Wednesday, March 6, 2013

இதுவும் ஒரு காதல் கதை - 24



“கோரமங்களா கணேஷா டெம்பிள். அங்க காலைல கல்யாணத்தை முடிச்சிட்டு, ஈவினிங் ரிசப்ஷன் எங்கயாவது ஒரு ஹோட்டல்ல வச்சிக்கலாம். நம்ம ஆஃபிஸ் கொலீக்ஸ், உன் காலேஜ் ஃப்ரண்ட்ஸ் மாலாவோட ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் கூப்புடுடலாம். இன்விட்டேஷன் அடிக்கணும்னா என் கல்யாணத்துக்கு அடிச்சேனே அதே ப்ரஸ்ல அடிச்சிக்கலாம். இப்ப தேதி முடிவு பண்ணுங்க, பட்ஜெட் முடிவு பண்ணுங்க. முழு ப்ராசஸ்லயும் உங்க கூட நான் இருக்கேன்”

“அப்ராக்ஸிமேட்டா எவ்வளவு ஆகும்னு எஸ்டிமேட் பண்ற?” என் கேள்விக்கு முறைத்தாள் மாலா.

“இல்ல மாலா, எவ்வளவு ஆகும்னு தெரிஞ்சா அந்தப் பணத்தை ரெடி பண்ணலாம்ல? அதான் கேட்டேன்”

“எவ்வளவு ஆனாலும் பரவாயில்லடா. கிராண்டா இருக்கணும். அவ்வளவுதான்”

“சரிடா எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை. இந்த ஐடியா நல்லா இருக்கு. நமக்கு வரப்போற 100, 200 பேருக்காக பெரிய கல்யாண மண்டபம் புக் பண்றது எல்லாம் நல்லாவும் இருக்காதுதான். லே மெரிடியன்ல ஹால் என்ன ஆகும்னு விசாரிக்கலாம்”

லெ மெரிடியன் பெயரைக் கேட்டதும் மாலாவின் முகம் பிரகாசமானது.

“அப்புறம் எனக்கு கொஞ்சம் ஜ்வெல்ஸ் வாங்கணும்”

“உங்க அம்மா வீட்டுல அதெல்லாம் போடமாட்டாங்களா?” குறும்பாகக் கேட்டான் செந்தில். மாலா முறைக்கவே “சும்மாதான்யா கேட்டேன். உடனே முறைக்காத” என்று பம்மினான்.

“இது தை மாசம். இன்னும் மூணு மாசம் கழிச்சின்னா”.. விரல் விட்டு எண்ணினான், “மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி. வைகாசி முகூர்த்தம் அதிகமா இருக்கிற மாசம். கல்யாண சம்மந்தப்பட்ட எல்லா ஐட்டமும் கொஞ்சம் எக்ஸ்பென்சிவாவே இருக்கும். பரவாயில்லையா?”

பரவாயில்லை என்பது போல தலையசைத்தேன். “கல்யாணம்ங்கிறது வாழ்க்கையில ஒருக்கா பண்ணப் போறோம். அது நல்ல முகூர்த்தத்துலயே செஞ்சிக்கலாம். நோ ப்ராப்ளம்” மாலா அங்கீகரிக்கும் பார்வை ஒன்றை பரிசளித்தாள். நீண்ட நேரத்துக்குப் பிறகு அவள் முகத்தில் மெலிதான புன்னகையும் பூத்தது. இரண்டு விரலால் அவள் வாயின் ஓரங்களைப் பிடித்து அகலமாக்கி, “கொஞ்சம் பெருசாத்தான் சிரிச்சா என்ன?” என்றேன்.

அவளின் ட்ரேட் மார்க்கான் தலையைச் சாய்த்து கண்களைச் சுருக்கி சிரித்தாள்.

அன்றைய பொழுது சந்தோஷமாகக் கழிந்தது.

***********************************************************************
அடுத்தடுத்த மாதங்கள் வேக வேகமாக ஓடின. லெ மெரிடியனில் 150 பேர் கொள்ளுமளவுக்கு ஹாலும் உணவும் புக் செய்தோம். மாலாவுக்கு பீமா ஜுவல்லரிஸில் ஒரு நெக்லெஸ், ஒரு ஆரம், தாலிச் செயின், தாலி ஆகியவை வாங்கினோம்.

பட்ஜெட் போட்டதில் இருவரின் பேங்க் பேலன்ஸையும் தாண்டி செலவாகும் போல இருந்தது. பல யோசனைகளுக்குப் பிறகு கூடுதல் தொகைக்கு எச்.டி.எஃப்.சி பேங்கில் பெர்சனல் லோன் போட்டேன். திருமணம் முடிந்த கையோடு நியூயார்க்கில் ஒரு ப்ராஜெக்டில் சேர இருவருக்கும் வாய்ப்பு தேடித் தந்தார் என் மேனேஜர் (அட்வான்ஸ் மேரேஜ் கிஃப்டா வச்சிக்கோப்பா).

திருமணப் பத்திரிகையைப் பார்த்துப் பார்த்து வார்த்தைகள் கோர்த்து மாலாவும் நானும் டிசைன் செய்தோம். இன்விட்டேஷன் கார்ட் செலக்ட் செய்து 300 கார்ட் அடித்தோம். என் நண்பர்கள், மாலாவின் நண்பர்கள் எல்லோரையும் நேரில் பார்த்து பத்திரிகை கொடுத்தோம். திண்டுக்கல்லில் என் கல்லூரி தோழர்கள் இருவர் வீடு இருந்தது. அவர்களுக்குப் பத்திரிகை வைப்பதோடு, மாலாவின் வீட்டுக்கும் பத்திரிகை வைக்கலாம் என்ற ஐடியாவை வைத்தாள் மாலா.

“மாலா இதெல்லாம் சரிப்பட்டு வராது. பொண்ணு கேட்டு உங்க வீட்டுக்கு வந்தப்ப என்ன ஆச்சோ அதேதான் நடக்கும். இதெல்லாம் ரிஸ்க். சொன்னாக்கேளு”

“இல்லடா. ஒரு கல்லு விட்டுப் பாப்போமே.. ப்ளீஸ் எனக்காக...”

“சரி. போலாம். ஆனா பஸ் விட்டு இறங்கினதும் நீ நேரா உங்க வீட்டுக்குப் போ, நான் என் ஃப்ரண்ட் வீட்டுக்குப் போறேன். உங்க வீட்டுல இந்த விசயத்தைச் சொல்லு. அவங்க ரியாக்‌ஷன் பாத்துட்டு ஃபோன் பண்ணு. நான் வர்றேன். தேவையில்லாம பிரச்சனை பண்ண வேண்டாம். ஓக்கே?” என் கண்களையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஓகேடா. அப்பிடியே செஞ்சிக்கலாம்”

கேபிஎன் பஸ். திண்டுக்கல் பைபாஸில் இறங்கினோம். ஆட்டோ பிடித்து மாலா வீட்டு முனையில் இறக்கிவிட்டுவிட்டு என் நண்பன் வீட்டுக்குப் போனேன்.

மதியம் இரண்டு மணி போல மெசேஜ் வந்தது. “DROP THE INVITING PLAN. WE ARE LEAVING TO BANGALORE TONIGHT. MEET YOU @ BUSSTAND" தந்தி போல அனுப்பியிருந்தாள். நான் எதிர்பார்த்தது போலவே குடும்பமே சேரந்து கட்டி ஏறியிருப்பார்கள் போல. ஃபோன் செய்யக் கூட முடியவில்லை.

இரவே இருவரும் திரும்பினோம். பஸ் ஏற்றிவிட அவள் மாமா செல்வம் வந்திருந்தார். அவர் என்னைப் பார்த்த பார்வையில் சினேகம் கொஞ்சம் கூட இல்லை. பஸ்ஸில் போகும் போது “மாமா முறைச்சாரேன்னு தப்பா எடுத்துக்காதடா. அவருக்கு எதையும் மனசுல வச்சிக்கத் தெரியாது”

“அதெல்லாம் பரவாயில்ல மாலா. ஆனா எனக்கு ஒரு விசயம் ஆச்சரியமா இருக்கு”

“என்ன?”

“ஒரு வேளை நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் உங்க வீட்டுல நம்மளை ஏத்துக்கிறாங்கன்னு வச்சிக்கோ, உங்க மாமா என் முகத்துல எப்பிடி முழிப்பாரு?”

“ம்ம்.. உங்கப்பா எப்பிடி என் முகத்துல முழிப்பாரோ அதே மாதிரிதான்” வாயை மூடிக்கொண்டேன்.

*********************************************************************************

திருமணத்துக்கு இரண்டு வாரங்கள் இருக்கும்போது மாலாவிடம் இருந்து மெசேஜ் வந்தது, “Come here ASAP". அவள் சீட்டுக்குப்போய் பார்த்தேன் அங்கே அவள் இல்லை. கால் செய்த போது வீட்டில் இருப்பதாகச் சொன்னாள். செந்திலிடம் பைக்கை ஓசி வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.

கதவைத் தட்டியதும் மாலா வந்து திறந்தாள். ஹாலில் ஃபர்னிச்சர்கள் எதுவும் இல்லாமல் ஒரு டபுள் மெத்தை விரிக்கப்பட்டு அதன் மீது இரண்டு தலையணைகளும் திண்டுகளும் பரப்பப்பட்டிருக்கும். அந்த மெத்தையின் மீது உட்கார்ந்திருந்தார் மாலாவின் அப்பா.

'இதுக்குத்தான் கூப்புட்டியா’ என்பதான ஒரு பார்வையை மாலாவின் பக்கம் வீசிவிட்டு அவரை ஏறிட்டேன்.

“இங்க பாருங்க தம்பி. நீங்க ரெண்டு பேரும் இப்பிடிக் கல்யாணம் பண்ணிக்கிறதுல எங்களுக்கு எல்லாம் சம்மதமில்லை. மாலா எங்களுக்கு ஒரே பொண்ணு. அவ இப்பிடி ஓடிப்போய் கல்யாணம் செஞ்சிக்கிட்டா நல்லா இருக்காதுன்னு சொந்தக்காரங்க எல்லாரும் சொல்றாங்க”

(அடுத்த பாகத்தில் முடியும்)

No comments: