Tuesday, January 18, 2011

தமிழ்மணம் விருது 2010

நண்பர்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். எனது கிரிக்கெட் கற்றுக் கொள்ளலாம் வாருங்கள் இடுகைக்கு தமிழ்மணம் விருதுகள் 2010ல் பிரிவு-16ல் முதல் பரிசு கிடைத்துள்ளது. ஆனால், எனக்கு தமிழ்மணம் தெரிவு செய்த நடுவர் குழுவில் உடன்பாடில்லை. அதற்கு எனது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வண்ணம் நான் என் விருதைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன். தமிழ்மண நிர்வாகிகளுக்கு நான் அனுப்பிய மடல் கீழே:

தமிழ்மண நிர்வாகிகளுக்கு,

முதலில் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன். இலாப நோக்கமில்லாமல் ஒரு திரட்டியை நிர்வாகம் செய்வது எவ்வளவு கடினமானது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதுவும் பதிவுலகில் அடிக்கடி நடக்கும் சண்டை சச்சரவுகளில் எந்தப் பக்கமும் சாராது நடு நிலைமை வகித்து தமிழ் வலைப்பூக்களை தொகுத்து வழங்குவது என்பதே சிரமமான காரியம். அதிலும் ஆண்டுதோறும் சிறந்த வலைப்பதிவுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு விருது வழங்குவதும் எளிய காரியம் அல்ல. அதைத் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வழங்கி வரும் தமிழ் மண நிர்வாகக் குழுவுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

இரண்டாவது முறையாக நான் இந்த ஆண்டும் விருதுக்கு எனது இடுகைகள் மூன்றை சமர்ப்பித்து இருந்தேன். முதல் சுற்றில் இரண்டு இடுகைகளும் இரண்டாவது சுற்றில் ஒரு இடுகையும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இறுதிச் சுற்று முடிவில் என் கிரிக்கெட் கற்றுக்கொள்ளலாம் வாருங்கள் இடுகைக்கு பிரிவு-16ல் முதல் பரிசு வழங்கியிருந்தீர்கள். எனக்கு வாக்களித்த நண்பர்கள், சக பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கு என் நன்றிகள்.

அதே சமயம், நீங்கள் முடிவுகளோடு வெளியிட்டிருந்த நடுவர்கள் பட்டியல் எனக்கு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. அந்த நடுவர்களில் சிலர் தங்கள் இடுகைகளை விருதுக்குப் பரிந்துரை செய்திருந்தனர். அவர்களில் சிலர் விருதை வென்றும் இருந்தனர். நடுவர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் தாங்கள் படைப்புகளைச் சமர்ப்பித்த பிரிவுகளுக்கு நடுவராக செயல்பட்டிருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும், இரண்டு பட்டியல்களையும் பார்க்கும்போது கொஞ்சம் இடறத்தான் செய்கிறது. இன்னும் சில நடுவர்கள் ஒரு பக்கச் சார்பு (இடது சாரி சிந்தனை) கொண்டவர்கள். இவர்கள் எப்படி நேர்மையாக விருதுக்கு இடுகைகளைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்ற சந்தேகமும் உள்ளது. இது எனக்கு மட்டுமல்ல,  என் போன்ற பலருக்கும் வந்துள்ளது. கூகுள் பஸ்ஸிலும் இடுகைகளிலும் அவர்கள் தங்கள் சந்தேகங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். பல விடயங்களில் நடுநிலைமையைப் பேணும் தமிழ்மணம் இந்த விடயத்தில் நழுவி விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஃபிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் துவங்குகின்றது. இதில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு இலங்கை அணியில் தலைவரை அம்பயராகப் போட்டால் நன்றாகவா இருக்கும்? (நன்றி ஜானகிராமன்.என்)

தமிழ்மணத்தின் நியமித்த இந்த நடுவர் குழுவிற்கு என் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வண்ணம் எனக்கு வழங்கப்பட்ட விருதை நான் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. 

அதே நேரம், உங்களின் அயராத பணியைப் பாராடும் முகத்தான் என் இடுகைகளைத் தொடர்ந்து தமிழ்மணத்தில் பகிர்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த ஆண்டுகளில் இது போன்ற குறைகளை தமிழ்மணம் களையும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.

என்றும் இனிய தமிழ் உணர்வுடன்,

Dhinesh Kumar (முகிலன்)

நண்பர்களே என் எதிர்ப்பு இடுகைகளையும் பகிர்ந்து நடுவர்களாகவும் பணி புரிந்தவர்களுக்கும் ஒரு பக்கச் சார்பு கொண்டவர்களுக்கும் மட்டுமே. மற்றவர்கள் இதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

9 comments:

தர்ஷன் said...

ரொம்ப நாளுக்கப்புறம் வந்திருக்கீங்க சர்ச்சையோடு

சமுத்ரா said...

யாருக்கு யார் விருது கொடுப்பது? சிரிப்பு தான் வருகிறது

Prathap Kumar S. said...

ரைட்டு. என்னைக்கேட்டால் பதிவர்களை நடுவர்களாக அறிவித்ததே தவறு. அதில் நடுநிலையாளர், இடசாரி சிந்தனையுள்ளவர்கள் என்றபேச்சுக்கே இடம் இல்லை.
பதிவர்கள் என்றாலே அதில் அனைவரும் அடங்குவர். அதில் என்ன சீனியர் junior.

எழுத்தை மட்டுமே பார்க்கவேண்டுமே தவிர யார் எழுதியிருக்கிறார்கள் என பார்ப்பது அபத்தமானது.

உங்கள் கருத்தில் முற்றிலும் உடன்படுகிறேன்...

எல் கே said...

hats off to you. அபப்டியே தமிழ்மணம் ஓட்டுப் பட்டையும் நீக்கி விடுங்கள் தினேஷ்.

பிரபாகர் said...

மிகச்சரி தினேஷ்... நூறு சதம் உங்களோடு ஒத்துப்போகிறேன்...

பிரபாகர்...

வருண் said...

***Blogger எல் கே said...

hats off to you. அபப்டியே தமிழ்மணம் ஓட்டுப் பட்டையும் நீக்கி விடுங்கள் தினேஷ்.***

எல் கே!

ஏன் இந்த கொலவெறி!

வருண் said...

முகிலன்!

நடுவர்கள் யார் யாரென்று தமிழ்மணம் வெளியே சொல்ல வேண்டிய அவசியம் என்னனு தெரியலை?

ஒருவேளை அவர்கள் செய்த பணிக்காக அவங்களை கெளரவப்படுத்த வாயிருக்கலாம்.

நடுவர்களைப் பார்த்தேன். நெறையப்பேர் இருக்காங்க! ஒரு பதிவர் என்கிற நினைப்பில்லாமல், தன் விருப்பு வெறுப்புகளை தூர வைத்துவிட்டு, "நடுவர்" என்று தன் நிலை உணர்ந்து நடந்துகொண்டார்கள் என்று நம்புங்கள்! அப்படி நீங்க நம்பினால் உங்க பிரச்சினைக்கு நல்ல தீர்வு கெடைக்கும்.

மற்றபடி உங்க நிலை புரியுது. நீங்க நடுவர்களை ஜட்ஜ் பண்ணினாலும் நீங்களும் இங்கே நடுவர் பதவியை கையில் எடுத்துக்கொண்டதாகத்தானே அர்த்தம்?

The point here is it is impossible for TM to come up with a judging committee which satisfies everybody. I mean even if you did select such a committee, there will be lot of criticisms on you too. So, just let it go, please and move on! :)

If the award is money, you could donate that sum to TM itself or some other needy people. Why do you have to do what you are doing? It is just a friendly suggestion and not an advice! Take it easy! :)

கோநா said...

செய்தது சரியா, தவறா தெரியவில்லை, ஆனால் உறுதியான, நேர்மையான முடிவு, மை ராயல் சல்யுட் முகிலன். விருது வழங்கப் பட்டமைக்கு வாழ்த்துக்கள்.

எல் கே said...

@வருண்

என்னத் தப்பு ??

அண்ணாச்சியோ இப்ப அதிகம் எழுதறது இல்லை. முழு நேர பஸ் ஓட்டுனர் ஆகி விட்டார். அப்புறம் எதுக்கு இந்த ஓட்டுப் பட்டை ??