Tuesday, November 6, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 17

பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 
காஃபி கப்பை கையில் வைத்துக்கொண்டு இந்த உரையாடலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாலாவை அர்த்தத்தோடு பார்த்து விட்டு விறுவிறுவென வெளியேறினேன்.

காரில் ஏறி ஹோட்டல் அறைக்கு வந்து சேரவும் என் செல்ஃபோன் பீப் பீப் என்றடிக்கவும் சரியாக இருந்தது. எடுத்துப் பார்த்தேன். மாலாதான் டெக்ஸ்ட் அனுப்பியிருந்தாள் - “Good. You nailed it. Played as we planned" என்று ஒளிர்ந்தது வாசகம். ஆம். எங்கம்மா இப்பிடித்தான் பேசுவாங்க, அதுக்கு நீ இப்பிடித்தான் பேசணும் என்று திரைக்கதை வசனம் எழுதிக் கொடுத்தது மாலாதான். அதைத்தான் இத்தனை நாட்கள் பயிற்சி எடுத்து கச்சிதமாக நிறைவேற்றிவிட்டு வந்திருக்கிறேன். இதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதையும் மாலா சொல்லியிருந்தாள்.

அறையின் ஜன்னலை லேசாகத் திறந்து வைத்துவிட்டு ஒரு சிகரெட் பற்ற வைத்துப் பிடித்துக் கொண்டிருந்தேன். செல்ஃபோன் அடித்தது. மாலா, எடுத்து, “ஹலோ” என்றேன்.

எதிர்முனையில் பதில் இல்லை. மாலாவின் அம்மா குரல் கேட்டது. ஃபோனை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்தேன்.

“பாத்தியாடி எப்பிடி திமிராப் பேசிட்டுப் போறான்? அவன் ஜாதி அப்பிடிடி. நம்மளால எல்லாம் அந்தக் குடும்பத்துல போய் வாழ முடியாதுடி. அவங்க பழக்க வழக்கம் வேற நம்ம பழக்க வழக்கம் வேற”

“அம்மா. நீங்க என்ன வேணும்னா சொல்லுங்க. எனக்குக் கல்யாணம்னு ஆனா அது தேவாவோடதான். நீங்க சம்மதிச்சி நீங்களே நடத்தி வக்கணும்னு நானும் தேவாவும் விரும்புறோம். அதுக்குப் பிறகு உங்க இஷ்டம்”

“பைத்தியக்காரத்தனமா பேசாதடி. நம்ம வீட்டுல யாருக்குமே இது பிடிக்கலை”

“அம்மா அவங்களா வாழப் போறாங்க. என் லைஃப் இது. நான் தான் வாழணும்”

“உங்க தாத்தா இப்ப இருந்திருந்தா உன்னை வெட்டிப் பொலி போட்டிருப்பாரு”

“அப்பிடியெல்லாம் இல்லம்மா. தாத்தா இருந்திருந்தா என் விருப்பத்தை நிறைவேத்தியிருப்பாரு”

“என்னவோ போடி. அப்பிடி அவனை தான் கல்யாணம் செஞ்சிக்குவன்னா எங்கயாவது ஓடிப்போய் பண்ணிக்கோ. உன்னைத் தலை முழுகிட்டு நாங்க நிம்மதியா இருக்கோம்” அவள் அம்மா விசும்புவது கேட்டது. அதற்குமேல் கேட்க விருப்பமில்லாமல் காலை கட் செய்துவிட்டுப் படுத்தேன்.

********************************

கிறிஸ்துமஸ் விடுமுறை, நியூ இயர் என நாட்கள் ஓடியது. பொங்கலை நெருங்கவும் ஊரில் தங்கை கல்யாண வேலைகள் பற்றி தினமும் ஃபோனில் பேசி, அனுப்ப வேண்டிய பணத்தை அனுப்பிக் கொண்டிருந்தேன். சேமிப்பு எல்லாம் கரைந்து கொண்டிருந்தது.

ஊருக்குக் கிளம்பும் நாள் நெருங்கியது. ஆன்சைட் அசைன்மெண்டை மொத்தமாகவே முடித்துவிட்டுக் கிளம்பிவிடச் சொல்லிவிட்டார்கள். என்னை ரீப்ளேஸ் செய்ய வந்த விஷ்வத்துக்கு கே.டி கொடுப்பதிலேயே நேரம் சரியாக இருந்தது. மாலாவிடம் அரை மணி நேரம் ஃபோனில் பேசிவிட்டு ஃபிளைட் ஏறினேன்.

******************************************

ஊருக்கு வந்து இறங்கியதும் திருமண வேலைகள். எல்லாருக்கும் பத்திரிகை கொடுக்க அப்பாவோடு வாடகைக்கார் எடுத்துக் கொண்டு போனது, பந்தக் கால் நடுவதிலிருந்து மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்பது வரை இடுப்பொடிய வேலை. எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாகவே திருமணம் நடந்தது. அம்மாவிடம் மட்டும் தொட்டும் தொடாமல் மாலாவைப் பற்றிச் சொல்லிவைத்தேன். அம்மா அதிர்ச்சியடைந்தாலும் கல்யாணம் முடிஞ்சாப்புறம் பேசிக்கலாம் என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்.

மாப்பிள்ளை வரவேற்பின்போதுதான் பார்த்தேன். ஃபோட்டோவில் பார்த்ததை விட இளமையாக இருந்தார். மாப்பிள்ளை முறுக்கு எதுவும் இல்லாமல் இயல்பாகப் பேசினார். படித்தவர் என்ற வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது. எக்ஸர்ஸைஸ் செய்வார் போல கைகள் இறுகி, மார்பு விரிந்து சினிமா கதாநாயகன் போலத் தான் இருந்தார். மீசை அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் அளவாக இருந்தது. வேஷ்டி சட்டை பேண்ட் சர்ட் என எல்லா உடையும் பொருத்தமாகவே இருந்தது. பணம் காசு என்று அதிகம் எதிர்பார்த்த குடும்பமாய் இருந்தாலும் மாப்பிள்ளை தங்கையை அன்பாகப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை கொடுத்தது.

கல்யாணம் முடிந்து மதியச் சாப்பாடும் ஓய்ந்த பிறகு கல்யாண மண்டபத்தில் ஆட்கள் அதிகம் இல்லாது இருந்த சேர்களில் நான்கை ஒன்றாகப் போட்டு லேசாக கண்ணயர்ந்தேன். வேலம்மா பாட்டி - அம்மாவின் அம்மா - எழுப்பினார்.

“என்ன பாட்டி? சாப்ட்டீங்களா?”

வெத்திலையை வாயோரமாகக் குதப்பி கையில் இருந்த சொம்பில் சாறைத் துப்பிவிட்டு, “அதெல்லாம் சாப்புட்டாச்சி. ஆமா அம்பேரிக்காவுக்குப் போயிருந்தியே, அங்கல்லாம் சாப்பாடு எப்பிடி? நம்மூரு சோறு கிடைக்குமா?”

“கிடைக்கும் பாட்டி. ஓட்டல்ல சாப்புடுறது எப்பயாச்சும் தான். மத்தபடி நானே சமைச்சி சாப்புட்டுக்குவேன்”

“ம்ம்ம்.. இப்பத்தான் தங்கச்சிக்கு கண்ணாலம் முடிஞ்சிருச்சில்ல. அடுத்த முகூர்த்தத்துல உனக்கு வச்சிரவேண்டியதுதான். பொண்ணு தேட வேண்டியதில்ல. அதான் உனக்குன்னு காத்துட்டு இருக்காளே வேலுச்சாமி மவ.” பாட்டி நைசாக தன் மகன் வயிற்றுப் பேத்தியை என்னோடு முடிச்சிப் போட்டாள். விடக்கூடாது.

“சும்மா இருங்க பாட்டி. சொந்தத்துக்குள்ள கல்யாணம் பண்ணா பொறக்குற புள்ளைங்களுக்கு பாதிப்பு வருமாம். வேற சாதியில பொண்ணு பார்த்தாலும் பார்ப்பேனே ஒழிய சொந்தத்துல கட்டிக்க மாட்டேன்”

“டேய் இதென்ன கோட்டித்தனமா பேசிக்கிட்டு. நம்ம சாதிய விட்டு வேற சாதியில பொண்ணெடுப்பானாக்கும். தேவனை மாதிரியா பேசுற? அந்நியத்துல பொண்ணெடுப்பேன்னு மட்டும் சொல்லு. வேற சாதிக்காரிய எல்லாம் மனசுல நினைச்சிட்டு இருக்காத. அது நடக்காது. உங்கப்பனுக்குத் தெரிஞ்சா வெட்டிப்புடுவாரு. ஆமா”

அம்மா சொல்லிவிட்டாள் போலிருக்கிறது. மெதுவாக நூல்விட்டுப் பார்க்கிறாள் பாட்டி.

“சரி பாட்டி. அந்நியத்துலதான் பொண்ணெடுப்பேன். போதுமா?”

“ஆஆ. இப்பத்தான் என் பேரன் மாதிரி பேசுற.” விரல்களை மடக்கி தலையின் இரண்டு பக்கமும் வழித்து நெற்றியில் சொடக்குப் போட்டுக் கொண்டாள். “சரி அசதியா இருப்ப. படுத்துக்க” எழுந்து மெதுவாக ஆடி ஆடி தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அம்மாவை நோக்கி நகர்ந்தாள்.

நாளையே அப்பாவிடம் மாலாவைப் பற்றிச் சொல்லிவிட வேண்டும். முடிவெடுத்தவனாய் கண்ணசந்தேன்.

************************************************

பொண்ணு மாப்பிள்ளையை ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு கல்யாண மண்டபத்துக்குக் கணக்குப் பார்த்து காசு செட்டில் செய்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். அய்யா வாசலில் உட்கார்ந்து பீடி குடித்துக் கொண்டிருந்தார்.

“அய்யா! உங்கக்கிட்டக் கொஞ்சம் பேசணும்”

“கல்யாண மண்டபத்துக்குக் காசு குடுத்து கணக்கு முடிச்சிட்டியாலே? பூக்காரன் ரெண்டாயர்ரூவா பாக்கி வரணும்னு சொன்னான். வா பேசிக்கிட்டே அவன்கிட்ட போய் பணத்தைக் குடுத்துட்டு வந்துருவோம்”

சிறிது தூரம் நடந்தோம். ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை.

“என்னலே. என்னமோ பேசணும்னு சொன்ன. இப்ப சும்மாவே வர்ற?”

“இல்லையா.. அது வந்து..”

“உங்கம்மாக்காரி சொன்னா. யாரோ ஒரு புள்ளையாமே?”

“ஆமா. கூட வேலை பாக்குறா”

“அமெரிக்காவுலையா பெங்களூருலையா?”

“பெங்களூர்லயும், அமெரிக்காவுலையும்”

“ம்ம்ம்.. என்ன சாதி?”

“நம்ம சாதி இல்ல”

என்னை அர்த்தமாக ஒரு பார்வை பார்த்தார்.

“உங்க பெரியப்பந்தான் ஜெயில்ல இருந்து ரிலீஸாகி வந்துட்டாருல்ல. பாப்பா மறுவீட்டுக்கு வந்துட்டுப் போவட்டும், அண்ணன வச்சிட்டுப் பேசுவோம்”

பெத்த மகளை வெட்டிட்டு ஜெயிலுக்குப் போன பெரியப்பாவை வச்சிக்கிட்டா?

(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே

No comments: