுத்தி இறங்கினான்.

சற்றுத் தள்ளி ஒரு பெட்டிக் கடை இருந்தது. அருண் பிணம் கிடந்த இடத்தை சுற்றி கண்களால் துழாவினான். போலிஸ் இந்த இடத்தை சல்லடை போட்டுத் தேடியிருப்பார்கள். அவர்கள் கண்களுக்குத் தென்படாத எதாவது க்ளூ கிடைக்கலாம். பிணம் கிடந்த இடத்துக்கு பத்து மீட்டர் தள்ளி ஒரு பொருளில் சூரிய ஒளி பட்டு பிரகாசித்தது. பக்கத்தில் போய் பார்த்தான். யாரோ குடித்துவிட்டு உடைத்துப் போட்ட குவாட்டர் பாட்டிலின் துண்டு. ஷூக்காலால் வெறுப்புடன் அதை உதைத்தான். அது சற்றுத் தள்ளிப் போய் விழுந்தது.

ரோட்டோரமாக நடந்து அந்தப் பெட்டிக் கடையை நெருங்கினான். ஒரு சிகரெட் வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டே, அந்தப் பெட்டிக்கடைக்காரனிடம், “ஏம்ப்பா, மூணு நாளைக்கு முன்னாடி இந்த இடத்துல ஒரு பொணம் கிடந்ததாமே. உனக்கு எதுவும் தெரியுமா?”

அய்யோ ஆமா சார். அந்தப் பொணத்தால அன்னிக்கி எனக்கு யாவாரமே ஆவல. யாரோ சின்னப் பொண்ணு சார். இருவது இருவத்தஞ்சி வயசுதான் இருக்கும். எவனோ கழுத்த அறுத்துப் போட்டுட்டுப் போயிட்டான் சார்.”

நீ பொணத்தப் பாத்தியா?”

பாத்தேனேவா? நாந்தா சார் போலீசுக்கு சொன்னதே?”

பொணம் எந்த எடத்துல இருந்ததுன்னு காட்ட முடியுமா?”

“இன்னாத்துக்கு நீ இத்தயெல்லாம் கேக்குற? நீ போலீசா?”

“போலீசு மாதிரி தான்.”

“ஓ தனியார் துப்பறியும் போலீசா?”

“ஆமான்னு வச்சுக்கயேன். அந்த இடத்த காட்டு வா”

“இந்த இங்க தான் சார் கிடந்தது பொணம். கையில கழுத்துல எல்லாம் ஒண்ணுமே இல்ல சார். பக்கத்துல கூட ஒண்ணியும் இல்ல. போலீசு வந்து கைப்பையை கொஞ்சம் தொலவுல கண்டுபிடிச்சாக”

அருண் அவனை சந்தேகமாகப் பார்த்தான். “வேற எதாச்சும் பாத்தியா?”

“சேச்சே அதெல்லாம் இல்ல சார்.”

“இங்க பாரு.. உம்பேரு என்ன?”

“மாரி சார்”.

“ம்ஹ்ம், மாரி. நீ வேற எதயோ பாத்திருக்க. உண்மைய சொல்லிட்டின்னா விட்டிர்றேன். இல்லன்ன போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டியிருக்கும். என்ன சொல்ற?

அருணின் குரலில் இருந்த போலீஸ் மிடுக்கு மாரியை மிரட்டி இருக்க வேண்டும்.

என்ன சார் சொல்ற?”

“நீ எதயோ பாத்துருக்க இல்லன்ன எடுத்திருக்க. எதுக்காக என்கிட்ட கைல கழுத்துல எல்லாம் ஒண்ணுமில்லன்னு சொல்ற? நான் கேக்கவேயில்லயே?”

அய்யோ சார். என்ன மன்னிச்சிரு சார். பொணத்துக்கு பக்கத்தால ஒரு மோதிரம் இருந்திச்சி சார். நான் தான் காசுக்கு ஆசப்பட்டு எடுத்து வச்சுக்கிட்டேன் சார். குடுத்துடுறேன் சார்”

இங்க வச்சிருக்கியா இல்ல வீட்டுலயா?”

இங்க தான் சார் வச்சிருக்கேன். ஒரு மாசம் கழிச்சி என் பொண்டாட்டிக்கு குடுக்கலாம்னு இருக்கேன் சார்”

பணம் வாங்கிப் போட வைத்திருக்கும் பெட்டியில் துழாவி ஒரு மோதிரத்தை எடுத்து நீட்டினான்.

"R" என்று பொறிக்கப்பட்ட ஆண்கள் அணியும் மோதிரம் அது. கையில் வாங்கிப் பார்த்த அருண் பைக்குள் இருந்து ஒரு ziplock பையை எடுத்து அதற்குள் மோதிரத்தைப் போட்டு பைக்குள் வைத்துக் கொண்டான்.

போலீஸ் வேற என்ன விசாரிச்சாங்க?”

அதுக்கு முந்துன நாளு ஒரு பையன் சுமார் பத்து மணி சுமாருக்கு அந்த எடத்துக்குக் கிட்ட மோட்டார் பைக்க நிறுத்திட்டு மேல உக்காந்திருந்தான் சார். யாருக்கோ காத்துட்டு இருந்த மாதிரி. நான் கடை அடைக்கிற வரைக்கும் நின்னுட்டிருந்தான். அத்த போலீஸ்ல சொன்னேன். அவன போட்டோ கொண்டு வந்து இவனான்னு கேட்டாங்க. நானும் ஆமான்னு சொன்னேன். பின்னாடி கோர்ட்டுக்கு வந்து சாச்சி சொல்லனும்னு சொல்லியிருக்காங்க.”

வேற எதயாவது போலீஸ்ல சொல்லாம விட்டுட்டியா?”

வேற எதுவுமில்ல சார். இந்த மோதரத்த தவுர

அருணின் போலீஸ் மூளைக்கு மாரி பொய் சொல்லவில்லை என்றே தோணியது.

சரி உன்ன நம்புறேன். வேற எதாவது நினவுக்கு வந்தா இந்த நம்பருக்கு போன் பண்ணு” தனது செல் நம்பரை ஒரு சிகரெட் அட்டையின் பின் எழுதி மாரியிடம் கொடுத்து விட்டு காரை நோக்கி நடந்தான்.

*******************************************************************************************

அருண் அவனது காரை மடிப்பாக்கம் S7 காவல் நிலையத்துக்கு வெளியே பார்க் செய்தான். நீண்ட நாள் கழித்து ஒரு கேஸில் ஈடுபடும் உற்சாகம் அவன் விசிலில் தெரிந்தது.

வெளியே நின்றிருந்த கான்ஸ்டபிள் அருணைப் பார்த்ததும் ஒரு சல்யூட் அடித்தார்.

சார் எப்பிடி இருக்கிங்க? சொந்த ஊருக்கே போயிட்டதா சொன்னாங்க. இப்ப இங்க தான் சார் இருக்கேன்

பாண்டியன். நல்லா இருக்கிங்களா? இங்க கொஞ்ச நாள் ஊருல கொஞ்ச நாளுன்னு இருக்கேன். பையன் என்ன படிக்கிறான்?”

சார் நல்லா நியாபகம் வச்சிருக்கிங்களே? அஞ்சாவது படிக்கிறான் சார். இன்னமும் நீங்க வாங்கிக் குடுத்த சைக்கிள் வச்சிருக்கான் சார்.”

நல்லது பாண்டியன். எஸ்.ஐ இல்லன்னா இன்ஸ்பெக்டர் இருக்காரா?”

இருக்காரு சார். நம்ம கருப்பையா சார் தான் இன்ஸ்பெக்டர். என்ன சார் விசயம்?”

எனக்கு தெரியும் பாண்டியன். பெருசா ஒண்ணுமில்ல. உங்கள அப்புறம் பாக்குறேன்.

தொப்பியைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டு சொட்டைத்தலையைச் சொறிந்து கொண்டிருந்த கருப்பையா அருண் அறைக்குள் நுழைவதைப் பார்த்ததும் எழுந்து,
வாங்க அருண் சார். எப்பிடி இருக்கிங்க? ” என்றார்.

நல்லா இருக்கேன் சார். நீங்க எப்பிடி இருக்கிங்க?”

எதோ போகுது சார். அப்புறம் என்ன இவ்வளவு தூரம்?”

கான்ஸ்டபிள் ஒருவர் உள்ளே வந்தார். “சார் அந்தப் பொண்ணு மாயா வந்திருக்கு. ரமேஷைப் பாக்கணுமாம்.”

வெயிட் பண்ணச் சொல்லுய்யா. சார் கூட பேசிட்டு இருக்கேன்ல

நானும் அந்த விசயமாத்தான் வந்துருக்கேன். அந்தப் பொண்ணு காலைல என்ன வந்து பாத்துச்சு. இந்த கேஸ்ல ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேட்டுச்சு. ரெண்டு வருசமா சும்மா இருந்து மூளை துருப்பிடிச்ச மாதிரி ஆயிருச்சு. சரி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கலாம்னு வந்தேன்

சட்டென அலெர்ட்டான கருப்பையா  “இந்தக் கேஸ் வேண்டாம் அருண்”

சம்திங்க் ஃபிஷி’ என்று நினைத்த அருண், “என்னாச்சு கருப்பையா? ஏன் இப்படி சொல்றீங்க?” என்றான் கண் நிறைய ஆச்சரியத்தைத் தேக்கியபடி.

வரவழைத்துக் கொண்ட சாந்தத்தோடு “இல்ல அருண். நல்லா விசாரிச்சாச்சு. எந்தப் பக்கமாப் போய் பாத்தாலும் ரமேஷ் கிட்டத்தான் கொண்டு வந்து விடுது. இது ஒரு டெட் எண்ட்

அருண் கருப்பையாவின் கண்களையே ஊடுருவிப் பார்த்தான்.

(தொடரும்)

பி.கு: டெட் எண்ட் என்பதற்கு முட்டுச் சந்து என்பது சரியான தமிழாக்கமா? யாராவது சொல்லுங்களேன்?

Wednesday, November 11, 2009

எப்போது ஆகும் இப்படி என் நாடு?

நேத்திக்கு ரீப்ளேஸ்மெண்ட் டிரைவிங் லைசன்ஸ் அப்ளை பண்ண டி.எம்.விக்குப் போனேன். அங்க உள்ள போனதும் ஒரு வரிசை. அல்லாரும் அதுல போய்தான் நிக்கணுமாம். நானும் போய் நின்னேன். ஒரு அஞ்சு நிமிசம் கழிச்சி என் டர்ன் வரவும் அங்க இருந்த அம்மாக்கிட்ட போய் நின்னேன்.

அவுக உடனே, என்ன விசயமா வந்திருக்க தம்பின்னு கேட்டாக. நானும் யக்கா, என் டிரைவிங் லைசன்ச தொலச்சிப்புட்டேன். டூப்ளிக்கேட்டு குடுப்பியளான்னு கேட்டேன். அந்த அக்கா, ஆறு பாயிண்ட்க்கு ஐடி ப்ரூஃப் வச்சிருக்கியான்னு கேட்டாங்க. நானு என்கிட்ட இருந்த பாஸ்போர்ட்டு(3 பாயிண்டு), சோசியல் செக்யூரிட்டி கார்டு(2 பாயிண்டு) அப்புறம் பேங்க் செக் புக்(1 பாயிண்டு) எல்லாம் குடுத்தேன். அவுக வாங்கி பாத்துட்டு அல்லாஞ்சரியாத்தான் இருக்கு, இந்த அப்ளிக்கேசன் பாரத்த புல்லப் பண்ணு அப்பிடின்னு சொல்லிட்டு என்னய ஒரு போட்டா புடிச்சிக்கிட்டாக. அப்புறம் கையில ஒரு சிட்டையக் குடுத்தாக. இந்த சிட்டையில இருக்குற நம்பர கூப்புடுற வரக்கும் வெயிட்டு பண்ணு அப்பிடின்னு சொன்னாக.

வெயிட்டு பண்ணுற நேரத்துல அந்த அப்ளிக்கேசன் பாரத்த புல்லப் பண்ணுனேன். அதுக்கப்புறம் இருந்த எடந்தான் கொஞ்சம் கோக்கு மாக்கா இருந்திச்சி. சுத்தி ‘ப’ மாதிரி சேப்புல பேங்க் கவுண்டர் மாதிரி வச்சி அதுக்கு பின்னாடி எல்லாம் அக்காமாருங்களா உக்காந்துட்டு இருந்தாங்க. நடுவுல இருந்த எடத்துல நெறய சேரு போட்டு அல்லாரும் அதுல உக்காந்து இருந்தாய்ங்க. நானும் போய் அவிங்க கூட உக்காந்துக்கிட்டேன்.

அங்கன ஒரு பெரிய எலக்ட்ரானிக் போர்டுல வரிசையா நம்பரும் எந்தக் கவுண்டருக்குப் போகணும் அப்படிங்கற வெவரத்தையும் போட்டுட்டே இருந்தாங்க. ஒவ்வொருத்தருக்கும் ரெண்டுல இருந்து அஞ்சி நிமிசம் வரைக்கும் எடுத்துக்கிட்டாக. என் நம்பர் எப்ப வரும்னு சுமார் ஒரு பதினஞ்சி நிமிசம் காத்துட்டு இருந்தப்புறம் என்னய கூப்பிடாக.

அங்க ஒரு அக்கா, அசப்புல நம்ம வடிவுக்கரசி மாறி இருந்தாக. அவுக கிட்ட போயி என் அப்ளிக்கேசன குடுத்தேன். வாங்கிப் பாத்துட்டு டாக்குமெண்ட்ஸ் எல்லாம் கேட்டாக. நானுங்குடுத்தேன். அதையும் சரி பாத்துட்டு பன்னெண்டு டாலர் அம்பது சென்டு காசு குடுக்க சொன்னாக. குடுத்ததும், ஒரு டெம்பரரி லைசன்ஸ் குடுத்துட்டு, இன்னும் ஏழு நாளக்குள்ள ஒரிசினல் வந்துருந்தம்பி கவலப்படாம வூட்டுக்குப் போன்னு சொன்னாக. ஏன்க்கா, பாஸ்ப்போர்ட்டுக்குள்ளயோ இல்ல அப்ளீக்கேசனுக்குள்ளயோ நான் அம்பதோ நூறோ வக்கிலியே? எப்பிடி எனக்கு உடனே லைசன்சு குடுத்தீகன்னு கேக்கலாம்னு நாக்கு நுனி வரிக்கும் வந்திருச்சி. எப்பிடியோ அடக்கிக்கிட்டு வந்துப்பிட்டேன்.

ஆக வீட்டுல இருந்து கிளம்பி 3 மைல் போயி அங்க ஒரு அரை மணி நேரம் நின்னு 3 நிமிசம் கவுண்டர்ல செலவு பண்ணி, திரும்ப 3 மைல் வீட்டுக்கு வரன்னு மொத்தமா ஒரு மணிநேரம் ஆயிப்போச்சி.

இதுவே இந்தியாவா இருந்தா? மொதல்ல ஒரு ட்ரைவிங் ஸ்கூலப் பிடிக்கணும். டிரைவிங் ஸ்கூல் எதுவும் தெரியாதா, அப்ப ஆர்.டி.ஓ ஆபிஸுக்கு வெளிய நிக்கிற புரோக்கர்ல யாரையாவதுப் பிடிக்கணும்.

அவுக என்ன என்ன டாக்குமெண்டு வேணும்னு சொல்லுவாக.
1. ரேசன் கார்டு - ரேசன் கார்டு இல்லைன்னா ஐநூறு ரூவா
2. பத்தாப்பு மார்க் சீட்டு - இல்லைன்னா இருநூறு ரூவா
3. பேங்க் பாஸ் புக்கு - இல்லன்னா அம்பது ரூவா
4. அப்ளிக்கேசன் பார்முக்கு 25 ரூவா. அத ஃபில்லப் பண்ண 75 ரூவா
5. லைசன்சு இஷ்யூ பண்ண ஆபிசருக்கு இருநூறு ரூவா
6. ஆர்.டி.ஓவுக்கு இரு நூறு ரூவா
7. புரோக்கருக்கு கமிசன் இருநூறு ரூவா
ஆக சேத்து ஒரு ஆயிரத்தி ஐநூறு ரூவா குடுத்தா, ஒரு அரை மணி நேரத்துல லைசன்ச கையோட கொண்டு வந்து குடுத்துடுவாக. மேல சொன்ன மாதிரி அலைஞ்சு அப்புறம் தபால்ல லைசன்ஸ் வர்ற வரைக்கும் காத்திருக்க வேண்டியதே இல்ல.

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமான்னா யாருக்கும் புரிய மாட்டேங்குது. என்ன பண்ண சொல்றீங்க?

Tuesday, November 10, 2009

வாசலில் ஒரு பௌர்ணமி

சூரியன் சோம்பலுடன் மெதுவாக மேகப் போர்வைக்குப் பின்னாலிருந்து எட்டிப்பார்க்கும் மார்கழி மாதக் காலை நேரம். தெருவெங்கும் கன்னி(?!)ப் பெண்கள் கோலம் போடும் மும்முரத்தில் இருந்தார்கள். ஆட்டை மேச்சா மாரியும் ஆச்சு அண்ணனுக்கு பொண்ணு பாத்தா மாரியும் ஆச்சு என்பது போல பெருசுகள் காலை வாக்கிங்கையும் பால் பாக்கெட் வாங்கும் கடமையையும் ஒரு சேர செய்துகொண்டு இருந்தார்கள். பேப்பர்க்காரச் சிறுவன் ஒவ்வொரு வீடாக பேப்பரை விசிறி விட்டு போய்க்கொண்டிருந்தான்.

அவள் அந்த வீட்டின் வெளியே அழகுக்காக போடப்பட்டிருந்த அந்த சிறிய சைஸ் பாறையில் உட்கார்ந்திருந்தாள். மார்கழிப் பனியில் அவளே அவசரமாகப் போடப்பட்ட கோலம் போலத் தெரிந்தாள். அழுது அழுது சிவந்திருந்தன அவள் கண்கள். ஏனோ தானோவென்று சீவப்பட்டு ஒற்றை ரப்பர் பேண்டால் குதிரை வால் போடப்பட்டிருந்தது அவளது கூந்தல். முகத்தில் பவுடரும் உதட்டில் சாயமும் மைனஸ். தொள தொள சர்ட்டும், வெளிறிய ஜீன்ஸும் ஐ.டி ஐ.டி என்று சொல்லாமல் சொன்னது. அவள் பார்வை தெரு முனையையே பார்த்திருக்க, அவள் கை அனிச்சையாக அவள் மடியில் இருந்த கைப்பையின் வாரை தடவி விட்டுக்கொண்டிருந்தது.

அந்தச் சிவப்பு நிற மாருதி ஸ்விஃப்ட் தெரு முனையில் திரும்பும் போதே அவள் எழுந்து கொண்டாள். அந்த காரில் வரும் யாரையோ அவள் கண்கள் தேடின.

கார் அவளருகில் வந்து நின்றது. காரை ஓட்டிக் கொண்டு வந்த அருண் கண்ணாடியைக் கீழிறக்கி அவளை அளப்பது போல மேலும் கீழும் பார்த்தான்.

குட் மார்னிங் மிஸ்டர் அருண்

குட் மார்னிங். நீங்க...

“மை நேம் இஸ் மாயா. ஒரு முக்கியமான விசயம் உங்க கிட்ட பேசணும்”

அருண் கண்களில் ஆச்சரியத்துடன் காரை விட்டு இறங்கினான்.

“உள்ள வாங்க! ப்ளீஸ் கம் இன்” என்று கையிலிருந்த சாவியால் வாசல் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.

அருண் வயது 38. பதிமூன்று வருடங்கள் காவல்துறையில் புலனாய்வுப் பிரிவில் பணி புரிந்து விட்டு இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த அந்தக் கசப்பான சம்பவத்தினால் வேலையை விட்டு விட்டான். தனிக்கட்டை. பரம்பரை சொத்து இன்னும் நான்கு தலை முறைக்கு வரும். ஊரில் பல ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. காடாறு மாதம் நாடாறு மாதம் என்பது போல விவசாயம் நடக்கும் காலங்களில் சொந்த ஊரிலும் மற்ற நாட்களில் சென்னையிலும் வாசம்.

சென்னையில் இருந்தால் தவறாமல் காலை 5:30 மணிக்கு எழுந்து மெரினாவில் நடை பழகிவிட்டு 7:30 மணிக்கு வீட்டுக்கு வருவது வழக்கம். இன்றும் அப்படித்தான் மெரினா போய் விட்டு வருகிறான். வந்தால் வீட்டு வாசலில் பௌர்ணமி போல இந்த மாயா.

வீட்டின் வரவேற்பரை சோபாவில் அவளை அமரச் சொல்லி விட்டு, அவள் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.

“காபி ஆர் டீ? என்ன சாப்புடிறீங்க?” என்று கேட்டான்.

“தேங்க்ஸ் ஃபர் ஆஸ்கிங்க். எனக்கு ஒண்ணும் வேண்டாம்”

“ஓகே. என்ன விசயமா என்கிட்ட பேசணும்?”


“ஒரு கொலை விசயமா?”


“என்னது கொலையா?”. அருண் புலனாய்வுப் பிரிவில் வேலை பார்த்த போது பல இடியாப்பச் சிக்கல் வழக்குகளை லாவகமாகக் கையாண்டு தீர்த்திருக்கிறான்.

“ஆமா. என் பாய் ஃப்ரண்டை ஒரு கொலை பண்ணிட்டதா போலிஸ் பிடிச்சு வச்சுருக்காங்க. அவனை ரிலீஸ் செய்யணும். அதுக்கு நீங்க தான் ஹெல்ப் பண்ணனும். ப்ளீஸ்”

“இதுல நான் என்ன செய்ய முடியும்? நான் வாலண்டரி ரிட்டயர்மென்ட் குடுத்துட்டேன். என் பேச்செல்லாம் இப்போ செல்லுபடியாகாது”

“நீங்க அதெல்லாம் செய்ய வேண்டாம். என் பாய் ஃப்ரண்ட் அந்தக் கொலையை செஞ்சிருக்க மாட்டான். நீங்க தான் அதை ப்ரூவ் பண்ண ஹெல்ப் பண்ணனும். என் ஃப்ரண்டு உங்களைப் பத்தி சொன்னாள். அதான் உங்க கிட்ட வந்தேன்”

“அய்யோ. இந்த வேலையே வேணாம்னுதான் நான் ரிசைன் பண்ணேன்.”


“நீங்க இப்பிடி சொல்லக்கூடாது. எனக்கு உங்களை விட்டா வேற வழியில்ல”


“ஓகே. கொலையப் பத்தி சொல்லுங்க. நான் என்ன விதத்துல உதவி செய்ய முடியும்னு பாக்குறேன்”


“ரெண்டு நாள் முன்னாடி ரோட்டோரமா ஒரு பெண் பிணம் கிடந்ததுன்னு பேப்பர்ல படிச்சிங்களா?”

அருண் நெற்றியைச் சுருக்கி யோசித்தான். “டெய்லி நாலு ந்யூஸ் இப்பிடி வருது. இதுல எதுன்னு நான் ஞாபகம் வச்சிக்கிறது? மேல சொல்லுங்க மாயா”

“வேளச்சேரியில இருந்து தாம்பரம் போர ரோட்டுல”

“நினைவில்ல. மேல சொல்லுங்க?”

“அந்தக் கொலைய செஞ்சது ரமேஷ்தான்னு போலிஸ் பிடிச்சிட்டுப் போயிட்டாங்க. அவன எப்பிடியாவது நீங்க தான் காப்பாத்தணும்”


“ரமேஷ் அந்தக் கொலைய செஞ்சிருக்க மாட்டான்னு எப்பிடி சொல்றீங்க?”


“எனக்கு நல்லா தெரியும். ரமேஷ் செஞ்சிருக்க வாய்ப்பே இல்ல”


“எப்பிடி இவ்வளவு டெஃபனிட்டா சொல்றிங்க? ரமேஷே செஞ்சிருக்கலாமே?”


“நோ மிஸ்டர் அருண். ரமேஷ் வாஸ் வித் மி தட் டே”


“சோ. யூ ஹாவ் அன் அலிபி. வொய் காண்ட் யூ டெல் திஸ் டு த போலிஸ்? இஃப் போலிஸ் இஸ் நாட் பிலிவிங் யூ, யூ மே அப்ரோச் அ லாயர். வொய் மி?”


“நோ. ஐ டோண்ட் ஹாவ் அலிபி. அவன் கொலை நடந்த நேரம்னு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்ற டைம்ல என் கூட இல்ல. ஆனா அதுக்கு டு ஹவர்ஸ் முன்னாடி நானும் அவனும் குரோம்பேட் நய்ஹால ஷாப்பிங்க் பண்ணிட்டு இருந்தோம்.”


“டு ஹவர்ஸ்க்குள்ள கொலை நடந்த எடத்துக்குப் போயிருக்க வாய்ப்பு இருக்கே? கொலை செய்யப்பட்ட பொண்ணு யாரு?”


“அவ ரமேஷோட எக்ஸ் கேர்ள் ஃப்ரண்ட். ஷி ப்ரோக் அப் வித் ஹிம். ஷி இஸ் கெட்டிங்க் மேரீட் இன் அ மன்த்.”


“ஸோ, அவன் அவள கொலை பண்ணியிருக்கலாம் அப்பிடிங்கிறதுக்கு போலிஸ் காட்டப்போற மோட்டிவ் இது தான்”


“ஆமா. ஆனா கொலை நடந்ததா சொல்லப்படுற டைம்ல இருந்து அரை மணி நேரம் கழிச்சு என்கிட்ட ஃபோன்ல பேசுனான். அவன் கிட்ட பதட்டம்ங்கிறது கொஞ்சம் கூட இல்லை. அதோட என் ரமேஷ் பொய் சொன்னான்னா உடனே கண்டு பிடிச்சிடலாம். அவனுக்கு பொய் சொல்லக்கூட தெரியாது”


“உங்களுக்கு ரமேஷை எத்தனை நாளாத் தெரியும்?”


