பாகம்-1 பாகம்-2
அடுத்த பாகம் இங்கே
ஈசிஆர், சென்னையின் சமீபத்திய
யூத் ஜாயிண்ட். ரோடு முழுக்க தாபாக்களும் ரெஸ்டாரண்டுகளும் சிதறியிருக்கின்றன.
அப்படி ஒரு தாபாவில் முத்துவும், சுரேஷும் எதிரெதிராக உட்கார்ந்திருந்தார்கள்.
அவர்களுக்கு நடுவில் ஒரு கோழி செத்து தந்தூரியாகக் கிடந்தது.
“சரி திட்டத்தைச் சொல்லு”
“ம். டெக்கோலிக் ஆசிட் பத்தி
கேள்விப்பட்டிருக்கியா?”
“டெக்கோலிக் ஆசிடா? அது என்ன”
“அதோட கெமிக்கல் ஃபார்முலாவெல்லாம் சொல்லவரலை
நான். அதை தக்காளி சூப்ல கலந்தா தக்காளியோட அசிடிட்டியோட சேர்ந்து அது ஹார்ட்
பேஷண்ட்ஸ்க்கு ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஹார்ட் பர்ன் மாதிரின்னு
வச்சிக்கோயேன். ஆனா, அந்த அசௌகரியம், அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் மாதிரி ஃபீலாகும். உயிருக்கு ஒண்ணும் ஆபத்து வந்திராது”
“சரி. அதை வச்சி என்ன செய்யப் போறோம்?”
“பெருசுக்கு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி பைபாஸ்
சர்ஜரி செஞ்சிருக்கு. அதிலருந்து பெருசு ட்ரிங்க்ஸ் தொடுறதையே விட்டுருச்சி. எங்க
போனாலும் டொமட்டோ சூப் மட்டும் தான். உங்க பாருக்கு சரக்கை கைமாத்த வரும்போதும்,
அதைத்தான் ஆர்டர் பண்ணும். அந்த டொமட்டோ சூப்ல, டெக்கோலிக் ஆசிடை நீ கலக்கணும்”
“அய்யோ நானா?”
“நீ செய்யாம? அதுக்குத்தாண்டா உனக்கு ரெண்டு கோடி”
“இல்லடா. நான் பார்ல நிக்கிறேன். நான் எப்பிடி
சூப்ல கலக்க முடியும்?”
“எப்பிடி செய்யன்னு என்கிட்ட கேக்காத. அதையும்
நானே சொல்லிக் குடுத்து ரெண்டு கோடியையும் சொளையா குடுக்க நான் என்ன கேணையனா?
எப்பிடிச் செய்யப்போறங்கிறதை நீயே முடிவு பண்ணிக்கோ. ஆனா, கலந்துரணும். அதுல
ஏதாவது சொதப்புன? மவனே நீ எங்க போனாலும் விடமாட்டேன். தேடி வந்து வெட்டுவேன்”
“ஏய் என்ன? இப்பிடிப் பேசுற? எப்பிடியாவது
செய்யறேன். ஆனா நீ முதல்ல மொத்த ப்ளானையும் என் கிட்ட சொல்லு”
“சரி. இதான் ப்ளான்” ஒரு நாப்கினை
எடுத்து பேனாவால் ஒரு செவ்வகம் வரைந்தான். இரண்டு பக்கமும் இரண்டிரண்டு வட்டம்
வரைந்தான். செவ்வகத்தின் ஒரு பக்கம் அலை போல வரைந்தான்.
“இதுதான் டேபிள். நாங்க நாலு
பேரும் இப்பிடித்தான் உக்காந்திருப்போம். நான் உன்கிட்ட
அன்னைக்கிக் காலையிலயே ஒரு பெட்டியைக் குடுத்து வச்சிருவேன். நாங்க உள்ள வர்றதுக்கு
முன்னாடி நாங்க உக்காரப் போற டேபிளுக்குப் பக்கத்துல இருக்கிற இந்த ஸ்கீரினுக்குப்
பின்னாடி ஒளிச்சி வச்சிடணும். நானும் பெருசும் சரக்கோட வருவோம். பவுடர் ரவியும்
அவனோட ஆளும் பெட்டியில பணத்தோட வருவாங்க. பெட்டிகளை மாத்தினதும், நான்
பாத்ரூமுக்குள்ள போய் பணம் சரியா இருக்கான்னு செக் பண்ணிட்டு வருவேன். அடுத்து
அவங்க ஆள் சரக்கு சரியா இருக்கான்னு பாத்துட்டு வருவான். அப்புறம் பெருசும்
ரவியும் ஏரியா பிரச்சனைகள் பத்தி பேசுவாங்க. அப்ப பெருசுக்கு உன் சூப்பைக்
குடுச்சதால ஹார்ட் அட்டாக் வரும்”
“திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்தா சந்தேகம் வராதா?”
“சந்தேகம் வரும். சந்தேகம் வராம இருக்க ஒரு
ஏற்பாடு செஞ்சிருக்கேன்”
“என்ன ஏற்பாடு?”
“அது எதுக்கு உனக்கு?”
“ஏய் என்னப்பா. நானும் உன்னோட பார்ட்னர்தானே? அதோட
முழு திட்டத்தையும் சொன்னா அதுல ஏதாவது லூப்ஹோல் இருந்தா சொல்லுவேன்ல?”
சுரேஷ் முத்துவை முறைத்தான். “சூப் குடிச்சதும்
எஃபெக்ட் வராது. அந்த எஃபெக்ட் வரப்போற சிம்ப்டம்ஸ் தெரிஞ்சதும், ரவியோட ஆள்
ஒருத்தன் வந்து போலீஸ் வர்றாங்கன்னு சொல்லுவான். எடத்தைக் காலிசெஞ்சாவணுங்கிற
பதட்டத்துலதான் ஹார்ட் அட்டாக் வந்துட்டதா நினைப்பாரு பெருசு. போலிஸ் வருதுங்கிற
பதட்டமும் ஹார்ட் அட்டாக் மாதிரி நெஞ்சு வலிக்கிற பதட்டமும் சேர்ந்து குழப்பம்
வந்துரும். அந்தக் குழப்பத்துல நான் ஸ்க்ரீனுக்குப் பின்னாடி இருக்கிற பெட்டியோட
பணப்பெட்டியை மாத்தி வச்சிட்டு பெருசை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுக்
கிளம்பிருவேன். நீ ஸ்க்ரீனுக்குப் பின்னாடி இருக்கிற பெட்டியை எடுத்து
பார்க்கிங்க்ல நான் ஏற்கனவே நிறுத்தியிருக்கிற காரோட டிக்கியில வச்சிரு. பெருசை
ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிட்டு, நேரா இங்க வந்து காரை எடுத்துக்கிட்டு ஜூட்
தான். பெருசு ஆஸ்பத்திரியில இருந்து திரும்பி வந்து பணம் காணோம்னு தெரிஞ்சிக்கிறதுக்குள்ள
நான் எஸ்கேப் ஆகியிருப்பேன்.”
முத்து ஒன்றும் சொல்லாமல் சுரேஷைப் பார்த்தான்.
“என்ன பாக்குற? எதுவும் லூப் ஹோல் தெரியுதா?”
“போலிஸ் வருதுன்னு சொல்லப்போற அந்த ஆள் யாரு?
அவனும் உன்னோட திட்டத்துல பார்ட்னரா?”
“இல்லை. அவன் ஒரு அள்ளக்கையி. அவன் கிட்ட நான்
எந்தத் திட்டத்தையும் சொல்ல மாட்டேன். சும்மா ஒரு இருவதாயிரம் ரூவா குடுத்து இந்த
நேரத்துல இப்பிடி வந்து சொல்லுன்னு மட்டும் சொல்லிருவேன். அவனும் காசுக்காக வந்து
சொல்லுவான். அவனுக்கு அதுல என்ன லாஸ்?”
“ஆளை ஏற்கனவே பிடிச்சிட்டியா?”
“இன்னும் இல்லை. உன் கூட பேசிட்டு அடுத்ததா
அவனைத்தான் பார்க்கப் போறேன்”
முத்து மௌனமாக சுரேஷைப் பார்த்தான்.
“வேற எதாவது கேள்வி இருக்கா?”
“ஒரு வேளை போலீஸ் வந்திருச்சின்னா என்ன செய்வ?”
“ஏண்டா அபசகுனமா பேசுற? திட்டம் உன்னையும்
என்னையும் தவிர எவனுக்கும் தெரியாது. நீ போலீஸ் கிட்ட சொன்னாத்தான் உண்டு”
“டேய். நான் ஏன் போலீஸ்கிட்ட போகப் போறேன். உன்
திட்டம் யாருக்கும் தெரியாது. ஆனா சரக்கு கை மாத்தப் போறீங்கங்கிற விசயம்
போலீஸ்க்குத் தெரிஞ்சா?”
“போலீஸ் வந்தா என்ன செய்ய முடியும்? பெருசும் சரி
நானும் சரி, போலீஸ் கிட்டருந்து தப்பிக்கத்தான் முயற்சி பண்ணுவோம். அங்கயே அரெஸ்ட்
ஆவ மாட்டோம். சோ, துப்பாக்கி சண்டை போட வேண்டியிருக்கும். பெட்டியை ஸ்க்ரீனுக்குப்
பின்னாடி மாத்தி வச்சிருந்து, போலீஸ் துப்பாக்கிக் குண்டுக்குத் தப்பி உயிர்
பிழைச்சிருந்தா ரெண்டு கோடி. இல்லைன்னா ஜெயில்ல களி திங்க வேண்டியதுதான். ஆனா
உசிர் போனாலும் பெருசை ஏமாத்தத் திட்டம் போட்டது வெளிய தெரியாமப் பாத்துக்குவேன். ஏன்னா
பெருசு கையால கிடைக்கிற சாவு கொடூரமா இருக்கும்.”
“ஒரு ஐடியாவுக்குத்தான் கேட்டேன்”
“சரிடா. நான் கிளம்பறேன். உன்னைய பார்ல
விட்டுறவா?”
“வேணாம். நான் ஆட்டோ பிடிச்சி போய்க்கிறேன். நீ
போ”
ஈ.சி.ஆரின் வெயிலில் ஐ-10 மறையும் வரை பார்த்துக்
கொண்டிருந்துவிட்டு ஃபோனில் கார்த்திக்கின் நம்பரை ஒத்தினான். “கார்த்திக் சார். முத்து. சுரேஷ் முழு ப்ளானையும் என்கிட்ட
சொல்லிட்டான்”
...
“சரி சார். ஈசிஆர்ல இருக்கிற தாபா.”
...
“அதேதான் சார். வாங்க நான் இங்கயே இருக்கேன்”
ஃபோனை வைத்துவிட்டு
தட்டில் இருந்த தந்தூரி சிக்கனை எடுத்துக் கடித்தான்.
சிட்டி செண்டர் மால். மூன்றாவது மாடியில்
இருக்கும் FruitPunchல் சாத்துக்குடி ஜூஸ் ஒன்றை வாங்கிக்கொண்டு
ஃபுட் கோர்ட்டில் இருந்த சேர் ஒன்றில் உட்கார்ந்தான். பக்கத்து சேரில்
உட்கார்ந்திருந்தவன் கே.எஃப்.சியின் சிக்கனை வறுத்த கோழியை உள்ளே தள்ளிக்
கொண்டிருந்தான்.
“ரொம்ப நேரமா வெயிட் பண்றியா?”
“இவ்வ இவ்வவ்வான் வவ்வேன்” வாயில் சிக்கனோடு
பேசினான்.
“தின்னுட்டுப் பேசு. ஒண்ணும்
புரியலை”
கோக்கைக் குடித்துவிட்டு ‘ஏவ்வ்வ்வ்’ சத்தமாக ஏப்பம் ஒன்றை வெளியேற்றினான்.
“சொல்லு. இன்னா மேட்டரு?”
“உனக்கு இருவத்தாஞ்சியிரம் சம்பாதிக்க ஆசையா?”
“நீ இன்னாத்துக்கு எனக்கு இருவத்தாஞ்சியரம்
குடுக்குற”
“ஒரு சின்ன வேலை செய்யணும்”
“என்ன வேலை?”
“நாளைக்கழிச்சி என்ன நடக்கப் போவுதுன்னு உனக்குத்
தெரியும்னு நினைக்கிறேன்”
“தெரியும். அதுக்கென்னா இப்போ?”
“அதுல பெட்டி கை மாறினவுடனே நான் ஒரு மிஸ்டு கால்
குடுப்பேன். நீ பாருக்குள்ள வந்து உங்க தல ரவிக்கிட்ட போலீஸ் வருதுன்னு மட்டும்
சொல்லணும்”
“இன்னாத்துக்கு சொல்லணும்?”
“சரி விடு நான் வேற ஆளைப் பாத்துக்குறேன். எச்சிக்கைய
உதறுனா ஆயிரம் காக்கா”
“யேய் இருமா. முணுக்குங்கிற. சரி சொல்றேன். ஆனா
25 பத்தாது. 45ஆக் குடுத்துரு”
“அது என்ன 30?”
“என் டாவு ரொம்ப நாளா ஐஃபோன் ஒண்ணு கேட்டுட்டு இருக்கு.
அதுக்குத்தான்”
“சரி போ. 45 ஆயிரமா
வச்சிக்கோ. இந்தா இதுல பத்தாயிரம் இருக்கு. அட்வான்ஸ்” ஒரு கவரை மேஜையில்
சிக்கன் ப்ளேட்டுக்குப் பக்கத்தில் வைத்து விட்டு எழுந்தான். ஜூஸின் கடைசி சொட்டை
உறிஞ்சி கப்பைக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு வெளியேறினான்.
“இதான் அவன் ப்ளானா?”
“ஆமா சார்”
கார்த்திக்கின் கார் தாபாவிலிருந்து பாரை
நோக்கிப் போய்க்கொண்டிருந்த்து.
“ம்ம். எங்களுக்கும் நார்க்காட்டிக்ஸுக்கும் நல்ல
வேட்டைதான் அன்னைக்கி. நான் பாத்துக்குறேன்”
“சார் என்னய மட்டும்..”
“அட என்ன முத்து நீ. கீறல் விழுந்த ரிக்கார்ட்
மாதிரி அதையே சொல்லிக்கிட்டுருக்க. உன்னைக் காப்பாத்த வேண்டியது என் பொறுப்பு.
போதுமா?”
“சரி சார்”
பாரில் முத்துவை இறக்கிவிட்டுவிட்டு செல்ஃபோனை
எடுத்து,
“சுகுமார்”
“சொல்லுங்க கார்த்திக். என்ன விஷயம்”
“உங்களுக்கு ஒரு
பெரிய வேட்டை காத்துக்கிட்டிருக்கு”
பத்து மணி வசூலை முடித்துக் கொண்டு திரும்பிக்
கொண்டிருந்தான் சுரேஷ். காரில் பெட்ரோல் சிவப்பைத் தொட்டுக்கொண்டிருந்தது. வழியில்
இருந்த அந்த பெட்ரோல் பங்கில் திருப்பி நிறுத்தினான். அவனைத் தொடர்ந்து ஒரு
டூவீலரும் உள்ளே நுழைந்த்து. காரை விட்டு இறங்கிய சுரேஷ், ஃபுல் டேங்க் என்று
சொல்லிவிட்டு சிகரெட் பிடிப்பதற்காக பங்கை விட்டு வெளியே வந்தான்.
திட்டத்தை மனசுக்குள் அசை போட்டுக்கொண்டே
சிகரெட்டை முடித்துவிட்டு உள்ளே போனான். பில்லை வாங்கி பணத்தை எண்ணிக்
கொடுத்துவிட்டு காரில் ஏறினான். பங்கை விட்டு வெளியே வந்து ரோட்டைத் தொட்டதும்,
“அப்பிடியே ஓரமா நிறுத்து. இல்லைன்னா மூளை
சிதறிடும்”
தலையில் பிஸ்டல் முனையின் சில்லிப்பை உணர முடிந்தது.
காரை ஓரமாக நிறுத்தியதும், பிஸ்டலின் பின்பக்கத்தால் தலையில் அடிபட்டு மயங்கினான்.
(தொடரும்)அடுத்த பாகம் இங்கே