Thursday, February 23, 2012

கொள்ளை



மணி 3:10 PM


வெளியே சட சடவென்ற துப்பாக்கி வெடிக்கும் சத்தமும் ஆட்கள் அலறும் சத்தமும் கேட்டது. ஜிப்பை மூடக் கூட நேரமில்லாமல் சட்டென்று தரையோடு தரையாக விழுந்தேன். என்னதான் ஒரு மணி 
நேரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படும் பாத்ரூம் என்றாலும் மூத்திர மணம் போகாது என்பதை அந்த பாத்ரூம் தரை சிறுகச் சிறுகச் சொல்லிக் கொடுத்தது. வெளியே ஃபர்னிச்சர்கள் நகரும் ஓசையும் யாரோ சத்தமாகப் பேசுவதும் தெளிவில்லாமல் கேட்டது. தீவிரவாதிகளாக இருக்கலாமோ?? இருக்கும் இடத்தை விட்டு நகராமல் அப்படியே படுத்திருந்தேன்.



மணி 10:30 AM



“எப்ப சார் கிரெடிட்டாவும்?” 



“இம்மீடியட்டா ஆகிடும்” கம்ப்யூட்டர் திரையில் இருந்து கண்ணை விலக்காமல் சொன்னேன். 



“அப்பிடின்னா அந்த செக்கை ரிலீஸ் பண்ணிடுங்க சார்”



“எந்தச் செக்கை சார்” என்று நிமிர்ந்து அந்த கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி போட்ட பெரியவரைப் பார்த்துக் கேட்டேன்.



“ஹோல்ட்ல வச்சிருக்கே சார். சொர்க்கம் ஆட்டோ ஃபைனான்ஸ் செக்”



நான்கு கிளிக்குகள், இரண்டு எண்டர்களில் திரையில் ஒளிர்ந்த தொகையைப் பார்த்து, “ரெண்டு லட்சத்துக்கு இருக்கே அதுவா?”



“ஆமா சார்.”



“ஓக்கே. கிளியரன்ஸுக்கு அனுப்பியாச்சி சார். இன்னைக்கி ஈவினிங்குக்குள்ள அது கிள்யராகிடும். எதுக்கும் நீங்க அவங்களுக்கு ஒரு ஃபோன் போட்டு கன்ஃபர்ம் பண்ணிக்கோங்க”



“ஓக்கே சார். தேங்க்யூ வெரி மச்”



டேபிளின் ஓரத்தில் இருந்த அந்த நோட்டுக்கட்டின் மீது 200 என்று எழுதி ட்ராவுக்குள் வைத்தேன். செல்ஃபோன் ஒலித்தது. மகேஷ்.



“சொல்டா மச்சி. எப்பிடியிருக்க? ராதா எப்பிடியிருக்கா?”



எதிர்முனையில் விசும்பலே பதிலாகக் கிடைத்தது.



“என்னடா ஆச்சி?”



“ராதாவை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்கேண்டா”



“என்னடா சொல்ற. என்ன பிரச்சனை?”



“பைக்ல போகும்போது ஆக்சிடண்ட்டா. நான் ஹெல்மெட் போட்டுருந்ததால லேசா சிராய்ப்போட தப்பிச்சிட்டேன். அவளுக்கு தலையில அடி பட்டுருச்சி. ப்ரெயின்ல ப்ளட் க்ளாட் இருக்கு உடனே ஆப்பரேஷன் செய்யணுங்கிறாங்கடா”



“நான் வரவா?”



“வேண்டாம்டா. அவசரமா கொஞ்சம் பணம் தேவைப்படுதுடா?”



“எவ்வளவு?”



“ரெண்டு லட்சம். உடனே கட்டச் சொல்றாங்க. கட்டுனாத்தான் ஆப்பரேஷன் செய்வாங்களாம்?”



டிராவில் வைத்த தொகை நினைவுக்கு வந்தது. “மச்சி என் கையில இல்லை. ஆனா இப்பத்தான் ஒரு கஸ்டமர்கிட்ட கேஷ் டெபாசிட் வாங்கினேன். மூணு மணிக்கு அக்கவுண்ட் முடிக்கணும். அதுக்குள்ள வேற எங்கயாவது பொரட்டிக் குடுத்துடுவன்னா வந்து வாங்கிட்டுப் போ”



எதிர்முனையில் மௌனம்.



