Monday, June 11, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 7மகாராஜா ரெஸ்டாரண்டில் வைத்து ஓமனா, தனக்கும் செந்திலுக்கும் உள்ள காதலைச் சொன்னதும், மாலா எழுந்து ஓமனாவைக் கட்டிக் கொண்டாள். நான் செந்திலுக்குக் கை கொடுத்தேன். மாலாவின் ஆச்சரியம் உண்மையானதாக இருந்தது. பெண்கள் ரகசியத்தைக் காப்பாற்றுபவர்கள்தான் போலும். லஞ்சோடு அவர்களின் காதல் கதையையும் கொறித்துக் கொண்டோம். அவ்வப்போது என் கண்களை உரசிப் போன மாலாவின் பார்வையில் ஏதோ அர்த்தம் தெரிவதாகத் தோன்றியது. வைரமுத்துவின் காதலித்துப் பார் கவிதையும் நினைவில் வந்து போனது.

கிடைத்ததொரு சந்தர்ப்பத்தில் செந்தில் என்னை பார்த்து “சொல்லிட்டியா?” என்று கண்களை உருட்டினான். இல்லை என்பதாய் மௌனமாய் தலையசைத்தேன். “சீக்கிரம் சொல்லிரு” என்று உதடசைத்தான். சரிடா என்று சிக்கன் மஞ்சூரியனை வாய்க்குள் திணித்துக் கொண்டேன்.

சாப்பிட்டு முடிந்ததும் பீடா போட்டுக் கொண்டு செந்திலின் பைக் பின்னால் ஏறப் போக, “மச்சி, நானும் ஓமனாவும் ஷாப்பிங் போறோம்டா. நீ மாலா கூட போயிடு” என்றான். நான் மாலாவைப் பார்க்க, அவள் உட்கார்ந்தவாறே பின்னால் நகர்ந்து “நீயே ஓட்டு” என்றாள்.

முன் பக்கமாக காலைப் போட்டு பல்சரை உதைத்தேன். “எங்க போலாம் மாலா? வீட்டுக்கா?”

“வேணாண்டா. லால் பாக் போலாம் வா”

ஓசூர் ரோடு எடுத்து லால் பாக் நோக்கி வண்டியை விரட்டினேன். அவள் இயல்பாகத்தான் என் தோள்களைப் பற்றியிருந்தாள். எனக்குத்தான் உள்ளே எதோ பற்றியெறிந்தது.

லால் பாக் முழுவதும் பூக்களும் காதலர்களும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தனர். நாங்கள் லால் பாக் வந்தால் வழக்கமாக உட்காரூம் பொட்டானிக்கல் கார்டனை ஒட்டி இருந்த பெஞ்சில் அமர்ந்தோம்.

“ரொம்ப சந்தோசமா இருக்கு தேவா. நம்ம ஃப்ரண்ட்ஸ் ரெண்டு பேர் லவ் பண்றாங்கன்னு தெரிஞ்சிக்கும் போது”

“ஆமா மாலா. திருட்டுப் பயலுவ ரெண்டு பேரும் சொல்லாம கமுக்கமா வச்சிருந்திருக்காங்க பாரேன்”

“சில பேர் அப்பிடித்தான் இருக்காங்க தேவா. என்னோட காலேஜ்லயும் ரெண்டு ஜோடி இப்பிடித்தான் திரிஞ்சாங்க. ஒரு ஜோடி பட்டும் படாம பழகிட்டு இருந்தாங்க. நல்ல ஃப்ரண்ட்ஸ்னு நினைச்சிட்டு இருந்தோம், நாங்க நினைச்சதுக்கு மாறா லவ் பண்றோம்னு வந்து நின்னுச்சிங்க. இன்னொரு ஜோடி ரொம்ப க்ளோஸா பழகுவாங்க. சரி, லவ் பண்றாங்கன்னு நினைச்சிட்டே இருந்தோம். அந்தப் பொண்ணு என்னடான்னா, ஃபைனல் இயர்ல யாரோ ஒரு டாக்டர் மாப்பிள்ளையோட நிச்சயதார்த்தம்னு வந்து நின்னா. அவன் என்னடான்னா நிச்சயதார்த்த வீட்டுல எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செஞ்சிட்டு இருந்தான். நம்பவே முடியறதில்லை”

‘இந்த ரெண்டு ஜோடியின் கதையும் அப்படி ஆகிவிடுமோ? ஒரு வேளை இவள் தனக்கு நிச்சயதார்த்தம் என்று வந்து நின்றால் நான் என்ன செய்வேன்? அந்தப் பையனைப் போல முன்னால் நின்று வரவேற்றுக் கொண்டிருப்பேனோ??’

“என்ன தேவா யோசிக்கிற?”

“ஒண்ணுமில்ல மாலா. எங்க காலேஜ்லயும் இந்த மாதிரி ஜோடிங்க இருந்தது அதை யோசிச்சேன்”

அதன் பிறகு அவள் என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தாள். எல்லாம் இந்தக் காதில் விழுந்து அந்தக் காதுக்குப் போய்க் கொண்டிருந்தது. மாலை ஆக ஆக கூட்டம் அதிகமானது.

“கிளம்பலாமா?”

*************************************

மூன்று மாதங்கள் ஓடிப் போனது. லேசான எதிர்ப்புக்குப் பிறகு ஓமனா வீட்டிலும் செந்திலின் வீட்டிலும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டார்கள். தையில் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவும் ஆனது. காசர்கோட்டில் திருமணம். திருநெல்வேலியில் ரிசப்ஷன் என்று முடிவானது. திருமணத்துக்குப் பிறகு நாங்கள் இப்போது இருக்கும் அப்பார்மெண்டிலேயே குடியேறுவது என்று முடிவெடுத்திருந்தார்கள் ஓமனாவும் செந்திலும். இதே பில்டிங்கிலேயே இன்னொரு அப்பார்ட்மெண்ட் ஏதாவது காலியானால் அதில் குடியேறிவிடலாம். அப்படி காலியாகாத பட்சத்தில் நான் வெளியே போகிறேன் என்று சொல்லிவிட்டேன். அரை மனதுடன் மாலாவும் சம்மதித்தாள். ஒரே வீட்டில் இருந்துவிடலாம் தான். ஆனாலும் எதுவோ தடுக்கிறது. 

இன்னும் திருமணத்துக்கு இரண்டு மாதங்கள் இருக்கின்றன. செந்தில் தினமும் நச்சரிக்க ஆரம்பித்துவிட்டான். “மாலாகிட்ட சொல்லிருடா. அவ கண்டிப்பா ஏத்துக்குவா. நீ வேற வீடு பார்த்துப் போக வேண்டிய தேவை இருக்காது.” என்றெல்லாம் ஓத ஆரம்பித்துவிட்டான். ஆனால் காதலைச் சொல்லிவிட்டால் மட்டும் போதாது, திருமணம் என்பதற்கு என் தங்கையில் ஆரம்பித்து சாதி வரை பல பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை எப்படி அவனுக்குப் புரிய வைப்பது என்று தெரியவில்லை.

அன்று கிளையண்டுடன் மந்த்லி மீட்டிங். டீம் லீடர்களும் மாட்யூல் லீடர்களும் மட்டும் பங்கேற்பார்கள். எனக்கு வேலையில்லை. மாலா பல்சரை என்னிடம் கொடுத்து “நீ போ, நான் கார் ட்ராப்ல வந்துக்குறேன்” என்று அனுப்பிவிட்டாள். நானும் அறைக்கு வந்தேன். செந்திலும் ஓமனாவும் வெளியே சாப்பிடக் கிளம்பினார்கள். எனக்கும் மாலாவுக்கும் பார்சல் வாங்கி வரச் சொல்லிவிட்டு பால்கனியில் நின்று கொண்டு வழக்கம்போல காற்றுமண்டலத்தை அசுத்தப் படுத்திக் கொண்டிருந்தேன். பில்டிங் வாசலில் கார் வந்து நிற்பதும் அதிலிருந்து மாலா இறங்குவதும் தெரிந்தது. சரியாக அடுத்த பத்தாவது நிமிடம் காலிங் பெல் அடித்துவிட்டு திறந்திருந்த கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தாள்.

“தேவா, ஒரு ஹேப்பி நியூஸ்”

“என்ன நியூஸ்?”

“இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம மாட்யூல்ல இருந்து ஒருத்தர் ஆன்சைட்ல கோ-ஆர்டினேட்டரா போகணும்”

“வாவ். நீ போகப் போறீயா?”

“இல்லடா. நான் தான் மாட்யூல் லீடரா இருக்கேனே. நான் அங்க இப்பப் போக முடியாது”

“அப்ப”

“நீதாண்டா போற. நான் கூட உன் பேரை ரெகமெண்ட் பண்ணவேயில்ல. கிளையண்டாவே கேட்டாங்க. உன்னை அனுப்ப முடியுமான்னு. எனக்குக் கசக்கவா செய்யும். சரின்னு சொல்லிட்டேன்”

காதலைச் சொல்ல சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இவள் என்னடாவென்றால் என்னைத் தூரமாக அனுப்பிவிடுவாள் போல? என்ன செய்வது இப்போது? சொந்த பந்தத்தில் யாருமே வெளிநாட்டுக்குப் போனதில்லை. அங்கே போகும் முதல் நபராக இருப்பதில் பெருமை தான். அப்பாவும் அம்மாவும் மகிழ்ச்சியடையத்தான் செய்வார்கள். தங்கையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆனால், மாலாவைப் பிரிந்து..

என் மவுனம் மாலாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்க வேண்டும். “என்னடா, சந்தோசத்துல குதிப்பன்னு நினைச்சா இப்பிடி யோசிக்கிற? ஆன்சைட் போக விருப்பம் இல்லையா?”

“அய்யோ அப்பிடியெல்லாம் இல்லை மாலா. திடீர்னு ஆன்சைட் கோ-ஆர்டினேட்டர்னா கொஞ்சம் பயமா இருக்கு. தோள்பட்டையில எக்ஸ்ட்ராவா ஸ்டார் ஏறினா அவஸ்தைதான்னு நீ கூட மாட்யூல் லீடராகும்போது சொன்னியே”

“அது சரிதாண்டா. ஆனா உன்னைய அப்பிடி அம்போன்னு நான் விட்ருவேனா? அதோட ஆன்சைட் கோ-ஆர்டினேட்டருக்கு உன்னைய விட நல்ல ஆள் எனக்குக் கிடைப்பாங்கன்னு தோணலை. நீ ஒத்துக்கோடா. நாளைக்கே பேப்பர் ஒர்க் ஆரம்பிச்சிரலாம்”

“சரி மாலா. உனக்கு சம்மதம்னா எனக்குப் பிரச்சனை இல்லை”

“தேங்க்யூடா” என்று இயல்பாக என்னைக் கட்டிப் பிடித்து சந்தோசத்தை வெளிப்படுத்திவிட்டு “நான் போய் ரிஃப்ரஷ் பண்ணிட்டு வர்றேன் வெளிய போய் சாப்பிடலாம்” என்று விலகிக் கதவைத் திறந்து ஓடினாள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு பக்கம் இந்த அவஸ்தையிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் போலத் தோன்றினாலும், மாலாவைத் தினமும் பார்க்க முடியாத தூரத்துக்குப் போவது கொஞ்சம் கஷ்டமாயிருந்தது. குழப்பத்துடன் அடுத்த சிகரெட்டையும் காலி செய்தேன்.

மாலா உடை மாற்றிக் கொண்டு வந்தாள். வெள்ளை நிறச் சுடிதார். முடியைப் பின்னாமல் லூஸ் ஹேர் விட்டு இரண்டு கற்றைகளை மட்டும் தோள்களின் மேல் வழியவிட்டிருந்தாள். முகம் கழுவி மெல்லிய பவுடர் பூச்சும் தெரிந்தது. லிப் க்ளாஸ் ட்யூப் லைட் வெளிச்சத்தில் மின்னியது.

