Showing posts with label எதிர்வினை. Show all posts
Showing posts with label எதிர்வினை. Show all posts

Friday, July 9, 2010

புறக்கணிப்பு - பகுதி 2

நேற்றைய இடுகைக்கு வந்த பின்னூட்டங்களுக்கான பதிலாக இந்தப் பதிவு.

பெரும்பாலான நபர்களின் கருத்து என்னவென்றால், இலங்கையில் முள்வேலிக்குப் பின்னே வாடும் தமிழருக்கு இப்போதைய தேவை தனி நாடோ, சுயாட்சியோ, சம உரிமையோ இல்லை. உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க இருப்பிடம் ஆகியவைதான். ஏற்கனவே போரில் நலிந்து போயிருக்கும் பொருளாதாரத்தை இலங்கையை பொருளாதார ரீதியில் தனிமைப் படுத்துகிறோம் என்று இன்னும் கஷ்டப்படுத்தி இப்போது கிடைக்கும் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் செய்துவிடாதீர்கள். வெளியே இருந்து கிறுக்குத் தனமான போராட்டங்களை நடத்துவதை விட உள்ளே வந்து உதவிகள் செய்யுங்கள். அல்லது செய்ய முன்வரும் விவேக் ஓபராய் போன்ற நடிகர்களையாவது போராட்டம் என்ற பெயரில் கஷ்டப்படுத்தாதீர்கள்.

மேலோட்டமாக இந்தக் கருத்தைப் பார்த்தோமென்றால், அட ஆமாம். இவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறதே. கஷ்டப்படுபவர்களுக்கு இப்போதைய தேவையைப் பூர்த்தி செய்து விட்டு அதன்பிறகு நிரந்தரத் தீர்வுக்கு வழி செய்யலாமே என்று தோன்றும். ஆனால் உணமை நிலை என்ன?

முள்வேலியில் வாழும் எங்கள் சகோதரர்களுக்கு உணவும் உடையும் கொடுக்க நாங்கள் தயாராயில்லையா? போர் நடந்து கொண்டிருந்த காலத்திலேயே உணவும் மருந்தும் ஒரு கப்பல் நிறைய அனுப்பி வைத்தோமே? என்ன செய்தார்கள் சிங்களப் பேரினவாத அரசும் ராஜபக்‌ஷே சகோதரர்களும்? அந்தக் கப்பலை அங்கேயும் இங்கேயும் அலைக்கழித்து கடைசியில் திருப்பி அனுப்பிவிட்டார்களே.

இப்போதும் அங்கே நலப்பணிகளைச் செய்ய அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பல முன்வருகின்றனவே? ஆனால் இலங்கை அரசு என்ன செய்கிறது? பணம் கொடுங்கள். நாங்களே அவர்களுக்கு எல்லாம் செய்வோம் என்று சொல்கிறது. நாங்கள் பணம் கொடுத்தால் அது எம்மக்களுக்கு உதவியாகவா போகும்? ஆயுதங்களாகவும் ராஜபக்சே குடும்பச் சொத்துக்களாகவும் மாறிவிடாதா?

வரிசைகட்டி நிற்கும் தொண்டு நிறுவனங்களை உள்ளே விடாமல் விவேக் ஓபராயை பாடசாலை கட்டித்தரச் சொல்லும் செயலின் பின்னால் என்ன அரசியல் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? நடிகனை அழைத்து வந்து நான்கு பேருடன் பேசச் செய்து சிங்கள அரசு தமிழர்களை மிகவும் நன்றாக நடத்துகிறது என்று உலகுக்குப் பொய் பிரச்சாரம் செய்யத்தானே முயல்கிறது? அசினையும் சல்மான் கானையும் படப்பிடிப்பு நடத்த விட்டு இலங்கையில் மனித உரிமை மீறலே இல்லை என்று சொல்லி விளம்பரம் செய்துகொள்ளத்தானே ஆசைப்படுகிறது.

ஐ.எஃப்.எஃப்.ஏ விழாவை சிறப்பாக நடத்தி ஏற்கனவே சினிமா மோகம் பிடித்து அலையும் தமிழனை ஈழத்தைப் பற்றி யோசிக்க விடாமல் செய்யத்தானே முயற்சி எடுக்கிறது. இந்தியக் கிரிக்கெட் அணியுடன் அடுத்தடுத்து போட்டிகள் நடத்துவதன் மூலம் கிரிக்கெட் போதையில் வெறியேற்றி இலங்கைத் தமிழனையும் இந்தியத் தமிழனையும் மனித உரிமை மீறலை மறக்கடிச்செய்ய சிங்கள அரசு செய்யும் சூழ்ச்சி என்று தெரியவில்லையா?

உலகம் முள்வேலிக்குப் பின்னால் கஷ்டப்படும் தமிழ்ச் சகோதரர்களுக்கு செய்ய நினைக்கும் உதவி அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டுமென்றால் இப்போதைக்கு இலங்கையை ஆளும் சிங்களப் பேரினவாத அரசை தலையில் குட்டி அமைதியாக ஒரு ஓரத்தில் இருக்க வைக்க வேண்டுமல்லவா? இல்லையென்றால் நாங்கள் கஷ்டப்பட்டு அனுப்பி வைக்கும் பணமெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிடாதா?

இப்போது இலங்கை வாழ் தமிழ்ச் சகோதரர்களை ஒன்று கேட்கிறேன். ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனத்தை உருவாக்கி, நிதி திரட்டி, வன்னிக்கு வந்து அங்கே வாடும் என் இன மக்களுக்கு வாழ வீடுகளும், படிக்க பாடசாலைகளும் கட்டித் தர நான் தயாராய் இருக்கிறேன். என்னையும் என் குழுவையும் உள்ளே விட உங்கள் அரசு தயாராக உள்ளதா? அப்படி எமக்கு அனுமதி மறுக்கும் பட்சத்தில் எம்மை உள்ளே விடக்கோரி போராட்டம் நடத்த நீங்கள் தயாரா? விமல் வீரவன்ஸ ஐ.நா குழுவை உள்ளே நுழையக் கூடாதென்று சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது போல் எங்கள் குழுவை உள்ளே விடக்கோரி நீங்கள் உண்ணாவிரதம் இருப்பீர்களா?

பதில் சொல்லுங்கள்.

(முதல் வெற்றி: பிரிட்டனைச் சேர்ந்த நெக்ஸ்ட் நிறுவனம் இலங்கையில் மனித உரிமை பாதுகாக்கப்படும் வரை அங்கே தயாராகும் ஆடைகளை இறக்குமதி செய்யப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இது நமக்குக் கிடைத்த முதல் வெற்றி. இனி எல்லா நாட்டு நிறுவனங்களும் இப்படி அறிவிக்க வேண்டும். நம் போராட்டத்தை தொடர்வோம்).

பல நல்ல கருத்துக்களைச் சொல்லிச் சென்ற சகோதரி அனாமிகா துவாரகன் உணர்ச்சி வசத்தால் பேசிவிட்ட அந்த வார்த்தை(கள்) உங்கள் யாரையாவது காயப்படுத்தியிருப்பின் அந்தச் சகோதரியின் சார்பிலும் அந்த வார்த்தையை மட்டும் நீக்க முடியாததாலும் மற்ற கருத்துகள் விடுபட்டுப் போய்விடும் என்பதால் அவரது பின்னூட்டத்தை விட்டுவைத்திருப்பதற்காகவும் இலங்கைப் பதிவர்/வாசக சகோதரர்களிடம் சிரம் தாழ்த்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.