“லாஸ்ட் டூ மன்த்ஸா. ஐ வாஸ் ப்ளானிங்க் டு மூவ் இன் வித் ஹிம் நெக்ஸ்ட் மன்த்”


“ஐ ஸீ. லுக் ஹியர் மிஸ் மாயா. ஐ அம் நாட் யெட் கன்வின்ஸ்ட் எனஃப் டு ஹெல்ப் யூ அண்ட் யுவர் ஃப்ரண்ட். ஐ நீட் மோர் இன்ஃபர்மேஷன். நவ் யூ கோ டு யுவர் ஹவுஸ். ஐ வில் கம் அரௌண்ட் நூன் டு மீட் ரமேஷ் அண்ட் ஐ வில் டிசைட் ஆஃப்டர்வர்ட்ஸ். வாட் டு யூ ஸே?”


“தட் சவுண்ட்ஸ் பெட்டர். இஃப் யூ டாக் டு ரமேஷ் யூ வுட் அன்டர்ஸ்டேண்ட் தட் ஐ ம் கரெக்ட்”


“எந்த போலிஸ் ஸ்டேசன்ல அவன வச்சிருக்காங்க?”


“மடிப்பாக்கம்”


“ஓக்கே தென். மீட் யூ தேர் அட் நூன்”


“தேங்க் யூ. மிஸ்டர் அருண். அட்லீஸ்ட் யூ அக்ரீட் டு மீட் ரமேஷ். ஐம் சோ ரிலீவ்ட். யூ வில் டெஃபனட்லி ஹெல்ப் அஸ். திஸ் இஸ் மை நம்பர்” என்று கைப்பையிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.


வாங்கிப் பார்த்து விட்டு பர்ஸுக்குள் வைத்துக் கொண்டான் அருண். மாயா கேட்டைத் திறந்து கொண்டு வெளியே சென்று கொண்டிருந்தாள்.

அருணின் புலனாய்வு மூளை மனோ வேகத்தில் யோசித்துக் கொண்டிருந்தது. ‘இந்தக் கேஸில் ஈடுபடுவது சரியா?’

கிச்சனுக்குள் சென்று காஃபி மேக்கரில் இருந்த டிக்காக்‌ஷனை கப்பில் ஊற்றி பாலும் சக்கரையும் கலந்து கொண்டு சிப்பிக் கொண்டே ஸ்டடி அறைக்கு வந்து கம்ப்யூட்டர் திரையை ஒளிரச் செய்தான்.

கூகுளில் மாயா சொன்ன செய்தியைத் தேடினான். வந்து விழுந்த பக்கங்களைப் படித்துப் பார்த்ததில் போலிஸ் விசாரணையில் ஏதோ ஒன்று இடரியது. ரமேஷைச் சந்திக்கும் முடிவுக்கு வந்தான்.

(தொடரும்)

Sunday, November 8, 2009

ஐயோ போச்சு...

திமிர். இந்தப் புத்தியை இதை விட எளிதாக ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. 2001ல் பெங்களூருக்கு வேலைக்கு போனதிலிருந்து இன்று இந்த அமெரிக்காவில் குப்பை கொட்டும் வரை உடம்பு முழுக்க ஏறிவிட்டிருக்கிறது திமிர். விஷத்தை விட கொடியது. இத்தனை நாள் தெரியவில்லை. இன்று காணாமல் போனபின் தான் உறைக்கிறது. என்ன செய்வது? சில பேர் பிறவியிலேயே சாக்கிரதையாக இருக்கிறார்கள். சிலர் அடுத்தவர்களின் அனுபவம் பார்த்தாவது ஒழுங்காகிக் கொள்கிறார்கள். ஆனால் பட்ட பிறகுதான் புத்தி வருகிறது. அதுவும் கண்காணாத தேசத்தில் என்றால். ஐயோ...

2001ல் இருந்தே ரூபாய் நோட்டுக்களாக கையில் வைத்திருந்து பழக்கம் இல்லை. கேட்டால் - “I don't use paper, only plastic" என்று திமிராக பதில் சொல்ல மட்டும் தெரியும். கிரடிட் கார்டு வாங்குகின்ற இடங்களில் கிரடிட் கார்டு. இல்லையா, மூலைக்கு மூலை ஏ.டி.எம் இருக்கிறது. வேண்டும் பொழுது பணம் எடுத்துக் கொண்டால் போதும். எதற்காக எப்போதும் கையில் பணம் வைத்துக் கொண்டே அலைய வேண்டும்? என்று பதில் சொல்லிக்கொண்டு திரிந்தவன். அமெரிக்கா வந்த பிறகும் அதே கதை. இந்தியாவிலாவது பெட்டிக் கடைகளிலெல்லாம் கிரடிட் கார்டு வாங்க மாட்டார்கள். இங்கே, கடை என்று ஆரம்பித்ததும் சாமான் வாங்கி வைக்கிறார்களோ இல்லையோ ஒரு கிரடிட் கார்டு தேய்க்கும் இயந்திரம் வாங்கி வைத்து விடுகிறார்கள். அதனால் கவலை இல்லாமல் இருந்து வந்தான். இப்போது வைத்தார்கள் வேட்டு.

வேறு ஒன்றும் இல்லை. விசாவில் இரண்டு, மாஸ்டர் கார்டில் இரண்டு, அது போக பேங்க் ஏ.டி.எம் கார்டு மட்டும் இரண்டு என்று ஆறு அட்டைகளும், டிரைவிங் லைசன்ஸ், பிஜேஸ் க்ளப் மெம்பர்ஷிப் கார்ட், ஹெல்த் இன்சூரன்ஸ் கார்ட் என அத்தனை அட்டைகளையும் வைத்திருந்த வாலெட் தொலைந்து போய்விட்டது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

நல்ல வேளையாக எல்லா கடன் அட்டைகளுக்கும் ஆன்லைன் அக்கவுண்ட் அக்சஸ் இருந்ததால் வேறு ஏதாவது நடவடிக்கைகள் இருந்ததா என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. சோசியல் செக்யூரிட்டி எண்ணை வைத்தே அத்தனை அட்டைகளையும் திரும்ப அனுப்ப ஆவன செய்தாகிவிட்டது. ஏழு முதல் பத்து நாட்களுக்குள் அட்டைகள் கைக்கு வந்து விடும். அது வரை?

இதுவரை எங்கு சென்றாலும் கிரடிட் கார்டு கொடுத்து கொடுத்து பழகியதால் பணம் எடுத்து வீட்டில் வைக்கும் பழக்கமும் இல்லை. ஏ.டி.எம்மில் எடுக்கவும் முடியாது. வங்கிக்கு காலையில் தான் செல்ல முடியும். சென்றால் ஃபோட்டோ ஐ.டி இல்லாமல் பணம் எடுக்கவும் முடியாது. என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்து கடைசியில் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு போய் இரண்டு வாரங்களுக்கு கை செலவுக்கு குத்து மதிப்பாக எடுத்துக் கொண்டு வந்தாகிவிட்டது.

இப்போது டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் எங்கும் கார் ஓட்ட முடியாது. திங்கட்கிழமை முதல் வேலையாக டி.எம்.வி அலுவலகம் சென்று அதற்கும் பதிய வேண்டும்.

வாலட் தொலைந்து போவதென்பதை தவிர்க்க முடியாது தான். ஆனால் இப்படி எல்லா அட்டைகளையும் ஒரே வாலட்டில் வைத்திருப்பது என்பது இமாலயத் தவறு. இதிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள்.

1. தேவையான ஒன்று அல்லது இரண்டு அட்டைகள் தவிர மற்றவற்றை வீட்டில் பத்திரமாக வைத்திருப்பது.
2. எப்போதும் வீட்டில் நூறு அல்லது இருநூறு டாலர்கள் அவசரத்திற்கு வைத்திருப்பது.
3. வங்கியில் (காசு போனாலும் பரவாயில்லை என்று) மேலதிக செக் புக்குகளை வாங்கி வைத்துக் கொள்வது.

மிகவும் கடினமான வழியில் தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விதி. என்ன செய்வது? (தலையில் நங் என்று குட்டு விழுகிறது. ‘கவனக்குறைவா இருந்துட்டு விதி மேல பழியா?’ என்று சொல்லும் தங்கமணியின் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு)

அப்புறம் இன்னொரு விசயம் கேள்விப் பட்டேன். தமிழீழம் இருந்த பகுதிகளில் கோவில்களை இடித்து விட்டு சிங்களப் பள்ளிக்கூடங்கள் கட்டுகிறார்களாமே? உண்மையா? யாராவது சொல்லுங்களேன்?

பிதற்றல்கள் - 11/8/2009

உடம்பு சரியில்லாமல் போய் இப்போது தான் கொஞ்சம் தேறி இருக்கிறேன். உடல்நிலை சரியில்லை என்றாலும் தவறாமல் நான் ஃபாலோ செய்யும் அனைவரின் பதிவுகளையும் படித்து வந்தேன். என்னால் தான் பதிவெழுத முடியவில்லை.

உடல்நிலை சரியில்லாத போதும் சில திரைப்படங்களைப் பார்க்கத் தவறவில்லை. முதலில், ஆதவன் பார்த்தேன். பலர் விமர்சனம் எழுதியபடி, வடிவேல் காமெடிக்காகப் பார்க்கலாம். இப்படி இன்னும் இரண்டு படம் நடித்தால் சூர்யா இருக்குமிடம் தெரியாமல் போய்விடுவார் என்பது மட்டும் நிச்சயம். கே.எஸ்.ரவிக்குமார் கப்பல் கப்பலாக நம் காதில் பூச்சுற்றுவதோடு ஹெலிகாப்டரில் வேறு வந்து பூ தூவி விட்டுப் போகிறார். யதார்த்த சினிமாவில் திருவிழாக்காட்சிகளுக்கும் கமர்சியல் சினிமாவில் வீடு நிறைய உறவினர்களுக்கும் யாராவது தடை கொண்டுவந்தால் பரவாயில்லை.

Outsourced (2006) என்ற ஆங்கிலத்திரைப்படம் பார்த்தேன் (உபயம்: நெட்ஃப்ளிக்ஸ்). அவுட் சோர்சிங் பற்றி கேலியும் கிண்டலும் கலந்தடித்துள்ளார்கள். டாட் ஆண்டர்சன் என்பவர் சியாட்டிலில் உள்ள ஒரு அமெரிக்க நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். அவரது நிறுவனம் அவரின்கீழ் உள்ள கால் செண்டரை இந்தியாவுக்கு அவுட் சோர்ஸ் செய்ய முடிவெடுத்து, இந்தியக் கிளையின் மேலாளருக்கு பயிற்சி கொடுக்க டாடை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்தியாவின் ஏழ்மையை படம்பிடித்துக் காட்டியிருந்தாலும், கௌரவமாகத்தான் படம்பிடித்துள்ளனர்.

அமெரிக்க கலாச்சாரத்துக்கும் இந்தியக் கலாச்சாரத்துக்கும் உள்ள இடைவெளியையும், அமெரிக்க ஆங்கிலத்துக்கும் இந்திய ஆங்கிலத்துக்கும் உள்ள வித்தியாசங்களையும் வைத்து காமெடி நடத்தியிருக்கிறார்கள். இந்தியர்களின் புத்திசாலித்தனத்தையும், அமெரிக்கர்களின் சாமர்த்தியத்தையும் ஒரு சேர மெச்சுகிறது இத் திரைப்படம்.  நான் ரசித்த சில காட்சிகள்:

“பென்சில் வாங்கிய ஒரு பெண்மணியிடம் ரப்பரை விற்க முயற்சி செய்யும் பணியாளரின் தொலைபேசி உரையாடலைப் போட்டுக்காட்டி, இதில் என்ன தவறு என்று கேட்கிறான் டாட். இந்தியப் பணியாளர்கள் யாருக்கும் அதற்கு பதில் தெரியவில்லை (ஒவ்வொருவர் கையிலும் ஒரு ரப்பர் இருக்கிறது). டாட், தனது கையிலிருக்கும் ரப்பரைக் காட்டி - 'This is called Eraser. Rubber means Condom' என்கிறார். உடனே ஒருவர் - ‘like a flat?' என்று கேட்க, இன்னொருவர் - ‘நோ நோ. தே கால் இட் அன் அப்பார்ட்மெண்ட்’ என்று திருத்த.. டாட் ‘நோ நோ காண்டொம். நாட் காண்டொ. யூ நோ பர்த் கண்ட்ரோல்’ என்று சொல்ல, இன்னொருவர் தனது கையிலுருக்கும் ரப்பரைப் பார்த்துக் கொண்டே - ‘டஸ் இட் வொர்க்?’ என்று அப்பாவியாகக் கேட்கும் போது கண்டிப்பாக வாய் விட்டு சிரித்துவிடுவீர்கள்.

முதலில் இந்திய கலாச்சாரம் புரியாமல் தடுமாறும் டாட் போகப்போக அதனைப் புரிந்து கொண்டு தனது புத்திசாலித்தனத்தால் மினிட்ஸ் பெர் இன்சிடண்ட்டை 6.0 க்கு கொண்டுவருகிறார். கடைசியில் இந்தியாவில் இருக்கும் கால் செண்டரை சீனாவுக்கு மாற்றுவதாக டாடின் பாஸ் வந்து சொல்கிறார். டாட் 6.0 க்கு கீழே எம்.பி.ஐ போனதைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஊழியர்களிடம் டாட் அதை அறிவிக்கிறார். ஒரு செகண்ட் அனைவரும் அமைதியாகிவிட்டு அடுத்த செகண்ட் விட்ட இடத்திலிருந்து பேச்சை தொடர்கின்றனர்.  டாட் இந்திய மேலாளரிடம், “என்ன இவர்கள் யாருமே அதிர்ச்சி அடைந்ததைப் போல தெரியவில்லையே?” என்று கேட்க, “அவர்களுக்கென்ன? நாம் கொடுத்த ட்ரெயினிங்கை வைத்து ஒரே வாரத்துக்குள் அவர்கள் வேறு ஏதாவது அலுவலகத்தில் போய் சேர்ந்து விடுவார்கள்” என்று சொல்கிறார். நிதர்சனமான இந்திய உண்மை இது சரிதானே?

நான் பார்த்த மற்றுமொரு ஆங்கிலப் படம் - Vantage Point (2007). அமெரிக்க ஜனாதிபதி ஒரு சம்மிட்டுக்காக ஸ்பெயினுக்கு வரும்போது அவரை யாரோ சுட்டு விடுகிறார்கள். இந்த ஒரு சம்பவத்தை பல கோணங்களில் காட்டி ஒவ்வொரு கோணத்திலும் கதையை கொஞ்சம் கொஞ்சமாக நகற்றி கடைசியில் முடிக்கிறார்கள். சில இடங்களில் லாஜிக் ஓட்டை இருந்தாலும் இந்த வித்தியாசமான கதை நகர்த்தலுக்காக ஒரு தடவை படம் பார்க்கலாம். இந்த உத்தியில் ஒரு கதை எழுதலாம் என்று முடிவெடுத்துள்ளேன். நல்ல கரு கிடைத்தால் எழுதுகிறேன்.

இப்போதைக்கு அம்புட்டுத்தான். அப்பீட்டு..