Tuesday, June 5, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 6செந்திலும் ஓமனாவும் வந்திருக்க, அவர்களை வரவேற்பது போல எழுந்து நின்றாள் மாலா.

அவள் சொன்ன வாக்கியத்தின் அர்த்தம் என்ன என்று விளங்காமல் முழித்துக் கொண்டிருந்தேன்.

அப்பார்ட்மெண்டுக்குப் போய் படுக்கையில் விழுந்தும் ஒன்றும் விளங்கவில்லை. அவள் என்ன சொன்னாள்? ஒரு வேளை அவள் என்னை விரும்புகிறாளோ? எனக்கும் அவள் மேல் விருப்பம் தான். ஆனால் இதுவரை ஊரும் ஜாதியும் என்னை அடுத்த கட்டத்துக்கு நகர விடாமல் தடுத்திருந்தது. காத்திருந்தது போதும் என்று இப்போது அவளே ஓப்பன் செய்து விட்டாளா? இல்லை இது இயல்பாக சொன்ன வாக்கியமா? புரியாமல் குழம்பி தூக்கம் வராமல் தவித்தேன். பால்கனிக்குப் போய் ஒரு சிகரெட் எடுத்து ஏற்கனவே அசுத்தமாகியிருந்த பெங்களூருவின் காற்று மண்டலத்தை இன்னும் அசுத்தப் படுத்தலானேன்.

“என்னடா தூக்கம் வரலையா?” செந்தில் கதவினருகில் சட்டை போடாமல் லுங்கி மட்டும் கட்டிக் கொண்டு, குளிருக்காக கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.

“ஆமாண்டா. அது சரி. நீ சீக்கிரம் தூங்கிருவியேடா, இன்னமும் தூங்கலையா?”

“இல்லடா. தூக்கம் வரலை. ஆக்சுவலி, நாளைக்கு ட்ரீட் போகும்போது சொல்லலாம்னு தான் இருந்தோம். ஆனாலும் யார்கிட்டயாவது சொல்லலைன்னா தூக்கம் வராது போல”

என்ன இவன் பீடிகை போடுகிறான், என்று நினைத்துக் கொண்டே, “என்னடா மேட்டர்? சொல்றா”

“இல்லடா, நானும் ஓமனாவும் லவ் பண்றோம்”

“அட கங்க்ராட்ஸ்டா. இது எப்பத்தில இருந்து?”

“இன்னைக்கு தாண்டா பீடா வாங்கிட்டு வரும்போது நான் அவ கிட்ட சொன்னேன். அவளும் உடனே ஏத்துக்கிட்டா”

“இங்க பாருடா. கல்லுளிமங்கனுங்களா இத்தனை நாள் கம்முனு இருந்துட்டு இப்ப லவ் பண்றோம்னு நிக்கிறீங்க?”

செந்தில் வெட்கப்பட்டான். “அதுக்குக் காரணம் நீயும் மாலாவும் தாண்டா”

“என்னது நானும் மாலாவுமா? நாங்க என்னடா செஞ்சோம்?”

“ஆமா நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்க. எங்க போனாலும் எங்களை தனியா தனியா விட்டுட்டுப் போயிர்றீங்க. நாங்க ரெண்டு பேருமா இருந்து இருந்து எங்களுக்குள்ள லவ் வந்திருச்சி”

அடப்பாவி. கூடவே இருக்கும் இவனே இப்பிடி நினைத்துக் கொண்டிருந்தானென்றால் மற்றவர்கள் என்ன எல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ?

“டேய் நாங்க ரெண்டு பெரும் லவ் பண்றோம்னு எப்படா சொன்னோம்?”

“பின்ன இல்லையா?”

“அடப் பாவி அதெல்லாம் இல்லைடா”

“ஏய் என்னடா சொல்ற. நாங்க எல்லாம் அப்பிடித்தான நினைச்சிட்டு இருக்கோம்?”

பதில் சொல்லாமல் செந்திலையே பார்த்தேன். என்ன சொல்லப் போகிறேன். என் அடி மனதுக்குள் மாலாவை விரும்பத் துவங்கியிருப்பதையா? இல்லை இன்று மாலா கொளுத்திப் போட்ட வெடி என் மனதை குவாரியைப் போல வெடிக்க வைத்துக் கொண்டிருப்பதையா?

“என்னடா பதில் சொல்லாம என்னையே பார்த்துட்டு இருக்க?”

இவனிடம் சொல்லலாமா? இதுவரை வாழ்க்கையில் யாரையும் நெருங்கிய நட்பாக எண்ணி என் சொந்த வாழ்க்கையை திறந்து வைத்ததில்லை. மாலா உட்பட. செந்திலிடம் சொல்லலாமா? ஆனால், இன்று நடந்த சம்பவத்திற்குப் பிறகு யாரிடமாவது சொல்வதுதான் நல்லது என்றும் தோன்றியது.

“இல்லடா. மாலாவை மீட் பண்ணினப்ப இருந்தே என் மனசுக்குள்ள அவ வந்துட்டா. அவளோட தைரியமும், விகல்பமில்லாம பழகுறதும் எனக்கு ரொம்பப் பிடிச்சிப் போச்சி. ஆனா”

“ஆனா என்னடா?”

“இதுவரைக்கும் அவ கிட்ட என்னோட விருப்பத்தை சொல்லவே இல்லைடா. அவ மனசுல எதுவும் இல்லாம சாதரணமாத்தான் என் கிட்ட பழகறாளோன்னு எனக்குள்ள ஒரு சந்தேகம் இருக்கு. அவசரப்பட்டு என்னோட காதலைச் சொல்லி அவ நட்பை இழக்க விரும்பலை”

“இல்லடா தேவா. வெளிய இருந்து பார்க்கிற என்னை மாதிரி ஆளுங்களுக்கு உங்க ரெண்டு பேருக்கும் உள்ள நட்பையும் தாண்டி ஏதோ ஒண்ணு இருக்கிற மாதிரிதான் தோணுது. மத்த எல்லாரையும் விட உன் கிட்ட அவ ஸ்பெஷலாத்தான் பழகுறான்னு நினைக்கிறேன்”

இன்று நடந்த சம்பவத்தை செந்திலிடம் விளக்கினேன். “அவ என்ன மீன் பண்ணான்னே புரிஞ்சிக்க முடியலைடா”

“அடப்பாவி இதுக்கு மேல அவ என்னடா சொல்லணும்? தைரியமா போய் அவகிட்ட சொல்லு. நான் இப்பப் போய் தூங்குறேன். காலைல பேசலாம்”

அவன் தூங்கப் போய்விட்டான். எனக்குத் தான் தூக்கம் வரவில்லை. இன்னும் இரண்டு சிகரெட்டுகளை சாம்பலாக்கிவிட்டு படுக்கையில் விழுந்தேன். விட்டத்தை வெறித்துக் கொண்டே தூங்கிப் போனேன். தூக்கத்தில் என்ன என்னவோ கனவுகள். ஒரு கனவில் நாங்கள் இருவரும் மாலையும் கழுத்துமாக என் அப்பாவின் காலில் விழுகிறோம். எழுந்து பார்த்தால் என் அப்பா கையில் வீச்சரிவாளோடு நிற்கிறார். அரிவாளை ஓங்கி மாலாவை நோக்கி வீச நான் குறுக்கே விழ என் கழுத்தில் இறங்குகிறது. இன்னொரு கனவில் நாங்கள் இருவரும் அம்பாசிடர் காரில் தப்பித்துப் போக பின்னாடி ஒரு கும்பல் லாரிகளில் கையில் அரிவாளோடு துரத்துகிறது. இன்னும் பல கனவுகள் சரியாக நினைவில்லை. ஆனால் எல்லா கனவிலும் அரிவாள் தவறாமல் இருந்தது.

எப்படியோ விடிந்தது. சனிக்கிழமையானதால் பதினோரு மணிக்காய் எழுந்து பல் விளக்கி ஒரு காபியைப் போட்டு பால்கனிக்குப் போய் சிகரெட்டைப் பற்ற வைத்தேன். ணங்கென்று தலையில் விழுந்த குட்டுக்கும், “காலங்காத்தாலேயே கொள்ளிக்கட்டைய எடுத்து வாய்ல வச்சிக்கணுமா?” என்ற குரலுக்கும் திரும்பினேன். மாலா நின்றிருந்தாள். இரவு உடையில் தான் இருந்தாள். பின்க் நிற முழுக்கை வைத்த சட்டையும், அதே நிற பேண்டும். பஜாமாஸ் என்பார்களே அந்த உடை அணிந்திருந்தாள்.

“என்ன மாலா இன்னேரம் இங்க வந்திருக்க. லன்ச் 2 மணிக்கு தானே?”

“ரெண்டு மணிக்குதாண்டா. வீட்டுல பால் இல்லை. அதான் இங்க காஃபி குடிக்கலாம்னு வந்தேன். உனக்கும் போடட்டுமா? ஓ ஏற்கனவே கையில வச்சிருக்கியா” அவளே கேள்வியாயும் பதிலாயும் போனாள்.

மீண்டும் மனம் குழந்தை கிறுக்கிய ஓவியமாய் ஆகிப் போனது.

(தொடரும்)


அடுத்த பாகம் இங்கே

2 comments:

நாடோடி இலக்கியன் said...

// ஆனால் எல்லா கனவிலும் அரிவாள் தவறாமல் இருந்தது.//
ஹரி படங்கள் ரொம்ப பாக்குரீங்க போல..
:-)))

சிவக்குமரன் said...

.