Thursday, April 18, 2013

ப்ளூ மர்டர் எக்ஸ்ப்ரஸ்- 2


jigsaw_puzzle
ஈரோடு பக்கம் கணக்கன்பாளையம் கிராமம். மொத்தமே 50 வீடுகள் மூன்று தெருக்கள் - மேலத் தெரு, நடுத்தெரு, கீழத் தெரு. இந்த ஊருக்கு ஒரு மந்தை. ஒரு காலத்தில் ஆடு மாடுகளைக் கட்டி வைத்திருந்த இடமாம். இப்போது ஒரு நாளைக்கு மூன்று முறை வரும் அரசுப் பேருந்தும், ஐந்து முறை வரும் மினி பஸ்ஸும் நின்று போகும் இடமாகப் பயன்படுகிறது. அந்த ஊருக்கு டீக்கடையும் இல்லாமல் ஓட்டலும் இல்லாமல் இரண்டும் கெட்டானாக ஒரு கடை. டீ மாஸ்டர், செஃப், சர்வர், முதலாளி எல்லாம் ஒருவரே. அந்த டீக்கடையிலும் - மேலத் தெரு, நடுத்தெருக்காரர்களுக்கு ஒன்று, கீழத் தெருக்காரர்களுக்கு ஒன்றாக இரட்டைக் குவளைகள். போடப்பட்டிருந்த ஒரே ஒரு பெஞ்சில் காலை ஆட்டிக் கொண்டு தினத்தந்தியை மடித்து விசிறிக் கொண்டிருந்தார் நமச்சிவாயம். வெள்ளைச் சட்டை, வெள்ளை வேஷ்டி. தோளில் துண்டு. முன்னந்தலையில் வழுக்கை. மாலை வெயிலுக்கு முத்து முத்தாக வேர்த்திருந்ததை துண்டால் அழுந்தத் துடைத்தார்.

“ஏனுங் டீ போட்ட்டுங்களா?”

“இல்லீங்ணா, சித்த போகுட்டு. இப்பதா சோறுண்ட்டு வாறன்!”

“நெம்ப நாளா உங்ககிட்ட ஒன்னு கேக்கோணும்ண்ட்டே இருக்கணுங். இவிங்க செய்றதையெல்லாம் வாங்கிட்டுப் போய் என்னங் பண்ணுவீங்?”

“அல்லாமு வட நாட்டுக்குப் போவுதுங். அங்க சுத்திப் பாக்க வாற வெளிநாட்டுக்காரங்க மம்மேனியா வாங்கிட்டுப் போறாங்களாமா!”

“ஓ” தூக்குப்போசியைக் கையில் தூக்கிக்கொண்டு ஒரு பையன் சற்றுத் தொலைவில் நடந்து வந்தான். “ஏனுங், மணி அஞ்சாச்சுங்ளா?”

கையில் கட்டியிருந்த வாட்சைத் தூக்கிப் பிடித்து மணி பார்த்துவிட்டு, “அட ஆமாங். எதெப்படி கணக்காச் சொல்றீங்கோ?”

“அந்தா அங்க பையன் வந்துட்டானுங். அம்பிகாக்கா ஊட்டுப் பையன். அஞ்சு மணியாச்சுன்னா தூக்குப்போசியத் தூக்கீட்டு டீ வாங்க வந்துருவானுங்” சொல்லிவிட்டு டீ போட ஆரம்பித்தார்.

இந்தக் கணக்கம்பாளையம் ஒரு காலத்தில் செழிப்பான ஊராக இருந்தது. எல்லாரும் விவசாயம் பார்த்து கை நிறைய காசோடு வாய் நிறைய பல்லோடு இருந்தார்கள். இப்போது நிலம் காய்ந்து விவசாயம் செத்து ஒரு எக்ஸ்போர்ட்ஸ் கம்பெனிக்கு பனை ஓலையால் பொருட்கள் செய்து தரும் கூலியாக வேலை பார்க்கிறார்கள். நமச்சிவாயம் அவர்களுக்கு ஏஜெண்ட். இவர்கள் செய்து தரும் பொருட்களை வாரம் ஒரு முறை வாங்கிக் கொண்டு போய் சென்னைக்கு லாரி ஏற்றி விடுவார். சென்னையில் இருந்து ரயிலில் ஏற்றி பாம்பே போய் அங்கிருந்து விமானம் ஏறி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. வெளிநாட்டுக்குப் போகும் விவகாரம் நமச்சிவாயத்துக்குக் கூட தெரியாது. இன்று கலெக்‌ஷன் தினம்.

காலையிலே வந்து விட்டார். காலையில் வீடு வீடாக ஒரு எட்டுப் போய் வேலை எவ்வளவு தூரம் நடந்திருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு வந்துவிட்டார். மாலை ஏழு மணி கடைசி பஸ்ஸில் ஏற்றி ஈரோடு போய் லாரி பார்சல் சர்வீஸ் கம்பெனியில் போட்டு விட வேண்டும். ஏழு மணி பஸ்ஸை விட்டுவிட்டால் லாரி போய்விடும். சென்னையில் இருந்து கூப்பிட்டு காதில் ரத்தம் வரும் வரை திட்டுவார்கள். ரெண்டு நாளாக ஊரில் திருவிழா என்று யாரும் சரியாக வேலை செய்யவில்லை. காலையிலேயே வந்து அவர்களை விரட்டிக் கொண்டிருக்கிறார் நமச்சிவாயம்.

“அண்ணா, இன்னிக்கு டீ, பத்து வேணுமுங்க!:, பையன் தூக்குச்சட்டியை டீக்கடை மேஜை மீது வைத்தான்.

“அம்பிகாக்கா ஊட்டுக்குத்தான தம்பி?”

“ஆமாங்.”

“வேலையெல்லாம் ஒழுங்கா நடக்குதாக்கு?”

“எல்லாம் நடக்குதுங். இன்னும் ரெண்டு மணி நேரத்துல அல்லா ஆயிருமுங்க”

“டீக்கடைக்காரண்ணா, டீக்குக் காசு நான் குடுத்துர்றனுங். பையங்கிட்ட வாங்க வேணாங்”

டீயை வாங்கிக் கொண்டு பையன் கிளம்பினான். “நாய்ப் பொழப்பு” மனதுக்குள் புலம்பியது வாயை விட்டு வந்து விட்டது. ‘இன்னும் ஒரு மாசமோ ரெண்டு மாசமோ தான். அதுக்குப் பொறவு இந்தக் கழிசடையை விட்டுப் போடோணும்’ பையில் வைத்திருந்த செல்ஃபோனை எடுத்துப் பார்த்தார். ‘எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்னு சொன்னானே? இன்னும் வரலயே? ரெண்டு மூணு நாள் தள்ளிப் போவுதோ என்னவோ?’ அவருக்குள்ளாகப் பேசிக் கொண்டு எழுந்து புட்டத்தைத் தட்டிவிட்டு துண்டை ஒரு உதறி உதறி தோளில் போட்டுக் கொண்டார். “அண்ணா, நான் ஒரு எட்டு உள்ள போய் ஒரு விரட்டு விரட்டிட்டு வரேனுங்”

“சரிங்ணா. போயிட்டு வாங்க”

அம்பிகாக்கா என்பவர் தான் இந்த ஊரின் மகளிர் சுய உதவிக் குழு தலைவர். விவசாயம் இல்லாமல் நொடித்துப் போன போது சுய உதவிக் குழுவை ஏற்படுத்தி பெண்களை ஊக்கப் படுத்தி இந்தத் தொழிலை செய்ய வைத்தார். அவர் வீட்டின் பெரிய வராந்தாவில் தான் 20 பெண்கள் வரை உட்கார்ந்து ஓலை பொம்மை செய்வார்கள். சென்னையில் இருக்கும் கம்பெனிக்காரனே கிள்ளி தான் கொடுப்பான். அந்தப் பணத்திலும் கணிசமான பங்கு அம்பிகாக்காவுக்குத்தான் போகிறது.

வீட்டுக்குள் நுழைந்த நமச்சிவாயம், “எல்லாம் வெரசா நடக்குதாக்கு? ஏழு மணி பஸ்ஸுக்குப் போகோணும். தெரீந்தானொ?”

சற்றே உயரமாயிருந்த திண்ணையில் பாதி உட்கார்ந்தும் பாதி படுத்துமிருந்த அம்பிகாக்கா நமச்சிவாயத்தைப் பார்த்ததும் மாராப்பை சரி செய்துகொண்டாள். “அதெல்லாம் ஒண்ணும் ரோசனை வேண்டாங். புள்ளைங்க வெரசா ரெடி பண்ணிருவாளுக”

“நீங்க பயப்படாதீங்ண்ணா. ஏழு மணி பஸ்ஸை நிறுத்தி வச்சுப்போட்லாமுங்” கைகள் பனை ஓலையைப் பின்னிக் கொண்டிருக்க வாய் கேலி பேசியது ஒரு பெண்ணுக்கு.

“அது சரி. நீ இங்க பஸ்ஸை நிறுத்திப் போடுவ. ஈரோட்ல லாரியை நிறுத்துறது யாரு?” திண்ணையில் ஒரு ஓரமாக துண்டைப் போட்டு அதன் மீது உட்கார்ந்துகொண்டார்.

வேலை செய்து கொண்டிருந்த பெண்களுடன் வாயடித்துக் கொண்டே அவர்களுக்குக் களைப்புத் தெரியாமல் பார்த்துக் கொண்டார். சரியாக ஆறு முப்பதுக்கு எல்லா பொம்மைகளையும் பெட்டியில் போட்டு டேப் ஒட்டி மந்தைக்குக் கொண்டு வந்து அடுக்கி வைத்து விட்டார்கள். நமச்சிவாயம் வேட்டியை விலக்கு டவுசர் பைக்குள் கை விட்டு பணத்தை எடுத்து ஆறு தடவை எண்ணிவிட்டு அம்பிகாவிடம் நீட்டினார்.

“அடுத்த வாரம் இதே நாள் வந்துருவனுங். அடுத்த வாரத்துல இருந்து அம்பது உருப்படி கூடுதலா செய்யச் சொல்லியிருக்காங் கம்பெனியில. அஞ்சு ரூவா கூடக் குடுக்குறதா சொல்லியிருக்காங். சரிங்ளா?”

ஒரு விநாடி யோசித்துவிட்டு, “சரிங். புள்ளைங்ககிட்ட சொல்லிர்றனுங்” பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு ஜாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.

டீக்கடையில் ஒரு டீயும் இரண்டு இட்லி சாம்பாரும் சாப்பிட்டு விட்டு ஏழு மணி பஸ்ஸின் கூரையில் பெட்டிகளை ஏற்றிவிட்டு கடைசி சீட்டில் உட்கார்ந்து பெருமூச்சு ஒன்றை வெளிப்படுத்தினார்.

**************************************
பஸ் ஈரோடு பஸ் ஸ்டேண்டுக்குள் நுழைந்தது. படியில் நின்று கொண்டே ராசுவைத் தேடியது நமச்சிவாயத்தின் கண்கள். ஓரமாக நின்று பீடி வலித்துக் கொண்டிருந்தவன் இவர் தலையைப் பார்த்ததும் பீடியைப் போட்டுவிட்டு ஓடி வந்தான். பஸ் ஓரம் கட்டி நின்றதும் விறுவிறுவென்று மேலே ஏறி பெட்டிகளைத் தூக்கி வந்து கீழே அடுக்கினான்.

“நாம்போய், என்ற மூணுசக்கர வண்டிய எடுத்துட்டு வந்துர்றனுங்ணா”

“ராசு, காலையில் உங்கிட்ட ஒரு பையக் குடுத்தனே? பத்தரமா வெச்சிருக்கிறயா??”

“ஆமாங்ணா. எங்கிட்ட பத்தரமாத்தானுங் இருக்குது!”

“அத மொதல்ல எடுத்தாந்துரு. அப்புறமாட்டு போய் உன்ற வண்டியக் கொண்டு வரலாம்.”

