Monday, January 30, 2012

பரமபதம் - 2

பாகம் - 1


ஹேங் ஓவர் தலைவலி சுரேஷுக்கு மண்டையைப் பிளந்தது. டிவியில் தல இனிமே தண்ணியே அடிக்கக் கூடாதுடா சாமிஎன்று சொல்லிக் கொண்டிருந்தார். அவன் ரூம் மேட், அஜித் ரசிகன், டிவியில் வைத்த கண்ணை மாற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவிழ்ந்திருந்த லுங்கியை இறுக்கிக் கட்டிக் கொண்டு, “என்னடா ஆஃபீஸ் போகலையா?” என்று அவனைப் பார்த்து கேட்டுவிட்டு தலையணைக்குக் கீழிருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து ஒன்றை உருவிப் பற்ற வைத்தான்.
இன்னைலருந்து செகண்ட் ஷிஃப்ட்வாய் மட்டும் பதில் சொன்னது, கண் டிவியிலேயே.
திருட்டு டிவிடியா?? போனவாரம் தானடா தியேட்டருக்குப் போய் பார்த்த?”
நேத்து நைட் ஷோ கூடத்தான் போனேன்
டேய்!!. அப்பிடி என்னடா இருக்கு இதுல?” என்றவாறே எழுந்து கையில் பேப்பரை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான். கண்ணாடிக்குப் பின்னால் சொருகியிருந்த பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்கார்ந்தான். பேப்பரில் ஒன்றன்கீழ் ஒன்றாக எழுதியிருந்ததில் முதல் வரியை அடித்தான். சிறிது நேரம் யோசித்து விட்டு இன்னும் இரண்டு வரிகள் எழுதினான். மற்ற வேலைகளை முடித்துவிட்டு வெளியேறி ஆட்டோ பிடித்தான்.
 “வணக்கம்ணே!! பெருசு எந்திரிச்சிட்டாரா??” வாசலில் நின்றிருந்த பென்ஸைத் துடைத்துக் கொண்டிருந்த கணேசனைப் பார்த்துக் கேட்டான்.
ஹாங். அதெல்லாம் அரை மணி நேரத்துக்கு முந்தியே எந்திரிச்சிட்டாரு. உன்னையத்தான் எதிர்பார்த்துட்டு இருக்காரு போ
கணேசன் பெருசுவின் ஆஸ்தான ட்ரைவர். எங்கே போவதென்றாலும் கணேசன் இல்லாமல் போகமாட்டார். கணேசனும் பெருசுவின் வீட்டிலேயே ஒரு அறையில் தங்கியிருக்கிறார். அவரது குடும்பம் குழந்தை குட்டி பற்றி யாரிடமும் பகிர்ந்து கொண்டதே இல்லை. பெருசுவிடம் கூட சொல்லியிருக்கிறாரோ என்னவோ.
பெருசு உள்ளே சோஃபாவில் உட்கார்ந்திருந்தார். முன்னால் இருந்த டீப்பாயின் மேல் தக்காளி சூப் ஆவி பறக்க வைக்கப்பட்டிருந்தது.
வாடா!! இன்னைலருந்து வசூலை மட்டும் வாங்கிட்டு வா. சரக்கு கொண்டு போகவேண்டாம். இருக்கிற சரக்கை வித்தா போதும்
சரிங்கண்ணே
நாளைக்கழிச்சி சரக்கைக் கைமாத்தப் போறோம் யாவகம் இருக்குல்ல?”
இருக்குண்ணே
நீதாண்டா பக்கத்துல இருக்கணும். சூரியை போலிஸ் என்கவுண்டர்ல போட்டுட்டாய்ங்க. தெரியும்ல?”
அண்ணே சூரி கேஸ் ஆக்சிடெண்டுன்னு போலீஸ் சொல்லுது?..
என்னடா ஆக்சிடண்டு. திட்டம் போட்டுத்தாண்டா போலிஸ்காரப்பயலுவ செஞ்சிருக்காய்ங்க. சூரி நம்மாளுன்னு ஒரு பயலுக்கும் தெரியாம வச்சிருந்தேனே. எப்பிடி மோப்பம் புடிச்சானுங்கன்னுதான் தெரியலை. அந்தப் போலீஸ்காரனை என் கையால...சரி அத விடு. சூரியோட எடத்துல உன்னையத்தான் வைக்கலாம்னு இருக்கேன்
சரிண்ணே
சரி. நாளைக்கி சாயந்தரமா அந்த பாருக்குப் போய் நோட்டம் விட்டுட்டு வந்துரு. கூட ஒரே ஒருத்தனைத்தான் கூட்டிட்டு வரணுன்னு கண்டிசன் போட்டுருக்கான். நீ எதுக்கும் நம்ம பயலுக ரெண்டு பேரை தயாரா வெளிய நிக்கச்சொல்லு. சரியா??”
சரிண்ணே. நான் வசூலுக்குப் போயிட்டு வந்துர்றேன்
ம்
தக்காளி சூப்பை கோப்பையோடு எடுத்து ஒரே மூச்சில் குடித்து முடித்தார் பெருசு. பெருசுக்கு பைபாஸ் சர்ஜரி செய்ததில் இருந்து சரக்கு பக்கம் மூக்கைக் கூட வைப்பதில்லை. சிகரெட், பான்பராக் என அத்தனை கெட்டபழக்கங்களையும் விட்டுவிட்டு ஆரோக்ய வாழ்வினைக் காப்பது முக்கியம் என்று திருந்தி விட்டது. சரக்கு விற்கும் தொழிலை விட்டொழிக்க வேண்டும் என்று நினைத்ததற்கும் அதுதான் காரணம்.
இன்னோவாவில் தாவி ஏறிய சுரேஷ் ப்ளூடூத் ஹெட்செட்டை எடுத்து காதில் மாட்டிக்கொண்டான்.
கோடம்பாக்கம் பிரிட்ஜில் ஏறிக்கொண்டிருந்த போது கால் வந்தது. ஹலோ
“சுரேஷ் எனக்கு ரொம்ப பயமா இருக்கு. மாட்டிக்க மாட்டேனே
முத்து நாந்தான் சொன்னேன்ல. உனக்கு எந்தப் பிரச்சனையும் வராதுன்னு. சரி நீ இப்ப எங்கருக்க?”
வீட்ல
லன்சுக்கு மீட் பண்ணுவோமா?? அப்ப உன்கிட்ட முழு திட்டத்தையும் சொல்றேன். அதுக்கப்புறம் உனக்குப் பிரச்சனை வருதா இல்லையான்னு சொல்லு. சரியா?”
சரி. எங்க மீட் பண்ணுவோம்?”
நீ பார்லயே இரு. நான் வந்து கூட்டிட்டுப் போறேன்
சரி
முத்து ஃபோனை அணைத்து விட்டு சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே வந்து பைக்கில் ஏறி கிளம்பினான். பாருக்கு வெளியே பார்க் செய்துவிட்டு சிகரெட் எடுத்து பற்ற வைக்கும்போது அவன் வந்தான். நெடு நெடுவென்று ஆறடிக்கும் மேல் உயரம். ஒட்ட வெட்டிய முடி. கண்ணை மறைக்கும் கருப்பு கூலிங் க்ளாஸ். உடலை இறுகப் பிடித்த ரவுண்ட் நெக் டி ஷர்ட். பெல் பாட்டம் ஜீன்ஸ். தீப்பெட்டி இருக்கா?”
பதில் சொல்லாமல் சிகரெட் லைட்டரை நீட்டியதும் வாங்கி சிகரெட்டைப் பற்றை வைத்துக் கொண்டே, “முத்துதானே?”
ஆமா. உங்களுக்கெப்பிடி என் பேரு?”
உங்க பேரு மட்டுமில்லை. உங்க ஜாதகமே இன் கையில இருக்கு. வர்றீங்களா அப்பிடி கார்ல உக்காந்து பேசுவோம்?”
என்ன பேச? நீங்க யாருன்னே தெரியாது சார். உங்கக்கிட்ட பேச எனக்கு ஒண்ணுமில்லை
சரி! பேச வேண்டாம். நீங்க பார்க்குறது ஒண்ணு காட்டுறேன். அதைப் பாருங்கஎன்றவாரு பைக்குள்ளிருந்த ஐ ஃபோனை எடுத்து ஒரு வீடியோவை முத்து முன் ஓட்டிக் காட்டினான். முத்துவின் முகம் டாப் ஆங்கிளில் தெள்ளத் தெளிவாகப் பதிந்திருந்தது அந்த வீடியோவில். சுரேஷின் தலை மட்டுமே பதிவாகியிருந்தது. சுரேஷும் முத்துவும் தனலட்சுமி மெஸ்ஸில் பேசிக்கொண்டிருந்த காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன.
என்ன முத்து? இப்பவவாவது கார்ல ஏறுறியா?” ஒருமைக்குத் தாவிவிட்டு திரும்பிப் பார்க்காமல் காரை நோக்கி நடந்தான். முத்து காரின் பேசஞ்சர் சீட்டில் ஏறியதும் என் பேர் கார்த்திக். கிரைம் ப்ராஞ்ச். ஸ்பெஷல் ஸ்குவாட் என்று கையை நீட்டினான்.
முத்து போலீஸா??” என்று அதிர்ச்சியை முகம் முழுக்கக் காட்டினான். மாட்டிக்க மாட்டேன்னு சொன்னானே. இப்பிடி விசயத்தை ஆரம்பிக்கிறதுக்குள்ள மாட்டிக்கிட்டேனே? அய்யோ! தங்கச்சிங்க கல்யாணம், அப்பா அம்மாவுக்கு வீடு எல்லாம் அம்போவா??’ என்று மனம் பலதையும் எண்ணிக் குழம்பிக் கொண்டிருந்தது.
சார் எனக்கு ஒண்ணும் தெரியாது சார். இந்த சுரேஷ் எனக்கு ஃப்ரண்ட்லாம் கிடையாது சார். சின்ன வயசுல ஒண்ணாப் படிச்சிருக்கோம். பாருக்கு வந்தப்போ திரும்ப பழகிக்கிட்டோம். அவ்வளவு தான் சார். தயவு செஞ்சி என்னைய விட்டுருங்க சார்
எல்லாம் தெரியும் முத்து. நீ நாங்க சொல்றதுக்கு ஒத்துழைச்சா உன்னைய இந்தக் கேஸ்ல மாட்டிக்காம தப்பிக்க வச்சிடுறேன். ஓக்கேவா??”
நீங்க என்ன சொன்னாலும் செய்யிறேன் சார். என்னையக் காப்பாத்துங்க சார். எனக்கு ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க சார். அவங்களுக்குக் கல்யாணம் செஞ்சி வைக்கணும். எங்கப்பாம்மா வீட்டை கடன்ல இருந்து மீட்டணும். நிறைய வேலை இருக்கு சார். ப்ளீஸ் சார். என்னைய காப்பாத்துங்க சார்
முத்து அழாத. நிறுத்து. நான் சொல்றதை கேளு
ம்ம்
உன் ஃப்ரண்டு சுரேஷ், அவன் தொடுப்போட புருசனை மூணு மாசத்துக்கு முன்னாடி குத்திக் கொன்னுருக்கான்னு சந்தேகப் படுறோம். வேற எவனாச்சுமா இருந்தா லாக்கப்புக்குத் தூக்கிட்டுப் போய் நாலு குடு குடுத்தா உண்மைய எல்லாம் கக்கிருவானுங்க. ஆனா இவன் பெருசு கேங். அதுனால இவன் மேல கை வைக்க முடியலை. அவனைத் தொடர்ந்து ஃபாலோ பண்ணதுல நீயும் அவனும் பேசுன இந்த மேட்டர் சிக்கிச்சி. நீ இதுல செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான். அவன் சொல்றபடியெல்லாம் செய்யி. எப்ப என்னைக்கி எப்பிடி நடக்குதுங்கிற தகவலை அப்பப்ப எனக்குக் குடுத்துட்டே இரு. இந்தக் கைமாத்தலப்போ அவனை கையும் களவுமா பிடிச்சிட்டா, ரெண்டு கேஸ்லயும் சேத்து உள்ள தள்ளிருவோம். என்ன செய்யிறியா? சொல்லு
நீங்க இப்ப எனக்குக் காட்டின வீடியோவை வச்சி அவனை அரெஸ்ட் பண்ண முடியாதா சார்?”
நீயே பாத்தில்ல? இதுல சுரேஷோட தலை மட்டும் தான் தெரியுது. அவன் குரலும் ஒரு மாதிரி கம்மலா இருக்கு. அவனோட குரல்தானான்னே கண்டுபிடிக்க முடியலை. இதை வச்சிக்கிட்டு நான் ஒண்ணும் செய்ய முடியாது. பெருசுக்கிட்ட போட்டுக் குடுக்கலாம். ஆனா அந்தாளு அவனையும் போட்டுத் தள்ளிருவாரு. உன்னையும் போட்டுத் தள்ளிருவாரு. எனக்கு அதுல ஒரு பிரயோசனமும் இல்லை. அதான் இந்தத் திட்டம். உன்னால செய்ய முடியுமா முடியாதா? முடியாதுன்னா சொல்லிடு நான் வேற வழி பார்த்துட்டுப் போயிருவேன். ஆனா சுரேஷ் வேற வழி தேட முன்னாடி எல்லா மேட்டரும் தெரிஞ்ச உன்னையப் போட்டுட்டுத்தான் ஆரம்பிப்பான். சொல்லிட்டேன்.
முத்துவின் முகத்தில் போலீஸ் பயத்தோடு மரண பயமும் சேர்ந்து கொண்டது. சார். நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன் சார். என் உசுரக் காப்பாத்திருங்க சார். ப்ளீஸ் சார்
(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே

No comments: