Thursday, May 14, 2009

விதி

ரகு தூக்கம் வராமல் புரண்டு படுத்தான். அவன் மேலதிகாரி இன்று அலுவலகத்தில் அறிவித்தது அவன் மனதை அரிததுக் கொண்டிருந்தது. ரகு மதுரையில் எம்.சி.படித்து விட்டு இந்தியாவில் சிறிது காலம் வேலை பார்த்து விட்டு பின் எச்-ஒன் பி விசாவில் அமெரிக்காவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது. மனைவி ஒரு குழந்தை என்று அளவான குடும்பம். இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் இந்த வேலையில் சேர்ந்தான். நிரந்தரமான வேலை என்றதும் இருக்கும் ஊரிலேயே ஒரு வீட்டை வாங்கி வாழ்க்கை சந்தோசமாக போய்க்கொண்டு இருந்தது. கடந்த ஆண்டு இறுதி வரை.அமெரிக்க பொருளாதார வீழ்ச்சிக்கு பின் ஒவ்வொரு நிறுவனமும் தங்களது செலவை குறைக்க ஆட்குறைப்பு ஆயுதத்தை கையில் எடுத்து விட்டன. இதன் சம்மந்தமாகத்தான் இவன் மேலதிகாரி இவன் குழுவில் இருக்கும் அனைவரையும் கூட்டி ஆட்குறைப்பு நடத்த வேண்டிய கட்டாயத்தில் நிறுவனம் தள்ளப்பட்டு விட்டதாகவும், பணியில் இருந்து ஒய்வு பெற விரும்புபவர்களுக்கு நல்ல ஓய்வுக்கால நலன்களுடன் அனுப்பி வைக்கப் படுவார்கள் என்றும், அப்படி விருப்ப ஒய்வு பெருபவர்களுடைய எண்ணிக்கை பணி நீக்கம் செய்யப்படவேண்டிய எண்ணிக்கையை விட குறைவாக இருக்கும் பட்சத்தில் மேலும் சிலர் கட்டாயப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்தார். இவன்தான் இந்த நிறுவனத்தில் கடைசியாக சேர்ந்தவன். அதனால் முதலில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப் படுபவன் இவனாகத்தான் இருக்கும். இந்த நினைவே இவனை தூங்க விடாமல் படுத்தி எடுத்தது. இதுவே இந்தியாவாக இருந்திருந்தால் ரொம்பவும் கவலை பட வேண்டியது இல்லை. அந்நிய நாட்டில் வந்து இப்படி நடந்தால் என்ன செய்வது?ரகுவின் மனம் பல ஆண்டுகள் பின்னோக்கி பயணம் செய்தது. பி.எஸ்.சி இயற்பியல் படிக்க சேர்ந்த பொது இவன் குறிக்கோள் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி இல் பி.டெக் செருவதாகவே இருந்தது. பி.டெக் ஆட்டோமொபைல் அவனுக்கு பிடித்தமான படிப்பு. ஆனால் காலம் அவனை கணினி படிக்க வைத்து அமெரிக்காவிற்கு கொண்டு வந்து சேர்த்து விட்டது. முதல்வன் படத்தில் அர்ஜுனின் அப்பா சொல்வது போல வாழ்க்கைக்கு ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? கடவுளே அப்படி ஏதாவது அதிசயம் செய்துவிட மாட்டாயா? என்று கிறுக்குத்தனமாக நினைத்துகொண்டே தூங்கிப்போனான்.இவனது வேண்டுதலைக் கேட்ட கடவுள் "ததாஸ்து" என்று ஆசிர்வாதம் செய்தார்.ரகு படுக்கையில் இருந்து எழுந்துகொள்ளாமலே மணியைப் பார்த்தான். இன்று தான் கடைசி பரீட்சை. வேதியியல் - கொஞ்சம் கூட பிடிக்கவே பிடிக்காத பாடம். இதை மட்டும் முடித்து விட்டால் அதன் பிறகு வாழ்க்கையில் இதை படிக்கவே வேண்டியது இல்லை."ரகு.. எழுந்துக்கொடா பரிச்சைக்கு நேரமாச்சு" அம்மாவின் குரல் கேட்டது.

எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு குளித்து விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தான்."என்னம்மா டிபன் இன்னைக்கு?" என்று கேட்டவாறு சாப்பாட்டு மேசையின் முன் அமர்ந்தான்."இட்டிலி சுட்டிருக்கேண்டா. நேத்து எம்.ஐ.டி ல இருந்து அட்மிசன் கார்டு வந்துச்சிடா. எடுத்து மேசை மேல வச்சிருக்கேன். அப்பா படத்துக்கு முன்னால் வச்சி கும்பிட்டுட்டு பரிச்சைக்கு போ." என்று சொல்லிக்கொண்டே இட்லிகளை பரிமாறினார்.சாப்பிட்டு விட்டு பரிசை எழுதினான். நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று எம்.ஐ.டியில் பி.டெக் ஆடொமொபைல் படிப்பில் சேர்ந்தான். அங்கும் தானுண்டு தன் படிப்புண்டு என்று படித்து நல்ல ஒரு நிறுவனத்தில் பணி அமர்ந்தான். ஒரு வருடம் முடிந்த சமயம், G.R.E தேர்வு எழுதி ஜெர்மனி நாட்டில் எம்.எஸ் சேர்ந்தான்.எம்.எஸ் படித்து முடிக்கும் பொது அமெரிக்க நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத்தில் பணி அமர்ந்தான். காலத்தின் போக்கில் இவனுக்கு திருமணமும் ஆகி ஒரு குழந்தையும் பிறந்தது.அன்று இவன் பணி புரியும் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி நிறுவன ஊழியர்கள் அனைவருடனும் ஒளிப்பட தொலை பேசி மூலம் உரை ஆற்றினார். இன்றைய பொருளாதார நிலைமையில் அவர்களின் நிறுவனம் எப்படி ஒரு இக்காட்டான சூழ்நிலையில் உள்ளது என்றும், மத்திய அரசின் பொருளாதார உதவியை பெற்றிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும், ஆட்குறைப்பு செய்ய வேண்டிய நிலைமையையும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல எல்லாருக்கு உறைக்கும்படி வலியது வலியது.வலியது வலியது.வலியது. தனக்கு நிறுவனத்தில் இருக்கும் "கடின உழைப்பாளி" என்ற பெயர் தன்னுடைய வேலையைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு வீட்டுக்கு வந்தான்.இரவு உணவு அருந்தியதும் வீட்டில் உள்ள தொலைக் காட்சி பெட்டிக்கு உயிர் கொடுத்தான். சி.என்.என் தொலைக்காட்சியில் அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியைப் பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, மத்திய அரசின் பொருளாதார உதவியைப் பெரும் நிறுவனங்களுக்கு போடப்பட்டிருக்கும் நிபந்தனைகளில் விவாதம் செய்து கொண்டிருந்த மூன்று பெரும் ஒத்த மனதுடன் ஏற்றுக்கொண்ட நிபந்தனை - பொருளாதார உதவி பெரும் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்ய வேண்டிய பட்சத்தில், முதலில் எச்-ஒன் பி விசாவில் பணி அமர்த்தப் பட்டவர்களையே நீக்க வேண்டும் என்பதே அது. ரகுவின் நடு மண்டையில் ஆணி இறங்கியதைப் போல இருந்தது.

ரகு தூக்கம் வராமல் புரண்டு படுத்தான். அவன் நிறுவன முதன்மை அதிகாரி இன்று பேசியது அவன் மனதை அரிததுக் கொண்டே இருந்தது.

....

....

முதல்வன் படத்தில் அர்ஜுனின் அப்பா சொல்வது போல வாழ்க்கைக்கு ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? கடவுளே அப்படி ஏதாவது அதிசயம் செய்துவிட மாட்டாயா? என்று கிறுக்குத்தனமாக நினைத்துகொண்டே தூங்கிப்போனான்.

விதி வலியது.

No comments: