Thursday, May 24, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 3



தலையை சாய்த்து, ஒற்றைக் கண்ணை மூடி, மாலா என்னைப் பார்த்துக் கேட்டாள்.

"இந்தப் பப்புக்குள்ள போலாமா??"

"வ்வாட்?” என் இதயம் ஒரு நொடி என் வாய்க்கு வந்துவிட்டது. இவ்வளவு போல்டான பெண்ணா? இவளை நம்புவதா இல்லையா?

“சும்மா கேட்டேம்பா.. இன்னும் இந்தளவுக்கு வரலை. ஆனா ஒரு நாள் என்னையக் கூட்டிட்டுப் போகணும். ஓக்கே?”

“யம்மா தாயே. ஒரு செகண்ட்ல என் ஹார்ட் நின்னே போச்சி. இம்புட்டு போல்டான பொண்ணான்னு. நல்ல வேளை பாலை வார்த்த”

“ஏன்? பொண்ணுங்கன்னா பப்புக்குப் போகக் கூடாதா?? அங்க நிக்கிற பொண்ணுங்க எல்லாம் பொண்ணுங்க இல்லையா?”

“அப்பிடிச் சொல்லலை மாலா. இன்னைக்குக் காலையில தான் மீட் பண்ணோம். அதுக்குள்ள பப்புக்கு என்னைய நம்பி வர அளவுக்கு தைரியம் எப்பிடின்னு யோசிச்சேன். அவ்ளோதான். மத்தபடி பாருக்குப் போற பொண்ணுங்க எல்லாம் மோசமானவங்கன்னு நினைக்கிற சராசரி ஆள் இல்லை நான்.”

“ஓக்கே ஓக்கே. இந்த வாட்டி மன்னிச்சிட்டேன். எப்பவாச்சும் உன் ஆம்பளைத்தனம் வெளிய வராமலா போயிரும்?” கிண்டலாகச் சிரித்ததால் எனக்குக் கோபம் வரவில்லை.

அந்த பப் வாசலிலேயே ஒரு ஆட்டோ பிடித்து கெஸ்ட் ஹவுஸ் போய் இறங்கினோம். என் ரூம் மேட்டும் அவள் ரூம் மேட்டும் வந்திருந்தனர். டிவியில் சன் மியூசிக் ஓடிக் கொண்டிருந்தது. என் ரூம் மேட் செந்தில்குமரன் திருநெல்வேலிக்காரன். ஒடிசலாக நெடுநெடுவென்று இருந்தான். ஜானி படத்து ரஜினியைப் போல அடர்த்தியான மீசை வைத்திருந்தான். நெற்றியில் குங்குமம். மா நிறம். சிறிய கண்கள். அதிக நேரம் சிமிட்டிக் கொண்டே இருந்தான். அப்படி சிமிட்டுபவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக இருக்கும் என்று எங்கோ படித்த நினைவு. சென்னையில் படித்தவன். அவனை சென்னை அதிகம மாற்றாமல் இருந்தது அதிசயமாக இருந்தது. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் என்றதும் காரணம் புரிந்தது.

மாலாவின் ரூம் மேட்டாக ஓமனா காசர்கோட்டுக்காரி. உதட்டு ஓர மச்சம் (மட்டும்) சிம்ரனை நினைவு படுத்தியது. அளவான சிரிப்புடனும், அழுத்தமான மலையாள வாடையுடனும் பேசினாள். மலையாளப் பெண்களுக்கே உரித்தான நீளமான முடி, மினுமினுப்பான சருமம், பரந்த மார்புகள். அவள் அணிந்திருந்த கரும்பச்சை சுடிதார் அவள் நிறத்தை இன்னமும் எடுப்பாகக் காட்டியது. அடுத்தவர் பேசும்போது உம் கொட்டுவதைப் போல அவள் சொன்ன “ஓ” ரசிக்கத்தக்கதாய் இருந்தது.

சிறிது நேர அறிமுகத்துக்குப் பின் நால்வரும் நன்றாக ஒட்டிக்கொண்டோம். சேர்ந்தே போய் மெஸ்ஸில் சாப்பிட்டோம். வறண்டு போன சப்பாத்தியும் தயிர்சாதமும் இருந்தது. சிக்கன் குழம்பு இருந்ததால் பிழைத்தேன். செந்தில் மட்டும் சைவம். அவன் பாடு பாவம்தான்.

அறைக்குத் திரும்பி அடுத்த நாளைப் பற்றிய கவலையைப் பகிர்ந்து கொண்டு கதைத்துக் கொண்டு விட்டு படுக்கைக்குச் செல்லும்போது மணி 9. கல்லூரியிலும், வீட்டிலும் இவ்வளவு சீக்கிரம் தூங்கப்போய் பழக்கமே இல்லை. அதனால் படுத்துக் கொண்டே அடுத்த நாள் எப்படிப் போகும் என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டே இருந்தேன். செந்தில் எப்போதோ தூங்கிப் போயிருந்தான்.

****************************
கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்

என்ற யாரோ சத்தமாகப் பாடும் குரல் கேட்டு எழுந்தேன். செந்தில் இடுப்பில் துண்டுடன் அவனது கப்போர்டுக்கு முன் நின்று கண்களை மூடி பாடிக் கொண்டிருந்தான். நெற்றியிலும் கைகளிலும் பட்டை பட்டையாய் விபூதி. குளித்துவிட்டு வந்திருப்பான் போல. அவனை தொந்தரவு செய்ய விரும்பாமல், சத்தம் காட்டாது பாத்ரூமுக்குள் நுழைந்தேன். குளித்து முடித்து வெளியே வரும்போது செந்திலின் நெற்றியில் விபூதிப் பட்டை போன இடம் தெரியவில்லை. சிறு கீற்றாக குங்குமம் மட்டும். வெள்ளைச் சட்டையும் கறுப்பு பேண்டுமாய் நின்றிருந்தான். நானும் என்னிடம் இருந்ததில் நல்ல செட் ஒன்றை எடுத்துப் போட்டுக்கொண்டேன்.

எங்களை அழைத்துச் செல்ல ஒரு பஸ் தயாராய் நின்றிருந்தது. மற்ற அப்பார்மெண்டில் இருந்த 10 பேரோடு நாங்களும் சேர்ந்து பஸ்ஸில் ஏறி அமர்ந்தோம். வேறொரு இடத்தில் இருந்த இன்னொரு கெஸ்ட் ஹவுஸில் இன்னும் 16 பேரை ஏற்றிக் கொண்டு BIMன் ஹெட் ஆஃபிஸுக்குப் போய்ச் சேர்ந்த போது மணி 9:30. அங்கே எச்.ஆர் இரண்டு பேர் எல்லோரின் பேப்பர்களையும் சரி பார்த்தார்கள். பின்னர் எங்களுக்கு ஒரு மாதம் ட்ரெயினிங் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அது முடிந்த பின்னரே ப்ராஜெக்டில் போடுவார்கள் எனவும் அறிவித்தனர். கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ, டிரிபிள் இ, எம்.சி.ஏ போன்ற கம்ப்யூட்டரோடு கொஞ்சம் தொடர்புடைய படிப்புகள் படித்திருந்த 15 பேர் ஒரு குழுவாகவும், மற்ற கம்ப்யூட்டருக்கு அவ்வளவாகத் தொடர்பில்லாத மெக்கானிக்கல், சிவில், மெட்டலர்ஜி போன்ற படிப்புகள் படித்திருந்த என்னைப் போன்ற 15 பேரை இன்னொரு குழுவாகவும் பிரித்திருந்தனர். கெஸ்ட் ஹவுஸ் கொடுக்கப்பட்டிருந்த 15 நாட்களுக்கு கெஸ்ட் ஹவுஸில் இருந்தும், அதன் பிறகு ஹெட் ஆஃபிஸில் இருந்தும் பஸ் காலை 8:30 மணிக்குக் கிளம்பும் என்று அறிந்தோம்.

அதன் பின்னர் அன்றைய பொழுது ஐடி கார்டுகள் பெறுவதிலும், பே ரோல் படிவங்கள் நிரப்புவதிலும் செலவானது. மாலாவும் செந்திலும் கம்ப்யூட்டர் தெரிந்த குழுவிலும், நானும் ஓமனாவும் கம்ப்யூட்டர் தெரியாத குழுவிலும் சேர்க்கப்பட்டிருந்தோம். மாலைக்குள் எங்கள் பிரிவில் இருந்த மற்ற ஃப்ரஷர்ஸோடு சிறிது அறிமுகம் ஆனது. எங்கள் நால்வரைத் தவிர மற்ற அனைவரும் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் ஹிந்தியிலேயே பேசிக்கொண்டார்கள். அதனாலோ என்னவோ நாங்கள் ஒன்றாகவே திரிய வேண்டியதாய்ப் போய் விட்டது. நானும் செந்திலும் டா போட்டுப் பேசும் அளவுக்கு ஒன்றியிருந்தோம். ஐடி கார்டில் கால் நேம் மட்டும் போடும் வழக்கத்தால் என் பெயரை தேவா என்றே கொடுத்திருந்தேன். முழுப் பெயரைக் கொடுக்கத் தேவை இல்லாதது ஒரு சந்தோசத்தையே கொடுத்தது.

ட்ரெயினிங் செண்டர் இன்னர் ரிங் ரோடில் கோல்ஃப் க்ளப்பைப் பார்த்த படியான அமைப்பில் இருந்தது. இரண்டு வகுப்பறைகள். 15 கம்ப்யூட்டர்கள், எலெக்ட்ரானிக் திரை, வீடியோ ரெக்கார்டிங் என ஹை-டெக் வகுப்பறைகள். வகுப்பாசிரியர் விரும்பினால் எந்த மாணவரின் முன் இருக்கும் திரையையும் மெயின் திரைக்குக் கொண்டு வர இயலும். காலையில் மூன்று மணி நேரம், ஒரு மணி நேர லஞ்ச் ப்ரேக், மதியம் மூன்று மணி நேரம் என்று ஒரு நாளைக்கு ஆறுமணி நேரம் மட்டுமே வகுப்பு. காலையில் ஒரு முறை மதியம் ஒரு முறை டீ ப்ரேக். லன்சும் அங்கேயே வழங்கப் பட்டது. ஒரு மாதம் கல்லூரிப் படிப்பையே தொடர்ந்தது போல கம்ப்யூட்டரில் ஏபிசிடியிலிருந்து எல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள்.

15 நாட்கள் கெஸ்ட் ஹவுஸ் வாசத்தின் போதே ஒரு அப்பார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸில் அருகருகே இரண்டு அப்பார்ட்மெண்ட்களை - நானும் செந்திலும் ஒரு அப்பார்ட்மெண்டிலும், மாலாவும் ஓமனாவும் ஒரு அப்பார்ட்மெண்டிலும் - வாடகைக்கு எடுத்திருந்தோம். அட்வான்ஸ் கொடுப்பதற்கு அலுவலகத்திலேயே 0% வட்டியில் கடன் கொடுத்தார்கள். கல்லூரியில் படிக்கும் போதே பார்ட் டைமாக வேலை பார்த்ததன் மூலம் சேர்த்து வைத்திருந்த தொகை முதல் மாதத்தை ஓட்ட உதவியது. நான்கு பேரும் ஒன்றாகவே சமைத்து சாப்பிட்டோம். சாப்பாட்டு செலவை நான்காகப் பிரித்துக் கொள்வது என்று ஒப்பந்தம். நான் வெஜிடேரியன் சமைக்கும் போது மட்டும் வெளியில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டான் செந்தில். 

வார இறுதிகளில் பெங்களூரின் யூத் ஸ்பாட்டுகளை பெரும்பாலும் நான்கு பேராக அல்லது செந்திலைக் கழட்டி விட்டு மூன்று பேராக சுற்றுவது எங்களுக்கு வழக்கமாகிப் போனது. ரோட்டைக் கடக்கும் போது கையைப் பிடித்துக் கொள்வது, சினிமா தியேட்டரில் வன்முறை மற்றும் பயமுறுத்தும் காட்சிகள் என் தோளில் முகத்தைப் புதைத்துக் கொள்வது் என மாலா என்னுடன் ஒன்றியிருந்தாள். ஹோட்டலில் சாப்பிடச் செல்லும் போது செலவை மாலாவே ஏற்றுக் கொள்வாள். என்னை பர்ஸைத் திறக்க விடுவதே இல்லை. பர்ஸ் பெரும்பாலும் காலியாகவே இருந்ததால் நானும் பெரியதாகக் கவலைப் படவும் இல்லை. சம்பளம் வந்ததும் வரும் முதல் வார இறுதியில் ஊருக்குப் போக எனக்கும் சேர்த்து கே.பி.என்னில் டிக்கெட் புக் செய்தாள்.

சம்பள நாளும் வந்தது. காலை எழுந்ததும் ஓடிப் போய் ஏ.டி.எம் கார்டைப் போட்டு ஐந்திலக்கத் தொகை அக்கவுண்டில் விழுந்திருந்ததைப் பார்த்ததும் தான் மனது நிம்மதியானது. மாலை வகுப்பு முடிந்ததும் மாலாவை இழுத்துக் கொண்டு கமர்சியல் ஸ்ட்ரீட்டுக்குப் போனேன். மாலாவுடன் தான். கடையில் பார்த்துப் பார்த்து அம்மாவுக்கும் ஆத்தாவுக்கும் புடவை எடுத்தேன். அப்பாவுக்கு ஒரு சட்டை மட்டும். ஊருக்குப் போய் ஒரு வேட்டி வாங்கிக்கொள்ளலாம். தங்கைக்கு ஒரு சுடிதார். பெங்களூர் குளிருக்கு ஒரு ஜெர்க்கின் வாங்கிக் கொண்டேன். மாலா எதுவுமே வாங்காமல் வந்துகொண்டிருந்தாள்.

“என்ன நீ எதுவும் வாங்கலையா?”

“அதான் வாரா வாரம் வர்றேனே. வந்து வாங்கிட்டுத்தானே இருக்கேன்?”

“இல்ல ஃபர்ஸ்ட் சேலரி வந்திருக்கே? அம்மா அப்பாவுக்கு எதுவும் வாங்கலையா?”

“ஃபர்ஸ்ட் சேலரியில இதைத்தான் வாங்கணும்னு நான் ஒரு கனவே வச்சிருக்கேன்”

“என்ன கனவு?” எம்.டி.ஆர் சாஃப்டீ இரண்டு வாங்கி அவள் கையில் ஒன்றைக் கொடுத்துக் கொண்டே கேட்டேன்.

“ஒரு வண்டி வாங்கனும்”

“ஸ்கூட்டியா ஹோண்டாவா?”

என்னை எரிப்பது போல ஒரு பார்வை பார்த்தாள். “பல்சர் 150சிசி”

(தொடரும்)


அடுத்த பாகம் இங்கே

Monday, May 21, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 2

பாகம் - 1



“நீங்களும் இங்கதான் வர்றீங்கன்னு தெரிஞ்சிருந்தா ஆட்டோவை ஷேர் செஞ்சிருக்கலாம். காசு மிச்சமாகியிருக்கும்” குரல் கேட்டதும் திடுக்கிட்டுத் திரும்பினேன்.

“மாலா” என்று வலது கையை நீட்டினாள்.

என் கை அனிச்சையாக நீண்டது. "நல்..தேவா" பெங்களூரின் குளிரா இல்லை இயற்கை கொடுத்த வரமா தெரியவில்லை. சில்லென்றிருந்தது அவள் விரல்கள்.

"இங்க தான் ஸ்டே பண்ணியிருக்கீங்களா தேவா?"

முதல் முறை பார்க்கும்போதே அன்னியோன்யமாகப் பெயர் சொல்லிக் கூப்பிடும் பெண்ணை இப்போதுதான் பார்க்கிறேன். "இல்லைங்க. BIMல இன்னைக்குத்தான் ஜாய்ன் பண்றேன்".

"ஓ ஃப்ரஷரா? நானும் தான். நீ எந்தக் காலேஜ்?" இவ்வளவு சீக்கிரம் ஒருமைக்குத் தாவியது எனக்கு ஒரு மாதிரியாய் இருந்தது. என் காலேஜ் பெயரைச் சொன்னேன்.

அவள் காலேஜ் பெயரைச் சொல்லி, "கம்ப்யூட்டர் சயன்ஸ். நீ?"

"மெக்கானிக்கல்" பேசிக்கொண்டே எங்கள் கம்பெனி கெஸ்ட் ஹவுஸுக்கு வந்துவிட்டிருந்தோம். மொத்தம் நான்கு அப்பார்ட்மெண்டுகள். ஒரே தளத்தில் அமைந்தவை. ஒவ்வொன்றும் மூன்று பெட்ரூம். முதல் அப்பார்மென்டில் ஒரு படுக்கை அறை அட்மின் அலுவலமாக மாற்றப்பட்டிருந்தது. அங்கே தான் ரிப்போர்ட் செய்யச் சொல்லி என் கையில் இருந்த கடிதம் சொன்னது. இருவரும் உள்ளே நுழைந்தோம்.

பத்துக்குப் பதினைந்து அறை. ஒரு மூலையில் ஒரு டேபிள் போடப்பட்டு அதன் மீது ஒரு கம்ப்யூட்டர் வைக்கப்பட்டிருந்தது. டேபிளுக்கு அந்தப் பக்கம் ஒரு எக்ஸிக்யூட்டிவ் சேர் போடப்பட்டிருந்தது. அதற்கு எதிரில் இரண்டு ப்ளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருந்தன. அறையின் இன்னொரு மூலையில் ஒரு ரெஃப்ரிஜிரேட்டட் வாட்டர் கூலர் ஹ்ம்ம்ம் என்ற சத்தத்தோடு உட்கார்ந்திருந்தது. சுவரோடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கண்ணாடிக் கதவிட்ட அலமாரியில் தட்டுகளும், பவுல்களும், இதர சாப்பாடு மேஜைக்கான பாத்திரங்கள் அனைத்தும் அழகாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தது.

எக்ஸிக்யூட்டிவ் சேரில் கழுத்தே இல்லாமல் ஒருவர் உட்கார்ந்திருந்தார். குறைந்த பட்சம் 10 செமீ தடிமனான கண்ணாடி ஒன்று அவர் மூக்கின் நுனியில் ஒட்டிக் கொண்டிருந்தது. புருவத்தின் மத்தியிலிருந்து கிளம்பிய திரிசூர்ணம் கிட்டத்தட்ட வழுக்கைத் தலையின் உச்சி வரை சென்றது. தலைக்கு நேர் மேலே இருந்த ஸ்பிளிட் ஏசி ஓடாத காரணத்தாலோ என்னவோ அவர் தலையில் முத்து முத்தாக வியர்வை பூத்திருந்தது.

நாங்கள் உள்ளே நுழைந்ததும் எங்களைக் கண்களைக் குறுக்கு கண்ணாடிக்கு மேலாகப் பார்த்தார். "குட்மார்னிங். ஃப்ரஷர்ஸா?"

"யெஸ் சார்" என்றோம் கோரஸாய்.

"ஜாயினிங் லெட்டர்?"

என் கையில் வைத்திருந்த லெட்டரை எடுத்து நீட்டினேன். வாங்கி டேபிளின் மீது வைத்து விட்டு மாலாவை ஏறிட்டார். மாலா கைப்பைக்குள் இருந்து எடுத்து நீட்டவும், அதை வாங்கி கம்ப்யூட்டரில் எதையோ தட்டிவிட்டு அவளிடமே திருப்பிக் கொடுத்தார். பிறகு என் லெட்டரை எடுத்தும் அதே போல. "சிட் டவுன்"

உட்கார்ந்தோம்.

"யு கேன் இஸ்டே அப்டூ 15 டேஸ். யு வில் பி ஷேரிங் த ரூம் வித் அனதர் பெர்சன். வீ சர்வ் ப்ரேக்ஃபாஸ்ட் அன்ட் டின்னர். யூ ஹாவ் டு கம் டு திஸ் அப்பார்ட்மென்ட் ஃபார் திஸ். யூ ஆர் க்ரோன் அப்ஸ். ஸோ யூஸ் த கெஸ்ட் ஹவுஸ் சென்சிப்ளி" மனனம் செய்ததை ஒப்பிப்பது போன்ற பாவனையுடன் சொல்லி முடித்தார். தலையை ஆட்டி வைத்தேன்.

டிராவைத் திறந்து ஒவ்வொரு சாவியாக எடுத்து வெளிச்சத்தில் உயர்த்திப் பிடித்துப் பார்த்தார். எதையோ சரி பார்த்துவிட்டு இரண்டு சாவிகளை மட்டும் எடுத்துக் கொண்டு எழுந்தார்.

"கம்"

மேய்ப்பனைத் தொடரும் ஆட்டுக் குட்டிகள் போலப் பின் தொடர்ந்தோம். முதலில் ஒரு அப்பார்ட்மெண்டின் கதவைத் திறந்தார். என்னைப் பார்த்து, "லெஃப்ட் ஃபர்ஸ்ட் ரூம் இஸ் யுவர் ரூம்" என்று என் கையில் சாவியைக் கொடுத்துவிட்டு நகர்ந்தார். ஒரு விநாடி தயக்கத்துக்குப் பிறகு உள்ளே நுழைந்தேன்.

"வெயிட், கிவ் மீ எ ரூம் இன் த சேம் அப்பார்ட்மெண்ட். ஐ ஃபீல் சேஃபர் ஹியர்" மாலாவின் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். என் அப்பார்ட்மென்ட் வாசலில் நின்று கொண்டிருந்தாள். அந்தாள் ஏதோ கன்னடத்தில் சொல்லிவிட்டு சாவி எடுக்க ஆஃபிஸ் ரூம் நோக்கி நடந்தார்.

உள்ளே வந்த மாலா பையை கீழே வைத்து விட்டு அங்கே இருந்த சோஃபாவில் உட்கார்ந்து என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். "நீ எந்த ஊரு?"

"திருநெல்வேலி. நீங்க?"

"திண்டுக்கல். சும்மா நீ வா போன்னே கூப்புடு. உனக்கொன்னும் பிரச்சனை இல்லையே?"

"வாடா போடான்னு கூப்புடாத வரைக்கும் ப்ராப்ளம் இல்லை."

"சொல்ல முடியாது கொஞ்ச நாள் கழிச்சி அப்பிடிக் கூப்பிட்டாலும் கூப்புடுவேன்".

போன ஆள் திரும்பி வந்தார். "திஸ் ரூம்" என்று ஒரு அறையைக் காட்டி, மாலாவின் கையில் ஒரு சாவியைக் கொடுத்து விட்டு திரும்பினார். "வெயிட். மே ஐ நோ யுர் நேம்?"

"கெம்பண்ணா." குரல் மட்டும் வந்தது. திரும்பிப் பார்க்காமலே நடையைக் கட்டினார்.

கெம்பண்ணா போனதும், "அப்புறம் இன்னைக்கு சண்டே. நாளைக்குத் தான் ரிப்போர்ட்டிங். என்ன செய்யலாம்னு இருக்க?" சோஃபாவில் இருந்து எழுந்தவாறே கேட்டாள்.

"தெரியலை. சும்மா எம்.ஜி ரோடு பிரிகேட் ரோடுன்னு சுத்திட்டு வரலாம்னு இருக்கேன்."

"ஓ ஏற்கனவெ பெங்களூர் வந்திருக்கியா?"

"காலேஜ் படிக்கிறப்போ வந்திருக்கேன்"

"சரி. கிவ் மி அன் ஹவர். என்னையும் கூட்டிட்டுப் போ"

எதிர்பார்க்கவே இல்லை. காலையில் பஸ்ஸில் பார்த்தாள். இப்போது ஒரே கம்பெனியில் சேரப் போகிறோம். தென் தமிழ்நாடு.இதைத்தவிர வேறு எந்த பழக்கமும் இல்லை. அறிமுகம் இல்லாத ஒருவனுடன் ஊர் சுற்ற வருகிறேன் என்று சொல்கிறாளே? அதுவும் திண்டுக்கல்லில் வளர்ந்த பெண். ஆச்சரியத்துடனே அறைக்குள் நுழைந்தேன். அங்கே ஆஃபிஸ் ரூமாகப் பார்த்த அதே அறை. இரண்டு சிங்கிள் பெட்கள் இந்தப் பக்கம் ஒன்றும் அந்தப் பக்கம் ஒன்றுமாய். இரண்டு பெட்டுக்கும் நடு நாயகமாய் ஸ்பிளிட் ஏசி. அறைக்குள்ளேயே இணைந்த ஒரு பாத்ரூம். ஏசி அறை என்பதால் ஜன்னல் மூடியே கிடந்தது. இந்த சுவரில் ஒன்றும் அந்த சுவரில் ஒன்றுமாய் இரண்டு கப்போர்டுகள் இருந்தன. கதவிலேயே சாவி. ஒரு பெட்டையும் ஒரு கப்போர்டையும் தேர்ந்தெடுத்து என் பையை அதற்குள் வைத்தேன். பரவாயில்லை எதிர்பார்த்ததை அறை சுத்தமாகத்தான் இருந்தது. ஷூவை மட்டும் கழட்டிப் போட்டுவிட்டு கட்டிலில் ஏறிப் படுத்தேன்.

வந்தாயிற்று. ஊரில் அம்மா என்ன செய்து கொண்டிருப்பாள்? காலையில் எழுந்து சாணித் தண்ணி தெளித்துக் கோலம் போட்டு பால் வாங்கி காப்பித் தண்ணி போட்டு அப்பாவை எழுப்பியிருப்பாள். அப்பாவும் எழுந்ததும் ஒரு பீடியைப் பற்ற வைத்துவிட்டு அம்மா குடுத்த காப்பியைக் குடித்துக் கொண்டிருப்பார். ஆத்தா திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தெருவில் போவோர் வருவோரை வம்பிழுக்க ஆரம்பித்திருப்பாள். ஊரைத் தொலைக்க வேண்டும் என்ற கங்கனத்தோடு பஸ் ஏறியவன் இங்கே வந்து இறங்கியதும் அந்த நினைப்புத்தான் வருகிறது. குரங்கை நினைக்காமல் மருந்தைக் குடி என்ற கதையாக ஆகிவிட்டது. மனம் ஒரு குரங்கு தானே? மனம் என்றதும் ஏன் மாலாவின் முகம் நினைவுக்கு வருகிறது? தைரியமானப் பெண் தான். சட்டென என்னையும் கூட கூட்டிட்டுப் போ என்று சொல்லிவிட்டாளே. ம்ம். பையா படத்தில் கார்த்தி தமன்னாவைப் பார்த்தது போல யாராவது ஒரு பெண்ணைப் பார்த்து அவள் பின்னால் திரியலாம் என்று நினைத்திருந்தேன். கடைசியில் எங்கேயும் எப்போதும் படத்தைப் போல கூடவே சுத்த ஒரு பெண் வருகிறாள். பார்ப்போம் நாள் எப்படிப் போகிறதென்று - கலவையான நினைவுகளோடு காலைக் கடன்களை முடித்து இருப்பதிலேயே நல்லதான டி-ஷர்ட் ஒன்றையும் ஒரு ஜீன்ஸையும் அணிந்து கொண்டு வெளியே வந்தேன்.

மாலா இன்னமும் வந்திருக்கவில்லை. சோஃபாவில் உட்கார்ந்து டிவியைப் போட்டேன். இதற்கு முன் இங்கிருந்தவன் எவனோ கொல்ட்டி போல இருக்கிறது. ஜெமினி சேனலில் பாலகிருஷ்ணா வந்து அசினின் அக்குளை முகர்ந்து கொண்டிருந்தார். சேனல் மாற்றி மாற்றி சிரிப்பொலியில் கொண்டு வந்து நிறுத்தினேன். பின்னால் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. பளீரென்ற மஞ்சள் நிறத்தில் சிவப்புப் பூப்போட்ட சுடிதார் ஒன்றை அணிந்து நின்றிருந்தாள். இருங்கள். சுடிதார் இல்லை. வெறும் குர்தா தான். கீழே அடர் நீல ஜீன்ஸ் ஒன்றை அணிந்திருந்தாள். துப்பட்டா எதுவுமில்லை.

"போலாமா?" என்றவளை மேலிருந்து கீழாகப் பார்த்தேன்.

"ட்ரெஸ் நல்லாருக்கா?" என்றவள் என் பதிலுக்குக் காத்திராமல் என் டி-ஷர்ட்டின் வாசகத்தை வாசிக்கத் துவங்கினாள். "I went to college for 4 years and all I got was this lousy t-shirt and No Job"

கலகலவென சிரித்தாள்.

"போன தடவை பெங்களூர் வந்தப்ப வாங்கினது"

இரண்டு பேரும் அலுவலக அப்பார்ட்மென்டில் சாப்பிட்டுவிட்டு ஆட்டோ பிடித்து எம்.ஜி ரோடு வந்தோம். இரண்டு வருடங்களில் கொஞ்சம் மாறித்தானிருந்தது. மேயோ ஹால் ஞாயிறு ஆனதால் கூட்டமில்லாமல் இருந்தது. எதிரில் இருந்த சென்ட்ரல் மாலுக்குள் நுழைந்தோம். சில பல கடைகளில் அவள் நுழைந்து நுழைந்து வெளியே வந்து கொண்டே இருந்தாள். எதையும் வாங்கியதாகத் தெரியவில்லை. கடைசி கடைசியாக ஒரு கடையில் ஒரே ஒரு சுடிதார் வாங்கினாள். நேரம் போனத் தெரியவில்லை.

"சாப்பிடலாமா?" நடந்த களைப்பில் கேட்டேன்.

"ம்ம்".

மாலில் இருந்த ஃபுட் கோர்ட்டில் எதையோ வாங்கிக் கொறித்தோம். நிறுத்தாமல் பேசிக் கொண்டே இருந்தாள். அவள் ஊரைப் பற்றி, கொடைக்கானல் கான்வென்டில் படித்ததைப் பற்றி, கல்லூரியில் சேர்ந்ததைப் பற்றி அவள் நண்பர்கள், வேலை கிடைத்த விதம் என்று 22 வருட வாழ்க்கையை அரை மணி நேரத்தில் சொல்லி முடித்திருந்தாள். நான் வெறுமனே தலையை மட்டும் ஆட்டிக் கொண்டே இருந்தேன்.

சாப்பிட்ட பின் சிறிது நேரம் கமெர்சியல் தெருவில் சுற்றினோம். மாலில் வாங்கிய சுடியை விட சீப்பாக சுடிகள் இங்கே கிடைப்பதாக சொல்லிக்கொண்டிருந்தாள். இந்தத் தெருவுக்கு ஏன் முதலிலேயே அழைத்து வரவில்லை என்று கடிந்து கொண்டாள். காஃபி டேயில் காஃபி குடிக்கும் போது கோல்ட் காஃபி க்ளாஸை இரண்டு விரல்களால் வருடிக் கொண்டே "மெக்கானிக்கல் படிச்சிட்டு எப்பிடி பிஐஎம்ல ப்ளேஸ்மெண்ட் வாங்கின?" என்றாள்.

"ஓ அது ஒரு பெரிய கதை"

"என்ன கதை. காலைல இருந்து நானே பேசிட்டு இருக்கேன். ஒரு சேஞ்சுக்கு நீ சொல்லேன்"

"எனக்கு சாஃப்ட்வேர் சைட் வர அவ்வளவா விருப்பம் இல்லை. என் ரூம்மேட் ஒரு இ.சி.இ பையன். அவனெல்லாம் பிஐஎம்முக்கு விழுந்து விழுந்து படிச்சிட்டு இருந்தான். இந்தக் கம்பெனி வந்த அன்னைக்கு ஒரு அசைன்மெண்ட் சப்மிட் பண்ணனும். நான் முடிக்காததால க்ளாஸ் கட் அடிச்சிட்டு வெளிய சுத்திட்டு இருந்தேன். அப்போ எல்லாரும் ரெஸ்யூம் சப்மிட் பண்ணவும் நானும் சப்மிட் பண்ணிட்டு வந்துட்டேன். என் வகுப்புப் பசங்க எல்லாம் க்ளாஸ் முடிஞ்சி சப்மிட் பண்றதுக்குள்ள ஷார்ட் லிஸ்ட் பண்ணிட்டாங்க. என்னோட ரெஸ்யூமும் செலக்ட் ஆயிருச்சி. அதுக்குப் பிறகு எக்ஸாம்ல வெறும் அப்டிட்யூட் தானே. க்ளியர் செஞ்சிட்டேன். காமெடி என்னன்னா, என் ரூம்மேட் க்ளியர் பண்ணலை. அப்புறம் இன்டர்வியூவுல உன்னை எல்லாம் எடுக்க மாட்டாங்கன்னு சொல்லிட்டே இருந்தான். அதனாலோ என்னவோ பெரிய எதிர்பார்ப்பு இல்லாம இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணேன். கேள்வி எல்லாம் மெக்கானிக்கல் ரிலேட்டடாவே கேட்டுட்டு இருந்தாங்க. கடைசியில ரிசல்ட் பார்த்தா ஆஃபர் பண்ணிட்டாங்க. எங்க காலேஜல ப்ளேஸ் ஆனது ஆறு பேரு. அதுல நான் மட்டும் தான் பெங்களூர் கேட்டுட்டு இங்க வந்துட்டேன்"

"ஆக்சிடெண்டலா வந்திருக்க. என்ன பண்ணப் போறன்னு பார்ப்போம்"

காசைக் கொடுத்துவிட்டு வெளியே வந்து நடந்தோம்.மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. பெண்களும் ஆண்களுமாய் வாகனங்களில் ப்ரிகேட் சாலையை மொய்க்கத் துவங்கியிருந்தனர். பெண்களுக்குத்தான் எத்தனை எத்தனை உடைகள். பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையை வெறிப்பது போல பார்த்துக்கொண்டே இருந்தேன்.

"போதும் போதும். இங்க தான் இனிமே வாழ்க்கை. மீதி நாட்களுக்கும் மிச்சம் வையி" என்றாள் கேலியாகச் சிரித்தபடி. அசடைத் துடைத்துக் கொண்டு நடந்தேன்.

நடந்து நடந்து ரெஸிடன்ஸி ரோட்டில் இருந்த அர்பன் எட்ஜ் பப்புக்கு அருகில் வந்துவிட்டோம். இரண்டு வருடங்களுக்கு முன்பு நண்பர்களோடு பெங்களுர் வந்திருந்த போது இந்த பப்பில் நோ ஸ்டாக் என்ட்ரி என்று துரத்தப்பட்டது நினைவுக்கு வந்தது. கும்பல் கும்பலாய் உள்ளே நுழைவதும் வெளியே நண்பர்களுக்குக் காத்திருந்ததும் பார்க்கப் பார்க்க ஒரு ஏக்கப் பெருமூச்சை வெளியேற்றியது.

தலையை சாய்த்து, ஒற்றைக் கண்ணை மூடி, மாலா என்னைப் பார்த்துக் கேட்டாள்.

"இந்தப் பப்புக்குள்ள போலாமா??"

(தொடரும்)


அடுத்த பாகம் இங்கே

Friday, May 18, 2012

இதுவும் ஒரு காதல் கதை - தொடர்

அதீதம் இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் தொடர் கதை. 



பஸ் கோவில்பட்டியைத் தாண்டிக் கொண்டிருந்தது. ஏசி போட்ட கே.பி.என் பஸ். இதுவரைக்கும் அரசுப் பேருந்துகளில் மட்டுமே பிரயாணித்துக் கொண்டிருந்தவன் முதல் முறையாக ஏசி பஸ்ஸில். நான், தேவா. என் முழுப்பெயரைக் கேட்டீர்களானால் என் ஜாதி குலம் கோத்திரம் எல்லாம் சொல்லிவிடுவீர்கள். அதனால் இப்போதைக்கு தேவா மட்டுமே. கட்ட பொம்மன் தெரியுமா உங்களுக்கு? பார்க்க அசப்பில் நம் நடிகர் திலகம் சிவாஜியைப் போலவே இருப்பார். அந்தக் காலத்தில் வெள்ளைத் துரைகளை சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்டிருக்கிறாராம். அந்த கட்ட பொம்மனை எங்கள் ஊரில் தான் தூக்கில் போட்டார்கள். கட்ட பொம்மன் படம்  பார்த்த பெருசுகளுக்கெல்லாம் புரிந்திருக்கும். கயத்தாறே தான். ஆனால், எங்கள் ஊர் காலக் கொடுமையால்  அதை விட வேறு விசயங்களுக்குப் புகழடைந்து விட்டது. அது எதற்கு இப்போது. அதை விடுங்கள்.

இந்த ஊரில் பிறந்து, ஓரளவுக்கு நன்றாகப் படித்த காரணத்தால் பி.இ படித்து முடிக்கும் முன்னரே பெங்களூரில் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து இதோ பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஊருக்குள் அதிக நண்பர்கள் இல்லை. அதிக என்ன அதிக, நண்பர்களே இல்லை. நண்பர்கள் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் நான் குறியாக இருந்தேன். இந்த ஊருக்கான அடையாளங்களை அடியோடு தலை முழுகுவதே என் தலையாய குறிக்கோள்.

பஸ்ஸை நோட்டம் விட்டேன். இன்னமும் சூரியன் மறையாத காரணத்தால் மக்கள் எல்லாம் திரையிலோடும் படத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.  பஸ் நிறையவில்லை. வேப்ப மரத்தின் கீழே வேப்பம்பழம் விழுந்திருப்பதைப் போல இங்கொன்றும் அங்கொன்றுமாகவே தலைகள் தெரிந்தன. மருந்துக்குக் கூட ஒரு இளம் பெண் இல்லை. என்ன செய்ய என் அதிர்ஷ்டம் அப்படி. என் பெயரைப் பார்த்து பயந்தோ என்னவோ பெண்கள் என்னிடம் நெருங்கிப் பழகியதில்லை. தாத்தன் பேர் என்ற எனக்கு இந்தப் பேரை வைத்த பெரியப்பாவை நினைத்தான் பற்றிக் கொண்டு வந்தது. மறுபடியும் ஊர்க்கதைக்குப் போய் விட்டேன்.

பள்ளியில் படிக்கும்போது மலர்விழியை எனக்கு மிகவும் பிடிக்கும். மற்ற முகங்கள் ஒன்று எண்ணை வடிந்து கொண்டிருக்கும், அல்லது மஞ்சள் அப்பிப் போய் இருக்கும். மலர்விழியின் முகமோ இவைகளுக்கு நடுவில் பளிச்சென்று அலம்பி லேசான மஞ்சள் பூச்சோடு பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கும். அளவெடுத்து செதுக்கியதைப் போன்ற மூக்கைச் சுருக்கி, அந்தப் பெரிய  கண்களைச் சிமிட்டும் போது வார்த்தைகள் வராமல் நா வரண்டு போய் பலமுறை நின்றிருந்திருக்கிறேன். தோழிகளுடன் பேசிக் கொண்டிருக்கும்போது கேலி செய்வதாக உதட்டைச் சுழித்து வக்கனை காட்டுவதைப் பார்த்து நான் பேசிக்கொண்டிருப்பதை மறந்து போயிருக்கிறேன்.

எட்டு வருடங்கள் அவளுடன் படித்ததில் அவள் என்னிடம் பேசிய வார்த்தைகள் 7. எங்கள் ஊரில் சொந்தக் காரப் பெண்கள் கூட வெளியிடங்களில் பேச மாட்டார்கள். இவள் வேறு சாதி. எங்கிருந்து பேச? பார்த்துக் கொண்டே இருந்ததில் பனிரெண்டாம் வகுப்பும் முடிந்து போயிருந்தது. கல்லூரியில் எந்தப் பெண்ணும் என்னிடம் பேசியதே இல்லை. நானும் டிஸ்ட்ராக்‌ஷன் இல்லாது படித்து முடித்துவிட்டேன். கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும்போது திருமணமாகிப் போன மலர்விழி, நான்காம் ஆண்டு முடிப்பதற்குள் கையில் ஒன்றும் வயிற்றில் ஒன்றுமாக நின்றாள். நான்கு வருடங்களில் நான் மேலே சொன்ன அத்தனை அழகும் எங்கே போனதென்றே தெரியாமல் ஓடிப் போய் விட்டது. கிளியை வளர்த்து குரங்கு கையில் கொடுக்கும் அப்பன்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு அரபு நாடுகளில் கொடுக்கும் தண்டனையைக் கொடுத்தாலும் தகும்.

திருமணம் முடிப்பது என்றால் அது காதலித்துத்தான் என்ற முடிவை எடுத்திருந்தேன். அதுவும், வேறு சாதி, முடிந்தால் வேறு மதம், அதிர்ஷ்டமிருந்தால் வேறு மொழி. பார்ப்போம் என் தலையில் எவளை எழுதி வைத்திருக்கிறது என்று.

பஸ் மதுரையில் சிறிது நேரம் நின்று ஆட்களை ஏற்றிக் கொண்டு தங்க நாற்கர சாலையில் பறந்தது. இப்போது பஸ் ஏறக்குறைய ஃபுல்லாகி விட்டது. மணியும் ஒன்பதைத் தொட்டுவிட்டதால் கண்களை மூடித் தூங்க ஆரம்பித்தேன்.

கண் விழித்த போது பஸ் ஓசூரில் நின்று கொண்டிருந்தது. கழுத்து வரை போர்த்தியிருந்த போர்வையை சற்றே கீழிறக்கி விட்டேன். ஏசியின் குளிர் இப்போது இதமாக இல்லை. ஒரு தம்மடித்தால் தேவலாம் போல இருந்தது. கீழே இறங்கும் வழியில் க்ளீனரிடம் “அண்ணே எவ்ளோ நேரம் நிக்கும்ணே” என்றேன்.

“இன்னொரு அஞ்சி நிமிசம் நிக்கும்”

‘”தம்மடிச்சிக்கலாமா?”

“இங்க வாசல் பக்கத்துலயே நின்னுக்கோங்க. பஸ் எடுத்தாத் தெரியும்” என்று அறிவுறுத்தினான். பையிலிருந்த கோல்ட் ஃப்ளேக் கிங்க்ஸ் ஒன்றை கரைத்து என் வாழ்நாளில் ஆறைக் குறைத்துவிட்டு, பஸ்ஸில் ஏறினேன்.

எல்லோரும் இன்னமும் தூக்கத்தில் தான் இருந்தார்கள். கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்தவரின் குறட்டை சீராக பஸ்ஸின் கண்ணாடிகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. என் சீட்டுக்கு அந்தப் பக்கம் ஒரு வரிசை முன்னால் யாரோ தலை முழுக்க இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார்கள். அந்த சீட்டை நான் தாண்டும் போது போர்வைக்குள் அசைவதை என்னால் உணர முடிந்தது. நான் என் சீட்டில் உட்கார்ந்தேன். அந்த உருவம், போர்வையை விலக்கி மூக்குக்கு முன்னால் கையை வைத்து விசிறியது. எனக்கு அப்போதுதான் உறைத்தது, ஏசி பஸ்ஸில் என் மூச்சில் சிகரெட் வாசம் கரையாமல் அப்பிக் கிடப்பதை.  அவள் திரும்பி என்னைப் பார்த்து முறைத்தாள்.

ஸ்டன்னிங் ப்யூட்டி என்று கதைகளில் எழுதுவார்கள். அதை நான் நேரில் பார்த்தேன். பெரிய கண்கள். அந்தக் கண்களைச் சுற்றி எழுதியிருந்த மை, இரவு தூக்கத்திலும் கரையாமல் இன்னமும் கண்களை அழகு படுத்திக் கொண்டிருந்தது. கடல் போன்ற அகலமானக் கண்கள். அந்தக் கருவிழிகள் இரண்டும், துளி கூட கோபத்தைக் காட்டவில்லை. ஆரஞ்சுச் சுளை போன்ற உதடுகளை கீழ் நோக்கிய யு போல வளைத்துத்தான் கோபமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டிருந்தாள். உதடுகளில் மெல்லிய லிப்ஸ்டிக். உதட்டையும், கண்களையும் இணைக்கும் பாலமாய் மூக்கு. கொஞ்சமே கொஞ்சம் பெரிய காது. காது மடலின் அகலத்தைக் குறைத்துக் காட்டுவதற்காக கொஞ்சம் பெரிய சைஸ் தோடு போட்டிருந்தாள். அந்த தோடில் இருந்து மூன்று குண்டுகள் தோள் வரை தொங்கிக் கொண்டிருந்தன. அவள் வேகமாகத் திரும்பியதால் அந்தக் குண்டுகள் சற்று அதிகமாகவே ஆடிக் கொண்டிருந்தன.  சட்டெனப் பார்த்தால் ஒற்றை நாடி நாசியைப் போலத் தோன்றிவிடும். ஆனால் மிக மிகச் சிறியதாக ஒரு குழி நாசியின் மையத்தில் அழகுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தது. பார்த்ததும் கிள்ளச் சொல்லும் குண்டுக் கன்னங்கள். சிரித்தால் கண்டிப்பாகக் குழி விழும் என்று தோன்றியது.
அவள் கோபம் என் மீதுதான் என்று ஏனக்கு வெளிப்படையாகவே தெரிந்தது. கண்களைக் கெஞ்சுவது போல சுருக்கி மூக்கை உயர்த்தி, உதடுகளை மட்டும் அசைத்து சத்தம் வராமல் “சாரி” என்றேன். அவளும் கண்களைச் சுருக்கி உக்கிரமாகப் பார்ப்பது போல பாவனை செய்தாள்.  சாஷ்டாங்கமாக காலில் விழுவதைப் போல சீட்டிலேயே குனிந்து இரன்டு கைகளையும் தலைக்கு மேல் சேர்த்து கும்பிட்டேன். கலகலவென லைலா சிரிப்பதைப் போல ஒரு வெள்ளைச் சிரிப்பை சிதற விட்டாள். நானும் புன்னகைத்தேன். சொன்னேன் அல்லவா, சிரித்ததும் அவள் கன்னத்தில் குழி விழுந்தது. திரும்பி சீட்டில் சாய்ந்து கொண்டாள்.
எனக்கு அவள் காதும் கன்னமும் மட்டுமே தெரிந்தது. மடிவாலா வரை அவள் காதுகளையே பார்த்துக் கொண்டு வந்தேன். ஓரிருமுறை அவள் திரும்பிய போது நான் பார்வையைத் திருப்பிக் கொண்டேன்.

மடிவாலா. என் கம்பெனியின் கெஸ்ட் அவுஸ் பக்கத்தில் தான் இருக்கிறது. இங்கே தான் இறங்கச் சொன்னார்கள். பையைத் தூக்கிக் கொண்டு இறங்கினேன். கிட்டத்தட்ட மொத்த பஸ்ஸும் காலியாகிவிட்டிருந்தது. கீழே இறங்கியதும் ஆட்டோ டிரைவர்கள் மொய்த்து விட்டார்கள். ஒரு தம் போட்டு விட்டு போகலாம் என்று எண்ணி அந்தக் கூட்டத்தை விட்டு வெளியே வந்தேன். சிகரெட் பாக்கெட்டைக் கையில் எடுக்கும் போது யாரோ முறைப்பது போலத் தோன்றவே திரும்பினேன். அவள் எனக்கு முதுகு காட்டி ஒரு ஆட்டோவில் ஏறிக் கொண்டிருந்தாள். என் கைகள் அனிச்சையாக சிகரெட்டை மீண்டும் பாக்கெட்டுக்குள் வைத்தன.

ஓர் ஆட்டோவை மடக்கி கெஸ்ட் அவுஸ் இருக்கும் அப்பார்ட்மென்ட் பெயரைச் சொல்லி உட்கார்ந்தேன். பெங்களூர் ஆட்டோக்காரர்கள் நல்லவர்கள். ஆட்டோவுக்கு மீட்டர் போட்டே ஓட்டுவார்கள். அப்பார்மென்ட் வாசலில் ஆட்டோவை கட் செய்து விட்டு வாட்ச்மேனிடம் விவரம் சொல்லி சைட் கேட்டின் வழியாக உள்ளே நுழைந்தேன். கையில் இருந்த சீட்டில் இருந்த அப்பார்மென்ட் எண்ணையும் அங்கே தெரிந்த கட்டிடங்களின் எண்ணையும் சரி பார்த்துக் கொண்டே நடந்தேன்.

“நீங்களும் இங்க தான் வர்றீங்கன்னு தெரிஞ்சிருந்தா ஆட்டோவை ஷேர் செஞ்சிருக்கலாம். காசு மிச்சமாகியிருக்கும்” குரல் கேட்டதும் திடுக்கிட்டுத் திரும்பினேன்.

“மாலா” என்று வலது கையை நீட்டினாள்.

(தொடரும்)


அடுத்த பாகம் இங்கே