Friday, June 15, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 8மாலா நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தாள். அவள் பார்வையைச் சந்திக்கத் திராணியில்லாமல் தலையைக் குனிந்தேன்.

“நீ வாழ்க்கை முழுக்க இப்பிடி என் கையைப் பிடிச்சிட்டு என் கூடவே வரணும்னு விரும்புறேன். ஐ லவ் யூ மாலா”…

சொல்லிவிட்டு மாலாவின் கண்களைச் சந்தித்தேன். என்னால் அந்தக் கண்கள் என்ன சொல்கிறது என்பதை மொழிபெயர்க்க முடியவில்லை. சந்தோசமா, அதிர்ச்சியா, கோபமா, குழப்பமா? தெரியவில்லை. ஆனால் என் மனதில் இப்போது ஒரு நிம்மதி. ஏற்றியிருந்த பாரத்தை இறக்கிவிட்டுவிட்டதைப் போல. இனி என் காதலை மாலா ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கவலை இல்லை.

மாலா பதில் ஏதும் பேசாமல் என்னையே பார்த்தாள். “இப்ப நீ நியூயார்க் போய்ச் சேர்றதுதான் முக்கியம். முதல்ல ஃப்ளைட்ல ஏறு. அங்க போன பிறகு பேசிக்கலாம்.”

அதற்கு மேல் மாலாவை வற்புறுத்தவும் விரும்பவில்லை. அவள் ஒரு வேளை மறுத்துவிட்டால், நான் நியூ யார்க் போகாமல் வழியிலேயே எங்காவது ஓடிப்போனாலும் போய்விடுவேன். மறுபடியும் செந்திலுக்கும் ஓமனாவுக்கும் விடை கொடுத்துவிட்டு மாலாவை அர்த்தத்துடன் பார்த்துக்கொண்டே நகர்ந்தேன். கண்களைச் சுருக்கி தலையைச் சாய்த்து என்னைப் பார்த்து சிரித்தாள். முதல் முறை பஸ்ஸில் என்னைப் பார்த்துச் சிரித்த அதே மேனரிஸம். நானும் இமைகளை மூடி தலையை அசைத்துவிட்டு திரும்பி செக்யூரிட்டி செக் இன் நோக்கி நகர்ந்தேன்.

எப்படி விமானம் ஏறினேன், எப்படி லண்டனில் மாறினேன், நியூயார்க் வந்து சேர்ந்தேன் என்று நினைவில்லை. நியூயார்க்கில் இறங்கியதும் இமிக்ரேஷனில் சின்ன சிக்கல். என் எச்.ஒன் விசாவில் ஏதோ கோளாறு என்று இரண்டு மணி நேரம் ஒரு அறையில் உட்கார வைத்துவிட்டார்கள். யார் யாருக்கோ தொலை பேசிய பின்னர் ஒரு வழியாக அனுமதி கிடைத்து கஸ்டம்ஸ் கிளியர் செய்து வெளியே வந்தேன். ரீனாவைக் காணவில்லை. கைப்பைக்குள் இருந்த ஹோட்டல் ரிசர்வேஷன் காப்பியை எடுத்து ஹோட்டல் முகவரியைப் பார்த்தேன். 42வது தெருவில் இருந்தது. ஏர்ப்போர் வாசலிலேயே டாக்ஸிகள் பல இருந்தன. பெரும்பாலான டிரைவர்களுக்கு இந்திய முகங்கள். ஓரிருவர் வந்து இந்தியில் கதைக்கவும் செய்தார்கள். ஓரளவுக்கு அப்பாவியாகத் தெரிந்த ஒருவரைத் தெரிவு செய்து, ஹில்டன் ஆன் த 42nd Street என்றேன். முகமெல்லாம் சிரிப்புடன் பெட்டியை வாங்கி டிக்கிக்குள் தள்ளினார். பின் சீட்டில் ஏறிக் கொண்டேன். எனக்கும் முன் சீட்டுக்கும் நடுவில் ஃபைபரால் ஆன தடுப்பு. ஒரு சிறிய சன்னல் மட்டுமே திறக்கக் கூடிய வகையில். அது கூட டிரைவர் நினைத்தால் தான் திறக்க முடியும்.

“தமிழா சார்?”

அட நம்மூர்க்காரர் போலிருக்கிறதே.. “ஆமாங்க. திருநெல்வேலி. நீங்க?”

“நான் வேலூர் சார். இங்க வந்து 20 வருசமாச்சி”

ம்ஹ்ம். நாமெல்லாம் பி.இ படித்து ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து இங்கே வரவே தலையால் தண்ணீர் குடிக்க வேண்டிய அளவுக்கு பேப்பர் ஒர்க் செய்ய வேண்டியிருக்கிறது. இவர் எப்படி இங்கே சுலபமாக வந்து டாக்ஸி ஓட்டிக் கொண்டிருக்கிறார்? ஆச்சரியமாக இருந்தது.

“என்ன சார், இந்த நாட்டுக்கு வந்து எப்பிடி டாக்ஸி ஓட்டுறேன்னு ஆச்சரியப் படுறியா?”

“ஆமாங்க.”

“என் வொய்ஃப் ஈழத் தமிழ்ப் பொண்ணு சார். அதான் இங்க வந்துட்டோம்”

“நல்லது”

“நீ என்ன சாஃப்ட்வேர் ஃபீல்டா சார்?”

“ஆமாங்க”

“நம்மூர் பசங்க. இந்த ஊர்ல ஒண்ணு சாஃப்ட்வேருக்கு வர்றாங்க, இல்லை படிக்க வர்றாங்க”

“ம்ம்”

“42ண்ட் ஸ்ட்ரீட் ஹில்டன் ரொம்பப் பெரிய ஓட்டல் சார். கம்பெனி காசா?”

“ஹி ஹி ஆமாங்க”

“பக்கத்துல தான் டைம் ஸ்கொயர். ஈவினிங், வீக்கெண்ட் எல்லாம் சும்மா ஜெகஜ்ஜோதியா இருக்கும். எஞ்சாய் பண்ணு சார்”

“சரிங்க”

அதற்குப் பிறகும் பேச்சை நிறுத்தாமல் பேசிக் கொண்டே வந்தார். பெரும்பாலானவை நியுயார்க்கில் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பதாகவே இருந்தது. இந்த லெக்சரை பல முறை பலர் வாயால் கேட்டிருந்த படியாலும், பயணக் களைப்பாலும் கொட்டாவிகளாக விட்டுக் கொண்டே வந்தேன். ஒரு வழியாக ஹில்டன் வாசலில் இறக்கி விட்டு விட்டு, ஐம்பது டாலர் கேட்டார். பலர் சொல்லியிருந்த படியால் 10 டாலர் டிப்ஸையும் சேர்த்து $60 கொடுத்துவிட்டு ஹோட்டலில் செக் இன் செய்தேன். குளித்துவிட்டு படுக்கையில் விழுந்தவன் தூங்கிப் போனேன். கனவில் மாலா வந்து என்னுடன் டூயட் பாடினாள். டைரியில் எழுதிக் கொண்டே, நியூயார்க் நகரம் உறங்கும்போது என்று சூர்யாவின் உடையில் பாட்டுப் பாடினேன். தலைக்குள் யாரோ மணியடிக்கவே எழுந்தேன். யாரோ அல்ல, ஃபோன்.

“ஹலோ”

“டேய் எருமை. போய்ச் சேர்ந்ததும் ஃபோன் பண்ணச் சொன்னேன்லடா நாயே. ஏண்டா ஃபோன் பண்ணலை?”

சுத்தமாகத் தூக்கம் கலைந்து விட்டது. மாலா. “சாரி மாலா. டயர்டா இருந்ததா, தூங்கிட்டேன்”

“போடா பன்னி. இங்க ஒருத்தி மூணு நாளா தூங்காம உன் ஃபோனுக்காகக் காத்திருக்கேன். நீ கூலா தூங்கிட்டேன்னு சொல்ற. கொஞ்சமாச்சும் அறிவு இருக்காடா?”

“அதான் சாரி சொல்லிட்டேன்ல மாலா” கடைசி வார்த்தையைச் சொல்லும்போதே மாலாவின் குரல் தழுதழுத்தது அப்போதுதான் உரைத்தது. இப்போது அந்தப் பக்கம் விசும்பல்கள் தான் கேட்டுக் கொண்டிருந்தன.

“ஏய் மாலா அழறியா என்ன?”

...

“பதில் சொல்லு மாலா”

“டேய், ட்ராவல் எப்பிடிடா இருந்தது? பிரச்சனை ஒண்ணுமில்லையே?”

“செந்தில்.. அதெல்லாம் ஒண்ணுமில்லைடா. மாலா எதுக்கு அழறா?”

“அது ஒண்ணுமில்லைடா. உன் இமிக்ரேஷன்ல ஏதோ சிக்கல்னு சொல்லிட்டு இருந்தா. இங்க நம்ம மேனேஜருக்கும், க்ளையண்ட் மேனேஜருக்கும், யுஎஸ் BAMக்கும் ஃபோன் போட்டிருந்திருக்காங்க. அது என்னாச்சின்னு ஸ்டேட்டஸ் எங்களுக்கும் சொல்லலை. நீயும் ஃபோன் பண்ணலையா. அதான் ரொம்ப கவலைப் பட்டுக்கிட்டே இருந்தா. நான் தான் ஹில்டன் ஃபோன் நம்பர் நெட்ல பிடிச்சி ஃபோன் பண்ணி பாக்கலாம்னு சொன்னேன். நீ என்னடான்னா ஹாயா செக் இன் பண்ணிட்டு தூங்கிட்டு இருக்க”

அப்போதுதான் என் பைத்தியக்காரத்தனம் உரைத்தது.

“டேய் சாரிடா. டயர்ட்னெஸ்ல என்ன செய்யறேன்னு தெரியாம தப்பு செஞ்சிட்டேன். சாரி சொல்லிட்டேண்டா. அழுகைய நிறுத்திட்டாளா?”

செந்தில் இப்போது மெல்லிய குரலில், “சொல்லிட்டியாமேடா? ஓமனா கிட்ட மாலா சொல்லியிருக்கா.. உன்கிட்ட பதில் எதுவும் சொன்னாளா?”

“இல்லைடா செந்தில். ஊருக்குப் போன பிறகு பேசிக்கலாம்னு சொல்லிட்டா. ஓமனா கிட்ட வேற எதுவும் சொன்னாளா?”

“இல்லடா. அவ வேற ஒண்ணும் சொல்லலை”

“சரி அவ ரியாக்‌ஷன் எப்பிடி இருந்திச்சாம்? சந்தோசமா இருந்தாளா இல்ல கவலையா இருந்தாளா?”

“கேட்டேண்டா. அவகிட்ட எந்த ரியாக்‌ஷனையும் பார்க்க முடியலைன்னு ஓமனா சொன்னா”

ஏமாற்றமாக இருந்தது. ஒரு பக்கம் என்னிடம் இருந்து தகவலே இல்லை என்று விசும்பி விசும்பி அழுகிறாள். இன்னொரு பக்கம் காதலைச் சொல்லியும் எந்த ரியாக்‌ஷனையும் காட்ட மாட்டேன் என்கிறாள். ஆழம் எது அய்யா, அந்த பொம்பள மனசு தான்யா என்று சால்வை சுற்றிப் பாடும் சந்திரசேகர் போல உணர்ந்தேன்.

“சரி செந்தில் அவ கிட்ட குடு”

பத்து செகண்ட் மவுனத்திற்குப் பிறகு, உடைந்த குரலில், “ஹலோ”

“மாலா”

“ம்”

“சாரி சொல்லிட்டேனே மாலா. நான் செஞ்சது தப்புதான். என்னைய மன்னிச்சி விட்டுரு”

“சரி மன்னிச்சிட்டேன். அதுக்கு தண்டனையா வரும்போது எனக்கு பெர்ஃப்யூம் வாங்கிட்டு வந்துரு. சரியா”

“சரி”

“சரி நீ தூங்கு. காலைல ஆஃபிஸ் வந்துட்டு பேசு”

“மாலா..”

“ம்”

“ஃப்ளைட் ஏற்ரதுக்கு முன்னாடி நான் ஒண்ணு சொன்னேனே”

“லூசு. மொதல்ல தூங்கி ரெஸ்ட் எடு. அதைப் பத்தி அப்புறம் பேசலாம்”

(தொடரும்)


அடுத்த பாகம் இங்கே

No comments: