Saturday, August 17, 2013

ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 5


வளைத்து வளைத்து ஃபோட்டோகிராஃபர் ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருக்க, கான்ஸ்டபிள் ஒருவர் பிணத்தைச் சுற்றி சாக்பீஸால் கோடு போட ஆரம்பித்தார். கிளவுஸ் போட்ட கையால் குப்புறக் கிடந்தவனின் தலையை சற்றே உயர்த்தி கழுத்தில் விழுந்திருந்த வெட்டை ஆராய்ந்து கொண்டிருந்த பேரமெடிக் இருவரும் வந்து நின்றதைப் பார்த்ததும் எழுந்தார். “ஸ்லிட் த்ரோட் சார். ஜகுலார் கட் ஆகியிருக்கு. மேக்ஸிமம் 2 மினிட்ஸ் உயிரோட இருந்திருக்கலாம். போஸ்ட் மார்ட்டம் பண்ணினா எக்ஸாக்ட் டைம் ஆஃப் டெத் சொல்லிடலாம் சார்” என்று நிறுத்தாமல் சொன்னார்.

“இப்ப அப்ராக்ஸிமேட் டைம் சொல்ல முடியுமா?” - சிவா.

“அரவுண்ட் 10:00 சார்”

ஏரியா இன்ஸ்பெக்டர் உள்ளே வரவும், சிவா அவரைப் பார்த்து, “என்ன சுவாமிநாதன்? டீட்டெயில்ஸ் சொல்லுங்க”

“சார் விக்டிம் பேரு சிவகுரு. இங்க ஈ.சி.ஆர் ரோட்டுல இருக்கிற எஞ்சினியரிங் காலேஜ்ல பி.ஈ படிக்கிறான். இவங்கப்பாவும் அம்மாவும் கோயமுத்தூர்ல டாக்டர்ஸ். தகவல் சொல்லியாச்சி. அடுத்த ஃப்ளைட்ல கிளம்பி வர்றாங்க. ஹாஸ்டல் வசதியா இருக்காதுன்னு இவங்கப்பாம்மா இந்த ஃப்ளாட்டை வாங்கி இவனைத் தங்க வச்சிருக்காங்க. தனியாத்தான் தங்கியிருக்கான். பக்கத்து வீடுகள்ல விசாரிச்சதுல பையன் ரொம்ப பிரச்சனை பண்ணாதவன்னு தெரியுது. யாரோ ஒரு பொண்ணு மட்டும் எப்பவாச்சும் வருமாம். லவ்வா இருக்கலாம்னு சொல்றாங்க. பொண்ணு டீட்டெயில் எங்கயாச்சும் கிடைக்குமான்னு கான்ஸ்டபிளை வீட்டுல தேடச் சொல்லியிருக்கேன். இல்லைன்னா காலேஜ்ல விசாரிக்கணும்.”

அருண் குறுக்கிட்டான். “செல்ஃபோன்ல பார்த்தீங்களா? வைஃப், கேர்ள்ஃப்ரண்ட், லவர்னு எதாச்சும் பேர்ல ஸ்டோர் பண்ணியிருப்பான் பாருங்க?”

“சார் இதை யோசிக்கவே இல்ல சார். 402, சார் சொன்னது கேட்டுச்சில்ல. செல்ஃபோன்ல தேடுங்க”

“சரி நீங்க மேல சொல்லுங்க”

“நைட் டியூட்டி பார்த்த வாட்ச்மேனைக் கூட்டிட்டு வர வீட்டுக்கு ஆள் அனுப்பியிருக்கேன் சார். வந்ததும் அவன் எதாச்சும் பார்த்தானான்னு கேக்கணும்.”

“கொலைக்கு மோட்டிவ் ஏதாச்சும் தெரிஞ்சதா?”

“ராப்பரி மாதிரி தெரியலை சார். வீட்டுல எல்லாம் அப்பிடியே வச்சது வச்ச மாதிரி இருக்கு.”

“விக்டிம்க்கு கொலை செஞ்சவனைத் தெரிஞ்சிருக்கு. அவன் பேரைத்தான் எழுத வந்திருக்கான் போல. இவனுக்கு யாரும் எதிரிங்க, காலேஜ் பிரச்சனை, அந்தப் பொண்ணு மேட்டர்ல ஏதும் பிரச்சனை இருக்குதான்னு காலேஜ்ல விசாரிங்க”

402 ஃபோனை எடுத்துக்கொண்டு வந்து அருணிடம் கொடுத்தார். ஐஃபோன் 4S. ஆன் செய்ததும் வால் பேப்பரில் புஜத்தை மடக்கிக் காட்டிக்கொண்டிருந்தான். ஓப்பன் செய்யக் காத்திருந்தது போல ஃபோன் அடித்தது. ஒற்றை விரலைக் காட்டி மிரட்டுவது போல ஒரு பெண் படமும் கீழே GF என்ற எழுத்துகளும் தோன்றின. பச்சை answer பொத்தானை அழுத்தி காதுக்குக் கொடுத்தான்.

“டேய் எங்கடா போன. இன்னும் ஹாஃப் அன் அவர்ல லேப். இன்னும் தூங்கிட்டுத்தான் இருக்கியா?”

“ஹலோ”

புதிய குரலைக் கேட்ட அதிர்ச்சியில் எதிர்முனை அமைதியானது.

“ஹலோ” கொஞ்சம் குரலை உயர்த்தினான் அருண்.

“ஹ ஹலோ, நீ நீங்க யாரு? இது சிவா ஃபோன் தானே?”

“நீங்க சிவகுரு ஃப்ரண்டா?”

“ஆ ஆமா. உங்ககிட்ட சிவா ஃபோன் எப்பிடி? நீங்க யாரு?”

“போலிஸ். ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட். ”

“ஆ ஆக்ஸிடெண்டா? சிவாவுக்கு ஒண்ணும் ஆகலையே?”

“ஒண்ணுமில்லைங்க. உங்க பேரு என்ன?”

“என் பேரு மீனா சார். சிவா எப்பிடி இருக்கான்? அவன்கிட்ட பேச முடியுமா?”

“அவன ஜி.எச்க்கு கொண்டு போயிருக்காங்க.”

“எந்த ஜி.எச் சார்?”

“ராயப்பேட்டா”

“அங்க வந்தா அவனைப் பார்க்கலாம்ல சார்?”

“ம்ம்..”

“ஓக்கே சார். நான் ஃப்ரண்ட்ஸ் கிட்ட சொல்லிடுறேன். எல்லாரும் வந்திருவோம்”

“ஓக்கே” காலை கட் செய்துவிட்டு, “சிவா, இவனோட காலேஜ் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் ஜி.எச்க்கு வந்திருவாங்க. அங்கயே நம்ம விசாரணையை வச்சிக்கலாம்”

“ஓக்கே சார். நான் ரெண்டு மூணு லேடி கான்ஸ்டபிள்ஸை வரச்சொல்லிடுறேன் சார். கேர்ள்ஸை விசாரிக்கும்போது உதவியா இருக்கும்”

“ஓக்கே”

உடலை போஸ்ட் மார்ட்டத்துக்கு எடுத்துப் போக ஏற்பாடு செய்து கொண்டிருக்க, அருண் ஃபோன் அட்ரஸ் புக்கை நோண்டினான். SARAVயில் ஆரம்பிக்கும் பெயர் ஏதாவது இருந்து தொலைக்காதா என்ற நப்பாசையில்.

Raja
Rajesh
Robert
Ryan
S3
Saran
Saroj
Sathya
Sekar

“எனி லக் சார்?” சிவா.

“நோ லக் சிவா. நீங்க இன்ஸ்பெக்டரை அனுப்பி அவன் காலேஜ்ல தகவலைச் சொல்லிட்டு அப்பிடியே ஸ்டாஃபை விசாரிச்சிட்டு வரச் சொல்லுங்க. நாம ஜி.எச் போயிடலாம்.”

“ஓக்கே சார்”

******************************************************************************************************

ஜி.எச்ல் சிவகுருவின் கல்லூரி நண்பர்கள் அதிரடித்துவிட்டார்கள். சிவகுரு இறந்துவிட்டான் என்று தெரிந்ததும் அரை மணி நேரத்துக்கு அழுது தீர்த்துவிட்டாள் மீனா. சிவாவின் பெற்றோரும் வந்து சேர்ந்து விட்டனர். சிவாவின் நண்பர்களை ஆங்காங்கே போலிஸ் விசாரித்துக் கொண்டிருந்தது.