“என்னடா இன்னும் லுங்கியிலயே இருக்க. சாப்புடப் போலாம் வா”

“இல்ல மாலா. செந்தில்கிட்ட நமக்கு பார்சல் வாங்கிட்டு வரச் சொல்லியிருந்தேன்”

“அதனால என்ன அதை நாளைக்கு லஞ்சுக்கு எடுத்துக்கலாம். இப்ப வெளிய போலாம் வா”

அரை மனதுடன் உடை மாற்றிக் கொண்டு கிளம்பினேன். லன்ச் சாப்பிடும் நேரம் முழுக்க ஆன்சைட் கோ-ஆர்டினேட்டரிடம் ஒரு மாட்யூல் லீடராக அவள் எதிர்பார்ப்பது என்ன என்ற லெக்சர் தான் ஓடியது. ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் நிறுத்திக்கோ மாலா என்று வாய் விட்டு சொல்லிவிட்டேன். இந்த ஏற்பாட்டில் இருந்த இன்னொரு நிம்மதி, நான் வீடு தேட வேண்டிய தேவை இன்னும் ஒரு வருடத்துக்கு இல்லை என்பதும்.

ஒரு பக்கம் செந்தில்-ஓமனா திருமண வேலைகளும் இன்னொரு பக்கம் என் ஆன்சைட் பேப்பர் ஒர்க்கும் என நேரம் நன்றாகக் கழிந்தது. செந்திலுக்கு நான் ஆன்சைட் போவதில் மகிழ்ச்சி என்றாலும், ஒரு வருடம் மாலாவை விட்டுப் பிரிவதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற கவலையும் இருந்தது. காதலைச் சொல்லச் சொல்லி அவன் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை நச்சரிக்கத் தொடங்கிவிட்டான்.

விசா பிரச்சனையில்லாம பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் செய்த பிறகு, செந்தில் ஓமனா திருமணம் முடிந்த அடுத்த வாரம் நான் நியூயார்க் செல்ல டிக்கெட் போட்டார்கள். வழக்கமாக விசா கையில் கிடைத்ததும் விமானத்தில் ஏற்றிவிடும் எங்கள் கம்பெனியில் செந்தில்-ஓமனா திருமணத்தின் காரணமாக எனக்கு மட்டும் சலுகை கிடைத்தது.

காசர்கோட்டில் வெகு விமர்சையாக திருமணம் நடந்தது. கேரள உணவுவகைகள் வித்தியாசமாக இருந்தன. சிவப்பு நிறத்தில் காரமாக இருக்கும்போல என்று நினைத்து லேசாக தொட்டு நக்கிப் பார்த்தால் இனித்துத் தொலைத்தது. பச்சை நிறத்தில் இனிப்போ என்ற எண்ணத்தைக் கொடுத்த பண்டம் கார்ந்துத் தொலைத்தது. அங்கே திருமணம் முடித்து இரண்டு நாட்களுக்குள் திருநெல்வேலியில் ரிசப்ஷன். மாலாவையும் இன்னும் சில அலுவலக நண்பர்களையும் ஒரே ஒரு மணி நேரம் மட்டும் வீட்டுக்கு அழைத்துப் போய்வந்தேன். அம்மாவிடம் மாலா நடந்து கொண்ட விதம் இன்னும் பிடித்தமாயிருந்தது.

ஓமனாவும் செந்திலும் ரிசப்ஷன் முடிந்த கையோடு ஊட்டிக்கு ஹனிமூன் கிளம்பினார்கள். நானும் மாலாவும் பெங்களூர் திரும்பினோம். தினமும் 11 மணி வரை பேசிக் கொண்டிருந்து விட்டு தூங்க மட்டும் அவரவர் அப்பார்மெண்ட் வரும் வழக்கமாகிப் போனது. ஊட்டியிலிருந்து ஓமனாவும் செந்திலும் திரும்பிய தினத்தின் நள்ளிரவில் நான் கிளம்ப வேண்டும்.

செந்தில் வந்ததும் கேட்ட முதல் கேள்வி - “சொல்லிட்டியா?”

என் உதடு பிதுக்கலில் அவன் முகத்தில் எதிரொளித்த ஏமாற்றம் அவன் என் மீது கொண்டிருந்த அன்பையே எனக்கு வெளிக்காட்டியது. ஏமாற்றத்தைக் கோபமாக மாற்றி அன்று மதியம் வரை என்னோடு பேசவேயில்லை. மாலாவும் ஓமனாவும் ரெண்டு பேருக்கும் என்னாச்சு என்று நச்சரித்ததால் வேறு வழியின்றிப் பேசினான்.

அன்று இரவு கம்பெனி கார் வந்ததும், மூன்று பேரும் என்னை வழியனுப்ப பெங்களூர் விமான நிலையம் வந்தார்கள். சம்பிரதாய விடைபெறுதல்கள் விமான நிலையமெங்கும் நடந்து கொண்டிருக்க நாங்கள் பேசாமலே இருந்தோம். செக் இன் செய்ய வேண்டிய நேரம் வந்துவிடவே செந்தில் என்னைக் கட்டிக் கொண்டு, “டச்லயே இருடா. வெளிநாடு போயிட்டோம்னு எங்களையெல்லாம் மறந்துடாதே” என்றான்.

“ச்சேச்சே என்னடா? நீங்களும் நான் திரும்ப வர்றதுக்குள்ள ஒரு குட்டி ஓமனாவுக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்று சொல்லி ஓமனாவை முகம் சிவக்க வைத்தேன்.

மாலா என் கைகளைப் பிடித்துக் கொண்டு, “போனதும் கால் பண்ணுடா. ஆஃபிஸ்ல குடுத்த காலிங் கார்ட் இருக்குதானே? ரீனா ஏர்போர்ட் வர்றதா சொல்லியிருக்கா வரலைன்னாலும் யோசிக்காம ஒரு டாக்ஸி எடுத்து ஹோட்டல் போயிடு என்ன?” என்றாள்.

செந்தில் ஓமனாவை அழைத்துக் கொண்டு சற்றே விலகினான்.

தனிமை கிடைத்ததை உணர்ந்த மாலா, “என்னதான் ஃப்ரண்டு ஆன்சைட் போறான்னு சந்தோசமா இருந்தாலும், உன்னைப் பிரிஞ்சி தனியா இருக்கணுமேன்னு நினைக்கும்போது கொஞ்சம் வருத்தமாத்தாண்டா இருக்கு” என்றாள். அவள் விழியோரத்தில் ஒற்றைத் துளி கண்ணீரும் எட்டிப் பார்த்தது.

“இன்னும் ஒரு வருசம் நீ பல்சர்ல தனியாத்தான் ஆஃபிஸ் போகணும்”

தலை குனிந்தபடியே “ம்ம்”

“செந்தில்-ஓமனா கூட ரெஸ்டாரண்ட் போனாக்கூட நீ உன்னோட பைக்ல தனியாத்தான் போகணும்”

“ம்ம்ம்”

“மாலா”

“ம்ம்ம்”

“இதைச் சொல்லாம நான் நியூயார்க் போயிட்டு அப்புறம் அடடா சொல்லியிருக்கலாமென்னு வருத்தப்பட விரும்பலை”

மாலா நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தாள். அவள் பார்வையைச் சந்திக்கத் திராணியில்லாமல் தலையைக் குனிந்தேன்.

“நீ வாழ்க்கை முழுக்க இப்பிடி என் கையைப் பிடிச்சிட்டு என் கூடவே வரணும்னு விரும்புறேன். ஐ லவ் யூ மாலா”

(தொடரும்)


அடுத்த பாகம் இங்கே

2 comments:

நாடோடி இலக்கியன் said...

செம்ம...

நாடோடி இலக்கியன் said...

ஆமா, ஆரம்பத்திலிருந்தே பாக்குறேன் எல்லா பார்ட்லேயும் ஹோட்டலுக்கு போயிட்டே இருக்கீங்க.