Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Saturday, January 29, 2011

இலங்கையைப் புறக்கணிப்போம் #tnfisherman

விளையாட்டு வேறு, அரசியல் வேறு என்று நம்பிக்கொண்டிருந்தவன்தான் நான்.

என்னைச் சுற்றி நடக்கும் விடயங்களைப் பார்த்துப் பதைத்து, கவலை கொண்டு, கண்கள் கலங்கி, கண்ணீர் விட்டு அழுது அதன் பின் அதனை மறந்தும் போனவன் நான்.

2010 ஐ.பி.எல் போட்டிகளுக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இலங்கை வீரர்கள் திலன் துஷாரவையும், பெரேரவையும் ஏலத்தில் எடுத்துக் கொண்டு வந்ததைக் கண்டித்து சென்னை அணியின் வலைமனையில் நம் எதிர்ப்பைப் பதிவோம் என்று மின்னஞ்சல் மூலம் கோரிக்கை விடுத்த நண்பர்களிடம் விளையாட்டையும் அரசியலையும் சேர்க்காதீர்கள் என்று சண்டை போட்டவன் நான்.

இயக்குநர் ராமின் எழுதும் காட்சி வலைப்பூவில் சக்தி எழுதிய இந்தக்கட்டுரையை வாசித்த பின்னும் தொடர்ந்து ஐ.பி.எல் பற்றி எழுதியவன் நான்.

நவம்பர் 27, 2008. பாகிஸ்தானில் இருந்து வந்ததாக நம்பப்படும் தீவிரவாதிகள் 14 பேர் மும்பை நகரத்தை சில நாட்கள் ஸ்தம்பிக்கச் செய்தனர். உயிர், பொருள் இழப்புகள் ஏற்பட்டன. பொங்கி எழுந்தது இந்தியா. பாகிஸ்தானைக் குற்றம் சொல்லி உலக நாடுகளிடம் ஒப்பாரி வைத்தது, இந்நிகழ்வில் பாகிஸ்தான் அரசாங்கம் எந்த அளவுக்கு ஈடுபட்டது என்பதற்கு சான்றுகள் இல்லாத போதிலும். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களுக்கான விசா வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தியது. பாகிஸ்தான் செல்ல இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணத்தை ரத்து செய்தது.

2010 ஐ.பி.எல் துவங்குமும் ஏலத்தில் பாகிஸ்தான் அணி வீரர்களை சேர்த்தும் எந்த அணி முதலாளிகளும் அவர்களில் ஒருவரைக் கூட எடுக்காமல் அவர்களைக் கேவலப்படுத்தினர். உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஐ.பி.எல் நிர்வாகத்தைக் கண் துடைப்புக்காகக் கண்டித்தார்.

ஆனால், இலங்கை அரசின் சம்பளம் பெறும், இலங்கையின் பாதுகாப்புக்கு பணி புரியும் இலங்கைக் கடற்படை என் மீனவச் சகோதரர்களை தினம் தினம் சித்ரவதை செய்தும் கொல்லாமல் கொன்றும், கொன்றே கொன்றும் வந்தும், அவற்றைப் பற்றி ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்காமல் கை கட்டி வேடிக்கைப் பார்க்கிறது அதே இந்திய ஏகாதிபத்ய அரசு.

இரண்டு வாரங்களில் இரண்டு மீனவர்களை சுட்டும் கழுத்தை நெறித்தும் கொன்று வெறியாட்டம் போட்டிருக்கிறது ஃபாசிச சிங்கள கடற்படை.
பெரும்பாலான கொலைகள் நம் எல்லைக்குள் வந்தே செய்திருக்கிறது சிங்கள் கடற்படை. அப்படி எல்லை மீறுபவர்களையும் சுடும் உரிமையை இந்த நாய்களுக்கு யார் கொடுத்தது? மற்ற நாடுகளில் இதைத்தான் செய்கிறார்களா? நம் எதிரி நாடு என்று அரசியல்வாதிகள் முதல் பொதுமக்கள் வரை வெளிப்படையாகக் கூறிக்கொள்ளும் பாகிஸ்தான் கூட மீனவர்களை எச்சரித்து விட்டுவிடுகிறதே? பாகிஸ்தான் எதிரி நாடா இல்லை இலங்கை எதிரி நாடா? 

சென்னையில் சிங்கள புத்த விகாரம் ஒன்று தாக்கப்பட்டவுடன், இனி மீனவர்கள் மேல் தாக்குதல் நடக்காது என்று சொல்லியிருக்கிறது சிங்கள அரசு. ஆக இதுவரை நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் மற்றும் தாக்குதல்களுக்கு என்ன பதில்?
இலங்கை அரசின் பிரதிநிதிகளை அலறியடித்துக் கொண்டு ஓடிவரச் செய்ய வேண்டிய இந்திய அரசு பிரதிநிதியை அனுப்பி வைக்கிறதாம். அவர் போய் மன்னிப்புக்கடித்தத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு வருவாரா? இலங்கைக்கான இந்தியத் தூதரை திரும்பப் பெற்றிருக்க வேண்டாமா? இலங்கையுடனான நட்பை முறித்துக் கொண்டிருக்க வேண்டாமா? முதுகெலும்பில்லாத அரசாகிவிட்டதே மன்மோகன் அரசு?

அமைச்சர் பதவிகள் எத்தனை வேண்டும் என்று பேச தனிவிமானம் ஏறிப் போவாராம். கூட்டணி பற்றிப் பேசவும் விமானம் பிடிப்பாராம். மீனவன் செத்தால் தந்தி அடிப்பாராம். கடிதம் எழுதுவாராம். இவரெல்லாம் தமிழினத் தலைவராம்? இனத்தையே அழித்துவிட்டால் பிறகு எங்கிருந்து தலைவராக முடியும்? 

இந்திய ஊடகங்கள் இந்த விவகாரத்தைப் பற்றி பேசவே மாட்டேன் என்கின்றன. இந்து பத்திரிகை ஒரு படி மேலே போய் சிங்கள அரசுக்கு பலத்த ஜால்ரா அடிக்கிறது. 

மத்திய மாநில அரசின் மெத்தனத்தைக் கண்டிக்கவும், இருட்டடிப்பு செய்யும் ஊடகங்களின் முகத்தில் கரியைப் பூசவும், இந்த விவாகரத்துக்கு வெளிச்சம் கொண்டு வரவும் தமிழ் வலையாளர்கள் டிவிட்டர் தளத்தில் ஒரு புதுமைப் போராட்டம் ஒன்றைக் கையெடுத்திருக்கிறார்கள். #tnfisherman என்ற டேகுடன் ட்விட் புரட்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வலைத் தொடர்பு கொண்ட தமிழர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். எனக்குப் பிரச்சனை இல்லாதவரை கவலையில்லை என்ற மனப்போக்கை கை விட்டு அனைவரும் நம் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும். 

ட்விட்டர் போராட்டத்தோடு நிறுத்திவிடாமல் அதற்கு வெளியேயும் நம் போராட்டத்தைத் தொடர்வோம். 

இலங்கைப் பொருட்களை புறக்கணிப்போம். வெளிநாடுகளில் வாழ்வோர் கடைகளில் இலங்கைப் பொருட்களை வாங்கி பின்னர் அதை இலங்கைப் பொருட்கள் என்பதால் திருப்பித் தருவதாகச் சொல்லி திருப்பித் தருவோம். (இந்தியாவில் வாங்கிய பின் திருப்பித் தருவதென்பது நடக்காத காரியம் அதனால் தான் வெளிநாட்டுத் தமிழர்கள்).

கிரிக்கெட் போட்டிகளைப் புறக்கணிப்போம். நேரிலோ டிவியிலோ பார்க்காமல் புறக்கணிப்போம். ஒரு வேளை ஏற்கனவே டிக்கெட் வாங்கிவிட்டீர்கள் என்றால் ஸ்டேடியத்துக்குள் டிவி கேமிராவுக்குத் தெரியும் வண்ணம் மீனவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை போஸ்டர்களாகவும் பேனர்களாகவும் ஏந்திப் பிடிப்போம். 

இலங்கையில் நடக்கும், இலங்கை அணி பங்குபெறும் அனைத்து விளையாட்டுகளையும் புறக்கணிப்போம். இலங்கை அணியைத் தடை செய்யாத ஐசிசி நடத்தும் அத்தனைப் போட்டிகளையும் புறக்கணிப்போம். 

இரண்டு இலங்கை வீரர்களைத் தேர்ந்தெடுத்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியையும் புறக்கணிப்போம். அவர்களை நீக்கும் வரை சென்னை சூப்பர் கிங்க்ஸின் போட்டிகளைப் புறக்கணிப்போம். 

இலங்கையில் தொழில் நடத்தும் ஏர்டெல் போன்ற இந்திய நிறுவனங்களைப் புறக்கணிப்போம். இப்போது மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி வந்துவிட்டதால் ஏர்டெல் தொடர்புகளைத் துண்டிப்போம். 

இலங்கை இனவாத அரசு பகிரங்க மன்னிப்புக் கேட்கும் வரை, கட்சத்தீவை இந்தியா திரும்பப் பெறும் வரை நம் போராட்டம் தொடரவேண்டும். 

Sunday, August 15, 2010

ஆனந்த சுதந்திரம்?!?!?

என் தலித் சகோதரன் சுதந்திரமாக தேர்தலில் போட்டியிட முடியவில்லை.

அப்படிப் போட்டியிட்டு ஜெயித்தாலும், சுதந்திரமாக பஞ்சாயத்துத் தலைவராகப் பணியாற்ற முடியவில்லை.

கிழக்கு மாநில சகோதரர்கள் சுதந்திரமாகப் போராடக் கூட முடியாமல் நாட்டுக்குள்ளேயே ராணுவ ஆட்சிக் கொடுமை அனுபவித்து வருகிறார்கள்.

மேற்கு வங்க பழங்குடிச் சகோதரர்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசு தாரை வார்க்கத் துடிக்கும் தங்களின் சொந்த நிலங்களில் சுதந்திரமாகக் குடியிருக்க முடியவில்லை

போபால் சகோதரர்கள் தங்களுக்கு நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைக்கு தக்க நட்ட ஈட்டைக் கூட சுதந்திரமாகப் பெற முடியவில்லை.

என் தமிழக மீனவச் சகோதரர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க கடலில் இறங்க முடியவில்லை

சுதந்திரமாம்.. தினமாம்... விழாவாம்

Wednesday, July 7, 2010

புறக்கணிப்பு

குழந்தை பிறப்பு என்பது ஒரு நெடிய ப்ராசெஸ். கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில் வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வரும். எதை வாயில் போட்டாலும் குமட்டிக் கொண்டு வெளியே வந்து விடும். தலை சுற்றலும் மயக்கமும் காலையிலும் மாலையிலும் வாட்டி எடுத்து விடும். பிடித்த உணவுகள் பிடிக்காமல் போய் விடும். சிலருக்கு தலை வலியும் வருத்தி எடுக்கும்.

அடுத்த ஆறு மாதங்களில் வாய்க்கு ருசியாகச் சாப்பிட நாக்கு ஏங்கும். தன் சமையலே தனக்குப் பிடிக்காமல் போய் விடும். குழந்தை வயிற்றுக்குள் அசைய ஆரம்பித்தவுடன் தூக்கம் போய் விடும். குழந்தைக்காக ஒருக்களித்தே படுக்க வேண்டி இருக்கும். நின்று கொண்டே இருந்தால் கால் நரம்புகளில் ரத்தம் அதிகம் பாய்ந்து வெரிகோஸ் வெயின்ஸ் வரும். நடந்தால் மூச்சு வாங்கும். ஹார்மோன்களின் உள்ளே வெளியே விளையாட்டால் எரிச்சலும் கோபமும் கும்மாளம் போடும்.

கடைசியாக பிரசவ நேரத்தின் வேதனையையும் வலியையும் பற்றி சொல்லவே வேண்டாம். அதை மறு பிறப்பு என்றே சொல்வார்கள்.

இத்தன வேதனைகளையும் பொறுத்துக் கொண்டால், இறுதியாக நம் கையில் தவழும் அழகுக் குழந்தை இத்தனை நாள் பட்ட வேதனைகள் அத்துனையையும் மறக்கடிக்கும்.

சில சோகமான தருணங்களில் குழந்தை இறந்தே பிறந்து விடுவதோ, அல்லது தாய் பிரசவத்தில் மரணிப்பதோ, பிறந்த குழந்தை ஏதோ குறை பாட்டுடன் பிறந்து விடுவதோ தவிர்க்க முடியாதது.

இந்த வேதனைகளையும், தவிர்க்க முடியாத எதிர் நிகழ்வுகளையும் பார்த்து விட்டு ஆணியே புடுங்க வேண்டாம் என்று யாரும் இருந்து விடுவோமா?

பவனின் இந்தப் பதிவுக்கு வந்த சில பின்னூட்டங்களின் சாரம் அப்படித்தான் இருந்தது.

எந்த ஒரு போரோ போராட்டமோ பக்க விளைவுகள் இல்லாமல் வந்திடாது. அந்தப் பக்க விளைவுகளுக்குப் பயந்து அந்த போரையோ போராட்டத்தையோ நிறுத்தி விட்டால் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு எப்படிக் கிடைக்கும்? மேலே சொன்னது போல சில சமயங்களில் நிரந்தரத் தீர்வு கிட்டாமலேக் கூடப் போகலாம். அல்லது நாம் எதிர்ப்பார்த்த நிரந்தரத் தீர்வு குறை பாட்டுடன் இருந்து விடலாம். அதற்காக போராடாமல் இருக்க முடியுமா? இருந்து விடுங்கள் என்று சொல்கிறார்கள் ஒரு சாரார். போராட்டத்தையே கேலி செய்கிறார்கள் ஒரு சாரர்.

முள்வேலிக்குப் பின் நிற்கும் தமிழ்ச் சகோதரர்களின் படத்தை நடுவில் போட்டு, ஒரு பக்கத்தில் அசின் படத்தையும் இன்னொரு பக்கத்தில் போராட்டம் நடத்துவோர் படத்தையும் போட்டு, “அசின் ஷூட்டிங்குக்கு வந்தா அவ கூட ஒரு படம் எடுக்கலாமெண்டு நெனச்சா விடமாட்டாங்க போலருக்கே இந்தப் பொடியள்” என்று ஒரு கமெண்டையும் போட்டால் அது எந்த அளவுக்கு அவர்களின் வேதனையை கேலி செய்வதாக இருக்குமோ அப்படி இருந்தது பவனின் இந்தப் பதிவு.

இலங்கை சிங்களப் பேரினவாத அரசு புலிகளை ஒழிக்கத் தீவிரமாக போரில் ஈடுபட்டு நாட்டின் பொருளாதாரத்தையும் பத்திரிக்கை சுதந்திரத்தையும் ஒரு சேர நசுக்கிக் கொண்டிருந்த போது வெள்ளை வேனுக்குப் பயந்து மூச்சுக் காட்டாமல் இருந்தவர்கள் எல்லாம், இன்று இலங்கையைப் புறக்கணிப்போம் என்ற போராட்டத்தை முன் வைக்கும் போது, அதனால் பொருளாதாரம் பாதிக்கிறதென்றும், அப்பாவி தமிழன் தலையில் அந்தப் பொருளாதாரச் சுமை விழுகிறதென்றும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இதன் பின்னணியில் இருக்கும் இந்திய உளவுத்துறையின் வேலையைப் பற்றி அறியாமல் பவனைப் போல இளைஞர்களும் அந்த வலையில் விழுந்து விட்டார்கள்.

என் நாட்டின் பேரைச் சொல்லி அரசியல் ஆதாயம் தேடுவதா என்று கோபப் படுகிறீர்கள் பவன். நீங்கள் முதலில் ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் இலங்கைத் தமிழரின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தி ஆட்சியைப் பிடித்து விடவோ, ஆயிரம் வீடு கட்டவோ முடியாது. செலவு செய்யாமல் போடக் கூடிய ஓட்டையே போட பெரும்பாலான தமிழர்கள் தயாராய் இல்லாத போது, இலங்கையின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தி முன்னேறுவதாவது? காமெடி செய்கிறீர்கள் பவன் (முன்பாவது விடுதலைப் புலிகள் காசு கொடுக்கிறார்கள் என்று பகடி செய்து கொண்டிருந்தார்கள். இப்போது அவர்களும் இல்லையே?)

