Wednesday, September 30, 2009

சென்னை சூப்பர் கிங்க்ஸும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸும்

சத்தியமா இது கிரிக்கெட் பத்தின இடுகை இல்லிங்க்ண்ணா

அமெரிக்காவுல நம்மூரு கிரிக்கெட்டு மாதிரியே ஒரு வெள்ளாட்டு வெளாடுறாய்ங்க. அதுக்கு பேரு பேஸ்பாலாம். நம்மூரு கிரிக்கெட்டுக்கும் இந்தூரு பேஸ்பாலுக்கும் சில வித்தியாசம். (அதெல்லாம் என்னன்னு க்ளாஸ் எடுக்கப் போறதும் இல்ல). ரெண்டுக்கும் ஒரு ஒத்துமை என்னன்னா அதுக்கு கிறுக்குப் பிடிச்ச மாதிரி ரசிகனுங்க (வெறியனுங்க) இருக்கிற மாதிரி இங்கயும் பேஸ்பாலுக்கு இருக்கானுக. அவனுங்க பண்ணுற அலும்பு இருக்கே.. யப்பா தாங்க முடியல.



நான் இருக்குற நியூ யார்க்ல நியூ யார்க் யான்க்கீஸ்னு ஒரு பேஸ்பால் டீமு. அவனுங்களோட ரசிகனுங்கள பாக்கனுமே. ஆபிஸ்னு கூட பாக்காம அவனுங்க டெஸ்க் எல்லாம் யான்க்கீஸ் லோகோ போட்ட பொருளா வச்சிருப்பானுங்க. பேஸ்பால் மாட்ச் இருந்ததுன்னா ஒரு ஸ்போர்ட்ஸ் பாருக்குப் போயி தண்ணி அடிச்சிக்கிட்டே மாட்ச் பாப்பானுங்க. அடுத்த நாளு வந்து அந்த மாட்ச்சப் பத்தி அக்கு வேறு ஆணி வேறா அலசுவானுங்க. வூட்டுல தங்கமணி இல்லைன்னா ஃப்ரண்ட்ஸ கூட்டிட்டு வந்து வீட்டுலயே தண்ணி அடிச்சிட்டு மாட்ச் பாப்பானுங்க.







இதெல்லாம் கூட பரவால்லிங்க. பக்கத்துல பாஸ்டன்ல, பாஸ்டன் ரெட் சாக்ஸ்னு ஒரு டீமு. யான்க்கீஸ் ஃபேனுக்கும் ரெட் சாக்ஸ் ஃபேனுக்கும் ஏழாம் பொருத்தம். நம்ம இந்தியா பாகிஸ்தான் மேட்ச் மாதிரி அனல் பறக்கும். இவனுங்களுக்கு நடுவுல நான் ஒரு தடவ மாட்டிக்கிட்டேன். அதப் பத்திதான் இப்ப சொல்லப் போறேன்.


நான் பாஸ்டனுக்கு ஆஃபிஸ் விசயமா போக வேண்டி இருந்தது. போய் பாஸ்டன் ஏர்போர்ட்ல இறங்கிட்டேன். இறங்கி நடந்து போனா அங்க இருக்குறவங்க எல்லாம் என்ன ஒரு மாதிரியா பாக்குறாங்க. எனக்கு ஒரே குறு குறுன்னு இருக்கு.. ஒரு வேள ஜிப் கிப்பு போடாம வந்துட்டமோன்னு.. அப்படியே நைசா கை வச்சும் பாத்துட்டேன். அங்கயும் எதுவும் கோளாறு இல்ல. அப்புறம் ஏன் இப்படி பட்டிக்காட்டான் முட்டாய்க்கடய பாக்குற மாதிரி பாக்குறாங்கன்னு தெரியாம முளிச்சிக்கிட்டே ஏர்ப்போர்ட் விட்டு வெளிய வந்தேன் ரெண்ட்டல் கார் ஷட்டில்க்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்.



இங்க ஒண்ணு சொல்லியாவணும். பாஸ்டன் ஏர்ப்போர்ட்ல ரெண்ட்டல் கார் பிடிக்கணும்னா வெளியால வந்து காத்துக்கிட்டு இருக்கணும். ஒவ்வொரு ரெண்ட்டல் கம்பெனிக்காரனும் ஒரு பஸ் அனுப்புவான் ஒவ்வொரு டெர்மினலுக்கும். அந்த பஸ்ஸுல ஏறிக்கிட்டோம்னா ரெண்ட்டல் கார் கம்பெனிக்கு கொண்டு போயி விடுவாங்க. அங்க இருந்து கார் எடுத்துட்டு போவலாம்.


அப்பிடி ஒரு ஷட்டிலுக்காக நின்னுட்டு இருந்தேன். ஷட்டில் பஸ்ஸும் வந்துச்சி. அந்த பஸ் டிரைவர் கீழ இறங்கி என் கூட நின்னுட்டு இருந்தவங்களுக்கு எல்லாம் அவங்க லக்கேஜ எடுத்து உள்ள வக்க ஹெல்ப்பு பண்ணான். என்னய மட்டும் ஒரு மொற மொறச்சுட்டு பஸ்ஸுக்குள்ள ஏறிட்டான். நானும் பின்னாடியே ஏறி அவனுக்கு சைடுல இருந்த ஒரு சீட்டுல உக்காந்து என் தலைல போட்டுட்டு இருந்த தொப்பிய கழட்டுனேன். அதப் பாத்த அவன் சொன்னான் - நல்ல வேளை தொப்பிய கழட்டுன. இல்லன்னா உன்ன பஸ்ஸ விட்டு தூக்கி எறிஞ்சிருப்பேன் - எனக்கு திக்குன்னு ஆயிருச்சி. தொப்பிய திருப்பிப் பாக்குறேன் பாழப்போன தொப்பில நியூ யார்க் யான்க்கீஸ் லோகோ. தொப்பிய நாலா எட்டா மடக்கி என் பெட்டிக்குள்ள வச்சிட்டு தான் மறு வேலை. ஆனா அவன் அதோட விட்டானா? ரெண்ட்டல் ஆஃபிஸ் வரவும் - எல்லாருக்கும் இன்றைய நாள் நல்ல நாளா இருக்கட்டும் இந்த நியூ யார்க் யான்க்கீஸ் தொப்பி போட்டவனத் தவிர - அப்பிடின்னு போட்டான் ஒரு போடு. இப்பிடியெல்லாமா கொல வெறியோட ரசிகனுங்க இருப்பாய்ங்க?




அதெல்லாம் சரி இதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்மந்தம்னு கேக்குறீயளா? கூடிய சீக்கிரம் சென்னைல இருந்து பெங்களூரு போற ஒரு பதிவருக்கு மேல சொன்ன அனுபவம் நிகழ 100% வாய்ப்பு இருக்குன்னு நான் நினைக்கிறேன். நீங்க?

தசாவதாரம் ஏன் 2008ன் சிறந்த படம்?

நண்பர் SUREஷ் அவர்கள் இங்கே சிவாஜி படத்துக்கு விருது வழங்கியதைப் பற்றி எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்து..

தசாவதாரம் ஏன் 2008ன் சிறந்த படம் என்பதற்கு 10 காரணங்கள்:

1. முதல் காட்சியிலேயே கலைஞர் கருணாநிதியைக் காட்டியதன் மூலம் விருதை நோக்கி நடை போடத் துவங்கிவிட்டது இந்தப் படம்.
2. இந்தியாவில் இப்போது வகுப்பு வாதம் மலிந்திருக்கிறது என்று யாரும் வருத்தப் பட வேண்டாம். 12ம் நூற்றாண்டிலேயே சைவமும் வைணவமும் சண்டை போட்டுக் கொண்டுள்ளது. இது நமக்கெல்லாம் சகஜம் என்று மக்கள் மத்தியில் ஒரு சகிப்புத் தன்மையை வளர்த்த காரணத்திற்காக.
3. தெலுங்குக்காரர்களைக் காலை வாரியதன் மூலம் உள்ளுக்குள் வெந்துகொண்டிருக்கும் (என் போன்ற) ஆயிரக்கணக்கான தமிழ் மென்பொருளாளர்களை வாய் விட்டு சிரிக்க வைத்ததற்காக.
4. உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முதலாக 10 வேடங்களில் ஒரு நடிகர் நடித்ததற்காக (இப்படித்தான் இந்தப் படத்துக்கு விளம்பரம் செய்தார்கள்)
5. மற்றொரு நாட்டின் ஜனாதிபதியைப்போல காமெடியன் ஆக்கியதற்காக(இது வரைக்கும் இந்த வேசம் எதுக்கு போட்டார்னே தெரியல)
6. பட்டர் ஃபிளை எஃபக்டை சாதாரண தமிழனும் புரிந்து கொள்ளும்படி பாடம் நடத்தியதற்காக
6.5 பட்டர் ஃபிளை எஃபக்டை புரிந்து கொண்டதும் இந்தியா வல்லரசாகிவிடும் என்று எல்லோரும் நம்புவதற்காக
7. இந்திப் படத்தில் மட்டுமே கவர்ச்சிக் கன்னியாகத் திகழ்ந்த மல்லிகா ஷெராவத்தை தமிழ்ப்படத்தில் நடிக்க வைத்ததற்காக.
8. கமலே நினைத்துப் பார்க்காத வகையில் இந்தப் படத்தின் பத்து வேடங்களை விஷ்ணுவின் பத்து அவதாரங்களோடு ஒப்பிட்டு வலைமனை முழுதும் பலரை எழுத வைத்ததற்காக.
9. ஜெயலலிதா ஆட்சியில் சுனாமி வந்தாலும் அப்போது உலகத்தைக் காப்பாற்றிய விஞ்ஞானிக்கு கலைஞரின் ஆட்சியில் தான் பாராட்டு விழா எடுப்பார்கள் என்று கலைஞருக்கு ஐஸ் வைத்ததற்காக.
10. எல்லாவற்றிற்கும் மேலே, அந்த வருடத்தில் வேறு கமல் படம் எதுவும் வராத காரணத்திற்காக.

Wednesday, September 23, 2009

கமலஹாசன் தலைசிறந்த நடிகனா?

உன்னைப்போல் ஒருவன் வந்தாலும் வந்தது, பலரும் கமலைப் போற்றியும் தூற்றியும் பதிவுகள் பல போட்டுவிட்டார்கள். என் பங்குக்கு இது.

கமல் ஒரு நல்ல நடிகன்:
கமல் ஒரு நல்ல நடிகன் என்பதை யாரும் மறுக்க முடியாது. அன்பே சிவம் படத்தில் கண் மட்டும் தெரியுமாறு கட்டு போடப்பட்டு மருத்துவமனையில் படுத்திருப்பார். நாசர் மற்றும் அவரது சகாக்கள் சுற்றி நிற்கும்போது அந்த ஒரு கண்ணில் கமல் காட்டும் உணர்ச்சிகள் எத்தனை எத்தனை? இது போல கமலின் நடிப்புத்திறமைக்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சொல்லிக்கொண்டே போகலாம்.

