Sunday, April 28, 2013

ப்ளூ மர்டர் எக்ஸ்ப்ரஸ் - 4


jigsaw_puzzle

அருண் டென்னிஸ் முடித்து ஸ்விம்மிங் பூலில் பத்து ரவுண்ட் அடித்து ஷவரில் ஒரு குளியல் போட்டுவிட்டு தலையைத் துவட்டிக் கொண்டே வெளியே வந்தான். அருணின் லாக்கர் அருகே இரண்டு இளைஞர்கள் நின்றிருந்தார்கள். ஒருவனை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. க்ளப் ஜிம்மில் வேலை செய்யும் இளைஞன். பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. இன்னொரு இளைஞன் புதியவனாய் இருந்தான். எக்ஸர்ஸைஸ் செய்யவோ குளிக்கவோ வந்தவன் போலத் தெரியவில்லை. ஜீன்ஸ் பேண்டும் டி-ஷர்ட்டும் அணிந்து இன் செய்திருந்தான். அருணின் தலை தெரிந்ததும் இருவரின் உடலிலும் ஒரு விறைப்பு. அவனுக்காகத்தான் காத்திருக்கிறார்கள் போல.

அருண் கேள்வியாகப் பார்த்தான். ஜிம் அஸிஸ்டன்ட் உதடுகளைப் பிரித்தான். “சார் வணக்கம் சார்”

அவன் பெயர் நினைவுக்கு வந்துவிட்டது. “என்ன விஸ்வா? எனக்காகவா வெயிட் பண்றீங்க? என்ன விசயம்?”

“சார் இவன் என்னோட ஃப்ரண்ட். பேர் மகேஷ். ஒரு கேஸ் விசயமா உங்கக்கிட்ட”

“நான் இப்போ டிப்பார்மெண்ட்ல இல்லைன்னு உனக்குத் தெரியும் தானே? என்னால என்ன உதவி செய்ய முடியும்னு தெரியலையே” மகேஷின் கண்கள் லேசாகக் கலங்கத் துவங்கியது தெரிந்தது.

“சார். இவங்கப்பா ரயில்வேஸ்ல டிடிஆரா இருந்தாரு சார். ரெண்டு நாள் முன்னாடி கோயமுத்தூர் ட்ரெயின்ல டியூட்டிக்குப் போகும்போது இறந்துட்டாரு சார். போலீஸ் அது ஹார்ட் அட்டாக்னு கேஸை மூடிட்டாங்க சார். ஆனா இவன் சந்தேகப் படுறான். அதான்”

அருண் மகேஷைப் பார்த்தான். இரண்டு நாள் தாடி முகத்தில். தலை கலைந்திருந்தது. கண்கள் அழுததாலோ என்னவோ சிறியதாகியிருந்தன. கண்ணாடி போடுவான் போல மூக்கின் மீது தழும்பு ஒன்றை உருவாக்கியிருந்தது.

“உங்களுக்கு என்ன சந்தேகம் மகேஷ்?”

“சார் நான் பயோடெக்னாலஜி படிச்சிருக்கேன். கொஞ்சம் மெடிக்கல் தெரியும். சில பாய்ஸன்ஸ்ல கூட ஹார்ட் அட்டாக் சிம்ப்டம்ஸ் இருக்கும் சார். எங்கப்பா நல்ல ஹெல்த்தி ஆள் சார். அவருக்கு ஹார்ட் அட்டாக் வர சான்ஸே இல்லை”

சத்தமில்லாம பேசிக் கொண்டிருந்தாலும் மூவரும் அங்கே நின்று பேசிக் கொண்டிருப்பதை மற்ற கிளப் உறுப்பினர்கள் குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த அருண், “சரி வாங்க போய்ட்டே பேசலாம்”

“எப்பிடி வந்தீங்க மகேஷ்?”

“ஆட்டோல தான் சார்”

“ஓக்கே. என் கார்ல போயிட்டே பேசலாம் அப்போ”

காரில் போகும்போது “அப்பா உடம்பு இன்னமும் ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கு?”

“ஆமா சார். ரயில்வே ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கு. இன்னைக்குக் காலைல 10 மணிக்கு எடுத்துட்டுப் போக வரச் சொல்லியிருக்காங்க. போஸ்ட் மார்ட்டம் பண்ணவே இல்லை சார். அப்பாவோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து எதுக்கு உடம்பை அறுக்கணும்னு தடுத்துட்டாங்க. நீங்க தான் உங்க இன்ஃப்ளுயன்ஸ் யூஸ் பண்ணி போஸ்ட் மார்ட்டம் பண்ணச் சொல்லணும் சார்”

“வெயிட் வெயிட். நீங்க இன்னும் என்ன காரணத்துக்காக உங்க அப்பா சாவு கொலையா இருக்கலாம்னு சந்தேகப்படுறேன்னு சொல்லலையே?”

“அப்பாவுக்கு கேம்ப்ளிங் ப்ராப்ளம் உண்டு சார். சீட்டு, ரேஸ், கிரிக்கெட் பெட்டிங் கூட செஞ்சிருக்காரு. ட்ரெயின்ல போகும்போது பேஸஞ்சர்ஸ் கூடக்கூட சீட்டாடுவாரு. சண்டே ஆச்சின்னா ரேஸ்க்குப் போயிருவாரு. அக்கா லவ் மேரேஜ் பண்ணிண்டு போயிட்டா. அவ கல்யாணத்துக்கு அம்மா சேத்து வச்ச பணத்தை எடுத்து அவட்ட குடுத்துட்டு வந்துர்றேன்னு போனவரு அவ்வளவு காசையும் ரேஸ்ல விட்டுட்டு வந்துட்டாரு. அம்மாவுக்குக் கூட இது தெரியாது. ஒரு நாள் தண்ணியடிச்சிட்டு என்னைக் கூப்புட்டு அழுதுண்டே சொன்னாரு. நிறைய கடன் வேற வாங்கி வச்சிருக்காரு. பி.எஃப் காசு எல்லாம் லோன் போட்டு எடுத்துட்டாரு. இதெல்லாம் இருக்க போன மாசம் திடீர்னு வந்து வாலண்டரி ரிட்டயர்மெண்ட் குடுக்கப் போறேன்னு சொன்னாரு. எனக்கு ஷாக். ஏன்ப்பான்னு கேட்டா நீ வேலைக்குப் போகப் போற இனிமே அம்மாவுக்குத் துணையா நான் இருக்கப் போறேன்னு சொன்னாரு. கடன்லாம் என்ன பண்ணப் போறேனு கேட்டதுக்கு ஒரு திட்டம் இருக்குடா. நான் நினைச்சபடி நடந்துட்டா நாம் கோடிஸ்வரங்களாயிடலாம்னு சொன்னாரு. எனக்கென்னவோ தப்பாப் போறாரோன்னு பட்டது. கொஞ்ச நாளா அவரோட ப்ரீஃப் கேஸை ரொம்ப ப்ரொடெக்ட் பண்ணிண்டிருந்தாரு. அன்னைக்கு ட்யூட்டிக்குப் போறதுக்கு முன்னாடி அவரு குளிக்கும்போது திறந்து பார்த்தேன். ஏதோ ஃபைனான்ஸியல் டாகுமெண்ட்ஸ். அவர் ப்ரீஃப்கேஸ் முழுக்க இருந்தது. அவரை ஸ்டேஷன்ல விடப் போகும்போது கேக்கலாம்னு இருந்தேன். ஆனா அவரு ஆட்டோல ஏறிப் போயிட்டாரு. திரும்பி வந்த பின்னால கேக்கலாம்னு நினைச்சா..” விசும்பினான்.

“ஸோ?”

“இப்ப அவரோட ப்ரீஃப்கேஸ்ல அந்த டாகுமெண்ட்ஸ் இல்லை. அதான்..”

“ஓக்கே. அந்த டாகுமெண்ட்ஸ்காக யாரும் அவரைக் கொலை செஞ்சிருக்கலாம்னு சந்தேகப் படுறீங்க. இல்லையா?”

“ஆமா சார். நீங்கதான் ஹெல்ப் பண்ணனும். ஒரு வேளை இது கொலையா இருந்தா அந்தக் கொலைகாரனைக் கண்டுபிடிக்கவும் நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்”

“ஓக்கே மகேஷ். என்னால முடிஞ்சதை செய்யறேன். கமிஷனர் என்னோட ஃப்ரண்ட் தான். அவர்கிட்ட சொல்லி உங்கப்பா பாடியை போஸ்ட் மார்ட்டம் செய்ய ஏற்பாடு பண்றேன். பட் நீங்க ஒரு அஃபிஷியல் கம்ப்ளெயிண்ட் குடுக்கணும். அப்போதான் போஸ்ட் மார்ட்டம் பண்ண முடியும்?”

