Friday, April 19, 2013

ப்ளூ மர்டர் எக்ஸ்ப்ரஸ் - 3


jigsaw_puzzle

அடையார் க்ளோபஸ் வாசலில் நகம் கடித்தபடி நின்றிருந்தாள் மீனா. பின்க்கும் வெள்ளையும் கலந்த சுடிதார் போட்டு துப்பட்டாவை குறுக்காகக் கட்டியிருந்தாள். தோளில் ஒரு சிவப்பு நிறை கைப்பை தொங்கிக் கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த கர்சீஃபால் நெற்றி வேர்வையைத் துடைத்துக் கொண்டாள். வலது கையில் கட்டியிருந்த கடிகாரத்தில் அடிக்கொரு முறை மணி பார்த்துக் கொண்டாள். யாருக்கோ காத்திருக்கிறாள் என்பதை யாரும் புரிந்து கொள்வார்கள்.

தூரத்தில் கோயமுத்தூர் ரெஜிஸ்ட்ரேஷன் கறுப்பு பல்சரில் சிவாவின் தலை தெரிந்ததும் அவள் முகம் மலர்ந்தது. உதட்டோரத்தில் ஒரு புன்னகை பூத்தது. வந்து அவள் அருகில் கொண்டு வந்து நிறுத்தினான். உடலைப் பிடிக்கும் இளமஞ்சள் டீஷர்ட்டும் கருநீல ஜீன்ஸும் அணிந்திருந்தான். காலில் ரீபாக் ஷூ. கண்களில் கூலிங் கிளாஸ்.

பைக்கில் ஏறி இரண்டு பக்கமும் காலைப் போட்டு உட்கார்ந்தாள். கியரை மாற்றி ரோட்டில் சீறினான்.

“ஏய் உன்னை ஹெல்மெட் போடாம பை ஓட்டிட்டு வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல?” அடுத்த சிக்னலில் யு-டர்ன் எடுக்க நிற்கும்போது கேட்டாள்.

“ஹெல்மெட் போட்டா சைட் அடிக்க முடியாதுல?”

“ஏன், கண்ணு தெரியாதா?”

“அய்யே, நான் அடிக்கிறதைச் சொல்லலை. ரோட்டுல போற பொண்ணுங்களால என்னை சைட் அடிக்க முடியாதுல்ல, அதான்”

“பரதேசி அலையுது பாரு” முஷ்டியை மடக்கி முதுகில் குத்தினாள்.

பைக் எக்ஸ்பிரஸ் அவென்யூவுக்குள் நுழைந்தது. பார்க் செய்துவிட்டு லிஃப்ட் பிடித்து ஃபுட் கோர்ட் போனார்கள்.

“இருடா, என்கிட்ட கார்ட் இருக்கு. இதை லோட் பண்ணிக்கோ. புது கார்ட் வாங்க வேண்டாம். அதுக்கு ட்வெண்டி ருப்பீஸ் சார்ஜ் பண்ணுவான்”

“கேபிள் சங்கர்னு ஒரு ப்ளாக்கர் இருக்காருப்பா. கேட்டால் கிடைக்கும்னு ஒரு மூவ்மெண்ட் நடத்திட்டு இருக்காரு. இந்த மாதிரி அநியாயக் கொள்ளை அடிக்கிற இடத்துல எல்லாம் ஆர்க்யூ பண்ணி எக்ஸ்ட்ரா காசு கேக்காம, மிச்சம் இருக்கிற காசையும் திருப்பி வாங்கிட்டு வந்துடுறாங்க அவங்க குரூப்ல தெரியுமா?”

“அடப் போடா, மிஞ்சிப் போனா அஞ்சு ரூபா மிச்சமிருக்கும். அதைப் போய்க் கேட்டுட்டு நிக்கலாமா? அதான் கார்ட் பத்திரமா வச்சிருக்கேனே. நெக்ஸ்ட் டைம் வரும்போது வாங்கிட்டுப் போறேன்”

“நீ வாங்கிட்டுப் போவ, வெளியூர்ல இருந்து வந்தவன் இதுக்காக இன்னொரு தடவை சென்னை வரமுடியுமா? அவங்கள்லாம் வேஸ்ட் தானே செய்வாங்க”

“அட ஆமா. சரி எங்க நீ போய் நமக்கு ஏதாச்சும் வாங்கிட்டு மீதிக் காசை கேட்டு வாங்கிட்டு வா பார்ப்போம்?”

“ஹி ஹி.அதெல்லாம் படிக்க மட்டும் தான் செய்வோம். கேக்கல்லாம் நம்மால முடியாது. சரி உனக்கு என்ன வேணும்?”

“நளாஸ்ல ஆப்பம் சிக்கன் கறி”

பணத்தைக் கொடுத்து கார்டில் லோட் செய்து கொண்டு ஆப்பமும் சிக்கன் கறியும் வாங்கிக் கொண்டு உட்கார்ந்தான்.

“சரி காலைல ஃபோன்ல என்னவோ சொன்னியே? நிஜமாத்தான் சொன்னியா? இல்ல வழக்கம்போல விளையாடினியா?”

“இல்லடி நிஜமாத்தான். இன்னும் ஒன் ஆர் டூ மன்த்ஸ்ல காலேஜ் விட்டு நின்னுடப் போறேன்”

“டேய் செகண்ட் இயர்தாண்டா படிக்கிறோம். உங்கப்பா ஆர்.டி.ஓவா இருக்கலாம். ஆனா படிக்காம வீட்டுல கிடந்தா அடிச்சித் தொரத்திருவாரு”

“எங்கப்பா கையை எதிர்பார்த்துட்டு இருக்க வேண்டியதே இல்லை”

“என்னடா சொல்ற ஒண்ணும் புரியல”

பாக்கெட்டுக்குள் கையை விட்டு பைக் சாவியை எடுத்தான். அதில் கோர்த்திருந்த ஒரு சிறிய சாவியை எடுத்துக் காட்டினான். குரலை தணித்துக் கொண்டு, “இந்த சாவியைப் பாரு. இதோட மதிப்பு கிட்டத்தட்ட ஒரு கோடி. இன்னும் ஒன் ஆர் டூ மன்த்ஸ்ல அந்தப் பணம் என் கைக்கு வந்துடும். அப்புறம் என்ன மஜா தான்”

“டேய் எதுவும் தப்புக் காரியம் பண்றியா? பயமா இருக்குடா?”

“பயப்படாத மீனா. நான் செய்யறது எல்லாம் நல்ல காரியம் தான். இப்போதைக்கு என்னால வெளிய சொல்ல முடியாது. கைல காசு வரட்டும் அப்புறமா சொல்றேன். ஓக்கே”

அவள் முகத்தில் கலவரம் குறையவில்லை. மருண்ட விழிகளால் அவனையே பார்த்தவாறு இருந்தாள்.

அவள் மூடை மாற்றுவதற்காகக் கேட்டான், “படத்துக்குப் போலாமா?”

“என்ன படத்துக்கு?”

“கேபிகேஆர்?”

“போன வாரம் தானடா பார்த்தோம். திரும்பவும் பாக்க அந்தப் படத்துல என்ன இருக்கு?”

“அந்தப் படத்துக்கு தாண்டி கூட்டமே இருக்காது”

“ச்சீ போடா. நீ ரொம்ப மோசம்”

“ஆமா வெளிச்சத்துல எல்லாப் பொண்ணுங்களும் அப்பாவி மாதிரிதான் பேசுறீங்க. இருட்டுக்குப் போயிட்டா அப்பாவிகள் எல்லாம் அடப்பாவிகளாயிடுறீங்க”

“நல்லா பேசுடா? சரி போய் டிக்கெட் எடுத்துட்டு வா. நான் வீட்டுக்கு ஃபோன் பண்ணி லேட்டாகும்னு சொல்லிடுறேன்”

**********************************

படம் முடிந்து அவள் வீட்டுத் தெருமுனையில் இறக்கி விட்டு அவள் வீட்டுப் படியேறும் வரை பார்த்திருந்து விட்டு வேளச்சேரியை நோக்கி விரட்டினான். விஜயநகரத்தைத் தாண்டி தாம்பரம் போகும் சாலையில் திரும்பி மடிப்பாக்கம் விலக்கத்துக்கு சற்று முன்னால் இருக்கும் அப்பார்மெண்டில் பைக்கைப் பார்க் செய்துவிட்டு வாட்ச்மேனைப் பார்த்து ஒரு சிரிப்பை சிந்திவிட்டுப் படியேறினான். கதவில் சாவியைப் போட்டுத் திறந்து உள்ளே நுழைந்து லைட்டைப் போட்டான். ஷெல்ஃப்கள் எல்லாம் திறந்து கிடந்தன. வீட்டை அதிகமாகக் கலைக்காமல் யாரோ எதையோ தேடியிருப்பது புரிந்தது. மெதுவாக அடி எடுத்து பெட்ரூமுக்குள் நுழைந்து பார்த்தான். அங்கேயும் ஷெல்ஃப்கள் திறந்து கிடந்தன. அதை காலேஜ் லாக்கரில் வைத்துப் பூட்டியது நல்லதாகப் போய் விட்டது. ஆனால் அது என்னிடம் இருப்பது வேறு யாருக்கும் தெரியாதே?? ஒரு வேளை வேறு யாராவது பெட்டித் திருடனாக இருக்குமோ? ஆனால் அப்படி வந்தவன் ஏன் கலைத்துப் போடாமல் தேடியிருக்க வேண்டும்? ஒன்றும் புரியாமல் வலது கையால் தலையைக் கலைத்துக் கொண்டான். திறந்திருந்த ஷெல்ஃப் எல்லாம் மூடி விட்டு ஜீன்ஸையும் டி ஷர்ட்டையும் கழற்றி மூலையில் வீசினான்.

ஜட்டியோடு நடந்து போய் பால்கனியில் துவைத்துப் போட்டிருந்த ஷார்ட்ஸை எடுத்துப் போட்டுக்கொண்டு ஹாலுக்கு வந்து டிவியைப் போட்டான். போட்டதும் கரெண்ட் போனது. ச்சே என்று நொந்து கொண்டு மீண்டும் பால்கனியை நோக்கி நடையைப் போட்டான்.

உச்சந்தலையின் முடியை வலிக்குமாறு யாரோ பிடித்து பின்னால் இழுத்தார்கள். “ஆ” என்ற சத்தத்தை அனிச்சையாக எழுப்பிய அவன் தொண்டை மீது உலோகத்தில் சில்லிப்பு.

“கத்துன, கழுத்த அறுத்துட்டுப் போயிட்டே இருப்பேன்”

“யாரு நீ? உனக்கென்ன வேணும்? வீட்டுல என் கிட்ட பணமே இல்லை. என் லேப்டாப் செயின் மோதரம் வேணும்னா வாங்கிட்டுப் போ. என்னைய விட்டுடு”

கத்தி கழுத்தில் அழுத்தத்தை அதிகரிக்கவே லேசான வெட்டு விழுந்து ரத்தம் கோடாக வழிய ஆரம்பித்தது.

“எங்க வச்சிருக்க?”

“எதை?”

அழுத்தம் அதிகமானது. “தெரியாத மாதிரி கேக்காதடா. சொல்லு எங்க வச்சிருக்க?”

எச்சில் விழுங்கினான். உயிரா கோடியா? இரண்டு விநாடி யோசித்துவிட்டு “காலேஜ் லாக்கர்ல இருக்கு. சாவி என் பைக் சாவியோட இருக்கு”

முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டே வந்து வாசல் கதவருகே இருந்த மெயின் சுவிட்ச் போர்டைத் திறந்து மெயினை ஆன் செய்தான். வீடு வெளிச்சமானது.

கழுத்தைத் திருப்பி பின்னால் நிற்பது யார் என்று பார்க்க முயன்றான் சிவா. கழுத்தை அசைக்கவும் வெட்டு ஆழமானது “அம்மா” என்ற கத்தலை வெளிப்படுத்திக் கொண்டு அசையாமல் நின்றான்.

சிவாவின் தலைக்குப் பின்னால் முகத்தை வைத்து மறைத்துக் கொண்டிருந்த அவன் ஹால் மேஜை மீதிருந்த பைக் சாவியை எடுத்து அதில் கோர்த்திருந்த சின்ன சாவியைப் பிரித்து சிவாவின் முகத்தின் முன் நீட்டினான்.

“இதுவா?”

“ஆ..ஆமா”

“லாக்கருக்கு நம்பர் இருக்கா?”

“என்னோட சீரியல் நம்பர்தான்”

“அதுதான் என்ன?”

“1437”

முடியைப் பிடித்திருந்த கையை கொஞ்சம் தளர்த்தினான். தூக்கியே இருந்த தலை கொஞ்சம் தாழ்ந்ததும் சுவற்றில் மாட்டியிருந்த கண்ணாடியில் சிவாவின் முகமும் அவன் முகமும் தெரிந்தது. கழுத்தில் கத்தியை வைத்திருப்பவன் யாரென்று தெரிந்ததும் சிவாவின் முகம் அதிர்ச்சியை வாங்கியது.

“நீயா?” என்று வாய்விட்டுக் கேட்டதும் உணர்வுக்கு வந்த அவன் தன் பிடியை இன்னும் இறுக்கி தலையைப் பின்னால் இழுத்து கத்தியை கழுத்தில் ஆழமாக இறக்கினான்.

“ஹக்” என்ற ஓசையை மட்டுமே வெளிப்படுத்திவிட்டு சிவாவின் உடல் தொய்வாய் தரையில் விழுந்தது. லாக்கர் சாவியை மட்டும் எடுத்துக் கொண்டு பைக் சாவிக் கொத்தை மீண்டும் டேபிளின் மீது வைத்து விட்டு கீழே துடித்துக் கொண்டிருந்த சிவாவின் உடலைப் பார்த்து ஒரு கேவலமான பார்வையை வீசிவிட்டு அவன் வெளியேறினான்.

3 comments:

Vasudevan balaji said...

Interesting

திவாண்ணா said...

ludlam thotarukiRAr.....

திவாண்ணா said...

உங்கப்பா ஆர்.டி.ஓவா இருக்கலாம். //
what do you mean here? RTO? RDO? A Medical officer will be RMO...