மீனா அழுது ஓயும் வரை காத்திருந்து விட்டு, அருணும் சிவாவும் அவளை நெருங்கினர்.

“ஹலோ. நான் தான் உங்கக்கிட்ட ஃபோன்ல பேசினது. என் பேரு அருண். போலீஸ்ல கிரைம் கன்ஸல்டண்டா இருக்கேன்?”

அழுது சிவந்த கண்களால் அருணை நிமிர்ந்து பார்த்தாள்.

“உங்க இழப்பும் வேதனையும் என்னால புரிஞ்சிக்க முடியுது. சிவகுருவக் கொலை செஞ்சது யாருன்னு கண்டுபிடிக்கணும். அதுதான் நல்ல நண்பர்களா சிவகுருவுக்கு இனிமே உங்களால செய்ய முடிஞ்சது. இந்த இன்வெஸ்டிகேஷன்ல எங்களுக்கு இது கோல்டன் ஹவர். சீக்கிரமா ஆக்ட் பண்ணலைன்னா தடயங்களைக் கொலைகாரன் அழிச்சிடலாம். உங்க நண்பனுக்கு நியாயம் கிடைக்க உங்க உதவி வேணும். செய்ய முடியுமா?”

“ம்ம்”

“உங்க ஃப்ரண்டுக்கு எதிரிங்க யாரும் இருக்காங்களா?”

“அப்பிடியெல்லாம் இல்ல சார். சிவா ரொம்ப நல்ல டைப். கலகலன்னு பேசுவான். டூ மினிட்ஸ் பேசினா போதும் நீங்க அவன் ஃப்ரண்ட் ஆகிடுவிங்க” மீனாவின் தோளை ஆறுதலாகப் பிடித்திருந்த சிவப்பு சுடிதார் பேசினாள்.

“அவங்க சொல்லட்டுமே?”

“இல்ல சார். இவ சொல்றதுதான் சரி” கர்ச்சீஃபால் கண்களைத் துடைத்துக் கொண்டே பேசினாள்.

“சமீபத்துல எதுவும் அவன் நடவடிக்கைல மாற்றம் ஏதாவது நோட்டிஸ் பண்ணீங்களா?”

“இல்ல சார். யூசுவலா தான் இருந்தான்”

“ஓக்கே. உங்களுக்கு ஏதாவது நினைவுக்கு வந்ததுன்னா சொல்லுங்க” தன் விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான். வாங்கி உள்ளங்கைக்குள் மூடி வைத்துக் கொண்டு தலையாட்டினாள்.

திரும்பி நடக்கும்போது, “என்ன சிவா ஏதாச்சும் தேறிச்சா?”

“இல்ல சார். எல்லாரும் ஒரே டயலாக் தான் சொல்றாங்க. சிவகுரு நல்லவன், வல்லவன், எல்லாருக்கும் ஃப்ரண்டுன்னு. அப்பிடியே காலேஜ் பிரச்சனையா இருந்தாலும் அடி தடி கைகலப்புன்னு வருமே தவிர இப்பிடி கழுத்தறுக்கிறது எல்லாம் நடக்காது சார்”

“கரெக்ட் சிவா. நீங்க சொல்றதும் சரிதான். டெட் எண்ட்ல தான் இருக்கோம். எங்கயாச்சும் நூல் கிடைச்சாத்தான் உண்டு”

மார்ச்சுவரி தாண்டி வரும்போது ஓரமாக மகேஷும் இன்னும் இரண்டு பேரும் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்ததும் டி.டிஆர் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய ஏற்பாடு செய்யச் சொன்னது நினைவுக்கு வந்தது.

“ஹலோ மகேஷ்” என்று அவன் முன்னால் போய் நின்றான்.

“ஹலோ சார்” என்று மலர்ந்தவன், “சார் இது என்னோட ஃப்ரண்ட்ஸ். டேய் இவர் தான் அருண் சார். சொன்னேனே”

“ஹலோ சார்”

“என்ன இங்க?”

