Tuesday, February 28, 2012

பரமபதம் - 6


சம்பவ தினம்

காலை 10:00 மணி

போதை ஒழிப்புத் துறை, ராஜாஜி பவன், சென்னை


அது ஒரு கான்ஃபரன்ஸ் ரூம். நீளமான மேஜையின் இரண்டு பக்கங்களிலும் நாற்காலிகள். ஒரு பக்கம் மூன்று பேரும் இன்னொரு பக்கம் இரண்டு பேரும் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு பக்க சுவற்றில் பெரிய வெள்ளைத் திரை. மேஜையின் நடுவிலிருந்த ப்ரொஜெக்டரில் இருந்து ஒளிர்ந்த படம் திரையில் தெரிந்தது. பவுடர் ரவி.

மூன்று பேரில் நடுநாயகமாக உட்கார்ந்திருந்த அதிகாரி எழுந்தார். “பவுடர் ரவியை ரெண்டு தடவை நாம அரெஸ்ட் பண்ணியும் பொலிட்டிகல் பிரஷர்ல வெளிய வந்துட்டான். ஆனா இந்தத் தடவை வந்திருக்கிற இன்ஃபர்மேஷன் ரொம்ப நம்பகமான இடத்துல இருந்து வந்திருக்கு. ரவி பல்க்கா சரக்கு கைமாத்தப் போறான். நாம அவனை இந்த முறை கையும் களவுமா பிடிக்கணும்”

“பிடிச்சி” எதிரே உட்கார்ந்திருந்த அதிகாரி இடை மறித்தார்.

“ஜெயில்ல போடுறதுதான் சார். என்ன கேள்வி இது?”

“சுகுமார், நாம பிடிச்சிப் போட்டாலும் அவன் ப்ரஷர்ல வெளிய வரப் போறான். நாம போதை மருந்தை மட்டும் தான் கைப்பத்துவோம். அவன் வெளிய வந்து மறுபடியும் இதே தொழிலைத்தான் செய்யப் போறான்”

“அப்போ என்ன செய்யலாம்னு சொல்றீங்க சார்?”

“அவன் அந்த இடத்தை விட்டு உயிரோட போகக் கூடாது”

*******************

காலை 11:30 மணி

ஹைடெக் பார்

சுரேஷ் ஐ-10ஐ பின் பக்கம் கொண்டு சென்று நிறுத்தினான். செல்ஃபோனில் ஒரு மிஸ்ட் கால் கொடுத்துவிட்டு இறங்கி டிக்கியைத் திறந்தான். உள்ளே பச்சை நிறத்தில் பெரிய பெட்டி ஒன்று உட்கார்ந்திருந்த்து. அதை வெளியே எடுத்து வைத்தான். 
முத்து கிச்சனின் பின்கதவைத் திறந்து வெளியே வந்தான். “என்னடா இவ்வளவு பெரிய பெட்டியா இருக்கு?” என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான்.

“அடப் போடா. நூறு கோடி ரூபா கை மாறப் போவுது. ஒரு பெட்டியில எப்பிடி அடைப்பாங்கன்னு நானே யோசிச்சிட்டு இருக்கேன்”

“என்னது நூறு கோடியா? நாப்பது கோடின்னு சொன்ன?”

“அப்பிடித்தான் கேள்விப்பட்டேன்”

“அப்பவும் எனக்கு ரெண்டு கோடி தானா?? அஞ்சு கோடியாவது குடுக்க்க் கூடாதா?”

“ம்ம்.. குடுத்துட்டாப் போச்சி. சரி இந்தா” பைக்குள் கையை விட்டு ஒரு சிறிய பாட்டிலை எடுத்தான். “இதுதான் டெக்கோலிக் ஆசிட். இந்த மொத்த பாட்டிலையும் அவரோட தக்காளி சூப்ல கவுத்திரு. சரியா?”

“சரி” என்று வாங்கி ஒரு முறை கையில் வைத்து சுற்றியும் பார்த்துவிட்டு பைக்குள் வைத்துக் கொண்டான். பெட்டியை எடுத்துக் கொண்டு, உள்ள ஸ்க்ரீன் பின்னாடி ஒளிச்சி வச்சிர்றேன். அந்த டேபிள் உங்களுக்கு வர்றமாதிரியும் செஞ்சிர்றேன். ஓக்கே?”

“ஓக்கே. சிவப்பு கலர் ஆல்டோ பார்க்கிங்க்ல நிக்கும் நம்பர் TN01 A 19. அதுதான் நீ சூட்கேஸை வைக்க வேண்டிய கார். சரியா?”

பதிலுக்குக் காத்திராமல் காரை ஸ்டார்ட் செய்து காற்றில் கரைந்தான்.

********************************

இரவு 10:00 மணி

புதிதாகப் போட்ட தார் ரோட்டைப் போன்ற கருமையான இருள். இருளைக் கிழித்துக்கொண்டு ஹெட்லைட் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டு அந்த ஹம்மர் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்தது. ஹம்மரை கணேசன் ஓட்டிக் கொண்டிருந்தார். பக்கத்தில் பெருசு. பின்சீட்டில் சுரேஷ். அதற்கும் பின்னால் ஒரு பெரிய பெட்டி வைக்கப் பட்டிருந்தது. ஹம்மரை ஒரு சிவப்பு நிற ஆல்டோ இரண்டு தடியன்களுடன் ஃபாலோ செய்து வந்தது. 

“சுரேஷ்! சரக்கை செக் பண்ணிட்டீயில்ல?”

“செக் பண்ணிட்டேண்ணே. எல்லாம் சரியா இருக்கு”

“ஓக்கே. ரவி பணம் குடுத்ததும் நீ பாத்ரூமுக்குள்ள போய் செக் பண்ணிட்டு வந்துரு”

“சரிண்ணே. எவ்வளவு பணம்ணே?”

“அம்பது கோடி. டாலரா இருக்கும். எண்ணிருவல்ல”

“எண்ணிருவேண்ணே.” சுரேஷ் மனதில் ‘அவன் நூறு கோடின்னு சொன்னானே’ என்று ஓடியது.

கார் ஹைடெக் பாரின் பார்க்கிங்கில் திரும்பி நின்றது.

“கணேசா நீ கார்லயே இரு. சுரேஷும் நானும் உள்ள போறோம். அந்தத் தடியனுகளையும் கார்லயே வெயிட் பண்ணச் சொல்லு. ஏதாவது பிரச்சனைன்னா நான் குரல் குடுக்குறேன். சரியா?”

“சரி பெருசு” பெருசுவை பெருசு என்று கூப்பிடும் உரிமை கணேசனுக்கு மட்டுமே உரித்தானது. சுரேஷ் பின்னாலிருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு பெருசுவைப் பின் தொடர்ந்தான்.

இருவரும் உள்ளே நுழைந்தனர். வாசலில் – “Please wait here to be seated”க்குப் பின்னால் நின்றிருந்த முத்து பெருசுவிடம், “How many sir?” என்றான்.

“ஃபோர்”

“திஸ் வே ப்ளீஸ்” என்று அழைத்துப் போய் ஒரு டேபிளில் உட்கார வைத்தான். மெனு கார்டை அவர்களின் முன்னால் வைத்துவிட்டு சுரேஷ் மட்டும் பார்க்கும் படியாக ஸ்க்ரீனைத் தொட்டுக் காட்டினான்.

“இன்னும் ரெண்டு பேர் வருவாங்க. அவங்க வந்தா இந்த டேபிளுக்குக் கூட்டிட்டு வாங்க” என்றான் சுரேஷ்.

“ஓக்கே சார்” என்று தலையசைத்துவிட்டு அகன்றான்.

“அண்ணே! பாத்ரூம் போயிட்டு வந்துர்றேன்” என்று எழுந்து டேபிளை விட்டு அகன்றான்.

திரும்பி வரும்போது ரவி பெருசுக்கு எதிரே உட்கார்ந்திருந்தான். அவன் ஆள் பக்கத்தில் நின்றிருந்தான். இவன் போய் ரவியைப் பார்த்து, “வணக்கம் அண்ணாச்சி” என்று சொன்னதும் ரவி ஆமோதிப்பது போல தலையசைத்தான்.

பெருசுவின் பக்கத்தில் சுரேஷ் உட்கார்ந்தான். ரவியின் ஆளும் ரவியின் அருகில் உட்கார்ந்தான். முத்து ஆர்டர் எடுக்க வந்தான். பெருசு ஒரு தக்காளி சூப் என்று சொல்ல, சுரேஷ் ஒன்றும் வேண்டாம் என்று தலையசைத்தான். ரவியும் அவன் ஆளும் சிக்கன் கபாப் சொன்னார்கள்.

முத்து ஆர்டர் சொன்ன ஐட்டம்களை எடுத்து வரும் வரை நால்வரும் ஒன்றும் பேசாமலிருந்தார்கள். முத்து ஐட்டங்களை அவரவர் முன்னால் வைத்துவிட்டு அகன்றான்.

“சரக்கு கொண்டு வந்துட்டேன். நீ பணம் கொண்டு வந்துட்டியா?”

“நீ காலையில பேசுன மாதிரி அம்பது இப்ப கொண்டு வந்திருக்கேன். மீதியை அடுத்த மாசம் குடுக்குறேன்” அம்பது என்று சொல்லும்போது சுரேஷின் கண்களை ரவியின் கண்கள் சந்தித்துச் சென்றன.

“சரி பார்த்துரலாமா?”