பவன், apartheid என்ற வார்த்தை பாப்புலராக இருந்த காலத்தில் நீங்கள் பிறந்திருக்கவே மாட்டீர்கள். கறுப்பின மக்களை தனிமைப் படுத்தி சட்டம் இயற்றியது தென்னாப்பிரிக்க அரசு. இதனைக் கடுமையாக எதிர்த்த நெல்சன் மண்டேலாவை சிறையில் தள்ளியது. நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்தன. தென்னாப்பிரிக்காவுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்த நிறுவனங்களை அவர்களின் நாட்டு குடிமக்கள் தொடர்புகளைத் துண்டிக்குமாறு வற்புறுத்தினார்கள். தென்னாப்பிரிக்க விளையாட்டு அணிகள் ஒலிம்பிக் முதலாக அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்ள தடை விதிக்கப் பட்டன. தென்னாப்பிரிக்காவின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப் பட்டது. இதனால் தென்னாப்பிரிக்காவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப் பட்டது. வேறு வழியில்லாமல் வெள்ளைப் பேரினவாத அரசு இறங்கி வந்தது. 27 வருடங்கள் சிறையில் பூட்டப் பட்டிருந்த நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப் பட்டார். கறுப்பின மக்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு ஐ.நாவின் மேற்பார்வையில் தேர்தல் நடத்தப்பட்டது. பெரு வாரியான வாக்கு வித்தியாசத்தில் நெல்சன் மண்டேலா ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.

அந்தக் கால கட்டத்தில் தென்னாப்பிரிக்காவை பொருளாதார நெருக்கடிக்குள் ஆளாக்கினால் அங்கிருக்கும் கறுப்பின மக்களும் பாதிக்கப் படுவார்களே என்று நினைத்திருந்தால் இன்றும் தென்னாப்பிரிக்கா இனவாத அரசாகவே இருந்திருக்கும். நெல்சன் மண்டேலாவும் சிறையிலேயே மரணித்திருப்பார்.

இலங்கையையும் இப்படி ஒரு நெருக்கடிக்குள் உள்ளாக்க வேண்டும். இந்திய அரசும் சீன அரசும் மட்டுமே இலங்கையின் பக்கம் இருக்கின்றன. ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே இலங்கையை போர்க்குற்றவாளி ஆக்கிவிட்டது. அமெரிக்காவும் வாய்ப்பை எதிர்பார்த்தே இருக்கிறது. இலங்கைப் பொருட்களை வாங்காமல் தவிர்த்தும், இலங்கையோடு வணிகத் தொடர்பு வைத்திருக்கும் நிறுவனங்களை தொடர்புகளை நிறுத்த வற்புறுத்தியும் வந்தோமானால் தென்னாப்பிரிக்காவின் நிலைக்கு இலங்கை தள்ளப்படும். அதன் மூலம் தமிழனுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு - தனி நாடோ, சுயாட்சியோ - கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. என் போலவே இதை குறிக்கோளாகக் கொண்டு போராடும் பலருக்கும் இருக்கிறது.

இது கொஞ்சம் மெதுவான ப்ராசஸ் தான். இன்று கர்ப்பமாகி நாளைக் காலையே குழந்தை பெற்றுவிட முடியாது. அதே போல இன்றைய கர்ப்பத்தின் பக்க விளைவுகளுக்குப் பயந்து கர்ப்பத்தைக் கலைத்துவிட்டால் குழந்தை கிடைக்காமலே போய்விடும்.

உங்கள் பதிவின் பின்னூட்டங்களின் மூலம் பல சிங்களர்களுக்கும் இதே மனப்பாங்கு இருக்கிறதென்று தெரிகிறது. அவர்களைத் திரட்ட கல்லூரி மாணவராகளாகிய நீங்கள் ஏன் முன்வரக் கூடாது? உள்ளுக்குள் இருந்து போராடுங்கள். வெளியிலிருந்து சர்வதேசத்தின் கவனத்தை உங்கள் நாட்டின் மீது திருப்ப நாங்கள் எங்களால் ஆனதை முயற்சிக்கிறோம்.

உடனே, வெளிய இருந்து என்ன வேணும்னா சொல்லலாம். உள்ள வந்து பாரு என்று சொல்லக் கூடாது. தென்னாப்பிரிக்காவின் போராட்ட வரலாற்றைப் படித்துப் பாருங்கள். அதிலிருந்து ஒன்றிரண்டு இலைகளை உருவிக் கொள்ளலாம்.

இன்று வரை சாமானிய ஈழத் தமிழன் சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்துப் போராட ஒன்று திரளவில்லை என்பதே ஈழப் போராட்டத்தின் பின்னடைவுக்கு ஒரு முக்கியக் காரணம்.

Wednesday, May 26, 2010

தமிழ் வலி(?!)க் கல்வி



"As long as we have the language, we have the culture.
As long as we have the culture, we can hold on to the land"

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அந்த மொழியை முதலில் அழிக்க வேண்டும். இனம் தானாய் அழிந்து விடும்.


இது 100% உண்மை. ஏற்கனவே சொன்னது போல கரீபியன் தீவுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் இன்று இந்திய வம்சாவளியினர் என்று சொல்லப்பட்டாலும் அதற்கான அடையாளம் தொலைந்து போய்விட்டது. பெயரை வைத்து மட்டுமே அறிந்து கொள்ளக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். இன்னும் வரும் காலத்தில் அதுவும் அழிந்து போய்விடும். 


தாய்மொழியைப் பேசிக்கொண்டிருந்து அதை உயிரோடு வைத்திருப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியம் அந்த மொழியிலேயே கல்வி பயிலவும் வாய்ப்பு அளிப்பது. 


நம் நாட்டின் மக்கள் தொகைக்கும், நம் மக்களின் புத்திசாலித்தனத்துக்கும் எத்தனைக் கண்டுபிடிப்புகள் வந்திருக்க வேண்டும்? எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்பித்திருக்க வேண்டும்? நம் தமிழ்நாட்டின் மக்கள்தொகையை விட சற்றே கூடிய ஜெர்மனி போன்ற நாடுகள் பல விஞ்ஞானிகளையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிடுகின்றன. ஏன், தமிழனாலோ இல்லை இந்தியர்களாலோ முடிவதில்லை?


நம் நாட்டின் கல்வித்திட்டம் வெள்ளைக்காரத் துரை மெக்காலே அறிமுகப்படுத்தியது. அது இந்தியர்களை உடலால் இந்தியர்களாகவும் உள்ளத்தால் வெள்ளையர்களாகவும் வைத்திருக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. நம்மை முழுக்க முழுக்க சேவைத்துறை(Services Industry)க்கே தயார்படுத்தும் வண்ணமே வடிவமைக்கப்பட்டது. இன்னும் பச்சையாகச் சொல்லப்போனால் அவனுக்கு அடிமைப் பிழைப்பு நடத்த மட்டுமே நம்மைத் தயார்ப்படுத்தக் கூடியது.


நம் நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு வரை தாய்மொழி வழியில் படிக்க முடியும். அதன் பிறகு பாலிடெக்னிக் படித்தாலும் சரி, கலை-இளைஞர், அறிவியல்-இளைஞர் பட்டம் பயின்றாலும் சரி, தொழில்கல்வி பயின்றாலும் சரி, ஆங்கில வழியில் பயின்றாக வேண்டிய கட்டாயம். 


இது தமிழ் வழியில் பயின்று வரும் மாணவர்களுக்கு துவக்கத்தில் மிகவும் கடினமாக இருக்கிறது. பின்னர் ஒரு வழியாகச் சமாளித்து பட்டம் பெற்று விடுகின்றனர். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு பட்டம் பெறுவது என்பதே ஒரு குறிக்கோளாக மாறி விடுகிறது. அதையும் மீறி ஆராய்ச்சிப் படிப்புக்கு செல்பவர்கள் மிகவும் குறைந்தவர்களே. ஒரு வேளை இவர்களுக்கு மேற்படிப்பையும் ஆராய்ச்சிப் படிப்பையும் அவர்களின் தாய்மொழியில் கற்க வசதி செய்து தரப்பட்டிருந்தால் இந்தியாவும் பல “தமிழ்” விஞ்ஞானிகளை உலகுக்குத் தந்திருக்கலாம்.


இந்த நிலையில் தமிழக அரசின் முயற்சியால் பொறியியல் பட்டப் படிப்பை தமிழ்வழியில் அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் முன் வந்துள்ளது. இதை நாம் இருகரம் நீட்டி வரவேற்கும் முன், தமிழ் வழியில் சொல்லிக்கொடுக்க தமிழகத்தில் ஏதுவான உள்கட்டமைப்பு இருக்கிறதா? 


1. பாடங்கள் சொல்லித்தரத் துவங்கும்முன், அதற்கான பாடப்புத்தகங்கள் தமிழில் இருக்கின்றனவா?
2. தமிழில் சொல்லித்தர தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருக்கிறார்களா?
3. தனித்தமிழில் அனைத்து பொறியியல் பதங்களை மொழிபெயர்க்கப் போகிறார்களா? இல்லை சில பதங்களை ஆங்கிலத்திலேயே பயன்படுத்துவார்களா?
4. இருக்கின்ற கல்லூரிகளிலேயே தமிழ்வழி வகுப்புகள் தனியாகத் துவக்கப் போகிறார்களா? இல்லை தமிழ்வழிக்காகத் தனிக்கல்லூரி துவக்கப்போகிறார்களா?
5. மாணவர்களுக்கு படிப்பு முடிந்ததும் பிழைக்கச் செல்லும் இடங்களில் தொடர்புக்கான மொழியாக இருக்கும் ஆங்கிலத்தைக் கற்றுத் தர ஏற்பாடுகள் இருக்கின்றனவா?


இந்தக் கேள்விகளுக்குத் தெளிவான பதில் இல்லாத கட்டத்தில் தமிழ்வழிப் பொறியியல் படிப்பை வரவேற்கத் தயக்கமாகத்தான் இருக்கிறது. 


ஆனால், தமிழ்வழிக் கல்வியை எதிர்க்கும் சிலர் முன்வைக்கும் வாதங்கள் சில நேரங்களில் சிரிப்பையும் சில நேரங்களில் வேதனையையும் வரவழைக்கின்றன.


1. இப்படித்தான் இந்தி எதிர்ப்பு என்று போராட்டம் நடத்தி எங்களை இந்தி படிக்க விடாமல் வைத்து வெளிமாநிலங்களில் பிழைக்கச் செல்லும்போது கஷ்டப்பட வைக்கிறார்கள். 


தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த போது நான் பிறக்கவேயில்லை. ஆனாலும் நான் படித்துத் தெரிந்து கொண்டவரை, இந்தி எதிர்ப்புப் போராட்டம் இந்தித் திணிப்பை எதிர்த்ததே ஒழிய இந்தியையே எதிர்க்கவில்லை. இன்றும் தமிழ்நாட்டில் தமிழ் (First Language) Optional ஆகத்தான் இருக்கிறது. தமிழுக்குப் பதிலாக, இந்தியையோ, சமஸ்கிருதத்தையோ, ஃப்ரெஞ்சையோ எடுத்துப் படித்து தமிழ் வாசமே இல்லாமல் பி.எச்.டி வரை படித்துவிட முடியும். 


ஒரு மொழியைப் படிப்பதும் படிக்காததும் என் விருப்பமாக இருக்க வேண்டுமே ஒழிய இன்னொருவன் என்னிடம் அந்த மொழியைத் திணிக்கக் கூடாது. ஏற்கனவே ஆங்கில மோகத்தால் நகரங்களில் வசிக்கும் பிள்ளைகள் டமில் பேசித் திரிகின்றன. இதில் இந்தியும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் சொல்லவே வேண்டாம்.


2. பனிரெண்டு வருடங்கள் ஆங்கிலம் ஒரு மொழியாகப் படித்தும், 4 வருடங்கள் ஆங்கில வழியில் படித்தும் தொழில் புரியும் இடத்தில் ஆங்கிலம் பேசுவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இந்த நிலையில் அந்த நான்கு வருடத்தையும் தமிழ்வழியிலேயே படித்தால் கேட்கவே வேண்டாம். சுத்தமாக பிழைக்க முடியாமல் போய்விடும்.


இதுவும் தவறான வாதமாகவே படுகிறது. நான்கு வருட பொறியியல் படிப்பில் படித்த அனைத்தையும் நாம் பணிபுரியும் இடத்தில் உபயோகப் படுத்துகிறோமா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்லவேண்டும். சில அடிப்படை விசயங்களை மட்டுமே உபயோகப் படுத்துகிறோம். அந்த அடிப்படை விசயங்களையும் பனிரெண்டாம் வகுப்புக்குள் படித்து முடித்திருப்போம். அப்படியிருக்க நான்கு வருடங்களை தாய்மொழியில் பயின்றால் நன்கு புரிந்து ஆழமாகப் படிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்து நம் அறிவு இன்னும் அதிகமாகுமே ஒழிய குறையவோ மற்ற ஆங்கில வழியில் படித்த மாணவர்களைவிட தாழ்ந்தோ போய்விட வாய்ப்பே இல்லை. 


இதில் இரண்டு வாதங்களையும் சொல்பவர்கள் அவர்களை அறியாமலே அவர்களை மறுதலித்துக் கொள்கிறார்கள். 12 வருடம் ஆங்கிலமொழியைப் படித்தும், நான்கு வருடம் ஆங்கில வழியில் படித்தும் சரிவர ஆங்கிலம் பேச வராத போது, 12 வருடங்கள் இந்தி மொழியை மட்டும் படித்திருந்தாலே இவர்கள் சரளமாக இந்தி பேசிவிடுவார்களாம். 


இந்த வாதங்களை எடுத்து வைப்பவர்கள் பெரும்பாலும் மற்ற மாநிலங்களில் பணிபுரியச் சென்று அங்கே இந்தி பேசுபவர்களால் கேலி செய்யப்பட்டோ, மட்டம் தட்டப்பட்டோ, பணியைத் தொடரமுடியாமலோ கஷ்டப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள். இவர்கள் வெளிமாநிலத்தில் பணி புரிய ஏதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக எல்லோரையும் எதற்காக இந்தி படிக்கச் சொல்ல வேண்டும்? 


இன்னும் சிலர் பேசுவது என்னவோ தமிழ்நாடு பிழைக்க வழியில்லாமல் போய்விடுவதாகவும், மற்ற இந்தி பேசும் மாநிலங்கள் செல்வச்செழிப்புடன் இருப்பது போலவும் இருக்கிறது. பீகாரில் இருக்கும் அத்தனை பேரும் இந்தி பேசுவார்கள். 


சரி தமிழ்நாட்டுக்கு பிழைக்க வரும் பீகாரியும், சேட்ஜியும், கன்னடனும், தமிழ் கற்றுக்கொண்டா வருகிறான்? 


மொத்தத்தில் தொடர்பு மொழி என்பது பேசுவதற்கு மட்டும் தான். அதைப் பேசக் கற்றுக் கொள்வதற்கு அதன் இலக்கண இலக்கியத்தைப் பள்ளியில் படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பிழைக்கப்போன இடத்தில் மூன்று மாதத்திலோ ஆறு மாதத்திலோ எளிதில் கற்றுக் கொள்ளலாம். ஆங்கிலமும் அதைப் போலத்தான்.


இப்போது உலகமெங்கும் குளோபலைசேசனின் புண்ணியத்தில் அனைத்து மொழி பேசுபவர்களும் கலந்து வேலை செய்ய, வசிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. அப்படி பல இனங்கள் கலக்கும் பள்ளிகளில் பிள்ளைகளைத் தாய்மொழி கற்க வேண்டியது கட்டாயம் என்று உலகமெங்கும் இருக்கும் மொழிவல்லுநர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நாம் தமிழ்நாட்டிலேயே பிள்ளைக்கு ஆங்கிலம் பேசச் சொல்லிக்கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று பள்ளியை மாற்றிக்கொண்டு இருக்கிறோம். 


இப்படியே போனால், நார்வேயில் வேலை பார்க்கும் செந்தழல் ரவி நார்வேஜியன் மொழி தெரியாமல் கஷ்டமாக இருக்கிறது இனி அந்த மொழியையும் தமிழ்நாட்டில் கட்டாயம் கற்றுத்தர வேண்டும் என்று கொடிபிடிக்கப் போகிறார். 

Monday, May 17, 2010

ஈழத்தமிழர்கள் - ஒரு புலம்பெயர்ந்த இந்தியத் தமிழனின் பார்வை

இலங்கைப் பிரச்சனை சூடு பிடித்த காலம், நான் சிறுவனாக தென் தமிழகத்தில் வசித்து வந்த காலம். இலங்கைப்பிரச்சனை, விடுதலைப் புலிகள், பிரபாகரன், ஜெய்வர்த்தனே போன்ற பெயர்களை என் அப்பா அவர்தம் நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் கேட்டிருக்கிறேன். கொடும்பாவி ஒன்றை பாடைகட்டித் தூக்கிக்கொண்டு போன ஊர்வலங்களில் “ஜெயவர்த்தனே பொண்டாட்டி எங்களுக்கு வப்பாட்டி” என்று அர்த்தம் புரியாமலே கோஷம் போட்டுப் போயிருக்கிறேன்.

பருவ வயதுச் சிறுவனாக, இந்திய அமைதிப் படையில் போன ஒரு தமிழ் ராணுவ வீரர், வட இந்திய வீரர்கள் அங்கே செய்த அட்டூழியங்களைப் பட்டியல் இட்ட போது கதறி அழுதிருக்கிறேன். ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு ஒற்றைக்கண் சிவராசனையும் சுபாவையும் சி.பி.ஐ தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டி தேடிக்கொண்டிருந்த போது அவர்கள் மாட்டிவிடக்கூடாது என்று உள்ளூர ஆசைப்பட்டிருக்கிறேன். அவர்கள் போலீஸால் சுற்றி வளைக்கப்பட்டு வீர மரணம் அடைந்த போது அவர்களுக்காக சில துளி கண்ணீர் சிந்தியிருக்கிறேன்.

பிறிதொரு நாளில் ஒரு என்.எஸ்.எஸ் கேம்பின் போது ஒரு இலங்கை அகதிகள் முகாமில் நான் சந்தித்தவர்கள் இந்தியாவில் படும் கஷ்டங்களைக் கேட்டு நானும் கஷ்டப்பட்டிருக்கிறேன். என்னால் ஏதும் செய்ய இயலாத போதும் அவர்கள் சாய்ந்து அழுது தங்கள் பாரத்தை இறக்கிவைக்க ஒரு தோளாக உதவியிருக்கிறேன்.

2004ம் ஆண்டு அமெரிக்காவுக்கு வந்தேன். பல இலங்கைத் தமிழர்களுடன் நேரடியாகப் பழக வாய்ப்புக்கிடைத்தது. பலர் இனிமையாகப் பழகினார்கள். சிலர் பட்டும் படாமலும். பட்டும் படாமலும் பழகியவர்களைக் குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு இந்தியர்களால் எதாவது கசப்பான அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். எனக்கு இங்கே புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களைப் பார்க்கும்போது ஒரு பரிதாபமும் குற்ற உணர்ச்சியும் இருக்கும்.

பின்னாளில் தெரிந்து கொண்டேன் நான் பழகிய பல தமிழர்கள் இலங்கைப் பிரச்சனை தீவிரமாகுமுன் புலம்பெயர்ந்தவர்கள். ஆனாலும் பலர் அங்கே கஷ்டப்பட்டிருக்கிறார்கள். கொழும்புவில் இருந்து வெள்ளவத்தைக்கு ரயிலில் போகும்போது தமிழில் பேசினால் அடி விழுமாம். அப்படி கஷ்டங்களையும் இவர்கள் அனுபவித்து வந்திருக்கிறார்கள்.

நான் சந்தித்த பழகியவர்களில் பெரும்பாலானோர் பிரபாகரனைப் பிடித்தே இருந்தது. ஒரு சிலருக்கு தங்களுக்கென்று ஒரு தேசம் அமையும் பட்சத்தில் திரும்பிப் போக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. பெரும்பாலானோர் அமெரிக்க வாழ்க்கைக்கு மாறியிருந்தனர். அவர்களுக்குத் திரும்பிப் போக விருப்பமும் இல்லை.

அதுவரை இலங்கைத் தமிழர்கள் அனைவரும் தனி ஈழம் விரும்புபவர்கள் என்றும் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன். என் மனதில் இருந்த பிம்பம் உடையும் நாள் வந்தது.

ஒபாமா ஜனாதிபதியான பின்னர் ஒருநாளில் ஒபாமாவின் வெற்றிக்காக உழைத்த ஒரு தமிழரைப் பார்க்க நேரிட்டது. அவரும் மற்ற தமிழர்களும் சூடான விவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஈழத்தில் போர் உச்சக் கட்டத்தில் இருந்தது.  அந்த நபர் ஒபாமாவின் அரசு இலங்கைப் போரை நிறுத்த எந்த முயற்சியும் எடுக்காது. எடுக்கவும் கூடாது என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் பிரபாகரனையும் கடும் சொற்களால் சாடிக்கொண்டிருந்தார். பிரபாகரனால் தான் இலங்கைப் பிரச்சனை இவ்வளவு மோசமானதாகவும், சிங்களவர்களுடன் இயைந்து போயிருந்தால் எப்போதோ சமரசம் வந்திருக்கும் இரண்டு இனங்களும் சேர்ந்து வாழ்ந்திருக்கலாம் என்பதும் அவரது வாதங்கள். எனக்கு அவருடைய வாதத்தில் உடன்பாடு இல்லை.

அவரிடன் நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். “உங்களாலேயே இலங்கையை விட்டு வெளியேறி அமெரிக்காவில் நல்ல வாழ்க்கை நடத்த முடியும்போது எதற்காக பிரபாகரன் போர் முனையில் மொத்த குடும்பத்தையும் இருத்திக்கொண்டு போரிட்டுக்கொண்டிருக்க வேண்டும்? அவர் நினைத்தால் வெளியேறியிருக்கலாமே? லத்தீன் அமெரிக்காவில் பல குட்டி நாடுகளில் காசை விட்டெறிந்தால் முழு ராணுவ பாதுகாப்புடன் வசதியாக வாழ வைத்திருப்பார்களே” என்ற என் கேள்விக்குக்கு அவரிடம் பதில் இல்லை.

அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தற்காலிகத் தேக்கநிலை உருவானதும் சிங்களவர்கள் கை ஓங்கியதும் அனைவருக்கும் தெரியும்.

இந்தக் காலகட்டம் வரை எனக்குப் பதிவுலகம் அறிமுகமாகவில்லை. பின்னர் மெதுவாக பதிவுகள் பல படிக்கும் வழக்கமும் பதிவுகள் என்ற பெயரில் மொக்கைகள் எழுதும் பழக்கமும் எனக்குள் வந்தது. இப்போது இந்தப் பதிவை நான் எழுதிக் கொண்டிருக்கவும் இந்தப் பதிவுலகமே காரணம்.

நான் படித்த பதிவுகளில் வந்த பின்னூட்டங்களில் சில புலம்பெயர்ந்த தமிழர்களை வன்மையாகத்தாக்கி இருந்தன. வன்னியில் தமிழினம் கஷ்டப்படும்போது அவர்களில் பார்ட்டிகள் வைத்துக் கொண்டாடி மகிழ்ந்ததாக. அதே போல சில புலம்பெயர்ந்த தமிழர்கள் கொழும்பில் வசித்து வரும் பதிவர்களை சிங்களவனிடம் பிச்சையெடுத்து வாழ்ந்து வருவதாகத் திட்டியும் எழுதியிருந்தார்கள்.

இன்னும் சில பதிவுகளில் முஸ்லிம் தமிழர்களுக்கும், இந்துத் தமிழர்களுக்கும் இடையில் நிகழ்ந்த சில நடக்கக்கூடாத சம்பவங்களைப் பற்றிய விவாதங்களையும் கண்டேன். சிங்களவனின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு நம்மவர்கள் பலியானதைக் கண்டு நொந்து நூலானேன்.

என்னைப்போன்ற இந்தியத் தமிழர்கள் பலர் இந்த ஈழப் பிரச்சனையை ஒரு உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே அணுகுகிறோம். அதற்கு நாங்கள் வளர்ந்து வந்த சூழலும் நாங்கள் பார்த்து வளர்ந்த அரசியல்வாதிகளுமே காரணம். தமிழனை என்றுமே ஒரு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வைத்திருந்து வைத்திருந்தே அரசியல் நடத்தி வந்திருக்கிறார்கள் எங்கள் அரசியல்வாதிகள்.

நாங்கள் உணர்ச்சிவசப்படும்போது எங்களில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பவர்களை சுரணையில்லாதவர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். புலிகளைத் திட்டிப் பேசுபவர்களை தமிழினத் துரோகிகள் என்று எண்ணுகிறோம்.

எங்களிலும் சிலர் முழுமையான ஈழ வரலாறு தெரியாமல் ராஜிவ் காந்தியின் மரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த இலங்கைத் தமிழர்களையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அப்படி அவர்கள் ஏற்றும் போதெல்லாம் என்னாலான எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டே வருகிறேன்.

கிரிக்கெட் என்பது விளையாட்டு அதில் அரசியலைக் கலக்கக்கூடாது என்பது என் எண்ணமாக இருந்து வந்தது. எனக்கு அதில் விழுந்த முதல் அடி, இலங்கை வீரர்களின் மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்ட போது அதில் விடுதலைப் புலிகளின் கை இருக்கலாம் என்று கூசாமல் சிங்கள அரசு சந்தேகப்பட்ட போது எனக்கு ஆத்திரம் வந்தது. மதத்தின் பேரால் ஆயுதம் ஏந்தி போராடும் ஈனர்களுடன் விடுதலைப் போராட்டம் நிகழ்த்தும் எங்கள் வீரமறவர்களை சம்மந்தப்படுத்துவதா என்று.

மேலும் அந்தச் சம்பவத்தின் போது இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே தங்கள் நாட்டின் தீவிரவாதிகள் தங்களுக்கு இப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்காகத் தயார்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னபோது எனக்கு கிரிக்கெட் ஒரு அரசியல் விளையாட்டுத்தான் என்ற எண்ண விதை விழுந்தது. அதை உறுதிப்படுத்துவது போல கடந்த ஆண்டுகளில் இந்திய-இலங்கை அணிகள் அளவுக்கு அதிகமாக மோதிக்கொண்டன. இந்த ஆண்டும் இனி வரும் ஆண்டுகளிலும் இது தொடரும்.

இதற்கு முக்கியக் காரணம் இலங்கைத் தமிழர்களில் பலர் இலங்கைச் சிங்கள அணியின் ரசிகர்கள். அவர்களுக்கு இந்திய-இலங்கைப் போட்டிகள் இந்தியர்களின் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் போல உணர்ச்சிவசப்படுத்தக்கூடியவை. இந்தியா இலங்கையுடன் தோற்கும் போதெல்லாம் நான் பழகக் கூடிய இலங்கைத் தமிழர்கள் என்னைக் கேலிசெய்வார்கள். இதை நான் இந்தியா பாகிஸ்தானுடன் தோற்கும் போது அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பாகிஸ்தானியர்களால் கேலி செய்யப்படுவதற்கு ஒத்தான நிகழ்வாகவே பார்க்கிறேன். இப்படி இந்தியர்களையும் இலங்கைத் தமிழர்களையும் கிரிக்கெட் போதையேற்றி மற்ற விசயங்களை மட்டுப்படுத்தி வைப்பதற்காக பாசிச இந்திய அரசும் நாசிச இலங்கை அரசும் மேற்கொள்ளும் மட்டமான உத்திகள். நாமும் போதையேறிப்போய் அலைகிறோம்.

எனக்கு நான் பார்த்த வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் மீது ஒரு பெரிய வருத்தம் உண்டு.

இவர்களில் 80% தமிழ் பேசுவதில்லை. நான் கவனித்த ஒரு விசயம்.


1. பெற்றோர்களில் யாராவது ஒருவருக்கு ஆங்கிலம் பேச வராதென்றால் பிள்ளைகள் தமிழில் நன்றாகப் பேசுகின்றனர்.
2. அம்மம்மா, அப்பம்மா, அப்பப்பா, அம்மப்பா யாராவது உடன் வசித்தால் பிள்ளைகள் தமிழிலும் பேசுகின்றனர்.
3. பெற்றோர் இருவரும் ஆங்கிலம் நன்றாகப் பேசினால், பிள்ளைகள் தமிழை மறந்து விடுகின்றனர்.

இதில் தமிழ் பேசுவது என்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாக இங்கே எடுத்தாளப்பட்டிருக்கிறது. தங்கள் பிறந்த, வளர்ந்த இடத்தின் எச்சமாக நம்மில் ஒட்டிக் கொண்டிருப்பது மொழி மற்றும் கலாச்சாரமே என்பது என் நம்பிக்கை.

விதையாகத் தூவப்பட்டு வளர்ந்த நாற்றை பிடுங்கி நன்றாக வளர்வதற்காக மாற்று இடத்தில் நடுவது போன்றது என்னைப் போல புலம்பெயர்ந்த இந்தியர்கள். 

முன் கடவாய்ப் பற்கள்.. மிகவும் சீராக... முளை விட்டுப் பளிச்சிடும் போது.. பாதியிலேயே குறடு கொண்டு வெடுக்கென்று பிடுங்கிப் போட்டால் எப்படி இருக்கும்? (நன்றி கலகலப்ரியா) - இது புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள்.

இப்படிப் பிடுங்கிப் போட்டவர்கள் தங்கள் நாட்டை நினைவுபடுத்தும் விசயங்களைச் செய்து/தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன் நான்.  அப்படிப் பெரும்பாலானவர்கள் இல்லாததை நினைக்கும்போது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கும். இப்படியே போனால் மூன்றாவது தலைமுறைக்குத் தங்களது பூர்வீகமும் வீரம் செறிந்த வரலாறும் தெரியாமல் போய்விடும். தங்கள் பெயரால் மட்டுமே இந்தியப் பரம்பரையாக அடையாளம் காணப்படும் மேற்கிந்தியத் தீவின் இந்தியர்களைப் போலாகி விடுவோம். 

வாருங்கள். யூதர்களைப் பார்த்து கற்றுக்கொள்வோம். 

Saturday, March 13, 2010

கௌரவக் கொலைகள் - சுஷ்மா திவாரி

முதலில் நண்பர் வெண்ணிற இரவுகள் கார்த்திக்குக்கு என் நன்றி.

இந்தச் செய்தியை எனக்குத் தெரியப் படுத்தியதற்காக.

சுஷ்மா திவாரி - மும்பையைச் சேர்ந்த பிராமண வகுப்பில் பிறந்த பெண். இவர் கேரள ஈழவா சமூகத்தைச் சேர்ந்த பிரபு நோச்சில் என்பவரைக் காதலித்து மணம்புரிந்திருக்கிறார்.

இதைப் பொறுக்காத இவரது அண்ணன் திலிப் திவாரி தன் அடியாட்களுடன் பிரபு நொச்சிலின் வீட்டுக்குச் சென்று பிரபு உட்பட நான்கு பேரை வெறித்தனமாகக் கொன்று தீர்த்திருக்கிறார். இன்னும் இருவருக்கு பலத்தக் காயம். கர்ப்பிணியான சுஷ்மா அப்போது வீட்டில் இல்லாத காரணத்தால் தப்பித்துவிட்டிருக்கிறார். இது நடந்தது 2004ல்.

மும்பை செசன்ஸ் நீதிமன்றமும், மகாராஷ்டிர உயர்நீதிமன்றமும் அந்தக் கொடூரன் திலிப் திவாரிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது. கடந்த வருடம் உச்ச நீதிமன்றம் அந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

குற்றவாளி திருந்த வாய்ப்பளிப்பதற்காகத்தான் தண்டனை. அங்கே மரணம் என்பது அவனுக்குத் திருந்த ஒரு வாய்ப்பே இல்லாமல் செய்து விடும் என்பதால் யாருக்கும் மரணம் தண்டனையாக விதிக்கப்படக் கூடாது என்பது என் கட்சியாக இருந்த போதிலும், உச்ச நீதி மன்றம் இந்த தண்டனைக் குறைப்புக்கு சொல்லியிருக்கும் காரணம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதான் அந்தக் காரணம் - “It is a common experience that when the younger sister commits something unusual and in this case it was an inter-caste, intercommunity marriage out of [a] secret love affair, then in society it is the elder brother who justifiably or otherwise is held responsible for not stopping such [an] affair.”


“தன் இளைய சகோதரி இயல்புக்கு மாறாக - ரகசியக் காதல் காரணமாக நடந்த கலப்புத் திருமணம் - நடந்து கொள்ளும்போது, இந்தச் சமூகத்தில் தன் தங்கையை இந்தச் செயலைச் செய்ய தடுத்து நிறுத்தும் பொறுப்பு மூத்த சகோதரனுக்கே உள்ளது. ”




It added: “If he became the victim of his wrong but genuine caste considerations, it would not justify the death sentence... The vicious grip of the caste, community, religion, though totally unjustified, is a stark reality.”
மேலும், “அவர் அப்படிப்பட்ட முற்றிலும் தவறான அதே சமயத்தில் இயல்பான சாதிச் சூழலுக்கு பலியாகியிருப்பதால், இந்தக் குற்றத்துக்கு மரண தண்டனை நீதியாகாது. சாதி, சமூகம், மதம் ஆகியவற்றின் கொடுமையான பிடி, சரியானதில்லை என்ற போதிலும், மறுக்க முடியாத ஒன்று.”
ஆக உச்ச நீதி மன்றம் இந்தத் தீர்ப்பால் என்ன சொல்ல வருகிறது என்றால் குடும்பத்தில் ஒருவர், குடும்பத்தின் மரியாதையைக் குலைக்கும் வண்ணம் கலப்புத் திருமணம் செய்து விட்டால், அதன் காரணமாக நடைபெறும் கொலைகள் “கௌரவக் கொலைகள்”, அந்தக் குற்றத்திற்கு உச்ச பட்ச தண்டனை அளிக்க வேண்டியதில்லை.
சுஷ்மா திவாரி இந்தத் தீர்ப்பு Prevention of Atrocities - 1989 சட்டப்படி சாதிய ரீதியிலான வன்முறைக்கு அதே சாதிய ரீதியிலான வெறுப்பு / கோபத்தைக் காரணம் காட்டி தண்டனையைக் குறைத்தது அநீதி என்று வழக்குப் போட்டு போராடி வருகிறார். இந்தத் தீர்ப்பு கலப்புத் திருமணம் செய்ய முனையும் பலரை யோசிக்க வைக்கும் என்பது மட்டும் உண்மை.
நம் நாட்டில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிப்பது என்பது நீதி மன்றத்தை அவமதிப்பு செய்ததற்கு சமம். அதனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்காது சுஷ்மாவுக்கு நமது ஆதரவை, இதைப் பற்றி எழுதுவதன் மூலம் தெரிவிப்போம்..
பதிவர்களாகிய நமக்குத் தெரியவந்தால் எந்த அநீதியையும் சாடுவோம், அதை எதிர்த்துப் போராடுபவர்களுக்குத் துணை நிற்போம் என்று இந்த உலகுக்கு நிரூபிப்போம்.
நண்பர்களே, நாம் அஜித் மேடையில் பேசியதையும், சச்சின் 200 அடித்ததையும், நித்யானந்தா-ரஞ்சிதா படுக்கையைப் பகிர்ந்து கொண்டதையும் மட்டுமல்ல, இப்படிப் பட்ட விசயங்களையும் தமிழிஷில் ஹாட் பக்கத்துக்கு கொண்டு வருவோம்.
இந்தப் பதிவைப் படிக்கும் என் சக பதிவர்களுக்கு என் வேண்டுகோள்:
நீங்களும் இதைப் பற்றி எழுதுங்கள். உங்கள் நண்பர்களையும் எழுதச் சொல்லுங்கள். எத்தனை பேருக்கு இந்த விசயத்தைக் கொண்டு செல்ல முடியுமோ அத்தனை பேருக்குக் கொண்டு செல்வோம். 

Thursday, January 21, 2010

ஐபிஎல்லும் தமிழீழ அரசியலும்

டிஸ்கி: இது கிரிக்கெட் பதிவு அல்ல. ஐபிஎல் லுக்கு நான் ஆதரவாளனும் அல்ல. நான் ஒரு கிரிக்கெட் ரசிகன் என்பது அந்தப் பக்கமிருந்தாலும் ஐபிஎல் உண்மையான கிரிக்கெட் அல்ல என்று நினைப்பவன். 

சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவரையும் எந்த முதலாளியும் எடுக்கவில்லை. பாகிஸ்தான் கடந்த வருடம் T20 உலக சாம்பியன்கள். இது அந்த நாட்டின் வீரர்களையும் அரசியல்வாதிகளையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது போல. வழக்கம்போல ரசிகர்கள் ஐபிஎல்லின் கொடும்பாவியை எரித்திருக்கிறார்கள்.


சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இந்த ஏலத்தில் இலங்கை வீரர் திஸ்ஸரா பெரேராவை $50,000/-க்கும் தென்னாப்பிரிக்க வீரர் ஜஸ்டின் கெம்ப்-ஐ $100,000/- க்கும் எடுத்துள்ளது.

நாம் தமிழர் பேரியக்கம் திஸ்ஸரா பெரேராவை சென்னை அணி வாங்கியதை கண்டித்து அவர்களது வலைதளத்தில் எதிர்ப்பைப் பதிவு செய்ய கோரியிருக்கிறார்கள். அவர்களது கோரிக்கை கீழே:

Vanakkam Uravugalae,


While we are actively participating in boycott srilanka campaign, our Chennai people have invited our enemy to treat them. Yes, the Chennai Super Kings cricket team has enrolled a new srilankan cricketer to play for their team. They already have quite a few srilankan cricketers signed for Chennai team. Is this not a shame to our people? Is this not a disgrace to our Tamil society? The srilankan people who fired crackers on the fall of Tamil freedom fighters are now invited to share the business in Tamil Nadu.

If you want to show your anger, Tamils please sign up and send in your feedback to Chennai Super Kings stating that Tamils do not like Srilankans here. We can stick to same format given below. Click the link to post.
 
என் கேள்வி இதில் என்ன என்றால், சென்னை சூப்பர் கிங்க்ஸ் என்பது இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் கம்பெனி. அதற்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்மந்தம்? அதை தமிழர்களின் அணி என்று எப்படி சொல்ல முடியும்? அணியில் மொத்தம் இருக்கும் தமிழர்களே 5 பேர்தான். அதிலும் விளையாடும் 11 பேரில் இரண்டு தமிழர் வந்தால் பெரிய விசயம். அப்படி இருக்க அங்கே போய் சிங்களவனை எடுக்காதே என்று கோரிக்கை வைத்து என்ன பயன்? 
 
இரண்டாவது, 14 சிங்களவர்கள் விளையாடும் அணி ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி. அந்த அணியையே புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் யாழ்-கொழும்பு வாழ் தமிழர்களும் ரசிக்கிறார்கள் என்றால் விளையாட்டையும் அரசியலையும் வேறு வேறாக அவர்கள் கருதுகிறார்கள் என்று தானே அர்த்தம்? அவர்களே அப்படி இருக்கும் போது நாம் விளையாட்டை அரசியலாகப் பார்ப்பதில் என்ன பயன்? 
 
தமிழர்கள் நமக்குள்ளே இருக்கும் களைகளை களைவதை விட்டு விட்டு இதற்கெல்லாம் போய் நம் சக்தியை விரயம் செய்ய வேண்டுமா? கொஞ்சம் யோசியுங்கள்.
 
பேசாமல் பால் தாக்கரேயைப் போல இலங்கை வீரர்கள் இந்தியாவில் (தமிழ்நாட்டில்) கிரிக்கெட் விளையாட விடமாட்டோம் என்று ஒரு மிரட்டல் அறிக்கை விட்டாலாவது நாடு திரும்பிப் பார்க்கும். வழக்கம் போல என்.டி.டி.வி தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் காட்டு மிராண்டிகள் என்பது போல ஒரு மாயையை ஒளிபரப்பும்.

Monday, December 21, 2009

குற்றம் - நடந்தது என்ன?

ஒரு குடும்பம். அம்மா, அப்பா, மூன்று மகன்கள். முதல் இரண்டு மகன்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. 


மூத்த மகன் அரசியல் கட்சி ஒன்றில் அடிமட்டத் தொண்டன். நிரந்தர வருமானம் இல்லை. மனைவியும் சாதாரண குடும்பத்திலிருந்து நகை நட்டு எதுவுமில்லாமல் வாழ்க்கைப்பட்டு வந்தவள். இவர்களுக்கு நான்கு குழந்தைகள். 


இரண்டாவது மகன் வாத்தியார் வேலை. சொற்ப சம்பளம். மனைவி நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்தவள். ஏதோ கைக்கும் கழுத்துக்கும் நகை போட்டிருக்கிறாள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.


மூன்றாவது மகன் சொந்தமாகத் தொழில் செய்கிறான். மற்ற இருவரைக் காட்டிலும் நல்ல வருமானம். இவனுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. இவனுக்கு ஒரு வசதியான குடும்பத்தில் பெண் பார்க்கிறார்கள். அந்தப் பெண்ணுக்குத் தயக்கம். தான் இந்தக் கூட்டுக் குடும்பத்தில் போய் வாழ்ந்தால் தனக்கு உரிய மரியாதை கிடைக்குமா? என்று. இவர்கள் அவளிடம் பேசி சில பல வாக்குறுதிகளை அள்ளி வீசி அந்தப் பெண்ணை மருமகளாக்கி வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டார்கள்.


வந்த வேகத்தில் கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டு விட்டனர். அந்தப் பெண் கொண்டு வந்த நகைகளை அவள் சம்மதமில்லாமலே மற்ற மருமகள்களும் தாயும் அணியத் துவங்கி விட்டனர். அவள் கணவனின் வருமானமும் மொத்த குடும்பத்தால் பங்கு போடப்பட்டு அவளுக்கு சொற்ப அளவே கிடைத்தது. 


வருமானமே இல்லாத மூத்த மகன் குடும்பத்துக்குக் கிடைத்த வசதிகளை விட இவளுக்குக் குறைவாகக் கிடைப்பதாகவே நினைத்தாள். ஏனென்றால் இவள் பிறந்த வீட்டில் மிகுந்த வசதியுடன் இருந்தவள்.


எனவே அவள் ஒரு முடிவெடுக்கிறாள். தன் கணவனுடன் தனிக்குடித்தனம் போய் விட்டால் தனக்கு வேண்டிய உரிமைகள் கிடைத்துவிடும் என்று நம்புகிறாள். அதற்காக சாம, பேத, தண்ட முறைகளில் போராட்டம் நடத்துகிறாள். 


பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஊர்ப் பெரியவர்கள் அவர்களைத் தனியாகக் குடியமர்த்திவிடலாம் என்று முடிவெடுக்கின்றனர், இப்போது வீட்டில் அடிக்கிறது புயல். மற்ற மகன்களின் குடும்பம் இவர்களைத் தனியே குடியமர்த்தக் கூடாது என்று கொடி பிடிக்கின்றனர். இரண்டாவது மகன், அப்படி அவர்கள் தனியே போனால் நானும் போகிறேன் என்கிறான்.


இதைப் பார்த்த மற்ற வீடுகளிலும் தனிக் குடித்தனம் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. கொடுமை என்னவென்றால் கணவனும் மனைவியும் மட்டுமே உள்ள வீடுகளில் கூட தனிக்குடித்தனம் - கணவன் தனியாகவும் மனைவி தனியாகவும் - போக வேண்டும் என்றும் அதற்கு ஊர் ஒத்துக்கொள்ள வேண்டும் என்றும் குரல் கொடுக்கின்றனர். ஊர்ப் பெரியவர்கள் அவசரப்பட்டு விட்டோமே என்று கவலை கொள்கின்றனர்.


மேலே சொன்னது வி.சேகர் படக் கதையல்ல. ஆந்திரப் பிரதேசத்திலும் அதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் நடை பெறும் கூத்துதான். 


இதில் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்? ஜார்கண்ட்டின் நிலையை தெலுங்கானா மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ஒரு குறைந்த பட்ச செயல்திட்டத்தை தெலுங்கானாவுக்கு வகுக்க வேண்டும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் அந்தத் திட்டங்கள் மாநில அரசால் நிறைவேற்றப் படாவிட்டால் தனி மாநிலம் அளிப்பதாக உத்திரவாதம் அளிக்க வேண்டும். இதுதான் இப்போதைக்கு ஒரு சரியான முடிவாக இருக்கும்.


அதோடு தனித் தெலுங்கானா கோருபவர்கள் தங்களின் நியாயங்களை அனைவரும் அறியும்படி பிரசாரம் செய்ய வேண்டும். இல்லையென்றால் என்.டி.டி.வி போன்ற அரை வேக்காட்டு ஊடகங்கள் வெளியிலிருந்து பார்ப்பவர்களின் மனதில் இப்படி தவறான எண்ணத்தை விதைத்துவிடும்.



(குற்றப்பத்திரிக்கை தொடரும்)

Friday, May 8, 2009

மனதை பாதித்த வீடியோ

இந்த வீடியோவையும் ஒரு நண்பர் தான் அனுப்பி வைத்தார். இதைப் பார்த்ததும் மனம் மிகவும் கனத்து விட்டது. ஒவ்வொரு இந்தியனின் காலிலும் விழுந்து கெஞ்சி கேட்கிறேன் என்று கதறும் அந்தச் சகோதரியின் கண்ணீரை துடைப்பது யார்?

Friday, May 1, 2009

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் - தொடர்கிறது

மன்சூர் அலிகான் தேர்தலில் தோல்வி அடைந்தால் சாக்கு சொல்வதற்கு ஒரு காரணம் கிடைத்து விட்டது. அவர் தான் ஒரு பெரிய கட்சியின் சார்பில் போட்டி போடுவதாக மனதில் நினைத்துக் கொண்டு மாற்று வேட்பாளராக தனது மனைவியை மனு தாக்கல் செய்ய வைத்திருந்தார். வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கும் நாள் முடிந்ததும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் பார்த்தால் அவர் மனைவியும் இருக்கிறார். தேர்தல் அதிகாரிகளிடம், இவர் எனக்கு மாற்று வேட்பாளர், இவர் மனுவை ஏன் தள்ளுபடி செய்யவில்லை என்று கேட்டதற்கு, சுயேச்சைகளுக்கு எல்லாம் மாற்று வேட்பாளர் கிடையாது. அது பெரிய கட்சிகள் சார்பில் போட்டி போடுபவர்களுக்கு மட்டும் தான் என்று முகத்தில் அடிப்பது போல சொல்லி விட்டாராம். ஆகவே, மன்சூர் அலிகான் தேர்தலில் தோற்றுப்போனால், அதற்கு காரணம், அவரது வோட்டுக்களை அவர் மனைவியே பிரித்து விட்டதால் தான்.

சிதம்பரத்தை எதிர்த்து ராசிவ் காந்தி.
சிவகங்கையில் சிதம்பரம் ராஜிவ் பெயரை சொல்லி வோட்டு கேட்க முடியாது. ஏனென்றால் ராஜிவ் காந்தி அவரை எதிர்த்து போட்டி போடுகிறார். ஆம், ஈழத்தமிழர்கள் அழிக்கப் படுவதற்கு பாசிச காங்கிரஸ்சே காரணம் என்பதால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெரிய தலைகளை இந்தத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று மாணவர்கள் பலர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதில் ஒரு கட்டமாக சிதம்பரத்தை எதிர்த்து ராஜிவ் காந்தி என்ற சட்டக் கல்லூரி மாணவரை நிறுத்தி இருக்கின்றனர். இதில் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பதிமூன்று கணினி பொறியாளர்களை கேள்விப்படாத நான்கு பிரிவுகளின் கீழ் கைது செய்திருக்கின்றனர் காவல் துறையினர்.

இ.வி.கே.எஸ்.இளங்கோவனின் செலக்டிவ் அம்னீசியா
ஈழத்தமிழர்களுக்காக தன் உயிரை ஈந்து மொத்த தமிழ் நாட்டையும் திரும்பி பார்க்க செய்த இளைஞன் முத்துக்குமாரை பற்றிய கேள்விக்கு அறிக்கை திலகம், பெரியாரின் பேரன் "முத்துக்குமரா? யாரது?" என்று கேள்வி கேட்டு இருக்கிறார். இவர், ஒரு வேலை வெற்றி பெற்று டெல்லிக்கு சென்று விட்டால், ஈரோடா அது எங்கே இருக்கிறது என்று கேட்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்? இதற்காகவாவது இவரை மண்ணைக் கவ்வ வைக்க வேண்டும் ஈரோட்டு மக்கள். இல்லையேல், அவர்களை முத்துக்குமாரின் ஆவி சத்தியமாக மன்னிக்காது.

மேலும் பார்ப்போம்.