Sunday, January 29, 2012

பரமபதம் - 1


மழை. உலகத்தின் அதிசயங்களில் ஒன்று. சில நேரம் மெல்லிய ஓடை போல சலசலக்கும். சில நேரம் கொட்டுகின்ற பேரருவியாய் ஓங்காரமிடும். இன்றைய மழை இரண்டாம் வகை. இரண்டு நொடி நனைந்தால் தலை முதல் பாதம் வரை ஒரு மிமீ விடாமல் நனைத்துவிடும் பேய் மழை. மழையில் ஒதுங்க இடமில்லாமல் ஏற்கனவே நனைந்து நைந்து போயிருந்த சாக்கை தலைமேல் கவிழ்த்துக் கொண்டு ப்ளாட்ஃபாரத்தில் ஒதுங்கியிருந்தான் அந்தப் பிச்சைக்காரன். மழையின் வேகத்தால் வேகமெடுக்க முடியாமல் மெதுவாக வந்த அந்த டூவீலரின் மேலிருந்தவன் ரெயின் கோட்டுப் போட்டிருந்தும் முழுக்க நனைந்து போயிருந்தான். பிச்சைக்காரன் ஒதுங்கியிருந்த இடத்தின் அருகில் வந்த அந்த பைக்கின் சக்கரத்தில் ஏதோ சிக்க, பைக்கும் மேலிருந்தவனும் உருண்டனர். சிரமப்பட்டு எழுந்தவன் பைக்கையும் தூக்கினான். நின்று போயிருந்த பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்ய முயற்சித்தான். 

மெதுவாக எழுந்த பிச்சைக்காரன் சாக்கை பின்னால் நழுவவிட்டுவிட்டு பைக்காரனை நெருங்கினான். யாரோ முதுகுக்குப் பின்னால் வருவதை உணர்ந்த பைக்காரன் திரும்பினான். திரும்பி வேகத்தில் ‘அம்மா’ என்று அலறிக்கொண்டு பின்னால் விழுந்தான். பிச்சைக்காரனின் கையில் முளைத்திருந்த கத்தியில் படிந்திருந்த ரத்தத்தை மழை கழுவிக்கொண்டிருந்தது..

*********************************************************************************

மாநகர வாழ்க்கை. பல நேரங்களில் மாநரக வாழ்க்கை. என்னதான் உள்கட்டமைப்பும் போக்குவரத்து வசதிகளும் சிறு நகரங்களை விட அதிகப்படியாக இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் விரும்பிய இடத்துக்கு விரும்பிய நேரத்துக்குப் போக முடியாமல் போய்விடுவது சகஜம். காரணம் போக்குவரத்து நெரிசல். அந்தச் சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் இருந்து உட்பிரிந்த சாலை. அவன், சாலையின் சந்திப்பில் தள்ளுவண்டியில் கடலை விற்றுக் கொண்டிருந்தான். வண்டியின் நடுவில் புதைக்கப்பட்டிருந்த அடுப்பின் மீதிருந்த பெரிய வடைச்சட்டியில் வெறும் மணலைப் போட்டு நீளமான கண்கரண்டியால் கிளறிக் கொண்டிருந்தான். பள்ளி மாணவன் போல இருந்தவன் கடைக்கருகில் வந்து தலையைச் சொறிய, இருவரும் வார்த்தை எதுவும் பேசாமலே பையன் கொடுத்த பணத்தை கல்லாவில் எறிந்து விட்டு கட்டி வைக்கப்பட்டிருந்த கடலைப் பொட்டலங்களில் ஒன்றை எடுத்து மத்தியில் லேசாக நசுக்கிப் பார்த்துவிட்டுப் பையனின் கையில் கொடுத்தான். பையன் சட்டைக்குள் பொட்டலத்தைப் போட்டுக்கொண்டு அகன்றான்.

காவல் என்றெழுதிய குவாலிஸ் வண்டி போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலையில் இருந்து பிரிந்து இந்த சாலைக்குள் வந்து நின்றது. முன் சீட்டில் டிரைவருக்கருகில் உட்கார்ந்திருந்த இன்ஸ்பெக்டர், இடுப்பில் இருந்த பிஸ்டலின் மீது கையை வைத்துக் கொண்டு, பின்னால் திரும்பி இரண்டு கான்ஸ்டபிள்களுக்கு நடுவில் உட்கார்ந்திருந்தவனைப் பார்த்தார். ஒரு கான்ஸ்டபிள் கதவைத் திறக்க, “ஓட்றா” என்ற இன்ஸ்பெக்டரின் குரலுக்காகக் காத்திருந்தவன் போல கான்ஸ்டபிளைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்து விழுந்தான். விழுந்தவன் எழுமுன்பே எந்தப் பக்கம் ஓடினால் தப்பிக்கலாம் என்ற முடிவை எடுத்திருந்தான். போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலையை நோக்கி ஓட ஆரம்பிக்க, இன்ஸ்பெக்டர் நிதானமாக கதவைத் திறந்தி இறங்கியதும் ஓடுகின்றவனை நோக்கி சுட ஆரம்பித்தான். மூன்றாவது குண்டுக்கு அம்மா என்றலறியபடி கடலைக்காரன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே விழுந்தான். 

*********************************************************************************

அது ஒரு உயர்தர சைவ உணவ... இருங்கள். உயர்தர என்று ஆரம்பித்தாலே சைவ உணவகம் என்று முடிக்கத்தான் தோன்றுகிறது. அது ஒரு உயர்ரக பார். முழுக்கவே அரையிருட்டில் டேபிளின் மேல் வைக்கப்பட்டிருக்கும் மெழுகுவர்த்தி போன்ற எல்.ஈ.டியின் ஒளியில் எதிரில் இருப்பவர் முகம் தெரிந்தும் தெரியாமலே ஊற்றிக் கொடுக்கப்படும் சரக்கை சரித்துவிட்டு வருமிடம். மூலையில் எப்போதும் யாராவது மூன்று பேர் உட்கார்ந்து கிடாரைத் தட்டிக்கொண்டோ பியானோவைத் தடவிக் கொண்டோ இருப்பார்கள். 

சுரேஷ் சிகரெட்டைக் கீழே போட்டு ஷூக்காலால் மிதித்து நசுக்கிவிட்டு பாரின் உள்ளே நுழைந்தான். டேபிளில் உட்காராமல் பாருக்கு முன்னாலிருந்த உயரமான பார் ஸ்டூலில் உட்கார்ந்தான். நேர்த்தியாக சீருடை அணிந்த பார் டெண்டர் அவன் முன்னால் வந்து நின்று, “சுரேஷ்” 

ஆமோதிப்பது போல தலையை ஒரு வெட்டு வெட்டி, “முத்து”. 

“யூசுவல்?” என்றான் கேள்வியாய்.

“ஆமா”

வழக்கமான லார்ஜை விட 50% அதிகமாக ஊற்றப்பட்ட கிளாஸை சுரேஷின் முன்னால் வைத்து பக்கத்தில் இன்னொரு பவுலில் வறுத்த கடலையையும் வைத்துவிட்டு, “எப்பிடியிருக்க?” என்றான் முத்து.

“அப்பிடியேதான் இருக்கேன். உனக்கு ட்யூட்டி எப்ப முடியும்?” 

“11:00 மணிக்கு. ஏன் கேக்கற?”

“பார்லயே இரு. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.” 

”சரி” என்று அடுத்த கஸ்டமரைப் பார்க்க நகர்ந்தான் முத்து. முத்துவும் சுரேஷும் ஒரே சேரியில் வளர்ந்தவர்கள். ஒரே பள்ளியில் படித்து, ஒரே தெருவில் விளையாடியவர்கள். காலம் இருவரையும் வேறு வேறு திசைகளில்அடித்துச் சென்று விட்டது. சுரேஷ் பத்தாவதில் ஃபெயிலாகி தெருவில் சின்னச் சின்னப் பொறுக்கித்தனம் செய்துகொண்டிருந்துவிட்டு பெருசுவிடம் அடியாளாக செட்டிலாகிவிட்டான். பொட்டலம் விற்க, பொடி விற்க அபின் விற்க என்று சிறு சிறு குழுக்கள் நகரமெங்கும் பெருசுவுக்காக வேலை பார்த்து வந்தது. காலை 9 மணியிலிருந்து இரவு இரண்டு மணி வரை தொழில் நடக்கும். 11 மணியில் ஆரம்பித்து ஒவ்வொரு மணி நேரத்துக்கும் அந்தக் குழுக்களிடம் போய் வசூலை வாங்கிக் கொண்டு சரக்கை ரெஃப்ரஷ் செய்துவரும் வேலை சுரேஷுக்கு. டிவிஎஸ் ஃபிஃப்டியிலிருந்து பெருசின் ஹம்மர் வரை எந்த வண்டியையும் எடுத்துச் செல்வான். பேட்டர்ன் இருக்கக்கூடாது என்பதற்காக. இப்போது கூட வசூலுக்குப் போய்விட்டுத்தான் வந்திருக்கிறான். மூன்றாவது எக்ஸ்ட்ரா லார்ஜையும் உள்ளே இறக்கிய பிறகு வெளியேறினான்.

*************
ட்யூட்டி முடிந்த நேரம் மழை வலுத்திருந்தது. முத்து கையிலிருந்த ரெயின் கோட்டை விலக்கி மணி பார்த்தான். 11:15. ‘பதினோரு மணிக்கே வர்றேன்னு சொன்னானே’ என்று நினைத்த நேரம் ஒரு ஐ-10 மழை நீரை சிதற விட்டபடி வந்து நின்றது. எட்டி கதவைத் திறந்து விட்டன் சுரேஷ். முத்து ஏறியதும் கார், கருஞ்சாரையைப் போல நீண்டிருந்த சாலையில் சீறிப் பாய்ந்தது. 

தரமணியிலிருந்து வேளச்சேரி போகும் சாலையில் திரும்பி கொஞ்சம் தூரம் போனதும் ஒரு சந்துக்குள் திருப்பி நிறுத்தினான். “எறங்கு” என்று சொல்லிவிட்டு இறங்கி நடந்தான். முத்துவும் ஆட்டுக்குட்டி போல பின்னாலே போனான். ஷட்டர் போட்டிருந்த “தனலட்சுமி மெஸ்”ஸின் கதவை டொக் டொக் என்று சங்கேதமாகத் தட்டியதும், பாதி திறந்த கதவின் வழியாக எட்டிப் பார்த்த தனலட்சுமி, “நீயா, உள்ள வா. இதாரு ஃப்ரண்டா?” என்று கேள்வியும் நானே பதிலும் நானே என்று உள்ளே போனாள். 

சின்ன மெஸ் அது. பத்துக்குப் பத்து அறையில் கால் பகுதியை கிச்சனாகவும் மீதி இருந்த இடத்தில் மூன்று வட்ட வடிவ ப்ளாஸ்டிக் மேஜையைப் போட்டு அதைச் சுற்றி சில நாற்காலிகளும் இறைந்திருந்தது. 

“துன்ன எத்தாவது வோணுமா?” கிச்சனில் இருந்து குரல் கொடுத்தாள். 

“ஒண்ணும் வேணாம். நீ தூங்கு” என்று சொல்லிவிட்டு சிகரெட் பாக்கெட்டை எடுத்து முத்துவிடம் நீட்டினான். சிகரெட்டை உருவி உதட்டுக்குக் கொடுத்துவிட்டு, “என்னடா மேட்டர். அப்பத்துலருந்து கேக்குறேன். இந்தா சொல்றேன் அந்தா சொல்றேன்னு இங்க கூட்டிட்டு வந்திருக்க?”

லைட்டரைக் கிளிக்கி சிகரெட்டுகளின் முனைகளைச் சிவப்பாக்கி விட்டு,

“உனக்கு 2 கோடி பணம் சம்பாதிக்க ஆசையா?”

உதட்டில் ஒட்டியிருந்த சிகரெட் தவறிக் கீழே விழ மேஜையைத் தொடுமுன் பிடித்த முத்து, “என்னடா சொல்ற?” 

“நிஜமாத்தான் கேக்குறேன். சம்பாதிக்க ஆசையா?”

“பணத்துக்கு மேல ஆசை யாருக்குத்தான் இருக்காது? ஆனா எப்பிடி? எதுவும் கடத்தலா?”

“உனக்கு சம்மதம்னா முழு மனசா சொல்லு. நான் திட்டத்தைச் சொல்றேன்”

“ம்ம்ம்.. சரி சம்மதம் சொல்லு”

“நான் யார்கிட்ட வேலை பார்க்கிறேன்னு தெரியும்ல?”

“சொல்லியிருக்கியே. யாரோ பெருசுன்னு. ரியல் எஸ்டேட் தானே?”

“பெருசு வரைக்கும் சரி. ஆனா ரியல் எஸ்டேட் இல்லை. போதை மருந்து வியாபாரம்”

இந்த முறை சிகரெட் தரையிலே விழுந்தே விட்டது. “என்னடா சொல்ற? இத்தனை நாள் சொன்னதே இல்லை?”

“இதெல்லாம் ஊர்முழுக்க தண்டோரா போடுற வேலையாடா? சொல்றதை மட்டும் கேளு. குறுக்கக் கேள்வி கேக்காத”

“சரி சொல்லு” 

“பெருசுக்குத் தெரிஞ்ச ஒரே வியாபாரம் போதை மருந்து விக்கிறது. நான் விக்கிற குரூப்புங்கக்கிட்ட வசூலான காசை வாங்கிக்கிட்டு வர்ற வேலை செய்யறேன். பெருசுக்கு வயசாயிருச்சின்னு ஃபீல் பண்ணுது. வாரிசுகளும் இல்லாததால இந்தத் தொழிலை விட்டுட்டு ரியல் எஸ்டேட்டு, அரசியல்னு செட்டிலாகிறலாம்னு பாக்குது. அதுனால இருக்கிற சரக்கை எல்லாம் கை மாத்தி விட்ரலாம்னு முடிவெடுத்துருக்கு. எனக்கு இந்த அடியாள் தொழில் போரடிச்சிருச்சி. பெருசு ரியல் எஸ்டேட்டு பண்ணாலும், அரசியலுக்குப் போனாலும் நான் அடியாளாத்தான் இருக்க முடியும். எந்த சேஞ்சும் இருக்காது.”

“அதுனால?”

“அதுனால இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கலாம்னு பாக்குறேன். பெருசு கிட்ட எப்பிடியும் 25லருந்து அம்பது கோடிக்கு சரக்கு இருக்கும். அதைக் கைமாத்தி விடும்போது குறைஞ்சது 20லருந்து நாப்பது கோடி வரைக்கும் காசு கேஷா கை மாறும். அதை அப்பிடியே லவட்டிட்டா பாம்பே பக்கமோ இல்லை வெளிநாட்டுக்கோ போய் செட்டிலாகிறலாம்னு பார்க்கிறேன்”

“நான் இதுல எங்க வர்றேன்? எனக்கு ஏன் ரெண்டு கோடி கிடைக்கும்?”

“ம்ம்.. கை மாறப்போறது உங்க பார்லதான். அதுனால அப்ப உன் உதவி எனக்குக் கண்டிப்பா தேவைப் படும். மொத்த ப்ளானும் என்னன்னு அப்புறம் சொல்றேன். ஆனா உன் உதவி இல்லாம என்னால செய்ய முடியாது. என்ன சொல்ற?”

முத்து கடைசி பஃபை இழுத்துவிட்டு ஆஷ்ட்ரேயைத் தேட, கீழ போடு என்பதாக கண்ணைக் காட்டினான் சுரேஷ். கீழே போட்டு அனிச்சையாய் காலால் நசுக்கிவிட்டு, “என் உதவி இல்லாம செய்ய முடியாதுன்னு சொல்ற. அப்புறம் ஏன் ரெண்டு கோடி மட்டும்? 50-50 பேசுவோமே?”

சுரேஷின் பார்வையில் இப்போது லேசான கோபமும், என் கிட்டயேவா என்ற ஏளனமும் கலந்து ஒலித்தது. “சரி அப்ப பெருசை நீ போடு. கை மாத்த வர்றவனை நான் போடுறேன். 50-50 வச்சிக்குவோம்”. 

“என்னது கொலையா??” 

“கொலைன்னதும் வாயப் பொளக்குற? என்ன மயித்துக்கு 50-50 கேக்குற. உன் வேலை ரொம்ப சிம்பிள். நீ இதுல இருக்கன்னே யாருக்கும் தெரியாது. யாரும் சாகவும் மாட்டாங்க. காசு மட்டும் சுளுவா என்கைல வந்துரும். உன் பங்கு ரெண்டு கோடியை வாங்கிட்டு நீ உன் வழியில போயிரு. நான் என் வழியில போயிர்றேன். அதுக்கப்புறம் நாம சந்திச்சிக்கவே கூடாது”

“ஏன்?”

“ஏன்னா, பெருசுக்கு காசு போனது தெரிஞ்சா என்ல ஆரம்பிச்சி செத்துப் போன என் கொள்ளுத்தாத்தா வரைக்கும் சமாதியைத் தோண்டியாவது கொன்னுரும். அதுனால நீ என்னைப் பாக்கவே பாக்காத. ஒரு வேளை நான் மாட்டிக்கிட்டா உன்னையக் காட்டிக் குடுக்க மாட்டேன். சரியா?”

தயங்கித் தயங்கி “நான் மாட்டிக்க மாட்டேனே?”

“நாந்தான் நீ இருக்கிறதே தெரியாதுன்னு சொன்னேனே? என்னய நம்பு”

முத்துவுக்கு தயக்கமாக இருந்தாலும் ரெண்டு கோடி ஆசையைக் காட்டியது. ’தங்கச்சிகள் கல்யாணத்தை முடித்துவிடலாம். அக்கா கல்யாணத்துக்கு வாங்கிய கடனையும் அடைத்து வீட்டைத் திருப்பிவிடலாம். பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்யாமல் இப்படி கல்யாணச் செலவாக செய்து விட்டால் பணம் வந்ததே யாருக்கும் தெரியாது. இந்த வேலையிலேயே தொடர்ந்தோமென்றால் இதெல்லாம் செய்ய இன்னும் மூன்று ஜென்மங்களுக்கு உழைக்க வேண்டும்’. எல்லாம் யோசித்த பிறகு, “சரிடா. நீ சொல்றபடி செய்யறேன். ஆனா என்னைய மட்டும் காப்பாத்திரு”

“நீ பயப்படவே பயப்படாத. நான் இருக்கேன். எப்பிடி செய்யப் போறோம்ங்கிற ப்ளான இன்னும் ரெண்டு நாளைக்குள்ல உன்கிட்ட சொல்றேன். இப்ப வா நான் உன்னைய உன் வீட்டுல விட்டுர்றேன்”

“வீட்டுல வேண்டாம். பைக் பார் வாசல்ல நிக்குது. திரும்ப அங்கயே கொண்டு போய் விட்டுரு”

கார் சந்துக்குள் இருந்து வெளியேறி சாலையில் கலக்குமிடத்தில் மழையால் ஒரு ஆட்டோ ரிப்பேராகி நின்றிருந்தது. டிரைவர் பின்னால் நோண்டிக் கொண்டிருக்க, படுதா போட்டு மூடப்பட்டிருந்த ஆட்டோவுக்குள் பயணிகள் யாரோ இருந்தார்கள். ரோட்டில் இருந்த மழைத் தண்ணீர் ஆட்டோவின் மேல் பட்டுவிடாமல் கார் மெதுவாகக் கடந்து சாலையை எட்டியதும் வேகம் பிடித்து பறந்தது.

படுதாவுக்குள் உட்கார்ந்திருந்தவன் ஹெட் ஃபோன் அணிந்திருந்தான். கையில் இருந்த சின்ன டிவி போன்ற கருவியில் “சரிடா நீ சொல்றபடி செய்யறேன். ஆனா என்னைய மட்டும் காப்பாத்திரு” என்று பயந்த குரலில் முத்து சொல்லிக் கொண்டிருந்தான். 

(தொடரும்)

பண்புடன் இணைய இதழில் தொடராக வ்ந்து கொண்டு இருக்கிறது

அடுத்த பாகம் இங்கே