“குடுக்குறேன் சார்”

அருண் செல்ஃபோனில் மணி பார்த்தான். 8:30. “உங்களுக்கு வேற வேலை இப்போ இல்லைன்னா இப்பவே கமிஷனர் ஆஃபிஸ் போய் கம்ப்ளெயிண்ட் குடுத்துட்டு வந்துடலாமா?”

“ஓக்கே சார்”

காரை எக்மோர் நோக்கித் திருப்பினான். செல்ஃபோனில் நம்பரைத் தேடி அழைத்தான்.

“அருண் சொல்றா. நானே கூப்புடணும்னு இருந்தேன்”

“கார்த்தி. ஒரு டி.டி.ஆர் கோயமுத்தூர் ட்ரெயின்ல ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாருன்னு ரயில்வே ஹாஸ்பிட்டல்ல பாடிய வச்சிருக்காங்க. ஹார்ட் அட்டாக்ங்கிறதால போஸ்ட் மார்ட்டம் பண்ணலை போல. பட் அவர் பையன் இது கொலையா இருக்கலாம்னு சந்தேகப் படுறாரு. அதான் கம்ப்ளெயிண்ட் வாங்கிட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு ஏற்பாடு பண்ணனும்”

“செஞ்சிடலாம்டா. நம்ம ஆஃபிஸ்ல ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதிக் குடுக்கச் சொல்லிடு. அப்புறம் வேளச்சேரியில ஒரு அப்பார்ட்மெண்ட்ல ஒரு கொலைக்கேஸ். அதுல உன் எக்ஸ்பெர்ட் அட்வைஸ் வேணும். கொஞ்சம் ஆஃபிஸ் வரைக்கும் வர முடியுமா?”

“ஆக்சுவலி அங்க தான் வந்துட்டே இருக்கேன்”

“க்ரேட். சீக்கிரம் வா. மீட் பண்ணலாம்”

**********************************************************

கமிஷனர் அலுவலகத்தில் நுழைந்து காரை பார்க் செய்துவிட்டு, மகேஷை ரைட்டரிடம் ஒப்படைத்துவிட்டு கமிஷனர் அறைக்குள் நுழைந்தான்.

“வாடா. சாப்ட்டியா?”

“இன்னும் இல்லைடா. க்ளப் போயிருந்தேன். அங்க இந்தப் பையன் பார்த்து விஷயத்தைச் சொல்லி ஹெல்ப் கேட்டான். சரின்னு நேரா இங்கயே கூட்டிட்டு வந்துட்டேன். வீட்டுக்குப் போய் தான் சாப்பிடணும்.”

“சரிடா நீ அப்போ வீட்டுக்குப் போய் சாப்டுட்டு வெயிட் பண்ணு. நான் இன்ஸ்பெக்டர் சிவாவை அனுப்பி வைக்கிறேன். உன்னை வீட்ல பிக்கப் செஞ்சிட்டு கிரைம் சீனுக்குக் கூட்டிட்டுப் போவாரு”

“ஓக்கேய்” கிளம்பி வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுக் காத்திருந்தான். சிவா வந்து அழைத்துக் கொண்டு போனார்.

*********************************************************

அது சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு அப்பார்ட்மெண்ட். உள்ளே போக வெளியே வர என இரண்டு வழிகள். இரண்டு வழிகளுக்கும் நடுவில் ஒரு ஸ்டூலில் வாட்ச்மேன் ஒருவர் உட்கார்ந்திருந்தார். போலிஸ் ஜீப்பைப் பார்த்ததும் எழுந்து விஷ் செய்தார். உள்ளே பார்க்கிங் ஏரியாவில் ஃபாரன்ஸிக் வேனும், இன்னுமொரு போலிஸ் ஜீப்பும் ஆம்புலன்ஸும் நின்றிருந்தன. சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் சிவாவைப் பார்தததும் சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டு சல்யூட் ஒன்றைப் போட்டார். படியேறி அந்த வீட்டுக்குள் வந்தனர். கழுத்து அறுபட்டு ரத்தம் வெளியேறி கை விரல் ரத்தத்தால் “S A R A V" என எதையே எழுதத் தொடங்கி முடிக்காமலே செத்துப் போயிருந்தான்.

1 comment:

vasudevan said...

உம்... அடுத்த கட்டத்துக்கு போயிடுச்சு.....