கமல் மட்டுமே நல்ல நடிகனா?
கண்டிப்பாக இல்லை. கமலைப் போல, சில நேரங்களில் கமலை மிஞ்சும் நடிகர்கள் தமிழில் இருக்கிறார்கள்.
பிரகாஷ் ராஜ்: பல படங்களில் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கிறார். உதாரணத்திற்கு அறிந்தும் அறியாமலும் படத்தில் நவ்தீப் தூங்கிக் கொண்டிருப்பார். அவரை வைத்த கண் வாங்காமல் பக்கத்தில் உக்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பார் பிரகாஷ் ராஜ். அந்த முகத்தில் ஒரு தந்தையின் பெருமிதமும், தன் மகனைப் பார்க்கும் பாசமும் கொப்பளிக்கும். அங்கே பிரகாஷ் ராஜ் தெரிய மாட்டார், பாசமான ஒரு தந்தைதான் தெரிவார்.
பசுபதி: வில்லத்தனமோ இல்லை குணசித்திரப் பாத்திரமோ அதை மிகையில்லாமல் செய்யக்கூடிய ஒரு சில கலைஞர்களில் பசுபதிக்கு தனி இடமுண்டு. வெயில் படத்தில் பஸ் ஸ்டாண்டில் சொந்தத் தம்பியே யாருண்ணே நீங்க என்று கேட்கும் காட்சியில் வார்த்தை தொண்டையில் சிக்க அண்ணண்டா என்று சொல்லும் காட்சி ஒன்று போதும் பசுபதியின் நடிப்புக்கு. ஆனாலும் இன்னொன்று. விருமாண்டியில் கொ என்று எழுதிய அருவாளை எடுத்துக் கொண்டு வந்து சண்டை போடுவார் கமல். அப்போது பசுபதியின் க்ளோசப் - கண்களில் முதலில் தெரிவது பயம். சட்டென்று ஒரு நொடியில் அந்தப் பயத்தை விட்டு சாமர்த்தியம் தெரிய அது காணாமல் போன அருவாள் என்று கதையை மாற்றும் காட்சி இன்னொரு சான்று.
மேலே சொன்ன இருவருக்கும் டைமிங்கும் நன்றாகவே வரும்.

கமலிடம் என்ன குறை:
1. பாத்திரமாக மாறுவது இல்லை கமல்
கமலின் நடிப்பில் குறை கூறவே முடியாது. ஆனால் எந்த பாத்திரத்தில் கமல் நடித்தாலும் அதில் கமல் தான் தெரிவாரே ஒழிய அந்தப் பாத்திரத்தைப் பார்க்க முடியாது. But, there are some exceptions. ஒரு சில படங்களைத் தவிர. அன்பே சிவம் படத்தில் சிவம் கமலிடம் துளி கூட கமல் தெரியாது. ஆனால் நல்லாவிடம் நல்லாவே தெரியும். ஆறு வயதிலிருந்து நடிக்கும் ஒரு நடிகன், கிட்டத்தட்ட எல்லாப் பாத்திரங்களையும் போட்டுவிட்டவர். அவரிடம் அப்படித்தான் தெரியும் என்று வாதம் செய்பவர்களுக்கு, டாம் ஹாங்க்ஸைப் பாருங்கள்.
2. உடன் நடிக்கும் நடிகர்களுக்கு நடிக்கவே வாய்ப்பு தருவதில்லை:
இதைப் பற்றி நான் விளக்கமாக சொல்ல வேண்டியதில்லை. வெற்றி விழாவில் பிரபுவுக்கு இருக்கும் முக்கியத்துவத்துக்கும் - தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன் படத்தில் பிரபுவுக்கு இருக்கும் முக்கியத்துவத்துக்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் அறிவர். காதலா காதலா படத்தில் பிரபு தேவாவை திக்குவாயாக்கி அவர் வசனத்தையும் இவரே சேர்த்துப் பேசிவிடுவார்.
3. சக நடிகர்களை/கலைஞர்களை பாராட்டுவதில்லை:
கமலுக்கு தன்னைத் தவிர வேறு யாரும் நடிகனே இல்லை என்ற எண்ணம். வாய் திறந்து பாராட்டி விடவே மாட்டார். பேரழகன் பட ஒலித்தட்டு வெளியீட்டு விழா. அனைவரும் கூனனாக நடித்த சூரியாவைப் பாராட்டினர். கமல் ஒரு மூத்த கலைஞனாக சூர்யாவைப் பாராட்டிப் பேசியிருக்க வேண்டும். அவர் பேசியது இதுதான் - நான் ஒரு நடிகனாக இல்லாமல் இருந்திருந்தால் இந்தப் படத்தின் சில காட்சிகளில் விசில் அடித்து ரசித்திருப்பேன். அப்படியென்றால் நடிகனாக இருந்தால் கைத்தட்டி விசில் அடித்து மற்றவர்களின் படங்களைப் பார்த்து ரசிக்கக் கூடாதா?
ஆஸ்கார் நாயகன் என்று அவரது ரசிகர்கள் அழைக்கும் போதெல்லாம் அவருக்கு ஆஸ்கார் அமெரிக்க மக்கள் ரசிக்கும் நல்ல திரைப்படங்களுக்கு அமெரிக்காவில் கொடுக்கும் விருது என்பது அவருக்குத் தெரியவில்லையா? ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய பின் தான் அவருக்கு தெரியவந்ததா?
சிவாஜியையும் நாகேஷையும் மட்டும் தான் பாராட்டுவார் கமல்.

ஆக மொத்தத்தில், கமல் ஒரு நல்ல நடிகர். நல்ல வசனகர்த்தா, நல்ல திரைக்கதை ஆசிரியர், நல்ல இயக்குனர், நல்ல நடனக் கலைஞர், நல்ல நகைச்சுவையாளர். எல்லாம் சரி ஆனால் அவர் தலை சிறந்த நடிகர் இல்லை. கிரிக்கெட் பாஷையில் சொன்னால். கமல் ஒரு நல்ல ஆல் ரவுண்டர். எல்லத் துறையிலும் சிறப்பாக அவரால் பணியாற்ற முடியும். ஆனால் சச்சின் டெண்டுல்கர் மாதிரி நடிப்பின் கடவுள் இல்லை அவர். அவரையும் மிஞ்ச முடியும் அதை பல படங்களில் பலர் செய்தும் காட்டியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் கமல் நல்ல நடிகன் தான். ஆனால் எல்லாரும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடும் அளவுக்கு மாமேதை இல்லை

(கொஞ்சம் பெரிய) பின்குறிப்பு: தசாவதாரம் படத்தில் கமல் 10 வேடம் போட்டிருக்க வேண்டிய அவசியம் என்ன? மூன்று அல்லது நான்கு வேடங்களோடு நிறுத்தி விட்டு மற்ற நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். புஷ் கேரக்டர் எல்ல்லாம் தேவையில்லாத ஒன்று. அந்த மேக்கப்ப்புக்கு செலவு செய்த காசை கிராஃபிக்ஸ் போட பயன்படுத்தி இருக்கலாம்.

Monday, September 21, 2009

கு.ஜ.மு.க பொதுச் செயலாளர் விடுதலை

வெற்றி வெற்றி வெற்றி..

அண்ணன் குடுகுடுப்பை இன்று விடுதலை செய்யப்பட்டார். இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே ஒரே நாளில் விசாரித்து தீர்ப்பு சொல்லப்பட்ட ஒரே வழக்கு.

சி.பி.ஐக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்களின் வாததத்தை தன் சாமர்த்தியமான வாதங்களால் சிதறடித்து இந்தியாவின் விடிவெள்ளியை வெளிக்கொண்டு வந்த பழமை பேசிக்கு எங்களின் பாராட்டுகளும் வாழ்த்துக்களும். அதோடு சரியான நேரத்தில் சரியான ஆதாரத்தை கொண்டுவந்த கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் முகிலனுக்கும் எங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைவரை விடுதலை செய்யக்கோரி ஆங்காங்கே டீ குடிப்புப் போராட்டங்களும், கடையடைப்பு, பஸ் மரியல் செய்யும் தொண்டர்கள் வன்முறையைக் கைவிட்டு தலைவர் விடுதலை ஆனதை வெற்றிக்களிப்புடன் கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

- கு.ஜ.மு.க செயற்குழு

நானும், இந்திக்காரனும், அவனோட பிசினசும்

இந்தில யாராவது எழுதுனா அதைப் பாத்து இந்தின்னு கண்டுபிடிக்கிற அளவுதான் நம்ம இந்திப் புலமை. அப்பிடி இருக்குற நமக்கும் இந்திக்காரங்களுக்கும் ஏழாம் பொருத்தம். நம்மள பாத்தா ஒண்ணு ஒரு அந்நிய கிரகவாசிய பாக்கிற மாதிரி ஒரு பார்வை பாத்துட்டு போவானுங்க. இல்லயா நேர நம்மகிட்ட வந்து வேணும்னே இந்தில மள மளன்னு பேச ஆரம்பிச்சிடுவாங்க. நாம பேந்த பேந்த முழிச்சிட்டு இருப்போம். நம்ம மேல அப்பிடி இவனுங்களுக்கு என்ன காண்டுன்னு தெரியலை.


இந்தியாலதான் இப்பிடின்னா இங்க அமெரிக்கா வந்தப்புறமும் இந்த இந்திச் சனியன் விடமாட்டேன்னு சொல்லுச்சி.


இப்பிடித்தான் ஒரு நாளு நானும் தங்கமணியும் டாப்ஸ் (TOPS) கடையில ஷாப்பிங்க் போலாம்னு காரை பார்க் பண்ணிட்டு (வழக்கம்போல நம்மள பார்க் பண்ண சொல்லிட்டு தங்கமணி இறங்கி போயாச்சு) உள்ள நடந்து போனேன். அப்போ ஒரு இந்திக்காரன் (அதான் பாத்ததுமே அவிங்க மூஞ்சில எழுதி ஒட்டி இருக்கே) நின்னுட்டிருந்தான். நம்மள பாத்ததும் ஒரு ஸ்மைல் பண்ணான்.


எனக்கு என்னையே நம்ப முடியல. ஆனாலும் ஒரு உதறல். வந்து இந்தியில போலப் போறான். நம்ம டவுசரு கிழியப்போவுதுன்னு. நேரா என் கிட்ட வந்து - "நான் ஊருக்கு புதுசு. வால்மார்ட்டுக்கு எப்பிடி போறது?" அப்பிடின்னு இங்க்லீசுல கேட்டான். 'ஆஹா. நம்மளயும் மனுசனா மதிச்சு ஒரு இந்திக்காரன் பேசிட்டாண்டா' அப்பிடின்னு மேப் போடாத குறையா அவனுக்கு விளக்கம் குடுத்தேன். நான் டைரக்சன் குடுத்தத மட்டும் கார்மினோ இல்லை மெஜல்லனோ கேட்டுருந்தா, என் கிட்ட கம்பெனிய குடுத்துட்டு ஓண்டாரியோ லேக்ல போய் விழுந்திருப்பான், அப்பிடி குடுத்தேன்.


நம்ம பய புள்ள எல்லாத்தையும் கேட்டுப்புட்டு, "நீங்க எவ்வளவு நாளா இந்த ஊர்ல இருக்கிங்க?" அப்புடின்னான்.


நம்மள இப்பிடி கேட்டா போதுமே, நாம பத்தாப்பு பாஸ் பண்ணதுல இருந்து அமெரிக்க மண்ணுல வந்து ஷூவ வச்சது வரைக்கும் விலாவாரியா சொல்லிட்டேன். அங்கதான்யா சனி வந்து சடுகுடு ஆடியிருக்கு. அது தெரியாமப் போச்சு.


அவன் "நான் 4 வருஷமா பஃபலோல இருக்கேன். நீங்க நயகரா வருவிங்களா?"

"ஓ, பல தடவ வந்திருக்கேன். எல்லா சீசன்லயும் பாத்திருக்கேன்"

"அடுத்த தடவ வந்தா எங்க வீட்டுக்கு வரணும்"

(எல்லாரும் சொல்றது தான. இந்திக்காரனே இப்பிடி சொன்னப்புறம், விருந்தோம்பல்னு ஒரு அதிகாரமே படிச்ச நாம கூப்புடலைன்ன எப்புடி?)

"நீங்களும் ராச்சஸ்டர் வந்தா (இப்போ அங்கதானடா இருக்கான்) எங்க வீட்டுக்கு வரணும்"

"ஷ்யூர். உங்க ஃபோன் நம்பர் குடுங்க"

பெருமையா நானும் குடுக்க, அவன் என் போனுக்கு ஒரு மிஸ்டு காலும் குடுத்தான். அவன் பேரை கேட்டு என் செல்போன் போன் புக்ல நோட் பண்ணிக்கிட்டேன்.

உள்ள போன தங்கமணி இப்போ ஒரு பொண்ணு கூட வர்றாங்க. அவன் உடனே இவங்க தான் என் மனைவி அப்ப்டின்னு என்கிட்ட அந்த பொண்ண காட்டி சொன்னான். நானும் நம்ம தங்கமணிய காட்டி, இவங்க தான் என் மனைவின்னு அறிமுகம் பண்ணேன்.

"ஓ அவங்க நமக்கு முன்னாடியே அறிமுகம் ஆயிட்டாங்க போலருக்கு" னு சிரிச்சான். நானும் சிரிச்சி வச்சேன்.

நம்ம தங்கமணி என்கிட்ட "இவங்களுக்கு வால்மார்ட் போகணுமாம். நீதான நல்லா வழி சொல்லுவ. அதுனால உன்கிட்ட கூட்டிட்டு வந்தேன்" அப்பிடின்னு சொல்லவும்.

"நான் முதல்லயே இவர்கிட்ட சொல்லிட்டேன்"

அப்புறம் கொஞ்ச நேரம் வழ வழ கொழ கொழன்னு பேசிட்டு பை சொல்லிட்டு வீட்டுக்கு போயிட்டோம்.


சாயந்திரம் ஒரு அஞ்சு மணி இருக்கும். நம்ம பயபுள்ளகிட்ட இருந்து ஒரு போன் - "நீங்க ஃப்ரீயா இருக்கிங்களான்னு"
நானும் சும்மா இல்லாம, "ஓ ஃப்ரீ தான்" அப்பிடின்னு சொல்லி வைக்க, "உங்க வீட்டு அட்ரஸ் சொல்லுங்க. நாங்க வர்றோம்" னு சொன்னான். நானும் வழக்கம்போல அட்ரஸ் கூட சேத்து வர்றதுக்கு டைரக்சனும் குடுக்க, அடுத்த அரைமணி நேரத்துல எங்க வீட்டுல நின்னாங்க, கைல ஒரு கேக்கோட.
நாங்களும் வரவேத்து உக்காரவச்சு பேசிட்டு இருக்கையில, மெதுவா ஆரம்பிச்சான்.
"எத்தன நாளக்கித்தான் அடுத்தவன் கைல சம்பளம் வாங்கிக்கிட்டு அடிமை வேலை செய்யறது? மள மளன்னு காசு சம்பாதிச்சுட்டு, ரிட்டயர்மண்ட் வாங்கிட்டு போய் உக்காந்திரலாம்"
"ஆமாங்க. எனக்கும் அதே எண்ணம் தான். என்னதான் சொல்லுங்க நம்ம ஊரு மாதிரி வருமா?"
"அட உங்களுக்கும் அதே எண்ணம் இருக்கு பாருங்க. அப்ப நீங்க தான் சரியான ஆளு"
"என்னத்துக்கு?"
"என் கிட்ட ஒரு பிஸினஸ் ப்ரபோசல் இருக்கு. ஆம்வே மாதிரி.ஆனா மல்ட்டி லெவல் மார்க்கட்டிங்க். கொஞ்சம் முதலீடு போட்டா போதும். நல்ல வருமானம். ரெண்டே வருசத்துல நீங்க எதிர்பாக்குற அளவு சம்பாதிச்சிடலாம். இப்படித்தான் பாருங்க அல்பனியில ஒரு கப்பிள் மாசத்துக்கு பத்தாயிரம் டாலர் எக்ஸ்ட்ராவா சம்பாதிக்குறாங்க. நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு போறீங்க, இன்னும் எக்ஸ்ட்ராவ பத்தாயிரம் டாலர் வந்தா வேகமா நீங்க நினைக்கிற பணத்த சேவ் பண்ண முடியாதா?"
(புருசனும் பொண்டாட்டியும் மாறி மாறி ஒரு அரை மணி நேரம் பேசுனத சுருக்கி ஒரு பத்தில குடுத்து இருக்கேன்)
"நமக்கு இதுக்கெல்லாம் நேரம் இருக்காதுங்களே"
"நேரம் என்னங்க நேரம். டெய்லி ஒரு இரண்டு மணி நேரம். ஆஃபிஸ்ல இருந்து வந்ததும். அப்புறம் வீக் எண்ட்ல ஒரு 6 மணி நேரம். இது போதும்"
"எங்களுக்கு அவ்வளவு நேரமெல்லாம் இல்லீங்க" என்று ஒரு வழியாக சமாதானம் சொல்லி அனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
இந்த ஒரு தடவையோடு புத்தி வந்ததா?
அடுத்து வால்மார்ட்டில் ஒரு இளம் ஜோடியப் பாத்தோம். பையன் நம்ம பக்கத்து 'நாட்டுக்' காரன். பொண்ணு தாகூர் தேசத்துப் பொண்ணு. ரெண்டு பேரும் அப்பதான் கல்யாணம் ஆனவங்க. நம்ம தங்கமணி அப்போ ப்ரக்னண்ட்டா இருந்தாங்களா? அதப்பத்தி பேசிட்டு ஃபோன் நம்பர் வாங்கிட்டு போயிட்டாங்க. அவங்க கிட்ட இருந்து காலே வரல. சரி ஜென்யூன் கப்புள் தான் போலன்னு இருந்தோம். மறுபடி ஒரு க்ரோசரி கடையில பாத்தப்ப "ஐ லாஸ்ட் யுவர் நம்பர்னு" திரும்ப வாங்கிட்டுப் போனான். நான் கடையில இருந்து வீட்டுக்குள்ள நுழையிறேன். அவன்கிட்ட இருந்து ஃபோன்.
"நீங்க ஃப்ரீயா இருந்தா சொல்லுங்க. உங்க கிட்ட பேசனும்"
"இப்போ கொஞ்சம் பிஸி"
"எப்ப ஃப்ரீயா இருப்பிங்கன்னு சொல்லுங்க. அப்போ பேசுவோம்"
"இந்த சண்டே"
"சரி அப்போ சண்டே ஒரு மூணு மணிக்கு மீட் பண்ணுவோம்"
சண்டேயும் வந்துடுச்சு. சரியா பத்து மணிக்கு அவன் கிட்ட இருந்து ஃபோன்.
"இன்னிக்கு 3 மணிக்கு மீட் பண்றதுல எதும் மாத்தம் இல்லையே"
"அது வந்து.. அது வந்து.. என்ன பேசப்போறோம்னு கொஞ்சம் சொல்றீங்களா?"
"எவ்வளவு நாளைக்கித்தான் இன்னொருத்தன் கிட்ட அடிமை வேலை பாக்குறது? நான் உங்களுக்கு ஒரு அருமையான பிஸினஸ் ப்ரபோசல் வச்சிருக்கேன்"
வந்துட்டாய்ங்கய்யா வந்துட்டாய்ங்க
அதுல இருந்து யாராவது இந்திக்காரன் நம்மள பாத்து சிரிச்சா, இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆயிடுது மூஞ்சி (தங்கமணி சொன்ன கமெண்ட்)
பின் கதை: இதுல இன்னொரு காமெடி என்னன்னா, அந்த பஃபலோ இந்திக்காரன கனடா விசா எடுக்க பஃபலோ போனப்ப, கனடியன் கன்சொலேட் பில்டிங்க்ல வச்சு பாத்துட்டோம். நல்ல வேளைக்கு அவனுக்கு எங்கள அடையாளம் தெரியல. ஆனாலும் நேரா எங்க கிட்ட வந்து - "என்ன கனடியன் விசா வாங்க வந்திருக்கிங்களா? எந்த ஊரு?" அப்பிடின்னு ஆரம்பிச்சான். இந்த பவுன்சரத்தான நாங்க பாத்துட்டோம்ல. "இந்தியால இருந்து வந்திருக்கோம். கனடால ஒரு கல்யாணம் அட்டெண்ட் பண்ணிட்டு அடுத்த வாரம் திரும்ப போறோம்னு" ஒரு சிக்ஸர் அடிச்சுட்டோம்ல.

Saturday, September 19, 2009

கு.ஜ.மு.க பொதுச் செயலாளர் கைது

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கு.ஜ.மு.க பொதுச் செயலாளர் இன்று அதிகாலை மூன்று மணியளவில் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கு.ஜ.மு.க பொதுச்செயலாளர் குடுகுடுப்பை அவர்களின் வருமானம் வலையுலக குடிமக்கள் (!?) அனைவருக்கும் தெரிந்ததே. அப்படியிருக்க அவர் போன வாரம் ஒரு புது செல்போன் வாங்கி இருப்பதாக சி.பி.ஐக்கு தகவல் வந்ததை அடுத்து அவரது இல்லத்திலும் அலுவலகத்திலும் அதிரடி சோதனை நடத்தியது. அதில் அடுக்கடுக்காக பல ஆவணங்கள் சிக்கியது. அதனை அடுத்து அவர்மீது வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ இன்று அதிகாலை மூன்று மணியளவில் அவரது வீட்டு படுக்கை அறைக்குள் நுழைந்து அவரைக் கதறக் கதற இழுத்துச் சென்றது.

சிறையிலிருந்து அவர் அளித்த பேட்டியில் -
"இது ஆளுங்கட்சியின் சதி. அடுத்த 2011 தேர்தலில் கணிசமாக சீட்டுக்களை வென்று என் கட்சி ஆட்சிக்கு வந்துவிடும் என்ற பயத்தில் என்னை சிறையில் அடைத்து தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க முயற்சி செய்கிறது. அவர்களுக்கு ஒன்று கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது. அதுபோல ஆளுங்கட்சி ஆயிரம் வழக்குகள் போட்டாலும் 2011ல் நாங்கள் ஆட்சி அமைப்பதை தடுத்து நிறுத்த முடியாது" என்று கூறி விட்டு கேள்விகள் எதற்கும் பதில் அளிக்காமல் இருந்துவிட்டார்.

"பொதுச்செயலாளர் சிறையிலிடப்பட்டால் கட்சி நடவடிக்கைகள் முடக்கப்பட்டுவிடும் என்று பகல் கனவு காண்கின்றனர் ஆளுங்கட்சியினர். அது நடக்கவே நடக்காது. எங்கள் தலைவனின் பணியினை தொடர்ந்து செய்வோம். அவரை விரைவில் வெளியே கொண்டுவர ஆவன செய்வோம். தொண்டர்கள் துவண்டுவிட வேண்டாம்" துணைப் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக் கொண்ட முகிலன் மிகவும் ஆக்ரோஷமாக அறிவித்தார்.

குடுகுடுப்பை அவர்கள் கைது செய்யப்பட்டபோது "கொல்றாங்களே கொல்றாங்களே" என்று கதறிய படக்காட்சியையும், சிறைச்சாலையில் அவர் பேட்டியையும், முகிலனின் வீர உரையையும் டூப் நியூஸ் தொலைக்காட்சியில் காணலாம்.

பின் குறிப்பு: பொழுது போகலைங்க. யாரையாவது வம்புக்கு இழுக்கலாம்னு யோசிச்சேன். சும்மாதான இருக்காரு குடுகுடுப்பைன்னு... ஹி ஹி ஹி. மற்றபடி குடுகுடுப்பை டல்லாஸில் அவரது இல்லத்தில் தங்கமணி ஹரிணி சகிதம் சந்தோசமாக உள்ளார் என தெரிவித்துக்கொள்கிறேன்.

Thursday, September 17, 2009

கந்தசாமி - சில கேள்விகள்

அப்பாடா, ஒரு வழியா கந்தசாமி படத்தைப் பாத்துட்டேன். (என்னது எவ்வளவு காசு குடுத்தா? அந்த ரகசியமெல்லாம் சொல்ல மாட்டேன்பா). நானும் கந்தசாமி படம் ரிலீஸான நாள்ல இருந்து பல பேரு பல மாதிரி அதுக்கு விமர்சனம் போட்டுட்டாங்களா, பாக்கலாமா வேணாமான்னு ஒரே டைனமோல (என்னது அது டைலமாவா?) இருந்து கட்டக்கடசியா நம்ம தங்கமணி குடுத்த பிரசர்ல பாத்துட்டேன்.


படம் பாத்து முடிச்சதும் கந்தசாமிய கந்தல்சாமியாக்கி விமர்சனம் எழுதுன அத்தன பேர்க்கிட்டயும் சில கேள்வி கேக்கணுமுன்னு தோணுச்சி. அதான் எழுத விரலை எடுத்துக்கிட்டு உக்காந்துட்டேன்.


1. ஏங்க, சிவாஜி படத்துல ரஜினி பணக்காரங்களோட கறுப்புப் பணத்த கொள்ளை அடிச்சத மட்டும் ஒத்துக்கிட்டீங்க. அதையே எங்க சீயான் செஞ்சா மட்டும் கோச்சுக்கிறீங்க?

2. இருக்குறவுங்க கிட்ட எடுத்து இல்லாதவங்கக் கிட்ட அர்ஜூன் ஜெண்டில்மேன்ல குடுத்தா மட்டும் பாத்து விசிலடிச்சிங்க, எங்க சீயான் கோழி வேசம் போட்டு செஞ்சா திட்டித்தீக்குறீங்க?

3. யாரு யாரு கறுப்பு பணம் வச்சிருக்காங்கன்னு (லஞ்சம் வாங்கறாங்கன்னு) ஒரு நெட்வொர்க் வச்சு விஜயகாந்த் ரமணாவுல தெரிஞ்சிக்கிட்டா ஆஹா கை தட்டுறீங்க, எங்க சீயான் தன் ஃப்ரண்ட்ஸ வச்சு நெட்வொர்க் போட்டா மட்டும் ஒத்துக்க மாட்டேன்றீங்க. ஒருவேள எங்க சீயான் விண்டோஸ் மீடியா ப்ளேயர் இல்லாம கம்ப்யூட்டர் ஆப்பரேட் பண்ணினது உங்களுக்கு பிடிக்கலியா?

4. வடிவேலு ஹீரோவா நடிச்ச படத்த பாக்க வந்த குழந்தங்களுக்கு மீச குடுத்தப்பல்லாம் திட்டல, இப்போ குழந்தங்களுக்காகவே படம் எடுத்து அத பாக்க வர்ற குழந்தங்களுக்கு முகமூடி குடுத்தா மொறக்கிறீங்க?

4. மிய்யாவ் மிய்யாவ் பூனைன்னு, குழந்தைங்களுக்காக ஒரு புது ரைம்ஸ் பாட்டு போட்டுருக்காங்க, ரீஜண்டா எந்த சினிமாவுலயாவது கொழந்தங்களுக்கு பாட்டு வந்துச்சா? (என்னது பசங்கன்னு ஒரு படமே வந்துச்சா?)

5. இதுக்கெல்லாம் மேல ஒவ்வொரு தடவ எங்க சீயான் பறக்கும்போதும் அது எப்படி பறக்கறாருன்னு ஒரு செயல்முறை விளக்கமே குடுக்குறாங்க, (விஜயெல்லாம் கயறு கட்டாமலே மாடியில இருந்து பறந்து விழுந்து ஓடிக்கிட்டிருக்குற ரயிலைப் பிடிச்சி தப்பிக்கும்போது) அது கூடவா உங்களுக்குப் பிடிக்கல?

என்னமோ போங்க..
மேல இருக்குற போட்டோல என் மகன கைல வச்சிட்டு போஸ் குடுக்குறது வேற யாரும் இல்ல, நம்ம கந்தசாமி டைரடக்கர் சுசி.கணேசன்



சுசி கணேசன் வெளியிட சிடியை பெற்றுக் கொள்வது வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முகிலன். (இன்னொரு முக்கியமான விசயம். முகிலன கையில வச்சிருக்கிறது சத்தியமா நான் இல்லிங்கோ. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.மன்னர் ஜவஹர்)
பாவம் விக்ரமுக்கு தான் இவர் கூட படம் எடுக்க குடுத்து வக்கல. அன்னிக்கி ஏதோ வேற வேலை இருக்குன்னு போயிட்டார்.
ஓக்கே.. அப்பீட்டு

Thursday, September 3, 2009

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் அகால மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வண்ணம் அவரைப் பற்றிய என் முந்தய பதிவை நீக்கி விட்டேன். அன்னாரது ஆத்மா சாந்தி அடையட்டும். அவரது குடும்பத்தார்க்கும், ஆந்திர காங்கிரஸ் தொண்டர்களுக்கும், ஆந்திர மக்களுக்கும், அவருடன் பயணம் செய்த அவரது பாதுகாப்பு அதிகாரிகளின் குடும்பத்தாருக்கும், விமான ஓட்டிகளின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Wednesday, September 2, 2009

சச்சின் சுயநலவாதியா?

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நண்பரின் இல்லத்தில் விருந்துக்கு அழைத்திருந்தனர். வழக்கம் போல சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆவதற்காக பேசிக் கொண்டிருந்த போது பேச்சு கிரிக்கெட் பக்கம் சென்றது. வந்திருந்த நண்பர்களில் ஒருவர் "டெண்டுல்கர் ஒரு பெரிய சுயநலவாதி. தன் சொந்த சாதனைகளுக்காக மட்டுமே விளையாடுபவர்." என்று வாதத்தை துவக்கி வைத்தார்.

சில நண்பர்கள் - "அப்படி எப்படி சொல்லலாம்?" என்று பதில் வாதம் செய்தனர்.

அவர்களின் வாதத்தை உங்கள் முன் எடுத்து வைக்க வேண்டிய தார்மீகக் கடமை (?!) இருப்பதால் அதை அப்படியே செய்கிறேன்.

டெண்டுல்கர் சுயநலவாதி என்பவர்களின் வாதம்:
டெண்டுல்கர் தொண்ணூறு ரன்களை எட்டி விட்டதும் கட்டையைப் போட ஆரம்பித்து விடுகிறார். சரி, நூறு அடிக்கிறாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை. 97, 98 என்று அவுட்டாகி விடுகிறார். அதற்கு கட்டை போடாமல் அடித்து ஆடி அவுட் ஆகியிருந்தாலாவது அடுத்து வரும் பேட்ஸ்மேன் ரன் எடுத்திருப்பார். இப்படி எத்தனை முறை நடந்திருக்கிறது?

டெண்டுல்கர் சுயநலவாதி இல்லை என்பவர்களின் மறு வாதம்:
சுய சாதனைகளுக்காக ஆடுவது என்பது ஒவ்வொரு ஆட்டக்காரர்களிடமும் இருக்கின்ற ஒரு தன்மை. எந்த ஆட்டக்காரராவது நூறு அடித்ததும் பேட்டைத் தூக்கி பெவிலியனுக்கு காட்டாமல் அடுத்த பந்துக்கு தயாராவது உண்டா? அப்படி இருக்க டெண்டுல்கரை மட்டும் குறை சொல்வது ஏன்? அதோடு ஏதாவது ஒரு ஆட்டம், டெண்டுல்கர் கட்டை போட்டதால் தோற்று விட்டோம் என்று காட்டுங்கள். டெண்டுல்கர் மட்டுமே ஆடியதால் இந்தியா ஜெயித்த ஆட்டங்களை கொஞ்சம் நஞ்சமல்ல"

டெண்டுல்கர் சுயநலவாதி:
ப்ரஷ்ஷர் கேம்களில் டெண்டுல்கர் சோபித்ததே இல்லை. வேகமாக அவுட் ஆகி விடுகிறார். இதனால் எத்தனை ஆட்டங்களை இந்தியா இழந்திருக்கிறது?

டெண்டுல்கர் சுயநலவாதி இல்லை:
எல்லா ப்ரஷ்ஷர் கேம்களிலும் டெண்டுல்கர் வேகமாக ஆட்டமிழந்தது இல்லை. ஷார்ஜாவிலும், சமீபத்தில் ஆஸ்திரேலியாவிலும் டென்ஷன் ஆட்டங்களில் டெண்டுல்கர் ஆடவில்லையா? 2003 உலக கோப்பையில் ரசிகர்களுக்கு வாக்களித்ததன் படி இந்தியாவை இறுதிப்போட்டி வரை இழுத்துக் கொண்டு செல்லவில்லையா? அந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் பறக்க விட்ட சிக்ஸர்களை மறக்க முடியுமா? சச்சின் மட்டும் நன்றாக ஆடினால் போதுமா? மற்றவர்கள் ஆட வேண்டாமா? முதுகு வலியோடு சென்னை டெஸ்ட்டில் வெற்றியின் விளிம்பு வரை கொண்டு போனாரே? மூன்று விக்கட்டுகள் இருந்தும் 17 ரன்கள் எடுக்க முடியாமல் மண்ணைக் கவ்வினோமே இதற்கும் சச்சினா காரணம்?

சுயநலவாதி:
அதே 2003 உலகக் கோப்பை போட்டியிலேயே இறுதி ஆட்டத்தில் வேகமாக ஆட்டமிழந்து விடவில்லையா? அது மட்டுமா? 2007 உலகக்கோப்பையில் இலங்கையிடம் வேகமாக ஆட்டமிழக்கவில்லையா? அவர் எப்போதெல்லாம் வேகமாக ஆட்டமிழக்கிறாரோ அன்றெல்லாம் இந்தியா தோல்வி அடைந்திருக்கிறது.

சுயநலவாதி இல்லை:
எல்லா போட்டியிலும் நன்றாக விளையாட முடியுமா? தவறு நிகழ்வது சகஜம் தானே? ஆனால் டெண்டுல்கரின் டெடிகேஷன் வேறு யாருக்காவது இருக்கிறதா? தன் தந்தை மரணமடைந்த போதிலும் அவர் இறுதிச் சடங்கை முடித்து விட்டு உலகக் கோப்பை போட்டியில் விளையாட இங்கிலாந்துக்குப் பறந்து செல்லவில்லையா? சுய சாதனைக்காகவா சென்றார்?

சுயநலவாதி:
ஏன் சச்சினால் நல்ல கேப்டனாக இருக்க முடியவில்லை? ப்ரஷ்ஷர் ஹேண்டில் செய்ய முடியாததால் தானே?

இப்படி விவாதம் எல்லையில்லாமல் சென்று கொண்டிருந்தது.

இப்போது நீங்கள் சொல்லுங்கள். சச்சின் சுயநலவாதியா? இல்லையா?

சச்சினைப் பற்றி குறை சொல்ல நினைப்பவர்கள் இங்கே சென்று பார்த்துவிட்டு வரவும்.

(பத்த வச்சிட்டியே பரட்ட)

Tuesday, September 1, 2009

நான் பாப்புலராயிட்டேன் பாப்புலராயிட்டேன் பாப்புலராயிட்டேன்

இந்தப் பதிவை விரும்பிப் படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை கோடியைத் தாண்டிவிட்டதாலோ என்னவோ, என் வலைப்பூவின் URL போலவே இன்னொரு வலைப்பூ துவக்கப்பட்டிருக்கிறது. என் வலைப்பூவின் URL http://pithatralkal.blogspot.com/. அந்த வலைப்பூ http://pithatralgal.blogspot.com/ எனக்கு நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவை அந்த நண்பருக்கும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பின்குறிப்பு: இது நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. அந்த வலைப்பூ (நாமக்கல் சிபி) நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அந்த நண்பருக்கு இப்படி ஒரு வெட்டி வலைப்பூ இருப்பது தெரியாமலே இருக்கலாம். இந்த பதிவு உங்களை எந்த வகையிலாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.