“சார் அப்பா பாடியை போலிஸ் டேக் ஓவர் செஞ்சி இங்க தான் போஸ்ட் மார்ட்டம் செய்யறாங்க சார். வீட்டுல சொந்தக்காரங்க எல்லாம் ஒரே திட்டு. இப்பிடிப் பண்ணிட்டியேடான்னு. ஒரு வேளை கொலையா இருந்தா எங்கப்பாவை யார் கொன்னதுன்னு கண்டு பிடிக்கணும்ல சார். அதுக்குத்தானே? அது புரிஞ்சிக்காம” கண் கலங்கினான்.

“விடுங்க மகேஷ். அவங்கள்லாம் அப்பிடித்தான். சரி போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சதா?”

“முடிஞ்சது சார். இன்னும் அரை மணி நேரத்துல பாடியை குடுக்குறேன்னு சொல்லியிருக்காங்க. வாங்கிட்டுப் போகலாம்னு தான் சார் வெயிட் பண்றோம்”

“ஓ. ஓக்கே. நான் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் பாத்துட்டு உங்களுக்கு அப்டேட் பண்றேன்”

“தேங்க்ஸ் சார்”

“பரவாயில்ல மகேஷ்”

அவர்களிடம் இருந்து விலகி வந்ததும், “சிவா, போஸ்ட் மார்ட்டம் செஞ்ச டாக்டரை மீட் பண்ணலாமா?”

“ஷ்யூர் சார். யாருன்னு விசாரிச்சிட்டு வர்றேன். நீங்க ஜீப் பக்கத்துல வெயிட் பண்ணுங்க சார்”

*****************************************************************************************************************************

போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர் சகாயம் ஒடிசலாக ரகுவரனை நினைவு படுத்தினார். அருண் உள்ளே வருவதைப் பார்த்ததும் கண்ணாடியைக் கழட்டிக் கையில் எடுத்துக் கொண்டு எழுந்தார்.

“ஹலோ டாக்டர், ஐ ம் அருண். போலிஸ் கிரைம் கன்ஸல்டண்ட்”

“சிவா சொன்னாரு சார். ஐ ம் சகாயம்” - ரகுவரனின் குரலைப் போலவே லேசான கரகரப்புடன் இருந்தது. கையை ஆட்டி ஐ நோ என்று சொன்னால் ரகுவரனே தான்.

“இந்த டி.டி.ஈ போஸ்ட் மார்ட்டம்”

“யெஸ் அருண். நீங்க சொன்னதால பாய்ஸன் ப்ரொஃபைலிங் செஞ்சோம். ஹீ இஸ் பாய்ஸண்ட். 36 ஹவர்ஸ்க்கு மேல ஆகிட்டதால வயித்தில இருந்த ஃபுட்ல எந்த ஃபுட்ல பாய்ஸன் இருந்ததுன்னு கண்டுபிடிக்க முடியலை. லக்கிலி, வீ ஃபௌண்ட் த பாய்ஸனஸ் ஃபுட்.”

‘ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கிறாரே டாக்டர்’ என்று நினைத்துக் கொண்டு ஆர்வத்துடன் டாக்டர் முகத்தையே ஏறிட்டான்.

“அவரோட பல் இடுக்கில ஒட்டிட்டு இருந்த துணுக்குல பாய்ஸன் இருக்கிறதைக் கண்டு பிடிச்சிட்டோம். அதோட டெக்ஸ்ட்சர் & கலர் பார்க்கும்போது அது பீடாவா இருக்கலாம். விசாரிச்சதுல அவருக்கு பீடா போடுற பழக்கம் இருக்காம்”

“தேங்க்யூ டாக்டர். டீட்டெயில்ட் ரிப்போர்ட் கமிஷனர் ஆஃபிஸ்க்கு அனுப்பிடுங்க. நான் பாத்துக்கிறேன். நாங்க கிளம்பறோம். நைஸ் மீட்டிங் யு”

மீண்டும் கை குலுக்கிவிட்டு வெளியே வந்தான்.

தூரத்தில் ஆம்புலன்ஸில் பாடியை ஏற்றிக் கொண்டிருக்க பக்கத்தில் நின்ற மகேஷ் தென்பட்டான். “மகேஷ்” என்று சத்தமாகக் கூப்பிடவும் திரும்பிப் பார்த்தவனை கையசைத்துக் கூப்பிட்டான் அருண்.

“மகேஷ் உங்க சந்தேகம் சரிதான். உங்கப்பா விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டுருக்காரு”

“நினைச்சேன் சார்.” கண்கள் ஈரத்தால் பளபளப்பாயின. “எங்கப்பாவை யார் கொன்னாங்க, எதுக்காகக் கொன்னாங்கன்னும் கண்டுபிடிச்சிடுங்க சார். என்னால ஆன என்ன ஹெல்ப்னாலும் செய்யறேன்”

“ஷ்யூர் மகேஷ். என்னால முடிஞ்சதைச் செய்யறேன். தென், உங்கப்பாவுக்கு பீடா, வெத்தலை சாப்புடற பழக்கம் இருக்கா?”

“இருக்கு சார். நைட் ட்ரெயின்ல போனார்னா பீச் ஸ்டேஷன் வாசல்ல இருக்கிற ஒரு பீடாக் கடையில பீடா வாங்கிட்டு தான் போவாரு. கடைக்காரன் பேரு கூட மாரின்னு நினைக்கிறேன்”

“தேங்க்ஸ் மகேஷ். நான் ப்ராக்ரெஸை உங்களுக்கு அப்பப்ப இன்ஃபார்ம் பண்றேன். அப்பாவை நல்லபடியா வழியனுப்பப் பாருங்க”

***********************************************************************************************************************************
ஜீப்பில் போய்க் கொண்டிருக்கும்போது, “சிவா, அந்த பீடாக் கடை மாரியை விசாரிக்க ஒரு கான்ஸ்டபிளை அனுப்புங்க. சாதரணமா விசாரிக்கச் சொல்லுங்க. ஏதாச்சும் சந்தேகப்படும்படியா ஒளறினா மட்டும் ஸ்டேஷனுக்குத் தூக்கிட்டு வந்தாப் போதும்”

“ஏன் சார்? பீடால தான் பாய்ஸன் இருக்கும்னா அவனை தூக்கிட்டு வந்து நாலு கும்மு கும்மலாமே சார்?”

“இல்ல சிவா. அவன் ஏன் இவரைக் கொல்லணும். என்ன மோட்டிவ்?”

“அதுவும் சரிதான் சார்”

அருணின் செல்ஃபோன் ஒலித்தது. “ஹலோ”

“சார் நான் மீனா பேசுறேன். சிவாவோட கேர்ள் ஃப்ரண்ட்”

“ஐ ரிமெம்பர். சொல்லுமா”

“சார் ஒரு முக்கியமான விசயம் நினைவுக்கு வந்தது. அதான் உங்கக்கிட்ட சொல்லிடலாம்னு...”

“என்ன விசயம்?”

“சிவா கொஞ்ச நாளா ஏதோ தப்பு பண்றான்னு நினைக்கிறேன் சார். நேத்து காலைல” என்று ஆரம்பித்து அவர்கள் இருவருக்குள் நடந்த உரையாடல் முழுக்க சொன்னாள்.

“கையில சாவி வச்சிருந்தான்னு சொன்னியே. என்ன சாவின்னு நினைவிருக்கா?”

“யெஸ் சார். அது எங்க காலேஜ் லாக்கர் கீ”

“சிவாவோட லாக்கர் நம்பர் என்னம்மா?”

“1437”

“தேங்க்யூம்மா. வேற ஏதாச்சும் நினைவுக்கு வந்தா உடனே கால் பண்ணு”

ஃபோனை அணைத்து விட்டு சிவாவைப் பார்த்தான். அருணின் முகத்தில் ட்யூப் லைட் போட்டாற்போல வெளிச்சத்தைப் பார்த்ததும், சிவா, “என்ன சார் எதுவும் நூல் கிடைச்சிருச்சா?”

“ஆமா சிவா. நீங்க உடனே சிவகுரு காலேஜ்க்கு வண்டியை விடுங்க”

1 comment:

திவாண்ணா said...

பீடா கடை பார்க் ஸ்டேஷனா பீச் ஸ்டேஷனா?