Tuesday, February 21, 2012

பரமபதம் - 5


சுரேஷ் கண்விழித்த போது நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தது. அது ஒரு சிறிய அறை. நான்கு பேர் படுக்கலாம். எட்டு பேர் உட்காரலாம். ஒரு மூலையில் 40 வாட்ஸ் பல்பு ஒன்று அழுது வடிந்து கொண்டிருந்தது. ‘யார் கடத்தி வந்திருப்பார்கள், எதற்குக் கடத்தி வந்திருப்பார்கள்’ என்ற எண்ணம் சுரேஷின் மனதை அரித்துக் கொண்டிருந்தது. கதவு திறந்தது. உள்ளே வந்தவனைப் பார்த்ததும் சுரேஷுக்கு பகீரென்றிருந்தது.

“என்னலே சுரேசு. என்ன வேலை செய்யப் போறீக?”

“என்ன கேக்குறீங்க அண்ணாச்சி. என்னைய ஏன் கடத்திட்டு வந்து கட்டிப் போட்டிருக்கீங்க? எனக்கு ஒண்ணும் புரியலை”

“எலே இங்க வாலே” கதவுக்கு வெளியே யாரையோ அழைத்தான் ரவி.

சிட்டி செண்டரில் சுரேஷிடம் வாங்கின பத்தாயிரத்தைக் கையில் ஆட்டிக்கொண்டே உள்ளே வந்தான் பாலா.

“என்னலே தலயத் தொங்கப் போட்டுட்ட? இப்ப அம்புட்டும் புரிஞ்சிருச்சோ?”

“அண்ணாச்சி...”

“சொல்லுல. எதுக்கு இவன போலீஸ் வந்திருக்குன்னு சொல்லச் சொன்னியாம்? எதல ஆட்டயப் போடப்போற?”

“அண்ணாச்சி...”

“சொல்லுலே. என் கிட்ட காசையும் வாங்கிட்டு பவுடரையும் அடிச்சிட்டுப் போயிரலாம்னு ப்ளான் போடுதானா அந்தப் பெருசு?”

“இல்ல அண்ணாச்சி. பெருசுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை”

“பொறவு?”

“நாந்தான் அண்ணாச்சி, பெருசுகிட்ட இருந்து காசை அடிக்கலாம்னு நினைச்சேன்”

“பெருசுக்கிட்டயா?? நம்ப முடியலயே.”

“ஆமா அண்ணாச்சி. பெருசு தொழிலை விட்டுட்டு ரியல் எஸ்டேட்ல எறங்கப் போவுதாம். எனக்கு அடியாள் வேலை போரடிச்சிருச்சி. அதான் லம்பா அடிச்சிட்டு செட்டில் ஆகலாம்னு முடிவெடுத்தேன். இப்ப என்ன, எனக்கு நீங்க ஹெல்ப் பண்ணுங்க. உங்களுக்கொரு பங்கு தர்றேன்”

ரவி கெக்கெக்கே என்று வாயைக் கோணிக்கொண்டு சிரித்தான். “இவுரு எனக்கு பங்கு தர்றாராம்லே.. கேட்டியா?? கோட்டிப் பயலே! இத நான் பெருசுக்கிட்ட போட்டுக் குடுத்தா என்னாவும்னு தெரியுமா? உன் வம்சத்தையே கருவறுத்துருவாம்லே. உன் திட்டம் என்னான்னு சொல்லு”\

“முதல்ல கட்ட அவுத்து விடுங்க. உக்காந்து பேசுவோம்”

“எலேய் கட்டவுத்து விடுறா”

சுரேஷ் எழுந்து நின்று கை கால்களை உதறிக் கொண்டான். விரல்களை வளைத்து சொடுக்கெடுத்தான். அனைவரும் இன்னொரு அறைக்குப் போனார்கள். அங்கே ஒரு வட்ட டேபிள் போட்டு எதிரெதிராக இரண்டு நாற்காலிகள் கிடந்தன. ரவி ஒன்றில் உட்கார்ந்து எதிர் நாற்காலியைக் கைக் காட்டி “உக்கருலே” என்றான்.

சுரேஷ் தனது திட்டத்தை நிதானமாக விவரித்தான். பதட்டம் ஏற்படவேண்டும் என்பதற்காக ரவியின் ஆளை ஏற்பாடு செய்ததாகச் சொன்னான். நிதானமாகக் கேட்ட ரவி, “சரிலே! நீயும் பெருசுகிட்ட இருந்து தப்பிச்சாவணும். அதுனால 5 கோடி ரூவா உனக்குத் தர்றேன். அதை எடுத்துட்டு ஓடிப்போ. மீதிப்பணம் எனக்கு. அது சரி, நீதானே பணத்தை எண்ணிப் பாக்கப் போற? பேயாம நான் பெட்டிக்குள்ள எதாவது பேப்பரை மட்டும் வச்சிக் குடுத்துர்றேன். நீ எண்ணிப் பாத்துட்டு சரியா இருக்குன்னு சொல்லிரு. பெருசை ஆஸ்பத்திரியில சேத்துட்டு என்கிட்ட வந்து காசை வாங்கிட்டு எஸ்கேப் ஆயிரு? என்ன நாஞ்சொல்றது?”

“அண்ணாச்சி. இதுல ரெண்டு பிரச்சனை இருக்கு. ஒண்ணு, பெருசு திடீர்னு தானே போய் எண்ணிப் பாக்கப் போயிருச்சின்னா, நீங்க மாட்டிக்குவீங்க. ரெண்டாவது, நான் பெருசை ஆஸ்பத்திரியில சேத்துட்டு வரும்போது நீங்க எனக்கு நாமம் போட்டு விட்டுட்டீங்கன்னா, நான் நாக்கை வழிச்சிட்டு நிக்கிறதா?? அப்புறம் நான் நேரா போலிஸ் கிட்ட போகவேண்டியதிருக்கும்”

“இங்க பாரு இந்தப் பூச்சாண்டி வேலயெல்லாம் என்கிட்ட நடக்காதுல. ஆனாலும் நீ சொன்ன மாதிரி பெருசே பணத்தை எண்ணப் போனாலும் போவான். அதுனால நான் 100 கோடியையும் கொண்டு வந்துர்றேன்”

‘நூறு கோடியா?? எதிர்பார்த்ததை விட பெரிய வேட்டையாவே இருக்கே’ என்று மனதில் நினைத்துக் கொண்டு, “அதுதான் நல்லது அண்ணாச்சி”

“சரி. இப்ப நீ திரும்ப காரை எடுக்க வரும்போது என் ஆளும் உன் கூட வருவான். உன் பங்கு அஞ்சி கோடியை எடுத்துக்கிட்டு ஓடிப் போயிரு. என்ன?”

“அண்ணாச்சி, 10 கோடியாவது குடுங்க. நான் அந்த சர்வருக்கு வேற ரெண்டு கோடி குடுக்குறேன்னு சொல்லியிருக்கேன்.”

“ம்ம்.. சரி. ஆனா என்கிட்ட டபுள் கிராஸ் பண்ணனும்னு மட்டும் நினைச்ச... பெருசை விட நான் மோசமானவன் தெரிஞ்சிக்கோ”

“தெரியும் அண்ணாச்சி. நான் வார்த்தை மீற மாட்டேன்”

“சரி நீ இப்ப போ. உன் கார் வெளியதான் நிக்கிது”

“சரி வர்றேன். என் கூட வரப்போற உங்க ஆளு யாரு?”

“இவந்தான்”  என்று பாலாவைக் கை காட்டினான் ரவி.

சுரேஷ் கதவைத் திறந்து வெளியேறினான்.

“எலேய், பணம் கைக்கு வந்ததும் அவனைப் போட்டுரு”

“சரிண்ணே” என்று பாலா தலையாட்டினான்.

******************************

ரு கலவையான மனநிலையோடு காரை ஓட்டிக்கொண்டிருந்தான் சுரேஷ். ஃபோன் ஒலித்தது. எடுத்து ஆன் செய்து தலையை லேசாகச் சாய்த்து கழுத்துக்கும் தலைக்கும் இடையில் செல்ஃபோனை வைத்துக் கொண்டு, “ஹலோ” என்றான்.

“என்னடா பத்து மணிக்கு ஃபோன் பண்றேன்னு சொன்ன?” என்றது எதிர் முனை.

“பவுடர் ரவி தூக்கிக்கிட்டுப் போயிட்டான்”

“ஓ.. சரி. அப்புறமென்னாச்சி?”

“தொகை நாம எதிர்பார்த்த்தை விட பெருசு. 100 கோடி?”

எதிர் முனை விசிலடித்தது.

“பத்து கோடி குடுப்பானாம். மிச்சத்தை அவனே எடுத்துக்குவானாம்” சுரேஷின் குரலில் மெல்லிய கேலி ஒன்று ஓடியது

எதிர்முனை பலமாகச் சிரித்தது.

“அவன் ஆள் நான் கார் எடுக்கப் போவும்போது கூட வருவானாம். அவன் எனக்கு 10 கோடி குடுத்துட்டு மீதிப்பணத்தை எடுத்துக்கிட்டுப் போயிருவானாம்”

எதிர்முனை இன்னும் பலமாகச் சிரித்தது. “நீ என்ன சொன்ன?”

“சரின்னு சொல்லிட்டு வந்துட்டேன்”

“மத்ததெல்லாம் ப்ளான் படி போகுதுல்ல?”

“போகுது. எந்தப் பிரச்சனையும் வராது. நீ கவலைப் படாத”

“உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. வச்சிர்றேன்”

ஃபோனை அணைத்து பாக்கெட்டுக்குள் வைத்து விட்டு சாலையில் கவனம் வைத்தான்.

(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே

No comments: