Showing posts with label கேரக்டர். Show all posts
Showing posts with label கேரக்டர். Show all posts

Friday, May 14, 2010

கேரக்டர் - கோபால்

தாராளமாக எண்ணெய் தேய்த்து நேர் வகிடெடுத்து வழித்து சீவப்பட்ட தலை. விபூதியும், விபூதிப் பட்டையின் நடுமத்தியில் அளவெடுத்து வைத்தது போல மிளிரும் குங்குமமும் நிறைந்த நெற்றி. கத்தி போல மடித்துத் தேய்க்கப்பட்ட காக்கி சீருடை. சைக்கிளில் ஏறி அமர்ந்து பட்டுவாடா செய்ய வேண்டிய தபால்களை ஹாண்டில் பாரின் மேல் பொருத்தப்பட்ட ஸ்டாண்டில் கிளிப் போட்டு இருத்தி புறப்பட்டார் என்றால், “சிங்கம் ஒன்று புறப்பட்டதே” எனப் பின்னணியில் குரல் ஒலிக்கிறதோ என்று எண்ணத் தோன்றும்.

அவர்தான் போஸ்ட் மேன் கோபால். சிறிய ஊரென்பதாலும் பல வருடங்களாக அங்கேயே பணி புரிவதாலும் கிட்டத்தட்ட ஊரில் உள்ள அத்தனை பேரின் பெயரும் அத்துப்படி. வாசலில் நின்று “சார் போஸ்ட்” என்று குரல் கொடுப்பதோ, பெல்லடிப்பதோ, தபால்களை விசிறியடித்துவிட்டு செல்வதோ இவருக்குக் கொஞ்சம் கூட பிடிக்காது. சைக்கிளை நிறுத்தி, ஸ்டாண்ட் போட்டு, சைக்கிளின் பின்னால் திரும்பி நின்று இடது காலால் ஸ்டைலாக ஸ்டாண்டின் க்ளிப்பை உதைத்து விட்டு வீட்டின் கதவைத் தட்டி யார் கையிலாவது பொறுப்பாகக் கொடுத்து விட்டுத்தான் அடுத்த வீட்டுக்குச் செல்வார்.

வீட்டில் யாரும் இல்லை என்றாலோ, பொடிசுகள் மட்டும் இருந்தாலோ, தபாலைக் கொடுத்து விட மாட்டார். முழு சுற்றும் முடிந்த பின் மறுபடி அந்த வீட்டுக்குச் சென்று பெரியவர்கள் திரும்பிவிட்டார்களா என்று பார்த்து அவர்கள் கையில் தான் கொடுப்பார். அப்போதும் யாரும் இல்லையென்றால் மாலை ட்யூட்டி முடிந்ததும் வீட்டிற்குப் போகுமுன் கொடுத்துவிட்டுச் செல்வார். “ஏண்ணே இப்பிடி சிரமப் படுறீங்க? கதவுக்கு அடியில தள்ளி விட்டுட்டு வரலாமில்லை” என்று கேட்டால் “தபால்ல என்ன முக்கியமான விசயம் இருக்கோ, நாம கதவுக்கடியில தள்ளிவிட அது அவங்க கண்ணுல படாம போயிட்டா?” என்று நம்மையே திருப்பிக் கேட்பார்.

தபால் பட்டுவாடா செய்வது மட்டுமல்ல. நாம் போஸ்ட் செய்ய வேண்டிய தபால்கள் ஏதும் இருக்கிறதா என்று கேட்டு அதையும் சேகரித்துக் கொண்டுதான் தபாலாபீஸ் திரும்புவார். எனக்குத் தெரிந்து எங்கள் ஊரில் யாரும் தபால் பெட்டியை உபயோகப் படுத்தியதாக நினைவே இல்லை.

யாருக்காவது மணியார்டர் வந்தால் பணத்தை சில்லறை சுத்தமாக எண்ணி அவர்கள் கையில் கொடுத்து விட்டு ஒரு நிமிடம் நிற்பார். மோரோ காப்பியோ நேரத்தைப் பொறுத்து எதையாவது (கொடுக்காவிட்டாலும் கேட்டு வாங்கி) குடித்துவிட்டுத் தான் அந்த இடத்தை காலி செய்வார். கொடுத்தால் கூட கமிஷன் வாங்க மாட்டார்.

தந்தி கொடுக்கச் செல்லும்போது கெட்ட சேதியாக இருந்தால் வீட்டில் இருக்கும் நிலையைப் பார்த்து விட்டு, அவர்களை வேறு ஏதாவது பேசி ஆசுவாசப் படுத்தி விட்டுத்தான் விஷயத்தைச் சொல்வார். நல்ல சேதியாக இருந்தால் முதலில் சர்க்கரை கேட்டு வாங்கி அவர்கள் வாயில் போட்டு விட்டுத்தான் தந்தியைக் கையில் கொடுப்பார். தங்கள் வீட்டுத் தந்தியைப் படித்து விட்டாரே என்று யாரும் கோவித்ததில்லை.

மனைவி இறந்ததும் மறு கல்யாணம் செய்து கொள்ளாமல் ஒரே மகனை தன் சகோதரியின் வீட்டில் விட்டு வளர்த்து வந்தார். ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரக் கடைசியில் கோபாலை ஊரில் பார்க்க முடியாது. தன் மகனைப் பார்க்க சகோதரி ஊருக்கு வண்டியேறியிருப்பார். ஒரு மாதம் கூட தவறியதாக நினைவில்லை.

நல்ல நாள் திருநாள் என்றால் காசு கேட்டு தலையைச் சொறிந்து கொண்டு நிற்க மாட்டார். ஆனால் யாராவது வீட்டில் விருந்து சாப்பிடக் கூப்பிட்டால் மறுக்காமல் வந்து நன்றாகக் கட்டி விட்டுப் போவார். மறக்காமல் வீட்டில் உள்ள நண்டு சிண்டுகளுக்கு எதாவது - தின்பண்டமோ, பொம்மையோ - வாங்கிக் கொடுக்காமல் இருக்க மாட்டார்.

ஊரில் உள்ள சிறுவர்கள் அனைவருக்கும் அவர் தபாலண்ணே. பெருசுகளுக்கு கோவாலு. தெருவில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கும்போது வந்தால் பந்து வீசிக் கொண்டிருந்தால் அந்த ஓவர் முடியும் வரை பொறுமையாகக் காத்திருப்பார். சில பல கிரிக்கெட் டிப்ஸும் கொடுப்பார். எங்கள் பெயர்கள் கூட அவருக்கு அத்துப்படி.

நவம்பர் 14 - குழந்தைகள் தினம் தான் அவருக்கும் பிறந்தநாள். அந்த நாள் கை நிறைய சாக்லெட்டோடு எங்களைத் தேடித் தேடிக் கொடுத்து மகிழ்வார். சாக்லெட்டைக்கொடுத்து விட்டுப் போக மாட்டார். நாங்கள் அதைப் பிரித்து வாயில் போட்டு அது கரைகையில் எங்கள் முக பாவங்களை ரசித்துப் பார்த்து விட்டே செல்வார்.

எங்கள் ஊரின் அத்தனை பேரின் மதிப்பையும் பெற்றவர்.. பொடிசுகளுக்கு அவர் மீது மரியாதை. பெருசுகளுக்கு இப்படி ஒரு தபால்காரர் இருப்பது ஒரு பெருமை. அவரைத் தங்கள் குடும்பத்தின் அங்கமாக நினைக்காத குடும்பமே எங்கள் ஊரில் இல்லை எனலாம்.

அப்படி இருந்த தபாலண்ணே நடுத்தெரு ரங்கநாயகியக்காவுடன் ஏன் ஓடிப் போனார் என்று எங்கள் யாருக்கும் தெரியவில்லை.

பின் குறிப்பு: உண்மையிலயே இப்பிடி ஒரு கேரக்டர் இருந்தா நல்லாத்தான் இருக்கும். என்ன சொல்றீங்க?