Showing posts with label காதலர் தினம். Show all posts
Showing posts with label காதலர் தினம். Show all posts

Sunday, February 14, 2010

என் காதல்கள் - காதலர் தின சிறப்புப் பதிவு

இதை எல்லாம் டீன் - ஏஜ் கொசுவத்தி பதிவுலயே எழுதியிருக்கலாம். ஆனா அது ரொம்ப பெருசாயிடும் அப்பிடிங்கிறதாலயும், காதலர் தினத்துக்கு எழுத ஒண்ணும் இல்லாமப் போயிரும்ங்கிறதாலயும், இப்போ வெளிவருது.


என் முதல் காதல் - சைக்கிள். சின்ன வயதிலிருந்தே சைக்கிள் ஓட்டுவது என்றால் எனக்கு அலாதி பிரியம். நான் வாடகை சைக்கிள் ஓட்ட செலவழித்த காசில் இரண்டு புது சைக்கிள்கள் வாங்கியே இருக்கலாம். ஆனாலும் என் அப்பா எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுக்கவில்லை. ஒரே பையனாம். நான் ஹைஸ்கூல் சேர்ந்ததும் பக்கத்து கேர்ள்ஸ் ஸ்கூலில் படித்த என் அக்காவுக்கு ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்து என்னை ஸ்கூலுக்கு கூட்டிச் செல்லும் ரிக்‌ஷாவாக்கிவிட்டார். 


பின்னாளில் ஏழாம் வகுப்பு வந்ததும் ஒரு நாள் அப்பாவின் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஸ்கூலுக்கு வந்து, திரும்பும்போது சைக்கிள் செயின் கழன்று, ஃப்ரீவீல் பிடிக்காமல் போய் வீட்டில் கொண்டு வைத்ததும், அப்பா செய்த முதல் காரியம் சைக்கிள் வாங்கிக் கொடுத்தது - சிவப்பு கலர் ஹெர்குலிஸ் கேப்டன் (விஜயகாந்த் இல்லை)


ஸ்கூல் ப்ரேயரில் உயரம் குறைவாக இருந்த காரணத்தால் முதல் வரிசையில் நின்றாக வேண்டிய கட்டாயம். பிரேயரில் மேடையில் நின்று பாடும் அந்தப் பெண்கள் குழுவில் ஒருத்தியான அவளை விடாமல் பார்த்து வந்திருக்கிறேன். பின்னால் ஒரு நாள் அந்தப் பெண் எனக்கு தூரத்துச் சொந்தம் என்று தெரிய வந்த நாளில் என்னை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்த அந்தப் புண்ணியவானிடம் - ஓ நான் பாத்துருக்கேன். ப்ரேயர்ல மேடைல நின்னு பாடுவா என்று சொன்னதும், நானும் உங்களப் பாத்திருக்கேன், முத வரிசைல நிப்பிங்களே? - என்று அவள் சொன்னதும் பாரதிராஜா படம் போல ஆயிரம் வீணைகளை எனக்குள் யாரோ மீட்டினார்கள். இதை காதல் என்று நான் அப்போது நினைத்தாலும், இந்த ஒரு சம்பவத்திற்குப் பிறகு இருவருக்கும் வேறு எதுவும் தோன்றவில்லை. 


கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், கணிதம் இந்த மூன்று வகுப்புகளுக்கும் கெமிஸ்ட்ரி மேஜர் வகுப்போடு கம்பைண்ட் க்ளாஸ். கெமிஸ்ட்ரியில் படித்த அவளை சும்மா இல்லாமல் நண்பனோடு பெட் கட்டி விடாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டே இருப்பேன். காதலாகவும் இல்லை கத்திரிக்காயாகவும் இல்லை. போகப் போக அவளும் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தாள்.


ஒருநாள் - வழக்கமாக கரண்ட் கட்டான மதியம் - என் வீட்டு வராந்தாவில் சட்டையில்லாமல் படுத்திருந்த போது யாரோ என் அக்காவின் பேரைச் சொல்லி அழைப்பது கேட்டு எழுந்து பார்த்தால் - என் பக்கத்து வீட்டுப் பெண் (அவளும் என் காலேஜ் தான் சீனியர்) உம், அவளுடன் அந்த கெமிஸ்ட்ரி ஃபிகரும். அதிர்ச்சியில் உள்ளே இருந்த என் அக்காவை கை காட்டிவிட்டு நான் சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டை விட்டே போய்விட்டேன். 


பின்னர் அவள் என் அக்கா-அம்மாவுடன் நட்பு பேணிக்கொண்டு அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து போக ஆரம்பித்தாள். ஒரு நாள் என் வீட்டில் அனைவரும் வெளியூருக்குப் போயிருந்த அந்த சமயத்தில் என் சீனியர்கள் - ஆண் பெண் இருபாலரும் - சிலரோடு லன்ச் சமைக்க திட்டம் தீட்டியிருந்தோம். ஆனால் என் சீனியர்கள் வருமுன் அவள் வந்து விட்டாள். புத்தகம் எடுக்க வந்ததாக சாக்கு சொல்லி. சிறிது நேரம் அவளுடன் பொதுவாகப் பேசிக் கொண்டிருக்கும் சமயம் என் சீனியர்கள் வந்துவிட சிறிது நேரம் பேசிச் சென்றபின் அவர்கள் என்னை ஓட்டிய ஓட்டு இன்னமும் மறக்க முடியாது.


அதன் பிறகு இது போல சில சந்தர்ப்பங்கள். ஒவ்வொரு முறையும் யாராவது தடை. ஒரு நாள் அவள் என்னை மதியம் ஒரு மணிக்கு அவள் வீட்டுக்கு வரச்சொல்லி என் வகுப்புத் தோழனிடம் செய்தி விட்டுப் போயிருந்தாள். என்னால் ஏனோ போக முடியவில்லை. இதையும் - ஒரு மணி அடித்தால்.. என்று என் நண்பர்கள் கேலி செய்து திரிந்தனர். 


எனக்கு அவள் மீது காதல் என்று எதுவுமில்லை. ஆனால் அவளுக்கு இருந்ததா என்று எனக்குத்தெரியாமலே போய் விட்டது. 


அடுத்தது என் தோழி ஒருத்தியிடம் தென்னை மரத்தில் தேள் கொட்டி பனை மரத்தில் நெறி கட்டியது போல எதற்காகவோ ஒரு அவசர முடிவெடுத்து இல்லாத என் காதலை அறிவிக்க, அவளும் அதற்காகக் காத்திருந்தது போல அதை ஏற்றுக் கொண்டாள். சில நாட்களிலேயே அது உண்மைக் காதல் அல்ல, அது தொடரவும் முடியாது என்பதை உணர்ந்து கொண்ட நான் - நான் மட்டுமே, நாங்கள் இல்லை - என்னால் முடிந்த அளவுக்கு அவளுக்கும் உணர வைக்க முயற்சி செய்தேன். நான் பிரிந்து விட்டேன். அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சில காலம் என்னிடம் சாம, பேத, தண்ட முறைகளில் காதலை புதுப்பிக்க முயற்சி செய்தாள். என்னிடம் மறுப்பு மட்டுமே பதிலாக இருந்தது.


சென்னையில் என்னுடைய கடைசி செமஸ்டர் ப்ராஜக்ட் முடிந்து ஜூலை 2ம் தேதிக்காக - பெங்களூரில் உள்ள அந்த மென்பொருள் நிறுவனத்தில் சேர வேண்டிய நாள் - காத்திருந்த போது ஜூன் 15ம் தேதியே இன்னொரு நிறுவனத்தில் சேர்ந்த என்னுயிர்த்தோழி - இதுவரை பெற்றோரைப் பிரிந்திராத அவள், அந்த ஏக்கத்தில் என்னை அழைத்தாள், அழுதாள். அவள் அழைப்பிற்காக அந்த சனிக்கிழமையே கிளம்பி அவளைப் பார்க்க பெங்களூர் சென்றேன். அன்றைய தினத்தை அவளுடன் கமர்சியல் ஸ்ட்ரீட்டிலும், பிரிகேட் ரோட்டிலும், எம்.ஜி.ரோட்டிலும், கப்பன் பூங்காவிலும் செலவழித்து அடுத்த நாள் திரும்பி என் ஊர் சென்றேன்.


பின்னர் நானும் பெங்களூரில் சேர்ந்ததும், பிரிகேட் ரோடும், கமர்சியல் ஸ்ட்ரீட்டும் எங்களைப் பார்க்காத வாரக்கடைசி நாட்களே இல்லை எனலாம்.


திடீரென்று அவளை சென்னையில் உள்ள கிளைக்கு மாற்றம் செய்ததும் அவளும் பிரிந்து போனாள். அந்தப் பிரிவு எங்களுக்குள் ஆழத்தில் ஏதோ மாற்றம் செய்ய, இருவருமே ஒருவர் மீது மற்றவருக்கிருந்த காதலை உணர்ந்த தருணம் அது. இருவரும் எங்களின் பொது நண்பியிடம் எங்கள் காதலைச் சொல்லி அவள் கருத்தை எதிர்பார்த்திருந்த போதுதான் இருவருக்குமே மற்றவரிடம் அப்படி ஒரு எண்ணம் இருப்பதை உணர்ந்தோம். சொல்லிக்கொள்ளாமலேயே எங்கள் காதல் மலர்ந்தது. கடைசியாக இது உண்மையான காதல் என்பதற்கு எங்களின் 6 வருட திருமண வாழ்வும் ஒரு வயது மகனுமே சாட்சி.. 




என் காதல் மனைவியோடு அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.


Happy Valentines Day