Friday, November 16, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 18

பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10
பகுதி-11 பகுதி-12 பகுதி - 13 பகுதி-14 பகுதி-15 பகுதி-16 பகுதி-17

“உங்க பெரியப்பந்தான் ஜெயில்ல இருந்து ரிலீஸாகி வந்துட்டாருல்ல. பாப்பா மறுவீட்டுக்கு வந்துட்டுப் போவட்டும், அண்ணன வச்சிட்டுப் பேசுவோம்”

பெத்த மகளை வெட்டிட்டு ஜெயிலுக்குப் போன பெரியப்பாவை வச்சிக்கிட்டா?

எனக்கு அடிவயிறு கலங்கியது. தனியே நேரம் கிடைத்ததும் மாலாவுக்கு ஃபோன் செய்தேன். எடுக்கவே இல்லை. இந்தப் பாழாய்ப்போன கிராமத்தில் இண்டர்நெட்டுக்கு எங்கே போவேன். வீட்டில் சொல்லிவிட்டு திருநெல்வேலிக்குப் போய் ஒரு பிரவுசிங் செண்டரில் எல்லாவற்றையும் விவரமாக மாலாவுக்கு மெயிலடித்தேன். பதில் வருமா என்று அரை மணி நேரம் ரெஃப்ரெஷ் தட்டிக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன்.

சாப்பிடப் பிடிக்காமல் மேலே போய் படுத்துக் கொண்டேன். 10 மணிக்கு ஃபோன் வந்தது. மாலா.

“என்னடா! வீட்ல ஒத்துப்பாங்களா?”

“தெரியல மாலா. பயமா இருக்கு. எங்க பெரியப்பா அவர் மகளையே வெட்டிட்டுப் போனவரு”

“பாண்டவர் பூமி ரஞ்சித் மாதிரி திருந்தி நம்மளை சேர்த்து வச்சிட்டாருன்னா?”

“விளங்கும். இதெல்லாம் சினிமால மட்டும் தான் நடக்கும். இவிங்களும் அங்க போய் கை தட்டிட்டு வருவாங்க. தன் வீட்டுல நடக்குதுன்னா அருவாள எடுப்பாங்க. போ மாலா”

“சரிடா. தைரியமா பேசு. அப்பிடி ரொம்ப முறுக்குனாங்கன்னா நாமளா கல்யாணம் பண்ணிக்கலாம்”

“கடைசியா அதான் செய்யணும்னு நினைக்கிறேன்”

“சரி இன்னொரு முக்கியமான விசயம். இன்னும் 2 வீக்ஸ்ல எனக்கு இங்க அசைன்மெண்ட் முடியுது. புனே போக முடியாது. பெங்களூருக்கு ட்ரான்ஸ்ஃபர் குடுங்கன்னு கேட்டுட்டு இருக்கேன். அனேகமா கிடைச்சிடும். நீ திரும்ப யு.எஸ் வரணுமா?”

“இல்லையே. நான் தான் விஷ்வத்க்கு கே.டி குடுத்துட்டேனே. இனி இங்க தான். மண்டே ரிப்போர்ட் பண்றேன்”

“குட். நான் அப்புறம் கூப்புடுறேன். ஸ்மார்ட் ஃபோன்ல ஈமெயில் செக் பண்ண முடியாதா?”

“முடியும். ஆனா 3ஜி ஒர்க் ஆவாது”

“ஓக்கே. அப்புறம் கூப்புடுறேன்”

ஃபோனை வைத்துவிட்டாள். இன்னும் இரண்டு நாட்களில் வரப்போகும் கண்டத்தை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று யோசித்துக்கொண்டே விழித்திருந்தேன்.

*****************************************

மறுவீட்டுக்குத் தங்கையும் மாப்பிள்ளையும் வந்திருந்தார்கள். மோதிரம் போட்டு வரவேற்ற பின்னால் மாப்பிள்ளையுடன் பேசுவதற்கு நேரமே கிடைக்கவில்லை. மதிய உணவுக்குப் பின்னால் வெற்றிலை போட்டுக் கொண்டு திண்ணையில் அமர்ந்தோம்.

“வாங்க மச்சான் அப்பிடியே நடந்துக்கிட்டே பேசுவோம்”

எழுந்து நடக்க ஆரம்பித்தேன்.

“என்ன மச்சான்! அமெரிக்கா எல்லாம் எப்பிடி இருந்திச்சி?”

“ம்ம்.. நல்லா இருந்திச்சி மாப்ள. சம்மர் தான் ரொம்ப நல்லா இருந்தது. விண்டர்ல ஒரே குளிர்”

“அப்பிடியா?  ஸ்னோ ஃபால் எல்லாம் பார்த்தீங்களா?”

“ம்ம் பார்த்தேன்”

“ஆமாம் மச்சான். நீங்க லவ் பண்ற பொண்ணு அமெரிக்கால தான் இருக்காங்களா?”

அதிர்ச்சி + ஆச்சரியமாகப் பார்த்தேன்.

“அதெல்லாம் உங்க தங்கச்சி சொல்லிட்டா. சொல்லுங்க”

“ஆமா மாப்ள. இப்ப அங்க தான் இருக்கா. இன்னும் ரெண்டு வாரத்துல இந்தியாவுக்கு வந்திடுவா”

“மாமா கிட்ட பேசிட்டீங்களா?”

“பேசினேன். நீங்க ஊருக்குப் போன பிறகு பெரியப்பாவை வச்சிட்டுப் பேசலாம்னு சொல்லியிருக்காங்க”

“மச்சான். இவங்கள்லாம் போன ஜெனரேஷன். இன்னமும் சாதி, மதம்னு அருவாளத் தூக்கிட்டு திரியறவங்க. இது உங்களோட வாழ்க்கை. நீங்கதான் முடிவெடுக்கணும்”

“சரிதான் மாப்ள. பெரியவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறோம்”

“நினைக்கிறதெல்லாம் சரிதான் மச்சான். ஆனா இவங்க எத்தனை வருசமானாலும் மாற மாட்டாய்ங்க. நீங்க முடிவெடுங்க. நானும் உங்க தங்கச்சியும் வந்து நடத்திக்க் குடுக்குறோம் உங்க கல்யாணத்தை”

நிம்மதியாக இருந்தது. சப்போர்ட் செய்வதற்கு சொந்தத்திலும் ஒரு ஆள் இருக்கிறது என்று தெரிந்ததும்.

“தேங்க்ஸ் மாப்ள. ரொம்ப சந்தோஷமா இருக்கு. தைரியமா பேசுவேன் அப்பாகிட்ட”

வழக்கமான பெட்டிக்கடையில் பின்னால் ஒளிந்து ஆளுக்கொரு சிகரெட்டைப் பிடித்தோம். பாக்கு போட்டுக்கொண்டு வீட்டுக்குப் போனோம்.

பெண்களைப் பெற்ற இரண்டு மாமாக்கள், பெரியப்பா, அப்பா எல்லாம் உட்கார்ந்திருந்தார்கள்.

பெரியப்பாவும் மாமாக்களும் பார்த்த பார்வையே சரியில்லை.

“வாங்க பெரியப்பா. வாங்க மாமா. வாங்க மாமா” என்று வரவேற்று விட்டு நின்றுகொண்டேன். காலியாக இருந்த சேரில் மாப்பிள்ளை உட்கார்ந்து கொண்டார். தங்கையும் அம்மாவும் பின்னால் நின்றிருந்தார்கள். அப்பா தங்கையைப் பார்க்க ஒரு மடக்கு சேரை எடுத்துக் கொண்டு வந்தாள். வாங்கி விரித்து உட்கார்ந்து கொண்டேன்.

“என்னடா. என்னன்னவோ கேள்விப் படுறோம். எல்லாம் உண்மையா?” பெரியப்பா துவக்கினார்.

“அது வந்து...”

“என்ன மாப்ள நீங்க. உங்களுக்காக பொண்ணை பெத்து வச்சிட்டு ரெண்டு பேரு இருக்கோம். நியாயமா நாங்க ரெண்டு பேரும் தான் சண்டை புடிச்சிட்டு நிக்கணும். நீங்க என்னடான்னா, எந்த சாதிப் புள்ளையையோ காதல் கீதல்னு வந்து நிக்கிறீங்க?” அம்மாவோடு பிறந்த மாமா தொடர்ந்தார்.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வார்த்தைகளை மனதுக்குள் சரியாக செதுக்கிக் கொண்டு ஆரம்பித்தேன். “நீங்க கேள்விப்பட்டதெல்லாம் நிஜம் தான். நான் மாலாங்கிற பொண்ணை லவ் பண்றேன். அவளை தான் கல்யாணம் செஞ்சிக்கலாம்னு இருக்கேன். பெரியவங்க நீங்கதான் முன்னாடி இருந்து நடத்தித் தரணும்”

“எலேய் யார்கிட்ட பேசுறன்னு தெரிஞ்சிதான் பேசுறியா? கீழ் சாதி நாயைக் கல்யாணம் பண்ணினதுக்காக நாம் பெத்த மகளையே வெட்டிப்புட்டு ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவனாக்கும். என் கிட்டயே கல்யாணத்தை நடத்தித் தரச் சொல்றீயே உனக்கு என்னா தைரியம் வேணும். என் தம்பி மவனாச்சேன்னு பாக்குறேன். இதுவே நான் பெத்ததா இருந்தா இந்நேரம் தலை தனியாக் கிடக்கும்”

“என்ன பெரியப்பா பேசுறீங்க? அக்காவைக் கொன்னுட்டு நீங்க ஜெயிலுக்குப் போயிட்டீங்க. பெரியம்மா எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு நாங்க தானே பார்த்தோம். சாதி கவுரவத்தை நிலை நாட்டினதால உங்களுக்கு என்ன கிடைச்சிச்சி? 7 வருசம் ஜெயில்ல அச்சடிச்ச சோறும் அவுன்ஸ் குழம்பும் தான? இது என்னோட வாழ்க்கை. யார் கூட வாழ்ந்தா என் வாழ்க்கை நல்லாருக்குமுன்னு தான் நான் பார்க்க முடியும். என் பொண்டாட்டி என்ன சாதியா இருக்கணும், என்ன மதமா இருக்கணும்னு பார்க்க வேண்டியதில்ல”

மாப்பிள்ளை ஆர்ம்பித்தார். “மாமா மச்சான் சொல்றதுலையும் ஒரு பாயிண்ட் இருக்கு. அவருக்குப் பிடிக்காத கல்யாணத்தை செஞ்சி வச்சி அவரோட வாழ்க்கையையும் கெடுத்து இன்னொரு பொண்ணோட வாழ்க்கையயும் கெடுக்கணுமா?”

“என்ன மாப்ள சொல்றீங்க?”

“ஆமா மாமா. மச்சான் பெங்களூர்ல வேலை. திரும்பவும் அமெரிக்காவுக்குப் போனாலும் போவாரு. அவரு இருக்கிற இடத்துக்கே போய் உங்க பொண்ணை நல்லா வச்சிருக்காரான்னு பாத்துட்டே இருப்பீங்களா? இல்ல மிரட்டி மிரட்டி ஒருத்தரை குடும்பம் நடத்த வச்சிர முடியுமா? இதையெல்லாம் யோசிச்சிப் பாருங்க”

“அதெல்லாம் கட்டி வச்சிட்டா சரியாப் போயிரும் மாப்ள. ஒரு வீட்டுக்குள்ளயே ரெண்டு பேருமா இருந்தா ஒருத்தர் மூஞ்ச இன்னொருத்தர் பாத்துப் பாத்து பிடிச்சிப் போயிரும்.”

“ஐயோ மாமா. நீங்க இன்னும் உங்க காலத்துலயே இருக்கீங்க. காலம் மாறிப் போச்சி. இப்ப உங்க பொண்ணை எனக்குக் கொடுக்க முன்னாடி நல்லா விசாரிச்சிருப்பீங்க. எனக்கு ஏற்கனவே ஒரு பொண்ணோட லவ்னு தெரிஞ்சிருந்தா பொண்ணு குடுக்க யோசிச்சிருப்பீங்களா இல்லையா?”

“அது வேற மாப்ள. இப்ப பொண்ணு குடுக்கத்தான் ரெண்டு பேரு இருக்காய்ங்களே”

மாப்பிள்ளை தாய்மாமாவின் பக்கம் திரும்பினார். “சரி சித்தப்பு நீங்க சொல்லுங்க. உங்க பொண்ணை மச்சானுக்குக் கட்டிக் குடுத்த பின்னாடி பொண்ணு சந்தோசமா இல்லைன்னா உங்களால நிம்மதியா இருந்துட முடியுமா?”

மாமா யோசித்தார்.

"சொல்லுங்க சித்தப்பு. இல்ல நீங்க தான் அருவாளோட தங்கச்சி பக்கத்துல உக்காந்து பார்த்துட்டே இருக்க முடியுமா? உங்க பொண்ணோட வாழ்க்கையும் இதுல இருக்குதுன்னு நினைச்சிப் பாருங்க”

தயக்கத்துடன் பெரியப்பாவைப் பார்த்து ஆரம்பித்தார் மாமன் - “பெரிய மச்சான், மகன் சொல்றதிலையும் ஞாயம் இருக்கத்தான செய்யுது. பெரியவங்க கூடிப் பேசுங்க. எம்பொண்ணுகூட காலையில எதுக்குன்னு லேசா இழுக்கத்தான் செஞ்சிச்சி. விருப்பமில்லாம எதுக்குக் கட்டாயப் படுத்தணும்?”

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அம்மா அப்பாவைப் பார்த்து, “நம்ம மவன்.. நீங்கதான் பார்த்து..” என்று இழுத்தாள்.

“இந்தாடி அப்ப எங்கண்ணனப் பேசக் கூடாதுன்னு சொல்றியா?” அப்பா சேரை பின்னுக்குத் தள்ளி துண்டை முறுக்கிக் கொண்டு அம்மாவை அடிக்க எழுந்தார்.

நான் எழுந்து அம்மாவை மறைத்து நின்றேன். “அய்யா, நிறுத்துங்க. இப்ப எதுக்கு அம்மாவை அடிக்கப் போறீங்க?”

“தோளுக்கு மேல வளந்துட்ட. உன்னையவா அடிக்க முடியும்?”

“ஏன் அடிங்களேன்? அடிச்சி வெட்டிப் போடுங்க. அதுக்கப்புறமாவது உங்க சாதி வெறி அடங்குதான்னு பாப்போம். நீங்க சாதியைக் கட்டிக்கிட்டு அழுங்க. நான் போறேன்” எழுந்து விறுவிறுவென வீட்டை விட்டு வெளியேறினேன்.

“மச்சான் மாப்ள அண்ணே” என்று கலவையான குரல்கள் என் முதுகில் மோதி விழுந்தன. வேக வேகமாக நடந்து பெட்டிக்கடைக்கு வந்தேன். ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கிக் கொண்டு கம்மாக் கரைக்குப் போனேன். ஒதுக்குப் புறமாக இருந்த கிணற்றின் உள்ளே இறங்கி தண்ணீருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். படபடப்பு அடங்கவே இல்லை.

ஒவ்வொன்றாக முழு பாக்கெட்டையும் ஊதித் தள்ளினேன். இரண்டு மணி நேரங்கள் ஆகியிருந்தது. யாரும் தேடி வரக் காணோம். செல்ஃபோனை எடுத்துப் பார்த்தேன். சிக்னல் இரண்டு கோடுகள் மட்டும் இருந்தது. நான் எடுத்துப் பார்ப்பதற்கே காத்திருந்தது போல அடித்தது. மாப்பிள்ளை.

“சொல்லுங்க மாப்ள”

“எங்க மச்சான் இருக்கீங்க?”

“இங்க பக்கத்துல தான்”

“கிளம்பி வீட்டுக்கு வாங்க. பெரியவங்களை ஒரு வழியா சம்மதிச்சாச்சி. ஒரு கண்டிசன் தான் போடுதாக”

“என்ன கண்டிஷன்?”

“நேர்ல வாங்க பேசிக்கலாம்”

மனம் குதூகலமானது. விசிலடித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன். தங்கையும் வாயெல்லாம் பல்லாக “வாண்ணே” என்றாள்.

மாப்பிள்ளையும் அப்பாவும் உட்கார்ந்திருந்தார்கள். அப்பா முகம் சிறுத்துப் போய் இருந்தது.

“வாங்க மச்சான். உக்காருங்க” கையைப் பிடித்து அருகில் அமர்த்திக் கொண்டார் மாப்பிள்ளை.

”மச்சான் உங்களுக்காகப் பேசிப் போராடி சம்மதம் வாங்கிக் குடுத்துருக்கேன். நினைவுல வச்சிக்கிடுக. ஆமா.”

“தேங்க்ஸ் மாப்பிள்ளை. ரொம்ப தேங்க்ஸ். ஏதோ கண்டிஷன்னு சொன்னீங்களே என்ன?”

“மாமா நீங்களே சொல்லுங்க” அப்பாவைப் பார்த்தார்.

சிடுசிடுப்பு மாறாமல் அப்பா சொன்னார், “நீங்களே சொல்லுங்க மாப்ள. நான் இவங்கிட்ட பேசுறதா இல்ல”

ஒரு சில விநாடிகள் அப்பாவின் முகத்தையே பார்த்தேன். என் பார்வையைத் தாங்க முடியாமல் எழுந்து விட்டார். “இங்க பாருலே. நீ எவள வேணும்னாலும் கல்யாணம் செஞ்சிக்கோ. ஆனா கல்யாணம் இந்த ஊட்டுலயோ இந்த ஊர்லயே நடக்கக் கூடாது. நீ அந்தப் பொண்ணு ஊர்ல வச்சிக்கோ இல்ல பெங்களூர்ல வச்சிக்கோ. பெத்த கடனுக்கு நானும் எம்பொண்டாட்டியும் வந்துருவோம். வேற சொந்தக்காரங்களக் கூப்புடணும்னு எல்லாம் கனாக் காணாத. கல்யாணம் முடிஞ்சப் பிறகு நீ பெங்களூருலயே இருப்பியோ இல்ல அமெரிக்காவுக்கே போயிருவியோ உன் இஷ்டம். ஒம் பொண்டாட்டியக் கூட்டிட்டு இந்த வீட்டுப் பக்கம் வந்துராத. என் சாதிக் கவுரவத்தைக் கெடுத்துராத. அம்புட்டுத்தேன்”

சொல்லிவிட்டு சட்டைப் பையில் இருந்து ஒரு பீடியை எடுத்து பல்லிடுக்கில் கடித்துக் கொண்டு வெளியேறிவிட்டார்.

(தொடரும்)


No comments: