Wednesday, August 15, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 13


பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 


“சொல்லுங்க மேடம்” கை கட்டி வாய் பொத்தி சொன்னேன். கல கலவென சிரித்தாள். “சிரிச்சது போதும்டி. சொல்லு”

அவள் முகத்தில் இருந்த சிரிப்பு வடிந்து போனது.

“தேவா, நம்ம காதல் கல்யாணத்துல முடியறதுல ஒரு சிக்கல் இருக்கு”

என்ன இவள், நான் சொல்லவேண்டிய வசனத்தை இவள் சொல்கிறாள்? கிள்ளிவிட்ட ஹாஃப்பாயில் போல கலங்கிப் போனேன். இவள் பக்கம் பிரச்சனையே இருக்காது என்று நினைத்தேனே. இப்போது இவள் என்ன குண்டைத் தூக்கிப் போடப் போகிறாளோ?

“என்ன மாலா சொல்ற?”

“ஆமா தேவா. எங்கப்பா அம்மா எல்லாம் நிறைய படிச்சவங்க, ஜாதி பாக்க மாட்டாங்கன்னு எல்லாம் நினைக்காத. அந்த விசயத்துல அவங்க படிக்காதவங்களை விட ரொம்ப மோசமா நடந்துப்பாங்க. அது போக எங்கம்மாவுக்கு மொத்தம் நாலு சிஸ்டர்ஸ். அவங்கல்லாம் பிஸினஸ் பண்றவங்க. எங்கம்மாவே ஒத்துக்கிட்டாலும் அவங்க விடமாட்டாங்க. இவங்களையெல்லாம் மீறி நம்ம கல்யாணம் எப்பிடி நடக்கப் போவுதுங்கிறதுதான் சிக்கல்”

“ஆஹா..நான் என் குடும்பத்துப் பக்கம் இருக்கிற சிக்கலை எப்பிடி உன்கிட்ட சொல்லலாம்னு நைட் எல்லாம் ப்ராக்டிஸ் பண்ணிட்டு வந்தேன். நீ என்னடான்னா உன் பக்கத்து சிக்கலை சொல்ற” தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்தேன்.

“உன் ஃபேமிலியில என்ன சிக்கல்? உன் தங்கை கல்யாணம் தானே? அது முடிஞ்ச பிறகே நாம கல்யாணம் பண்ணிக்கலாம். அதுல ஒண்ணும் பிரச்சனை இல்லையே”

“அது சரி. உங்க சைட்ல எப்பிடின்னு தெரியாது. எங்க சைட்ல வேற ஜாதிப் பொண்ணுன்னு சொன்னா வாயால பேச மாட்டாங்க. அருவாளாலதான் பேசுவாங்க. பட், ஒரு மாதிரி நான் அதை சமாளிச்சிருவேன். பேசாம நாமளா கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்க முன்னாடி போய் நின்னா என்ன?”

இடுப்பில் கையை வைத்துக் கொண்டு முறைத்தாள். “போடா.. எங்க ஃபேமிலியில என்னை எப்பிடியெல்லாம் தாங்குவாங்க தெரியுமா? அவங்க இல்லாம என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது?”

“ம்ம்ம்ம்” நூல்கண்டில் ஒரு பக்கம் மட்டும் சிக்கலென்றால் கொஞ்சம் கஷ்டப்பட்டாவது பிரித்துவிடலாம். இங்கே ரெண்டு பக்கமும் சிக்கலாயிருக்கிறதே? என்ன செய்யலாம்?

“தேவா. நான் ஒரு சொல்யூஷன் சொல்லட்டுமா?”

“என்ன?”

“இப்போதைக்கு நாம அதைப் பத்தி கவலைப்பட வேண்டாம். எனக்கு எப்பவாச்சும் மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சாங்கன்னா, அப்ப நம்ம விசயத்தை ஓப்பன் பண்ணுவோம். நீயும் உன் தங்கச்சிக்கு சீக்கிரம் வரன் தேடச் சொல்லு. ஓக்கே”

“நல்ல யோசனை தான் மாலா. நாமும் கொஞ்ச நாளைக்கு லவ் பேர்ட்ஸா இருப்போம்”

“ம்க்கும். நீ இங்கயும் நான் இந்தியாவுலையும் லாங் டிஸ்டன்ஸ் லவ்வா பண்ண முடியும்?”

“ஆமாம்ல. நீ இன்னும் ரெண்டு வாரம் தான் இருப்பியா? ஒவ்வொரு செகண்டும் உன் கூட செலவு பண்ணனும் மாலா. வா ஆஃபிஸ் போலாம்”

இருவரும் எழுந்து அலுவலகம் நோக்கி சென்றோம். முதல் நாள் ரீனா எனக்கு என்ன என்ன காட்டித் தந்தாளோ அதை எல்லாம் மாலாவுக்கும் காட்டினேன். டீம் மொத்தமும் கான்ஃபரன்ஸ் ஹாலில் கூடியிருந்தோம். நடுநாயகமாக ரீனா. நானும் மாலாவும் உள்ளே நுழைந்ததும், மொத்த டீமும் எழுந்து கை தட்டினார்கள். ஜேக் எனக்கு கை கொடுத்தான்.

“Congrats guys. I heard you both are engaged.”

எங்கேஜ்டா?? என்னங்கடா இது, இப்போதுதான் காதலையே சொல்லியிருக்கிறோம். அதற்குள் எங்கேஜ்டு என்று சொல்கிறார்களே என்று முழித்தேன். மாலாவைப் பார்த்தேன். அவள் முகத்தில் குழப்பம் எதுவுமில்லை. சிரித்துக் கொண்டே வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டிருந்தாள்.

“Where is the ring?” யாரோ கேட்ட கேள்விக்கு, “That is not in our custom” என்று சொல்லிக்கொண்டிருந்தாள். இரண்டு நிமிடங்களில் இயல்புக்கு வந்து புதன்கிழமை நடக்கப் போகும் கான்ஃபரன்ஸின் நிகழ்ச்சி நிரலையும், ரீனாவின் ப்ரசண்டேஷனையும் பற்றி விளக்கினாள். டீமில் யாரும் வராமல் இருக்கக் கூடாது என்பதை நூறாவது முறையாக நினைவு படுத்திவிட்டு, கார்ப்பரேட் ஆஃபிஸில் இருந்து வரும் கெஸ்ட்ஸ் இன்றும் நாளையும் நம் அலுவலகத்தை சுற்றி வருவார்கள். அப்படி வருபவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதையும் சொன்னாள். ஒருவழியாக மீட்டிங் முடிந்து வெளியே வந்தோம்.

“என்ன மாலா எங்கேஜ்ட்னு கேக்குறாங்க, நீயும் ஆமாம்னு மண்டைய ஆட்டுற?”

“டேய், இவங்க கல்ச்சர்ல, ப்ரொபோஸல்னா கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேக்குறதுதான். நம்ம கல்ச்சர்ல லவ் ப்ரோப்போஸ் பண்ணாலே அந்த பெர்சனைத்தான் கல்யாணமும் பண்ணிக்கப் போறோம்னு அர்த்தம் இல்லையா?”

“ஆமா.”

“அப்ப அவங்க கேட்டது சரிதானே?”

“சரிதான்” மனதுக்குள் மாலாவுக்கு ஒரு மோதிரம் பரிசளிக்கவேண்டும் என்று குறித்துக் கொண்டேன்.

அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் இனிமையாகக் கழிந்தன. ஃப்ளஷிங் பிள்ளையார் கோவில், பிரிட்ஜ்வாட்டர் பெருமாள் கோவில் (ஆனந்த தாண்டவம் படத்துல கல்யாணம் நடக்குமே அந்தக் கோவில்தானே - மாலா), சுதந்திர தேவி சிலை, மேடம் டுஸ்ஸாட் வேக்ஸ் மியூசியம், நயகரா, அட்லாண்டிக் சிட்டி என்று நான் பார்த்த எல்லா இடங்களையும் மாலாவிடம் காட்டி மகிழ்ந்தேன். செண்ட்ரல் பார்க்கில், சிம்பு-த்ரிஷா உட்கார்ந்திருந்த அதே பெஞ்சில் அதே போஸில் உட்கார்ந்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்.

*****************************

வியாழக்கிழமை. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை மாலா இந்தியா திரும்புகிறாள். அலுவலகத்திலிருந்து ஹோட்டலுக்குப் போகும் வழியில், “இன்னைக்கி நைட் இங்கயே தங்கிடேண்டா”

யோசித்தேன். இருப்பது 24 மணிநேரத்துக்கும் குறைவு. இதில் எட்டு மணி நேரத்தை இழக்க விருப்பமில்லை. “சரி”.

“தேங்க்ஸ்டா” என்று அணைத்து நெற்றியில் இதழ்களைப் பதித்தாள். என் தோளில் சாய்ந்து கொண்டாள். என் இடது கையை அவளைச் சுற்றிப் போட்டு அணைத்துக் கொண்டே நடந்தோம். சாதாரணமாக தூரமாகத் தெரியும் ஹோட்டல் இன்று சீக்கிரமே வந்துவிட்டது.

ரூம் சர்வீஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டோம். எதுவும் பேசவில்லை. கட்டிலில் அருகருகே உட்கார்ந்திருந்தோம். மாலா என் தோளில் சாய்ந்திருந்தாள்.

“தேவா, நாளைக்கு இன்னேரம் நான் ஏரோப்ளேன் ஏறி போயிட்டே இருப்பேன். உன் பக்கத்துல இப்பிடி உக்காந்திருக்க முடியாது. கவலையா இருக்குடா”

“எங்க மாலா போயிடப் போறோம். நினைச்ச உடனே ஃபோன்ல பேசலாம். ஸ்கைப்ல வீடியோ சேட் பண்ணலாம். உன் கிட்ட விசா இருக்கு. ரொம்ப ஃபீலிங்கா இருக்குதுன்னா டக்குனு ஒரு ரெண்டு வாரம் லீவ் போட்டுட்டு ஃப்ளைட் பிடிச்சி இங்க வந்துடு. அவ்வளவு தானே?”

“ஈஸியா சொல்லுவடா. ஆனா கஷ்டம் எனக்குத்தானே?”

“ஹ்ம்ம்ம்”

“டேய் இந்த மூணு மாசம் இருந்த மாதிரி பேசாம இருந்துடாதடா. டெய்லி பேசு. ஓக்கே”

“சரி மாலா. படுத்துக்கோ. நாளைக்கு ட்ராவல் இருக்குதுல்ல. நான் அந்த சோஃபால படுத்துக்குறேன்”

“ம்ம்.. வேண்டாம்டா. என் பக்கத்துலையே படுத்துக்கோ” என் கையைக் கட்டியணைத்துக் கொண்டு கெஞ்சினாள்.

“சரி” அவள் பக்கத்திலேயே படுத்துக்கொண்டேன்.  என் தோளில் முகம் பதித்தவாறே படுத்துக் கொண்டிருந்தாள். அவள் தலையை கோதிக்கொடுத்துக் கொண்டிருந்தேன். இருவரும் எப்போது தூங்கிப் போனோம் என்று நினைவில்லை.

**************************
அடுத்த நாள் ஏர்ப்போர்ட்டில் எப்போது வேண்டுமானாலும் அழுதுவிடுவது போல முகத்தை வைத்துக் கொண்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து போனாள். செக்யூரிட்டி செக்-இன் தாண்டி கேட் நோக்கிப் போகும் வரை திரும்பித் திரும்பி கையசைத்துக் கொண்டே போனாள். எனக்கும் கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன. வெளியே வந்து டாக்ஸி ஸர்வீஸஸில் நிற்க, அடுத்து வந்து நின்ற டாக்ஸியில் ஏறினேன்.

“சார், எப்பிடி சார் இருக்க? அன்னைக்கு பார்த்ததுதான். அப்புறம் பாக்கவே இல்லை. இன்னமும் அதே ஹோட்டல் தானா சார்?” முதல் நாள் நியுயார்க்கில் காலடி எடுத்து வைத்த போது சந்தித்த தமிழ் டாக்ஸி டிரைவர்.

“சொல்லுங்கண்ணே, நல்லா இருக்கேன். நீங்க எப்பிடி இருக்கீங்க. வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?”

ஒரு கணம் திரும்பி என்னைப் பார்த்தார். இருவருக்கும் இடையில் இருந்த ஃப்ளெக்ஸி க்ளாஸில் அவர் கண்களில் இருந்த உணர்ச்சியை என்னால் படிக்க முடியவில்லை. ஒரு கணம் அமைதியாக என்னைப் பார்த்துவிட்டு, “நல்லா இருக்கறாங்க சார். நீ இன்னும் ஹில்டன்ல் தான் இருக்கியா?”

“இல்லண்ணே, இப்ப ப்ராங்க்ஸ்ல இருக்கேன்” அட்ரஸைச் சொன்னேன்.

“யாரும் ஊருக்குப் போறாங்களா சார்?”

“ஆமா. என்னோட ஃபியான்சி இந்தியாவுக்குப் போறா”

“அட, கல்யாணமாவப் போவுதா? வாழ்த்துக்கள் சார். பொண்ணு எந்த ஊரு?”

“திண்டுக்கல்”

“சொந்தமா?”

“இல்லண்ணே. கூட வேலை பார்க்கிற பொண்ணு.”

“லவ் மேரேஜா? சந்தோசம் சார்”

அதன் பிறகு நிறைய பேசினார். அவரது காதல் கதையையும், கடும் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டதையும் பற்றி விரிவாகப் பேசினார். சுவாரசியமாக இருந்தது. இன்னொரு நாளில் நானும் யாருக்காவது எனது காதல் திருமணத்தில் முடிந்த கதையை இப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பேன். எத்தனை எதிர்ப்பை மீற வேண்டியிருக்குமோ? பேசாமல் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துகொண்டு இரண்டு பேரின் வீட்டுக்கும் போய் விடலாம். மாலா தான் பெற்றோர் சம்மதத்தோடு தான் திருமணம் என்று பிடிவாதம் பிடிக்கிறாள். நம் பக்கம் செய்ய வேண்டியவைகளைச் செய்வோம். முதலில் அப்பாவுக்கு ஒரு பெரும் தொகையை ட்ரான்ஸ்ஃபர் செய்து தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்ல வேண்டும்.

இறங்க வேண்டிய இடம் வந்தது. மீட்டர் ஐம்பது டாலரைக் காட்டியது. 60 டாலராக எடுத்து நீட்டினேன். “இருக்கட்டும் சார். உன்னோட கல்யாணத்துக்கு என் கிஃப்டா வச்சிக்கோ” என்றார். வம்படியாக அவர் கையில் பணத்தைக் கொடுத்துவிட்டு அவர் நம்பரை வாங்கிக் கொண்டேன்.

*********************************************
மாலா ஊருக்குப் போய் சேர்ந்ததும் அவளுக்கு முன்னால் செந்தில் அழைத்தான். நண்பனின் காதல் வெற்றியடைந்ததும் உண்மையான நண்பனின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி, செந்திலின் குரலில் தெரிந்தது. ஓமனாவும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டாள். தினமும் இரண்டு மணி நேரமாவது மாலாவுடன் பேசுவது வழக்கமாகிப் போனது. வானேஜ் இருந்ததால் பிழைத்தேன். இல்லையென்றால் என் சம்பளம் முழுக்க ஃபோன் பில்லிலேயே போயிருக்கும்.

ஒரு மாதம் ஓடியிருக்கும். மாலாவிடம் இருந்து ஃபோன் வந்தது. கட் செய்துவிட்டு திரும்ப அழைத்தேன். வழக்கமான குறும்பு மாலாவின் குரலில் மிஸ்ஸிங். சோகம் இழையோடுவதாக எனக்குப் பட்டது.

“என்னாச்சி மாலா, குரல் ஒரு மாதிரி டல்லா இருக்கிற மாதிரி இருக்கு? எதுவும் பிரச்சனையா?”

“ஆமா தேவா. பெரிய பிரச்சனை”

(தொடரும்)

அடுத்த பாகம்

3 comments:

ANaND said...

அடபவமே .... ஒரு எபிசொட்தான் இந்த லவ் பேர்ட்ஸ் சால பரக்கமுடிஞ்சிதா ....

Unknown said...

superb..............

திண்டுக்கல் தனபாலன் said...

என்ன பிரச்சனை... அறிய ஆவல்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 3)