“சரிங்” ஓடிப் போய் பஸ் ஸ்டாண்ட் மூலையில் இருந்த டீக்கடையில் கொடுத்து வைத்திருந்த பையை வாங்கிக் கொண்டுவந்து நமச்சிவாயத்தின் கையில் கொடுத்தான். ஆலுக்காஸ் ஜுவல்லர்ஸ் என்று எழுதியிருந்த அந்தப் பையின் ஜிப்பைத் திறந்து எல்லாம் சரியாய் இருப்பதைப் பார்த்து ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

“என்னாதா என்ற உடம்பு கணக்கம்பாளையத்துல இருந்தாலும் மனசெல்லாம் இந்தப் பையிலதா இருந்துச்சி. கைல வாங்கிப் பாத்தபிற்பாடுதேன் உசுரே வந்திருக்கு. சரி சரி ஓடிப் போய் உன்ற வண்டிய எடுத்தாந்துரு போ”

ட்ரை சைக்கிளில் பெட்டிகளை அடுக்கி, பக்கத்திலேயே அவரும் காலைத் தொங்கப் போட்டு உட்கார்ந்து கொண்டார். ராசு சட்டையக் கழட்டிவிட்டு பனியனோடு சைக்கிளை மிதித்தான். சி.என்.காலேஜ் பக்கத்திலிருக்கும் லாரி ஆஃபிஸில் கொண்டு சேர்க்கும்போது மணி 9:00ஆகியிருந்தது. டவுசர் பைக்குள் கையை விட்டு பணத்தை எடுத்து ராசுவுக்குக் கொடுத்து அனுப்பினார். லாரி ஆஃபிஸில் ஃபில்லப் செய்ய வேண்டிய பேப்பரை ஃபில்லப் செய்து ரசீதை வாங்கிக் கொண்டு செல்ஃபோனில் கம்பெனி ஆளை அழைத்து ரசீது நம்பரைக் கொடுத்தார். பக்கத்து ஜெராக்ஸ் கடையில் ரசீதை மூன்று காப்பி எடுத்துக் கொண்டு சென்னை ஆஃபிஸ்க்கு ஒரு காப்பியை அதே ஜெராக்ஸ் கடையில் இருந்த புரஃபெஷனல் கொரியர்ஸில் கொரியர் செய்தார்.

பையைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு நடந்தே சத்தி ரோட்டில் இருந்த ரோட்டுக் கடையில் நான்கு தோசை ரெண்டு ஆஃப் பாயில் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் ஒன்றை வெளிப்படுத்திவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

வழக்கமாகப் போகும் பாதையில் இருந்த பொட்டல் வெளி இன்று இருட்டாக இருந்தது. எப்போது ஒரே ஒரு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்கும் அந்தப் பொட்டல் இருட்டாக இருக்கவும் ஒரு விநாடி தயங்கினார். டார்ச் இருந்த செல்ஃபோனை மகளிடம் கொடுத்துவிட்டு இந்த செல்ஃபோனை மாற்றியதற்கு நொந்து கொண்டார். செல்ஃபோனை ஆன் செய்து அந்த வெளிச்சத்தில் குத்து மதிப்பாக பாதையை கணித்துக் கொண்டு நடந்தார். பின்னால் ஏதோ சத்தம் கேட்க திரும்பி செல்ஃபோனை நீட்டிப் பார்த்தார். எதுவும் தெரியவில்லை. மனதில் லேசாக பயம் வந்தது. தூரத்தில் வீடுகளில் வெளிச்சம் தெரிவதைப் பார்த்துக் கொண்டே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடையைத் தொடர்ந்தார்.

அவர் செல்ஃபோன் “கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை, கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை?” என்று ஒலிக்கத் தொடங்கியது. சட்டைப் பையில் இருந்து எடுத்து காதைக் கொடுத்து “அலோ” என்றார். அடுத்த விநாடி அவரது கழுத்தில் அந்த அரிவாள் இறங்கியது.

4 comments:

தலைப்பு இன்னும் வைக்கலை said...

[...] (தொடரும்) [...]

vaanambadigal said...

செம ஸ்பீடு. மொத்தம் எத்தனை கொலை..ஐ மீன் பார்ட்டு:))

pazhamaipesi (@pazhamaipesi) said...

:-)

திவாண்ணா said...

லட்லம் கணக்கா கொலைஉ செய்துகிட்டு இருக்காரு! :-)))