Monday, August 2, 2010

செஷல்ஸ் தீவில் பல்பு

பலா பட்டறை ஷங்கர் நானும் அவரும் படிச்ச கலஹாரி இலக்கியத்துல ஒண்ணை அவுத்துவுட கூப்பிட்டுருந்தாரு. சரி நாங்க அந்த இலக்கியத்தப் படிச்ச காலத்துல நடந்த ஒரு சம்பவத்தையே இங்க பகிர்ந்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டு அதையே ஒரு புனைவு மாதிரி (புனைவு பிடிக்காதவுக சொற்சித்திரம்னு வாசிச்சுக்குங்க) எழுதிருவோம்னு முடிவு பண்ணிட்டேன்.

நானும் ஷங்கரும் செஷல்ஸ்ல ஆறு மாசம் தங்கியிருந்து கலஹாரி இலக்கியம் படிச்சோம். அப்பல்லாம் நாங்க வாரக் கடைசியானா பீச்ல உக்காந்து பீஃப் ஃப்ரை சாப்டுக்கிட்டே பியர் சப்புறது வழக்கம். எப்பயாவது நம்ம பிரபா எங்கக்கூட சேந்துக்குவாரு. அவர் பியரு குடிக்க மாட்டாரு. ஆனா நாங்க சாப்புடுறதுல ரெண்டு பங்கு பீஃப் ஃப்ரை மட்டும் சாப்புடுவாரு.

அவரு அங்கதான் கவிதை இலக்கியம் படிச்சிக்கிட்டு இருந்தாரு. நாங்க மூணு பேரும் உக்காந்து உலகக் கதை பேசுவோம். பிரபா பேசும்போதே கவிதையாத்தான் பேசுவாப்ல. ஒரு நாளு நாங்க அப்பிடி உக்காந்து பேசிட்டு இருக்கும்போது சரசரன்னு ஒரு சத்தம். என்னடான்னு பாத்தா ஒரு அனகோண்டா எங்கருந்தோ தப்பிச்சி பீச் பக்கம் வந்திருச்சு. எனக்குன்னா ஒரே பயம். தடாருன்னு கையில இருந்த பீர் பாட்டிலைக் கீழ போட்டுட்டு அது மேல ஏறி நின்னுக்கிட்டு ஷங்கரைப் பாத்தேன். ஷங்கரைக் காணோம். பாத்தா மனுசன் என் மேல ஏறி நின்னுட்டு இருக்காரு.

ஆனா நம்ம பிரபா அந்த அனகோண்டா வாலைப் பிடிச்சித் தூக்கு தலைக்கு மேல நாலு சுத்து சுத்தி வீசுனாரு பாருங்க, அனகோண்டா கன்னா பின்னான்னு கதறிக்கிட்டு ஓடிருச்சி. அப்பல்லருந்து நாங்க அவர ஸ்நேக் பிரபா ஸ்நேக் பிரபான்னு கூப்புடுவோம்.

நாங்க மூணு பேரும் சேந்து செஞ்ச இன்னோரு விசயம் அங்க வர்ற பொண்ணுகளை பாக்குறது. சில நேரம் அரவிந்தும் எங்க கூட சேந்துக்குவாப்ல. அரவிந்தைத் தெரியுமா உங்களுக்கு. அரவிந்து ஒரு இரும்புக்கடை வச்சிருக்காப்ல. திருநெல்வேலி, சென்னை, பாம்பே, மலேசியால எல்லாம் அதுக்கு பிராஞ்ச் இருக்கு. அரவிந்துக்கும் சிவப்புச் சட்டைக்காரங்களுக்கும் ஆகவே ஆவாது. டெய்லி அவிங்கள எதாவது கிண்டல் பண்ணி கடை வாசல்ல போர்டு வச்சிருப்பாப்ல. அவிங்களும் கூட்டமா வந்து அவரு கடை வாசல்ல நின்னு கோஷம் போட்டுட்டுப் போயிருவாய்ங்க.

அரவிந்துக்கும் பொண்ணுகளுக்கும் ராசியே இல்லை. இப்பிடித்தான் பாருங்க ஒரு தாய்லாந்து பொண்ணை ரொம்ப நாள் ரூட்டு விட்டுக்கிட்டு இருந்தாப்ல. அந்தப் பொண்ணு போறப்ப வர்றப்ப எல்லாம் எதாவது கவிதை எழுதி அவ மேல் தூக்கி எறிவாப்ல. அதுவும் பொறுக்கிக்கிட்டு போயிரும். ஆனா ஒரு பதிலும் சொல்லாது.

ஒரு நா அந்தப்பொண்ணு ஜான்சி அக்காவைக் கூட்டிக்கிட்டு வந்திருச்சி. எனக்கும் ஷங்கருக்கும் அல்லு விட்டிருச்சி. ஏன்னா ஜான்சி அக்கா பயங்கரமான ஆளு. ஜான்சி அக்கா கையில அரவிந்து இது வரைக்கும் எழுதுன கவிதைத் துண்டு எல்லாம் இருக்கு. வந்தவுக அரவிந்த விட்டு லெஃப்டு ரைட்டு வாங்கிட்டாங்க. நான் என்.சி.சியில இருந்தவ. துப்பாக்கி சுடுறதுல ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கியிருக்கேன். அது மட்டுமில்ல எனக்கு காவல்துறையிலயும் நீதித் துறையிலயும் ஆளுங்க நிறைய இருக்காங்கன்னு சொல்லி அரவிந்தை உண்டு இல்லைன்னு ஆக்கிட்டாங்க.

நான் இதை கேட்டுட்டு சும்மா இருந்திருக்கலாம். ஜான்சி அக்காவுக்கு சாரு ஜெ.மோவை விட சுய சொறிதல் ஜாஸ்தியா இருக்கும் போலன்னு பின்னூட்டம் போட்டுட்டேன்.

உடனே என்னை ஒரு மொற மொறச்சிட்டு அக்கா போயிட்டாங்க. நாங்க எங்க சைட் அடிக்கிறதைக் கண்டினியூ பண்ணோம்.

எனக்கு அங்க வர்ற பிலிப்பைன்ஸ் பொண்ணு மேல ஒரு கண்ணு. ஆனா அரவிந்து மாதிரி கவிதை எழுதி எறியிற அளவுக்கு எனக்கு தெகிரியம் இல்லை. கவிதை எழுதவும் வராது. சும்மா பாத்துக்கிட்டே இருப்பேன். அது என்னை பாக்குதா இல்லைன்னே தெரியாது. ஏன்னா அது எப்பவும் ஒரு கூலிங்க்ளாஸ் போட்டுட்டேத்தான் திரியும்.

நானும் பதிலுக்கு ஒரு கூலிங்க்ளாஸ் வாங்கி மாட்டுனேன். அப்ப அங்க நம்ம தம்பி பிரதாப் வந்தாப்ல. “என்னண்ணே என்னைக்கும் இல்லாத திருநாளா கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டுட்டு இருக்கீங்கன்னு கேட்டாப்ல.

நானும் இந்த மாதிரி இந்த மாதிரின்னு பிலிப்பைன்ஸ் மேட்டரைச் சொன்னேன். அவரு உடனே அண்ணே பிலிப்பினோவை நம்பாதிங்கண்ணே. கவுத்திருவாளுகன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

அவரு யோசனையக் கேட்டிருக்கணும். கேக்காமப் போயிட்டேன். அப்பத்தான் நம்ம எழுத்தாளர் அந்தப் பக்கம் வந்தாரு. எழுத்தாளர்னா தெரியும் தான? நம்ம விசா. அவருக்குத்தான் பெண் தோழிகள் அதிகமாச்சே. அவர்கிட்ட எதுனா யோசனை கேட்டு அந்த பிலிப்பினோவை மடக்கலாம்னு அவர்கிட்ட மெதுவா பேச்சக் குடுத்தேன். அவரு கைல ஒரு நைட்டி பார்சல் வச்சிருந்தாரு. “என்ன தலைவா? நைட்டி வச்சிருக்கிங்க. பப்ளிக் ப்ளேஸ்ல நைட்டில வரலாமான்னு கேட்டேன்.

அதுக்கு அவரு, நைட்டியில பப்ளிக்ல வர்றது தப்பான்னு கேட்டு ஒரு மூணு பக்கக்கதை சொன்னாரு. இவருக்கிட்ட கேட்டது தப்பாப் போச்சேன்னு. சரி பாஸு நைட்டியை விடுங்க, நாம எங்கயாவது போய் சாப்புடலாம்னு, அந்த பிலிப்பினோ சாப்புடுற ஸுஷி பாருக்குக் கூட்டிட்டுப் போனேன். என் கெட்ட நேரம் அந்தப் புள்ள அங்க வரலை. அதப் பாக்காத ஏக்கத்துல எனக்கும் சாப்பாடு எறங்கலை. மீதிய அப்பிடியே வச்சிட்டு வர வேணாமின்னு, சர்வர்கிட்ட அதக் கட்டிக் குடுக்கச் சொன்னேன். விசாவுக்கு ஒடனே கோவம் வந்திருச்சி. நம் சமூகத்தில் நம்மை விட மெலியவர்களிடம் நம் பணத்திமிரையோ உடல் வலிமையையோ அவசியமில்லாமல் பிரயோகிப்பது கொடுமையானதுன்னு சொல்லிட்டு கோவிச்சிட்டு எந்திரிச்சிப் போயிட்டார். இந்த ஓட்டல்ல இது வழக்கம்தாண்ணேன்னு நான் கத்திக்கிட்டே பின்னாடி ஓடுனேன். ஆனா பாருங்க அவரு பஸ் ஏறிப் போயிட்டாரு.

என்னடா பண்ணலாம்னு நான் ஷேவ் பண்ணி ரெண்டு நாளான என் தாடியைச் சொறிஞ்சிக்கிட்டே நின்னேன். அப்போ வேகமா ஒரு கார் என் முன்னால் வந்து சட்டுன்னு பிரேக் போட்டு - “இது கூட சுயசொறிதல் தானப்பா”ன்னு சொல்லிட்டு அடுத்த செகண்ட் வேகமாப் போயிருச்சி. பறந்து வந்து என் காலடியில விழுந்த ஆரஞ்சுப் பழத்தோலைப் பாத்ததும்தான் வந்துட்டுப் போனது ஜான்சி அக்கான்னு தெரிஞ்சிக்கிட்டேன்.

அவ்வளவு நேரம் பளீர்னு எரிஞ்சிக்கிட்டு இருந்த பல்பு பட்டுனு ஃபீஸ் போயிருச்சி.

30 comments:

vasu balaji said...

அல்லு விட்ரிச்சில்ல. அல்லு கண்ட்றுச்சி.:)). ப்ரபாக்கு ஃபிஷ் பால் நூடில்ஸ்தான் பிடிக்கும்னு நினைச்சேன். பீஃப் ஃப்ரை கூடவா:))

Paleo God said...

சிரிச்சிக்கிட்டேதான் படிச்சேன். விசா பார்ட் வந்ததும் சத்தம் போட்டு சிரிச்சிட்டேன். :)))

இலக்கியவாதி முகிலன் வாழ்க! (ஆமா நடை ’எஸ்பி’ எழுத்து மாதிரியே இருக்கே!!??)

ஜானகிராமன் said...

தல, இப்படி போட்டு உடச்சிட்டீங்களே. உங்க புனைவுக்கு எதிர்புனைவு நாலாபக்கமும் ரெடியாயிட்டிருக்கு. சூதானமா இருந்துக்குங்க...

சங்கர் said...

ஆறு மாசம் தங்கி இருந்தும் எந்த வாசகியும் வந்து உங்கள பார்க்கலையா, வந்ததெல்லாம் உருப்படாத தமிழ் இணைய கிறுக்கர்கள் தானா, முடியாது முடியாது, உங்கள எல்லாம் இலக்கிய வியாதியா ஏத்துக்க முடியாது, நீங்க போட்ட லேபிளுக்கு மன்னிப்பு கேட்டே ஆகணும்:)

Anonymous said...

என்ன ஆச்சோ தெரியலை .ஜூலை மாசம் முடியறவரைக்கும் நல்லாத்தானே இருந்தமாதிரி இருந்தது? உங்க வூட்டம்மா கிட்ட சொல்லி மந்திரிச்சு விட சொல்லணும் :)

சுசி said...

எச்சுச்மி..

முகிலன் பதிவுக்குத்தான் வந்திருக்கேனாஆஆ??

இரும்புத்திரை said...

தொடர்ச்சி இங்கே..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

கத விடுறதுன்னா இது தானா? :)))

பிரபாகர் said...

//ப்ரபாக்கு ஃபிஷ் பால் நூடில்ஸ்தான் பிடிக்கும்னு நினைச்சேன்.//

ஆஹா! இன்னிக்குக் கூட இதானே சாப்பிட்டேன்... எப்படி அய்யா!

அய்யாவோட டரியலாக்க சேர்ந்துட்டீங்க!

அய்யோ என்ன காப்பாத்த யாருமே இல்லையா? (தமிழ்ப்படம் டயலாக் மாதிரி)...

பிரபாகர்...

Radhakrishnan said...

ஹா ஹா! மிகவும் சுவாரசியம்.

பனித்துளி சங்கர் said...

நல்ல இருக்கு நண்பரே உண்மைபோலவே புனைவும்

Chitra said...

கலக்கல் நடை!

Chitra said...

நல்ல கற்பனை/புனைவு...... சிரிப்புதான் போங்க....

பிரபாகர் said...

//ஆமா நடை ’எஸ்பி’ எழுத்து மாதிரியே இருக்கே!!??//

அட ஆமால்ல! நான் இறக்கி விட்டுட்டேன், நீங்கன்னு சாமியார் கேட்டாராம்...

பிரபாகர்...

Unknown said...

//வானம்பாடிகள் said...
அல்லு விட்ரிச்சில்ல. அல்லு கண்ட்றுச்சி.:)). ப்ரபாக்கு ஃபிஷ் பால் நூடில்ஸ்தான் பிடிக்கும்னு நினைச்சேன். பீஃப் ஃப்ரை கூடவா:))//

எங்க ஊர்ல அல்லு விட்ருச்சின்னு தான் சொல்லுவோம். தப்போ?

நீங்க வேற அன்னைக்கி அந்த அனகோண்டாவை ஃப்ரை போடுவமான்னு பிரபா கேட்டாப்ல.

Unknown said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
சிரிச்சிக்கிட்டேதான் படிச்சேன். விசா பார்ட் வந்ததும் சத்தம் போட்டு சிரிச்சிட்டேன். :)))

இலக்கியவாதி முகிலன் வாழ்க! (ஆமா நடை ’எஸ்பி’ எழுத்து மாதிரியே இருக்கே!!??)
//

எஸ்.பி ரொம்ப பாதிச்சிட்டார்.. :))

Unknown said...

//ஜானகிராமன் said...
தல, இப்படி போட்டு உடச்சிட்டீங்களே. உங்க புனைவுக்கு எதிர்புனைவு நாலாபக்கமும் ரெடியாயிட்டிருக்கு. சூதானமா இருந்துக்குங்க.//

நாங்க தடால்னு கால்ல விழுந்து மாப்பு கேட்ருவோம்ல.

Unknown said...

//சங்கர் said...
ஆறு மாசம் தங்கி இருந்தும் எந்த வாசகியும் வந்து உங்கள பார்க்கலையா, வந்ததெல்லாம் உருப்படாத தமிழ் இணைய கிறுக்கர்கள் தானா, முடியாது முடியாது, உங்கள எல்லாம் இலக்கிய வியாதியா ஏத்துக்க முடியாது, நீங்க போட்ட லேபிளுக்கு மன்னிப்பு கேட்டே ஆகணும்:)//

என்னையா ரொம்ப நாளா ஆளே காணோம்? இப்பிடி எதாவது எழுதினாத்தான் வெளிய வருவீகளோ?

லேபிளுக்கு மன்னிப்பு கேட்க தயார். எப்பிடி மன்னிப்புக் கேக்கணும்னு நாட்டாமைகள் கிட்ட கேட்டு சொன்னீங்கன்னா பரவாயில்லை. அப்புறம் இப்பிடி கேட்டா பத்தாது அப்பிடி கேட்டா எத்தாதுன்னு எதாவது சொல்லக் கூடாது பாருங்க?

Unknown said...

//சின்ன அம்மிணி said...
என்ன ஆச்சோ தெரியலை .ஜூலை மாசம் முடியறவரைக்கும் நல்லாத்தானே இருந்தமாதிரி இருந்தது? உங்க வூட்டம்மா கிட்ட சொல்லி மந்திரிச்சு விட சொல்லணும் :)//

கலஹாரி இலக்கியம்னா அப்பிடித்தான் இருக்கும். நீங்க கூட முயற்சி பண்ணுங்களேன்?

Unknown said...

//சுசி said...
எச்சுச்மி..

முகிலன் பதிவுக்குத்தான் வந்திருக்கேனாஆஆ??//

புனைப் பெயர் மாதிரி அடிக்கடி இப்பிடி புனை நடைல எழுதுவோம்ல

Unknown said...

//இரும்புத்திரை said...
தொடர்ச்சி இங்கே.//

கமெண்ட் அங்கே போடப்படும்

Unknown said...

//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
கத விடுறதுன்னா இது தானா? :)))//

இதுவும் தான்.

Unknown said...

//பிரபாகர் said...
//ப்ரபாக்கு ஃபிஷ் பால் நூடில்ஸ்தான் பிடிக்கும்னு நினைச்சேன்.//

ஆஹா! இன்னிக்குக் கூட இதானே சாப்பிட்டேன்... எப்படி அய்யா!

அய்யாவோட டரியலாக்க சேர்ந்துட்டீங்க!

அய்யோ என்ன காப்பாத்த யாருமே இல்லையா? (தமிழ்ப்படம் டயலாக் மாதிரி)...

பிரபாகர்..//

நான் இருக்கேன்.. நீங்க கவலைப் படாதீங்க.

Unknown said...

//V.Radhakrishnan said...
ஹா ஹா! மிகவும் சுவாரசியம்//

நன்றி ராதாகிருஷ்ணன்.

Unknown said...

//!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
நல்ல இருக்கு நண்பரே உண்மைபோலவே புனைவும்//

உண்மை மாதிரியா இருக்கு? அவ்வ்வ்வ்..

Unknown said...

//Chitra said...
கலக்கல் நடை!

August 2, 2010 5:21 PM
Chitra said...
நல்ல கற்பனை/புனைவு...... சிரிப்புதான் போங்க..//

உங்க ரேஞ்சுக்கு வராது.

Unknown said...

//பிரபாகர் said...
//ஆமா நடை ’எஸ்பி’ எழுத்து மாதிரியே இருக்கே!!??//

அட ஆமால்ல! நான் இறக்கி விட்டுட்டேன், நீங்கன்னு சாமியார் கேட்டாராம்...

பிரபாகர்..//

சாமியார் இல்லை பிரபா சிஷ்யப் பிள்ளை.. பழச மறக்கக்கூடாது பாருங்க?

vasu balaji said...

/எங்க ஊர்ல அல்லு விட்ருச்சின்னு தான் சொல்லுவோம். தப்போ?/

தப்பில்ல. குளிர் விட்டுப்போச்சுங்கறா மாதிரி பயம் விட்டுப்போனத அல்லு விட்டுப்போச்சுன்னு சொல்லுறது. இங்க அல்லு கண்டுடிச்சுதான் சரி.

/நீங்க வேற அன்னைக்கி அந்த அனகோண்டாவை ஃப்ரை போடுவமான்னு பிரபா கேட்டாப்ல/

இருக்கும் இருக்கும். எனி சைனீஸ் இன்ஃப்ளூவன்ஸ்?:)))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பிரமா..ஸ்நேக் பிரபா..
பேர் காரணம் இதுதானா?..
ஹா.ஹா

Prathap Kumar S. said...

தலைவரே நீங்க புனைவா போட்டாலும் உண்மை அதான் பிலிப்பினோவை நம்பாதிங்க...:))