“அண்ணாச்சி சாப்ட்ரலாமே?” என்றான் ரவியின் அருகில் இருந்த தடியன்.

“நீங்க சாப்புடுங்க. சூப் இன்னும் குடிக்கிற பக்குவத்துக்கு வரலை” என்றான் பெருசு.

இருவரும் சிக்கன் கபாப்களை கபளீகரம் செய்ய ஆரம்பித்தனர். பெருசுவும் ரவியும் முட்டிக்கொண்ட சம்பவங்களைப் பற்றிப் பேசி சிரித்துக் கொண்டனர். பேச்சு சினிமா பக்கமும் சினிமா நடிகைகளின் பக்கமும் சென்றது. ரவி தன்னுடன் படுத்த நடிகைகளின் அங்கங்களைப் பற்றி மோசமாகக் கமெண்ட் அடித்தான். பெருசு சத்தம் போடாமல் சிரித்தான். பைபாஸ் செய்த்தில் இருந்து சத்தம் போட்டு சிரிப்பது கூட இல்லை.

சுரேஷ் எழுந்து அவனுக்கு வலது புறம் வைக்கப்பட்டிருந்த பணப் பெட்டியை இழுத்துக் கொண்டு பாத்ரூம் நோக்கி நடந்தான். அந்த பாத்ரூமுக்கு இரண்டு கதவுகள். ஒரு கதவு ரெஸ்டாரண்ட் பக்கமிருந்தும் இன்னொரு கதவு கிச்சனுக்குள்ளிருந்தும் இருந்தன. மொத்தம் ஆறு யூரினல்களும் இரண்டு டாய்லெட்டுகளும் இருந்தன. ஒரு டாய்லெட்டில் யாரோ இருந்தார்கள். கதவு பூட்டப்பட்டிருந்தது. இன்னொரு டாய்லெட்டுக்குள் நுழைந்து கதவைப் பூட்டினான். வெஸ்டர்ன் டாய்லெட்டை மூடிவிட்டு மூடியின் மேல் அமர்ந்தான். சூட்கேஸைத் தூக்கி மடியில் இருத்தினான். சூட்கேஸின் கனம் தொடைகளை அழுத்தியது. இரண்டு பக்க பூட்டுகளையும் திறந்தான். சூட்கேஸைத் திறந்து பார்த்தான். அத்தனையும் நூறு டாலர் நோட்டுகள். பல நோட்டுகள் அழுக்கடைந்து இருந்தன. 10X10X10ஆக 1000 கட்டுகள் அடுக்கப்பட்டிருந்தன. மனதுக்குள் கணக்குப் போட்டான். ஐம்பது கோடி ரூபாய்க்கு சமமான டாலர் மதிப்பு. ஒரு முறை ஆழ முகர்ந்தான். கரன்சியின் மணமும் அதன் மீது படிந்த அழுக்கின் மணமும் அவன் நாசியைத் துளைத்தது.

*******************************
மாலை 10:45

“என்னப்பா சூப் குடிக்காமலே உக்காந்திருக்க?” ரவியின் பக்கத்தில் இப்போது ஒரு கிளாஸ் ஸ்காட்ச் உட்கார்ந்திருந்தது.

“இன்னும் ஆறனும்பா. ஒரே மூச்சில குடிச்சித்தான் பழக்கம்”

“என்னவோப்பா! பைபாஸ் பண்ணாலும் பண்ணாய்ங்க. நீ இப்பல்லாம் சரக்கே அடிக்கிறதில்லைன்னு சொல்லிட்ட. வயசாச்சின்னா எல்லாருக்கும் கஷ்டந்தான் போல”

“ஆமா”

சுரேஷ் சூட்கேஸை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான். டேபிளின் சைடில் வைத்தாலும் இப்போது சூட்கேஸ் சுரேஷுக்கு அருகில் இருந்தது. இப்போது ரவியின் ஆள் சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு பாத்ரூமுக்குப் போனான்.

ரவியின் ஆள் திரும்ப வருவதற்கும், பெருசு ஒரே மூச்சில் சூப்பைக் குடித்து முடித்ததற்கும் சரியாக இருந்தது. பெருசு சூப் பவுலைக் கையில் தூக்கியதுமே சுரேஷ், பாலாவுக்கு மிஸ்ட் கால் கொடுத்திருந்தான்.

சரியாக இரண்டாவது நிமிடம் பாலா உள்ளே வந்தான். அவன் டேபிளை நோக்கி வேகமாக வருவதைப் பார்த்ததும் பெருசு இடுப்பில் சொருகியிருந்த துப்பாக்கியின் மேல் கையை வைத்துக் கொண்டான். அதைப் பார்த்த சுரேஷும் சட்டைக்குள் கையை விட்டு துப்பாக்கியை தொட்டுக்கொண்டான்.