“சரிடா. மூணு மணிக்குள்ள எப்பிடியாவது பொரட்டிரலாம். நான் உடனே அங்க வர்றேன்” 



போனை வைத்துவிட்டு யோசித்தேன். மூணு மணிக்குள் கொண்டு வந்து கொடுத்து விடுவானா? கொடுக்கவில்லையென்றால் என்ன ஆகும்? வேலை போய்விடுமா? கையில் காலில் விழுந்து அவகாசம் கேட்க வேண்டுமா? மேனேஜரிடம் இப்போதே சொல்லிவிடலாமா? மேனேஜரின் அறையைப் பார்த்தேன். கண்ணாடிக்குள் டெஸ்பாட்ச் கிளார்க்குக்கு எதற்கோ திட்டு விழுந்து கொண்டிருந்தது. மானேஜரின் மூடு சரியில்லை. இப்போது போய் அவரிடம் இதைச் சொல்லி ஒன்றும் இல்லாமல் செய்துவிடவேண்டாம். ஆண்டவன் இருக்கிறான். எதுவும் தப்பாக நடக்காது.



அடுத்த இரண்டு கஸ்டமர்களைப் பார்த்து அனுப்பியதும் மகேஷ் வந்தான். ஏற்கனவே கேரி பேகில் போட்டு வைத்திருந்த பணத்தை சட்டைக்குள் வைத்துக் கொண்டு எழுந்தேன். கேள்வியாகப் பார்த்த 



சூப்பிரண்டெண்டிடம், காப்பி என்பது போல கையைக் காண்பித்துவிட்டு கூண்டை விட்டு வெளியேறினேன். பேங்கை விட்டு வெளியே வந்ததும், பணத்தை அவனிடம் கொடுத்துவிட்டு, “மகேஷ் மூணு மணிக்குள்ள வந்துருடா. இல்லைன்னா வேலை போயிரும். ஜாக்கிரதை” என்று அழுத்தமாக எச்சரித்துவிட்டு, காபி+தம் போட்டுவிட்டு கூண்டுக்குத் திரும்பினேன்.



மணி 3:15 PM



வெளியே துப்பாக்கி வெடிக்கும் சத்தம் ஒரு முறை கேட்டது. யாரோ ஒரு பெண், டெல்லர் த்ரீயாக இருக்கலாம், வீரிட்ட சத்தமும் கேட்டது. மெதுவாக தரையோடு தரையாக நகர்ந்து கதவுக்கு அருகில் வந்தேன். இப்போது வெளியே பேசிக்கொள்ளும் சத்தம் தெளிவாகக் கேட்டது. எவனோ கேஷியர்களின் ட்ராக்களை க்ளியர் செய்யச் சொல்லிக் கொண்டிருந்தான். 




மணி 2:30 PM



கஸ்டமர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருந்தது. என் கவுண்டரில் யாருமே இல்லை. க்ரோமில் ஆங்க்ரி பேர்ட்ஸ் விளையாட ஆரம்பித்தேன். மனசுக்குள் இன்னும் அவன் வரவில்லை என்ற கவலை கார்ப்பெட்டில் கொட்டிய ஒயினாகப் பரவியது. 



மணி 3:25 PM



கதவு திறக்கும் சத்தம் கேட்டது, சுவற்றோடு ஒட்டிக் கொண்டேன். மேனேஜரும் இன்னும் மூன்று ஆண் ஸ்டாஃபுகளும் உள்ளே தள்ளப் பட்டனர். அவர்களைத் தொடர்ந்து முகத்தை முகமூடியால் மறைத்து கையில் துப்பாக்கியை நீட்டிப் பிடித்தவாறு ஒருவன் உள்ளே நுழைந்தான். 



“இவன் தான் நீங்க சொன்ன இன்னொரு கேஷியரா?”



‘ஆமாம்’ என்பது போல தலையை மேலும் கீழும் ஆட்டிய மேனேஜரின் வாயெல்லாம் ரத்தம்.



“அவனை மாதிரியே நீங்களும் தரையோட தரையா படுங்க”



மறுப்பு சொல்லாமல் நால்வரும் தரையில் படுத்தனர். 



வெளியேறி கதவை மூடினான். அவன் காலடி ஓய்வது வரை காத்திருந்து விட்டு, மற்றவர்களைப் பார்த்து “என்ன நடக்குது” என்று கிசுகிசுத்தேன்.



மேனேஜர் என்னவோ சொல்ல வாயெடுத்து, வலியால் பேச முடியாமல் கர்ச்சீப்பால் வாயை மூடிக் கொண்டார். சூப்பிரண்டெண்டட், “ராப்பரிப்பா. அலார்ம் கூட அடிக்க முடியலை. சுத்தமா பேங்கை தொடச்சிட்டாங்க” என்றார் கவலையாய்.



இரண்டு ஐம்பத்தைந்துக்குப் பணத்தைக் கொண்டுவந்து கொடுத்துவிட்ட மகேஷை எண்ணி மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டேன்.



பண்புடன் இதழில் செப்டம்பர் மாதம் வெளிவந்த கதை

1 comment:

Yaathoramani.blogspot.com said...

இன்றைய சூடான சூழலைவைத்து
படைத்துள்ள தங்கள் கதை மிக மிக அருமை
சொல்லிச் செல்லும் பாணி விறுவிறுப்பை கூட்டிச் செல்லுகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்