பாலாவின் நடையில் இருந்த வேகம் முகத்தில் பதட்டமாக உருப்பெற்றிருந்தது. வந்த வேகத்தில் ரவியின் முன்னால் குனிந்து அவன் காதில் ஏதோ சொல்ல, ரவி அதிர்ச்சியை முகத்தில் வாங்கினான்.

“என்னப்பா ஆச்சி?” பெருசு ரவியின் அதிர்ச்சியை, குரலில் ஆர்வமாக ஏற்றிக் கேட்டான்.

“போலீஸ் வந்திருச்சாம்பா. உடனே இடத்தைக் காலி பண்ணுவோம். இடப் பிரச்சனை பத்தி அப்புறம் பேசலாம்” பரபரப்பாக ரவி எழ ஆரம்பிக்க, பெருசுவுக்கு நெற்றியெல்லாம் வேர்த்தது.

இடது கையால் நெஞ்சைப் பிடிக்க, சுரேஷ் பதட்டமாக எழுந்தான்.

“என்னாச்சி அண்ணே?” என்று பெருசின் முதுகைச் சுற்றிக் கையைப் போட்டுக் கேட்டான்.

ரவி ஒரு நொடி நிற்க, “அண்ணாச்சி போலாம் அண்ணாச்சி” என்று அவன் ஆள் அவசரப்படுத்தினான். ரவி சுரேஷைப் பார்த்து கண்ணை அசைத்து சிக்னல் கொடுத்துவிட்டு இடத்தைக் காலி செய்தான். சுரேஷ் ஃபோனை எடுத்து வெளியே இருந்த ஆட்களை அழைத்தான். அவர்கள் வருவதற்குள் பெட்டியை ஸ்க்ரீனுக்குப் பின்னால் இருந்த பெட்டியோடு மாற்றி வைத்தான்.

பெருசு பேச்சு மூச்சில்லாமல் கிடந்தான். மின்னலென உள்ளே வந்த தடியன்கள், பெருசு பேச்சு மூச்சில்லாமல் கிடப்பதையும், அழுவது போன்ற முகத்துடன் இருந்த சுரேஷையும் பார்த்ததும் பதட்டமானார்கள். “என்ன ஆச்சி சுரேஷ்?”

“போலீஸ் வந்திருக்காம். ரவியோட ஆள் வந்து சொன்னதும், பெருசுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருச்சிடா. உடனே ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போகணும்”

ஒருவன் அண்ணாச்சியை அலேக்காகத் தூக்க, இன்னொருவனிடம் சூட்கேஸை கொடுத்தான் சுரேஷ். “நீங்க வெளிய போங்க. நான் பில்லை செட்டில் பண்ணிட்டு வந்திடுறேன். போலீஸ் கண்ணுல நீங்க பட்டாலும் சூட்கேஸ் சிக்கிராம. ஜாக்கிரதை”

இரண்டு தடியன்களும் ஓட்டமும் நடையுமாக வெளியே ஓடினார்கள். முத்துவும், பார் மேனேஜரும் இன்னும் சில கஸ்டமர்களும் ஆளை வெளியே தூக்கிச் செல்வதைப் பார்த்து சுரேஷை சூழ்ந்தார்கள்.

“என்ன சார் ஆச்சி?” “என்ன ஆச்சி” “வாட் ஹாப்பண்ட்” குரல்கள் பல திசைகளிலிருந்தும் எதிரொலித்தன.

“ஹார்ட் அட்டாக் சார். பர்ஸிலிருந்து கற்றையாக சில ஐநூறு ரூபாய்த் தாள்களை டேபிளின் மீது எறிந்து விட்டு, முத்துவின் கையைப் பிடித்து அர்த்தத்துடன் ஒரு அழுத்து அழுத்திவிட்டு வெளியேறினான்.

ஹம்மர் கிளம்பத் தயாராக இருந்தது. முன் சீட்டில் ஒரு தடியனும், பின் சீட்டில் பெருசை மடியில் கிடத்திக்கொண்டு இன்னொரு தடியனும் உட்கார்ந்திருக்க கணேசன் டிரைவர் சீட்டில் எந்நேரமும் ஆக்ஸிலேட்டர் மீது ஏறி நிற்கத் தயாராய் இருந்தார்.

பின் கதவைத் திறந்து தாவி ஏறி சூட்கேஸின் மீது உட்கார்ந்தான். கதவை மூடுவதற்கு முன்னால் ஹம்மர் சீறிப் பாய்ந்தது. “பக்கத்துல எங்கப்பா ஹாஸ்பிட்டல் இருக்கு?” ஓட்டிக்கொண்டே சீறினார் கணேசன்.

“திருவான்மியூர் போயிரலாம்ணே” சொல்லிவிட்டு பெருசின் ஆஸ்தான மருத்துவரின் நம்பரை டயல் செய்தான் சுரேஷ்.

(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே

No comments: